முன்னுரை:

மொழி, மக்கள் சமூகத்தின் படைப்பு. மக்கள் சிந்திக்கவும், சிந்தித்ததைப் பிறரோடு பரிமாறிக் கொள்ளவும், செயல்படவும் மொழி ஒரு சிறந்த ஊடகமாகப் பயன்படுகிறது. மக்கள் சமூகத்தின் வளர்ச்சியோடு மொழி பிணைந்து கிடக்கிறது. இதைத் தெளிவாக உணர்ந்தவர் ஜீவா. மொழி குறித்த மார்க்சியச் சிந்தனை ஊடாக அவர் தமது கருத்தைப் பதிவு செய்கிறார். ஸ்டாலினின் மிக முக்கிய பங்களிப்புகளில் ஒன்றாக “மார்க்சியமும் மொழியியல் சிக்கல்களும்” (ஆயசஒளைஅ யனே ஞசடிடெநஅள டிக டுiபேரளைவiஉள) என்ற நூலின் பாதிப்பை ஜீவாவிடம் காணமுடிகிறது. இந்த நூலிலிருந்து பல பகுதிகளை அவர் மேற்கோள் காட்டுவார். ‘கருத்துக்களைப் பரிமாறிக்கொள்ளவேண்டியது இடையறாத, ஜீவா தாரமான அத்தியாவசியமாகும். மொழி இல்லா விட்டால் மக்கள் இயற்கைச் சக்திகளை எதிர்த்து ஒன்றுபட்டுப் போராடுவதோ சமூகத்திற்கு அத்தியா வசியமான பொருட்களை உற்பத்தி செய்வதில் இணைந்து நிற்பதோ முடியாததாகி, சமுதாய வாழ்வின் அச்சாணி முக்காலும் ஓடாது போய் சமுதாயம் அஸ்தமித்துவிடும்’ என்பார். (மொழியைப் பற்றி, பக். 2)

மொழியின் சொல்லகராதியில் சமூக மாற்றத்திற் கேற்ப, சொற்கள் புதிதுபுதிதாகச் சேர்ந்து விரிவு பெறும். மொழியின் வளர்ச்சிக்கான சாதனமாக அது அமைகிறது என்பார். மொழியின் இலக்கண மாற்றம் என்பது சொல் மாற்றம், வளர்ச்சிபோல விரைவானதன்று; மெதுவாகவே செயல்படும். ஆகவே ‘ஒரு மொழியின் இலக்கண முறையும் வேர்ச்சொல் தொகுதியும் அந்த மொழிக்கு அஸ்தி வாரமாக அமைவதோடு அதன் சிறப்பியல்பாகவும் விளங்குகின்றன’ (மேற்படி, பக். 4)

சுருக்கமாகச் சொல்வதென்றால், மொழியின் இலக்கணக் கட்டமைப்பு அதன் இயல்பைத் தீர் மானிக்கிறது, மெள்ள மெள்ளவே மாறுகிறது. ஆனால், மொழியின் சொற்கோவை காலச் சூழலுக் கேற்ப வளர்ச்சிபெற்று விரிவுபெறும் என்பதாகும்.

சொல் அகராதியைப் பற்றிப் பேசும் ஜீவா பல நிகண்டுகளையும் தமிழ் அகராதிகளையும் பற்றி யெல்லாம் குறிப்பிடுவது அவரது தமிழ் மொழித் திறனுக்குத் தக்க சான்றாகும். தமிழ் மொழியின் வளர்ச்சி அதன் பல துறைப் பயன்பாட்டைப் பொருத்தே அமையும் என்பதில் உறுதியாக இருந்தவர் ஜீவா.

