படித்துப் பாருங்களேன்...

சோழர்கால நிலவுடைமைப் பின்புலத்தில் கோயில் பொருளியல் (மே.து.ராசுகுமார் 2004)

மக்கள் வெளியீடு

தமிழரின் தொல்சமயம் வளர்ச்சியுற்று மாறு தலடைந்து நிறுவன சமயமாக உருப்பெறத் தொடங்கி யதைச் சங்க இலக்கியச் செய்யுள்கள் சில உணர்த்து கின்றன. இதன் வளர்ச்சி நிலையைப் பல்லவர் காலத்தில் காணமுடிகிறது. பக்தி இயக்கம் என்ற ழைக்கப்படும் வைதீக, அவைதீகப் போராட்ட வரலாற்றில் கோவில் என்பது ஒரு நிறுவனமாக வளர்ச்சி பெற்றது. ஆளுவோரும், ஆளுவோரைச் சார்ந்தவர்களும் இவ்வளர்ச்சியில் முக்கிய பங்கு வகித்தனர்.

இதன் அடுத்த கட்டமாகப் பிற் காலச் சோழர் காலத் தில் கோவில்கள் சமூக வாழ்வில் மிகு ந்த முக்கியத்துவத் தைப் பெற்றன. தமி ழக வரலாற்றில் நீண்டகாலம் நிலைத் திருந்த பேரரசாக மட்டுமின்றித் தமிழக வரலாற்றுக்கான தரவுகளில் ஒன்றான கல்வெட்டுக்கள் ஏராளமான அளவில் உருப்பெற்ற காலமும் இதுதான். இக்கல்வெட்டுக்கள் மிகப்பெரும்பாலும் கோவில்களிலேயே இடம் பெற்றுள்ளன. வழிபாட்டிற்குரிய இடமாகமட்டு மின்றி வேறு பல பணிகளை மேற்கொள்ளும் நிறுவனமாகவும் கோவில்கள் இருந்தன. இது குறித்து இந்நூலாசிரியர்,

“பிற்காலச் சோழர்காலக் கோயில்கள் நில வுடைமை நிறுவனங்களாகவும், மேலாண் மை அமைப்புகளாகவும் நாட்டின் கருவூலங் களாகவும் கலைக்கூடங்களாகவும் கல்விச் சாலைகளாகவும் மருத்துவமனைகளாகவும் கடன்தரும் வங்கிகளாகவும் வேலை தரும் அமைப்புகளாகவும் மக்களின் அன்றாட வாழ்க்கையோடு இயைந்திருந்தன.”

என்று குறிப்பிடுகிறார். இவ்வாறு ஒரு பெரிய சமூக நிறுவனமாக விளங்கிய சோழர் காலக் கோவில்களின் பொருளியலுக்கும், சோழர்கால நிலவுடைமைக்கும் இடையிலான உறவை, மிக நுணுக்கமாக இந்நூல் ஆராய்கிறது.

வெறும் வழிபாட்டுத் தலமாக மட்டுமின்றி ஒரு நிறுவனமாகவே விளங்கிய கோவில்கள் சோழ மன்னர்களின் ஆதரவைப் பெற்றிருந்தன. அத்துடன், சோழப்பேரரசின் அங்கமாக விளங்கிய ‘ஊர்’, ‘சபை’, ‘நகரம்’ என்ற பெயர்களிலான ஊராட்சி யமைப்புகளும் கோவில் என்ற நிறுவனத்தைக் காத்து வளர்த்தெடுத்துள்ளன.

ஏராளமான உற்பத்தி நிலங்களையும் வேளாண்மையின் அடிப்படை ஆதாரமான நீர்வளங்களையும் இக்கோவில்கள் தம்மகத்தே கொண்டிருந்தன. இவற்றை நிர்வகிப்பவர்களாகப் பிராமணர்களும் வேளாளர்களும் இருந்துள்ளனர். அதே நேரத்தில் பிராமணர், வேளாளர் தரப்பிலிருந்து எதிர்ப்புகள் இந்நிர்வாகிகளுக்கு எதிராக நிகழ்ந்தன. இவ்வாறு எதிர்த்தவர்கள் யார்? என்ற வினாவை ஆசிரியர் எழுப்பி, நிலமற்ற பிராமணர்களும் வேளாளர் களுமே இவ்வெதிர்ப்பாளர்கள் என்ற முடிவுக்கு வருகிறார்.

