(பிறந்து வளர்ந்த ஊரைப் பற்றி எழுது வதிலும் ஊர் மனிதர்களைப் பற்றி எழுதுவதிலும் எல்லா மொழிகளிலும் படைப்பாளிகள் ஊக்கம் காட்டுவதுண்டு. வளர்ந்து வந்த பாதையின் சுவடு களை எழுத்தின் வழியாக அசைபோடுகிறது ஒரு படைப்பாளியின் மனம். இளமை இன்பம் அல்லது இளமைத் துன்பம் இரண்டுமே இத்தகு பகுதிகளில் பதிவாகின்றன. ஒரு வாசகனாக இத்தகு எழுத்து களைப் படிக்கும்போது, இந்த அனுபவங்கள் நம் மனத்தைத் தீண்டி இணையான நம் இளமை நினைவுகளை மீட்டியெழுப்புகின்றன. இவற்றைத் தாண்டி இப்பகுதிகள் ஆவணத்தன்மை உள்ளவை. நேரடி சாட்சியாக வாழ்ந்த படைப்பாளியின் பதிவாலேயே எழுதப்படுகிற ஆவணம் உயிர்த் தன்மை மிகுந்ததாக உள்ளது. சமீபத்தில் எழுதப் பட்ட பல சுயசரிதைகள் படைப்பாளியின் வாழ் வனுபவப் பதிவையும் ஆவணத்தன்மையையும் ஒருங்கே கொண்டிருக்கின்றன. கடந்த பத்தாண்டுகளில் கன்னடத்தில் பலவிதமான சுயசரிதைகள் எழுதப் பட்டுள்ளன. தலித் சுயசரிதைகளுக்குக் கன்னட மொழியில் முக்கியமான ஓர் இடமுண்டு. சித்தகங்கய்ய கம்பாளு என்னும் எழுத்தாளர் தன் ஊரின் பெயரிலேயே எழுதி வெளியிட்ட “கம்பாளு” என்னும் தொகுதி கன்னடத்தில் வெளிவந்த சமீபத்திய நூல் களில் முக்கியமானது. கிராம அமைப்பு, பழக்க வழக்கங்கள், நம்பிக்கைகள், சாதிப்பாகுபாடுகள், வாழ்க்கைப்போக்குகள் அனைத்தையும் விளை யாட்டுக் குணமும் குறும்பும் கொண்ட ஒரு சிறுவனின் பார்வையில் கம்பாளு தம் தொகுதியில் பதிவு செய்துள்ளார். அவற்றின் சில பகுதிகள் தமிழ் வாசகர்களுக்காக இங்கே மொழிபெயர்க்கப்பட்டு உள்ளன.)

மழைத் தெய்வம்

நான் சிறுவனா இருந்தப்போ எங்க ஊரோட தோற்றம் எப்பிடியிருந்ததுன்னு நினைவுபடுத்திக்க உதவியாயிருக்கிற மாதிரி பத்துப் பதினைஞ்சு பழைய வீடுங்க எந்த மாற்றமும் இல்லாம பழைய நிலைமையிலேயே எஞ்சியிருந்ததுங்க. புதுசா கட்டின கல்லு, சிமெண்ட் வீடுகளோட சுவருங்க விரிசல்விட்டு விழற நிலைமைக்கு வந்திருந்தாலும், நாலஞ்சு தலைமுறைங்களுக்கு முன்னால கட்டின மண்ணு சுவத்தோட, மூங்கில் தப்பையின் மேல் மண்ணால் பூசின மாளிகை வீடுங்க இப்பவும் தங்களோட இளமைய காத்துக்கிட்டிருக்குங்க.

தேவரஹொஸஹள்ளி குள்ள மல்லண்ணனோட வீடு, கம்பாளு மடத்து ஏஜெண்ட் மல்லயனோட வீடு, பார்வதம்மாவோட கல்லு வீடு, தோட்டத்து சன்னவீரசாமியோட வீடு, சின்ன சங்கரய்யாவோட வீடு, லிங்கண்ணனோட வீடு, நொண்டி சிகரய்யன் வீடு, ஊர்க்காவலு தொட்டய்யனோட வீடு, குள்ள மல்லண்ணனோட மாளிகை வீடு ஊரோட நடுப் பகுதியில் இருக்கு. முன்பக்கத்து ஒன்றிரண்டு அங்கணம் வீட்டுப்பகுதி முன்னால் நீட்டிக்கிட்டு கதவோட ரெண்டு பக்கத்திலும் வெளிப்பகுதியில் இடுப்பளவுக்கு ரெண்டு திண்ணைங்க. இந்த திண்ணை மேல குள்ள மல்லண்ணா படுத்துக்குவான். சந்தையில் மிளகு சீரகம் வியாபாரம் செய்யும் சின்ன வியா பாரியான மல்லண்ணா சந்தை இல்லாதப்போ ஊருக்கு வந்தா அவன் வழக்கமா படுக்கிற இடம் இந்த திண்ணைதான்.

அவ்வப்போது அம்மை, காலரா சமயங்கள் தடுப்பூசி போடறதுக்கு வரக்கூடிய ஆளுங்க இந்த திண்ணை மேலதான் தங்கியிருந்து நோயத் தடுக்க ஊருக்காரங்களுக்கு ஊசி மருந்து போடுவாங்க. நான் சின்ன பையனாயிருந்தப்போ அந்த திண்ணை மேல விளையாடியதுலாம் நெனப்பிருக்குது. அங்க இருக்கும் ரெண்டு கம்பங்களையும் கையால் புடிச்சினு கரகரன்னு சுத்தற விளையாட்ட மறக்கவே முடியாது. குள்ளமல்லயனோட மனைவி ஹொன்னக்கா, கீர்த்தன கேசரி சிவமூர்த்தி சாஸ்திரிக்கு நெருக்க மான உறவுக்காரி, தங்கையாகணும். சிவமூர்த்தி சாஸ்திரி, இதே திண்ணை மேல உக்காந்து ‘சரணலீலாம்ருத’ கதைப்பிரசங்கம் பண்ணினதும் நினைவிருக்குது.

சிவமூர்த்தி சாஸ்திரி பெங்களூர்ல அச்சாபீஸ் வச்சி ‘சரண இலக்கியம்’ன்ற பத்திரிகய வெளி யிட்டிருந்தாராம். அந்த புத்தகத்த எங்கப்பா தவறாம வீட்டுக்குக் கொண்டு வருவார். ஹொன்னக்காவின் ரெண்டாவது மகன் பங்கி சித்தப்பா பெங்களூர் சிவமூர்த்தி சாஸ்திரிகளோட அச்சுக் கூடத்துல அச்சுக் கோக்கிற வேலைய பாத்துக்கிட்டிருந்தான். அவன் ஊருக்கு வரும்போது சிவமூர்த்தி சாஸ்திரியைப் பத்தி ரொம்ப சுவாரசியமான சங்கதிங்கள் சொல்லி கிட்டிருப்பான்.

குள்ள மல்லண்ணனோட வீட்டுக்கு கிழக்குல தட்டார ருத்ரண்ணனோட வீடிருந்தது. அதைத் தாண்டி விசாலமான நெடுங்குளம் இருந்தது. குளத்தங்கரையில் மாரியம்மாவோட, பஸவண்ண னோட கோயிவங்க. குளத்தோட தெற்குல தென்ன மரம், கங்கம்மாவோட வீடும், மேற்குல தட்டா ரோட வீட்டு பக்கத்துல பாதையும் கம்பாளு மடத்தோட ஏஜெண்ட் மல்லய்யாவின் வீடும் வடக்கிலே நெசவுத் தொழில் ருத்ரய்யா வீடும் இருந்தன. அதே திசையில் சலவைத் தொழிலாளர் களின் சேரியும் இருந்தது. பிஸ்கூரு வெங்கடர் தமணய்யாவின் வீட்டைத் தாண்டியதும் குளக் கரை ஓரம் சிறுத்துப் போய் தாண்டுறதுக்கு வசதியா அடிக்கொரு கல்லு போட்டிருந்தாங்க.

ஊருக்குள்ள வர்றவங்க இந்த நீளக்குளக் கரையோர படிக்கல்லுங்கமேல தொங்குகிற கயிற பிடிச்சினு அடியூனி தாண்டித்தானாகணும். தண்ணி நெறஞ்சிருந்த இந்த நீளக் குளக்குட்டையில் விளையாடறதுன்னா ரொம்ப ஆனந்தமாயிருக்கும். குளத்தங்கரைக்குத் தெற்குப்பக்கம் நாலு தென்னை மரமிருக்கும். அதுங்களுக்கு நடுவில சமமான நெலம் இருக்கும். இது எங்க விளையாட்டுத்திடல். கில்லிதாண்டு, கிட்டிபுல்லு, பலீஞ் சடுகுடு, கிளிப் பட்டை, உப்புப்பட்டை, கோலி, பம்பரம், நொண்டி யடித்தல், கோல் தாண்டுதல், கல்லா மண்ணா, குரங்கு கோலாட்டம் முதலான ஆட்டங்களை நாங்கள் ஆடிக்கிட்டிருப்போம். ஊர் முன்னால் அனுமன் கோயிலுக்குப் பக்கத்தில பெரியதா ஆல மரத்தைப் போலவே ஒரு வில்வ மரம் இருந்தது. வருசத்து முதல் மழை பெய்யாம வீட்டுக்குப் பின்னால் புல்லெல்லாம் காய்ந்து ஆடுமாடுங்க தீனி கிடைக்காமப் போகும்போது, இந்த கோணி மரத்துல ஏறி யாராவது ஒருத்தர் கோணி இலைய அறுத்துப் போடுவாங்க. மத்தவங்க சுமை கட்டி சுமந்து கொண்டு வந்து ஆடுமாடுங்களுக்குத் தீவனமாய்ப் போடுவாங்க.

முதல் மழை பெய்த அந்த முதல் இரவுகள்ல காவி நிற தண்ணீர் உள்ள அந்த நீளக் குளக்குட்டை யோரமா உக்காந்து தவளைங்க “ட்ரை, டிரையு”ம்னும் இன்னும் பலவிதமான சத்தங்களோட பாடத் தொடங்கும். ஆயிரத்து தொள்ளாயிரத்து ஐம்பத் திரண்டு, ஐம்பத்து மூணாம் ஆண்டாகயிருக் கலாம். நான் அப்போ அஞ்சாம் வகுப்பு படிச்சிக் கிட்டிருந்தேன். எங்க ஊருக்கு பெங்களூரிலிருந்து மாகடி வழியா தியாம கொண்ட்லுவுக்கு போகும் பஸ் வந்து போகும். ‘ஸ்ரீசித்தேஷ்வரர் மோட்டார் சர்வீஸ்’ன்னு எழுதப்பட்ட பெயர்ப் பலகையைத் தாங்கிய முகம் கொண்ட பச்சை நிற பஸ், அனுமன் கோயிலின் முன்பாகத்துலயே வந்து போகும். பஸ் ஊருக்கு வரும் நேரத்துக்குச் சரியா சின்ன பசங் களாகிய நாங்க ஊர் முன்பகுதியில் கூட்டம் சேர்ந்து ‘ஸ்ரீ சித்தேஷ்வரர் மோட்டார் சர்வீஸ்’ன்னு கத்தி கூச்சல் போட்டு கொண்டாட்டத்துல கூத்தாடு வோம். பஸ் புறப்படுறதுக்கு முன்னாடி பஸ்ஸோட பின்பக்கத்து ஏணிய புடிச்சி அஞ்சாறு பேராவது ஏறி நிற்போம். பஸ் ‘ரைட்’ குடுத்துட்டு முன்னால நகர்ந்து வேகம் புடிக்கிற சமயத்துல., பஸ்ஸிலிருந்து இறங்கத் தொடங்கி சமநிலை தப்பி கவிழ்ந்தடித்து விழுந்து முட்டி முழங்கால் முழங்கைகள் சிராய்ந்து காயம்பட்டு, ரத்தம் வந்தா சாணி, தானாகவே உலர்ந்து போயிருக்கும் வறட்டி முதலானத பொடி பண்ணி காயத்துல அழுத்தி பூசிக்குவோம்.

ஊருக்கு முன்னால் கால்வாய் கரையிலேயே கொசவன் ரேவண்ணனோட வீடிருந்தது. கொசவன் சூளையில் சுட்ட ஓட்டு வீடு. வீட்டின் பின்னால் இருந்த வெற்றிடத்துல அவ்வப்போது சூட்டைப் பரப்பும், புகையைக் கிளப்பும் சூளையிருந்தது. ரேவண்ணா சூளையில் சட்டி, பானை, குடுவை போன்ற மண்பாண்டங்களைச் சுட்டுக்கிட்டி இருப்பான். அவன் குண்டாபக்தரின் லிங்காயத்து சாதியைச் சேர்ந்தவன். வேற எங்கேயிருந்தோ எங்க ஊருக்கு குடிபெயர்ந்து வந்தவன்னு பேசிக்குவாங்க. ஈஸ்வரன் கோயில் வெளித்தாழ்வாரத்துல சக்கரம் சுத்தி சட்டி - பானை குடுவைகளை அவன் செய்து கிட்டிருப்பான். அவனோட பெரிய மகன் ரேவண்ண சித்தய்யா. ரெண்டாவது மகன் சந்திரப்பா. ரெண்டாவது மகன் எங்களவிட மூணு வகுப்பு பெரியவன். நான் அஞ்சாம் வகுப்புல இருக்கும் போது அவன் எல்.எஸ். முடிச்சிருந்தான்.

ரேவய்யனுக்கு மத்தளம் வாசிக்க வரும். ஊருக்கு ஹரிகதை பாகவதர் வந்தா ருத்ரன் கோயிலில் ஹரிகதை கட்டாயமிருக்கும். சன்னவீரய்யா ஹார் மோனியமும் ரேவய்யா மத்தளமும் வாசிப்பாங்க. ரேவய்யனுக்கு நாடக சீன்கள் வரைய வரும். நாடக சீன்களின் திரைச்சீலை சொந்தக்காரர், ரேவய்யா மூலம் காடு, ரோடு, அந்தப்புரம், தர்பார் மண்டபம் காட்சிகள் பின் திரைச்சீலை, சைட்விங் முதலான துணித்திரைகள்ல எழுத வைப்பார். எங்களூரைச் சுற்றியிருந்த பல நாடக சீன்களோட காட்சித் திரைகள் வலது பக்கம் அடியில் பெயிண்டர் ரேவய்யா, கம்பாளுன்னு எழுதியிருக்கிறகத நாங்க படிச்சிருக்கிறோம்.