எங்கும் தமிழ் எதிலும் தமிழ்

தமிழகத்தில் ஆட்சி மொழியாக, கல்வி மொழி யாக, நீதி மொழியாகத் தமிழே இருக்க வேண்டும். சட்டசபையில் தமிழே பேசப்பட வேண்டும் என்னும் ஜீவா ‘தமிழ்மொழியில் விஞ்ஞானத்தைப் பயிற்று விக்க முடியாது என்று சிலர் சொல்கிறார்கள். முடியும் என்று சொல்கிறது கம்யூனிஸ்ட் கட்சி’ (மேற்படி பக். 55). அறிவியலைக் கடந்த ஐம்பதாண்டு களாக மாதவய்யா, மயில்வாகனர், பாரதியார், அப்புசாமி போன்ற பலரும் தமிழில் எழுதி வந்திருப் பதையும் கலைக்களஞ்சியங்களும், கலைச்சொல் அகராதிகளும், கலைக்கதிர் போன்ற இதழ்களும் வெளிவந்திருப்பதையும் சுட்டிக்காட்டி அறிவியலைத் தமிழில் சொல்ல முடியும் என்பதை உறுதி செய் கிறார். (ஜீவாவும் தமிழும் பக். 46) ‘கலைச் சொற் களைத் தமிழில் ஆக்க முடியும், சிறந்த வேர்ச்சொல் தொகுதியும் அற்புதமான இலக்கண முறையும் கொண்டது நமது தாய்மொழியாம் தமிழ்... ஒரு சாதாரண யந்திரத் தொழிலாளியிடம் பேசிப் பார்த்தால் அவன் நவீன தொழில்முறை நுட்பங் களைத் தமிழில் அநாயசியமாக வெளியிடுவதைப் பார்க்கலாம்’ (மேற்படி பக். 36-37) கலைச்சொல் பற்றிப் பேசும் ஜீவா அத்துறையில் தம் பங்கினையும் தந்துள்ளார். பலதுறை சார்ந்த கலைச்சொற்களை அவர் தமது படைப்புகளில் பயன்படுத்தியுள்ளார். அவற்றுள் சில:-

Horizontal           -              சமமட்டம் (கிடைமட்டம்)

Verticle                -              செங்குத்து (நெடுமட்டம்)

Realism               -              மெய்யுணர்வியல் (நடப்பியல்)

Humanism          -              மனிதத்துவம், மனிதப் பண்பியல் (மனிதநேயம்)

Decadent Literature    -              நசிவு இலக்கியம்

(அடைப்புக்குறிக்குள் உள்ளவை இன்றைய வழக்கு)

கலைச்சொல் பயன்பாடு பற்றிய ஜீவாவின் அறிவார்ந்த சொற்கள்:-

‘தமிழில் ரேடியம் என்பதற்கு கதிர், அவிர், சுடர், ஒளி என்று இருக்கிறது. ரேடியம் என்று சொன்னால் புரிகிறது. கதிர் என்றால் அது என்ன என்று அதைப் புரியவைக்க வேண்டியிருக்கிறது. நாம் இத்தகைய சொற்களை உபயோகப்படுத்திக் கொண்டே வந்தால் நமக்குச் சீக்கிரம் புரிந்துவிடும். எப்படி மலையுச்சியிலிருந்து விழும் கரடுமுரடான கற்பாறைகள் உருண்டு உருண்டு அடிபட்டுக் கூழாங் கற்கள் ஆகின்றனவோ அதேபோல நம் கலைச் சொற்களும் மக்களிடையே அடிபட்டு அடிபட்டுப் பழக்கப்பட்டு எளிதில் யாதொரு கஷ்டமும் இன்றிப் புரிந்துகொள்ள முடியும் என்பதில் எனக்கு ஐயமே கிடையாது. உலக மொழிகள் எல்லாவற்றிலும் கூடத் தமிழ் உறவாடியிருக்கிறது; அவைகளிலிருந்து சொற்களை வாங்கியும் இருக்கிறது, கொடுத்தும் இருக்கிறது’ (தமிழ் ஆட்சி மொழி, பக். 332). இதன் மூலம் ஜீவா சொல்வது தமிழில் கலைச்சொல் பயன்பாடு கடினமான ஒன்றல்ல, மக்கள் வழக்கில் அவை வரும்போது எளிதாகும் என்பதாகும்.

அறிவியல் மொழியும் இலக்கிய மொழியும்

அறிவியல் மொழியில் சோதித்துக் கண்டறிந்த உண்மை, பொதுமை (Universalism), சொல்லுறா மொழி (Non-verbal language) இடம்பெறும். இலக்கிய மொழியில் கற்பனை, உணர்ச்சி, பொருள்கோள், சமூக, வட்டார வழக்குகள் இடம்பெறும். நேர்பட உரைப்பது அறிவியல் மொழி என்றால் நயம்பட உரைப்பது இலக்கிய மொழி ஆகும். இதை அறிந் திருந்த காரணத்தால் ஜீவா இரண்டு மொழிகளின் இயல்பை இவ்வாறு விளக்குகிறார்:-

