தமிழர்கள் நூற்று ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு தென்னாப்பிரிக்காவில் குடியேறினர். பலவிதமான இடர்களுக்கு இடையிலே உறுதியான நம்பிக்கை யினால், கல்வி, அரசியல், பொருளாதாரம் முதலிய துறைகளில் இன்று முன்னேறி உள்ளனர். இருந்தும், காலப்போக்கில் தமது தாய்மொழியான தமிழ் மொழியை இழந்துவிட்டனர். தென்னாப்பிரிக்கத் தமிழர்களைப்பற்றிய பொதுவான செய்திகளை அளிப்பது இக்கட்டுரையின் நோக்கம் ஆகும்.

temple_2701860 மற்றும் 1911 ஆண்டுகட்கு இடைப்பட்ட காலத்தில் 1,52,182 இந்திய வமிசா வழியினர் தென் ஆப்பிரிக்காவின் நேட்டால் நகருக்கு வந்தனர். இவர் களின் எண்ணிக்கையில் பெரும்பான்மையோர் தமிழர்கள்; மற்றவர்கள் இந்தி, தெலுங்கு, குஜராத்தி மற்றும் உருது பேசுவோர் ஆக இருந்தனர். வந்திருந்த தமிழர்களில் மிகச் சிறிய எண்ணிக்கையினரே தமிழில் எழுதவும் படிக்கவும் தெரிந்து இருந்தனர். இவர்கள் மதுரை, தஞ்சாவூர், ஆற்காடு, சேலம், கோயம்புத்தூர் மற்றும் சென்னையிலிருந்து வந்தவர்கள் ஆவர்.

தொடக்க காலத்தில், கரும்புத் தோட்டங்களில் அடிமைகள் என்று சொல்லத்தக்க நிலையில் தமிழர்கள் வேலை செய்தார்கள். அவர்களுக்குத் தமிழ் மொழியில் செம்மையாகப் பேசவும் எழுதவும் வாய்ப்பு அதிகம் இருக்கவில்லை. காரணம் என்னவெனில் தமிழ்த் தொழிலாளர்கள் கரும்புத் தோட்டங்களில் அடிமை களாக வாழ்ந்தனர்.

கரும்புத் தோட்டங்களில் தமிழ்த் தொழிலாளர் களின் “பிணைக்காலம்” முடிவடைந்த நிலையில் படிப்படியாகத் தமிழர்களிடையே கல்வி, பண்பாடு மெல்ல மெல்ல முன்னேற்றம் அடைய வாய்ப்பு ஏற்பட்டது. இந்நிலையில் தனியார் பள்ளிகள் சில தமிழ்க் கல்வி வழங்கத் தொடங்கப்பட்டன. நேட்டாலைச் சார்ந்த டர்பன் மற்றும் பீட்டர்மாரிட்ஸ்பர்க் என்ற இரண்டு நகரங்களில் இவ்வாறு தமிழ்ப் பணிகள் தொடங்கப்பட்டன.

ஒரு பயணியாகத் திரு.சுப்பிரமணிய அய்யர் (பி.எஸ்.அய்யர்) இக்கால கட்டத்தில் நேட்டால் வந்தார். இவர் சென்னைப் பல்கலைக் கழகத்தில் பி.ஏ. பட்டம் பெற்றவர். இவர் 1908இல் ஆப்பிரிக்கன் கிரானிக்கல் என்னும் வார ஏட்டினைத் தமிழிலும், ஆங்கிலத்திலும் தொடங்கி நடத்தினார். இவ்வாரஏடு தமிழ் வாசகர்களைப் பெரிய அளவில் ஈர்த்தது. மேலும் பாண்டிச்சேரி திரு.ஜி.ஆர்.நாயுடு என்பவர் இந்தியாவிலும் தென் ஆப்ரிக்காவிலும் தமிழ்க் கல்வி கற்று டர்பன் நகரில் வாழ்ந்து வந்தார். இவர் தமிழ்ப் பள்ளிகளில் தமிழ் மாணவர்கள் படிக்கத்தக்க முறையில் பாடப் புத்தகங்களை எழுதி உதவினார். அவர் மிகுந்த பயன்தரத்தக்க இரண்டு நூல்களை இயற்றித் தமிழ்ச் சமூகத்துக்கு உதவினார். ‘உலகெல்லாம்’, ‘தமிழ் வேதம்’ என்ற இவ்விரு நூல்களிலும் சிவ வழிபாடு மற்றும் அதன் பயன் குறித்துக் கூறப்பட்டு இருந்தது.

1915ஆம் ஆண்டிலிருந்து நேட்டால் பிரதேசத்தைச் சார்ந்த டிரான்ஸ்வால், கேப் பிராவின்ஸ் ஆகிய இடங்களில் பல தமிழ்ப் பள்ளிகள் தொடங்கப்பட்டன. தமிழர்கள் தம் குழந்தைகள் தாய்மொழியான தமிழில் கற்பதையே பெரிதும் விரும்பினர். காரணம் அடிப் படையில் அவர்கள் தம் சமய அறிவைத் தமிழில் அறிந்துகொள்ள விரும்பியது எனலாம்.

