‘இருபதாம் நூற்றாண்டில், உலக மக்கள் அனை வராலும், மிக அதிகமாக வாசிக்கப்பட்டவனும், நேசிக்கப்பட்டவனுமான கவிஞன் நெருதா மட்டுமே,’ என்று பரவலாகப் பேசப்பட்டது மிகைப்படுத்தப் பட்டதன்று; மெய்தான்.

neruda_450அவரது கவிதைகள் உலகளாவிய தாக்கத்தைப் பெற்றதற்குக் காரணம், அவரது எழுத்துக்கள் - ‘லோர்க்கா’ சொன்னது போல - ‘மையைவிட இரத்தத்திற்கு நெருக்கமாக’ அமைந்திருந்ததுதான்.

சிலே (சிலி) நாட்டுக் கவிஞராக மலர்ந்த அவர் உலக மகாகவியாகப் புகழ்வீசித் திகழ்ந்தமைக்கு முக்கிய காரணம், அவரது உலகளாவிய பார்வை; எல்லையற்ற மனித நேயம், திட்டவட்டமான மார்க்சியச் சார்புநிலை என்றுதான் சொல்ல வேண்டும். அதனால்தான்,

‘கவிதை என்பதும் ரொட்டியைப் போல,

சமூகத்தின் ஒரு விளைபொருளே!’

என்று சொல்லும் துணிவு ஏற்பட்டது.

அந்த மகாகவியின் அருமையான கவிதைத் தொகுப்பு ஒன்று, இப்போது கவிஞர் தமிழன்பன் மூலம் நமக்குக் கிடைத்திருக்கின்றது.

கவிஞர் தமிழன்பனின் இந்தத் தமிழாக்கத் தொகுப்பு ஆதாரபூர்வமானது; மிகச்சரியானது. பாப்லோ நெருதா எஸ்பானிய - இலத்தீன்- அமெரிக்க ஆய்வு நிறுவனத்தின் சார்பில், இதன் இயக்குநர், ஸ்பானிய மொழி அறிந்த ஞாலன் சுப்பிரமணியன் அவர்களின் ஆதரவில், பாரதி புத்தகாலயம் இணைந்து வெளியிட்டிருப்பதே இதன் உண்மைத் தன்மைக்குச் சிறந்த அத்தாட்சி.

மேலும், இந்தக் கவிதைகளைத் தமிழாக்கம் செய்து வழங்கியுள்ள தமிழன்பன் அவர்கள் நெடுங் காலமாக நெருதாவில் மூழ்கித் திளைத்தவர். அதன் விளைவாகத் தன் புதல்வருக்குப் பாப்லோ நெருதா என்றே பெயர் சூட்டி மகிழ்ந்தவர். தமிழ்க் கவிஞர் களில் யாரும் இந்த அளவுக்கு நெருதாவுக்கு நெருக்கம் கொண்டதில்லை. முன்பே, ‘பாப்லோ நெருதா- பார்வையில் இந்தியா’ என்ற ஒரு அருமையான நூலைத் தமிழுக்கு வழங்கியிருக்கிறார்.

இப்போது வந்துள்ள தொகுதியில் நெருதாவின் 52 கவிதைகள் உள்ளன. அவரது முதல் கவிதையும் கடைசிக் கவிதையும், முறையே முதலாவதாகவும் கடைசியான தாகவும் அமைக்கப்பட்டிருப்பது தனிச் சிறப்பு.

நெருதா தமிழ்க் கவிஞர்களுக்கும், தமிழிலக்கிய ஆர்வலர்களுக்கும் நன்கு அறிமுகமானவர்தாம். அவரது கவிதைகளைத் தமிழில் தரப் பலருக்கும் ஆசை. சிலர் முயன்றிருக்கிறார்கள். ஜி. குப்புசாமி, நெருதா பற்றிய கட்டுரை ஒன்றையும், ஆறு கவிதை களையும் படைத்தார். இவை ‘புது எழுத்து’ இதழில் வெளிவந்தன. ‘புது எழுத்து’ வெளியீட்டில் 2004இல் ஒரு சிறு தொகுதி கவிஞர் சுகுமாரனின் ஆக்கத்தில் வெளிவந்தது. அதன் பிறகு ‘மாச்சு பிச்சுவின் சிகரங்கள்’ உள்ளடங்கிய 100 கவிதைகள் கொண்ட சுகுமாரனின் பெரிய தொகுதி உயிர்மை பதிப்பக வெளியீடாக வந்தது. நெருதா பற்றிய எல்லா வற்றையும் நான் ஆர்வத்தோடு வாங்கிப் படித்துப் பத்திரப்படுத்தி வைத்திருக்கிறேன்.