ரேவய்யனோட வீட்டுல அப்பப்போ சங்கீத பாட்டுக் கச்சேரி நடக்கும். நாடகக்கலைஞருங்க ரேவய்யனோட வீட்டுக்கு வந்து பாடும்போது, எங்கவூரு ஜனங்க கேட்டுகிட்டு நிப்பாங்க. குப்பி கம்பெனியில பார்ட் பண்ணிகிட்டிருந்த ‘ஹொன்னஞ் சாச்சார்’ என்ற நடிகர் அப்படி வந்து பாடியத நான் கேட்டிருக்கிறேன். ரேவய்யாவும் அவனோட பெரிய மகன் ரேவண்ண சித்தய்யாவும் கௌரி -கணேசன் பண்டிகைங்க வந்துட்டா, உருவங்கள தயார் பண்ணி நெழல்ல உலர வச்சி வர்ணம் பூசி ஜிகினா தூள் ஒட்டி அழகான உருவச் சிலைங்கள செய்யத் தொடங்குவாங்க. கம்பாளு கௌரி - கணேச சிலைங்களுக்கு நெலமங்கலம் - பெங்களூர், மாகடி - தியாம கொண்ட்லு முதலான ஊருங்கள்ல நிறைய கிராக்கியிருந்தது. ஆடி மாசத்துல மண்ணு கணேசன் - கௌரம்மாக்களின் சிலைங்க வரிசை வரிசையா அவன் வீட்ல நெறஞ்சிட்டிருக்கும். வரும் படி அதிகமானதால ரேவய்யாவோட வீட்டுக் காரங்க மண்பாண்டங்க செய்யிறத விட்டுட்டு வர்ணம் பூசற வேலையில இறங்கிடுவாங்க. செல் வந்தருங்களோட வீட்டுச் சுவருங்களுக்கு பஸ்வனோட தலை (மாடு அல்லது நந்தி) புலியோட தலை முதலானவைங்கள தயாரிப்பது; மாதுளை, திராட்சை, கொய்யாப்பழங்களை தட்டில் அடுக்கி வச்ச மாதிரி தயாரிச்சி அதுங்களுக்கு வண்ணம் பூசி அசல் பழங்களைப்போலவே செய்வான். ரேவய்யனின் மனைவி ரேவக்கா பலவகையான மண்பாண்ட மூடிகளை மட்டும் செய்து அதுங்கள சுட்டு ஊருக்குள்ளே வித்து கேழ்வரகு நெல்லு எல்லாம் சம்பாதிப்பா.

நல்ல மனிதரான கங்கய்யாவும்கூட ரேவய் யாவைப் போலவே லிங்காயத்து பிரிவச் சேர்ந்தவன். இவன் எங்க ஊர்ல விலங்குகளோட குடுமியை கத்தரிக்கும் வேலையை செய்து வந்தான். யாராவது லிங்காயத்துங்க சிவசிவான்னு கைலாசபதவிக்கு போய் சேந்துட்டாங்கன்னா அவங்க வீட்டு முன்னால பம்பை கட்டின பசுவோடு சேந்து கங்கண்ணா வந்து சேர்ந்துடுங்கண - டுங்கணன்னு அடிக்கத் தொடங்கிவிடுவான். அக்கம் பக்கத்தாருங்க இந்த சத்தத்தைக் கேட்டு கம்பாளத்துல யாரோ நல்ல ஜீவன் ஒண்ணு சிவான்னு போயிடுச்சிபோல’ன்னு பேசிக்கொள்வதோ, இறந்தவரோட இறுதி தரிசனத்த பாக்கவோ வந்துடுவாங்க. எப்பவாவது ஒரு திங்கக் கிழமை நாங்க இன்னும் படுக்கை விரிப்ப விட்டு எழறதுக்கு முன்னாடியே வீட்டு வாசலுக்கு வந்து, முடிவெட்டிக்கிறதுன்னாலே தப்பிச்சிக்கிற என்ன புடிச்சிக்கிட்டு, எங்க வீட்டுக்கு பக்கத்திலிருக்கிற சங்கே கௌடனோட காலைமனை மண்திட்டு மேல உக்கார்த்தி, காதுலேருந்து மேல் பகுதிக்கு ஒரு கயித்தக்கட்டி, கயித்துக்குக் கீழேயிருக்கிற எல்லா முடியயும் கத்தரிச்சி வழிச்சியெடுத்து போட்டுடுவான். “கங்கண்ணா - அதென்ன முடி வெட்றியோ போ! மூணுநாளைக்கெல்லாம் கரடி மாதிரி வளந்துடுது. நல்லா ஒட்ட வெட்டுடா’ன்னு பாட்டியோட உத்தரவோ இல்ல என் அத்தை யோட அதட்டும் குரலோ கங்கண்ணனுக்கு சொல்லிக் குடுக்கும்.

ஊர்ல பெரிய பெரிய ஆம்பளைங்களுக்கு நெத்திக்கு மேல முன்தலையில அரை நிலா வடி வத்துல முடியை வழித்து பின் குடுமியை நீளமாக வாரி முடிபோட்டு விடுவான் கங்கண்ணன். எல்லா பெரிய பெரிய ஆம்பளைங்களும் ஏதோவொரு காரணத்துக்காக தாடி - மீசை வளத்துகிட்டே நடமாடுவாங்க. காலையில எழுந்து விவசாய வேலையில ஈடுபடற அவங்களுக்கு திங்கக்கிழமை தான் ஓய்வு கிடைக்கும். ஒவ்வொரு வாரமும் திங்கக்கிழமை தலைய வழிச்சிகிட்டு மடித்துணி உடுத்துற பழக்கம் எங்கவூரு லிங்காயத்துங்களது. நான் சின்ன பையனாயிருந்தப்போ ஒவ்வொரு திங்கக்கிழமை மட்டுந்தான் குளிப்போம். அந்த காரணத்துனால திங்கக்கிழமை சவரத் தொழிலாளி கங்கண்ணனுக்கு பிற்பகல் மூணு மணி வரையிலும் ஓய்வே கிடைக்காது. ஒவ்வொரு வட்டாரத்துக்கு ஒவ்வொரு இடம் தீர்மானம் செய்துகிட்டு சவரம் செய்வான்.

மொழங்கை வரையிலும் அரைக்கை சட்டை. சட்டைக்கு காலர் இருக்காது. கழுத்துக்கு கீழே யிருக்கும் ஓட்டைங்கள்ல நூலைக் கோத்து கட்டிக்கு வாங்க. இடுப்புக்குக் கீழே சிலபேர் கோவணத்தையும் இன்னும் சில பேர் மொழங்கால் வரைக்கும் நிதக் கரையும், சிலபேர் அரவேட்டியையும் வசதியுள்ள வங்க வீரகச்சையையும் உடுத்திக்குவாங்க. தலைக்கு டவல் சுத்தாம யாரும் இருக்கவேமாட்டாங்க. தலைக்கு துணியை சுத்திக்காதவங்கள ‘தலைக்கு துணியில்லாத பிச்சைக்காரன்”ன்னே கேலி செய் வாங்க. கலியாணம் மாதிரியான சுபகாரிய கூட்டங்கள்ல ஆம்பளைங்க துவச்ச மடித்துணிய உடுத்தி, தாடி மீசைய வழிச்சி புதிய களையோடு பளபளன்னு இருப்பாங்க. நாலுபேர் பெரியவங்க ஒரு இடத்துல கூடினாங்கன்னா பேச்சுயெல்லாம் விவசாயத்தப் பத்திதான் இருக்கும். மழை நட்சத் திரங்களை விவரமாக சொல்லிகிட்டு ‘கொறம பூமியில நட்டது நம்முது களை அதிகமாயிடிச்சி’, ‘பரம்படிக்கலாம்னா வெத கெடைக்கல’ ‘கேவுரு பயிரு நூலு - தாளாயிடுச்சி. மள ஏமாத்திடிச்சி’, ‘ரெட்ட ஏரு பூட்டினமாதிரி ஆளமா உளுது வச்சேன், பெரம்படிச்ச மூணுநாளு வெயில் காய்ஞ்சுது’களையெல்லாம் காஞ்சி போச்சி, அப் புறமாத்தாண்ணா கேவுரு பயிராச்சி’, ‘என்னத்த ஆச்சி நெலம் தெரியாத மாதிரியாச்சி’, ‘கேவுரு தென கவணக்கல்லு வீசின மாதிரி வந்தது. தெனய கொண்டாந்து யாருக்காவது அடிச்சா பக்குன்னு உயிர் போய்விடும்’ என்னும் பேச்சுங்கதான் கேட்டுகிட்டிருக்கும்.

மழை வராம விளைச்சல் தீயும் காலம் வந்து சேந்தா எங்கவூரு பெரிய தலைங்க நடுங்கிப் போயிடு வாங்க. ஹஸ்த நட்சத்திர மழ பெய்யாமப் போனா மொத்த கேழ்வரகும் விளைச்சல் காணாதுன்னு எதிர்காலப் பலன் சொல்லுவாங்க. ஹஸ்தசித்தெ மழயை குருட்டு ஹஸ்த மழன்னும் சொல்லுவாங்க. நெலம் ஈரம் வத்தி காயத்தொடங்கும் போதெல்லாம் பெருமூச்சு விடத்தொடங்குவாங்க. வானத்த அண்ணாந்து பாக்கத் தொடங்குவாங்க. மழ வருமோ இல்லையோன்னு பலவிதமான சகுனங்கள் தங்களுக்குத் தாங்களே பார்த்துக் கணிக்கத் தொடங்குவாங்க. மழயில்லாத அந்த காலத்துல ஒருநாளு ஊரச் சேந்த ஆணும் பொண்ணுமா எல்லாரும் கூடி எங்க வீட்டு பந்தலுக்கு அடியில் வந்து சேந்தாங்க. மழை வருமா இல்லையா?’ ன்னு தெரிஞ்சிக்க ‘பேன் சடங்கு’ செய்ய தயாரா வந்திருந்தாங்க. சடங்குக்கான ஆயத்தமும் செய்தாங்க. ஒரு மொழம் அகலத்துக்கு தரைய தண்ணி தெளிச்சி சுத்தம் பண்ணி கோலம் போட்டாங்க. ஒரு சேர் அளவு நெல்லு கொண்டாந்தாங்க. பொம்பளங்க ஒருத்தருக்கொருத்தர் தலை பாத்து தடிமனான ஒரு பேன் தேடி எடுத்து சுத்தம் பண்ணின தரையில விட்டு அதும்மேல அந்த ஒரு சேர் நெல்லையும் கொட்டினாங்க. நெல்லுக்குவியல் மேல சாணியால பிள்ளையார் செய்து வச்சி பிள்ளையாரோட ரெண்டு பக்கத்துக்கும் ஒரு மஞ்சள் பொட்டையும் ஒரு அடுப்புக்கரியையும் வச்சாங்க.

எங்க பாட்டி எல்லோருக்கும் கேக்கும்படியா “மள பெஞ்சி பயிர் வெளஞ்சி கேவுரு - நெல்லு பத்தாயம் நெறயும்னா பேனு புள்ளயார்சாமி நெத்தி புல்லு மேல ஏறட்டும். மத்தியம்னா, அரையுங் கொறயும்னா மஞ்சள் பொட்டு மேல ஏறட்டும். ‘பஞ்சம்’ வர்றதாயிருந்தா கரிக்கட்டி மேல ஏறட்டும்”ன்னு குறிப்பு காட்டினாங்க. எல்லோரும் ஒரே நினைவுல மூழ்கி நெல்லு குவியலையே பாத்துகிட்டிருக்க, எங்க அம்மா பூசை சாமானுங்களக் கொண்டாந்து பிள்ளையார் சாமிக்கு பூசை பண்ணி ஊதுபத்தி கொளுத்தி நெல்லோட சின்னக் குவியல்ல சொருகினாங்க. கொஞ்ச நேரம் போனதும் “அதோ அதோ பேனு பேனு - புள்ளையார் சாமி மேல ஏறிட்டிருக்குது. அதோ ஏறினு இருக்குது. அதோ புல்லுல ஏறிடிச்சுன்னு பேசிக்கிட்டிருந்த அவங்க பேச்சுப்படியே பேன் அருகம்புல்லு மேல ஏறிடுச்சு. நெல்லுல மறஞ்சிபோயிருந்த பேன் எப்படியெப் படியோ மேல வந்துடிச்சி.

ராத்திரி சேளூர் பக்கம் மின்னலடிச்சுது. மழ வருதுன்னோ என்னமோ நாய்ங்க வானத்தப் பாத்து அழுதுட்டிருந்ததுங்க. மழ வந்தேயாகணும்னு சந்திரன், சூரியன் கூடுகட்டிகிட்டிருந்தாலும் மூணு நாளையில மழ வரும்ன்னோ என்னமோ, விடியும் போது வரும் செம்மோடம் ஏரிக்கு மூலம், சாயங் கால செம்மோடம் பஞ்சத்துக்கு மூலம்ன்னோ என்னவோ, வானத்துல தண்ணீர்த்துளிங்க செதறி யிருந்தது. மழ வந்தே வரணும்ன்ற ஆசைய பேசி கிட்டு ஊரார் தங்களோட கவலைய போக்கி கிட்டிருந்தாங்க.

“வானத்துல எல்லா எடத்துலயும் மேகங்க சேந்திடுச்சி.... மழைச் சாமியவாவது பண்ணுங்கோ”ன்னு எங்க ஊரு சின்னப் பிள்ளைங்களோட பொம் மலாட்ட ராஜா வெங்கடப்பா சொன்னவொடனே நாங்க சின்னப்பசங்களெல்லாம் சுறுசுறுப்பானோம். எங்களோட முடிசூடாத அரசன் விருபண்ணா மழைத்தேவனுக்காகவே எடுத்து வச்சிருந்த மொழ அகலப் பலகை எங்க குழுவோட கைங்கள்ல ஊர்ந்து ஊர்ந்து ஊர் முன்னாலயிருக்கும் கொசவ ரேவய்யாவோட வீட்டுக்கு வந்தது. ரேவய்யா வோட பெரிய மகன் ரேவண சித்தய்யா தகப்பன் வேலைக்கு தன்னோட வயதுக்கு வராத இளங்கைங்கள உதவிக்குக் கொடுத்து தானும் கலைஞனாகவே வளர்ந்திருந்தான். அவனுக்கும் மழைத்தேவனை உருவாக்கும் உற்சாகம். மழ யாருக்குத்தான் வேணாம்? பையன்கள்ல பலசாலிகளாயிருந்த விருபண்ணா, கப்பண்ணா, நாகா, ஹனுமந்தராயர், கங்கராஜா முதலானவங்க ஏரியின் கொக்குப் பள்ளத்து பக்கத்துலேருந்த களிமண் குழியிலேருந்து மண்ணுருண்டைகளச் சுமந்து கிட்டு வந்து ரேவண்ண சித்தய்ய னோட முன்னால் வச்சாங்க.

