சங்க கால இலக்கியங்கள் சில நூற்றாண்டுக் கவிதைகளின் தொகுப்பாக அமைந்துள்ளன. இத்தகைய தொகையுள் தொல்காப்பியர் காலத்திற்கு முந்தைய மரபுகளும் தொல்காப்பியர் காலத்து மரபுகளும் அவர்க்குப் பிந்தைய மரபுகளும் இடம் பெற்றிருக்கும் எனக் கருத இடமுண்டு. இக்கருத்தின் அடிப்படையில் புறநானூற்றில் அமைந்த மகட்பாற் காஞ்சித் துறையின் பாடல்களும் அக்கருத்தோடு தொடர்புபட்டு அமைந்த மகள் மறுத்தல் துறைப் பாடல்களும் இவ்வாய்வில் எல்லையாக அமைகின்றன. இவ்வாய்வின்வழி இனக்குழு வாழ்வின் தலைமைக்கும் தனித்துவத்திற்கும் நேர்ந்த அச்சுறுத்தலும் பேரரசு தோற்றத்திற்கான உடைமை அதிகாரமும் நாற்படைப் பெருக்கமும் அடையாளங் காணப்படுகின்றன.

பாடல்களின் புறக்குறிப்பு :

புறநானூற்றில் மகட்பாற் காஞ்சித் துறையில் அமைந்த பாடல்கள் எனக் குறிக்கப்பட்டவை மொத்தம் 21. பாடல் எண் 336 முதல் 356 வரை. இவற்றுள் 356ஆவது பாடல் இத்துறைக் குறிப்பிற்கான எந்த அடையாளத்தையும் பெறாது உள்ளது. மகள் மறுத்தல் துறையில் கபிலரால் பாடப்பட்டதாக மூன்று பாடல்கள் உள்ளன (109-111). மகட்பாற் காஞ்சித் துறைப் பாடல்களைப் பன்னிரண்டு புலவர்கள் பாடியதாக அறிய முடிகிறது. மேலும் இரண்டு பாடல்களுக்கு (339, 355) ஆசிரியர் பெயர் காணப்படவில்லை.

செம்பாதிக்கும் மேற்பட்ட பாடல்களில் பெண் கேட்டு வருபவர்கள் வேந்தர் என்ற பொது அடையாளத்தால் சுட்டிக்காட்டப்படுகிறார்கள். பெண் கொடுக்க மறுப்பவர்கள் யாவரும் இனக் குழுத் தலைவர்களாக - சிறு பகுதியை ஆளும் மன்னர்களாகப் பாடப்படுகிறார்கள். அகுதை, எயினன், தழும்பன், தித்தன், நெடுவேளாதன், பாரி முதலான தலைவர்களோடு பெயர் சுட்டா இனக்குழுத் தலைவர்களும் இடம்பெறுகின்றனர்.

பாடல்களின் கருத்தமைவு:

மகட்பாற் காஞ்சித் துறையின் பாடல்கள் அனைத்தும் ஓர் ஒழுங்கமைவில் அமைந்துள்ளன. வேந்தன் ஒருவன் படைகளோடு பெண் தர மறுத்தவர் ஊரை முற்றுகையிட்டுக் காத்திருப்பது - பெண் தர மறுத்த பெண்ணின் தந்தையும் உடன் பிறந்த ஆண் மக்களும் உற்றாரும் மடங்கா உள்ளத்து ஆற்றலோடும் படைகளோடும் எதிர்த்திருப்பது - பெண்ணின் அழகை மிகுத்துக் காட்டுவது - வேந்தன் முற்றுகையிட்ட பெண்ணின் ஊரை மிகுந்த வளமுடையதாகப் புனைந்திருப்பது - இப்பெண்ணால் இவ் வளமான ஊர் என்னாகுமோ எனக் கண்டோரோ புலவரோ இரங்குவது - என இப்படிப்பட்ட கருத்தமைவில் இத்துறைப் பாடல்கள் அனைத்தும் அமைந்துள்ளன. விதிவிலக்காகக் கபிலரால் பாடப்பட்ட மகள் மறுத்தல் துறையிலமைந்த பாடல்கள், பெண்ணை மையமிடாமல் குன்றை மையமிட்டே அமைந்துள்ளன.