எனக்கும் அவர் கவிதைகளை மொழிபெயர்க்கும் ஆர்வம் இருந்தது. ஆனால், ஒரே ஒரு கவிதையை மட்டும் தமிழில் தந்தேன்! ‘வால்ட் விட்மனைத் தூண்டிவிட்டு நான் ஆரம்பிக்கிறேன்’ என்ற ஒரு கவிதை மட்டும் நெருதாவுக்கான என் காணிக்கை. (எட்டுத் திசைக் காற்று - நியூ செஞ்சுரி வெளியீடு)

அதிகம் தொடராமற் போனதற்குக் காரணம் என் வாழ்வில் நிகழ்ந்த நிகழ்வு ஒன்று. பதினைந்து ஆண்டுகளுக்கு முன் நான் சென்னைவாசியாக இருந்தபோது என் பேத்திகளில் ஒருத்தி லண்டனி லிருந்து வந்து எங்கள் வீட்டில் பத்து நாள்கள் தங்கி யிருந்தாள். அவள் ஒரு சுத்தமான வெள்ளைக்காரப் பெண்! இந்திய மொழிகள் எதுவும் தெரியாதவள். பிரஞ்சு, லத்தீன், கிரீஸ், ஜெர்மன் முதலிய அய் ரோப்பிய மொழிகள் அறிந்தவள். இளம்பெண் தான் என்றாலும் சர்வதேச நீதிமன்றச் சட்டங்கள் படித்திருந்தாள். என்னிடமிருந்து ஒரு மஞ்சள்நிற பாப்லோ நெருதாவின் கவிதைத் தொகுதியை எடுத்துப் படித்துக்கொண்டிருந்தாள். அவளுடைய அரசியல் சார்பு என்னவென்று எனக்குத் தெரியாது. “மாயா! நெருதா ஒரு கம்யூனிஸ்ட்!” என்றேன். “மீ ட்டூ!” என்று சொல்லி என்னை அதிர வைத்தாள் அவள்! போகும்போது என்னிடமிருந்த ஏராளமான புத்தகங்களை எடுத்துப் போனதில் நெருதாவும் போய்விட்டார்! நான் வருத்தப்பட்டேன். அது எளிதில் கிடைக்கும் புத்தகமும் அல்ல. ஒரு

பக்கம் ஸ்பானிஷ் மொழியிலும், எதிர்ப் பக்கம் ஆங்கிலத்திலும் கவிதைகள் அச்சிடப்பட்டிருந்த புத்தகம் அது. வேறு பிரதி கிடைக்கவில்லை.

ஒருநாள் அவளிடமிருந்து ஒரு கடிதம் வந்தது, கியூபாவிலிருந்து! நான் மெய்சிலிர்த்துப் போனேன்! கியூபாவில் தென்னமரிக்க சட்டமும் படித்துக் கொண்டு, ஸ்பானிஷ் மொழியும் கற்றுக்கொண்டிருக் கிறாளாம். நெருதாவின் கவிதைகளை அவரது தாய்மொழியிலேயே படித்தே தீர்வது என்ற வெறி!

அடுத்து, பல மாதங்கள் கழித்து லண்டனில் உள்ள தன் வீட்டிலிருந்து தொலைபேசியில் அழைத்துப் பேசிய பேச்சுத்தான் என் கைகளைக் கட்டிப் போட்டது. “தாத்தா, நீங்கள் அதை இங்கிலீசி லிருந்து உங்கள் மொழியில் மொழிபெயர்க்கப் போகிறீர்களா?” என்றாள். “ஆமாம்!” என்றேன் உற்சாகமாக. “இங்கிலீஷ் மொழிபெயர்ப்பே தப்பா இருக்கே!” என்றாள்! அப்படியும் இருக்க முடியுமா, என்று வியந்தேன்!

இதன் சிக்கலே ஸ்பானிஷ் மொழிதான். தென்னமரிக்கா முழுவதிலும் பரவலாகப் பேசப் படுகிற மொழி என்றாலும் தமிழர்க்கு அது மிக அன்னியம். பிரஞ்சு மொழியா? பக்கத்து வீட்டு +2 மாணவியிடம் கேட்டுக்கொள்ளலாம். நமக்கும் அதன் உச்சரிப்பு விநோதம், கொஞ்சம் பழக்கம். ரஷ்ய மொழியா? நமக்கே கொஞ்சம் தெரியும். சந்தேகம் வந்தால் கவிஞர் சிற்பியிடம் கேட்டுக் கொள்ளலாம். ஸ்பானிஷ் மொழிக்கு எங்கே போவது? அதனால் கைவிட நேர்ந்தது!