களிமண்ண மிதிச்சி பக்குவப்படுத்தி, மழைத்தேவனை செய்யத் தொடங்கியதும் அவனைச் சுத்தி நின்ன நாங்க அவனது கை அசைவுங்களையே பாத்தபடி நின்னு கிட்டிருந்தோம். ரேவண சித்தய்யா களிமண்ணை மொகம் மூஞ்சின்னு பாக்காம அடிச்சு குத்தத் தொடங்கினான். அந்த தண்டனைக்குள்ளான மண்ணுருண்டையில செய்யும் மழைத்தேவன் எப்படியிருப்பான்னு பாக்கிற ஆர்வம் எங்களோடது. தண்ணியில் தன்னோட ரெண்டு கையையும் அப்பப்போ அழுத்தியெடுத்து தெய்வ உருவத்த திருத்தத் தொடங்கினான். களிமண்ணு தன்னோட வடிவத்த இழந்துட்டு படுத்திருக்கிற எருதோட (பஸவண்ணா) வடிவத்துக்கு வந்தது. கொம்பு, கண்ணு, தோளு எல்லாமே அழகாகயிருந்தது. மழை பஸவண்ணா நாலஞ்சி நாளு நெழல்ல காய்ந்து வெள்ளை நிறம் வாங்கி கண்ணு - ரெப்பை முதலான சாயலுங்கள எழுத வச்சிக்கிட்டு எழுந்து வந்துடுமோன்ற மாதிரி உயிர்க்களை பெற்றது. கழுத்துச் சலங்கை, மணி, மூக்கணாங்கயிறு ‘துணி யாலான கொம்பு’ மகுடம் மனங் கவரும்படி வந்திருந்தது.

சாயங்காலம் நெருங்க நெருங்க எங்க உற்சாகமும் அதிகமாகத் தொடங்கியது. மழைத்தேவனை ஊர் வலமா கொண்டுவர பக்கத்தூருங்களுக்குப் புறப் படணும்ன்ற தயாரிப்பு நடந்தது. எல்லாரும் நேரத்துக்கு முன்னாடியே சாப்பிட்டுட்டு வரணும்னு தீர்மானம் பண்ணிக்கிட்டோம். ஊரை விட்டு ஊரு போகும்போது நாங்க நடந்ததுதான் வழியாக இருந்தது. இருட்டு நமக்கு இல்லவேயில்லைன்ற மாதிரி துணிவு நெறஞ்சிருந்தது. மினுக் மினுக்குன்னு எரியும் கருடகம்ப பந்தத்தோட வெளிச்சம் காத்துக்கு அணைஞ்சு போய்கிட்டிருந்தது. வழி நடக்கும் போது, சரளமா வந்துகிட்டிருந்த பேச்சுங்களுக்கு எல்லோரும் ஆனந்தப்பட்டுகிட்டிருந்தோம். எங்க கிண்டல் கேலி வேடிக்கைக்குக் காரணமான ஆளுங்க எல்லாம் நாங்க பாத்தவங்களாகவே இருந்தாங்க.

கல்லுவீடு பார்வதம்மா தன் வீட்டுல நெரச்சி வச்சிருந்த சுள்ளிவிறகுக்கு, அடுப்பு பத்த வைக்க நெருப்பு குச்சி உரசாம கேவுரு தாளு புடிச்சினு வீடு வீடா நெருப்புக்கு அலையறது; நெருப்புக்குன்னு போனவ அங்கேயே உக்காந்து சாப்பிட்ட பிறகு தான் வெளியே வர்ற சங்கதி; அவ வாங்கின இரவல் தானியத்துக்கு வட்டி தானியமா திருப்பித் தர்ற அரிசியில் புழு விழுந்து பாழாப் போனது. பிஸ்கூரு மரியப்பா ஒரு நெருப்புக் குச்சிய சரியா நெடுக ரெண்டா பொளந்து நெருப்புப் பொட்டிய நிரப்பினு கஞ்சத்தனத்த காட்டிக்கிட்டது; தட்டார சாதியைச் சேந்த கரடி பொன்னக்கா தன்னோட ஒரே மகன் சுஜ்ஜானிய இழந்துட்ட பிறகு தன் சொத்தை கெம்பய்ய மேஸ்திரிக்கு எழுதிட்டு குடிக்கக் கூழில்லாம பித்துப் பிடிச்சி கல்லு ஒண்ண கெம்பண்ண மேஸ்திரின்னு நெனச்சி வேறொரு கல்லால் நசுக்கி சாகடிச்சி மண்ணுக்குள்ள புதைச்சி கெம்ப துடியன் செத்துப் போனான்னு சிரிச்சிக்கிட்டிருந்தது; கடைக்காரன் மூர்த்தி வெங்காயம் வாங்கிறதுக்குன்னு வந்த வண்ணாரப்பொண்ணு வயசுக்கு வந்த ‘ஜயி’ன்றவள சேட்ட பண்ணப்போயி காறிதுப்பவச்சிகிட்ட சங்கதி.....ன்னு எங்க பேச்சுக்கு நெறைய விஷயங்க இருந்தது.

பக்கத்து ஊரு நெருங்க நெருங்க பேச்ச நிறுத்தி தீப்பந்தத்தக் கொளுத்தி ‘பெய்யுப்பா மழை தேவா’ன்னு முழக்கத்துனால ஊரே நடுங்கற மாதிரி, பாடத்தொடங்கியதும், எங்க பாட்டுக்கு எதிர் குரல் எழுப்புன மாதிரி அந்த ஊர் நாய்ங்க வானமே இடிந்து விழுந்த மாதிரி ஊளையிடத் தொடங்கின. கிழ நாயி, குட்டி நாயிங்களின் பலவித பாணியிலான குரைப்புங்க இருட்டு அமைதியை பிடித்து உலுக் கினதுங்க. எங்களோடு பக்கத்து ஊர் பையங்களின் குழுவும் சேர்ந்துகிட்டு மழைச்சாமியின் ஊர்வலம் பெரியதாக மாறிடுச்சி. சாயங்காலத்துக்கு முன்பே சாப்பிட்டு படுத்துத் தூங்கிக்கிட்டுருந்தவங்கள எங்க பாட்டும் ஆரவாரமும் குத்தி எழுப்பி கிட்டு இருந்தது. எல்லா வீட்டு முன்னாடியும் மழைச் சாமிக்கு தண்ணி தெளிச்சிகிட்டிருதாங்க. தெளிச்ச தண்ணியினால மழைச்சாமியைச் சுமந்த விருத பண்ணனும் நனைஞ்சிகிட்டிருந்தான். தலை மட்டும் நனையாம அவன் நெத்திக்கு இட்டிருந்த குங்குமத்தினால பயங்கரமாகத்தெரிஞ்சான். எங்களை விட நாலுவருஷம் பெரியவரான மாகடய்யா. நஞ்ஜேமரி, அப்பாஜய்ய, சித்த வீரப்பரோட ருத்ரய்யா முதலானவங்க மழைச்சாமியின் பாட்டுங்கள ரொம்ப அருமையா பாடிகிட்டிருந்தாங்க. அவங்க பாட்டு சொல்லி இடைவெளிவிடும்போது நடுநடுவே நாங்க பையனுங்க ‘பெய்யோ பெய்யோ மழைச்சாமின்னு ஆரவாரமா கத்தத் தொடங்குவோம். பாட்டுகளோட துண்டு துணுக்குங்க எனக்கு இப்போதும் நினைவுக்கு வருது:

ஆனந்தயேரி மேல என்னன்னான் தொரைமகன்

வாராயப்பா மழைச்சாமி

அக்காவின் ஊருமேல பாக்குத் தோட்டத்துல

சாய்ந்தாடிக் கொண்டு ஊத்தூயப்பா மழைச்சாமி

.......................

சத்தான நெலம் காய்ஞ்சி கிடக்குது

பெய்யோ பெய்யோ மழைச்சாமி

.............................

வருவாய் வருவாய் மழைச்சாமி

வாழைத் தோப்புக்கு நீரில்ல

பெய்யோ பெய்யோ மழைச்சாமி

பூந்தோட்டமெல்லாம் காஞ்சி கிடக்கு

மழைச்சாமி மனைவி புள்ளைங்கதாயி

பெய்யோ பெய்யோ மழைச்சாமி

- இந்த பாட்டுங்க ரொம்ப நீளமானவையா யிருக்கும். இதுங்களோட நாதலயங்கள் கூட்டுப் பாடலுக்கு சொல்லிவச்சி கட்டின மாதிரி இருக்கும். படிக்கத் தெரியாதவங்களுக்கும் சர்வ சாதாரணமா பாடும்படியா எளிமையாயிருக்கும். கதைப்பாடல் வரிங்களுக்கு லயங்கள் கொடுக்கிறதுதான் சிறப்பு. சில பாடல்கள் கதைப் பாடல்களாகவே இருக்கும்.

கஞ்சுகல்லப்பன் கணவாயில்

இடியும் மின்னலும் நடமாடுதண்ணா

இடியும் மின்னலும் நடமாடப்பாத்து

மாயமான மழை பொழியுதண்ணா

மாயமான மழை பொழியிறதைப் பாத்து

நெலத்தடிவரைக்கும் புல்லு முளைச்சதண்ணா

நெலத்தடி வர புல்லு மொளச்சதப் பாத்து

பீரப்பா ஆட்டை மேய விட்டானண்ணா

பீரப்பன் ஆட்ட விட்டதப் பாத்து

பீரவ்வா கிளி சுமந்தாளண்ணா

கடைசியில் பீரம்மா களிக்கூடைய இறக்கி காத்திருந்தாள்னும் நெடுநேரம் வராத கணவனை உரக்கக் கூப்பிட்டு சிறிது தொலைவு போகவும் பசியினால் நாயி கேவுரு களியில வாய் வச்சி தூக்கிட்டு போயிடுச்சின்னும் விவரங்க வருது. பாட்டு நகைச்சுவையின் வெள்ளமாகி எல்லாரும் சிரிச்சிகிட்டிருந்தது நினைவிலிருக்கு.

திரண்டு வருவாய் மழைச்சாமி

வந்து நீ கொட்டுவாய் சிவச்சாமி

பள்ளம்மோடு நான் அலைந்து

தாழம்பூவு பறிச்சி வந்தேன்

திரண்டு வருவாய் தொரை மகனே

வந்து நீ பொழிவாய் சிவச்சாமி

- மழைத் தேவனைச் சுமந்து ஊரெல்லாம் திரட்டிகிட்டிருந்த கேவுரு, தட்சணைகளைப் பெற்று ஊருக்குத் திரும்பிவரும் வேளைக்கு நடுஇரவு நெருங்கி வந்துடும். வழியிலிருந்து விலகி கரும்புத் தோட்டங்க வழிய பிடிச்சு தலைக்கு ஒரு கடெ கரும்பு ஒடிச்சி ருசிக்க ருசிக்க தின்னுகிட்டே ஊருக்கு வந்துசேருவோம். பஸவாபட்டணம், கண்டே ஹொசள்ளி. கொட்டிகொர, மாஜனஹள்ளி, குருவனஹள்ளின்னு நாலஞ்சி ஊருங்கள் நாலஞ்சி நாலைக்கு ஊர்வலம் வந்தபிறகுதான் மழைத் தேவனை ஏரித் தண்ணியில விடணும்னு தீர்மானம் நிறைவேறிச்சி. அந்த நாளும் வந்தது. ருத்ரசாமிக்கு வாழமரம் கட்டி ஆரவாரமான பூஜைபண்ணி மழைச் சாமியை (தேவனை) ஊரெல்லாம் ஊர் வலமா கொண்துபோய், நள்ளிரவு நேரத்துல ஏரித் தண்ணியில விட்டோம். திரும்பிவரும் வழியிலேயே ஹொன்னாதேவி கோயில் மேல காத்தும் மின்னலும் சுழன்றடிச்சது.

நாங்க பண்ணின மழைச்சாமியால தான் மழை வந்ததுன்னு மகிழ்ச்சி பொங்கி பெருமைப்பட்டு ருத்ரதேவனின் கோயில வந்து சேந்தோம். போதும் போதுன்ற அளவுக்கு கடலை மாவு உருண்டைகளைத் தின்னோம். ராத்திரி படுத்த எனக்கு விழிப்பில்லாத தூக்கம் வந்தது. சில ராத்திரிகள் பாதிதூக்கம் போட்ட காரணத்துனால என்னை மறந்த தூக்கம் வந்திருந்தது. நான் படுக்கை விரிப்புலேருந்து விழிப்பு வந்து எழுந்து சோம்பல் முறிக்கும் நேரத்துக்கு மழயினால நனைந்த ஈர மண்ணோட வாசன மூக்குத்துளைகளைத் தாக்கத் தொடங்கிச்சி. பெரியவங்கெல்லாம் மழையினால மாறிப்போன நிலங்களை பாக்கப் போயிருந்தாங்க. ‘போதுமா மழை?ன்னு ஒருத்தருக்கொருத்தர் விசாரிச்சிக்கிட்டாங்க. ‘மழ பெய்யட்டும் உடு, மழ பெஞ்சா கெடுதலா? உன்னைப் போல ஆளுங்களுக்கு கொழந்தைங்க பொறந்தா கெடுதலா?’ன்னு பேச்சு பரிமாறிகிட்டாங்க. ஆடி மழ பெய்தவுடனே பக்குவம் வந்த நாங்க கட்டிப் புரள்றதும் கடிச்சி விளையாடறதும் பகலிரவா ஊரைப் பிடிச்சு உலுக்கிக்கிட்டிருந்தது.

ராஜ மோடி

ஆரம்ப பள்ளிக்கூடத்துல படிக்கிற எங்களுக்கு விடுமுறை நாட்கள்ல மாடு மேய்க்கிற வேல வந்து சேரும். விதை விதைக்கிற காலமாயிருந்ததனால பெரியவங்களுக்கெல்லாம் வயல்வேலைங்க இருந்து கிட்டிருக்கும். நாங்க சின்னஞ்சிறு பிள்ளைங்க பெரிய பெரிய பையன்களோடு மாடுமேய்க்கப் போவோம். மொதல் மழைக்காலத்துல எங்க ஊர் ஏரி நிறையாம இருந்தா, தண்ணியில்லாத ஏரிக்குள்ள புல்லு முளை விட்டு வளரும். சாதாரணமா ஊர் ஜனங்க மாடுமேய்க்க ஏரியத்தான் ரொம்ப நம்பி யிருந்தாங்க. விதைக்கிற காலத்துல ஏரி நிறைய எருமையும் மாடுங்களுமே நெறஞ்சிருக்கும். சிறுவர் களான நாங்க ஏரியோட களிமண்ணுலேருந்து தேவையான விளையாட்டு சாமானுங்கள எங்களுக்குத் தெரிஞ்ச வகையில் செய்துகிட்டு விளையாடுவோம். மாடுங்க அதும் பாட்டுக்கு மேய்ஞ்சுகிட்டிருக்கும்.

