படித்துப் பாருங்களேன்...

(The Many Careers of D.D.Kosambi, Edited by D.N.Jha,Leftword, New Delhi)

‘இந்தியாவின் முக்கிய வரலாற்றறிஞர்கள்’ என்று ஒரு பட்டியல் தயாரித்தோமென்றால் அதில் சிறப்பான இடத்தைப் பெறுபவர் டி.டி.கோசாம்பி (1907-1966). ஆனால் அடிப்படையில் இவர் கணிதத் துறையைச் சார்ந்தவர். காசி பல்கலைக்கழகத்தில் கணிதப் பேராசிரி யராகப் பணியாற்றி, பின்னர் ‘டாடா இன்ஸ்டிட்யூட் ஆஃப் ஃபண்ட மண்டல் ரிசர்ச்’ நிறுவனத்தில் விஞ்ஞானியாகப் பணியாற்றினார். மார்க்சியத்தில் தேர்ச்சியும் பற்றும் கொண்டவர்; வடமொழியிலும் புலமை மிக்கவர்.

kosambi_450தம்முடைய கள ஆய்வு மற்றும் நூலறிவு வாயிலாகத் திரட்டிய தரவுகளை மார்க்சிய அணுகுமுறையில் ஆய்வுக்குட்படுத்தி இந்திய வரலாறு, தொல்லியல், நாணயவியல், சமயங்கள் தொடர்பான ஆய்வுக் கட்டுரைகளையும், நூல்களையும் எழுதியுள்ளார். பல இந்திய அறிவாளிகளைப் போன்றே மார்க்சியத்தைப் பொதுவுடைமை இயக்கத்திலிருந்து பிரித்ததுடன் கம்யூனிஸ்ட் கட்சியினர் பின்பற்றும் மார்க்சியத்தை அதிகார பூர்வ மார்க்சியம் (Official Marxism) என்ற சொல்லால் இவர் குறிப்பிட்டார். செயலுக்கு வழிகாட்டி (A Guide to Action) ஆக விளங்கும் மார்க்சியம் உண்மையில் இயக்கம் சார்ந்துதான் இருக்கும். ஆனால் மார்க்சியத்தை வெறும் தத்துவமாக மட்டும் பார்த்தால் இவ்வாறு அதிகார பூர்வ மார்க்சியம், கட்சி சார்ந்த மார்க்சியம் என்று நாமகரணம் செய்யும் செயல் நடக்கத்தான் செய்யும். இதற்குக் கோசாம்பியும் விதிவிலக்கல்ல.

சமாதான இயக்கத்திலும், அறிவியலை ஆக்கச் செயல்களுக்குப் பயன்படுத்துவதிலும் ஆர்வம் கொண்டிருந்த கோசாம்பி மார்க்சியத் தத்துவத்தை ஒதுக்கித் தள்ளாது அதன் வழிகாட்டுதலின் அடிப் படையில் இந்திய வரலாற்றை ஆய்வு செய்யும் பணியை மேற் கொண்டு, பிறருக்கு வழிகாட்டியாகவும் விளங்கினார். மார்க்சியம் தொடர்பான அவரது பாகுபாடு உள்நோக்கம் கொண்டதல்ல.

மார்க்சியத்தை இந்தியச் சூழலுக்கு அப்படியே பொருத்திப் பார்க்காது சற்று நெகிழ்ச்சியுடன் பார்க்க வேண்டும் என்பதே அவரது கருத்தாகவிருந்தது. அதே நேரத்தில் ஆங்கிலக் காலனியம் அறிமுகப்படுத்தி இன்றுவரை செல்வாக்குடன் திகழும் அய்ரோப்பிய வரலாற்று வரைவியலில் இருந்து விலகியே நின்றார். இந்திய நிலவுடைமை முறை, சாதி அமைப்பு, அடிமைமுறை தொடர்பான அவரது ஆய்வுகள் சற்று வேறுபாடாக அமைந்தன.

