காப்பீட்டுத் தொகை விண்ணப்பத் திலும், சொத்து ஆவணங்களிலும் வாரிசு களின் பெயர்கள் குறிக்கப்படுவதைப் போல இந்தியாவில் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத் தொடுக்கும் போதும், வாதி, பிரதிவாதிகள் தங்கள் குடும்ப வாரிசுகளின் பெயர்களைக் குறிக்கவேண்டிய அவசியம் ஏற்பட்டுவிடும் போலும்! ஏனெனில் எந்த வழக்கும் நீதிமன்றத்துள் அடியெடுத்து வைத்தால் அதன் விசாரணைகள் முடிந்து, அறிவிக்கப்படும் தீர்ப்பினை வாதி, பிரதிவாதி தன் வாழ்நாளில் தெரிந்து கொள்ள முடியுமா என்ற கவலை நம் நாட்டில் விரவிவருகிறது.

இவ்வாறு வழக்குகள் குவிந்திருப்பது என்பது, இன்றைய சமூகச் சூழலில் மக்கள் தொகை தொடர் பெருக்கத்தில் எதார்த்தமான ஒரு நிலை தான்! இவற்றைச் சமாளிக்கும் முயற்சியில் வாதி, பிரதி வாதிகளுக்கு உதவும் நோக்கில் நடுவர்களின் பேச்சு வார்த்தை மூலம் வழக்குகள் தீர்க்கப்படலாம் என்ற அடிப்படையில் 06-11-2006 அன்று சென்னை உயர்நீதி மன்றத்தின் அந்நாள் தலைமை நீதிபதி ஏ.பி.ஷா அவர்கள் மாற்றுத்தீர்வுக் கழகம் (Society for Alternative Dispute Resolutions - Sofads) என்னும் சட்டப் படியான அமைப்பைத் தொடங்கி வைத்தார். இந்த அமைப்பின் தலைவர் தேசிய நெடுஞ்சாலைத் துறையில் தலைமைப் பொறியாளராகப் பணி யாற்றி ஓய்வு பெற்ற திரு.ஏ.வி. ரங்கராஜு; சென்னை உயர்நீதி மன்ற வழக்கறிஞராகவும் உயர்தர நடுவராகவும் (Accredited Mediator) பணியாற்றி வரும் திரு. எஸ். அருணாசலம் செயலாளராக இயங்கி வருகிறார். இந்த அமைப்பு, SOFADS JOURNAL என்ற காலாண்டு இதழ் ஒன்றை நடத்தி வருகிறது.

இதில் நீதித்துறைப் பெருந்தகைகள், சட்டத் துறை வல்லுநர்கள், பயிற்சி பெற்ற நடுவர்களின் கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன.

“சட்ட அரங்கின் பல தளங்களில் வழக்கு களை விரோதமின்றி, விரைவாக, இணக்கமாக, மிகக் குறைந்த செலவில் தீர்ப்பதற்கு, இன்றைய பன்னாட்டுச் செல்நெறிகள் புதிய பாதைகளைத் திறந்து விட்டுள்ளன.” என்ற உடன்பாடான, முன் வாக்கியத்துடனான தலையங்கத்துடன் தொடங்கு கிறது சொஃபாட்ஸ் (SOFADS JOURNAL) இதழ்.