எங்களூரு ஏரியின் வடக்கு மூலையில ரொம்பப் பெரிய பாறையொன்னு சின்ன மலை மாதிரி ஒரே கல்லுல உருவாகியிருந்தது. மழைகாலத்துல ஏராள மான கொக்குங்க இந்த பெரிய பாறைமேல வந்து தங்கறதுனால இதுக்கு பெரியவங்க ‘கொக்குப் பாற’ன்னு பேருவச்சி கூப்பிடுவாங்க. எங்களுக்கு கொக்கு பாற மேல ஏறி உக்காந்திருக்கிறதுன்னா ஒரு பெரிய வினோத விளையாட்டாயிருக்கும். களிமண்ணுல வண்டி தயார் பண்ணி அதுக்கு ரெண்டு எருதுங்களயும் உருவாக்கி நாங்களே இழுத்துகிட்டு விளையாடுவோம். எங்களவிட பெரிய பையனுங்க மனுச உருவங்கள செய்துக்கு வாங்க. எங்கள எல்லாரையும்விட குறும்புத் தனத்துலயும் தைரியத்துலயும் பெரிய பெயர் வாங்கியிருந்த விருதபண்ணா ஒருநாள் ஒரு மொழ நீளத்துக்கு ஒரு பொண்ணு பொம்மய உருவாக்கி தன் கலைத்திறமையை வெளிப்படுத்தி பெருமபட்டு கிட்டான். சாயுங்காலம் வரைக்கும் அந்த பொண்ணு பொம்மைய சுமந்து ஏரியயெல்லாம் சுத்தியலஞ்சி பீடுநட போட்டோம்.

அதே காலத்து ஒரு சாயங்காலம் ஊரு துப்பரவு - தோட்டிங்க பத்ரய்யா, மரிஹதச்சய்யா ரெண்டு பேரும் வீடு வீடா வந்து ஊரு முன்னால ராஜ மோடி போடறாங்க. எல்லோரும் வரணும்ன்ற சேதிய சொல்லிகிட்டு போனாங்க. எங்க ஊட்டுல சமையல் வேல சுறுசுறுப்பா நடந்தது. வேக வேகமா சாப்புட்டுட்டு ஊரு எல்லைக்குப் புறப்பட்டோம். நாங்க அங்க போறதுக்குள்ளவே நெறைய பேர் சேந்துட்டிருந்தாங்க. ரெண்டு மூணு கேஸ் லைட்டு கொளுத்தி வச்சிருந்தாங்க. மரத்துக்கிளியோட வாய்க்கு கல்லு கட்டின காவடி மாதிரியான ஒரு சாதனத்த மாட்டி மோடி செய்யறவன் தன்னோட வம்சம் - பிறப்புகளையெல்லாம் சொல்லிகிட்டு இருந்தான். வசதியாயிருந்த ஒரு இடத்துல நானும் என் தம்பி சித்தலிங்கனும் உக்காந்தோம். மோடி செய்யிறவன் பையன்களைப் பாத்து ‘உங்கள்ல தைரியசாலி யாராவது இருந்தா முன்னால வாங்க. நாங்க பண்ற வித்தைங்கள பாத்துப் பயப்படாதவங்க முன்னால வாங்க’ன்னு சவால் உடற மாதிரி சொல்ல ஆரம்பிச்சான்.

என் தம்பி சித்தலிங்கன் ரொம்ப சின்ன பையன். உக்காந்திருந்தவன் எழுந்து மோடிக்காரன் கிட்ட போனான். மோடிக்காரன் அவன் காதுல என்னென்னமோ சொன்னான். என் தம்பி தலை யாட்டிக்கிட்டிருந்தான். மோடிக்காரனோடு இன்னொருத்தனும் சேந்துகிட்டு பலவிதமான வித்தைங்களைக் காட்டினாங்க. வேப்பமர இலைங்கள தேளா மாத்தி அலையவிட்டாங்க. என் தம்பி சித்தலிங்கன கோணிப் பையில் போட்டு மூட்டையா கட்டினாங்க. அப்புறமா தடிங்களால மூட்டையை அடிக்கத் தொடங்கினாங்க. உடனே எங்க பாட்டி, ‘ஐயய்யோ, என் கொழந்தய அடிச்சுக் கொல்ராங் களே’ன்னு கத்தத் தொடங்கினாங்க. ஜனங்க சமாதானப்படுத்தினாங்க. மோடி வித்தைக்காரன் ‘மூட்டையிலிருந்த பையன மாயமா மறைஞ்சி போகச் செய்துட்டேன். ‘இப்ப அவன வரவழைக் கிறேன்’ன்னு சொல்லி ‘சித்தலிங்கப்பா வாப்பா உங்க பாட்டி அழுவறாங்க. ஏலே சித்தலிங்கப்பா!’ன்னு சத்தமா கூப்புட்டதும் ஜனங்க நடுவில பதில் குரல் குடுத்துகிட்டே என் தம்பி மோடிவித்தைக்காரன் பக்கத்துல வந்து நின்னான். ஜனங்க எல்லாம் ‘ஓ.....’ன்னு தங்களோட ஆச்சரியத்த வெளிப்படுத்தினாங்க. மோடிவித்தைக்காரனும் அவன் கூட்டாளிங்களும் மோடி - மாயம் - மந்திரங்களால ஜனங்கள மாய வலையில் கட்டிப்போட்டவங்க மாதிரி செய்தாங்க. கடைசியில மண்ணாலான ஒரு பொம்மைய நடக்க வைக்கிறேன்னு மோடி வித்தைக்காரன் புதிய வித்தையக் காட்ட ஏற்பாடு பண்ணத் தொடங்கினான்.

ஒரு முழ உயரமுள்ள களிமண்ணாலான பொம் மைக்கு மெல்லிசான மஞ்சள் துணிய உடுத்தி கையில ஒரு சின்ன கத்திய சொருகிவச்சாங்க. சிவந்த நாக்க நீட்டிகிட்டிருந்த அந்த பொம்ம நிறைஞ்ச வெளிச்சத்துல பயங்கரமாவே தெரிஞ்சிது. மோடிவித்தைக்காரன் பொம்மைக்கு வேப்பிலை யினால மந்திரம் போட்டான். முன்னாலயும் பின்னாலயும் ஊதுவத்தி கத்தைய கொளுத்தி பொகை காட்டினான். கொஞ்ச நேரம் கழிச்சி மண்ணு பொம்ம அசையத்தொடங்கிச்சி. கூடியிருந்த வங்க ‘ஆஹாஹா’ன்னு கத்தி தங்களோட ஆச்சரியத்தக் காட்டினாங்க. மோடிவித்தைக் காரன் ஜனங்கள கையெடுத்து கும்பிட்டு நாளைக்கு காலையில ஊர்ல எல்லார் வீட்டு முன்னாலயும் பிச்சைக்கு வரும்போது மொறம் நிறைய அரிசியும் பருப்பும் அள்ளித் தரணும்னும், பழைய துணிங்கள தானம் பண்ணுனும்னும் வேண்டுகோளச் சொல்லி வணங்கின பிறகு ஜனங்க கலையத் தொடங்கினாங்க.

சனிக்கிழம சாயங்காலம் நாங்க பையனுங்க மோடி வித்தைய பாத்தோம். ஞாயித்துக்கிழமை பள்ளிக்கூடத்துக்கு விடுமுறைன்றதுனால மாடு மேய்க்க ஏரிக்கு வந்தோம். ராத்திரி பாத்த ராஜ மோடிவித்தைய மாதிரி ஒண்ணு ரெண்டு ஆட்டம் ஆடினோம். விருபண்ணன் நெத்தி நெறைய குங்குமம் பூசிகிட்டு என்னென்னமோ சொல்லி மந்திரம்னு ஜபிச்சு மோடிவித்தைக் காரனைப்போல அசைஞ் சாடினான். திடீர்ன்னு என்னமோ நினைவு வந்த வனைப் போல ஓடிப்போய் களிமண்ணைக் கொண்டு வந்து பிசையும்படி எங்களுக்குச் சொல்லிட்டு வேறெதையோ தேடுவதைப் போல ‘கவண் பரண’ ன்னும் இடத்துக்கு நடந்து போனான். எங்க தலைவன் சொன்ன மாதிரியே பையனுங்க நாங்க ளெல்லாம் களிமண்ணப் பிசைஞ்சு உருண்டை யாக்கி மிதிச்சி பதமாக்கினோம். விருபண்ணன் தடிமனான ஒரு ஆமையை பிடிச்சுக்கிட்டு வந்தான். அதப்பாத்தும் மொதல்ல நாங்க பயந்து ஒதுங்கனோம். படிப்படியா ஆமையோடு பழக பழக்கம் பண்ணி கிட்டோம். ஆமை ஓட்டிலிருந்த ஓட்டைங்க வழியா தன்னோட நாலு காலுங்களயும் ஒரு தலையையும் உள்ளே இழுத்துகிட்டது. ஆமைய விளையாட விட்டுட்டு விருபண்ணன் களிமண்ணால சதி பொம்ம உருவாக்கத் தொடங்கினான். தொடக்கத்துல இவன் என்ன செய்யறான்னு தெரியாம நாங்க முழிச்சிகிட்டிருந்தோம்.

கொஞ்சம்கொஞ்சமா ஒரு பொம்மை உருவா யிடிச்சி. அதுக்கு சேல உடுத்த புண்ணியவான் கங்கண்ணனோட பொஞ்சாதி ருத்ரம்மாவ கேட்டு துண்டுத்துணி வாங்கிட்டு வந்தோம். ரொம்பத் திறமையோட அந்த பொம்மைக்கு சேல உடுத்தி மஞ்சள் குங்குமம்ன்னு வெள்ள மண்ணு, செம்மண்ணு கொண்டுவந்து பூசினோம். இப்படி அலங்கரிச்ச பொம்மைய விருபண்ணன் அலாக்கா தூக்கி ஆடி கிட்டே அலைஞ்சுகிட்டிருந்த ஆமைய இழுத்துட்டு வந்து நிறுத்தி அதும்மேல உக்கார வச்சி ஆமை தெரியாதமாதிரி அந்த பொம்மையின் சேலையோட மடிப்புங்களுக்குள்ள மறச்சு வச்சான். விருபண்ண னோட மந்திர உச்சாடனம் உரக்க ஆரம்பிச்சுது. அவனோட மந்திரத்துல ரொம்ப மோசமான திட்டுங்களும் அர்த்தம் புரியாத வார்த்தைங்களுமே நெறஞ்சிருந்தது. பொம்மைய சுமந்துகிட்டிருந்த ஆமை நகரத் தொடங்கிச்சி. பொம்மைக்கே உயிர் வந்து நடக்கிற மாதிரி தெரியத் தொடங்கிச்சி. பையனுங்க நாங்கெல்லாம் கைதட்டி எங்கள மறந்து மோடி வித்தைக்கு உற்சாகம் மீறி பொங்க நடனமாடினோம்.

ராத்திரி மோடிவித்தை காட்டின மோடிக் காரன் கம்பாளத்திலிருந்து கம்பி நீட்டியிருந்தான். அதே சாயங்காலம் பையனுங்க மோடி கட்டின அந்த பொம்மைய சில வீட்டுங்க முன்னால நடக்க வச்சோம். உள்குட்டு எங்களுக்கில்லாம யாருக்கும் தெரிஞ்சிருக்கல. சில வயசான பொம்பளைங்க என்னமோ எங்க மோடி வித்தைய பாத்து ‘ஆஹாஹா!’ ன்னாங்க. ரொம்பபேரு கடலக்காய், வெல்லம் முதலான இனாம்கூட குடுத்தாங்க. நாங்க மண் பொம்மய நடக்க வச்ச சேதி ஊர் பெரியவங்க காதுக்கும் எட்டி., அவங்கள்லயும் சில பேர் எங்க ஆட்டத்தப் பாத்து “டேய்... டேய்... குறும்புக்கார பசங்களா! நேத்து பாத்த மோடிவித்தய இன்னைக்கே திருப்பிப் போட்டானுங்களே. இந்த புள்ளைங்க பெரியவனுங்களான பின்னால ஊரயே சும்மாவா உடப்போறாங்க வெங்கடப்பான்னு சத்தமா சொன்னார் நீளக்காலு லிங்கண்ணன். கொஞ்ச நாளைக்கு விருபண்ணனோட குழுவச் சேந்த பையன்களுக்கு ரொம்பப் பெரும கெடச்ச மாதிரி யிருந்தது. எங்க கூடவேயிருந்த தடுமாடியாகும் கங்கண்ணனோட மகன் ‘குப்பி’எங்க மோடி யாட்டத்து கமுக்கத்த எல்லாருக்கும் சொல்லிட்ட துக்கப்புறம் எங்களுக்கு கெடச்சிருந்த பெரும - கவுரவமெல்லாம் கரஞ்சி போயிடிச்சி.

நாங்க மேல்சேரி பையனுங்க விருபண்ணன் தலமையில பேரும் பெருமையும் வாங்கினது கீழ்ச் சேரி ஜவுளி சங்கரய்யன் மகன் ‘சிவா’ முதலான வங்களுக்கு வயத்தெரிச்சலாயிடிச்சி. எங்க கூட்டத்த மண்ணு கவ்வ வய்கணும்னு சிவன் கூட்டத்தாருங்க பேசிகிட்டு மாடு மேய்க்க ஏரிக்கு வந்தாங்க. வழக்கமா கீழ்ச்சேரி பையனுங்கெல்லாம் எங்ககூட கலக்கிறதே அபுரூபம். தலைவனாயிருக்கிரதுல சிவனுக்கும் விருபண்ணனுக்கும் சண்டையாயிருந்தது. விருபண்ணன் பம்பரமட்டத்துல தன்னோட தப்பமான பொம்பரத்து தப்பமான ஆணியினால கீழ்ச்சேரி பையனுங்க பம்பரங்களுக்கு ‘குத்து’வச்சி குழிபோட்டு நாசம் பண்ணின ஆத்திரம் இன்னும் அடங்கியிருக்கல. கீழ்ச்சேரி சிவனுக்கு எடது கண்ணு சொட்டயாயிருந்தது. நாங்கெல்லாம் அவன ‘குருட்டு சிவன்’ன்னுதான் கூப்புடுவோம். சிவனோட அப்பா ஜவுளி சங்கரய்யாவுக்கு அதே நேரத்துல ஒரு டெண்ட் சினிமா கொட்டக சொந்தமாயிருந்தது. சிவகங்கெ திருநாளுக்கு அந்த டெண்ட் கொட்டாயில ‘ஜை பாதாள பைரவி’ பயாஸ்கோப் நடந்துகிட்டிருந்தது. சிவனோட சினேகிதனுங்க சங்கராந்தி திருநாளப்போ காசு குடுக்காம பயாஸ்கோப் பாக்கப் போய்க்கிட்டிருக்கும். மத்தபடி சிவன் எங்களுக்கு போட்டியா ஊரெல்லாம் இருந்துகிட்டிருந்தான்.