டாக்டர் சுலிகின் என்ற சோவியத் இந்தியவியலாளரின் கருத்தை மறுத்து “Combined Methods in Indology” என்ற தலைப்பில் 1951இல் அவர் எழுதிய கட்டுரை யிலும் “On a Marxist Approach to Indian Chronology” என்ற தலைப்பில் 1954இல் எழுதிய கட்டுரையிலும், இந்திய வரலாற்றாய்வுக்கான மார்க் சிய அணுகுமுறை குறித்த அவரது கருத்துகளை விளக்கியுள்ளார்.

எழுத்தாவணங்களைத் தாண்டி சடங்குகள், நம்பிக் கைகள், புராணங்கள் ஆகி யனவும் வரலாற்றுச் சான்று களாக அமையும் தன்மையன என்பதைத் தமது ஆய்வு களின் வாயிலாக நிலை நாட்டினார்.

கோசாம்பியின் ஆய்வுப் பணிகளை அறிமுகப்படுத் தும் தன்மையிலும், ஆய்வுக் குட்படுத்தும் தன்மையிலும் The Many Careers of D.D.Kosambi என்ற இத்தொகுப்பு நூல் அமைந்துள்ளது.

ஒரு குறிப்பிட்ட அறிவுத் துறையில் சாதனை படைத் தவர்களைக் கௌரவிக்கவோ அல்லது நினைவு கூரவோ, தொகுப்பு நூலொன்றை வெளியிடுவது பொதுவான மரபு. அறிவார்ந்த நிலையில் இத்தகைய நூல்களை உரு வாக்கும்போது பாராட்டப் படுபவரின் அறிவுலகப் பணி குறித்த அறிமுகக் கட்டுரை களும், மதிப்பீட்டுக் கட்டு ரைகளும் இடம்பெறும். சில தொகுப்புக்கள் பாராட்டுக் குரியவரின் வாழ்க்கைக் குறிப்பு, அவரது படைப்பு கள் குறித்த நூலடைவுடன், பிற அறிஞர்களின் ஆய்வுக் கட்டுரைகளைத் தாங்கி வெளிவருவதுமுண்டு. (தமிழ்ச் சூழலில் ஒருவரின் பணிகள் குறித்த செய்தி களையும் ஆய்வுக் கட்டுரை களையும் தவிர்த்து, பாராட்டு ரைகளையும் மெருகூட்டப் பட்ட சுய அனுபவங்களை யும் தாங்கி, மலினப்படுத்தப்பட்ட ஒன்றாக ‘மலர்’ என்ற பெயரில் வெளியாவது வேறு கதை.)

கோசாம்பியின் மறைவுக்குப் பின் அவரது நினைவாக “Historical Probings; In Memory of D.D.Kosambi”, “Essays in Honour of Late professor D.D.Kosambi” என்ற இரண்டு நூல்கள் வெளியாயின. தற்போது அவரது நூற்றாண்டு விழாவையொட்டி இந்நூலை வரலாற்றறிஞர் டி.என்.ஜா பதிப்பித்து வெளியிட்டுள்ளார். இந்நூல் உருவாக்கம் தொடர்பாக நூலின் முன்னுரையில் அவர் குறிப்பிட்டுள்ள ஒரு முக்கிய செய்தி வருமாறு:

“தாமோதர் தர்மானந்த் கோசாம்பி யின் நூற்றாண்டு விழா 2007இல் இந்தியா வின் பல பல்கலைக்கழகங்களிலும், கல்வி நிறுவனங்களிலும் கொண்டாடப்பட்டது. இதற்கு அடுத்த ஆண்டு ‘எகனாமிக் அண்ட் பொலிடிக்கல் வீக்லி’ கோசாம்பி சிறப் பிதழ் ஒன்றை வெளியிட்டது. கோசாம்பி யின் இந்தியவியலை அதன் பல பரிமாணங் களில் மதிப்பீடு செய்யும் முயற்சியாக இந்த இதழ் அமைந்தது. இவற்றில் பல மதிப் பீடுகள் சார்புநிலைக் கண்ணோட்டம் கொண்டிருந்தன; குறை கூறும் போக்கும் காணப்பட்டன. ஒரு கட்டுரை கிட்டத் தட்ட கடுஞ் சொற்களைக் கூடப் பயன் படுத்தியிருந்தது.”

