மரபான கதை சொல்லல் என்னும் வாய்மொழி வழக்காற்று முறைமையிலிருந்து வேறுபட்ட கதை எழுதுதல் அச்சுப்பண்பாட்டால் உருவானது. கதை சொல்லல், கதை எழுதுதல் என்னும் செயல்கள் அதன் பௌதீகத் தன்மைகளில் எவ்வாறெல்லாம் மாற்றங்களை உள்வாங்கிக் கொண்டன? என்பதன் மூலம் கதைகள் உருவான வரலாற்றைக் கட்டமைக்க முடியும். தமிழில் உருப்பெற்றுள்ள புனைகதை வடிவத்தின் ஒரு பிரிவான சிறுகதை என்பது எவ்வாறு உருப்பெற்று வளர்ந்து வந்துள்ளது என்பது தொடர்பான செய்திகள் இங்கு நமது உரையாடலின் நோக்கமாக அமைகிறது. இதனைப் புரிந்து கொள்ள கீழ்க்காணும் வகையில் தொகுத்துக் கொள்வோம்.

-              தமிழ் மரபில் கதை சொல்லல் எனும் நிகழ்வு எவ்வாறெல்லாம் கட்டமைக்கப் பட்டுச் செயல்பட்டு வந்தது என்னும் புரிதல்,

-              பிற பண்பாட்டு மரபுகள் தமிழ்க்கதை சொல்லல் மரபோடு எவ்வகையில் தொடர் புடையவையாக உருவாயின என்று அறிதல்,

-              நவீன அச்சுக்கருவி வருகையால், கதை சொல்லல் மரபு பெற்ற புதிய வடிவம் குறித்த விவரணங்களைக் கண்டறிதல்.

சுமார் மூவாயிரம் ஆண்டுக்கால எழுத்து மரபைப் பெற்ற மொழியாகத் தமிழ் வாழ்ந்துகொண்டிருக் கிறது. பேச்சு மரபு, எழுத்து மரபு என்னும் இரு மரபு களையும் நீண்ட காலம் உயிரோட்டமாகக் கொண் டிருக்கும் இம்மொழியில், கதை சொல்லல் மர பிற்கும் நெடிய தொடர்ச்சி இருப்பது இயல்பே. சிறு சிறு நிகழ்வுகளைப் பாட்டாகச் சொல்லுவதாகவே செவ்விலக்கியமான சங்கத் தனிப் பாடல்கள் அமைந் துள்ளன. அவற்றில் சிறுகதைக் கூறுகள் உள்ளன. கால வளர்ச்சியில் சிறுகதைகளாக அமைந்தவை நெடுங்கதைகளாக அமைந்து, கதைப்பாடல்கள் என்னும் தன்மை கொண்ட காவியங்களும் தமிழில் உருப்பெற்றன. எழுத்து மரபு காவியக்கதைகள் என்றால் பேச்சு மரபைக் கதைப்பாடல், கதைகளாக புரிந்து கொள்ள முடியும், இவ்விரு தன்மைகளும் கால வளர்ச்சியோடு தமிழில் தொடர்ந்தன. அவை கருவிகள் சார்ந்த இசையோடும் சொல்லப்பட்டன. அரங்க நிகழ்வுகளாகவும் நிகழ்த்தப்பட்டன. கூத்துக் கதைகளை இவ்வகையில் புரிந்து கொள்ளலாம். கதை கூறல் என்னும் மரபு இவ்வகையில் பேச்சாகவும் வேறுபட்ட பதிவுகளாகவும் தமிழ் மரபில் செயல் பட்டு வந்ததை - செயல்படுவதை நம்மால் உணர முடிகிறது. இத்தன்மை குறித்து விரிவாகப் பதிவு செய்ய ஏதுண்டு.

