இருபதாம் நூற்றாண்டின் இடைக்காலம் வரை மாயைகளும், கற்பனைகளும் மட்டுமே இந்தியாவில் நிறைந்துள்ளன என ஐரோப்பிய அறிவுஜீவிகள் சிலர் கதையளந்து கொண்டிருந்தனர். இக்கதையையே தேசிய பெருமிதம் எனத் தலை மேல் வைத்துக் கொண்டாடினர் இந்தியர் பலர். இத்தகைய சூழலில்தான் உருவெடுக்கிறார் மெய்யியல் பேரறிஞர் தேவி பிரசாத் சட்டோபாத்யாயா. அவர் குவியல்குவியலாக எழுதியவர்; எழுதி எழுதிக் குவித்தவர். பண்டைய இந்தியப் பொருள்முதல்வாத முறையான உலகாயதத்தை அகழ்ந்து அவர் எழுதிய புகழ்வாய்ந்த நூல் ‘உலகாயதம்’. பிறகு, ‘இந்தியத் தத்துவம் - ஓர் அறிமுகம்’ என்னும் சிறிய நூல் ஒன்றை, அதன் தலைப்புக்கேற்ப அறிமுக வடிவில் எழுதினார். எவ்வேளையும் மெய்யியல் ஆய்வு வேலையிலேயே மூழ்கியிருந்த தேவிபிரசாத் சட்டோ பாத்யாயா 1981-ஆம் ஆண்டு ஆற்றிய சொற்பொழிவை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட நூலே “மதமும் சமூகமும்” (Religion and Society) என்னும் இந்தப் புத்தகம். அதைப் பற்றியதே இச்சிறு எடுத்துரைப்பு.

deviprasath_258‘மதம் தோன்றுவதற்கு முன்பு’ என்னும் முதல் இயலில் உலக வரலாற்றில் கடவுளை நம்புவது’ - அதாவது, மனிதனுள் இறைவனின் ஆவி என்ற அடிப்படை நம்பிக்கையானது அனைத்து மதங் களுக்கும் இன்றியமையாத முன்நிபந்தனை என்று கூறி, கடவுளற்ற மதம் எனக் குறிப்பிடப்படும் புத்தமதம்கூட இவ்வினத்தைச் சேர்ந்ததே என்று இயம்புகிறார் சட்டோபாத்யாயா. பொருள்முதல் வாத அடிப்படையில், ஒரு சமூகவியல் பார்வையுடன் தோன்றிய புத்த மதம் பிற்காலத்தில் ஒரு பெரும் கடவுள் பல சிறு கடவுள்களால் சூழப்பட்டுள்ளதாக உருமாறி அமைப்பு ரீதியான மதமாக ‘மகாயானம்’ என்னும் பெயரைச் சூட்டிக் கொண்டது என்றும், இந்த நிலை நாகார்ஜுனரின் சூன்யவாதக் கொள் கைக்கு அவசியப்படுகிறது என்றும் சுட்டிக்காட்டு கிறார். வரலாற்று நோக்கிலிருந்து பார்க்கையில் ‘மனிதனுள் கடவுள் ஆவி’ என்பது தவிர்க்கவியலாத உண்மையாகிவிட்டது. அந்த உண்மையின் சமூகப் பின் புலத்தை அறிவதற்குத் தொல்லியலுடன் இணைந்த இனவரைவியல் ஆய்வின் மூலம் தெரியவந்ததை எடுத்துக்கூறுகிறார். மனிதனிடம் கடவுள் நம்பிக் கையும் ஆவியும் இல்லாத காலம் ஒன்று இருந்தது என்ற மெய்ந்நிலையைப் புரிந்துகொள்ள வைக்கிறார்.

உபரி உற்பத்தி தோன்றி வளர்ந்து மிகுந்து சிறுபான்மையினரின் கைகளில் செல்வம் குவிந்து, அதன் விளைவாக ஏற்பட்ட நாகரிகக் காலத்து வரலாற்றுச் சாதனைகளின் விளைவே கடவுளும் மதமும். இவ்விடயங்களில் இயங்கியல் நோக்கைக் கையாள வேண்டும் என்கிறார். மாயவித்தை பழங் காலத்தில் தோன்றியிருந்த புராணப் பழக்கவழக்கங்கள் இந்த இருபதாம் நூற்றாண்டைய நவீன காலத்திலும் கிராமியப் பண்பாடாக வெளிப்படுகின்றன என்று கூறும் சட்டோபாத்யாயா. அன்றைய ‘மாயவித்தை’ வேறு, இன்றைய ‘மதம்’ என்பது வேறு என்று விளக்கிக் காட்டுகிறார்.