பெண் கேட்ட வேந்தரும் பெண் மறுத்த மாந்தரும் :

மகட்பாற் காஞ்சித் துறைப் பாடல்கள், ஒருவன் பெண் கேட்பதாகப் பதிவு பெறவில்லை. மாறாகப் பெண் கேட்டு மறுத்ததற்குப் பின்னால் நிகழும் நிகழ்வுகளே பதிவு பெறுகின்றன. முரண் உணர்ச்சியின் மையமே முதன்மைப்படுத்தப்பட்டுப் புனைவு பெறுகிறது.

ஓர் அரசன் ஒரு குறிப்பிட்ட பெண்ணை அடைந்தே தீருவேன், இல்லையென்றால் போரிட்டு வீரமரணம் அடைவேன் என்று நெடுமொழி கூறுகின்றான். இதனை,

“... அவளொடு நாளை
மணம்புகு வைகல் ஆகுதல் ஒன்றோ
ஆரமர் உழக்கிய மறங்கிளர் முன்பின்
நீளிலை எஃகம் மறுத்த உடம்பொடு
வாரா உலகம் புகுதல் ஒன்றெனப்
படைதொட் டனனே குரிசில்” (341)

என்ற பாடல் பகுதி வெளிப்படுத்துகின்றது. இது ஒரு பழைய திரைப்படத்தின் புகழ்பெற்ற உரை யாடலாகிய ‘அடைந்தால் மகாதேவி, இல்லை யேல் மரணதேவி’ என்பதை நினைவூட்டுகிறது.

மேலும், நாற்படைகளோடு பெண்ணின் ஊரை முற்றுகையிட்டு வேந்தர் காத்திருப்பதாகப் பல பாடல்கள் அமைந்துள்ளன. இந்நிலையில் பெண்ணின் தந்தை கூறுவதாக,

“... கருஞ்சினை
வேம்பும் ஆரும் போந்தையும் மூன்றும்
மலைந்த சென்னியர் அணிந்த வில்லர்
கொற்ற வேந்தர் வரினும் தன்தக
வணங்கார்க் கீகுவன் அல்லன்” (338)

என்ற பாடற்பகுதி அமைகிறது. இங்கு தன் தகுதிக்கு ஏற்றவாறு பணிந்து நிற்காதவர்க்கு என் பெண்ணைக் கொடுக்க மாட்டேன் என்ற இனக்குழுத் தலைமையின் மேன்மை புலப்படுத்தப்படுகிறது. மேலும் வேந்தனின் அரசதிகாரம் ஓங்கிப் புலப்படுவதும் அதற்கு எவ்வகையிலும் இனக் குழுத் தலைவனின் தன்மானச் சீற்றம் குறையாமல் வெளிப்படுவதும் இத்துறைப் பாடல்களில் மிகுதி யாகக் காணப்படுகின்றன.

“வேட்ட வேந்தனும் வெஞ்சினத் தினனே
கடவன கழிப்பிவள் தந்தையும் செய்யான்”(336)

என்றும்,

“நலஞ்சால் விழுப்பொருள் பணிந்து
 வந்து கொடுப்பினும்
புரையர் அல்லோர் வரையளல்
 இவளெனத்
தந்தையும் கொடாஅன்” (343)

என்றும்,

“திருநயத் தக்க பண்பின் இவள் நலனே
பொருநர்க் கல்லது பிறர்க்கா காதே” (342)

என்றும் வருமிடங்களிலெல்லாம் பொருள் விரும்பாப் பெரும் பண்பும் தகுதி நோக்கும் தகைமையும் வேந்தனின் வெஞ்சினத்தையும் பொருட்படுத்தாப் பேராண்மையும் இனக்குழுத் தலைமைக்கேயுரிய தனித்த அடையாளமாக அமைகின்றன.

குடியின் தன்மானத்தைக் காக்கத் தந்தைக்குத் துணைநின்று பெண்ணின் உடன்பிறந்த ஆண் மக்கள் வீறுகொண்டு நிற்பதும் வெஞ்சமர் ஆற்று வதும் இத்துறைப் பாடல்களில் காணப்படும் கூறுகளாக அமைகின்றன.

“.... தன்னையர்
பொருசமம் கடந்த உருகெழு நெடுவேல்
குருதி பற்றிய வெருவரு தலையர்” (337)

என்றும்,

“... இவள் தன்னை மாரே
செல்வம் வேண்டார் செருப்புகல் வேண்டி
நிரலல் லோர்க்குத் தரலோ இல்லென” (345)

என்றும் வருமிடங்கள் எல்லாம் மேற்குறித்த கருத்தினைத் தெளிவுபடுத்துகின்றன.