தமிழ்ச் சமூக வரலாற்றில் பல்வேறு காலச் சூழலில் பல்வகையான பண்பாட்டுத் தொடர்புகள் தொடர்ந்து நடைமுறையில் செயல்பட்டு வந்திருப் பதைக் காண்கிறோம். பிராகிருதம், பாலி, சமசுகிருத மொழிகள் சார்ந்த பண்பாட்டுத் தொடர்புகள் தொடக்கக் காலம் முதலே தமிழ்ச்சூழலில் பரவலாக இடம்பெற்றிருப்பதைக் காண்கிறோம். இம்மொழி களில் உள்ள கதைகளைத் தழுவி, தமிழில் காவியங்கள் உருவாக்கப்பட்டிருப்பதைக் காண்கிறோம். பெருங் கதை, சீவகசிந்தாமணி உள்ளிட்ட காவியங்கள் இவ்வகையில் உருவாயின. இத்தன்மையின் உச்சமாக கம்பராமாயணம் அமைகிறது. இம்மரபு சார்ந்து தமிழில் இடைக்காலங்களில் உருவான புராணக் கதை மரபிற்கு நீண்ட வரலாறு உண்டு. தமிழ் - வடமொழி கதை மரபுகளின் இணைவு தமிழ்ப் பண்பாட்டுச் சூழலில் ஆழமான தாக்கங்களை உருவாக்கியிருப்பதைக் காண்கிறோம்.

அராபியப் பண்பாடுகள், ஐரோப்பியப் பண்பாடுகள் ஆகியவை தமிழ்ச்சூழலில் இடம்பெற்ற பின்னர், பல்வேறு புதிய கதைகளும் தமிழில் இடம்பெற்றன. அரபுக் கதைகள், வேதாள மரபுக் கதைகள், ஈசாப் நீதிக்கதைகள், தக்காணத்துப் பூர்வ கதைகள், திராவிட மத்திய காலக் கதைகள் எனப் பல்வேறு மரபு சார்ந்த கதைகள் தமிழில் உருவாயின. இக்கதைகள் பெரும் பகுதி வாய்மொழி மரபிற்கும் எழுத்து மரபிற்கும் இடைப்பட்ட தன்மைகளில் தமிழ்ச் சூழலில் நிலவி வந்தன. இக்கதைகள் நாட்டார் வழக்காற்றுக் கதைகளோடும் ஊடாட்டம் கொண்டன. பஞ்ச தந்திரக் கதைகள் இவ்வகையில், இரு மரபு களிலும் இடம்பெற்றிருப்பதைக் காண்கிறோம். தமிழில் முதன்முதல் அச்சுவடிவம் பெற்றதில் பஞ்ச தந்திரக் கதைகளுக்கு முதன்மையான இடமுண்டு.

மேற்குறித்த வகையில் தமிழில் புழங்கப்பட்டு வரும் கதை மரபு அச்சுக்கருவி வருகையோடு புதிய உருவாக்கத்தைப் பெறத் தொடங்குகிறது. பேச்சு மரபில் அமைந்த அச்சு மரபு உருவாகிறது. பெரிய எழுத்துப் புத்தகங்கள், அச்சுக் கட்டைகள் வழி உருவங்கள் பொறிக்கப்பட்டு அச்சடிக்கப்பட்ட புத்தகங்கள் ஆகிய பிறவற்றை இவ்வகையில் புரிந்து கொள்ளலாம். இவ்வகையில் தமிழில் தொடக்கக் கால அச்சிடல் மரபு என்பது பேச்சு மரபோடு கூடிய மொழியை அச்சில் கொண்டு வருவதாகவே அமைந்தது. கதைகள் என்பவை அடிப்படையில் பேச்சு மரபு சார்ந்தே சொல்லப்படுபவை. தொடக்க காலக் கதை அச்சிடுதலும் அவ்வகையில்தான் நடை முறைப்படுத்தப்பட்டன. தமிழ்ச் சூழலில் கதை அச்சிடுதல் தமிழில் எவ்வகையில் மேற்கொள்ளப் பட்டது என்பதைப் பின்வரும் வகையில் தொகுத்துக் கொள்ள முடியும்.

-              வாய்மொழிமரபில் சொல்லப்பட்ட சிறிய சிறிய நிகழ்வாக அமையும் கதைகளை அச்சிடும் மரபு.