பேச்சுவார்த்தையின் மூலம் இணக்கமான தீர்வை அடைவது எப்படி என்று தனது கட்டுரையின் மூலம் விளக்குகிறார் சென்னை உயர்நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி நீதியரசர் எம்.ஒய். இக்பால். இந்தியாவின் புகழ்பெற்ற முகலாயப் பேரரசர் ஜஹாங்கிரின் முன்னே விசாரணைக்கு வந்த ஒரு வழக்கின் சுவையான விவரிப்பே இது! அவரது நாட்டரசியும் இதயத்தரசியுமான நூர் ஜஹான் தன் மணாளனின் மாளிகையிலிருந்து மான் ஒன்றைக் குறிவைத்து அம்பு விடுகிறாள். அந்த அம்பு, அங்கே புதருக்குப் பின்னால் இருந்த ஒரு சிறுவனின் மீது பாய, கெடுவாய்ப்பாக, அச் சிறுவன் நிகழ்விடத்திலேயே உயிரிழக்கிறான். சிறுவனின் தந்தை துணி வெளுக்கும் தொழிலாளி. அவர் அலறித் துடித்து ஓடோடிச் சென்று அரசரிடம் நீதி கேட்கிறார். குற்றச்சாட்டைக் கேட்ட அரசன் சட்டத்தின் முன் யாவரும் சமம் என்ற அறநெறியின் படி தனது மனைவியை-பட்டத்தரசியை பிற குற்ற வாளியைப் போல அரசவைக்கு அழைத்து, விசாரணை செய்கிறார். ‘உயிருக்கு உயிர்!’ என்ற கூற்றுடன், உயிருக்குயிரான மனைவிக்கு மரண தண்டனை விதிக்கிறார். அவையே அதிர்கிறது. பின்னர் அரசரின் ஆலோசகர்கள் குரானில் இருந்து சில வரிகளைச் சுட்டிக்காட்டி, நடந்த குற்றத்தால் பாதிக்கப்பட்டவரும் பாதிப்பை ஏற்படுத்தியவரும் இசைந்தால் பேச்சு வார்த்தை நடத்தி, மரண தண்டனையை விலக்கலாம் என்று கூற, அதன்படி, துணி வெளுக்கும் தொழிலாளியின் மன இசைவுடன் அரசி தண்டனையிலிருந்து காப்பாற்றப்படுகிறாள்.

இந்நிகழ்வை மிக நயமாகச் சுட்டிக்காட்டும் நீதி யரசர் இக்பால் கி.பி. 1225 இல் இரவு வேட்டையின் போது தவறுதலாக ஒரு மனிதனின் உயிரிழக்கக் காரணமாக அமைந்த வேடனின் வழக்கு, கி.பி. பன்னிரண்டாம் நூற்றாண்டில் விக்கிரம சோழனின் ஆட்சிக் காலத்தில் ஒரு மனிதன் தன் மனைவியை வேகமாகத் தள்ளிவிட, அந்தப் பெண் கீழே விழுந்து உயிரிழக்க, அதனால் ஏற்பட்ட வழக்கு உள்ளிட்ட சான்றுகளைக் கூறி அவற்றுக்குப் பேச்சுவார்த்தையின் மூலம் தீர்வு காணப்பட்ட வகைமுறையை விளக்கு கிறார்.

இன்றைக்கு இந்தியாவில் நிலுவையாகிக் குவிந்திருக்கும் வழக்குகளின் எண்ணிக்கையைக் குறிப்பிட்டு, ‘குற்றவியல் நடைமுறைச் சட்டம், 1973’- இல் கடைசியாக மேற்கொள்ளப்பட்ட திருத்தத்தின்படி பேச்சுவார்த்தை மூலம் கிரிமினல் வழக்குகளையும் தீர்க்க முடியும், அப்படிச் செய்வது மிகவும் அவசியமானது என்று நீதியரசர் இக்பால் தனது கட்டுரையில் வலியுறுத்துகிறார்.

மாற்றுத்தீர்வுக் கழகத்தின் முன் சட்டப்படி கொண்டு செல்லப்படக்கூடிய வழக்குகள், என் னென்ன, அவ்வாறு கொண்டு செல்லப்பட முடியாத வழக்குகள் என்னென்ன என்று இவரது கட்டுரையில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

‘வழக்கில் வெற்றி பெற்றவர் என்று கருதப் படுபவர் பொருட்செலவு, நேரச் செலவு என்ற வகையில் உண்மையில் தோல்வியடைந்தவரே ஆவார்’ என்ற ஆபிரகாம் லிங்கனின் கூற்றுடன் மாற்றுத்தீர்வு முறையின் அருமையை வலியுறுத்திப் பேசுகிறது சென்னை உயர்நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி நீதியரசர் ஏ.பி.ஷா அவர்களின் கட்டுரை.