இங்கு வேளாளர் என்போர், இன்று மதுரை ஆதீனத்துக்குத் தம்பிரானாக வரத் தகுதி பெற்ற வர்கள் என்று கூறப்படும் பதின்மூன்று சாதிப் பிரிவு களை உள்ளடக்கிய வேளாளர் என்போர் அல்லர்; வேளாண்மைத் தொழிலை மேற்கொண்டிருந்த சிறு நில உடைமையாளர்கள். சிறுநில உடைமை யாளர்களாக இருந்தோரின் நிலங்கள் அரச குடும் பத்தினராலும், அரசு அதிகாரிகளாலும், பறிக்கப் பட்டுக் கோவிலுக்கு வழங்கப்பட்டுள்ளன. கோவி லிடம் நிலத்தையிழந்த சிறு நில உடைமையாளர்கள் ‘உழுகுடி’ என்ற பெயரில் குத்தகைக்காரர்களாகவும், வேளாண் கூலிகளாகவும் மாறியுள்ளனர். இது குறித்து,

“பிறப்பினடியாகக் குடிமுறையிலோ, சாதி அடிப்படையிலோ அல்லது சமூக அடுக்கு நிலையிலோ, பிற உழைக்கும் பகுதியினரிட மிருந்து பிரித்துக் காட்டத்தக்க வகையில் வேளாளர் என்றே சில காலம் அழைக்கப் பட்டிருக்கிறார்கள். ஆனால், அடுத்தடுத்த தலைமுறைகளில் இவர்கள் வேளாளர் என்ற தகுநிலையினை இழந்து உழுகுடிகளாகவோ கூலிகளாகவோ மட்டுமே கொள்ளப் பட்டார்கள்.”

என்று குறிப்பிடும் நூலாசிரியர் (பக்கம் 53) நிலத்தின் உற்பத்திமுறையை அடிப்படையாகக் கொண்டே, பூசல்கள் தொடர்ந்தன என்கிறார். சோழர்காலக் கோவில்களை மையமாகக்கொண்டு நிகழ்ந்த குற்றங்களை, கோவில் பணத்தைக் கை யாடல், தெய்வப் படிமங்களுக்குரிய ஆடை அணி கலன்களைக் கவர்தல், சிலைகளையே திருடுதல் என வகைப்படுத்தியுள்ளார். தம் காமக் கிழத்தி யருக்கு வழங்கக் கோவில் பாத்திரங்களையும் அணி கலன்களையும் திருடிய நிகழ்வையும் குறிப்பிட்டு உள்ளார். இக்குற்றங்கள் கோவிலை நிர்வகித்தவர் களால் செய்யப்பட்டன.

இக்குற்றங்கள் கண்டுபிடிக்கப்பட்டபோது குற்றவாளிகளின் உடைமைகள்யாவும் பறிமுதல் செய்யப்பட்டன. கோவில் பணியிலிருந்து நிரந்தர மாக நீக்கப்பட்டனர். சில போழ்து குற்றம் சாட்டப் பட்டவர்களின் வீடுகள் இடித்துத் தரைமட்ட மாக்கப்பட்டன. கோவிலுக்கெதிரான குற்றச் செயல்கள், சிவத்துரோகமாக மட்டுமின்றி ராசத் துரோகமாகவும் பார்க்கப்பட்டன. இதற்கான காரணத்தை,

“சிறு குற்றங்களுக்கே கடுமையான தண்டனை என்றால், நில உரிமை வேண்டுதல், மேல் வாரம் தராதிருத்தல், வரிமறுத்தல் போன்ற பெரிய குற்றங்கள் பொறுத்துக் கொள்ளப் படமாட்டா என்பது நிலைநாட்டப்பட்டது ஆகும். கோவிலுக்கு எதிராகத் தவறிழைத்த வேளாளர், பிராமணர் போன்ற உயர் பிரிவினரே தண்டிக்கப்படும்போது உழுகுடி யினரைத் தண்டிப்பதும் ஏற்கத்தக்கதுதான் என்பதும் உறுதி செய்யப்பட்டது” என் கிறார். (பக்.80)