ஒரு பிஞ்சுக்குழந்தையைத் தாய்

‘சீரங்கம் ஆடி, திருப்பாற்கடலாடி,

மாமாங்கம் ஆடி, மாசிக்கடலாடி,

தைப்பூசம் ஆடி, தவம் செய்து பெற்ற கண்ணே’

என்பாள். இது இலக்கியம். குழந்தையை ஒன்றரை அடி உயரம்; 20 அங்குலம் சுற்றளவு, பதின்மூன்று ராத்தல் எடையுள்ள தசைப்பிண்டம் என்பது உடற் கூறு ஆராய்ச்சி வல்லவர் சொல்வது. இது அறிவியல். இலக்கியத்தின் உயிர், உணர்ச்சி என்பார் ஜீவா.

ஜீவாவின் மொழித்திறன்

மொழி மக்கள் சமூகம் சார்ந்தது, அதன் அனைத்துப் பகுதிகளிலும் அது பயன்பட வேண்டும் என்ற கொள்கையுடைய ஜீவா, மக்களின் பேச்சு வழக்கில் தனி ஆர்வம் காட்டினார். மக்கள் தொண்ட ரான அவர் அரிய பெரிய கருத்துக்களையும் அனைவரும் புரிந்துகொள்ளும் நோக்கில் எளிய தமிழில் தமது பேச்சிலும் எழுத்திலும் பயன் படுத்தினார்.

‘குண்டிக்கொரு துண்டுமில்லை

கொல்வறுமை தாளவில்லை’

‘பாலின்றிப் பிள்ளையழும்

பட்டினியால் தாயழுவாள்

வேலையின்றி நாம் அழுவோம் - என்தோழனே

வீடுமுச்சூடும் அழும்’

கொச்சைப்பிழைப்பு, இச்சகப்பேச்சு, கோணல் மாணல் திட்டம் எனப் பல வழக்குச் சொற்களை அவருடைய படைப்புகளில் பார்க்கலாம். அவருடைய மொழியில் தென்மாவட்ட வழக்கு பரவலாக இடம் பெறும். சான்று - பச்சைநாவி, சுணங்கன் (நாய்), பாராப்பாடம் (மனப்பாடம்).

சில தொடர்கள்

கரை கடந்த கோபம், உருக்க உணர்ச்சியின் வீச்சு.

கம்பன்:- தமிழின் கவிச்சக்கரவர்த்தி, கனிந்த உணர்ச்சிக் கடல், நடமாடும் அனுபவக் களஞ்சியம்.

பாரதி:- பார்ப்பானுக்குப் பகையாளி, பாமரனுக்கு உறவாளி. மடத்தன முதலையின் வயிற்றைக் கிழித்தான்.

வையாபுரிப்பிள்ளை:- தமிழின் ஆராய்ச்சி மன்னன், ஆய்வு நிறைகுடம்.

ஜீவாவின் தமிழ்மொழித்திறன் சிறப்பானது என் பதற்கு ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பதற்கேற்ப இங்குச் சில சான்றுகளே தரப் பட்டுள்ளன. அவரது படைப்புகளை முழுமையாகப் படிப்பவர்கள் தமிழ் மொழித்திறனை இன்னும் விரிவாகத் தெரிந்துகொள்ள முடியும். இங்கு அவரது படைப்பாகக் கூறப்படும் ‘ஜீவா தொகுத்த வழக்குச் சொல்லகராதி’ (ஜீவபாரதி, கோ. எழில் முதல்வன்) என்ற நூலைப் பற்றிய ஒரு குறிப்பைத் தருவது தேவை எனப்படுகிறது. அந்தக் குறிப்பு:- ஜீவாவுடைய படைப்புகள் குறித்த தேடுதல் வேட்டையில் இறங்கியபோது கிடைத்ததுதான் இப்புதையல் என்றும் கையெழுத்துப் பிரதியிலிருந்த இந்த நூலுக்கு ஜீவா தலைப்புக் கொடுக்கவில்லை, தாங்களே தந்தது என்றும் பதிப்பாசிரியர்கள் குறிப்பிடுகிறார்கள். (ஜீவா தலைப்பு தராமல் இருந்திருப்பாரா? சிந்திக்க வேண்டியது.) இந்த நூலைப் புரட்டிப் பார்த்தபோது மேலே தரப் பட்டிருந்த குறிப்புகளுக்கும் நூலுக்கும் தொடர் பில்லை என்பது தெரியவந்தது. ஜீவா படித்த அல்லது பார்த்த ஒரு அகராதியிலிருந்து இவற்றைச் சில பயன்கருதி எழுதி வைத்திருக்கவேண்டும் என்பது தெரிகிறது. இந்த நூலில் உள்ள மிகப்பல சொற்கள் வையாபுரிப்பிள்ளையைப் பதிப்பாசிரியராகக் கொண்டு 1930- களில் சென்னைப் பல்கலைக்கழகம் வெளியிட்ட தமிழ்ப்பேரகராதியில் உள்ளவை யாகும். அதுமட்டுமல்ல, அது தரும் ஆங்கில, தமிழ் விளக்கம், மேற்கோள் முதலியனவும் மாற்றமின்றி அவ்வாறே தரப்பட்டுள்ளன. சான்று:- அக்கடா வெனல் onom.expr.of response, non - interference, சும்மாவிருத்தற்குறிப்பு. colloq.