ஊரழித்த பேரழகு:

மகட்பாற்காஞ்சித் துறைப் பாடல்களில் பெண் திருமணமே கருப்பொருளாக அமைவதால், காரணமான பெண்ணின் பேரழகு பெரிதும் புனைவு பெறுகிறது. வேந்தனாக இருந்தும் போர் தொடுத்தும் தன்னுயிர் கொடுத்தும் அடையத் துடிக்கும் ஒரு பெண்ணைப் பேரழகியாகக் காட்டுதல் தானே பொருத்தமாக இருக்கும். அந்த வகையில் இத் துறையின் அனைத்துப் பாடல்களுமே பெண்ணழகைப் புனையத் தவறவில்லை.

“பாரி பறம்பின் பனிச்சுனை போல
காண்டற் கரிய ளாகி மாண்ட
பெண்மை நிறைந்த பொலிவொடு மண்ணிய
துகில்விரி கடுப்ப நுடங்கித் தண்ணென
அகிலார் நறும்புகை ஐதுசென் றடங்கிய
கபில நெடுநகர் கமழு நாற்றமொடு
மனைச்செறிந் தனளே வாணுதல்...
....
யாரா குவர்கொல் தாமே நேரிழை
உருத்த பல்சுணங் கணிந்த
மருப்பிள வனமுலை ஞெமுக்கு வோரே?” (337)

என வரும் பகுதியுள், பெண்ணின் வளர்ப்பும், வனப்பும், கண்டோர் வியக்கும் வண்ணம் அமைந்து, ‘இத்தகு பெருமைக்குரிய பேரழகைப் பெறப் போகிறவர் யாரோ?’ என்று கேட்கும் விதமாக இனக்குழுவின் குறைவுபடாப் பெருமிதம் காட்டப்பட்டுள்ளது.

மேலும், இந்தப் பெண்ணின் பேரழகே இந்த வளமான ஊர்க்குப் பகையானது என்று எதிர் மறையில் பெண்ணின் பெருமை பேசுவதும் காணப்படுகிறது.

“என்னா வதுகொல் தானே
பன்னல் வேலி இப்பணை நல்லூரே” (345)

என்றும்,

“வென்றெறி முரசின் வேந்தர்...
...
இவள்நலம் தாராது அமைகுவர் அல்லர்
என்னா வதுகொல் தானே தெண்ணீர்ப்
பொய்கை மேய்ந்த செவ்வரி நாரை
தேங்கொள் மருதின் பூஞ்சினை முனையின்
காமரு காஞ்சி துஞ்சும்
ஏமஞ்சால் சிறப்பின் இப்பணை நல்லூரே” (351)

என்றும்,

“நுதிவேல் கொண்டு நுதல்வியர் துடையாக்
கடிய கூறும் வேந்தே; தந்தையும்
நெடிய அல்லது பணிந்து மொழியலனே
...மரம்படு சிறுதீப் போல
அணங்கா யினள்தான் பிறந்த ஊர்க்கே” (349)

என்றும் வருவன மேற்கருத்தைப் புலப்படுத்து கின்றன.

கபிலரின் மகள் மறுத்தல்:

கபிலரின் மூன்று பாடல்கள் (109-111) மகள் மறுத்தல் துறைக்குரியனவாகவும் நொச்சித் திணைக்கு உரியனவாகவும் காட்டப்பட்டுள்ளன. பாரியின் பறம்பு மலையை முற்றுகையிட்டுக் காத்திருந்த மூவேந்தர்க்குக் கூறுவது போலப் பாடல்கள் அமைந் துள்ளன. எயில் வளைத்தமையால் நொச்சித் திணை பொருத்தமாக உள்ளது. ஆனால் மகள் மறுத்தலுக்கு உரிய எந்தக் குறிப்பும் அப்பாடல்களில் இல்லை. எனவே துறைக் குறிப்பு எப்பொருத்தப்பாடுமின்றி உள்ளன.

“கடந்தடு தானை மூவிருங் கூடி
உடன்றனி ராயினும் பறம்புகொளற் கரிதே” (110)

என்றும்,

“நளிகொள் முரசின் மூவிரும் முற்றினும்
...
தாளின் கொள்ளலர் வாளின் தாரலன்
...
ஆடினிர் பாடினிர் செலினே
நாடுங் குன்றும் ஒருங்கீ யும்மே” (109)

என்றும் வருவன அறியத்தக்கனவாய் உள்ளன. அதோடு பெண் பற்றிய குறிப்போ மணம் பற்றிய குறிப்போ எவையும் இல்லை என்பதும் நினைக்கத் தக்கது.