கவிஞர் தமிழன்பனின் மொழியாக்கம் எந்த அளவு சரியானதாகவும், ஆதாரபூர்வமானதாகவும் அமைந்திருக்கிறது என்பதைத் தெளிவுபடுத்தவே இதைக் குறிப்பிட நேர்ந்தது. நெருதாவின் கவி வீச்சைப் பற்றி நீண்ட காலத்திற்கு முன்பே பரவசப்பட்டு எழுதியவர் தமிழன்பன்

உன் கவிதைகள்

புத்தகப் புற்றிலிருந்து

புறப்பட்டு வராமல்

மக்களிட மிருந்தே

மலர்ந்து வந்தவை

சிலேயின் சோடியம் நைட்ரேட்

ஏகாதிபத்தியத்திற்கே எருவாகவும்

ஏழைப்பாட்டாளிகள் இதயத்திற்கே

குறிவைக்கும் குண்டுகளாகவும்

பயன்பட்டு வந்தது.

விடிவது எப்படி என்று

விண்ணுக்கே கற்றுக் கொடுத்தவன் நீ!

சீறிச் சினந்த சிலேக்கு

ஆயிரமாயிரம் நெற்றிக் கண்கள்

அந்தக் கண்களை அவிக்க

எவரால் ஆகும்?

எரிமலை உதடுகளை

ஈக்களா மொய்க்கும்?

நெருதாவின் முதல் கவிதை. தனது பதினோ ராவது பிறந்த நாளுக்குப் பதினைந்து நாள்களுக்கு முன் தன் சிற்றன்னைக்கு என்று எழுதிய சிறு கவிதைதான் அது.

பொன்னான பகுதிகள் கொண்ட

வண்ணமிகு பூமியிலிருந்து

என் அன்பு அன்னையே!

உனக்குக் கொடுக்க

எளிய இந்த அஞ்சல் அட்டையைத்

தேர்ந்தெடுத்தேன் நான்.

                                                                - நெஃப்தாலி

நெஃதாலி என்பது நெருதாவின் இயற்பெயர். முழுப் பெயர், ‘ரிக்கார்தோ எலிய்செர் நெஃப்தாலி. ரேயஸ் பஸ்வால்டோ’ என்பது பெற்றோர்கள் இட்டபெயர்! ‘பாப்லோ நெருதா’ என்பது அவர் தமக்கு வைத்துக் கொண்ட புனைபெயர்.

neruda_451நெருதாவின் வாழ்க்கை அனுபவம், வாய்ப்பு, உலகில் வேறு எந்தக் கவிஞனுக்கும் வாய்த்ததில்லை.

கவிஞர் சுகுமாரன் தமது மொழியாக்க நூலின் முன்னுரையில் இதைச் சரியாகவே பதிவு செய்திருக்கிறார்:

“இருபதாம் நூற்றாண்டின் முக்கிய நிகழ்வுகள் எல்லாவற்றிற்கும் நெருதாவின் கவிதை சாட்சி யாக இருந்திருக்கிறது. ரஷ்யப் புரட்சி, ஸ்பானிய உள்நாட்டுப் போர், நாஜிசம், ஸ்டாலினிசம், இரண்டாம் உலகப் போர் கட்டவிழ்த்துவிடப்பட்ட படுகொலைகள், ஏகாதிபத்தியம், காலனியாதிக்கம், மறைமுகப் போர்கள், லத்தீன் அமெரிக்க நாடுகளின் அரசியல் பொருளாதார நெருக்கடிகள், ஃபிடல் காஸ்ட்ரோவின் கியூபப் புரட்சி, வியத்நாம் போர், 1986இல் நிகழ்ந்த மாணவர் கொந்தளிப்பு, சொந்த மண்ணில் சோசலி சத்தின் வருகை, அதற்கெதிரான ராணுவக் கலவரம் - என நெருதா சமகாலச் சரித்திரத்தைத் தனது கவிதைகளில் பதித்தது போல, நவீன கவிஞர் வேறு எவராவது செய்திருக்கக் கூடுமென்பது சந்தேகமே.”

“1964இல், நோபல் பரிசு தனக்கு வேண்டாம் என்று மறுத்ததற்கு ழீன்பால் சாத்தர் சொன்ன காரணங்களில் ஒன்று: இப்பரிசு பாப்லோ நெருதாவுக்குப் போயிருக்க வேண்டும்.” என்று சொன்னதாகத் தமிழன்பன் குறிப்பிட்டிருக்கிறார்.

