“மறந்துகொண்டே இருப்பது மக்களின் இயல்பு, நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே இருப்பது என் கடமை” என்கிறார் புகழ்பெற்ற வரலாற்றியலாளர் எரிக் ஹோப்ஸ்வாம். மேற் கண்ட வாசகம் என்றைக்கும் இல்லாத வகையில் இன்றைக்குக் கூடுதல் பொருள் கொடுப்பதை உணர முடிகிறது. அன்பு, நட்பு, காதல், உறவு என்ற சொற்கள் அதன் உண்மை அடையாளத்தை இழந்து நிற்கின்றன. இவற்றின் அடிஆழத்தில் பற்றிப் படர்ந்துள்ள வேரின் உயிர் ஊசலாட்டத்தில் உயிர்த்துக் கொண்டும், மறித்துக் கொண்டும் வருகின்றது.

yazhini_munusamy_400இச்சமூகம் எதன் மீதும், எவர் மீதும் முழு நம்பிக்கையும், மதிப்பும், அக்கறையும் கொண்டதாக இல்லை, அல்லது இருக்க முடியவில்லை. நாம் அறிந்த அளவிலான தமிழ்ச் சமூகம் எப்போதும் பூத்துக் குலுங்கியிருந்ததாகச் சொல்லி மகிழ முடியவில்லை என்பதே எதார்த்தம். பொற்காலம் என்று தமிழ் இலக்கிய வரலாறு குறிப்பிடும் காலங்கள், யாருக்குப் பொற்காலங்களாக இருந்தன என்ற கேள்வியின் முன் நிலைகுலைந்து போவதைப் பார்க்கிறோம்.

சங்க இலக்கியத்தில் பாரிக்கு நேர்ந்ததையும், கோப்பெருஞ் சோழன் வரித்துக்கொண்ட முடிவையும் எளிதில் செரித்துவிடக்கூடியதுதான்! புறநானூற்றுப் பாடலை உரையோடு படித்துப் பொருள் விளங்கிக் கொள்வதோடு முடிந்து விடுகிறதா தமிழ் இலக்கியம்? இப்படி எழும் கேள்விகள் நம்மை ஏதோ வகையில் உறங்கவிடாது செய்கின்றன. தமிழ் இலக்கியப் படைப்பின் நீட்சியில் எத்தனை எத்தனை உணர்வுப் பதிவுகள், வரலாற்றின் ஒவ்வொரு ஏடும் புரளுகிறபோது நமக்குள் எழும் அலைகள் எப்போதும் ஓயாத அலைகளாக நம்முள் எழும்பிக்கொண்டே இருக் கின்றன. அதன் தொடர்ச்சியாகவே இன்றைய சில படைப்புகள் வினையாற்றுகின்றன என்று எண்ணலாம்.

‘மோகினியுடனான சாத்தானின் உரையாடல்’ என்கிற கவிதைப் படைப்பு கவிஞர் யாழினி முனுசாமியின் அக உலகத்தை ஈரம் காயாமல் கொண்டு வந்திருக்கிறது.

“இலக்கியம் என்பது ஒரு கலை வடிவமே. ஆனால் இது மற்ற கலை வடிவங்களைவிட சிந்தனையோடு அதிகத் தொடர்பு கொண்டது. ஒவ்வொரு கலை வடிவமும் சமூகத்தின் ஏதோ வொரு பிரிவோடு உறவு கொண்டுள்ளது. இது அதன் உள்ளடக்கத்தாலே நிர்ணயிக்கப்படும், இந்த உள்ளடக்கம் கலைஞன் பிரதிநிதித்துவப் படுத்தும் வர்க்கத்தின் கருத்துகளாகவோ அல்லது அவன் மீது செல்வாக்குக் கொண்டுள்ள பல்வேறு சமூகப் பிரிவுகளின் கருத்துகளாகவோ அமையும்” என்று இலக்கியம் குறித்து கோ.கேசவன் வகுக்கும் வரையறையை இங்கு நினைவுபடுத்துவது பொருத்த மானதாக இருக்கும்.