-              பிற பண்பாட்டுச் சூழல் கதைகள் மொழி யாக்கம் மற்றும் தழுவல் பாங்கில் தமிழில் அச்சிடும் மரபு.

-              இராஜா - ராணி பாணியில் அமையும் வீர தீரச் செயல்கள் மிக்க கதைகளை அச்சிடும் மரபு.

மேற்குறித்த வகையில் அமைந்த கதைகள் பத்தொன்பதாம் நூற்றாண்டில் தமிழில் அச்சாகத் தொடங்கின. இக்கதைகள் ஓலைகளிலும் எழுதப் பட்டிருந்தன. அவற்றையும் அச்சிடும் மரபு உரு வானது. இவ்வகையான அச்சிடுதல் என்பது சிறு சிறு நூல் வடிவிலும் மற்றும் இதழ்களிலும் அச்சிடப் பட்டன. இதழியல் உருவாக்கம் அச்சு மரபால் உருவான புதிய நிகழ்வு. இதழியல் பல்வேறு வகை யான அச்சிடும் பொருண்மைகளை வேண்டி நின்றது. எனவே, இதழியல் சார்ந்த கதை அச்சிடல் மரபு தமிழில் புதிதாக உருப்பெற்றது. இம்மரபில் தமிழ்ப் புனைகதை உருவாக்கம் புதிதாக எவ் வகையில் உருப்பெற்றது என்பது தொடர்பான உரையாடல் அவசியமாகிறது. இதனைப் பின்வரும் வகையில் தொகுக்கலாம்.

-              இதழியல் என்பது அடிப்படையில் எழுத்துப் பயிற்சி பெற்றோரின் வாசிப்புப் பழக்கம் சார்ந்து செயல்படுவது. கதை கேட்டோர் கதை வாசிக்கத் தொடங்கினர். கேட்ட கதைகளை வாசிக்கும் மரபு உருவாதல்.

-              பழங்கால வரலாறுகளை மீண்டும் கேட்க, வாசிக்க மனிதமனம் விரும்புகிறது. இதனை இதழியலில் பயன்படுத்திப் பழங்கதைகளை எழுதி அச்சிடும் மரபு உருவாதல்.

-              மேற்குறித்த தன்மைகளை உள்வாங்காமல், சமகாலத்தில் புதிய மொழியில் புதிய கதை களை எழுதும் மரபு உருப்பெறல்; இதில் கேட்பு மரபின் தன்மைகள் பெரிதும் இருக் காது. வாசிப்பு மரபு சார்ந்து இருக்கும்.

தமிழில் புனைகதை உருவாக்க மரபை மேற் குறித்த பின்புலத்தில் புரிந்துகொள்ள முயலலாம். இதழ்களில் அச்சிடப்பட்டவை அனைத்தும் புனை கதைகளாக அமைய வாய்ப்புண்டா? அவ்வாறு இல்லையெனில், அச்சிடப்பட்டவற்றில் எவை புனை கதை என்னும் நவீன மரபுக்கு உரியவை? எவை கதைசொல்லல் என்னும் வாய்மொழி மரபிலேயே அமைந்திருப்பவை? என வேறுபடுத்திக் காணுதல் அவசியமாகும். இவ்விதம் வேறுபடுத்துவதன் மூலம் தமிழ்ப்புனைகதை வரலாற்றை அறிந்துகொள்ள இயலும். வாசிப்பதற்கு இதழியலில் தரப்படும் புனைவுகளில், வாய்மொழி மரபு சார்ந்தவை, புராண மரபு சார்ந்தவை, இராஜா - ராணி மரபு சார்ந்தவை எனப் பல்வகையில் அமைந்தவை இடம்பெற்றிருக்கும். இவற்றை நவீன புனைகதை மரபாகக் கொள்ள இயலாது. ஆனால், சிலர் இவை கதைகள் என்பதா லேயே, நவீனப் புனைவுகளோடு இணைத்துப் பேசுகின்றனர். இதனை ஏற்க இயலாது.