புகழுக்காக முற்போக்கு வேடம் புனைந்த வரல்லர் நெருதா. புகழும் பெருமையும் அவரைத் தேடி வந்தன. அவர் திட்டவட்டமான தத்துவார்த்த நிலைப்பாடு கொண்டவராக இருந்தார். அவர் கம்யூனிஸ்ட் கட்சிக்காரர். கட்சி சார்பில் தேர்தலில் போட்டியிட்டு சிலேயின் பாராளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால், கட்சியைக் கடந்து, மொழி வேலியைக் கடந்து, நாட்டு எல்லை கடந்து உலக மக்களால் மகாகவி எனப் போற்றப்பட்டார். அவரது மனிதநேயக் கவிதையை அழகிய தமிழில் தமிழன்பன் வடித்திருக்கிறார். ‘சிலவற்றை விளக்கும் முகமாக...’ என்ற நெருதாவின் கவிதை உலகப் புகழ் பெற்றது. அது சிலே நாட்டுக்கு மட்டுமல்லாமல், ஏகாதிபத்தியங்களின் பிடியில் நேரடியாகவோ மறைமுகமாகவோ சிக்கி அல்லற்படும் நாடுகளின் அவலங்களை அவர் இந்தக் கவிதையில் விவரிக்கிறார். அதன் இறுதி வரிகள் தமிழன்பனின் தமிழில்.....

“உன் கவிதை

ஏன் எங்களிடம்

தூக்கத்தைப் பற்றி

கனவுகள் பற்றி

இலைகள் பற்றி

உன் தாயகத்துப் பெரிய/எரிமலைகளைப் பற்றிப்

பேசவில்லை

என்று கேட்டீர்கள்.

வாருங்கள் பாருங்கள்

தெருக்களில் எல்லாம் இரத்தம்

வந்து பாருங்கள்

தெருக்களில் எல்லாம் இரத்தம், இரத்தம்!”

இவ்வகை வெளிப்படையான மனித நேயமே அவரை உலக மகாகவியாக உயர்த்தியது.

ஆனால், இந்திய அரசுதான் அவரது மேதை மையை அடையாளம் கண்டுகொள்ளவில்லை. அவரை ஒரு சாதாரண அதிகாரியாகவே- ஒரு சின்னஞ்சிறு நாட்டின் தூதுவராகவே நேரு அரசு அவரை அடையாளப்படுத்திக் கொண்டது. இதே கதிதான் சே இந்தியா வந்திருந்தபோதும் நடந்தது. வாழும் காலத்தில் மாமனிதர்களை அடையாளம் கண்டுகொள்ளாத மடமை இந்திய நாட்டிற்கு ஒரு சாபக்கோடு போலும்.

நெருதா இந்திய மக்களை நேசித்தார். தமிழ்ப் பெண்கள் புடைவை அணிந்திருப்பதைக் கண்டு வியந்தார். ‘தீயின் நாவை எடுத்து, அதை ஒரே சுற்றாக உடம்பில் சுற்றியிருப்பதாக’ எழுதினார்.

அவரது கவிதைகள் சொல்லுக்குச் சொல்லாகப் பிறமொழிகளில் மொழிபெயர்க்கப்படாமைக்கு நெருதாதான் காரணம். தமது மொழிபெயர்ப் பாளர்களிடம் ‘ஏன் இப்படிச் சொல்லுக்குச் சொல் மொழிபெயர்த்து மல்லுக் கட்டுகிறீர்கள்; நன்றாகச் செழுமைப்படுத்தி எழுதுங்கள்’, என்று பலமுறை சொல்லியிருக்கிறார். ஆங்கில மொழி பெயர்ப்பே சரியில்லை’ என்று மாயா சொன்னதன் காரணம் அதுதான்!

‘ஒரு நல்ல மொழிபெயர்ப்பு வேறொரு மொழியில் புதிதாக எழுதுவதற்கு இணையானது’ என்று கேப்ரியேல் கார்சியா மார்க்விஸ் சொன்ன கருத்துதான் நெருதாவினுடையது.

அழுத்தமான கவித்துவம் இருந்தால், அதை எத்தனை மொழிகளில் - மூலமொழியிலிருந்து விலகி விலகி - தொடர்ந்து மொழிபெயர்த்துக்கொண்டே போனாலும் கவித்துவம் இழந்துபோகாது. ‘எது, மொழிபெயர்ப்பில் இழந்துபோகிறதோ அது கவிதை’ என்ற முதுமொழிக்கு மாறாக ‘எது தொடர்ந்து தங்கி நின்றுகொண்டே வருகிறதோ, அதுதான் கவிதை’- என்பதே புதுமொழி.