கற்பனை வெளியில் நின்று படைக்கப்பட்ட கவிதைகள் என்று சொல்லுவதற்கு இத்தொகுப்பில் யாதொன்றும் இல்லை. முதலில் இந்த ஒன்றே இத்தொகுப்பு முழுமையும் மீண்டும் மீண்டும் வாசிக்கச் செய்கிறது. வெற்றுச் சொற்களைச் சேர்த்துவைத்து அதன் மீது மிரட்சியூட்டும் அலங்கார இசங்களை வாரியிறைத்திடும் பெருங் கவிகளுக்கு நடுவில் யாழினியின் கவிதைகள் நம்பிக்கையை உயர்த்திப் பிடிக்கின்றன. இதற்குச் சான்றாக நிறைய கவிதைகள் இந்நூலில் இடம் பெற்று நிறைவு செய்கின்றன.

இக்கவிதைத் தொகுப்பு குரல் உயர்த்தும் பாடுபொருட்களை வாசிப்பு அனுபவத்தின் நிறைவு கருதி, பின்வருமாறு இரண்டாகப் பிரித்துக் கொள்ளலாம். ஒன்று, தமிழகம் சார்ந்த அரசியல், சமூகம், நட்பு குறித்துப் பாடும் கவிதைகள்; இரண்டு, ஈழ நிலமும் அதன் போராட்ட முடிவும் குறித்து வெதும்பும் கவிதைகள்.

சொல்லுக்கும் செயலுக்கும் இடைவெளி காணாத மனிதர்கள் சந்திப்பது அருகி வரும் காலத்தில் வாழ்கிறோம். எதையாவது, பேசித் தீர்ப்பதில், எதையாவது எழுதித் தள்ளுவதில் காட்டுகிற ஆர்வத்தை சமூக செயல்பாடுகளில் காட்டுவதில்லை பலரும். அதற்கான காரணத்தை எங்கேயும் தேடியலைய வேண்டியதில்லை. செயலுக்குக் கிடைக்கும் மதிப்பைக் காட்டிலும் மற்றவை பெரும் உயர்வை எதில் கொண்டு வந்து சேர்த்துவிடுகின்றன. ‘சிவப்பாக இருப்பவன் பொய் சொல்லமாட்டான்’ என்கிற சினிமாத் தனத்தைப் போல, நன்றாகப் பேசுகிறவர் நல்லவராகத் தான் இருப்பார் என்று நம்புவதாக, நம் சமூகம் இருக்கின்றது. வேறென்ன வேண்டும் நம்மை இவர்கள் ஏய்ப்பதற்கு. இவ்வாறான உணர்வலை களைப் பல கவிதைகள் இயல்பாகவே ஏற்படுத்தி விடுகின்றன.

புத்திசாலித் தோழர்கள் என்ற கவிதை எப்படிப்பட்ட சமூக அமைப்பில் நாம் வாழ நேர்ந்திருக்கிறது என்பதைப் பின்வருமாறு சொல்லிச் செல்கிறது.

“நகரம் ஆழ்ந்துறங்கும் அதிகாலைப் பொழுதில்

போஸ்டர் ஒட்டியவர்கள்

புறநகர்களிலும் திரையரங்குகளிலும்

இரகசியக் கூட்டம் நடத்தியவர்கள்

தொடர்வண்டிகளிலும் பேருந்திலும்

உண்டியல் குலுக்கி தொலைதூரம் சென்று

புரட்சிகர மாநாடுகளில் பங்குகொண்டவர்கள்

இவர்களை எது மாற்றியது?

உழுபவனுக்கே நிலம் சொந்தம்

என்று பேசிய தோழர்கள்

‘ரியல் எஸ்டேட் பிசினஸ்’ செய்யப் போந்தது எங்ஙனம்?

முழுநேரக் கட்சி ஊழியனாய்

ஆக ஆசைப்பட்ட தோழர்

அரசு ஊழியனாய் ‘செட்டில்’ ஆனது எவ்வாறு நிகழ்ந்தது?

இவ்வாறு எல்லாவற்றையும் வெற்றுச் சொற் களால் மாற்றியது எது என்ற கேள்விக்கு ‘பிழைப்பு வாதமின்றி வேறெது தோழா” என்று விடை யளிக்கும் இடத்தில் கவிமனத்தின் கொதிப்பு பீறிடுகின்றது.

என்று பலரின் சந்தர்ப்பவாத முகத்திரையைக் கிழிக்கிறது. இதில் முகமூடி கிழிந்து தொங்கும் முகங்கள் நம்முடையது தானோ என்று பலரைக் குற்றஉணர்வில் கூனிக்குறுகச் செய்யும் என்பதைத் தயக்கமின்றிச் சொல்ல முடிகிறது.