மகள் மறுத்தலின் மற்றொரு கோணம்:

கபிலரால் பாடப்பட்ட மூன்று பாடல்கள் (200 - 202) பரிசில் துறையில் அமைந்துள்ளன. ‘நான் நினைத்து வந்த பேறு இது’ என்பது பரிசில் துறைக்கான விளக்கமாகும்.

கபிலர் பாரி மகளிரை விச்சிக்கோ என்னும் குறுநிலத் தலைவனிடமும் இருங்கோ வேள் என்னும் குறுநிலத் தலைவனிடமும் அழைத்துச் சென்று அவர்களை மணக்குமாறு வேண்டுவதாக இரு பாடல்கள் உள்ளன. விச்சிக்கோ போன்றே இருங்கோ வேளும் மறுத்துவிட வருத்தத்தோடும் கோபத்தோடும் பாடுவதாக மூன்றாம் பாடல் உள்ளது.

“... விச்சிக் கோவே
இவரே...
... பாரி மகளிர்
யானே பரிசிலன் மன்னும் அந்தணன்; நீயே
வரிசையில் வணக்கும் வாள்மேம் படுநன்
நினக்கு யான்கொடுப்பக் கொண்மதி” (200)

என்று கபிலர் வேண்ட, விச்சிக்கோ மறுத்ததனால்,

“இவர் யார் என்குவை யாயின் இவரே
...
.... பாரி மகளிர்; யானே
தந்தை தோழன் இவரென் மகளிர்
அந்தணன் புலவன் கொண்டு வந்தனனே”

என்று இருங்கோவேளிடம் வேண்ட, அவனும் மறுத்துவிட, சினமும் வருத்தமும் கொண்டு,

“எவ்வித் தொல்குடிப் படீஇயர் மற்றிவர்
கைவண் பாரி மகளிர் என்றவென்
தேற்றாப் புன்சொல் நோற்றிசின் பெரும
விடுத்தனன்; வெலீஇயர் நின்வேலே” (202)

என்று பாடுவதை அறிய முடிகின்றது. மணக்க மறுத்தமைக்கான காரணம் எங்கும் காட்டப்பட வில்லை. ஒரு வேளை மூவேந்தர் பகைக்கு அஞ்சி மறுத்திருக்கலாம் என்று எண்ண இடமிருக்கின்றது.

இனக்குழு வாழ்வு :

ஒரு குறிப்பிட்ட இடத்தில் ஒரு தொழில் முறை வழக்காற்றில் தனித்து அறியும்படியான வாழ்வியலுக்கு உரிய ஒரு சமூகத்தை ஒரு குழு என்பதாக மானுடவியலார் சுட்டுவர். இக்குழுவே பல்கிப் பெருகும் நிலையில் வேறு சில இடங்களில் அவர்களின் வாழ்வு அவர்களுக்கான அடையாளம் மாறாமல் அமைகின்ற பொழுது அம்மக்களின் மொத்தத் தொகுதியும் ஓர் இனக்குழு என்று வரையறை செய்யப்படுகின்றது. இவ்வினக்குழு வரையறை உலகத்தின் எந்த மூலையிலும் வாழுகின்ற - குறிப்பிட்ட பண்பாட்டு அடையாளத்தோடு வாழுகின்ற எச்சமூகக் குழுக் களுக்கும் பொருந்துவதாகும். இவ்விதிக்குத் தமிழகமும் விலக்கல்ல.

சங்க காலத்திற்கு முன்பே தமிழகத்தில் பல்வேறு இனக்குழுக்கள் வாழ்ந்ததற்கான எச்சங்களைத் தொல்காப்பியத்தாலும் சங்க இலக்கியத்தாலும் அகழ்வாய்வுச் சான்றுகளாலும் அறியமுடிகின்றது. சங்க காலத்திற்கு முன்பே உடைமைச் சமுதாயமும் அதன்வழித் தோற்றம் பெற்ற பேரரசு ஆட்சி முறையும் உருவாகத் தொடங்கிவிட்டன.