வாய்மொழி மரபும் எழுத்து மரபும் அடிப்படையில் முரண் பட்டவை. வாய்மொழி மரபிற்குத் தேவைப்படாத பல தன்மைகள் எழுத்து மரபிற்குத் தேவைப்படுகின்றன. எழுத்து மரபு, எழுத்துப் பயிற்சி என்னும் செயல் பாட்டை அடிப்படையாகக் கொண்டது. எழுத்துப் பயிற்சியை எல்லோரும் பெறுவதை ஒரு காலத்தில் தடை செய்து இருந்தனர். எழுத்துப் பயிற்சி என்பதே அதிகாரமாகச் செயல்பட்டது. அதற்கான மனநிலைகள் உருப்பெற்றிருந்தன. எனவே எழுத்துப் பயிற்சி பெற்ற ‘வாசகர்கள்’ என்னும் புதுப்பிரிவினர் உருவாயினர். புனைகதைகள் என்பவை இவர்களுக்கு எழுதப் பட்டவை. இவர்கள் உருவாக்கிக் கொண்ட வாசிப்புப் பழக்கத்திற்கும் இதழியலுக்கும் நெருக்கமான தொடர் புண்டு. எனவே அச்சு எனும் நவீன கருவி, எழுத்துப் பயிற்சி, இதழியல், வாசிப்புப் பழக்கம் எனப் பல் வேறு புதிய தன்மைகளை உருவாக்கிற்று. இதற்குள்ளிருந்து புனைகதை என்னும் நவீன வடிவத்தைப் புரிந்துகொள்ள வேண்டும். மாறாக, கதை என்ற பொதுப் பொருண்மை சார்ந்து புனைகதை என்பதைப் புரிந்துகொள்ளக் கூடாது. அவ்விதம் புரிந்துகொள்ளும் ஆபத்து இருப்பதைக் காணமுடிகிறது.

கதை என்பதையும் புனைகதை என்பதையும் வேறுபடுத்திப் பார்க்கும் தன்மையின்றித் தமிழில் புனைகதை வரலாறு எழுதப்படுவதைக் காண்கிறோம். இதனால் தான் தமிழில் 19ஆம் நூற்றாண்டிலேயே நவீன சிறுகதை உருவாகிவிட்டதாக எழுதுவதைச் சிலர் பழக்கமாகக் கொண்டுள்ளனர். தவறாக, புரிதல் சார்ந்த நிகழும் அபத்தமாக இதனைக் கருதலாம். வீரமா முனிவர், பாரதியார், அ.மாதவையா, வ.வெ.சு. அய்யர் ஆகிய பிறர் நவீன சிறுகதைகளை உரு வாக்கியுள்ளனர் என்னும் கூற்றை மேற்குறித்த பின் புலத்தில் அணுக வேண்டும். இவர்கள் வெறும் கதை களை, புராணக் கதை, நிகழ்வுகளை வெறுமனே பதிவு செய்துள்ளனர். அவை நவீன கதைகளாக அல்லது சிறுகதைகளாக அமைய வாய்ப்பில்லை. மிக அதிக மான இராஜா - ராணி கதைகளை, வடமொழிக் கதைகளைத் தழுவி தமிழில் எழுதியவர் வ.வெ.சு. அய்யர். ‘குளத்தங்கரை அரசமரம்’ என்னும் கதையும் நாட்டார் மரபைச் சார்ந்தது. அவருடைய கதைகளில் வாசிப்பாளன் என்னும் நவீன இதழியல் மனிதனுக்குத் தேவைப்படும் கூறுகளைக் காண இயலாது. கூடுதல் புராணிய மரபுகளே இடம் பெற்றிருக்கும். அவை புராணக் கதைகள். நவீன சிறுகதைகளாக அவை வடிவம் பெற இயலாது. அ.மாதவையா கதைகளும் இவ் வகையில் அமைந்தவை.

