ஈரோட்டில் 18 ஆண்டுகளுக்கு முன் தொடங்கப் பட்ட ‘மக்கள் சிந்தனைப் பேரவை’ சிறுசிறு கூட்டங்களை நிகழ்த்தத் தொடங்கி, பிறகு ஈரோட்டின் கருங்கல்பாளையத்திலிருந்து ஒவ்வோர் ஆண்டும் பாரதி பிறந்தநாளன்று மாணவர்களின் எழுச்சி மிகு பேரணியையும் பாரதி நிகழ்வையும் ஆரம் பித்தது. தொ.மு.சி.ரகுநாதன், பெ.சு.மணி, த.ஜெய காந்தன், வா.செ.குழந்தைசாமி, தி.க.சி., சி.எஸ்.சுப்பிர மணியம், மணவை முஸ்தபா, பொன்னீலன் போன்ற தமிழறிஞர்களுக்குப் பாரதி விருதுகளை வழங்கியது. இதனையடுத்துதான், ஈரோடு நகரில் புத்தகத் திருவிழா நடத்தப்பட வேண்டும் என்று பேரவையில் முடிவு செய்யப்பட்டது.

இவ்வாறு தோன்றிய ஈரோடு புத்தகத் திருவிழா மக்களிடையே நன்கு பரிச்சயமான பிறகு ‘மக்கள் சிந்தனைப் பேரவை’ அதற்குக் கொடுத்த முக்கியத் துவத்தையும் தனித்துவத்தையும் திருவிழாவில் நடக்கும் மாலைநேரச் சொற்பொழிவுகளுக்கும் கொடுத்தது. முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் தொடங்கி, தமிழகத்தின் புகழ்மிகு அறிஞர்களுடன் என்னைப் போன்றவர்களும் அந்த மாலைநேரச் சொற்பொழிவுகளில் கலந்துகொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. புத்தகத் திருவிழா தொடங்கும் நாள் முதல் முடியும் நாள்வரை ஒவ்வொரு நாளும் சுமார் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் அங்கே கூடினர். இதன் உச்சமாக அப்துல் கலாம் பேசிய கூட்டத்தில் குழுமியோர் எண்ணிக்கை லட்சத்தைத் தாண்டி ஈரோட்டில் இதுவரை எவருக்கும் கூடாத கூட்டம் என்ற சிறப்பைப் பெற்றது.

மறு ஆண்டு வரலாற்றுச் சிறப்புமிக்க வ.உ.சி. பூங்காவிற்குள் இருக்கும் வ.உ.சி. மைதானத்திற்குப் புத்தகத் திருவிழாவை ‘மக்கள் சிந்தனைப் பேரவை’ யினர் மாற்றினர். முதலாம் ஆண்டு 75 கடைகள் மட்டுமே புத்தகத் திருவிழாவில் இடம்பெற்றிருந்தன. ஆனால் அதற்கு அடுத்த ஆண்டோ 150 கடைகளுக்கு இடம் ஒதுக்கப்பட்டது. கடைகளின் எண்ணிக்கை நூற்றுக்கு நூறு அதிகரித்ததால் வெளியீட்டாளர் களும் விற்பனையாளர்களும் புத்தகங்கள் விற்பனை யாகாது என்ற அச்சத்தில் ஈரோடு புத்தகத் திரு விழாவில் கலந்துகொள்ளத் தயங்கினர். ஆனால் இந்த ஆண்டும் கூட்டம் அலைமோதியது; விற்பனையும் கடந்த ஆண்டைத் தாண்டியது; இதன்பின் ஒவ் வோர் ஆண்டும் வெளியீட்டாளர்களும் விற்பனை யாளர்களும் ஈரோடு புத்தகத் திருவிழாவிற்காகக் காத்து நிற்கும் காலம் வந்தது!

ஈரோடு புத்தகத் திருவிழாவில் ஒவ்வோர் ஆண்டும் ஒரு புதுமையை ‘மக்கள் சிந்தனைப் பேரவை’யினர் புகுத்தினர். அந்த வகையில் ஆறாவது புத்தகத் திருவிழா நடந்து முடிந்த உடனேயே பள்ளி மாணவர்களுக்கு ஈரோடு புத்தகத் திருவிழா ‘உண்டியல் திட்டம்’ அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த உண்டியலை 10 ரூபாய்க்கு வாங்கி மாணவர் களுக்கு 5 ரூபாய்க்குக் கொடுத்தனர். அதில் காசு சேர்த்த மாணவர்கள் 7ஆவது புத்தகத் திருவிழா விற்கு வந்து அந்த உண்டியலைக் கொடுத்து அதில் இருக்கும் காசுகளுக்கு ஏற்ப நூல்களை வாங்கிச் சென்றனர். சென்ற ஆண்டு மட்டும் 25 ஆயிரம் உண்டியல்கள் விற்பனை செய்யப்பட்டிருக்கின்றன. அந்த உண்டியல் காசுகள் இந்த ஆண்டு புத்தகங் களாக மாறும்!