அடுத்து, ‘மத உருவாக்கம்’ என்ற இரண்டாவது இயலில் சுமார் கி.மு.மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்புதான் மதஉருவாக்கம் நடந்தது. கோர்டன் சைல்ட் எழுதிய நூல்களில் நுணுகித் தேர்ந்தெடுத்த பல மேற்கோள்களை முன்வைக்கிறார். தொல்லியல் ஓர் அறிவியல் என்ற வகையில் பத்தொன்பதாம் நூற்றாண்டில் உலகுக்கு வரலாற்று மானுடவியல் பார்வையை எவ்வாறு விரித்துக் கொடுத்தது என்று எடுத்தியம்புகிறார். அதற்கு எகிப்திய ஆய்வில் சாம்போலியன், கிரேக்க நாகரிகத்தின் மூலத்தைத் தொல்லியல் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட ஸ்லீமன், இந்தியாவின் ஹரப்பாவில் தயாராம் ஷானி, மொகஞ்சாதாரோவில் ஆர்.டி.பானர்ஜி போன்ற தொல்லியல் ஆய்வாளர்கள் செய்த அரும்பணியைச் சுருங்கிய வடிவில் முன்வைக்கிறார். மனிதன் புதிய கற்காலக் கிராமங்களிலிருந்து ஆரம்பகால நகரங் களுக்கு முதன்முதலாகச் சென்றதைத் தொடர்ந்து. ஏற்பட்ட மகத்தான சமூகப் பொருளாதார மாற்றம் பற்றி கோர்டன் சைல்டின் கூற்றைச் சுட்டிக்காட்டு கிறார். எகிப்து, மெசபடோமியா, சிந்துச் சமவெளி ஆகிய பிரதான, புராதன மையங்களில் அவை எவ்வாறு நிகழ்ந்தன என்றும் குறிப்பிடுகிறார் சட்டோபாத்தியாயா.

கிராமங்களில் உற்பத்தி செய்யப்பட்ட சமூக உபரி, நகரங்களில் சேமித்து வைக்கப்பட்ட போது அந்தச் சேமிப்பைப் பாதுகாப்பதற்கென்று புதிய பணிப்பிரிவினரை ஏற்படுத்தல், அந்தப் பிரிவினருக்குப் பொருளாதாரப் பாதுகாப்பு ஏற்படுத்தல், அந்தப் பாதுகாப்புச் செலவுக்குப் பொருளாதாரத்தைக் கைக்கொள்ளுதல் என்ற போக்கில் சென்று, அந்தக் கைக்கொள்ளுதலை, எந்தச் சிக்கலுமின்றி. நிறை வேற்ற ‘மதம்’ என்னும் நிறுவனத்தை / அமைப்பை உருவாக்குகின்றனர். இப்போது இடர்ப் பாது காப்பிற்காக விவசாயிகள் தங்கள் உற்பத்தியின் ஒரு பகுதியைத் தாய்த் தெய்வங்களுக்கு, அதாவது, அவர்களின் பிரதிநிதிகளான மதகுருமார்கள் அல்லது மதநிறுவனங்களுக்கு வழங்கினர். இங்கே மாயவித்தை மதமாக உருவெடுக்கிறது. மதம், கடவுள் என அச்சுறுத்தி, பொருளைப் பறிக்கும் நிலையை மாற்றுவதற்கு, அதே வகையில் வாழ்விற்கு சுயேச்சை யான, நிலையான பாதுகாப்பை ஏற்படுத்தினால், கடவுள், மதம் என்னும் கருத்து நிலைகள் காணாமல் போய்விடும் என்பதே மார்க்சியம். மாறாக, தடா லடியாக, மதத்தை அப்புறப்படுத்த முடியாது. அதற்கு வரலாற்றிலிருந்து ஓர் எடுத்துக்காட்டைக் குறிப்பிடுகிறார்.

கி.மு.1372 முதல் 1354 வரை எகிப்தில் ஆட்சி புரிந்துவந்த நான்காம் ஆமென்ஹோடெப் என்னும் மன்னன் குடிமக்களிடம் பல கடவுள் வழிபாட்டை ஒழித்து, எளிய சூரிய வழிபாட்டைப் பறைசாற்றி, நாட்டிலுள்ள மரபுவழிக் கோயில்களுக்கெல்லாம் பூட்டுப் போட்டான். உடனே, மக்கள் ஆற்றாமையில் ஆழ்ந்தனர். காரணம் அந்த வரலாற்றுக் கட்டத்தில் அவர்களது துன்ப உணர்வுகளின் வடிகாலாக மதம் வேரூன்றி இருந்தது. இந்த நிகழ்வை எடுத்து உரைத்த நூலாசிரியர் சமூகப் பொருளாதார நிலை மைகள் மாறாமல் இருக்கும் பொழுது, வெறும் சட்டத்தினால் மட்டும் மதத்தை ஒழிக்க முடியாது என்று தெளிவுறுத்தி அதைச் செயல்படுத்துவதற்கான வாய்ப்பு - அதாவது, அன்றைய எகிப்தியர்களுக்கு இல்லாத வாய்ப்பு - நமக்கு இன்று மிகவும் அருகிலேயே இருக்கிறது என்று முத்தாய்ப்பாக முடிக்கிறார்.