பிரிட்டிஷ் இந்தியாவில் “வெள்ளிநாக்குச் சொற் பொழிவாளர்” என்று பெயரும் புகழும் பெற்றவரான ‘ரைட் - ஆனரபிள்’ திரு.V.S.சீனிவாச சாஸ்திரி 1926இல் தென் ஆப்பிரிக்காவுக்கான முதல் ஏஜன்ட் ஜெனரலாக வந்திருந்தார். இவரது வருகை தென் ஆப்ரிக்காவிலிருந்த இந்திய வமிசா வழியினருக்கும் தமிழ் இனத்தவருக்கும் மிகுந்த திருப்பத்தைத் தந்தது.

திரு.ஏ.ளு. சீனிவாச சாஸ்திரியின் வருகை, தமிழ் மக்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் தந்தது. காரணம் திரு.சாஸ்திரியின் தாய்மொழி தமிழ் என்பதால். இவர் 1928 ஜனவரித் திங்களில் ‘இந்து தமிழ் நிறுவனம்’ ஒன்றினைத் தொடங்கினார். இந்நிறுவனத்தின் தொடக்கவிழா நிகழ்ச்சியில் திரு.சாஸ்திரி இவ்வாறு கூறியுள்ளார். “தென்ஆப்பிரிக்காவில் வாழ்ந்து வரும் தமிழ் மக்களாகிய நீங்கள் உங்கள் வருமானத்துக்கு ஏற்பத் தரமான கல்வியை உங்கள் குழந்தைகட்குத் தர விரும்புகிறீர்கள். கல்வி என்பது இரண்டு முக்கிய நோக்கங்களைக் கொண்டுள்ளது. கல்வி நம்மை வாழ்க்கைக்குத் தகுதி உள்ளவர்கள் ஆக்குகிறது; இரண்டாவது கடந்த காலத்தை நினைவில் இருத்த நிகழ்வுகளை மதிக்கச் செய்கிறது. இவ்விரு நோக்கங் களையும் நீங்கள் மனதில் இருத்திச் செயல்படும் உங்கள் அறிவுத் திறனைப் பாராட்டுகிறேன். நீங்கள் உங்கள் குழந்தைகளை ஆங்கிலவழிப் பள்ளிகளுக்கு அனுப்பிக் கல்வி கற்க ஏற்பாடு செய்கிறீர்கள்; ஆனால் நீங்கள் உங்கள் தாய்மொழியான தமிழில் அடிப் படைக் கல்வி, இலக்கியத்தைக் கற்பிக்க ஏற்பாடு செய்தால்தான் இந்தியப் பண்பாட்டை முழுவதும் அவர்கள் உணரச் செய்ய முடியும்” என்று உரை யாற்றினார். இந்நிகழ்ச்சிக்கு முன்பாகத் திரு.சாஸ்திரி கிம்பர்லியில் நடைபெற்ற பெரிய தமிழ் மாநாட்டு நிகழ்ச்சியிலும் உரை நிகழ்த்தியுள்ளார்.

தென்ஆப்பிரிக்காவில் பல்லாண்டுகளாக இந்தியாவிலிருந்தும், பிற நாடுகளிலிருந்தும் வந்திருந்த எண்ணற்றோர் தாய்மொழிவழிக் கல்வி பெற்றிருந்த காரணத்தினால், தென்ஆப்பிரிக்காவிலிருந்த கரும்புத் தோட்டங்களிலும் பிற இடங்களிலும் செயல்பட்டு வந்த தனியார் பள்ளிகளில் தமிழில் கல்வியைக் கற்றுத் தந்துள்ளனர். தென்ஆப்பிரிக்காவில் இருந்த அரசாங்கப் பள்ளிகளில் இந்திய மொழிகளைக் கற்றுத்தர யாதொரு ஊக்கத்தையும் தர முன்வரவில்லை. வெள்ளை நிறவெறி கொண்டிருந்த அரசாங்கம் இந்தியப் பண்பாடு, இனத்தன்மையை அழிப்பதைக் கொள்கையாகக் கொண்டு செயல்பட்டது.

1950இல் நிறைவேற்றப்பட்ட Group Areas Act - படி தாய்மொழி வழிக் கல்வியைக் கற்றுத் தருவதில் யாதொரு முன்னெடுப்பும் தென்ஆப்பிரிக்காவில் இல்லை எனலாம். ஏற்கனவே குடியேறியிருந்த வாழ் விடங்களில் இருந்த இந்திய சமூகத்தினர் அவ்விடங் களிலிருந்து வேறு இடங்களுக்கு நிர்ப்பந்தமாகக் குடியமர்த்தப்பட்டனர். ஏற்கனவே குடியிருந்த இடங் களில் இந்திய சமூகத்தவர்க்குப் பண்பாட்டுத் தொடர்பு களும், மத வழிபாடுகளைக் கடைப்பிடிக்கவும் வசதிகள் அருகேயே இருந்தன. ஆனால் புதியதாகக் குடிய மர்த்தப்பட்ட வாழ்விடங்களில் அத்தகைய பண்பாட்டு மதவழிபாட்டுத் தொடர்புகளுக்கு வசதிகள் இல்லை.