பதிப்பாசிரியர் டி.என்.ஜாவின் முன்னு ரையில் இடம்பெறும் இக்கருத்துக்கள் விவாதத்துக்குரியவராக கோசாம்பி விளங்கு வதை உணர்த்துகின்றன. இவ்வாறு அவர் குறிப்பிடுவதற்கான காரணம் கோசாம்பி பயன்படுத்தும் ‘அதிகார பூர்வ மார்க்சியம்’ என்ற சொல்லை வாய்ப்பாக்கிக் கொண்டு மார்க்சியச் சார்பிலிருந்து அவரை விலக்கிக் காட்ட சிலர் முயல்வதுதான்.

தில்லிப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் வரலாற்றுப் பேராசிரியர் டி.என்.ஜா. பதிப் பித்த இந்நூலில் அலிகார் முஸ்லிம் பல்கலைக் கழகத்தின் முன்னாள் வரலாற்றுப் பேரா சிரியர் இர்பான்ஹபிப், ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் முன்னாள் பொருளியல் பேராசிரியர் பிரபாத் பட்னாயக், மாஸ்கோ இந்தியவியல் நிறுவனத்தில் உள்ள இந்திய இயல் ஆய்வுத்துறை மையத்தின் தலைவரா யுள்ள யூஜினா வணின்னா, தில்லி பல்கலைக் கழகத்தில் வரலாற்றுத்துறைப் பேராசிரி யராகப் பணியாற்றும் கேசவன் வெளுதாட், தில்லியிலுள்ள நாகரிகம் குறித்த ஆய்வு மையத்தில் பணியாற்றும் கணித மற்றும் கணினி விஞ்ஞானி ராஜி ஆகியோரது கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன.

டி.என்.ஜாவின் ‘A Scholar Extraordinate’ என்ற தலைப் பிலான முதல் கட்டுரை, கோசாம்பியின் வடமொழி இலக்கியப் புலமை, வட மொழி இலக்கியத்தின் வர்க்கக்குணம் குறித்த கோ சாம்பியின் கருத்து, ஊர்வசி, புருவா கதை ரிக் வேதத்தில் கூறப்பட்டிருக்கும் முறைக் கும், காளிதாசனின் விக்கிர மூர்வசியம் நூலில் கூறப் பட்டிருக்கும் முறைக்கும் இடையிலான வேறுபாடு, வேத சமூகத்திற்கும் காளி தாசன் வாழ்ந்த குப்தர்கால சமூகத்திற்கும் இடையிலான வேறுபாட்டினால் சடங்கு நாடகமாக மாறுதல் குறித்து கோசாம்பி விளக்கியுள்ளது ஆகியனவற்றை அறிமுகப் படுத்துகிறது. நாணயவியல் தொடர்பான கோசாம்பி யின் ஆய்வுகளும், இந்திய வரலாறு பண்பாடு குறித்த அவரது ஆய்வுப் போக்கும் இக்கட்டுரையில் அறிமுகப் படுத்தப்பட்டுள்ளன.

ஆசியப் பொருள் உற் பத்திமுறை, மாறுதலில்லா ஆசியச் சமுதாயங்கள் என் பன குறித்து கோசாம்பி உடன்படாமையையும் சுட்டிக்காட்டியுள்ளார். இது போன்றே இந்திய அடிமை முறை குறித்த அவரது கருத் தையும் குறிப்பிட்டுள்ளார்.