அதே போன்று “ஈரோடு புத்தகத் திருவிழா அலமாரி” என்ற ஒரு திட்டத்தையும் ‘மக்கள் சிந்தனைப் பேரவை’ அறிமுகப்படுத்தியது. இதன் படி தாங்கள் பயின்ற பள்ளிக்குப் புத்தகம் வழங்க விரும்புவோர் ‘மக்கள் சிந்தனைப் பேரவை’யில் ரூ.10 ஆயிரத்தைச் செலுத்தினால், 3 ஆயிரத்திற்கு அழகிய புத்தக அலமாரி செய்யப்பட்டு, மீதி 7 ஆயிரத்திற்குப் பள்ளி ஆசிரியர்கள் விரும்பும் சிறந்த புத்தகங்களை வாங்கி அடுக்கிப் பணம் கொடுத்த வரையும் அழைத்துக்கொண்டு அதே பள்ளிக்குச் சென்று விழா எடுத்து வழங்கி வருகிறது பேரவை. இந்தப் புத்தக அலமாரி திட்டத்தின் வழியாக சென்ற ஆண்டு மட்டும் 10 புத்தக அலமாரிகள் வழங்கப்பட்டிருக்கின்றன.

தொழில் அதிபர்களைச் சந்தித்து, தொழிலாளி யின் சம்பளத்திலோ போனஸிலோ பிடித்தம் செய்யாமல் ஒவ்வொரு தொழிலாளிக்கும் ரூ.100 ஒதுக்கச்செய்து அந்தப் பணத்துக்குரிய புத்தகங் களைத் தொழிலாளியிடம் வழங்கும் திட்டத்தையும் ‘மக்கள் சிந்தனைப் பேரவை’ அறிமுகம் செய்து அதையும் சிறப்பாக ஆண்டுதோறும் நடத்தி வருகிறது.

இதுபோன்று புதிய புதிய திட்டங்களை ஆண்டு தோறும் ‘மக்கள் சிந்தனைப் பேரவை’ ஈரோடு புத்தகத் திருவிழாவில் அறிமுகம் செய்துவருகிறது. ஒவ்வோர் ஆண்டும் ‘மக்கள் சிந்தனைப் பேரவை’ பொருளாதார நட்டத்தைச் சந்தித்துக்கொண்டு மக்களுக்கு அறிவு லாபத்தை அள்ளிக்கொடுத்து வருகிறது.

இதோ! ஈரோடு புத்தகத் திருவிழா எட்டாம் ஆண்டு 03-08-2012 அன்று தொடங்குகிறது. தமிழ் நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத் தலைவர் ஆர்.நடராஜ் ஐ.பி.எஸ்., புத்தகத் திருவிழாவைத் தொடங்கி வைக்க, 14-08-2012 அன்று சி.பி.ஐ. முன்னாள் இயக்குநர் டி.ஆர்.கார்த்திகேயன் நிறைவு விழாவில் பங்கேற்கிறார். ஒவ்வொரு நாளும் மாலையில் வழக்கம் போல் சொற்பொழிவுகளுக்கும் திட்டமிடப்பட்டிருக்கிறது. இந்த ஆண்டு சிறப்பு நிகழ்வாக முதிய எழுத்தாளர்கள் 10 பேருக்கு விருது வழங்கப்படுகிறது.

“அறிவுக்கண்ணைச் சரியாய்த் திறந்தால் பிறவிக் குருடனும் கண்பெறுவான்”

என்ற மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரத்தின் வைர வரிகளுக்குரிய பொருளைக் கொங்கு மண்டலத்தில் ‘மக்கள் சிந்தனைப் பேரவை’ தொடர்ந்து விதைத்துக்கொண்டிருக்கிறது. நாளை இந்தச் சமூகம் அறிவுப் புரட்சியை நடத்திக் காட்டும் என்பதை ஈரோடு புத்தகத் திருவிழா இன்று மெய்ப்பித்து வருகிறது.

Pin It