இந்தியாவை விட வழக்குகள் நிறைந்த அமெரிக்காவில் மாற்றுத்தீர்வு முறை எப்படிப் பயன் அளிக்கிறது என்றும், அங்கு மாற்றுத்தீர்வு வலியுறுத்தும் சட்ட முறைமை ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து, கனடா, இங்கிலாந்து, பிரான்ஸ் ஆகிய நாடுகளுக்கும் பொருந்துகிறது என்றும் கூறுகிறார் நீதியரசர் ஷா.

அத்துடன், இங்கே இந்தியாவில் தமிழ்நாட்டில் மிக முக்கியமான வழக்கு ஒன்று இடையீட்டுப் பேச்சுவார்த்தை மூலம் எப்படித் தீர்வை எட்டியது என்றும் சுட்டிக்காட்டுகிறார்.

1994-இல் ஸ்டாண்டர்ட் மோட்டார் நிறுவனம் மூடப்பட்டது. அதில் பணியாற்றிய 2,200 பணி யாளர்கள் வேலையிழந்தனர். இறுதியில் நிறுவனம் நூற்றைம்பது கோடி ரூபாய்க்கு விற்கப்பட்டது. ஊழியர்கள் இழப்பீட்டுத் தொகையாக ஐம்பது கோடிக்கு மேல் கேட்டனர். 12 ஆண்டுகள் வரை தீர்க்கப்படாமல் தொங்கிக்கொண்டிருந்த வழக்கை மாண்புமிகு நீதிபதி சித்ரா வெங்கட்ராமன் அவர்கள் கவனத்தில்கொண்டு பேச்சு வார்த்தைக்குப் பரிந் துரை செய்தார். நிறுவனத்தை நடத்தியவர் களுக்கும், பணியாற்றிய தொழிலாளர்களுக்கு மிடையே இணக்கமான தீர்வு ஏற்பட்டது. இப் பிரச்சினையில் நடுவர்களாகப் பணியாற்றிய திரு. ஸ்ரீராம் பஞ்சு, திரு. யஷோத் வர்தன் ஆகிய இருவரின் செயல்திறனையும் நீதியரசர் ஏ.பி.ஷா பாராட்டியிருப்பதுடன், பேச்சுவார்த்தை மூலம் சட்டபூர்வமாக இடையீடு செய்தலின் உயரிய பலனை எடுத்துக்கூறுகிறார்.

மனித உரிமை என்றால் பெரும்பாலும், வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுத் தண்டனைக்கு ஆளாகும் நபரின் வாழ்வாதாரத்திற்காகப் பரிந் துரைக்கப்படும் கோரிக்கையாக அமைகிறது என்று சுட்டிக்காட்டிப் பேசும் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி நீதியரசர் பி.ஜோதிமணியின் கட்டுரை தனி நபருக்கும், மாநில அரசுக்கும் இடையில் நடை பெற்ற சில வழக்குகளைக் குறிப்பிட்டு, இந்திய அரசியலமைப்புச் சட்டம் ஷரத்து - 21 மனித உரிமையையும் இயற்கை நீதியையும் வலியுறுத்துகிறது என்கிறது.

இவ்வாறு மனித உரிமை மீறலையும் கூட, பேச்சுவார்த்தை மூலம் ஆரோக்கியமான முறையில் தீர்வு காண முடியும் என்பதில் இந்தக் கழகம் நம்பிக்கை கொள்கிறது.