நெருதா எத்தனை மொழிகளிலும் தங்கி நின்று ஒளிவீசியே திகழ்கிறார். இது தமிழன்பன் அவர் களின் ஆக்கத்தில் நிரூபணம் ஆகிறது.

கட்சிக் கூட்டங்களிலும், பிரசாரக் கூட்டங் களிலும், கவிதை படித்ததால் அவரது கவித்துவம் காணாமல் போய்விடவில்லை. ‘வானம்பாடிகள் கோஷங்கள் இட்டவர்கள்’ என்று இன்னும் பழி தூற்றிக் கொண்டிருக்கும் ‘சுத்த சௌந்தர்ய இலக்கியவாதிகள்’ கவனத்திற்காக இதைச் சொல்ல வேண்டி யிருக்கிறது. மக்களைவிட்டு விலகிப்போய் புரியாத கவிதைகளில் புலம்பிக் கொண்டிருப்பவர்களே காணாமல் போய்விடுகிறார்கள் என்பது ஒரு வரலாற்று உண்மை.

கவிஞர் தமிழன்பனின் கவிதை ஆக்கத்தில் பூத்துள்ள அற்புதமான நெருதா கவிதை, ‘இறந்து போன ஏழை மனிதனுக்கு’ என்பது. மனிதநேயமும், கவித்துவ வீச்சும், அங்கதச் சுவையும் நிறைந்த கவிதை இது.

கவிதை, “இன்று நம் சொந்த ஏழை மனிதனைப் புதைத்திருக்கிறோம்,” என்று ஆரம்பமாகிறது. அந்த ஏழைக்கு வீடோ, நிலமோ கிடையாது. வாழ்நாள் முழுதும் இங்கும் அங்குமாக அலைந்தவர் அவர். ஏற்கெனவே பற்றாக்குறையால் செத்துக் கொண் டிருந்தவர்தான். பிறந்ததிலிருந்தே அப்படி! இப்போது நிரந்தரமாக! இதில் நல்ல அம்சம் என்னவென்றால், பாதிரியார் முதல் நீதிபதி வரை, அவருக்குச் சுவர்க்கத்தில் பங்குண்டு என்று உறுதியாகச் சொன்னதுதான்! இப்போது அவர் செத்துவிட்டார்! சரியாகவே செத்துவிட்டார்!

அவருக்கு அவ்வளவு பெரிய

                வானத்தை வைத்துக் கொண்டு

                என்ன செய்வதென்று தெரியாது.

அவரால் உழமுடியுமா? விதைக்க முடியுமா?

அறுவடை செய்ய முடியுமா?

அவர் அதை எப்போதும் இங்குச்

 செய்திருக்கிறார்.

பதப்படாத நிலத்தோடு

 போராடியிருக்கிறார்

அவருடைய கலப்பைக்கு

எளிதாகக் கிடக்கிறது வானம் இப்போது.

இனி

சுவர்க்கக் கனிகளில்

அவருடைய பங்கைப் பெறுவார்

அவ்வளவு உயரத்தில்

அவருடைய சாப்பாட்டு மேசையில்

எல்லாமே சரியாக எடுத்துவைக்கப்படும்.

சுவர்க்கம் நிரப்பி வைக்கும்

அவருடைய பங்கை உண்ணவேண்டும்

அவர். நம் ஏழை மனிதர்

மண்ணிலிருந்து விண்ணுக்குக்

கொண்டுபோன செல்வம்

அறுபது ஆண்டுப் பசி.

என்று அவல அங்கதச் சுவையோடு நீண்டு செல்லும் இந்தக் கவிதையை - என்னதான் மத்திய அரசு நம்மைத் தடுத்தாலும் - தூக்கு மாட்டிக் கொண்டு சுவர்க்கம் போன இரண்டரை இலட்சம் இந்திய விவசாயிகளின் மண்சேறு படிந்த திருவடிகளுக்குக் காணிக்கை ஆக்கியே தீரவேண்டும். இதை வழங்கிய மகாகவி பாப்லோ நெருதாவுக்கும், நமது அருமைக் கவிஞர் தமிழன்பனுக்கும் அந்த அப்பாவிகள் சார்பாக நன்றி!

பாப்லோ நெருதா கவிதைகள்

தமிழில் : கவிஞர் ஈரோடு தமிழன்பன்

வெளியீடு : பாப்லோ நெருதா எஸ்பானிய இலத்தீன் அமெரிக்க ஆய்வு நிறுவனம்

கிடைக்குமிடம் :

பாரதி புத்தகாலயம்

சென்னை - 600018

விலை : ரூ.110/-

Pin It