சோழர் காலச் சமூக ஒழுங்கு முறையின் ஒரு பகுதி யாகவே கோவில் பாதுகாப்பு விளங்கியது என்று கூறிவிட்டு இதற்கான காரணம் குறித்து,

“நடைமுறையில் கோவில்களுக்கு எதிரான போக்குகளை அடக்கவும் ஒடுக்கவும் எடுக்கப் பட்ட செயல்பாடுகள், கோயில் உடைமை களைக் காப்பதற்கு மேற்கொள்ளப்பட்ட செயல்முறைகள் என, யாவுமே நிலவுடைமை முறையைப் பேணுவதற்கு எடுக்கப்பட்ட வழி வகைகளாகவே அமைந்திருந்தன”

என்று விளக்கமளித்துள்ளார். ஒரு கோவிலின் பல்வேறு வகையான சொத்துக்களைப் பட்டியலிடும் ஆசிரியர், கொடையாகப் பெற்ற விளைநிலங்கள் மட்டுமின்றிக் கோவிலால் விலைக்கு வாங்கப்பட்ட நிலங்களும் இருந்தன என்கிறார். கொடையாகப் பெற்ற பணம், பொன் ஆகியனவற்றைப் பயன் படுத்தியும், சில நேரங்களில் இறைவனது அணி கலன்களை விற்றும், நிலம் வாங்கப்பட்டுள்ளதைக் குறிப்பிடுகிறார். காசின் மதிப்புக் குறைவும், நிலத்தின் மதிப்புயர்வும் நிலமுதலீட்டுக்கான காரணம் என்பது ஆசிரியரின் கருத்து (பக்.64)

அரசின் முக்கிய வருவாய் இனமாக நிலவரி இருந்தமையால் அதை நிரந்தரமாகப் பெறவே மன்னர்கள் விரும்பினர். இதனால், போரில் தோற்ற மன்னர்களின் கருவூலங்கள் கொள்ளை யடிக்கப்பட்டாலும், நிலவுடைமை உற்பத்தியைப் பேணிய கோவில்கள் காக்கப்பட்டன என்கிறார். தனியாகப் படைவீரர்களைக் கொண்டிருந்த கோவில்கள் அவற்றின் துணையுடன் தம் நில வரு வாயைப் பாதுகாத்துக் கொண்டன. மற்றொரு பக்கம், ‘சாதிதர்மம்’ என்ற பெயரில் சில குறிப் பிட்ட கடமைகளைச் செய்யவும், கொடை வழங்கவும், சாதிகளின் ஒப்புதலைப் பெற்றுள்ளமை கல் வெட்டுக்களின் வாயிலாகத் தெரியவருகிறது. குத்தகைதாரர்களான உழுகுடிகளிடம் கோவில்கள் இறுக்கமான அணுகுமுறையைக் காட்டியுள்ளன. கூடுதல் குத்தகை என்பதன் பெயரில் உழுகுடிகள் வெளியேற்றப்பட்டு, புதியவர்கள் உழுகுடிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

கோவிலின் இத்தகைய அணுகுமுறைக்கு உழு குடிகளிடமிருந்து அவ்வப்போது எதிர்ப்புகள் தோன்றியுள்ளன. இதில் ஒரு வழிமுறையாக ஊரை விட்டு வெளியேறியுள்ளனர். புதிய உழுகுடிகள் கிட்டவில்லையென்றால் அவர்களை அழைத்து வந்து, குத்தகைக் குறைப்புச் செய்துள்ளனர்.

கோவில் ஊழியர்கள் தமக்குரிய நிலங்களில் தம் உரிமையை நிலைநாட்டும் வழிமுறையாகத் தீக் குளிக்கும் செயலைச் செய்துள்ளதைக் கல்வெட்டுக்கள் குறிப்பிடுகின்றன. வேளாளரின் கட்டுப்பாட்டில் இருந்த கிடாரங் கொண்ட சோழநல்லூர் என்ற ஊர், வேளாளர்களால் நிர்வகிக்கப்பட்டு வந்தது. இவ்வூரிலுள்ள தேவதான நிலத்தை வேளாளர்கள் நால்வர் ஆக்கிரமித்துக் கொண்டனர். இதை எதிர்க்கும் வழிமுறையாக திருச்சூலவேலைக் காரர்கள் சிலர் தீப்பாய்ந்து தற்கொலை செய்து கொண்டதை கி.பி.1177 ஆம் ஆண்டு சோழர் கல்வெட்டு குறிப்பிடுகிறது.