நீதி நூறு விழுக்காடு காப்பாற்றப்பட வேண்டும் என்ற நோக்கில் நமது முன்னோர்களால் உருவாக்கப் பட்ட பழைய நடைமுறைச் சட்டங்கள், அந்த நன் நோக்கில் எந்தத் தவறும் நிகழ்ந்துவிடக் கூடாது என்ற அக்கறையில் மேல்முறையீடு, மறு ஆய்வு என அடுத்தடுத்த பல நிலைகளுக்கு வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கின்றன என்றும் இன்றைய நிலையில் ஏற்படும் அளவுக்கு மீறிய கால தாமதத்தால் வழக்கின் இரு தரப்பினர்களுமே ஏமாற்றத்துக் குள்ளாகின்றனர் என்றும் குறிப்பிடுகிறார், தமிழ் நாடு நடுவரங்க மற்றும் சமரச மையம், மதுரை கிளை இணைச்செயலாளரான வழக்குரைஞர் ஐசக் மோகன்லால். எனவே, காலதாமதமாகக் கிடைக்கும் நீதியைத் தவிர்ப்பதற்கு இந்த மாற்றுத் தீர்வுக் கழகத்தின் பேச்சுவார்த்தை பாணி எப்படி உதவும் என்பது ஐசக் மோகன்லாலின் வலியுறுத்தல்.

சமுதாயம் என்பது கூடி வாழ்தலே! இத்தகைய சமுதாயத்தில் மகிழ்ச்சியுடன் வாழ்வதற்கு இன்றிய மையாத கூறுகள் அன்பும் இணக்கமுமே! நியாயம், நீதி எல்லாவற்றுக்கும் அடிப்படையும் இவையாம்! நியாயம், நீதி என்பவற்றை இந்திய மெய்யியல் முறைகளுள் ஒன்றான நியாய மெய்யியல் முறையின் சூத்திரங்கள் உரைக்கும் புலனறிவு (பிரத்தியட்சம்), ஊகம் (அனுமானம்), ஒப்பீடு (உவமானம்) உரைச் சான்று (சப்தம்) ஆகிய கூறுகளைக் கொண்டு விளக்குகிறார் உயர்தர நடுவர் வழக்குரைஞர் உமாராமநாதன்.

வழக்கில் வாதி, பிரதிவாதி இருவரும் மன நிறைவு பெறுகிற அளவுக்கு இந்த இரு தரப்பினர் களுக்கும் உதவுகிற சமரச முறையே நியாயம் என்பதாகும் என்பது உமாராமநாதனின் கூற்று.

அடுத்த கட்டுரையில், பேச்சுவார்த்தை மூலம் இணக்கத்தை ஏற்படுத்தி, சிக்கலைத் தீர்க்கின்ற நடுவரங்க (Mediation) முறையைக் கற்றறிய அமெரிக் காவில் வசிக்கும் இந்தியரான கீதாரவீந்திரன் எப்படித் தனது சில மணி நேர வகுப்புகளிலே தாக்கத்தை ஏற்படுத்தினார் என்று விவரிக்கிறார், இந்த இதழின் ஆசிரியர் வழக்குரைஞர் எஸ். அருணாசலம்.

பயிற்சிக்குப் பின் இவருக்கு சமரசம் செய்வதற்கு வாய்த்த முதல் வழக்கு ஒரு குடும்பப் பிரச்சினை! பேச்சு வார்த்தையின் நிலை ஒவ்வொரு கட்டமாக நகர்ந்து செல்கிறது. பேச்சுவார்த்தை ஒரு வழியாக முடிந்தது. திருமணமான இரண்டே ஆண்டுகளில் மணவிலக்குக்காக அணுகிய அந்த இளம் மனைவி, “நீதிமன்ற (பேச்சுவார்த்தை) விசாரணையில் இப்படி இவ்வளவு நேரம் என்னைப் பேச விடுவார்கள் என்று இதுவரை எனக்குத் தெரியவே தெரியாதே!” என்று தனக்குப் பேச தாராளமான வாய்ப்பு கொடுத் தமைக்காக வியப்பும் பெருமிதமும் அடைந்தாராம்! வழக்குரைஞர் எஸ்.அருணாசலம் அதுவரை நடுவர் பயிற்சியில் (Mediation) பெற்ற ஏட்டறிவை மேலும் பட்டை தீட்டிக்கொள்ள அந்த இளம் பெண்ணின் வாசகமே தீட்டு கருவியாக அவருக்குப் பயன்பட்டதாம்.