அடுத்து, ‘ஹரப்பா மதமும் ஆரியர் பிரச் சினையும்’ என்ற மூன்றாவது இயலில், கோர்டன் சைல்டு, வீலர், ஆல்சின், ஜெ.நீதம், டி.டி.கோசாம்பி போன்ற ஆளுமைகள் எடுத்துரைத்த ஆதாரங்களைக் கொண்டு விவாதிக்கிறார். ஹரப்பாப் பகுதியில் கண்டெடுக்கப்பட்ட ஆயுதங்கள் நுட்பமானவையாக இல்லாது மிகவும் சாதாரணமானவையாக இருப் பதால், மிகப் பெருமளவில் பயன்படுத்தப்பட்ட மத மூடநம்பிக்கைகள் மூலம் மக்கள் ஒடுக்கப் பட்டனர். ‘வன்முறைகளில் ஆயுதங்களை மிகக் குறைவாகப் பயன்படுத்திய ஹரப்பா ஆட்சியாளர் களுக்கு மதமூடநம்பிக்கைகள் பெருமளவில் பயன் பட்டன’ என்ற கோசாம்பியின் கருத்துக்குத் தேவி பிரசாத் சட்டோபாத்யாயா வலுவூட்டுகிறார். மேலும் ஐந்நூறு ஆண்டுகளுக்கு மேலாக சிறப்பாக மேலோங்கியிருந்த இந்த ஹரப்பாவின் சீரழிவுக்கும் வீழ்ச்சிக்கும் காரணம் என்ன என்று வினவி, அவ் வினாவுக்கு விரிவான விடையளிக்கிறார். இந்தச் சீரழிவுக்குப் பல காரணங்கள் இருந்தாலும் வட மேற்கு ஈரானிலிருந்து வந்த படையெடுப்பாளர்கள் உள்ளிட்ட காட்டுமிராண்டிகள் ஹரப்பா நாகரிகத்தை அழித்துள்ளனர் என்னும் வீலரின் கூற்றைச் சான்றாகக் கொண்டு விவாதிக்கிறார். அதற்கு ரிக் வேதத்தில் இருந்து சில முக்கியமான வரிகளை எடுத்துரைத்து ஆரியர்களின் இந்த அழிவு நடவடிக்கையை மக்கள் மனத்திலிருந்து அப்புறப்படுத்தும் நோக்கில் இந்திரனை நிரபராதி என்று வடிப்பது ‘வடிகட்டிய பொய்’ என்றும், அதற்குப் பின்னே இருப்பது ஆரிய இன வாதமே என்றும் கூறி இயலை நிறைவு செய்கிறார்.

“வேதம் என்பது வெவ்வேறு சிறந்த கவிஞர் களால், பல்வேறு காலகட்டங்களில் பலவகை யான சூழ்நிலையில், பலவகை நோக்கங்களுடன் பாடப்பட்ட செய்யுட்கள் என்பதைத் தவிர வேறொன்றுமல்ல, இதனை விளக்க முயலும் பொழுது, சமஸ்கிருதத்தைப் பற்றி உயர்வாகக் கருதிக் கொண்டிருப்பவர்கள் இதனைத் தொழில் சார்ந்த ஒன்றாக மாற்றி விடுகின்றனர்” என்று துவங்கி ‘வேத மதம் - மாயையும், எதார்த்தமும்’ என்ற தலைப்பிலான இயலில் வேதத்தின் மெய்யான அகத்தன்மை, அது சமூகத்தில் ஆற்றும் புறவினை இரண்டையும் விளக்குகிறார் நூலாசிரியர். வேதங்கள் இந்திய மதவியலுக்கு எந்தவொரு பங்கையும் அளிக்க வில்லை. தருமசாத்திரங்களும், பார்ப்பனர்களும் வன்முறை வழியில் வேத முதன்மையைப் பாது காத்தனர்; ஏனென்றால், அதில் அவர்களின் நலன்கள் அடங்கியிருந்தன. இந்தியாவில் பல்வேறு சிந்தனை களும், சைவம், சாக்தம், வைணவம் போன்ற மதங் களும் வெறும் பேச்சளவுக்கே வேத முதன்மையை ஏற்கின்றன. மற்றபடி அவர்கள் அவரவர் வழி யிலேயே செல்கின்றனர் என்பதை ‘வேதமதம் - மாயையும், எதார்த்தமும்’ என்ற இயலின் மூலம் விளங்க வைக்கிறார்.