அக்கரை need, interest, see அக்கறை, உம்ப ரக்கையராயினும் (தனிப்பா. 1.373. 12)

லோலன் one who is sportive or playful விளையாடித் திரிபவன். மத்தலைச்சூலலே லோலனே. (அறப்.சத.17)

கதைபண்ணுதல், காதறைகூதறை, சக்கைப்போடு போடுதல் எனப்பல வழக்குகள் பேரகராதியில் உள்ளவாறே உள்ளன. அந்த அகராதியில் உள்ள சொற்களுக்கான இலக்கணக் குறிப்பு இந்த நூலில் இடம்பெறவில்லை. இந்த நூலில் இடம்பெற்றுள்ள பரமார்த்தகுரு கதை, விரிவுரை, விரித்துரை, தொண் டரடிப்பொடி, செவியறிவுறூஉ, சென்றுதேய்ந்திறுதல் இவை வழக்குச் சொற்கள் ஆகுமா? இலக்கிய வழக் கில்லையா? அவர் பயன்படுத்திய பாராப்பாடம், சுணங்கன், பச்சைநாவி போன்றவை இந்நூலில் இடம் பெறவில்லை என்பதும் சுட்டத்தக்கது. ஜீவா தம் முடைய படைப்புகளில் பேச்சுவழக்குச் சொற் களைப் பயன்படுத்தி இருப்பதால் தமிழில் உள்ள பிற பேச்சுவழக்குகளைக் கண்டறிந்து அவை குறித்து எழுதும் நோக்கில் இப்பதிவுகள் செய்யப்பட்டிருக் கலாம். இதுகுறித்து மேலும் ஆராய வேண்டும்.

முடிவுரை:

ஜீவா தமது படைப்புகளில் எல்லோருக்கும் விளங்கும் மொழியைத் திறம்படப் பயன்படுத் தினார். பலதுறைகளிலும் தமிழைப் பயன்படுத்த வேண்டும் என்பதில் உறுதியாக இருந்து அதைச் செயல்படுத்த முயன்றார். கலைச்சொல்லாக்கம் குறித்த அவரது கனவு இன்று நனவாகிக் கொண் டிருக்கிறது. மொழியை உணர்ச்சிபூர்வமாக வளர்க்க இயலாது, அறிவுபூர்வமாகத்தான் வளர்க்க முடியும் என்ற திசைநோக்கிப் பயணித்த ஜீவா, நமக்கொரு வழிகாட்டியாக அமைகிறார்.

துணை நூற்கள்:

1.            சீனிவாசன், அ. 1988 ஜீவாவின் தமிழ்ப்பணி - என்.சி.பி.எச்.

2.            சுந்தரேசன், துரை 1986 தமிழ் ஆட்சி மொழி - ஒரு வரலாற்று நோக்கு, தமிழ்ப்பல்கலைக்                 கழகம், தஞ்சை.

3.            பாலதண்டாயுதம், கே. 1975 ஜீவா - வாழ்க்கை வரலாறு - என்.சி.பி.எச்.

4.            பொன்னீலன், 1982 ஜீவா என்றொரு மானுடன் - என்.சி.பி.எச்.

5.            வெங்கடாசலபதி, மு 1999 - ஜீவாவும் தமிழும் - ஸ்ரீ செண்பகா பதிப்பகம், சென்னை.

6.            ஜீவா, 2003 மொழியைப்பற்றி - என்.சி.பி.எச்.

7.  ஜீவாவின் பாடல்கள் - என்.சி.பி.எச்.

Pin It