ஹைதராபாத் அருங்காட்சியக மேல்நிலைப் பறவையின ஆராய்ச்சியாளர்- திரு. பெருமாள், தமது இளநிலை ஆராய்ச்சியாளர் செல்வி திசாவை, பறவை ஆராய்ச்சிக்காக அனுப்புவதிலிருந்து கதை தொடக்கமாகிறது. வாசகர்களாகிய நாமும் திசா செல்லும் திசை எல்லாம் பயணிக்கிறோம். ரசிக் கிறோம், சிரிக்கிறோம், வேதனைப்படுகிறோம். கிண்டல்கள், பகடிகள், பயணம் நெடுகிலும் ஊடாடிச் செல்கின்றன. அதைச் சொல்லும் விதமே, திசாவின் நாட்குறிப்புப் பக்கங்களாகவே பரிமளிக்கிறது. செடி, காடு, நடத்துநர், ஓட்டுநர், பஞ்சாயத்து அலுவலர், சேர்மன், மக்கள் உதவியாளர்கள், வன வழிகாட்டிகள், கடைக்காரர், அறிமுகம் இல்லாதவர் களிடமும் அன்பு சொரியும் கிராமிய குணநலன்கள், ஆதரவு, உதவி, ஏமாற்றம், என திசா காணும் காட்சி களை, அனுபவங்களை, நாம் உடன் பெற்று உணரும் வகையில் நெடுகிலும் செதுக்கப்பட்டுள்ளது. இதுவே ஒரு அற்புதம் தான்.

krishnamoorthy_299திசா- விதவிதமான பறவையினங்களைப் பற்றி ஆராய பலாஸ்பூர் பயணித்துப் பலப்பல அலுவலர் களைத் துணைகொண்டு பறவையினங்களின் அரிய வகைகளை - குறிப்பாக, ஃப்ளோரிகன் பறவை களைப் பற்றி ஆராய்ச்சி செய்யவும், பிற அரிய பறவை களின் தன்மைகளை ஆராய்ந்து தெளியவும் பயணிக் கிறார், குறிப்பெடுக்கிறார். பெருமாள் பின்னிருந்து கட்டளை இடவும், ஆலோசனை நல்கவும் செய் கிறார். வேட்டையாடத் தடைசெய்யப்பட்ட பல பறவைகள் வேட்டையாடப்படுவதால், அவ்விதத்தில் பலப்பல அரிய வகைப் பறவைகள் அழிகின்றன. அதனை திசா தடுக்க முனைகிறாள். அதற்காக அவள் தன் பணி முழுதும் அர்ப்பணிப்பு உணர்வுடன் நடந்து கொள்கிறாள். சோதனைகள், வேதனைகள் பல எதிர் கொண்டு அவள் படிப்படியாய் முன்னேறி, பிற கிராமிய மக்களிடை விழிப்புணர்வை விழித்தெழச் செய்ய முழு மூச்சாய் ஈடுபடுகின்றாள். பறவைகள் உண்பதற்கல்ல, அவையும் சுதந்திரமாக வாழவே பிறந்தன என்ற கூர்மையான கருத்து முன்னெடுத்து வைக்கப்பட்டு அதற்கேற்பவே கதை ஓட்டம் அமைக்கப்பட்டுள்ளது. இதுவே கதைநோக்கம் வெற்றியடைய வழியமைக்கிறது. சில விஷயங்கள் சொல்லப்படுகின்றன; சில சொல்லாமல்-சொல்லப் படுகின்றன. சிலவற்றை நாமே புரிந்துகொள்கிறோம்; சிலவற்றை, திசா விளக்கம் சொல்லச் சொல்ல நாமும் ஏற்றுக்கொள்கிறோம். என்ன அற்புதம்! கதை சொல்லிய விதம், ஆசிரியர் நம்மிடை ஊடாடி உணர்வு விதைகளின் சேர்க்கையை இணைக்கும் லாகவம், வெகு நேர்த்தி. கதை முழுதும், ஓர் மெல்லிய நகைச்சுவை உணர்வு இழை ஓடுகிறது. நாம் கதையுடன் ஒன்றி விடுகிறோம்.

திசாவின் நாட்குறிப்புகள், நம்மை ஹைதரா பாத்தில் இருந்து, வங்காள வனத்துள்ளும் வனம் சார்ந்த முழுதான கிராமிய வாழ்வுக்குள்ளும் இழுத்துச் செல்கின்றன.