இந்திய நிலவுடைமை முறை குறித்து கோசாம்பி, ஆர்.எஸ்.சர்மா, ரொமிலா தாப்பர் ஆகியோர் முன் வைக்கும் ஒன்றுக்கொன்று முரண்பட்ட கருத்துகள் இக் கட்டுரையில் குறிப்பிடப் பட்டுள்ளன. புத்தமதத்தின் வீழ்ச்சிக்கும், இந்திய வாணி பத்திற்கும் இடையிலான தொடர்பு, பொருளாதார நிர்ணய வாதம், மக்களிடம் ஊடுருவும் கருத்துகள் ஆற்ற லாக மாறுதல் ஆகியன குறித்த கோசாம்பியின் கருத் துகள் இக்கட்டுரையில் சுருக்கமாக அறிமுகப்படுத்தப் பட்டுள்ளன. நூலின் பதிப் பாசிரியர் தவிர்த்த ஏனைய கட்டுரையாசிரியர்கள் அவர வர்கள் கோணத்தில் கோ சாம்பியை அவரது படைப்பு களின் துணையோடு அறி முகப்படுத்தியுள்ளார்கள்.

இவற்றுள் யூஜனா வானினா எழுதிய Some Observations On Kosambi’s Medieval India என்ற கட்டுரை யின் பின் இணைப்பாக ‘ஒரு நண்பருடன் உரையாடல்’என்ற கட்டுரை இடம் பெற் றுள்ளது. இக்கட்டுரையை எழுதியுள்ள செர்பிரியா கோவ் மாஸ்கோவில் கோ சாம்பியைச் சந்தித்து உரை யாடியுள்ளார். அவ்வுரை யாடலின் சுருக்கம் வருமாறு:

பார்த்திரி ஹரி என்ற வடமொழிக் கவிஞர் எழுதிய ‘சாத்தகாத்ரயம்’ என்ற நூலை கோசாம்பி பதிப் பித்து வெளியிட்டுள்ளார். அப்பதிப்பில் ‘To the sacred memory of the great and glorious pioneers of today’s society, Marx, Engels, Lenin.’ என்று குறிப்பிட்டு மார்க்ஸ், எங்கல்ஸ், லெனின் ஆகிய மூவருக்கும் காணிக்கையாக்கி யுள்ளார். உண்மையான தாகவும் உணர்ச்சிபூர்வமான தாகவும் இது அமைந்துள்ள தாகக் கருதிய செர்பிரியா கோவ், மத்தியகால இந்தி யாவின் தொடக்க காலத் தில் வாழ்ந்த வடமொழிக் கவிஞருக்கும் உலகத்தை மாற்றும் கோட்பாட்டுக் கும் என்ன தொடர்பு என்ற வினாவை கோசாம்பியிடம் எழுப்பினார்.

இவ்வினாவுக்கு கோசாம்பி பின்வரு மாறு விடையளித்தார்: சுரண்டுபவர்களின் காலடியில் தன் கண்ணியத்தை இழந்தது வே அவனைக் கவிஞனாக மாற்றியது. முதலாளித்துவம் குறித்த புரிதலை, பொருளி யல் நூல்களை விட பால்சாக்கின் நாவல் கள் வெளிப்படுத்துவது போல் பார்த்திரி ஹரியின் கவிதை வரிகளும், அவன் கை யாண்ட மரபுகளும், மத்திய கால இந்தியா வைப் புரிந்துகொள்ளத் தர்ம சாஸ்திரங் களைவிடத் துணைபுரிகின்றன. இறுதி யாகக் கோசாம்பி கூறியது இதுதான்: மனிதனை மனிதன் ஒடுக்குவதை ஏற்றுக் கொள்ளாததே இலக்கியப் படைப்புகளில் இடம்பெற்றுள்ளது. கோசாம்பியை மார்க்சியத்திலிருந்து பிரிக்க முயல்வோர் படிக்க வேண்டிய பகுதி இது.