குருட்டு சிவன் பக்கத்துலேருந்து கெஞ்சபுரி சிவண்ண - பிஸ்கூரு வெங்கடய்யனோட மகன் முத்தன் முதலானவங்க எங்க கூட்டத்துகிட்ட வந்து ‘வாங்கடா டேய். மோடி ஆட்டம் ஆடலாம். நாங்க மோடி வைக்கிறோம். நீங்க கிள்ளுங்கடா பாக்கலாம்’ன்னு பந்தயத்துக்குக் கூப்புட்டாங்க. மொதல்ல எங்க தலைவன் விருபண்ண ஒண்ணும் சொல்லாததுனால எதுரு கட்சிக்காரங்க கேலி பண்ண ஆரம்பிச்சாங்க. “தோத்தகாயி சொரக்கா புருடே! எங்க பொழக்கடயில ஒரு பீர்கம் ப்ருடே!ன்னு பாட்டுகட்டி திட்டத் தொடங்கினாங்க. விரு பண்ணனுக்கு ரோஷம் பொத்துனு வந்திச்சி. “அதென்ன மோடி வய்க்கிறீங்களோ வைங்கடா டோய்! நாங்க பிச்சு எறியறோம்’ன்னு எதிர் சவால் உட்டான். நாங்கெல்லாம் உற்சாகத்தோட எங்க தலைவன பின் தொடர்ந்தோம்.

குருட்டுசிவன் சின்னதாவொரு கிளை பிரிஞ்ச கவடு குச்சிய தரையில நட்டு ரெண்டு கிளைக்கும் குறுக்க நீளமான கோணலில்லாத ஒரு குச்சிய பொருத்தினான். பாத்தா அதுவொரு விளையாட்டு ஏத்தம் மாதிரி தெரிஞ்சது. நேராயிருந்த குச்சியின் ஒரு முனயை தரையத் தொடும்படி வச்சி அதுக்கு மேல ஒரு நொனா எலைய பரப்பி எலை மேல தூள் மண்ண ரெண்டு கையளவு வாரித்தூவி சின்னதா ஒரு குவியல் செஞ்சான். அந்த குவியலோட உச்சியில ஒரு அங்குல குச்சிய குத்தி நிக்கவச்சான். “இது சிவன் வச்ச மோடி. அத கலைக்கிறதுன்னா நொனாயெல மேலயிருக்கிற தூளு மண்ணு குப்பலு மேலயிருக்கிற ஒரு அங்குல நீளமான குச்சிய ‘மோடி கெலிச்சேன் - மோடி கலச்சேன்னு’ சொல்லினே வாயில கடிச்சி எடுத்துப்போட்டு கலைக்கணும்’ன்னான். இந்த மோடிய கலைக்க முடியாதுன்னு சிவன் பக்கத்து கூட்டத்தாரு பெரும அடிச்சிக்க ஆரம்பிச்சாங்க.

மோசடி தெரியாத விருபண்ண மோடிய கலைக்க முன்னால வந்தான். சிவன் பக்கத்துப் பையனுங்க அவன தடுத்து நிறுத்தி விருபண்ணனோட ரெண்டு கையையும் முதுகுப்பின்னால கொண்டாந்து ரெண்டையும் குறுக்கால வச்சி கட்டிட்டு இப்ப கலை பாக்கலாம்ன்னாங்க. விருபண்ணன் மொழங்கால் ஊனி ‘மோடி கலைச்சேன் - மோடி கெலிச்சேன்!”ன்னு சொல்லினே வாயத் தெறந்து குச்சிய கடிச்சி வெளியே எடுக்கிறதுக்குள்ளே குருட்டு சிவன் ஏத்தம் மாதிரி யிருந்த சாதனத்தோட அடுத்த பக்கத்துலேயிருந்து நேரான குச்சிய தரைய நோக்கி அழுத்தினான். நொனா எலைமேலயிருந்த தூளுமண்ணு விரு பண்ணா வாய்க்குள் எகிறி உழுந்தது. மொக மெல்லாம் தூளுமண்ணுமயமாயிடிச்சி. அவன் நெலையப் பாத்து சிவன் பக்கத்துப்பையனுங்க கூட நாங்களும் சேர்ந்துகிட்டவங்க மாதிரி உழுந்துவுழுந்து சிரிச்சோம்.

விருபண்ணன் தனக்கு ஏற்பட்ட அவமானத்துக்கு எகிறி குதிச்சான். கைங்கள கட்டிப்போட்டிருந்த தனால யாருமேலயும் கை வைக்க முடியல. விரு பண்ணன் தோத்து துவண்டு போனவனா கட்டி யிருக்கிற கைங்கள அவுத்து உடும்படியா எங்க பக்கம் பாத்தான். நாங்க பயந்துகிட்டே அவுத்து விட்டோம். ஏரி பள்ளத்துல தேங்கியிருந்த தண்ணியில வாய் - மொகமெல்லாம் கழுவினி வந்த விருபண்ண னோட மொகத்துலயிருந்த கோவத்த புரிஞ்சிகிட்டு குருட்டு சிவன் கூட்டத்துப் பையனுங்க ஓடிப் போயிட்டாங்க. கீழ்ச்சேரி பையனுங்களுக்கும் மேல்சேரி சேந்த எங்களுக்கும் உள்ளுக்குள்ளவே வெறுப்பும் பகையும் வளந்துகிட்டேயிருந்தது.

பாட்டி பண்டிகை

எட்டாம் வகுப்பு தேர்வு பாஸ் பண்றது சுலபமில்லேன்னும் அது எல்.எஸ். தேர்வவிட கடினமின்னும் எங்க ஆசிரியருங்க பயமுறுத்தத் தொடங்கினாங்க. எங்களுக்கு பாடம் சொல்லிக் குடுத்துகிட்டிருந்த ஆசிரியருங்கள்ல வெறும் மூணு பேர் மட்டும் எஸ்.எஸ்.எல்.ஸி. தேர்வடைஞ்சிருந் தாங்க. அவங்க எல்லாருக்கும் ஆங்கில மொழி நல்லா வரும். ரென் அண்ட் மார்டின் இலக்கணத்த கரச்சி குடிச்சிருந்தாங்க. எதையாவது பண்ணி எட்டாம் வகுப்போட பத்து பையன்களை தயார் பண்ணி ஒரே தடவையில பாஸ் பண்ண வச்சுட்டா பேரும் பெருமையும் கிடைக்கும்னு புரிஞ்சிகிட்ட எங்க சிவண்ண வாத்தியார் எட்டாம் வகுப்பு பையனுங்கெல்லாம் ராத்திரியில பள்ளிக்கூடத்துலயே படிக்கணும்னு உத்தரவுபோட்டு ராத்திரி அவரே வந்து எங்களுக்குப் பாடம் சொல்லிக் குடுத்துட்டு வீட்டுக்குத் திரும்பிப் போவார். தூக்கம் வந்தா வெளியே வந்து கொஞ்ச தூரம் ஓடணும்னு சொல்லி தூக்கமாரிய கெலிக்கக்கூடிய வழி உபாயங்கள சொல்லிக் குடுத்திருந்தார்.

நான், பிக்கல ரேவண்ணசித்த, நொண்டி, சதா, சிவண்ண, ராஜா, ஐடியப்பா, பாள்யத்து கருப்பு திம்மய்யா, அஸ்வத்தா. தோட்டத்து சென்ன வீரப்ப தேவர் மகன் மருளு சித்தப்பா எல்லாரும் ராத்திரி வீட்டுல சாப்புட்டுட்டு பள்ளிகூடத்துக்கு வந்துரு வோம். எரியிற ரெண்டு லாட்டீனுங்க வீசின வெளிச்சத்துல வட்டமா உக்காந்து பாடம் படிக்கத் தொடங்கினோம். சிவண்ண வாத்தியார் வந்து போன பிறகு எங்களுக்கு சுதந்திரம் கிடைச்சி நெறைய பேசுவோம். நெறைய ஆட்டம் பாட்டம் கொண்டாட்டந்தான். அந்த சமயத்துலதான் வந்தது பாட்டி பண்டிகை. யாரோ ஒரு பாட்டி நடு ராத்திரிக்கு மேல வீட்டுவாசலுக்கு வந்து வீட்டுல யிருக்கிறவங்கள்ல யாராவது ஒருத்தர் பேரச் சொல்லி கூப்புடுவான்னும் பேரு கூப்புட்டவங்க பாட்டி கூப்புட்டதுக்கு ‘உம்’ கொட்டினா மறு நாளைக்குள்ள செத்துப் போயிடுவாங்கன்னும் வதந்தி பரவியிருந்தது.

பாட்டி, வீட்டு முன்னால வந்து யாரையும் கூப்பிடாம திரும்பிப் போக சில உபாயங்கள கண்டுபிடிச்சிருந்தாங்க. கதவு மேல மூணு நாமத்து அடையாளம் வரஞ்சு வச்சா அந்த ஊட்டுக்கு திருப்பதி வெங்கடரமண தெய்வமே பாதுகாக்க நிக்கிறான்னும்; பாட்டி வராம தடுக்கிறான்னும், ஒருவேள வந்தாலும் யாரையும் கூப்புடாம பாத்துக்குவான்னும் ஒரு உபாயம் இருந்தது. ரெண்டாவது உபாயம் ‘நாளைக்குவா’ன்னு எழுதி வச்சா பாட்டி கதவுமேல எழுதியிருக்கிற சங்கதிய படிச்சிட்டு நாளைக்கு வந்துப் பாத்துக்க லாம்னு திரும்பிப் போயிடுவான்னும், நாளைக்கு வந்தாலும் ‘நாளைக்கு வா’ன்னு எழுதியிருக்கிற படிச்சிட்டு திரும்பிப் போவான்னும் நெனச்சி எல்லார் வீட்டு கதவுங்க மேலயும் ‘நாளைக்கு வா’ன்னு எழுதினது காட்சியளிக்கத் தொடங்கியது. பாட்டிய ஜெயிக்கும் இன்னொரு உபாயம் என்னன்னா அவ போல தொவரம்பருப்பு ‘ஒப்பட்டை’ செஞ்சி படையல் போட்டு, படையல ஒத்தை இலையக் கட்டி அதும் மேல வச்சி, நெய் வெளக்கு, தட்சணை, வாழப்பழத்தோட சேத்து ஊரோட சாமி மூலையிலயிருக்கிற வேப்பமரத் தடியில வச்சிட்டு வர்றது, அப்படி வச்சிட்டு வர்றவங்க பின்னால திரும்பிப் பாக்கக் கூடாது. யாரு கூப்புட்டாலும் பேசக்கூடாதுன்றதுதான் அந்த உபாயம்.

அந்த செய்தி பரவினதும் ராத்திரியில வேளை மீறி யாராவது சொந்தக்காருங்க அல்லது கஷ்டத்துல இருக்கிறவங்க வீட்டுக்கு வந்து கதவு முன்னால நின்னு, தொண்ட கிழியற வரைக்கும் கூப்புட்டுப் பாத்தாலும் கூட யாரும் எதுவும் பேசமாட்டாங்க. எழுந்துவந்து கதவத் தொறக்க மாட்டாங்க. இந்த சமயங்கள்ல திருட்டு நடவடிக்கைங்க சுலபமா நடந்துகிட்டிருந்ததுங்க. ருத்ரமுனின்ரவனோட பொண்டாட்டி அந்த சமயத்துல கெட்ட நடத்த உள்ளவள்னு பேர் எடுத்திருந்தா. ருத்ரமுனிய கோயிலுக்கு அனுப்பிட்டு (அவன் பொம்பள தெய்வங்களுக்கு பூசாரியா இருந்தான்). தனக்கு தேவையான இஷ்டகாரன், கள்ளப் புருசன ஊட்டுக்கு கூப்புட்டுனு வந்து படுக்க வச்சினு கூடிக் கலந்து சந்தோசமா இருப்பா. ருத்ரமுனிக்கு எதுவோ நோய் வந்திருந்ததனால அவன்கிட்டேயிருந்து சுகம் கிடைக்காம அவ கெட்ட நடத்தைக்கு எறங்கினான்னு ஜனங்க பேசிக்குவாங்க.

ஒருநாளு ருத்ரமுனி தன் பொண்டாட்டியோட துரோகத்த தன் சகோதரனுங்க கிட்ட பிடிச்சு குடுத்து சரியா நாலு வாங்கு வாங்கணும்னு கோயிலுக்குப்போய் படுத்துக் கிறேன்னு சொல்லி, நடுராத்திரியில திரும்பி வந்து தன் அண்ணன் கூட ஊட்டுக்கு முன்னால வந்து கதவதத் தட்டி பொண்டாட்டி பெயரச் சொல்லி கூப்புட்டு சோந்து போனான். இவன் கூப்பாட்டுக்கு பொண்டாட்டி இருக்கட்டும், மத்த வீட்டுக்காரங் களும் கூட வெளிய எட்டிப் பாக்காம முழுச்சினு யிருந்தும் பேசாமயிருந்தாங்களாம். கூப்புட்டு கூப்புட்டு சோந்துபோன ருத்ரமுனி திரும்பிப் போனானாம். அவன் பொண்டாட்டி தன் கள்ள புருசன் பின்கதவு வழியா வெளியே அனுப்பி அவன் மரியாதயயும் காப்பாத்தினாளாம்.