பாரதி மற்றும் வீரமா முனிவர் கதைகளுக்கும் நவீன சிறுகதைகளுக்கும் எவ்விதத் தொடர்பும் இருப்பதாகக் கூறமுடியாது; ஆனால், தமிழில் சிறுகதை உருவாக்க மரபு குறித்து இதுவரை பதிவு செய்துள்ள அனைவரும் வீரமா முனிவர், பாரதியார், வ.வெ.சு. அய்யர், அ.மாதவையா ஆகியோரை நவீன சிறுகதை முன்னோடிகள் என்று கூறுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். இவ் விதம் பதிவு செய்வோர் அச்சு மரபின் பங்களிப்பைப் புரிந்துகொள்ளாத வர்கள். மேலும் எழுத்துப் பயிற்சி என்னும் அதிகாரச் செயல்பாட்டைப் புரியாதவர்கள் ஆவர். வாசிப்புப் பழக்கத்தின் சமூக உளவியல் செயல் பாடுகள் குறித்தும் இவர்கள் கவனத்தில் எடுத்துக் கொள்வதில்லை என்றும் கூறலாம். ‘வ.வெ.சு. அய்யர், தமிழ்ச் சிறுகதையின் தொடக்கம்’ என்னும் கூற்று அடிப்படையில் நவீன மரபுகள் குறித்த புரிதலின்மையைக் காட்டுகிறது.

மேற்குறித்த பின்புலத்தில், தமிழில் நவீன சிறுகதைகளை முதன்முதல் உருவாக்கியதாகப் புதுமைப்பித்தனே அமைகிறார். சிறுகதைகளை அதன் முழு உருவத்துடன் தமிழில் முதன்முதல் உருவாக்கியவர் புதுமைப்பித்தன். நவீன தமிழ்ச் சிறுகதை வரலாற்றை அவரிடமிருந்துதான் தொடங்க வேண்டும். அதற்கு முன் கதைகள் எழுதப்பட்டன; நவீன தமிழ்ச்சிறுகதை எழுதப்படவில்லை என்றே கருதவேண்டும். காவிய மரபில் கதை சொல்லல் என்பது நவீன சிறுகதை மரபாக எவ்விதம் அமைய முடியும்?

புதிய மொழி, புதிய பொருண்மை ஆகியவை புதுமைப்பித்தன் கதைகளில் இடம்பெற்றுள்ளன. இதற்குமுன் எவரும் புனைவிற்குள் கொண்டு வராத வற்றை இவர் புனைவாக்கியுள்ளார். இதழியல், நவீன தன்மைகள், கதை எழுதுதல், கதை வாசித்தல் ஆகியவை குறித்த பார்வையைக் கொண்டிருந்தார் புதுமைப் பித்தன். இத்தன்மைகளோடு, உலக நிகழ்வுகள் குறித்த தெளிவான பார்வையுடையவராகவும் உள்ளார். புதுமைப்பித்தனின் கதைகளின் நவீன தன்மைகளைப் பின்கண்டவாறு தொகுக்கலாம்.

-              இதழியல் என்னும் தளத்தில் வாசித்தல் எனும் தன்மைக்கு ஏற்ற நவீன கதை களை உருவாக்கியவர்.

-              கதை சொல்லல் என்னும் மொழியில் உள்ள பேச்சுக் கூறுகளின்றி மௌன வாசிப் பிற்கான மொழியைக் கண்டுபிடித்தவர்.

-              நவீனகாலச் சமூகம் என்பது, சமூக நிகழ்வு களை இதற்குமுன் இருந்த பார்வைக் கோணத்திலிருந்து மாறுபட்டு, புதிய கோணத்துடன் அணுகும் தன்மையுடையது. புதுமைப்பித்தன் இவ்வகைப் பார்வை யுடையவராக இருந்தார்.

-              புதிய கதை சொல்லால், புதிய பொருண் மைகள், புதிய வாசிப்புமுறை ஆகிய பல கூறுகளைப் புதுமைப்பித்தன் கதைகளில் முதன்முதல்இடம் பெறுகின்றன.

