உலகத் தொழிலாளர் வர்க்கம் சுமார் 150 ஆண்டுகளுக்கு முன்னர் கடுமையான உழைப்புச் சுரண்டலுக்கு ஆளானது. நாளொன்றுக்கு 18 மணி நேரம் வரை அவர்கள் உழைக்க வேண்டி யிருந்தது. இந்த வேலை நேரத்தைக் குறைத்தால் மட்டுமே தொழிலாளர் வர்க்கத்தைக் காப்பாற்ற முடியும் என்ற நிலையில் 10 மணி நேர வேலை என்ற கோரிக்கையை இங்கிலாந்தில் தோன்றிய சாசன இயக்கம் முன்வைத்தது.

பிரான்சில் 1830 ஆண்டுகளிலேயே பதினைந்து மணி நேர வேலை நேரத்தை எதிர்த்து வேலை நிறுத்தம் செய்தனர்.

ஆஸ்திரேலியாவில் மெல்பேர்ன் கட்டடத் தொழிலாளர்கள் முதன்முதலில் 8 மணிநேர வேலை என்ற கோரிக்கையை முன்வைத்துப் போராடி வெற்றி பெற்றனர்.

may_day_parade_620

1895 - 99ஆம் ஆண்டுகளுக்கிடையில் ரஷ்யாவில் பிரம்மாண்டமான வேலை நிறுத்தங்கள் பல நடைபெற்றன. அங்கே தொழிலாளிகளின் 8 மணி நேர வேலைக்கான போராட்டங்களே ரஷ்யப் புரட்சிக்கு அடித்தளமாக அமைந்தது எனலாம்.

அமெரிக்காவில் 1832-இல் பாஸ்டன் கப்பலில் பணியாற்றிய தச்சுத் தொழிலாளர்கள் 10 மணிநேர வேலைக் கோரிக்கையை முன்வைத்தனர். 1835-இல் பிலடெல்பியா, பென்சில்வேனியா ஆகிய இடங் களிலும் இதே கோரிக்கைக்கான போராட்டம் வெடித்தது.

பென்சில்வேனிய நிலக்கரி சுரங்கத் தொழி லாளர்களும் இரயில்வே தொழிலாளர்களும் குறைவான வேலை நேரம் கேட்டு 1877-இல் வேலை நிறுத்தம் செய்தனர். அமெரிக்காவில் சிக்காகோ நகரத் தொழிலாளர்கள் 8 மணிநேர வேலை 8 மணிநேர ஓய்வு 8 மணிநேரத் தூக்கம் என்ற கோரிக் கையை முழக்கமிட்டுப் போராட்டங்களில் ஈடுபட்டனர்.

1886 மே 4 அன்று ஹே மார்க்கெட் சதுக்கத்தில் ஒன்றாகக் கூடினார்கள். முன்னதாக மே முதல் நாளன்று அமெரிக்காவில் மிகப் பெரும் தொழில் நகரங்களில் வேலை நிறுத்தங்கள் நடை பெற்றன. வேலை நிலைமைகளை மேம்படுத்த வேண்டும், 8 மணிநேர வேலை வேண்டுமென்று அவர்கள் கோரிக்கை விடுத்தனர். வேலை நிறுத்தத்தை முறியடிக்க அமெரிக்க அரசு தனது அடக்குமுறை இயந்திரத்தைப் பயன்படுத்தியது.

மே 4ம் தேதி அமைதியாக நடைபெற்ற ஹே மார்க்கெட் பொதுக் கூட்டத்தில் ஒரு வெடிகுண்டு வீசப்பட்டது. கூட்டத்தினர் மீது துப்பாக்கி சூடு நடத்தினர். தலைவர்களைக் கைது செய்தனர். பின்னர் போலீசார் பொய் வழக்கு தயாரித்தனர்.

1886 ஜூன் 21 அன்று வழக்கு தொடங்கியது. 7 பேருக்குத் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது. இந்தத் தீர்ப்பைத் தொடர்ந்து நவம்பர் 11 அன்று தொழிலாளர் தலைவர்களான ஆகஸ்ட் ஸ்பைஷ், ஆல்பர்ட் பார்சன்ஸ், அடால்ஃப் ஃபிஷர், ஜார்ஜ் ஏங்கல் ஆகியோர் தூக்கிலிடப்பட்டனர். இரண்டு பேருக்கு மரண தண்டனை ஆயுள் தண்டனையாக மாற்றப்பட்டது. ஒருவர் சிறையிலேயே மரண மடைந்தார்.

இப்பொய் வழக்கு மற்றும் தண்டனை ஆகியவற்றின் நோக்கம் போராட்டங்களில் ஈடுபடும் தொழிலாளர்களை அச்சுறுத்துவதே.

பின்னர் இந்தச் சம்பவம் உலகம் முழுவதும் உள்ள தொழிலாளர்கள் மத்தியில் புரட்சிகரப் போராட்டங்களைத் தூண்டியது.

1889ஆம் ஆண்டு ஜூலையில் நடைபெற்ற 2வது அகிலத்தில் உலகம் முழுவதும் ஒரே நாளில் சர்வதேச தொழிலாளி வர்க்கம் ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது.

1890ஆம் ஆண்டு முதல் மே முதல் தேதியில் உலகத் தொழிலாளர்கள் மே தின அணிவகுப்பு, ஆர்ப்பாட்டங்கள், பொதுக் கூட்டங்கள் நடத்தத் தொடங்கினர். இந்த உரிமைப் போராட்டத்தைக் கடந்த 125 ஆண்டுகளாக உலகம் முழுவதும் தொழிலாளி வர்க்கம் நினைவுகூர்ந்து வருகிறது.

2012 ஆம் ஆண்டு 126வது மே தினக் கொண்டாட்டம் உலகம் முழுவதும் எழுச்சியோடு கொண்டாடப்பட்டுள்ளது.

உலகத் தொழிலாளி வர்க்கம் இன்றைய காலகட்டத்திற்கே உரிய புதிய சவால்களை எதிர்கொண்டுள்ளது. சவால்களைச் சந்திக்கவும் உயிர்க்கு அஞ்சாத உரிமைப் போராட்டத்தை நடத்தவும் தன்னை மேலும் மேலும் உரமேற்றிக் கொண்டுள்ளது. இத்தனை ஆண்டுகளாகப் போராடிப் பெற்ற தொழிலாளி வர்க்க உரிமைகள், சலுகைகளை அரசுகள் வழங்க மறுக்கும் போக்கு பல நாடுகளிலும் நிகழ்ந்து வருகிறது. இந்தப் போக்குகளை எதிர்க்க தொழிலாளி வர்க்கம் வர்க்க ஒற்றுமையோடு ஓரணியாகத் திரள்வது காலத்தின் கட்டாயம்.

போராடாமல் பெற்றதில்லை; போராடி நாம் தோற்றதில்லை என்பதைத் தொழிலாளி வர்க்கம் நினைவுகூரும் நன்னாள் இது.

Pin It