திரு.வெ.இறையன்பு எழுதிய “சாகாவரம்” என்ற நூலை நவம்பர் 2009-இல் நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் முதல் பதிப்பாக வெளியிட்டது. மார்ச் 2010-இல் 2ஆம் பதிப்பும், ஜுன் 2010-இல் 3ஆம் பதிப்பும் வெளிவந்துள்ளது. நாவலில் மரணத்தைப் பற்றியும், மரணத்தை வெல்வது குறித்தும், அந்த வாழ்க்கையைத் தேடிப் போவது குறித்தும் சொல்லப்பட்டிருக்கிறது.

iraianbu_259நாவலின் மையப்புள்ளி நசிகேதன் பெற்றோருக்கு ஒரே பிள்ளை. ஆசிரியராக இருக்கிறார். வாழ்க்கை அமைதி யாகவும், ரம்யமாகவும் ஓடுகிறது. இந்த நிலையில் நண்பர்களின் அகால மரணம் அவரை நிலைகுலையச் செய்கிறது. மரணத்தைவிட துயர மானது மரண வீட்டின் சூழல். மரண பயமும் கொடுமையானதுதான். மரணம் எந்த நொடியிலும் நிகழலாம் என்றாலும், அது குறித்து பிரக்ஞையோடு இருப்பதுதான் மரண பயம்.

மரணமில்லாப் பெருவாழ்வைத் தேடி கொல்லி மலைக்குப் பயணிக்கிறார். அங்கு நீண்ட நாள் பயணத்திற்குப் பிறகு ஒரு ஞானியைச் சந்திக்கிறார். அவருடன் இருப்பதும், பழகுவதும் பேரனுபவமாக இருக்கிறது. அவர் மரண மில்லாப் பெருவாழ்வு சாத்தியம் என்கிறார். நிறைய ஓலைச் சுவடி கொடுத்து நசிகேதனைப் படிக்கச் சொல்லுகிறார். அந்த ஓலைச் சுவடிகளில் வெட்டு காயங்களின் ரத்தப் போக்கை உடனடியாக நிறுத்தும் மூலிகை குறித்தும்,

கண் புரை நோயைச் சரிபடுத்தும் பச்சிலை குறித்தும் அற்புதமான தகவல்கள் இருந்தன. ஞானி ஒருநாள் முக்தியடைந்து விடுகிறார். நல்ல வாழ்வின் நிறைவு ஒரு அழகான கவிதையின் கடைசி வரி போல் ஆழமானது என்று எண்ணுகிறான். ஓலைச் சுவடியில் மரணமில்லாப் பெரு வாழ்வு வாழும் பிரதேசம் குறித்து குறிப்பு 14 வரிகளில் பாடலாக இருக்கிறது. அந்தப் பாடல் விடுகதை போல் உள்ளது. ஒவ்வொரு வரியிலும் உள்ள முடிச்சுக்களை அவிழ்த்தால் அந்த சிரஞ்சீவி வெளியைப் பற்றி விளக்கம் கிடைக்கும்.