இப்படித்தான் ஜெர்மனியில் ஒரு நிகழ்வு!

வேதிப்பொருள் ஆராய்ச்சி நிறுவனம் ஒன்றில் பணியாற்றிக் கொண்டிருந்தாள் ஓர் இளநங்கை. காண்கிற கண்களையெல்லாம் கவர்ந்திழுத்தது அவளது அழகு! எத்தனையோ ஆண்கள் காதல் தூது விட்டுச் சோர்ந்து போயினர். திடீரென அவள் விடுப்பில் சென்று விட்டாள். ஒரு மாதம் கழித்து மீண்டும் அவள் அலுவலகத்துக்கு வந்த போதுதான் தெரிந்தது- அவள் திருமணத்துக்காக விடுப்பு எடுத்திருக்கிறாள் என்று. தன் எழிலால் ஏராளமான கண்களில் கிறக்கத்தை ஏற்படுத்தி உறக்கத்தைக் கெடுத்த அந்தப் பெண்ணை மணந்து கொண்ட மணாளன் எப்படி இருப்பான் என்று பார்ப்பதற்கு ஆண்களும், பெண்களும் தவியாய்த் தவித்தனர். காரணம், அந்த வனப்புமிகு வஞ்சியைக் கரம் பிடித்தவன் தன்னைவிட அழகானவனா? என்று அறிவதற்கு ஆடவர்களுக்கு ஆசை! தன்னைப் போன்ற பெண்களையெல்லாம் புறக்கணித்து அவளையே மொய்த்துக் கொண்டிருந்த ஆண் களுக்கெல்லாம் ‘டாட்டா’ காட்டிய அந்த அழ கரக்கியைக் கவர்ந்த முரட்டரக்கன் யார் என்று காண்பதற்குப் பாவையருக்கு ஆவல்! ஒருநாள் அவளுடைய தோழிகள் மட்டும் அவளது இல்லத் துக்குச் சென்று புது இணையருக்குப் பரிசுகளை வழங்கினர். அவர்களுடைய நோக்கமும் நிறை வேறியது. ஆம்; திட்டமிட்டபடி அவளது கண வனை நேரில் காண முடிந்தது. அவளது கணவனோ, தோற்றத்தில் அவளுடைய அழகுக்குச் சற்றும் பொருந்தாதவர். தோழிகள் உணர்ச்சியை அடக்க முடியாமல், “எப்பேர்ப்பட்ட பேரழகி நீ! நீ... எப்படி இவரை.....” என்று நேரில் கேட்டு விட்டனர். அதற்கு அவள், “என்னிடம் எத்தனையோ ஆண்கள் பேசினர், எங்கெங்கோ பேசினர், என்னென்னவோ பேசினர், எவ்வளவோ பேசினர், எப்படி எப்படியோ பேசினர், எந்தெந்த மொழியிலோ பேசினர், யார் யார் மூலமோ பேசினர். ஆனால்... என்னைப் பேச விட்டவர் இவர் ஒருவர்தான்!” என்றாள்!

பேசுவதற்குப் பயிற்சி எடுப்பதோடு பொறுமை யாகக் கேட்பதற்கும் பயிற்சி பெற வேண்டும் என்று வலியுறுத்துகிறது இந்தக் கழகம்.

அந்தப் பயிற்சியில் தேர்ச்சி பெற்றவர்கள் நடத்தும் மாற்றுத்தீர்வுக் கழகம் தமிழகத்தில் அடையப் போகிற வெற்றி இந்தியாவுக்கு வழி காட்டும்!

Pin It