நொண்டி சதா எங்கள விட எத்தனையோ வருசம் பெரியவனாயிருந்தான். அவன் கால் எலும்புல அடிபட்டு, புண்ணு ரணமாகி நாலஞ்சு வருசம் பள்ளிக்கூடம் வராமயிருந்தவன் அப்புறமா எங்க வகுப்புத் தோழனானான். அவனுக்கு இந்த மாதிரி கெட்ட நடவடிக்கை கதைங்கள கேக்கவும் - சொல்லவும் ரொம்ப சந்தோசம். பிக்கல ரேவண சித்தனுக்கு பீடி புடிக்கிற பழக்கம் ஒட்டிகிட்டு இருந்தது. அவனுக்கு பேய் பிசாசுங்களப் பத்தி மாய - மோடி - மந்திரங்களப் பத்தி பயமேயில்ல. ஒரு எலுமிச்சம்பழம், ஒரு இரும்புக் கொண்டி கையிலயிருந்தா எந்த பேய் - பிசாசு - பூதங்களும் கிட்ட வராதுன்னு சொல்லுவான். ஒவ்வொரு நாளும் மூணு வீட்டுக்காரங்க பாட்டி பேர்ல ஒப்பட்டு பண்ணி படையல தென்னமரத்து கங்கம்மாவோட நெலத்து மூலையிலயிருந்த பெரிய வேப்பமரத்தடியில வச்சி திரும்பிப்பாக்காம வந்துடு வாங்க. யாரு ஊட்டுல பாட்டி பண்டிக செய் வாங்கன்றது எங்களுக்கு எப்படியோ தெரிஞ்சி போயிடும். ரேவணசித்த, சதா, ரெண்டுபேரும் ஒருநாள் துணிச்சல் வந்து ‘பாட்டிக்கு வச்ச ஒப்பட்டு படையல’ எடுத்துட்டு வந்து தின்னா என்னதான் ஆயிடும்னு பாத்துடலாமே’ன்ற சாகஸ நெனப்பு வந்து, நாங்க மத்தவங்கெல்லாம் வேணாம் - வேணாம்னாலும் கேக்காம எலுமிச்சம் பழம் கொண்டி - தொரட்டி - எடுத்துணு பாட்டி படையல் வச்சிருந்த வேப்பமரத்து, அடியில மரத்துக்குப் பின்னால மறஞ்சி உக்காந்தாங்க.

அன்னைக்கி ஊருகாவலு சிக்கண்ணன் மகன் மல்லய்யா, ஜவுளி முத்தண்ணா, ஷிகரய்யா மகன் சந்திரப்பா மூணு பேரும் பாட்டி படையல் நெறஞ்ச கூடைங்கள சுமந்து வேப்பமரத்தடிக்கு வந்து சோத்துல பண்ணின வெளக்கு மாதிரியிருந்த அகல்ல நெய் - வத்தி போட்டு, எரிய வச்சி படையல எடுத்துவச்சி, ‘பாட்டீ, எங்க ஊட்டுக்கு வராதேன்னு சொல்லி வேண்டிகிட்டு திரும்பிப் போனது பாலு போல காய்ஞ்சுகிட்டிருந்த நிலா வெளிச்சத்துலு தெரிஞ்சது. அவங்க அப்படி போறதுக்காகவே காத்துகிட்டிருந்த ஊரைச் சேந்த சில கெட்ட சொறிநாய்ங்க ஒப்பட்டு படையல் மேல் பாய்ஞ்சி வந்ததுங்களாம். அதப் பாத்த வொடனே மரத்துக்குப் பின்னால மறைஞ்சு உக்காந்திருந்த சதாவும் பிக்கல ரேவண்ண சித்தனும் நாய்ங்கள தொரத்திட்டு மூணு படை யலுங்களையும் அலக்கா தூக்கி மேல் துண்டுல வச்சிகிட்டு பள்ளிக்கூடத்துக்கு வந்தாங்க. நாங் கெல்லாம் அவங்களுக்காக வழியவே பாத்து காத்துகிட்டிருந்தோம். ஒவ்வொரு படையல்லயும் ஆறாறு ஒப்படைங்க இருந்ததுங்க. நான் பயந்து போய் ஒப்பட்டு தின்னத் தயங்கினேன். எல்லா பையன்களும் ஒப்பட்டுவ பங்கிட்டுத் தின்னாங்க. வச்சிருந்த தட்சணய ரேவண்ணசித்தனோட ஜோபியில போய் சேந்து அவனோட பீடி பிடிக்க காசில்லாத குறையைத் தீர்த்தது. ஒன்றிரண்டு நாட்களுக்குப் பிறகு எனக்கும் தைரியம் வந்து பாட்டி படையல தின்ன நானும் அவங்களோட சேந்துட்டேன்.

பாட்டி பண்டிக வந்து பையன்களான எங்க ளோட ஒப்பட்டு தின்னும் ஆசைய நிறைவேத்திச்சி. சில நாளானதுக்கப்புறம் ராஜனுக்கும் நொண்டி சதாவுக்கும் சண்டை வந்து, ஒத்தும குலஞ்சி சிவண்ண வாத்தியார் கிட்ட பாட்டி படையலத் தின்னத சொல்லி காட்டிக்குடுத்துட்டான். வாத்தி யாரு எங்கள அடிப்பாரேன்ற பயம் வந்திருச்சி. ஆனா அப்படி பண்ணாம அவரு எங்க தைரியத்த மத்த வாத்தியாருங்களுக்கும் சொல்லி ‘ஓஹோன்னு’ சிரிக்க ஆரம்பிச்சிட்டார். பாட்டி பண்டிக ஒப்பட்டு தின்ன காரணத்துனால ஏதாவது பீடைங்க, கெட்டதுங்க ஒட்டிகிட்டு வருமேன்ற நம்பிக் கையில எங்க பாட்டி சித்தவீரப்ப தாத்தாவோட கையால மந்தரிச்ச தாயத்து வாங்கி கழுத்துல கட்டிட்டாங்க.

பாட்டி பண்டிகயோட படையல தின்னு செரிச்சிகிட்ட பையனுங்கெல்லாம் இப்போ நல்ல நிலமையில இருக்காங்க. நொண்டி சதா எஞ்சினி யராகியிருக்கான். ராஜன் கால்நடை வளர்ப்பு - பாதுகாப்புத்துறையில் இருக்கிறான். கறுப்பு திம்மய்யா மைகோ கம்பெனியில இருக்கிறான். சிவண்ண அரசாங்க அச்சகத்துல இருக்கான். பாட்டி யாரையும் பேர் சொல்லி கூப்பிட்டு சாகடிக்கவேயில்ல.

துறவறத்திலிருந்து இல்லறத்துக்கு

கம்பாளுவிலிருந்து புறப்பட்டு கிழக்கு திசையி லிருந்து சிவகங்கெமலை மேல ஏற பழைய ஒத்தையடிப் பாதை ஒண்ணு இருக்கு. ஊருக்கு தலைகாணி போல இருக்கும் கரிமேட்டுமேல ஏறி மூணு கல் பாறைங்களோட பக்கத்து பாதையில் முன்னோக்கி நடந்தா ஆழமான கொளம் ஒண்ணு எதிர்படும். அதச்சுத்தி பாசிகட்டின பாதிப்பாறையோட தண்ணி ஒழுக்கு துண்டு நெலத்த தாண்டி கவனமா கால் வச்சி நடந்தா ரேவண்ணப்பன் கோயில் வெளிப் பிரகாரம் எதிர்படும். அனுபவமில்லாதவங்க தண்ணி பாய்ஞ்சி பாய்ஞ்சி ஓடின பச்சப்பாசிய தாண்டும்போது தப்பித்தவறி பாசிமேல கால் வச்சா சர்ர்ன்னு வழுக்கி ஆழமான அந்த பெரிய கொளத்துல விழுந்தேயாகணும்.

ரேவண்ணப்பன்கோயில் பக்கத்துல ஒரு பெரிய கொகை. யாரோ சாது ஒருத்தர் ரேவண்ணப்பன் கொகை - கல்லு பொதருங்கள்ல வந்திருக்கிறார்ன்ன செய்தி எங்க ஊருக்கு வந்து சேந்தது. அந்த சாது - சந்யாசி பகல்நேரத்துல கொகைக்குள்ளயிருந்து வெளியே வர்றதே இல்லேன்னும் ராத்திரி நேரத்துல வெளியே வர்றார்ன்னும் ஜனங்க பேசிகிட்டாங்க. சாது - சன்யாசிங்க அடிக்கடி சிவகங்கை மலைக்கு வந்து அங்கயிருக்கிற பழமயான கொகைங்கள்ல கொஞ்சகாலம் இருந்துட்டுப்போறது புதுசங்கதி யொண்ணுமில்ல. இந்தமாதிரி சாது சன்னியா சிங்கள, துறவிங்கள மொதல்முறையா பாக்கவந்த வங்க நெலமங்கலத்து அடிவெப்பன மகன் சித்தப்பா வாத்தியார். அரசாங்க வேலையிலிருந்த இவருக்கு நீலாம்பிகைன்ற மனைவியிருந்தாங்க. கொழந்தைங்க இல்லாத இவங்க, இந்த கணவன் - மனைவி, சாது சன்னியாசிங்களுக்கு சேவ பண்ற விருப்பத்த, ஆவலை மனசுக்குள்ள வச்சிகிட்டிருந்தாங்க.

சித்தப்ப வாத்தியார் தன்னோட நண்பர் களான கிடி - ரேவண்ண சித்தய்யா பூசாரி சங்கர லிங்கய்யாவோட சேந்து ரேவண்ணப்ப கோயிலுக்கு போனாங்க. கொகைக்குள்ள உக்காந்திருந்த சாது சந்யாசிய வெளியே கொண்டுவர ரெண்டு உபாயங்க, பூசாரி சங்கரலிங்கனுக்கும் கிடி ரேவண்ண சித்தய்யனுக்கும் தெரிஞ்சிருந்தது. முதலாவது ஒத்தகம்பி ஏகதாரி வாசிச்சினு பாடறது. அதுக்கும் வெளியே வரலேன்னா கஞ்சா எல புகைக்கிறது. இந்த ரெண்டுக்கும் அடிமையாகாத சாது - சன்னி யாசிங்கள என் அனுபவத்துல நான் பாத்ததில்ல.

கிழ ரேவண்ண சித்தய்யா குண்டாபக்தர் ரேவய்யனோட அண்ணன் கங்காதரனோட மகன் ‘கிடி’ன்றது பட்டப்பேரு. இவரு யார வேணு முன்னாலும் தயக்கமில்லாம கேலி பண்ணி கிட்டிருந்ததனால ‘கிடி’ (தீப்பொறி)ன்ற பத்திரிக்க யோட பேரு இவருக்கும் ஒட்டிகிச்சி. ரேவண்ண சித்தய்யா வாலிபனாயிருந்தப்போ என்னமோ சிவில் கேஸுக்கு பொய் சாட்சி சொல்லப் போனாராம். மகன் பொய்சாட்சி சொல்லி அநியாயத்துக்குத் தொணை போயிட்டானேன்னு மனம் நொந்து அவங்கப்பா கங்காதரய்யா ஈஸ்வரன்கோயில் பழைய கொளத்துல உழுந்து உயிர்விட்டார்ன்ற கத ஊரெல்லாம் பரவியிருந்தது. ரேவண்ண சித்தய்யா இருந்த ஒரு நல்ல வீட்ட கெழவி ரங்கண்ணன் மகன் புட்டரங்கய்யனுக்கு வித்துட்டு பொண்டாட்டி ஒரு புள்ளைய கூட்டினு குணிகல் கட்டட வேல நடக்கிற எடத்துக்குக் குடியேறினாராம்.

கிராம தேவதைங்கள மண்ணால செய்யறது, ஏற்கனவே இருக்கிற கிராமதேவதைங்க சிலைங் களுக்கு வண்ணம் பூசுறது, கோயில் சுவருங்க மேல பொம்மைகள் வரையறது, கோயிலுங்க மேல பசவ - சிவலிங்கம் முதலானதுங்கள சிமெண்டால செய்யிறது, அதுங்களுக்கு வண்ணம் பூசுறது, சட்டி பானைங்க செய்யிறது அவர் வேலையாக இருந்தது. நான் ஏழாம் வகுப்புல படிச்சு கிட்டிருக்கும் போது கிடி ரேவண்ணசித்தய்யா எங்கப்பாவைத் தேடி கிட்டு சாயங்காலம் எங்க வீட்டுக்கு வந்திருந்தார். அவருக்கு தங்கியிருக்க குடிசை கட்டிக்க ஒரு இடம் தேவையாயிருந்தது. எங்கப்பா, சேர்மனாயிருந்த பெரிய பாப்பய்யாவுக்குச் சொல்லி கிராம பஞ்சாயத்துக்குச் சொந்தமான பாறமோட்டுல எடம் கொடுக்கச் சொல்லணும்னு கேட்டார்.

எங்கப்பா என்ன சொன்னாரோ எனக்குத் தெரியாது. கிடி ராத்திரியோட ராத்திரியா பாற மோட்டு மேல குடிச போட்டுகிட்டு குடிபோனார்ன்ற செய்தி பரவி பாப்பய்யா அத ஒத்துக்காம மறுப்பு தெரிவிச்சார்ன்னு தெரிஞ்சது. கிடி ரேவண்ண சித்தய்யா நல்லா படிச்சவராயிருந்தார். ஊரெல்லாம் சுத்திவந்து உலக அனுபவங்களையும் ஆழமா கத்துக்கிட்டிருந்தார். ஹார்மோனியம் வாசிக்க கத்துகிட்டிருந்தார். ஏகதாரி ஒத்தகம்பி வாத்தியத்துல, தத்துவபாட்டுங்க பாடறது, பேச்சு பேச்சுக்கு பாரதத்து விதுரன் நீதி வரிகளச் சொல்றது. சர்வக்ஞனின் வசனங்கள சொல்றது, மஹாலிங்க ரங்கனோட செய்யுள்கள சொல்றது முதலானத வழக்கமாவச்சிகிட்டிருந்தார். மேலும் பழமொழி - விடுகதைங்க மூதுரைங்க எல்லாம் அவருக்கு நல்லாத்தெரியும். ‘நாயிக்கு நாம போட்டாலும் நாராயணனாகாது’, ‘மோட்டுவழி கோணமானலான வண்டி பேயாட்டம் போடும்’, ‘காலால் நடக்கும் வழி கடைசி வரைக்கும் சுகம்’, ‘ஊரு சண்டய விலக்கப்போயி பேரு கெட்டு திரும்பி வந்தேன்,’ ‘கட்டுச்சோறு கட்டிக்குடு வந்தவரைக்கும் வரட்டும்’ இப்படி எவ்வளவோ சொல்லுங்க அவர்கிட்ட யிருந்து அப்பப்ப வந்துகிட்டேயிருக்கும்.