மேற்குறித்த கண்ணோட்டத்தில், புதுமைப் பித்தன் தமிழில் சிறுகதைகள் முழுமையாக நிலை பேறு கொள்ள வழிகண்டவர் என்று கூறமுடியும். இவர் மரபிலிருந்து தொடங்கும் தமிழ்ச் சிறுகதை வளர்ச்சிப் போக்குகளைப் பின்கண்ட வகையில் தொகுத்துக் கொள்ளலாம்.

மேற்குறித்த மரபிலிருந்து வேறுபட்ட இன்னொரு மரபும் தமிழில் வளமாகச் செயல்பட்டது. இம்மரபு புதுமைப்பித்தனின் சமகாலத்தில் உருவாகி, எழுபதுகள் வரை தொடர்ந்து இன்றும் சிலரிடம் தொடர்ந்து சென்று கொண்டிருக்கிறது. இம்மரபைப் புரிந்து கொள்ள கீழ்க்காணும் வரையறையை முன்வைக்க லாம்.

-              நவீனமாக உருவாகிய இதழியல் என்னும் அச்சுத் துறையோடு நேரடித் தொடர்பு கொள்ளும் வாய்ப்பு பெற்றவர்கள். ஆங்கில மொழிவழி வாசித்து அறிந்து அந்தப் பின் புலத்தில் இயங்கியவர்கள்.

-              சமூகச் சூழலில் உருவான காந்தியம் மற்றும் அது தொடர்பான சீர்திருத்த மனநிலை உடையவர்கள். சாதிய முரண்களைப் பெரிதும் கவனத்தில் கொள்ளாத மனநிலை.

-              ஆங்கில மொழிவழி உருப்பெற்றுவரும் நவீன சிந்தனை மரபுகளையும் சமசுகிருத மொழிவழி பெற்ற அறிவையும் இணைத்துக் காணும் வாய்ப்பு பெற்றவர்கள்.

மேற்குறித்த பின்புலத்தில் உருவானவர்களே பெரிதும் தமிழ் அச்சு ஊடகத்தில் செயல்பட்டனர்; அது இயல்பான வரலாற்று நிகழ்வும் ஆகும். இவர்கள் உருவாக்கிய படைப்புலகம் தனிமனித மரபுகளைச் சார்ந்தது.

-              ஐரோப்பிய மற்றும் அமெரிக்கப் பின் புலத்தில் ஆங்கில மொழி வழி வெளிவந்த ஆக்கங்களை வாசித்தவர்கள் அதன் தாக்கத் திற்குட்பட்ட மனநிலையில் படைப்புலகில் செயல்பட்டவர்கள்.

-              சோவியத் நாட்டின் செல்வாக்கால், உலகம் முழுவதும் உருவான சோசலிச கருத்துநிலை சார்ந்த ஆக்கங்களை உரு வாக்கும் மனநிலையில் எழுதியவர்கள்.

-              இந்தியா என்ற நிலப்பரப்பு கட்டப்பட்ட நிலையில், அருகருகே உள்ள மொழிகளான வங்காளம், மராத்தி, மலையாளம், இந்தி ஆகிய பிறமொழி ஆக்கங்களின் தாக்கத் தால் தமிழ்ப் படைப்புகளில் உருவான வர்கள்.

தமிழ்ப்புனைகதை உருவாக்க வரலாற்றில் 1930-1960 இடைப்பட்ட காலச் சூழலில் மேற் குறித்த போக்கு சார்ந்தே ஆக்கங்கள் உருவாயின. இதில் புதுமைப்பித்தனின் தாக்கம் கணிசமான அளவில் இருந்ததையும் கவனத்தில் கொள்வது அவசியம்.