ஒரு வாசகன் என்ற முறையில் இந் நூலில் உள்ள கட்டுரைகள் என்னை ஈர்த்த நிலையில், இந்நூலில் இடம்பெற்றுள்ள கருத்துக்குவியல்களில் ஒன்றிரண்டைச் சுட்டிக் காட்டலாம் என எண்ணுகிறேன்.

ஒரு மாறுபட்ட கணிதம் போன்று குறுகிய சூத்திரமாக மார்க்சியத்தைக் குறுக்கிவிட முடியாது. அதே இயந்திரத்தில் செய்யப்படும் ஒரு வேலையைப் போன்ற மாற்றமில்லாத முறையும் அல்ல. மனித சமூகத்தில் மார்க்சியம் பயன்படுத்தப்படும் போது பல்வேறு மாற்று வடிவங்கள் ஏற்படும். ஆய்வு செய்பவரும் ஆய்வு செய்யப்படும் மக்களின் ஒரு அங்கம். அம் மக்களுடன் வலுவான உறவு கொள்பவர். எனவே மார்க்சியத்தைப் பயன்படுத்த ஆய்வுச் சிந்தனை தேவையானவற்றைத் தேர்வு செய்யும் திறன் தேவை. இவற்றைப் புத்தகங்களில் இருந்து மட்டுமே பெற்று விட முடியாது. வெகு மக்களுடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பது இதைக் கற்றுக் கொள்ளும் வழிகளில் ஒன்று. (Prabhat Patnaik; Kosambi and the Frontiers of Historical Materialism; 50)

* * *

“சாதியை நிலைநிறுத்துவதில் சமய நம்பிக்கைகளுக்கு முக்கிய பங்குண்டு என்பதைக் கோசாம்பி வலியுறுத்தினார். பண்டை இந்தியாவில் உணவு சேகரிக்கும் இனக்குழுக்கள் ஓரளவு எளிதான வாழ்க்கை வாழ்ந்ததால், உணவு உற்பத்தி செய்யும் குழுக்களுக்கு அருகே வசித்தனர். இரு வருக்குமிடையேயான உற்பத்தி உறவுகள்; சமயம் மற்றும் நம்பிக்கைகளின் வழியாக ஒழுங்குபடுத்தப்பட்டன. (ஐரோப்பா அல்லது அமெரிக்காவில் நிலவிய வன்முறை வழி உறவுகள் போல் இல்லாமல் இங்கே சாதிகள் மூலமாக இவை நிகழ்த்தப்பட்டன.) ஆரம் பத்தில் வேளாண்மை விரி வாக்கத்திற்கு இது பயன் பட்டாலும், பின்னர் கிராமப் பொருளாதாரம் தேக்க நிலை யை அடைந்த போது, உழைப் பவர் மீது சாதி மற்றும் வர்க்கம் என்ற இரட்டைச் சுமையைத் திணித்தது. இது வளர்ச்சிக்குப் பெருந்தடை யாக உருவாகியது. (Suvira Jaiswal; Kosambi On Caste; பக்கம் 144)

* * *

கோசாம்பியின் பல வாதங்கள் சவால்களை நேரடியாக எதிர்கொள் ளும் தன்மை கொண்டவை. குறுகிய பொருளாதார வாதங்களால் சுற்றிக்கட்டப் பட்ட பழங்கதைகளை உடைக்கின்றன; சமய வரலாறுகளைப் புதிதாக வரையறுக்கின்றன. “மேல் கட்டுமானம்” என்ற கண் ணோட்டத்தில் சமயத்தை அவர் பார்க்கவில்லை; அதே போல், சமயத்திற்குச் சுதந் திரமான தெய்வீகத்தன்மை யைத் தரவில்லை. மாறாக, வரலாற்று நிகழ்வுகளுக் கிடையே வளர்ச்சியாகவும் சமயத்தைப் பார்த்தார். பிரெடரிக் மாக்ஸ் முல்லர் “சமயங்களின் அறிவியல்” என்று கூறிய கருத்திற்கேற்ப, சமயத்தின் எல்லைகளை விரிவாக்கினார். இந்தப் பங்களிப்பை அடையாளம் காண்பதுதான் கோசாம்பி இந்திய சமய வரலாற்றுக்கு ஆற்றிய பங்களிப்பின் மதிப் பீடாக இருக்கும். (Krishna Mohan Shrimli: Kosambi and the Religious Histories of India : பக்கம் 122)