ஓலைச் சுவடியில் கூறி இருந்தபடி நசிகேதன் பல சோதனைகளைத் தாண்டி மரணமில்லா சிரஞ்சீவி வெளியை அடைந்து விடுகிறான். அங்கு மனிதர்களால் சிரிக்க முடியாது, அழ முடியாது, அங்கு மரணம் வெல்லப்படுகிறது. ஆனால் மரணத்தைப் பற்றிய சிந்தனை இருந்து கொண்டே இருக்கிறது. அங்கு மரங்களில் இலை பழுப்பதில்லை, துளிர்ப்பதில்லை, பூக்கள் அரும்பாது, உதிராது. மறந்த இறந்த காலம், இல்லாத எதிர் காலம், நிகழ்வுகளே இல்லாத நிகழ்காலம் இது தான் சிரஞ்சீவி வெளி. அந்த வெளியில் பசி எடுக்காது, இரவு கிடையாது, தூக்கம் வராது. ஒரே மாதிரி வெளிச்சம், ஒரே மாதிரி காற்று, ஒரே மாதிரி தட்பவெட்பம், நிர்வாண குடிமகன்கள், ஒரே மாதிரி தாவரம், ஒன்று போல பழங்கள், பாடாத பறவைகள், இயங்காத இயற்கை, பயமும் திருப்பமும் இல்லாத வாழ்க்கை மனிதர்களிடையே உணர்ச்சிக்கு இடமில்லை. அதனால் புணர்ச்சிக்கே வழியில்லை. சிரஞ்சீவி வெளியில் வாழ்க்கை என்பது தங்கக் கூண்டைக் காட்டிலும் மோசமானது. அது மரணமில்லாப் பெரு வெளி அல்ல. மரணம் உறைந்த பெருவெளி. கடைசியில் நசிகேதன் எல்லாவற்றையும் உணருகிறான். இது மரணமற்ற மரணத்தின் சாயல். பார்வையற்ற வாழ்வின் ஆரம்பம். என்று நாவலாசிரியர் முடிக்கிறார்.

நிரந்தரம் எப்போதும் அழகாக முடியாது. வாழ்வின் அதிசயம் அதன் ஒவ்வொரு நொடியிலும் நிகழும் கவிதை போன்ற பரிணாம வளர்ச்சி. மரத்தின் அழகு பசுமையில் மட்டும் இல்லை. ஒவ்வொரு பருவத்திற்கும் மாறும் அழகு உன்னதமானது. கூதிர்காலத்தில் பழுப்பு நிறமாக ஒரு பகுதியும், பச்சை நிறமாக ஒரு பகுதியும், தலைவிரித்து இருப்பது அழகு. இலையுதிர் காலத்தில் தன்னைப் புதிப்பிக்க அனைத்தையுமே மரம் உதிர்க்கிறது. புதிதாக முளைக்க பழையன கழிதல் தேவை.

பெரும்பாலும் கட்டுரை எழுதுபவராக அறியப் பட்ட ஆசிரியர் இறையன்பு அண்மைக் காலத்தில் படைப் புலகில் அக்கறை செலுத்தி எழுதிய இரண்டாவது நாவல் இது. வறண்ட கருப்பொருளை மையமாக வைத்து எடுத்துக்கொண்டு நாவலை எழுதினாலும், அவர் கதை நகர்த்திக்கொண்டு போகும் விதம் உற்சாக மாகவே உள்ளது. சில சமயங்களில் இந்தக் கதை புனைவா அல்லது நசிகேதன் வாழ்வில் உண்மையில் நடந்த சம்பவங்களா என்று சந்தேகப்பட வைக்கிறது. அந்த அளவுக்கு நாவலுடன் ஒன்றிப் போகிறோம். ஒரு இடத்தில் “வஜ்ரப்பள்ளம்” என்ற ஊரைக் குறிப்பிட்டு அந்த ஊரில் விதவைகள் அதிகம் என்கிறார். பக்கத்தில் உள்ள காட்டில் அதிகமாக உள்ள புலிகள் அந்தக் கிராமத்து ஆண்களை எல்லால் அடித்து சாப்பிட்டுவிட்டதாக ஒரு தகவல் கூறுகிறார். தொய்வில்லாமல், சலிப்பில்லாமல் நாவலை கொண்டு செல்லும் ஆசிரியருக்குப் பாராட்டுக்கள். நாவல் வெகு சுவாரஸ்யமாக இருப்பதால்தான் நவம்பர் 2009-இல் முதல் பதிப்பும், 3ஆம் பதிப்பு ஆறுமாத இடைவெளியில் ஜுன் 2010-இல் வெளி வந்தது போல் உள்ளது.

சாகாவரம்

ஆசிரியர் : வெ.இறையன்பு

வெளியீடு : என்.சி.பி.எச்.

விலை : ரூ.110.00