திருச்சி மாவட்டம் அன்பில் ஊரில் அதை நிர் வாகம் செய்த பிராமண சபை, கோவில் நிலத்தைத் தனதாக்கிக் கொண்டது. இதை எதிர்த்துப் பழுதை யாண்டார் என்பவர் தற்கொலை செய்துகொண்டதை 1249 ஆண்டுக் கல்வெட்டு குறிப்பிடுகிறது. வேளாளர் களும் பிராமணர்களும் செய்த இச்செயல் குறித்து,

‘வேளாளர்களது ஊரில் தனிப்பட்ட சிலரின் கயமை சதுர் வேதம் ஓதிய பிராமணர்களது ஊரிலே அனைவரும் ஒன்று சேர்ந்த கயமை’

என்கிறார் ஆசிரியர். நிலவுடைமையாளர் பொறுப் பிலேயே கோவில் இருந்துள்ளது. நிலஉடைமை யாளர்களாக இல்லாத உழுகுடிகளிடம் மேல் வாரம், கடமை (வரி) ஆகியன கடுமையான முறையில் வாங்கப்பட்டுள்ளன. நீதி வழங்கலும் கூட ‘உடைமை யாளர்’, ‘உடைமையாளர் அல்லாதார்’ என்ற பாகுபாட்டின் அடிப்படையிலேயே வழங்கப் பட்டுள்ளது. வேளாண்மையின் அடிப்படைத் தேவையான நீர்வளங்களும் நிலவுடைமையாளரின் கட்டுப்பாட்டிற்குள்ளேயே இருந்துள்ளன.

நிலவுடைமை கொண்ட அமைப்பாகத் தொடக்கத்தில் கோவில் இல்லை. நிலவுடைமை கொண்ட நிறுவனமாகக் கோவில் மாறத் தொடங்கிய பின்னர் பிராமணர்களின் நுழைவு கோவில்களில் ஏற்படத் தொடங்கியது. ‘வருவாய்’, ‘பயன்பாடு’ என்பனவற்றைப் பிராமணர்கள், கோவில்களில் பெற்றிருந்தாலும் கோவில் விளைநிலங்களின் மீதான கட்டுப்பாட்டை வேளாளர்கள் தம்மிடம் வைத்துக் கொண்டனர். ஆயினும், பிராமணர் வேளாளர் முரண் இக்காலத்தில் உருவாகவில்லை. இவ்விரு பிரிவினரும் கோவில் வளத்தைத் தம்முள் பகிர்ந்துகொண்டனர்.

ஒரு பக்கம் கோவிலின் பொருள்வளம் பெருகி னாலும் உழுகுடிகள் எவ்வித நன்மையையும் பெற வில்லை. சோழப் பேரரசின் ஆதரவு கோவிலுக்கு இருந்தது. நிலவுடைமை அரசின் ஒரு பகுதியாகவே கோவில் இருந்துள்ளது. ஆனாலும் கோவிலுக்கு எதிரான குற்றங்களை வேளாளர், பிராமணர், உழுகுடிகள் என்ற வேறுபாடின்றிப் பேரரசு ‘கடுமையாகத் தண்டித்தது’; மற்றொரு பக்கம் பக்தி இயக்கம் உடைமையாளர் நலனையே மையமாகக் கொண்டிருந்தது. இது பிராமணியத்துடன் ஒத்திருக்கவுமில்லை; ஒன்றிப் போகவுமில்லை’.

இச்செய்திகளையெல்லாம் பெரும்பாலும் கல்வெட்டுச் சான்றுகளின் துணையுடன் ஆசிரியர் நிறுவியுள்ளார். இந்நூலின் வலிமை இதுதான். கோவில் என்ற அமைப்பு வெறும் வழிபாட்டுத் தலமாக மட்டும் பிற்காலச் சோழர் காலத்தில் விளங்கவில்லை. ஒரு பொருளாதார நிறுவனமாக அது நிலைபெற்றிருந்துள்ளது என்பதையும் அதற் கான அரசியல் காரணத்தையும் இந்நூல் உணர்த்து கிறது.