இதே போல் ‘தோற்றுப் போனவனின் குரல்’ என்ற கவிதையும் பெரும் பெரும் தவறுகளைக் கூட, ‘பெரிய மனிதர்கள்’ என்பவர்கள் எத்தனை சாதுர்யமாகச் செய்துவிடுகிறார்கள் என்பதை அம்பலப்படுத்துவதாக உள்ளது.

“தமிழ்த் தேசியம்

மார்க்சியம்

ஏகாதிபத்தியம்

புரட்சியென

எங்களைப் பயிற்றுவித்தவர்கள்

ஆளும் வர்க்கத்திடம் அடிபணிந்து போனார்கள்

அவர்கள் விதைத்துச் சென்ற சிந்தனைகள்

பெருங்காடாய் வளர்ந்திருக்கின்றன எம் மூளையில்”

என்று எழுதுவதற்குத் துணிவும், தான் ஏற்றுக் கொண்ட கொள்கையின் மீது மாறாத பற்றுறுதியும் உண்மையில் இருக்க வேண்டும். இல்லாமல் இவ்வாறு எழுதுதல் சாத்தியமில்லை. பல உண்மைகளை அப்படியே கவிதையாக்கி உலவச் செய்திருக்கிறார் என்பது என் போன்றவர்களுக்கு மனநிறைவை ஏற்படுத்துகிறது.

உலகமயமாக்கமும், ஊடகமயமாக்கமும், நுகர்வு மயமாக்கமும் என்று எல்லாமும் சேர்ந்து ஒட்டுமொத்த போதை மயமாக்கிவிட்ட சூழலில் நம் இளம் தலைமுறையினர் சிக்கித் திணறி வருவதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும் மனிதர்கள் நாம். பள்ளிச் சிறுவன் தன் ஆசிரியரையே கொலை செய்கிறான். ஆசிரியரால் மாணவி பாலியல் கொடுமைக்கு ஆளாக்கப்படுகிறாள், தேர்வில் தோல்வி - மாணவி தற்கொலை, மாணவன் தற் கொலை என்கிற செய்திகள் சாதாரணமாகி விட்டன. எதையும் ஆராயாமல் மேம்போக்காகவே எழுதும் வழக்கம் பல அச்சு ஊடகங்களோ, எல்லாவற்றையும் படம்பிடித்துக் காட்சிப்படுத்தி விட வேண்டும் என்று துடிக்கின்றன.

கலவரமான நாட்டில் ஓர் ஊர் மட்டும் அமைதியாக இருக்க முடியாது; கலவரமயமான ஒரு ஊரில், ஒரு வீடு மட்டும் அமைதிப்பூர்வமாக இருக்கவியலாது என்பதைப் போல ஒட்டுமொத்த மான சமூகமே சிக்கலான வடிவத்தை எடுத்து வருகின்றது என்பதை உணர்ந்து, அடுத்த தலை முறையை நல்வழிப்படுத்துவதற்கான முயற்சி

களை சமூக ஆர்வலர்கள் இணைந்து எடுத்தாக வேண்டும் அதற்கான தருணம் வெகு தொலைவில் இல்லை என்பதை இத்தொகுப்பில் உள்ள ‘பெரியவர் களாகிவிட்ட குழந்தைகள்’, ‘மரணம் மலிந்த பூமி’ போன்ற கவிதைகள் உணர்த்துகின்றன.

மலையெனக் குவிந்து குமையும் குப்பையை, சுவாசமே நின்றுபோகும் அளவில் நாற்றமெடுத்த இடங்களைக் கடந்துபோவது நாள்தோறும் வாய்த்து விடுகிறது. மலைகளை, ஆறுகளை, செழித்த வயல் களை, நீர்நிறைந்த ஏரிகளை, குளங்களை, பசுமை யான ஊர்களை என்று இவற்றையெல்லாம் அடை யாளமாகக் கண்டிருந்த நம் வாழ்வு, குப்பைகளை யும், அது எரியும் புகைமூட்டத்தையும், நாற்றத்தை யும், அடையாளச் சின்னங்களாக்கி வாழப் பழகி விட்டதை என்னவென்று அழைப்பது. எந்தக் கூச்சமும் இல்லாமல் நெகிழிப்பைகளைப் பெருமையாகச் சுமக்கிறோம். துணிப்பை (மஞ்சப்பை) எடுத்துச் செல்வதை கேலிப் பொருளாக்குகிறோம். (திரைப் படங்களில்)