கதாபாத்திரங்களான, வேலைக்காரன் அதர், அவன் தோழி புஷி, பறவைவிஷயங்கள் பற்றித் தெரிந்த மாதவி முர்மு-கிராமிய சாந்தாலிப்பெண், (பஞ்சாயத்து உறுப்பினர்) பறவைகளைப்பிடித்து விற்கும் படிப்பில்லாத பசாயி, மற்றும் திசாவிற்கு உதவிடும் சேர்மன், மாவட்ட அலுவலர்கள், மமதா உணவுக்கடை, அதன் முதலாளி, பறவைகளைச் சுட்டு வேட்டை ஆடும் சுசாந்த மோடல், டெய்லர் ஸ்வபன், மாஜிஸ்ட்ரேட், டி.எப்.ஓ உறவினன், வேட்டையாடுபவன், எனப் பெரிய பட்டாளம் உள்ளது. ஆனால் தேவையான அளவிற்கு அவர் அவர்க்கு இடம் அளித்துக் கதை பின்னப்பட்டு உள்ளது. திசாவின் மோட்டர் சைக்கிள் பயணம் கூட மிக அழகுறச் சித்திரிக்கப்பட்டுள்ளது. இந்தப் பரிமாணம் புதிது, ஆதலால் நாம் கதையினுள் திசா கூடவே பயணிப்பது மிக எளிதாகவே உள்ளது. கனமான விஷயங்களைக் கூட மிக லேசாக சொல்லிச் செல்லும் கலை, மொழி நடை, ஆசிரியர் ராம்குமாருக்குக் கைவரப் பெற்று இருப்பதால், அது திரு.சு. கிருஷ்ணமூர்த்தி அவர் களின் தமிழாக்க வடிவினையும் செம்மைப் படைப் பாக உருவாக்கிடப் பெரிதும் உதவிசெய்கிறது. நாமும் படிக்கப் படிக்கப் பிடித்துப்போகிறது. கதையில், வெள்ளை உள்ளம் படைத்த மனிதர்கள் வினோதமான கதைகளைச் சொல்லி, திசாவை நிறைய சிந்திக்க வைக்கின்றனர். கிடைத்த அனுபவங்கள், குறிப்புகள் ஆகி ஆனால் அவையும் கடைசியில் எரிந்து போவதால், திசாவின் நினைவுப் பூச்சரமாகவே இக்குறிப்புகள் நாவலாக்கப்பட்டுள்ளன. பறவைகளின் பெயர்கள், குறிப்பாக ஃப்ளோரிகன் (லெஸ்ஸர்-ஃப்ளோரிகான்,) வங்காளியில் - டாஹர், உலுமயூர் (36 பக்)), காபாஸி (பக் 39), வலாட்டிப்பறவை (43), காஜல் (46), துர்காடுன்டுனி (47), நாகுட்டி (81), புல்புல் (81), கான மயில் (94)- இவ்வாறு கதையில் கட்டப்பெறுகிறது. காட்டில், நகர்ப்பெண் திசா பரணில் தங்குதல், மரமேறுதல், காட்டுக்குளியல் அனுபவித்தல், கிராமிய வாழ்வில் ஒன்றுதல்-அவளை மணமகளாக்க விழையும் செழுமையான சீமாட்டிக்குப் பதிலிறுத்தல், சிஸ்டர் பெரியக்கா வால் நடத்தப் பெறும் பள்ளி, ஆங்கு திசாவின் (விசிட்), கலந்துரை & உரையாடல்கள், பறவைகளின் முட்டை களைக் காக்க தனது உள்ளாடையைக் கூட அவள் (திசா) பயன்படுத்தல், போன்றவை நம் இதயம் தொடும் காட்சிகளாக இலங்குகின்றன. வெகு மனித நேயம், பறவை நெய்த கூடுகளைச் சிதைக்க மனிதருக்கு உரிமை இல்லை என்பது மிகத் தெளிவுறவே சுட்டிக்காட்டப்பட்டு-கதை முடிகிறது.

நாம் வாழ்வில் நாமும் பறவைகளின் அழிவினைத் தடுத்தாட்கொள்ள ஏதேனும் செய்ய உந்தப்படுதலே- இக்கதையின் மிகப் பெரிய வெற்றி ஆகும். இது சமுதாய நலக்கதை எனில், மிகை அன்று. படித்து இரசியுங்கள். பறவைகளை நேசியுங்கள்.

சிதைந்த கூட்டின் சிறகுகள்

ஆசிரியர் : ராம்குமார் முகோபாத்தியாய (வங்காளம்)

வெளியீடு : என்.சி.பி.எச்.

விலை : ரூ.100.00

Pin It