தமிழ்ச்சிறுகதை உருவாக்க வரலாற்றில் புதுமைப்பித்தனைத் தொடர்ந்து அவரது மரபில் உருவான அணியினர் வளமான கதைகளை எழுதினர். கு.அழகிரிசாமி, தொ.மு.சி.ரகுநாதன், வல்லிக்கண்ணன், விந்தன், ஜெயகாந்தன், சுந்தரராமசாமி, கி.ராஜ நாராயணன் என்று அந்த மரபு வளமான உருப் பெற்றது. சுந்தரராமசாமி எழுபதுகளில் இவ்வகைக் கண்ணோட்டத்திலிருந்து வேறுபட்டு எழுதத் தொடங்கினார். இந்த மரபின் வளம் எழுபதுகளில் வேறுபட்ட போக்கில் தமிழில் உருவானது. இந்த மரபு உருவாக்கத்தில் ‘தாமரை’, ‘தீபம்’, ‘கண்ணதாசன்’ ஆகிய பிற இதழ்களின் பங்களிப்பு முதன்மை யானது. இந்த மரபிலிருந்துதான் தமிழில் மிக அதிகமான சிறுகதை எழுதுவோர் உருவாயினர் எனலாம். இந்த மரபைப் புரிந்துகொள்ள கீழ்க் காணும் வரையறையை முன்வைக்கலாம்.

-              ஆங்கிலம் போன்ற பிறமொழி பரிச்சய மின்றித் தமிழ் மட்டுமே தெரிந்த, ஊர்ப்புறம் சார்ந்த படைப்பாளர்கள் உருவாயினர்.

-              இடதுசாரி கருத்துநிலை சார்பை மிக இயல்பாகத் தம்முள் உள்வாங்கி, அதன் நிலைப்பாட்டிலிருந்து கதைகளை எழுதத் தொடங்கினர்.

-              நாட்டார் மரபுகள், ஊர்ப்புறங்கள், வறுமை, சாதிய முரண்கள், பொருளதிகார முரண்கள் ஆகிய பிற கதைப்பொருண்மைகளில் கதைகள் புதிய வளமாக வெளிப்பட்டன. இதில் ஜெயகாந்தன் மற்றும் கி.ராஜ நாராயணனின் மரபுத் தாக்கம் சிறப்பாகச் செயல்பட்டது.

மேற்குறித்த வகையில் சிறுகதை எழுதியவர் களாக ஜி.நாகராஜன், அம்பை, பூமணி, வீர.வேலுச் சாமி, கிருஷ்ணன் நம்பி, பா.செயப்பிரகாசம், பிர பஞ்சன், வண்ணநிலவன், வண்ணதாசன், லிங்கன் என்ற நீண்ட பட்டியலைத் தரமுடியும். இப்போக்கு 1980களில் ச.தமிழ்ச்செல்வனோடு நிலைபேறு கொள்கிறது.

பிறிதொரு மரபில் ந.பிச்சமூர்த்தி, க.நா.சுப்பிர மணியம், பி.எஸ்.ராமையா, கு.ப.ராஜகோபாலன், சி.சு.செல்லப்பா, தி.ஜானகிராமன் என்ற தொடர்ச்சியைக் காணமுடியும். இம்மரபே பின்னர் ‘கணையாழி’ (1965-1980) இதழ் மூலம் முழுமையாகத் தமிழ்ச் சூழலில் வெளிப்பட்டது. அசோகமித்திரனை அதன் உச்ச வளர்ச்சிக்குரியவராகக் கருதலாம். இம்மரபில் கரிச்சான் குஞ்சு, மௌனி, ல.சா.ரா., எம்.வி.வெங்கட் ராம் ஆகிய பிறர் வேறுபட்ட ஆக்கங்களைத் தந்தவர் களாகக் கருதமுடியும். வறுமை, சாதி, நாட்டார் மரபுகள் ஆகியவை தொடர்பான பதிவுகள் இவர் களிடம் வேறுபட்ட முறையில் செயல்பட்டதைக் காணமுடியும். இவ்வகை மரபே பின்னர் ‘கசடதபற’, ‘யாத்ரா’ ஆகிய இதழ்கள் வழிப் பதிவுகளாயின. அடிப்படையில் இடதுசாரிக் கருத்து நிலைப்பாட்டை இம்மரபினர் ஒரு பொருட்டாகவே கவனத்தில் கொள்ளவில்லை என்பதன் மூலம், இவர்கள் அனை வரையும் ஒரு குழுசார் மனநிலையினர் என்று கூற முடியும். சமூக இயங்குதளத்திற்கும் ஆக்கங்கள் உருவாக்கம் பெறுவதற்கும் தொடர்பு இருப்பதை இதன்வழி உணரமுடியும். இம்மரபில் உருவானவர் களே இந்திய அளவில் பெரிதும் அறியப்பட்டவர் களாயினர். பிறமொழிகளில் இவர்களது ஆக்கங் களே பெரிதும் மொழியாக்கம் செய்யப்பட்டன. 1980களுக்குப் பின் இந்நிலையில் பெரும் மாற்றங்கள் உருவாயின.