அடுத்து, வேதத்தின் பெயரைப் பயன்படுத்தி, குருமார்கள் எப்படிப் பிழைக்கின்றனர் என்று ‘வேதக் கடவுள்களும், வேதகுருமார்களும்’ என்ற இயலில் விளக்கிக் கூறுகிறார். இசைப்பாடல்களில் பதங்கள் கொண்ட ஓர் அடி முடிந்ததும், ‘தன்னானே, தன்னானே...’ என இசைக்கேற்ப, பலவாறாக ஒலி எழுப்பி அவ்வடியை நிறைவு செய்வது போல, வேதத்திலும் பொருள் கூறும் சொற்பதங்கள் முடிந்ததும், கடவுள்கள் என்றழைக்கப்படும் சொற்கள் வெறும் ஒலித் தேவைக்காகப் பயன்படுத்தப்பட்டவை என்று மீமாம்ச சூத்திர உரையாளர் சபரரின் கருத்தை முன்வைத்து, அந்த ஒலித்தேவைப் பதங்களே அக்னி, இந்திரன், மித்திரன், வருணன் ஆகியவை என்கிறார் சட்டோபாத்யாயா. தவிர, வேள்விகள், படையல்கள், குருமார்கள் உள்ளிட்ட பல கூறுகளைப் பற்றியும் இவ்வியலில் விவரிக்கிறார் நூலாசிரியர்.

‘கடவுளும், பிற்கால மீமாம்சகர்களும்’ என்ற இயலில் பட்ட மீமாம்ச நிறுவனரான குமாரில பட்டரின் நாத்திக உரைகளை விளக்கமாக விவாதிக் கிறார் தேவிபிரசாத். கடவுள், உலகம், படைப்பு போன்றவற்றை விளக்கும் இந்த இயலில் மீமாம் சகர்கள் ‘கடவுள்’ என்ற கூற்றை எங்ஙனம் புறத்தே தள்ளி, வேள்வியை இன்றியமையாததாக்குகின்றனர் என்று அறிந்துகொள்ள முடிகிறது.

உலகம் வதைபடுதலைக் கண்டு குமுறிய புத்தர் சமூக மாற்றத்தை முன்மொழிந்தார். பிற்காலத்தில் அவரது சிந்தனைக்கு எதிரான கருத்துகள் எப்படி பௌத்தத்தில் செருகப்பட்டன என்பதை விளக்கும் ‘பௌத்தம் - எதிர்மறையாகிப் போன புரட்சிகர சமூகவியல்’ என்னும் கட்டுரையில் துவக்ககாலப் பௌத்தத்தையும், பிற்காலப் பௌத்தத்தையும் பற்றிய தகவல்கள் முறைப்படுத்தி வழங்கப்பட்டு உள்ளன.

மனிதனால் தோற்றுவிக்கப்பட்டு, சிறுபான்மையினரின் பேராசையை, தொடர்ந்து நிறைவேற்று வதற்காகப் பெரும்பான்மையினரின் வாழ்நிலையை நசுக்கிவரும் மதம், அவ்வாறு நசுக்கப்படுவோரை ‘தாம் நசுக்கப்படுகிறோம்’ என்பதையே உணர விடாமல் தடுத்து மயக்கத்தில் அமிழ்த்தி வைத் திருக்கிறது.

மொழிபெயர்ப்பு என்ற அளவில் யக்ஞம், வியாக்யானம் ஆகிய சொற்களை முறையே வேள்வி, உரை எனத் தமிழாக்கியிருக்கலாம். நூலின் சில இடங் களில் புரிந்துகொள்ளமுடியாத அளவுக்கு கூட்டுத் தொடர்கள் இடம்பெற்றுள்ளன. இரா.சிசுபாலன் சரளமான, வாசிப்பிற்குத் தடையேற்படுத்தாத தமிழ்நடையில் மொழியாக்கம் செய்துள்ளார்.

மதமும் சமூகமும்

ஆசிரியர் : தேவிபிரசாத் சட்டோபாத்தியாயா

தமிழில் : இரா.சிசுபாலன்

வெளியீடு : என்.சி.பி.எச்.

விலை : ரூ.100.00