கடந்த சில ஆண்டுகளாகக் கோடை நம்மை வெப்பமூட்டுவதைக்கூட மன அளவில் நீர்த்துப் போகச் செய்கிறது மாணவ, மாணவிகள் தற்கொலை செய்துகொள்கிற அதிர்வார்ந்த துயரம்!

students_360பொதுவாக, தற்கொலை செய்துகொள் வதற்குக் காரணங்களாக அமைபவை வாழ்க்கைத் துணையுடனான புரிதலில் முறிவு ஏற்படுதல், பொருளாதாரச் சிக்கல், காதலன் / காதலியிடம் பிரிவோ, வன்மமோ தோன்றுதல், அரசியல் காரணமான தீவிர உணர்ச்சி ஆகியவை வயது முதிர்ந்தவர்களுக்கு என்றால், பதின்ம வயதினர் தற்கொலை செய்துகொள்வது என்பது பள்ளி/கல்லூரி, தேர்வு தொடர்புடையதாகவே அமைகிறது.

ஏனெனில், இளம் வயதில் தற்கொலை செய்து கொள்பவர்களில் கல்வி/தேர்வுடன் சம்பந்தமில்லா தவர்கள் யாரும் இடம்பெறுவதில்லை என்பது வெளிப்படையானது.

காரணம் எதுவாக இருந்தாலும், மனம் சோர்ந்து விரக்தியுறும்போது, நம் வாழ்வை முடித்துக் கொள்ளலாம் என்று இளம்வயதினர் முடிவெடுப்பது, வயது முதிர்ந்தவர்களிடமிருந்து பெறும் தாக்கத்தினால்தான் என்பதை மறுக்க முடியாது. அவ்வாறு ஏதோ ஒரு வழியில் தாக்கத்தை விளைவிப்பவர்கள் மாதா, பிதா, குரு என்ற பெரும்பாலும் வட்டத்துக்குள் அப்பாற்பட்ட நிலையில் ஊடகக் குழாமினர்தாம்.

ஊடகங்கள் மக்களுக்குக் கதை சொல்லு கையில் தற்கொலைக்கான முன்நிபந்தனைகளை சோகரசம் ததும்ப விரித்துரைத்து, தற்கொலை நிகழ்வை, உணர்வைத் தூண்டும்படி அளவுக்கு

கூர்மையாகக் காட்டி, அதன் விளைவை மிகவும் சாதாரணமாகக் காட்டுவதில் வல்லமையும், ஆர்வமும் கொண்டவை. எனவே, ஊடகக் காட்சியையும், அதன் கருத்தாட்சியையும் நுகரும் உள்ளங்கள் தற்கொலையின் விளைவைப் புரிந் துணருவதைக் காட்டிலும், தற்கொலையின் முன் நிபந்தனைகளிலும், தற்கொலை நிகழ்விலுமே மிக அதிகமாக வயப்படுகின்றன.

ஒரு கொத்தவரங்காயைக் குறுக்காக வெட்டி, அந்த அரைத்துண்டை நீளவாக்கில் இரண்டாக பிளந்து, அந்தக் கால் பங்கு கொத்தவரங்காய்க்குக் கரிய வண்ணம் பூசி உயிர் கொடுத்தாற் போல நதிநீரில் நீந்தும் அயிரைமீன் நம் கால் சுண்டுவிரல் மிதியில்கூட நசுங்கி இறந்துவிடும். அந்த மெல்லிய அயிரை மீன் நீந்தாமல் இருந்தால், நதியோட்டத்தில் அடித்துச் செல்லப்பட்டு உயிர் இழந்துவிடும். அந்தக் குறு மீன் கூட நதி நீரோட்டத்தை எதிர்த்து நீந்தியே உயிர் வாழ்கிறது.

அறிவு நிரம்பிய உயர்திணை மானுடம், மனம் நொந்து தற்கொலை செய்துகொள்ள வேண்டுமா? மாணவமணிகள் வாழ்வை வளப்படுத்திக்கொள்ள எத்தனையோ வழிகள் உள்ளன. சமுதாயத்தை உற்றுநோக்கித் தெளிவாகப் புரிந்துகொண்டால் வாழ்வாங்கு வாழ இயலும். தற்கொலை என்ற கருத்தியல், தானே தற்கொலை செய்து கொள்ளும்.

Pin It