இவ்வாறு குடும்பங்கள் புதிய இடங்களுக்குக் குடியமர்த்தப்பட்டதனால் கூட்டுக் குடும்ப வாழ்க்கை முறை குலைந்தது. இதனால் இளம்தலைமுறையினர் வயது முதிர்ந்த தலைமுறையினரிடமிருந்து தாய் மொழிப் பற்று, தாய்மொழிக் கல்வி இவற்றைப் பெரிதும் இழந்தனர். 1982-இல் “தென்னாப்பிரிக்காவுக்கான இந்தியக் குழு” என்னும் அமைப்பின் செயற்குழு உறுப்பினர் ஒருவரால் அரசாங்கப் பள்ளிகளில் இந்திய மொழிகளைக் கற்பித்தலுக்கான புதிய முயற்சிகள் எடுக்கப்பட்டன.

கல்வித்துறை இயக்குநருக்கு ஒருவரின் மொழி எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்று சுட்டிக் காட்டப்பட்டது. இதற்குக் கல்வித்துறை இயக்குநர், மொழியின் அவசியம் குறித்துப் பொதுக் கருத்துக் கணிப்பு அவசியம் என்று கூறினார். அங்ஙனமே கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டதில், பெருமளவு ஆதரவான நிலையைக் கருத்துக்கணிப்பு காட்டியது. இந்தியர்கள் தென்ஆப்ரிக்காவுக்கு வந்து 125 ஆண்டு கட்குப் பின்னரே, அதாவது 1985இல் முதன்முதலாக அரசுப் பள்ளிகளில் இந்திய மொழிகள் கற்பித்தல் பணி தொடங்கியது.

2010ஆம் ஆண்டான இவ்வாண்டில் நேட்டால் பிரதேசத்தில் மட்டுமே தமிழ் மற்றும் பிற இந்திய மொழிகள் கற்பித்தல் பணி முன்னேற்றமடைந்து உள்ளது. இப்பிரதேசத்தில் பெருமளவில் இந்திய சமூகத்தவர் வாழ்ந்து வருவதும் இதற்குக் காரணம். ஆனால் பிற பிரதேசங்களில் இந்திய மொழிகளைக் கற்க மிகக் குறைந்த அளவிலேயே மாணவர்கள் இருப்பதால், இந்திய மொழிகள் கற்பித்தல் பணி நிறுத்தப்பட்டுவிட்டது. இக்காரணம் பற்றியே நேட்டாலில் உள்ள Kwazulu பல்கலைக் கழகத்திலும் தமிழ்த்துறை மூடப்பட்டுவிட்டது.

இவ்வாறான சூழ்நிலையிலும், தென்ஆப்பிரிக்காவில் வாழும் தமிழர்கள் தமது பண்பாட்டைப் பாதுகாத்தும், பின்பற்றியும் வருகின்றனர். தென் ஆப்பிரிக்காவில் வாழும் தமிழர்கள் பெருமளவில் சிவனையும், முருகனையும் வழிபடுபவர்கள். பொங்கல், தைப்பூசம்காவடி, சிவராத்திரி, கார்த்திகைத் தீபம், குருபூசைகள் போன்ற திருநாட்களில் தேவாரம், திருவாசகம், அருட்பா ஆகியவற்றை இசைக்கின்றனர். தமிழர்கள் சென்று குடியேறிய வாழ்விடங்களில் எல்லாம் எண்ணற்ற திருக்கோயில்களை எழுப்பியுள்ளனர். கலாசாரத் தூதுவர்களாகத் தென் ஆப்பிரிக் காவுக்கு வந்திருந்த ‘திருவாசகமணி’ திரு.மு.ஆ.பால சுப்ரமணியம், ‘கவியோகி’ திரு.சுத்தானந்த பாரதி மற்றும் அண்மையில் வருகை தந்த டாக்டர். அவ்வை. நடராஜன் ஆகியோரின் வருகையால் தென்ஆப்பிரிக்கத் தமிழர்கள் தமது பாரம்பரியப் பெருமையையும் சிறப்பையும் பெருமிதத்துடன் உணர்ந்திட வாய்ப்பு ஏற்பட்டது.

நேட்டால் தமிழ் வேத சங்கம் ஆண்டுதோறும் தமிழர்கள் தமிழ் கற்க உதவுகிறது. தென்ஆப்பிரிக்கத் தமிழ்க் கூட்டமைப்பு, தென் ஆப்பிரிக்கச் சைவ சித்தாந்த சங்கம் மற்றும் எண்ணற்ற பிற அமைப்புகள் தமிழைப் பரப்புவதில் ஈடுபட்டுள்ளன.

- பழனிசாமி அய்யண்ணதேவன்

தமிழாக்கம் : இரா.மோகன சுந்தரம்