இதுபோன்ற பல சமூக வரலாற்றுச் செய்திகள் இந்நூலில் விரவிக் கிடக்கின்றன.

அவற்றுள் சில வருமாறு:

*      கோவில் பணியாளர்களான பண்டாரிகள், பரிசாரகர்கள், கணக்கெழுதுவோர் ஆகியோருக் கான தகுதியாக, நிலவுரிமை இருந்துள்ளது. நில உரிமை உடையோரே மேற்கொண்ட பணி களை வகிக்க முடியும்.

*      ‘உடையான்’, ‘உடையார்’ என்ற சொற்கள் நிலவுரிமை கொண்டவர்களைக் குறித்தன. உடையார் என்ற சொல் மன்னனையும் தெய்வத் தையும் குறிக்கவும் பயன்படுத்தப்பட்டது.

*      மன்னர்கள், பிராமணர்கள், வேளாளர் பிரிவி லிருந்து சென்ற அதிகாரிகள், படைத்தலை வர்கள் ஆகியோர் நிலத்திலிருந்து உழவர்களை வெளியேற்றி, வெறும் பயிரிடுவோராக அவர் களை மாற்றினர்.

*      நீர் ஆதாரங்களை உருவாக்கி, புன்செய் நிலங் களை நன்செய் நிலங்களாக நிலவுடைமை யாளர்களும் கோவில்களும் மாற்றியமைத்த பின்னர் குத்தகையாளர்களாகவும் கூலி உழைப் பாளர்களாகவும் சிறு நில உடைமையாளர்கள் மாறினர்.

*      உடைமை இல்லாது கோவில்கள் இருந்தபோது அங்கு பிராமணர்கள் இறைப்பணியாளர்களாக இல்லை. கோவில்கள் நிலவுடைமை பெற்ற பின்னர் பிராமணர்கள் அதில் நுழைந்தனர். அதே நேரத்தில் கோவில் நில உரிமையில் வேளாளர்கள் ஆதிக்கம் செலுத்தினர். இதன் அடிப்படையில் வேளாளர், பிராமணர் கூட்டு நிலவியது. ஒருவர் நலனை மற்றொருவர் பேணிக் கொண்டனர். நிலக்கொடை பெற்ற பிராமணர்கள் நிலங்களின் மீது முழு உரிமை பெற்றிருக்கவில்லை. அதன் பயனை மட்டுமே துய்த்தனர்.

இச்செய்திகளை விரிவாகக் கூறிச் செல்லும் இந்நூல் விவாதத்திற்குரிய பின்வரும் கருத்துக் களை முன் வைக்கிறது:

*      பக்தி இயக்கம் நிலவுடைமைப் பகுதியினரிடம் மட்டுமே முடங்கிப் போய்விட்டது. அது அவர்களை வலுப்படுத்தியது. அடித்தட்டு மக்களை இது ஈர்க்கவில்லை. அவர்கள் தம் நாட்டார் சமயத்தைப் பின்பற்றி வந்தனர்.

*      பக்தி இயக்கம் பிராமணியத்துடன் முரண் பட்டிருந்தது என்றாலும் அது மோதலாக முற்றவில்லை.

*      அறிவுசார் மொழியாகத் தமிழ்தான் இருந்தது.

மொத்தத்தில் கடின உழைப்பின் அடிப்படையில் திரட்டப்பட்ட தரவுகளின் அடிப்படையில் இந் நூல் எழுதப்பட்டுள்ளது. அத்துடன் விவாதத்திற் குரிய சில கருத்துக்களையும் முன்வைத்துள்ளது. வெற்றுப் பெருமிதம் பேசும் நிலையிலிருந்து

விலகி நின்று வழிபாட்டுத் தலமாக மட்டுமின்றிப் பொருளாதார நிறுவனமாகச் சோழர்காலக் கோவில்கள் விளங்கியதையும், சோழர்கால நில வுடைமைக்கும் சோழர்காலக் கோவில்களுக்கும் இடையிலான பொருளாதார உறவு நிலையையும் நாம் அறிந்து கொள்ளச் செய்கிறது.

Pin It