கலப்பற்ற இனக்குழு வாழ்வில் ஒருங்கிணைந்த உற்பத்தி முறையும் பகிர்ந்துண்ணும் கூட்டுக் குடும்பப் பண்பும் மேலோங்கி இருந்தன. தன்மானம் போற்றும் வீர மரபு பேணப்பட்டது. இத்தகு தனித்தன்மைக்கு ஊறு நேரும் வகையில் கூட்டு அரசு முறையின் மைய அதிகாரம் கொண்ட வேந்தர் மரபுகள் அமைந்தன. கலப்பை விரும்பாத இனக்குழு வாழ்வுக்கு மாறாகக் கலப்பிற்கு இடந்தருகின்ற பெருநகரங்கள் உருவாகின. இத்தகு முரண்பட்ட சமூக, அரசியல் சூழலில் சிக்கல்கள் தோன்றுவது இயல்பானதே. இவ்வியல்பில் எழுந்த சிக்கல்களுள் ஒன்றே ‘மகட்பாற் காஞ்சி, மகள் மறுத்தல்’ ஆகிய துறைகளாகும்.

ஆங்காங்கு நிலைபெற்றிருந்த சிறுசிறு இனக் குழுத் தலைமைக்கும் தனித்த அடையாளத்திற்கும் அச்சுறுத்தலாக வேந்தர் மரபு மேலோங்கியதால் தவிர்க்கவும் முடியாது, ஏற்கவும் முடியாது தடுமாறி நின்ற இனக்குழுவின் உணர்வு நிலையே மகள் மறுத்து மொழிதலாக அமைகிறது. இத்தகைய இறுக்கமே கிளைவிட்டுப் பின்னாளைய சாதியப் பெருக்கத்திற்குக் காரணமாயிற்று எனக் கருதவும் இடமுண்டு.

தொல்காப்பியர் புறத்திணை இயலில்,

“நிகர்த்து மேல்வந்த வேந்தனொடு முதுகுடி
மகட்பாடு அஞ்சிய மகட்பா லானும்” (19:14.15)

என்று காட்டியிருப்பது மேற்கருத்தை உறுதிப் படுத்துகிறது எனலாம்.

வேந்தன் மரபினர் இனக்குழுத் தலைமைக்குள் மணம் முடிக்க - வலிந்து மணமுடிக்க முயன்ற முயற்சிக்குக் காரணம் பேரரசின் எல்லையை விரிவுபடுத்தவும் அதன்வழித் தங்கள் வல்லாண்மையை மீண்டும் மீண்டும் உறுதிப்படுத்தவும் நினைத்த அரசியல் உத்தி என்று கூறலாம்.

சீவக சிந்தாமணியில் சீவகனுக்கு அவன் தாய் கூறிய அறிவுரைகளில் அவ்வரசியல் உத்தி புலப் படுகிறது. அதன்படி நான்கு அரசப் பெண்களைச் சீவகன் மணமுடிக்கிறான்.

கலம்பக உறுப்புக்களில் ஒன்றான மறம் என்பது இச்சிக்கலை மையமிட்டே புனையப்பட்டு உள்ளமை அறிய முடிகிறது.

மகள் மறுத்தல் என்பதன் மென்மையான பெருஞ்சிக்கல் இல்லாத ஒரு கூறாக அகத்திணையின் ‘வேற்று வரைவு’ என்னும் துறையைக் கொள்ளலாம். அதே போன்று ‘மடலூர்தல்’ என்னும் அத்துறையும் மனங்கொள்ளத்தக்கது.

அன்பினாலும் காதலினாலும் ஒரு பெண்ணை விரும்பி வரும் கொளற்குரி மரபினோர்க்கும் வம்பினால், அதிகாரத்தால், செல்வப் பெருக்கால் ஒரு பெண்ணை அடைய நினைக்கும் வேந்தர் மரபினோர்க்கும் மிகுந்த வேறுபாடு உண்டு. இந்த வேறுபாடே மகள் மறுத்து மொழிதலுக்குப் பெருஞ் சிக்கலாக அறியப்படுகிறது. இத்தகைய சமூக அரசியல் சிக்கலால் இனக்குழுக்களின் அடையாளம் சுருங்கி மாறி எச்சங்களாக இன்றும் ஊசலாட்டமாக உருவிழந்து போய்க் கொண்டிருக் கிறது. பங்காளிகள், வகையறாக்கள், ஒரே குலசாமி வழிபாட்டினர் என்று பல்வேறு சுட்டுக்கள் அத்தகைய எச்சங்களின் எச்சங்களே.

Pin It