கிடி ரேவண்ண சித்தய்யா ரொம்ப தைரிய சாலி. சிலசமயம் சண்டைக்காரன் மாதிரி நடந்துக்குவார். ரேவண்ணப்பன் கோயில் முன்னாலிருக்கிற மோட்டு பாற மேல உக்காந்து ஏகதாரி (துந்தனா) படிச்சினு சப்பளாகட்ட போட்டுகிட்டு மூணுபேரும் பாடத் தொடங்கினாங்களாம். ரெண்டு மூணு தத்துவ பாடலுங்க காத்து அலைமேல தேலித் தேலி மெதந்து வரவும் இளவயசான தாடிக்காரன் ஒருத்தன் வெறும் கோவணத்த மட்டும் கட்டியபடி வெளியே வந்து மெல்லச் சிரிச்சானாம்.

“என்னா சாமிங்களா.... ரொம்ப நல்லா பாட்டு படிக்கிறீங்களே”ன்னு பேச்சு குடுத்துகிட்டே வந்து இவங்களோட சேந்துகிட்டானாம். வாலிப சந்நியாசி சாப்பாட்டுக்கு என்ன ஏற்பாடு பண்ணிகிட்டிருந் தான்னு விசாரிக்கவும். காட்டுலயிருக்கிறஎல தழைங்க வேரு கெழங்கு இப்போதைக்கு போது மாயிருக்குன்னு சொன்னதுதான் சாக்கு. பூசாரி சங்கரலிங்கன் “கேவுரு மாவு அரிசி - எல்லாம் அனுப்பலாமா?”-ன்னு கேட்டதுக்கு, ஆகட்டும் சாமிங்களேன்னானாம் வாலிப சன்னியாசி. அதுக்கு பின்னால வந்த தினங்கள்ல சித்தப்ப வாத்தியார், கிடி ரேவண்ணசித்தய்யா, ஆசாரமான ருத்ரய்யா வாலிப சன்னியாசியோடு நெறைய ஆத்மா சம்பந்தப் பட்ட விஷயங்கள பரிமாறிக்கிட்டாங்கன்னு சில தினங்களான பின்னால எனக்குத் தெரிஞ்சுது. ஒரு ஞாயித்துக்கிழம என் ஈடுபையன்களோடு மாடுங்க மேய்க்கிறதுக்குன்னு மலைக்குப் போயிருந்தேன்.

ரேவண்ணப்பன் கோயிலுக்கு வெளியே மாடுங்கள மேயவுட்டுட்டு அங்கேயே பையனுங்க கூட சேந்து உக்காந்திருந்தேன். சாது - சன்னியாசி கோவணம் மட்டும் கட்டிகிட்டவனா வெளிய வந்து எங்களயே பாத்துகிட்டிருந்தான். என்னையே உத்துபாத்து ‘சாமியே வா இங்க’ன்னு கூப்பிட்டான். எனக்கு என்னமோ மந்திரம் போட்டமாதிரி ஆயிடிச்சி. பாலநாகம்மா சினிமாவுல மாயமந்திரவாதி பால நாகம்மாவ நாயா மாத்தி கூட்டினு போனத சிவகங்கெ திருநாளப்போ சினிமாவுல பாத்திருந்தேன். முதுகு மேல கோணிபையி, கையில அறுவா, கத்தி புடிச்சினு சன்னியாசி முன்னால நின்னேன். சாது கல்கண்டு துண்டை என் பக்கமா நீட்டி வாங்கிக்கோன்னான். கை நீட்டி வாங்கினு அப்படியே புடிச்சினு நின்னேன். ‘உம் தின்னு’ன்னான் அவன். நானு வாயில போட்டுகிட்டு அது கல்லு கல்லா பல்லுல தாக்குமோன்னு பயப்பட்டேன். அதப்பாத்து சன்யாசி தின்னுன்னு சொன்னான். நான் பதில் பேசாம வாயில போட்டு அடக்கிகிட்டேன். அது கெட்டியான கல்கண்டாயிருந்தது.

“பாருயப்பா உம் மொகத்துல நல்ல லட்சணம் தெரியுது. வருங்காலத்துல ஒருநாள் உனக்கு பெரும் - கீர்த்தி வந்து சேரும். நல்லா படிக்கணும், இந்தா புடி சிதானந்த ஞானியோட ஞான சிந்து, இத உங்க ஊரு சித்தப்ப சுவாமி வாத்தியாருக்கு குடுத்துடு. அவர நான் வரச் சொன்னேன்னு சொல்லிடு’ ன்னாரு. நான் தலையாட்டிட்டு மலயிலேருந்து எறங்கத் தொடங்கினேன். மாடுங்கள மேய்க்க வந்த நெனப்பே எனக்கு மறந்து போயிருந்தது. தடதடன்னு மலயெறங்கி எங்க ஊட்டுக்கு எதிர்ல யிருந்த எங்க வீட்டுலயே குடியிருந்த சித்தப்ப வாத்தியார் ஊட்டுக்குப் போய் ஞானசிந்து புத்தகத்த குடுத்துட்டு ‘சாமியார் வரச்சொன்னாங்க. உடனே வரணும்’ன்னேன். சித்தப்ப வாத்தியார் அவசர அவசரமா எங்கூட புறப்பட்டார்.

பருத்த உடம்பு கொண்டவராயிருந்ததனால எனக்கு சரிசமானமா மலயேற பெருமூச்சு வாங்கினார். மலயேறி நடக்கும்போது என்னமோ தத்துவ பாட்டுங்கள மெதுவா மொணகினேயிருந்தார். எப்படியோ ரேவண்ணப்பன் கோயிலுக்கு வந்து சேந்தோம். எங்களுக்காக காத்துகிட்டிருந்த சன்னியாசி ‘வந்தீங்களா சாமீஜி, வாங்க வாங்க’ன்னார். வேர்வய தொடச்சினே வாத்தியார், நீட்டிகிட்டிருந்த பாற நெழல்ல உக்காந்து சோர்வ தணிச்சிக்கத் தொடங் கினார். சாயங்காலமாகிகிட்டிருந்தது. பொதருங் களுக்குள்ள மேய்ஞ்சுகிட்டிருந்த மாட்டு மந்தைய என் ஈடு பையன்களும் பெரியவங்களும் ஊரு பக்கமா திருப்பிவுட்டுகிட்டிருந்தாங்க. சித்தப்ப வாத்தியார் என் பக்கத்துல வந்து ராத்திரிக்கு இங்கேயே இருக்கிறாராம்னு என்மூட்டுல சொல்லிடு’ன்னார். நான் தலையாட்டினேன்.

அதுக்கப்புறம் கொஞ்சநாள்ல கரிரேவண்ணன்ற குடியானவன் சன்யாசிங்க சேவைக்கு வந்து சேந்தான். காலையில தன் வீட்டுல பால் கறந்து குடுக்கிறது. அவங்க சொல்ற சின்ன சின்ன வேலைங்கள செய்து குடுக்கறது, முதலானதுங்க ரேவண்ணனுக்கு ரொம்ப விருப்பமான வேலைங்க. சித்தப்ப வாத்தியாருக்கும் சன்யாசிக்கும் நெருக்கமான நம்பிக்க வளந்தது. புருசன் - பொண்டாட்டி ரெண்டு பேரும் அடிக்கடி ரேவண்ணயன் கோயிலுக்கு போய் வந்தாங்க. வாத்தியார் பொண்டாட்டி தான் மலடின்னு கவலயடஞ்சி, சாது - சன்னியாசிங்க, விரதம் - பூசைங்கன்னா ஆர்வங்காட்டி அலைவாங்க. சித்தப்ப வாத்தியாருக்கு ஆச்சாரமுள்ள ருத்ரய்யன்னும் நெருங்கிய நண்பரிருந்தார். இவரு பொண்டாட்டி புள்ளைங்கள தொறந்துட்டு சன்யாசியாகி ஏகதாரி வாத்யம் மீட்டினு பாடினே நாடெல்லாம் சுத்தி யலைஞ்சிட்டிருந்தார். நல்லா படிச்சிருந்த இவருக்கு ஆத்மாவப் பத்தின விஷயங்க, வேதாந்த விஷயங்க எல்லாம் அத்துபடியா தெரிஞ்சிருந்தது.

சிவராம சாஸ்திரியோட தத்துவங்கள இவர் ரொம்ப நல்லா பாடுவார். இவர் பிச்சையெடுத்துப் பிழைக்கும் தொழிலைச் செய்யல. யாராவது தெரிஞ்சவங்க சாப்பிடக் கூப்பிட்டா அவங்க வீட்டுல குளியல் - சிவபூசைங்கள செய்துமுடிச்சி பிரசாதம் வாங்கிக்கு வார். தத்துவார்த்த பாட்டுங்கள பாடிகிட்டே சில நேரங்கள்ள நடனமாடவும் செய்வார். ருத்ரய்யா. சித்தப்ப வாத்தியார் கிடி, ரேவண்ண சித்தய்யா, பூசாரி சங்கரலிங்கய்யா இவங்கெல்லாம் ஒரு எடத்துல சேந்தாங்கன்னா வேதாந்தக் கூட்டமே நடக்கிற மாதிரியிருக்கும். ருத்ரய்யா குடும்பம் கம்பாளுவச் சேந்ததுதான். சின்ன வயசுல ஊர விட்டுப் போயிட்டிருந்தாராம். அவரோட அக்காவ ஆச்சாரசீலர் கங்கண்ணனுக்கு கொடுத்து கல்யாண மாகியிருந்தது. அந்தம்மா குள்ளமான பொம்பள. ருத்ரய்யா ஊருக்கு வந்தா சித்தப்ப வாத்தியார் வீட்டுலதான் தங்கியிருப்பாராம். எப்பப்பாத்தாலும் அவரோட ஜோல்னா பையில பத்து பதினஞ்சி சர்ப்ப பூஷண சுவாமிகளோட ‘கைவல்ய கல்ப வல்லரி’ முதலான புத்தகங்கள்லயிருக்கிற பாட்டுங்கள கேக்கிறதுக்கு இனிமையா பாடுவார். ‘உடலென்று எண்ணும் அழுக்குப்பையை தூய்மையாக்குங்கள்’ என்னும் பாடல் ‘லிங்க பூசையைப் பண்ணுங்கோ’ என்னும் பாட்டு, ‘பாக்கியவான் எனும் ஜபத்தை கை விடு’ முதலானவற்றை ருத்ரய்யரோட வாயால் சொல்லிக் கேக்கணும்ன்ற பெயர் பரவியிருந்தது. நிஜகுணரின் ‘குயிலே குயிலே’, ‘ஜோதி ஒளிர் கின்றது’ன்ற ரெண்டு பாட்டுக்கள அவர் காதுக் கினிமயா பக்திநெறஞ்சி பாடுவார்.

ருத்ரய்யா, சித்தப்ப வாத்தியார், அவர் பொண் டாட்டி நீலாம்பிகை, பூசாரி சங்கரலிங்கய்யா, அவரோட பொண்டாட்டி சிவம்மா, ரேவண்ணா, அவர் பொண்டாட்டி பார்வதம்மா, கிடி ரேவண்ண சித்தய்யா எல்லோரும் ரேவண்ணப்பன் கோயில்ல பூசைன்னு போனாங்க. பூசைன்னா ஒப்பட்டு, நெய்யில ஆராதன நடக்கும். நீலாம்பிகை என்னயும் வான்னு கூப்பிட்டாங்க. கொழந்தையில்லாத அவங்க என்ன சொந்த மகனப் போலவே பாத்துகிட்டாங்க. பொம்பளைங்க ரேவண்ணப்பன் கோயிலுக்குப் பக்கத்துலேயிருந்த எடத்துல கூடி சமையல் பண்ணும்போது பெரியவங்க சாதுவோடு பேசி கிட்டிருப்பாங்க. நாலஞ்சி ஏகதாரி வாத்தியங் களோடு சுருதி, சப்பளா தாள கட்டை சலங்கை களோட நாதம், பூசாரி சங்கரலிங்கனோட உடுக்க சத்தம் அமைதியான கொகையில நாத சாம்ராஜ்யத்த கட்டிகிட்டிருந்தது. கறுப்பு ரேவண்ணன் கொளத்து லேருந்து தண்ணி எடுத்துட்டு வர்றது, வெறகு வெட்டித்தர்றது மாதிரியான வேலைங்கள செய்யும் போது, நான் நீலாம்பிகை சொல்ற சின்ன சின்ன வேலைங்கள செய்துகிட்டிருப்பேன்.

ஒப்பட்டோட வாசன பாட்டோட இனிமய இல்லாம அமுக்கிட்ட மாதிரியானது. ஒப்பட்டு கலவ ஒலமேல கொதிக்கத் தொடங்கிச்சி. சோறு ஆக்கி கூடையில வடிச்சிருந்தாங்க. ரேவண்ணப்பனுக்கு பூசை போட்டும் முடிஞ்சது. படையல் போட்டாங்க. நைவேத்தியமும் ஆனது. நீலாம்பிகை என் கையில சுடச்சுட ரெண்டு ஒப்பட்டுங்கள எலையில வச்சி குடுத்ததும் நான் ஒரு கல்லு பாறையின் மேலயேறி கிழக்குப்பக்கம் பாத்து உக்காந்து அடிவானம் வரைக்கும் தெரியும் நூத்துக்கணக்கான ஏரிங்கள, பசுமையான மரங்கள பச்சை போத்தினமாதிரி தெரியும் வெளச்சல் செல்வத்தையும் பாத்தபடி சுடச்சுடயிருந்த ஒப்பட்டுகள தின்னத்தொடங்கினேன். குளுமயா வீசுற குளுந்த காத்து வெயில் சூட்ட தடுத்துகிட்ட மாதிரியிருந்தது.

எங்களவிட அதிகமான ருசியை அனுபவிச்ச சாது - சன்யாசி ரொம்ப நாளைக்கு அப்புறம் ருசியான சாப்பாட்ட சாப்பிட்டார். என்பக்கம் கையக் காட்டி “இந்த சாமியப் போலவே எனக்கும் ஒரு மகன் இருக்கிறான். இன்னைக்கி சாப்பிட்ட பிரசாதம் உங்க எல்லாரோட நெருக்கமான தொடர் பினால எனக்கு என் பொண்டாட்டி - புள்ளைங்க நெனப்பு வந்து வாட்டத் தொடங்கிடிச்சி”ன்னு சன்யாசி, தன்னோட கடந்த காலத்து சங்கதிங்கள சொல்லத் தொடங்கினார்.