* * *

கோசாம்பியைப் பொறுத்தவரை, பண்டை இந்தியாவில் உணர்வுபூர்வ மான யதார்த்த வாழ்க்கை யுடன் தொடர்பை இழந்து விட்ட மொழி சமஸ்கிருதம். உயர்வர்க்கத்தின் அதிகார யுக்தியாகவும், அதிகாரத் தை நியாயப்படுத்தும் கருவி யாகவும் மட்டுமே சமஸ் கிருதம் செயல்பட்டது. (Kesavan Veluthat:Kosambi On Sanskrit : 166)

* * *

வளர்ச்சியின் ஆரம்பக் கட்டத்திலேயே நீண்ட காலம் தங்கிவிட்ட கோட் பாட்டை முன்னோக்கி எடுத்துச் செல்ல வேண்டிய காலம் இது. கோசாம்பி வெளிக்கொண்டுவந்த மார்க்சிய முறையியலின் ஆக்கத்திறனைக் கருத்தில் கொள்ளவேண்டிய தேவை யும் இருக்கிறது. இதுவரை புறந்தள்ளப் பட்டுவிட்ட பண்பாடு, இலக்கியம், மனோ நிலை, ஒழுக்கக் கோட்பாடு, சமயம், அறிவியல் கண்ணோட்டம் போன்ற வற்றையும் உள்ளடக்கி மார்க்சியத்தை மற்றும் இடைக்கால வரலாற்றையும் குறித்த நம்முடைய ஆய்வுகளை வரலாற்று உண்மைகளுக்கு நெருக்கமாகக் கொண்டு வர முடியும். உலகமெங்கும் இருக்கும் கோசாம்பியின் மாணவர்களும், அபிமானி களும் அவருடைய நினைவுக்குச் செலுத்தும் சிறந்த பங்களிப்பு இதுவாகத்தான் இருக்க முடியும். (Eugenia Vania:Some Observations on Kosambi’s Medieval India : பக்கம் 76)

“இந்தத் தொகுப்பில் உள்ள கட்டுரையாளர்கள் கோசாம்பியை ஏற்றுக்கொள்ளா தவர்களும் அல்லர். அவருடைய துதிபாடி களும் அல்லர்; விமர்சனக் கண்ணோட்டத் தில் நடுநிலை நின்று மதிப்பீடு செய்பவர் கள். ஒவ்வொரு கட்டுரையும் குறிப்பிட்ட ஒரு பரிமாணத்தை ஆய்வு செய்தாலும் ஒன்றுடன் ஒன்று தொடர்பு கொண்டவை யாகத் தான் இக்கட்டுரைகள் அமைந் துள்ளன.”

என்று முன்னுரையில் டி. என்.ஜா குறிப்பிட்டுள்ளார். இது உண்மை என்பதை இந்நூலில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள் உணர்த்து கின்றன. கோசாம்பியைப் போன்றே வரலாற்றிலும், வடமொழியிலும் ஆழ்ந்த புலமையுடைய அம்பேத்கர் இந்திய நாட்டின் சாதிமுறை, அடிமைமுறை குறித்த ஆழ மான ஆய்வுகளை நிகழ்த்தி யுள்ளார். இவை ஒதுக்கித் தள்ளப்பட முடியாதவை. இவ்வகையில் இப்பிரச்சினைகள் தொடர்பாக இவரது கருத்துகளையும் ஒப்பிட்டு ஆராய இட முண்டு. இவ்வகையில் ஒரு கட்டுரை இடம்பெற்றிருந் தால் இந்நூல் மேலும் சிறப் பாக இருந்திருக்கும்.

Pin It