மேற்குறித்த இரண்டு போக்குகளும் தம்முள் உள்வாங்கப்பட்டு, ஒரு புதிய போக்கு 1980களில் தமிழில் உருப்பெறத் தொடங்கியது. இருபதாம் நூற்றாண்டின் தொடக்கக்காலக் கருத்துநிலை சார்ந்த செயல்பாடுகள், 1960களில் உருவான பின் - காலனிய நிலைப்பாடுகள், 1980களில் உருவான புதிய நிலைப் பாடுகள் என்று இருபதாம் நூற்றாண்டைப் புரிந்து கொள்ள முடியும். இந்த மரபுகளைச் சார்ந்தே ஆக்கங் களும் உருவாக முடியும். 1980களுக்குப் பின் உருவான ஆக்கங்களைப் பின்காணும் வகையில் வரையறை செய்து கொள்ளலாம்.

-              எதார்த்த பாணி கதை சொல்லும் மரபை மீறிப் புதுவகையான கதை சொல்லல் மரபு தமிழ்ப் புனைவுலகில் உருவானது. இதில் இலத்தீன் அமெரிக்க ஆக்கங்களின் தாக்கம் குறிப்பிடத்தக்க அளவில் உருவானது.

-              ஒடுக்கப்பட்ட சமூகப்பிரிவினர், தங்கள் அடையாளங்களை முதன்மைப்படுத்தும் ஆக்க முயற்சிகளில் ஈடுபட்டனர். இவ் வகையில் தலித்தியம், பெண்ணியம் என்னும் கருத்துநிலை சார்ந்த ஆக்கங்கள் உருப் பெறத் தொடங்கின.

இருபதாம் நூற்றாண்டின் இறுதிக்காலம் முன் காலங்களைவிட முற்றிலும் மாறுபட்ட மரபுகளை முன்னெடுப்பவையாக அமைந்தன. இதற்குமுன் செயல்பட்டவர்கள், இம்மரபை சிலர் விமரிசனம் செய்தனர். வேறுபலர் வலிமையான அதிகாரச் செயல்பாடான மௌனம் காத்தனர் - காத்து வருகின்றனர். இருபதாம் நூற்றாண்டின் இறுதி நிகழ்வுகள் இருபத்தோராம் நூற்றாண்டில் தொடர் வதைக் காண்கிறோம். இக்கால நிகழ்வுகள் குறித்த மதிப்பீட்டிற்கு இன்னும் கொஞ்ச காலம் பொறுத் திருக்க வேண்டும். அதனால் இக்காலம் குறித்த வரையறையைத் தவிர்க்கிறேன்.

தமிழ்ச்சிறுகதைகள் உருவான வரலாற்றுப் போக்குகளை நெட்டோட்டமாகப் பதிவு செய்திருக் கிறேன். இதனை மிக விரிவாக எழுதும் தேவையுண்டு. இதனைப் புரிந்துகொள்ள உதவுவதாக ‘இருபதாம் நூற்றாண்டுச் சிறுகதைகள் நூறு’ என்னும் தெரிவுசெய்யப்பட்ட இத்தொகுப்பு உதவும் என்று நம்புகிறேன்.

(குறிப்பு: அடையாளம் பதிப்பகம் அண்மையில் வெளியிடவுள்ள இருபதாம் நூற்றாண்டுத் தமிழ்ச் சிறுகதைகள் நூறு என்னும் தொகுப்பில் பதிப்பாசிரியர் எழுதியுள்ள முன்னுரை).

Pin It