பல ஆயிரம் ஆண்டுகளாய் இந்த மண்ணில் மக்கிய குப்பைகள், எருவாகின, வாழ்வின் வளமாகின. இன்று குவியும் குப்பை அகற்ற வழியின்றி அழுகி நாறுகிறதே ஏன்? இந்த நிலம் நெகிழிக் குப்பை யால் சிதைவது குறித்து யாதொரு கவலையும் கொள்ளாதது ஏன்? என்ற அடுக்கடுக்காக எழும் கேள்விகள் நம்முன் நிற்க, யாழினியின் கவிதை அமெரிக்கப் பழங்குடி மக்களின் தலைவர் சியால்த் வரியை நினைவுபடுத்துகிறது.

“இந்தப் பூமிக்கு நேர்வதெல்லாம்

மனிதர்களுக்கும் நேரும்”

துயரம் நிரம்பிய உனது குரல்

அநாதையாய் ஒலித்துக் கொண்டிருக்கிறது.

இக்கவிதையின் ஏக்கம் நிறைந்த குரல் நம்முள் எதிரொலித்துக் கொண்டே இருக்கிறது. எத்தகைய வாசகனையும் உலுக்கிவிடும் இவ்வரிகள் அநாதை யாய் ஒலிப்பதாகாது, எத்தனை நாட்களுக்கு இந்த நீரோ மன்னர்கள் பிடில் வாசித்துக் கொண்டிருப் பார்கள். காலம் இவர்களின் கண் திறக்கும், வரலாறு இவர்களை அணிதிரட்டும் என்று நம்புவோம்.

பதிற்றுப்பத்தில் புண் உமிழ்ந்த குருதியைப் படித்திருக்கிறோம், விழுப்புண்பட்ட வீரனின் விலா எலும்புகளுக்கிடையில் குருதி தோய்ந்த குளத்தில் நெடுவல்லூரி மூழ்கி எழுவதை மனக் கண்ணில் உள்வாங்கியிருக்கிறோம். காலம் வழி யெங்கும் தமிழ் இனம் குருதி சிந்தியிருக்கிறது. ஆனால் 2009 மே திங்களில் ஈழநிலம் குருதி யுமிழ்ந்தது, துரோகத்தால் நிகழ்ந்தது. உலகம் கண்டிராத இனஅழிவு, பச்சை இனப்படுகொலை என்கிறது ‘குருதியுமிழ் நிலம்’ என்ற தலைப்பிலான கவிதை.

புதையுறும் சாட்சியங்கள், குற்றவுணர்வு, பிழைப்பு, தணிந்திருக்கும் ஓடை, போன்ற கவிதைகள் ஈழ மண்ணையும், அம்மக்களையும், அவர்தம் சொல்லாண்ணாத் துயரங்களையும் பதிவு செய்து வைத்திருக்கும் இந்தச் சாட்சியங்கள்.

நாளொரு பொழுதும், பொழுதொரு வண்ணமுமாகப் பொய்யுரைத்துத் திரியும் அதிகார வர்க்கத்தின் நாவன்மையால் நாளை இதுவும் மாற்றிப் பேசப்படும். அவ்வேளைகளில் இத்தகைய கவிதைகள் கூர் ஈட்டியாக நின்று பொய்யின் உயிர் குடிக்கும் என்று திடமாக நானும் நம்புகிறேன்.

இங்கு, எப்படியும் வாழலாம் என்கிறவர் களுக்கு / வாழ்வதில் எவ்வித சிக்கலும் இல்லை, இப்படித்தான் வாழ வேண்டும் என்ற இலட்சியத் துடன், உணர்வுள்ள மனிதனாக வாழ்வதுதான் கடினம். அதனை உணர்த்தும் பதிவாக, எந்த நிலையிலும் நியாயத்தின் பக்கமே நின்று பேசும் உரத்த குரலாக, பல்வேறு சூழல்களில் கருக் கொண்ட கவிதைகளின் தொகுப்பாக, யாழினி முனுசாமியின் மூன்றாவது கவிதைப் படைப்பு அணிவகுக்கிறது.

Pin It