சன்யாசியோட பேரு சிவசாமியாம்; சக்க லேஸ்புரத்துப் பக்கமிருக்கிற காப்பி தோட்டத்துல மேஸ்திரியா வேல பாத்துகிட்டிருந்தாராம். காப்பி தோட்டத்து முதலாளியோட மகன் சிவசாமி யோட பொஞ்சாதியோடு ரொம்ப நெருக்கமா பழகிக்கிட்டிருந்தானாம். மொதலாளி மகனோட இந்த நடவடிக்கைய பொறுத்துக்க முடியாம சிவசாமி மனைவிய அடிக்க ஒதைக்கத் தொடங்கி னாராம். மகனோட நடவடிக்கையைப் பத்தி முதலாளிகிட்ட எடுத்துச் சொல்லணும்ன்னு முனையும் போதெல்லாம் மனைவி குறுக்கால வந்து வயித்துப் பாட்டுக்காக பொறுத்துகிட்டு தான் போகணும்னு தடுப்பாளாம். சிவசாமியோட மனைவி ஹாசனத்து ஐஸ்கூல்ல கொஞ்சம் படிச்ச வளாம். தன் அக்கா மகள கல்யாணம் பண்ணி கிட்ட புதுசுல சிவசாமி சம்சார சுகம்னா உலகத்துல வேறயெங்கெயும் கெடைக்காத சுகம்ன்னு நெனச்சி கிட்டிருந்தாராம். ஹாசன்லேருந்து மல்லிகப் பூக்கள வாங்கி வந்து படுக்கை நெறய பரப்பி அதும் மேல பொண்டாட்டிய படுக்க வைப்பாராம். படுக்க யறையில வெலவுயர்ந்த ஊதுபத்திங்கள கொளுத்தி வைப்பாராம். ஹாசன் நகரத்து ஆடம்பரங்களப் பாத்திருந்த அவர் பொண்டாட்டி மொதலாளி வீட்டு வயசுப் பொண்ணு மாதிரி அலங்காரம் பண்ணிக்குவாளாம். தங்க நகைகள போட்டுக்கு வாளாம். வாரத்துக்கு ஒருமுறை சக்லேச புரத்துக்கோ ஹாசனுக்கோ மனைவிய கூட்டிட்டுப் போய் சினிமா பாத்துட்டு ஓட்டல்ல கணவன் - மனைவி ரெண்டு பேரும் சாப்பிட்டுட்டு வருவாங்களாம்.

புருசனுக்கிருக்கிற சகஜமான அசூயயும் கோபங்களும் சிவசாமிகிட்டயும் ஏற்பட்டனவாம். முதலாளி மகனோடுகூட நெருக்கமா தவறான முறயில தொடர்பு வச்சிக்கக்கூடாதுன்னு மனைவிக்கு மறைமுகமா தெரியப்படுத்தத் தொடங்கினாராம். பல சாக்குப்போக்குகளைத் தேடியெடுத்துச் சொல்லி சிவசாமிய தொலைவான ஊருங்களுக்கு அனுப்பி வைக்கவும் அவன் சொன்ன வேலய முடிச்சிகிட்டு பொழுது சாயறதுக்கு முன்னாடியே திரும்பி வந்துடுவாராம். மனைவி மேல ஏற்படவேண்டிய அன்பு, காதலுக்கு மாறா மனைவி மத்த ஆணுங்க பக்கம் நெருங்கிப்போகாம தடுக்கிறதே பெரிய வேலையாயிடிச்சாம். மனைவி இவர் சொல்ற பேச்ச கேக்காம, மொதலாளி மகன் கொண்டு வந்து குடுக்கிற பூவ முடிச்சிக்கிறது, தங்க மோதிரம் போட்டுக்கிறது, சேலய கட்டிக்கிறது அந்தவேல இந்தவேலன்னு சாக்குபோக்கு சொல்லி, சந்தர்ப்பத்த உருவாக்கினு மொதலாளி ஊட்டுக்கு போறத அதிகரிச்சுகிட்டே போனாளாம். கையில வெட்டுக் கத்திய புடிச்சினு காப்பி தோட்டத்துக்குப் போறப் போ கொஞ்சங்கூட தயங்காம காப்பிச் செடி

களோட தலைய வெட்ட ஆரம்பிச்சாராம். பொண்டாட்டியவோ - மொதலாளி மகனையோ துண்டுதுண்டா வெட்டிப்போடணும்னு மனசுல தோணுமாம். இந்த ஊசலாட்டத்துக்கு மங்களம் பாடற மாதிரி சன்யாசி ஒருத்தரோட அறிமுகம் ஏற்பட்டிச்சாம். ஒரு சாது தர்மஸ்தலத்துக்குப் போயிட்டுவர கால்நடையாவே புறப்பட்டாராம். பெரிய சாலையில போய்கிட்டிருக்கும்போது எங்கேயோ போயிருந்த சிவசாமி அவர தற்செயலா நடந்த மாதிரி அடிக்கடி பார்த்துப் பழகி அறிமுகப் படுத்திக்கிட்டு வலுக்கட்டாயமா வற்புறுத்தி ஊட்டுக்கு அழச்சிகிட்டு வந்தாராம். சிவசாமி யோட மனைவி சன்னியாசிய ரொம்ப கேவலப் படுத்தி அலட்சியம் பண்ணினாளாம். ‘பிச்சைக்கார தரித்திரங்களுக்கெல்லாம் ஆக்கிப்போட்டு, அவனுங்க சாப்புட்ட தட்ட கழுவி வைக்கிறதுக்கு என்னால முடியாது’ன்னு கூச்சல் போட்டாளாம்.

சன்யாசி ரொம்ப மரியாதயும் மதிப்பும் வச்சி தானே அவரோட உணவு உபசாரங்கள செய்து கிட்டிருக்கவும், சன்யாசி ‘தர்மஸ்தலத்துக்குப் போயிட்டு வரலாம் வா’ன்னு கூப்பிட்டாராம். மனைவி, கணவன் அந்த பிச்சைக்கார சன்யாசி யோடு அனுப்பிவைக்க சம்மதிக்காம தடுத்து சன்யாசி மட்டும் போகட்டும்ன்னு சொன்னாளாம். சிவசாமி சன்யாசிய நெடுஞ்சால வரைக்கும் கொண்டு போய் விட்டுட்டு வர்றேன்னு நம்பவச்சி சொல்லி வீட்ட விட்டு புறப்பட்டாரா.ம். சிலமணிநேரத்துலயே திரும்பி வரவேண்டிய புருசன் சாயங்காலமிருக் கட்டும். நாலு வருசம் வரைக்கும் திரும்பிவராம இமயமலைக்குப் பயணம் போயிட்டிருந்தாராம். நாலுவருசத்து சாது -சன்யாசி துறவிகளோடு பழக்கத்துல தானும் சாதுவேஷம் போடவேண்டிய தாயிடிச்சாம். நாலு வருசத்துக்கப்புறம் திரும்பி வந்த சிவசாமிக்கு நெறய விஷயங்க மாறிப் போயிருகிறது தெரியவந்தது.

தான் குடியிருந்த வீட்டுல வேறவொரு மேஸ்திரி குடியிருந்து குடும்பம் நடத்திட்டிருந்தான். சன்யாசி உருவத்திலிருந்த சிவசாமி தன் மனைவியபத்தி விசாரிக்கப்போக, அவ சக்கலேஸ்புரத்து பள்ளிக்கூடம் ஒண்ணுல ஏவலாளாக வேலைக்கு சேந்திருக்கிறான்னும் சக்கலேஸ்புரத்துலயே குடியிருக்கிறான்னும் செய்தி தெரிய வந்ததாம். தன் மனைவிக்கும் முதலாளி மகனுக்கும் இடையில வளந்த தகாத தொடர் பினாலேயே அவ சக்கலேஸ்புரத்துல வசிக்க வேண்டியதாகியிருக்குன்னு யூகிச்சி, அவளுக்கு தன் இறுதி முடிவ சொல்லிட்டு சன்யாசியாகவே இருந்துடறதுன்னு முடிவு செஞ்சி சக்கலேஸ் புரத்துக்கு போனாராம். மனைவி குடியிருக்கிற வீட்டக் கண்டுபுடிச்சி வீட்டு முன்னால போய் நின்னப்போ அவ புருசன அடையாளம் கண்டுக்க முடியாம எட்டணா பிச்சை போட வெளியே வந்து நின்னாளாம். “ஒரு ரூபாயில இருக்கிற பாதிய மட்டும் எனக்குக் குடுத்துட்டா இன்னொரு அரைப்பகுதி ரூபாய் என்னாச்சி?” ன்னு புதிராக பேசினதும் இவன் தன் புருசன்னு கையப் புடிச்சி வீட்டுக்குள்ளே அழைச்சாளாம்.

சாது, மனைவியோட குணம், போக்கு, ஒழுக்கங்களப் பத்தி சந்தேகத்தோடயே வீட்டுக் குள்ள போக, அங்க மூணு வயசுள்ள அழகான கொழந்த ஒண்ணு வெளையாடிகிட்டிருந்ததாம். இந்த கொழந்த உன்னோடதுதானா?ன்னு சிவசாமி சட்டுன்னு கேட்டுட்டாராம்.

‘என் ஒருத்திமட்டுமில்ல. அது உங்களதும் கூட. பாரு கொழந்தே உங்கப்பா வந்துருக்கார். நாலு வருசமா வராத நெனப்பு இப்ப வந்திருக் கிறதாத் தெரியுதுன்னு அழத் தொடங்கினாளாம். கொழந்தையோட அழகையும் முகலட்சணத் தையும் துருதுருன்னு பாத்துகிட்டிருக்கும்போது அந்த கொழந்தையிடம் மொதலாளி மகனோட உருவம் வெடிச்சிக் கிளம்பின மாதிரியிருந்ததாம். ஒரு நிமிஷமும் அந்த வீட்டிலேயிருக்க மனம் ஒப்பாம முடிவெட்டினு வர்றேன்னு பொய் சொல்லிட்டு வீட்டுலேருந்து வெளியேறினவர் அப்புறம் திரும்பி வரவேயில்லயாம். அதுக்கப்புறம் ரெண்டு வருசம் கடந்து போயிடிச்சாம். பொண்டாட்டி புள்ளைங்கள நெனச்சி சிவசாமி தன் கதைய சொல்லிக்கிட்டே தன் கண்ணீரர் தொடச்சிகிட்டார்.

சிவசாமி தங்கிட்ட பல வகையான வேதாந்தத் தொடர்பான பழைய புத்தகங்கள் வச்சுகிட்டு இருந்தார். அதுங்கள்ள ஒண்ணு ‘ஞான சிந்தி’, அதுக்கு மான் தோல்னால உறை ஒண்ணு செய்து போட்டிருந்தார். அதை ஒருமுறை படிக்கும்படி சித்தப்ப வாத்தியாருக்கு குடுத்தார். வாத்தியார் தன்னோட தோள்பையில வச்சிகிட்டார். சிலநாள் படிச்சார். ‘ஞான சிந்தி’ புத்தகத்துல சிவசாமி தன்னோட இருப்பிடத்து முகவரிய எழுதி அப்புறம் மறந்து போயிட்டிருந்தாராம். சித்தப்ப வாத்தி யாருக்கு ஆவல் ஏற்பட்டு அந்த முகவரிக்கு ஒரு கடிதம் எழுதி சிவசாமி வாழ்ந்துகிட்டிருக்கும் வகையையும் தன்னோட பழக்கம் ஏற்படுத்திக் கிட்ட சங்கதியும் எழுதி தபால்ல சேத்துட்டாராம். சித்தப்ப வாத்தியார் அப்போ சிவகங்கையில பள்ளிக் கூட வாத்தியாராகவும் கூடவே போஸ்ட்மாஸ்டா ராகவும் வேல பார்த்து வந்தார்.

சிலநாள் ஆன பிறகு பணக்கார அம்மா ஒருத்தரு தன்னோட ஆறு வயசான மகனோடும் ரெண்டு ஆம்பளைங்களோடும் கார்ல வந்து சித்தப்ப வாத்தியார் வீட்ட கண்டுபிடிச்சி அவர் எழுதின கடிதத்த காட்டி தான் சிவசாமிகளின் மனைவின்னு அறிமுகப்படுத்திக்கிட்டாங்களாம். வீட்டுக்கு வந்த அந்த பொம்பளைக்கு வாத்தியா ரோட மனைவி தடபுடலா உபசாரம் பண்ணி வரவேத்து விருந்து வச்சி நடுப்பகலுக்கு மேல ரேவண்ணப்பன் குகைக்கு போகலாம்ன்னும் நீங்க வந்த சங்கதி சிவசாமிக்கு தெரியக்கூடாதுன்னும், தெரிஞ்சா அவர் இங்கிருந்து போனாலும் போயிடு வார்ன்னும் ஆலோசனை பண்ணி, மொதல்ல கரிரேவண்ணாவயும் பூசாரி சங்கலிங்கய்யாவும் அனுப்பி சிவசாமிய காவல் காக்கும்படி ஏற்பாடு பண்ணினாங்க.

சிவசாமியின் மனைவி வேறு வகையான ஒரு கதைய சொன்னாங்களாம். அந்தக் கதையின்படி சிவசாமி காப்பி தோட்டத்து முதலாளியோட மூத்த மகன். வந்திருந்த அந்த ரெண்டு ஆண் பிள்ளைகளும் அவரோட தம்பிமாருங்க. அந்த மகன்ல குழந்தை சிவசாமியவே பாத்திருக்கலாம். எல்லா வகையிலும் அப்பனோட அசல் அச்சு அவதாரம். கல்யாணமான வருசத்துலேருந்தே கெட்ட ஆளுங்களோடு சேந்து மைசூரு, பெங்களூரு, குதிரை பந்தயங்களுக்குப் போய் நெறைய பணத்த இழந்துட்டு கடன் நெறய வாங்கிட்டாராம். காப்பி தோட்டத்த வித்தாலும் வாங்கின கடன்தீக்க முடியாதுன்னு செய்தி பரவி கடன் குடுத்தவங்க சிவசாமிய பணத்தத் திரும்பக் கேட்டு தொல்லப் படுத்தினாங்களாம். ரெண்டு மூணுமுற தற்கொலைக்கு முயற்சி பண்ணி மனைவியோட கண்காணிப்பினால அதுவும் முடியாம போயிடிச்சாம். அண்ணனோட போக்கினால வீடு பாழாப் போறதப் பாத்த தம்பிங்க சண்ட போடத்ததொடங்கினாங்களாம்.

மனசு ஒடஞ்ச சிவசாமி சன்யாசமே சுகன்னு ஊரவிட்டுப் போயிட்டாராம். கொஞ்ச நாளைக்கப் புறம் தர்மஸ்தலத்து நேத்ராவதி ஆத்தங்கரையில் காச்ஜ்மீர் சால்வ, பின்லே வேட்டி, செருப்பு, கைப்பை எல்லாம் கெடைச்சதாம். உப்பின கண்டி யிலோ வேற எங்கயோ போலீஸ் ஸ்டேசன்ல அதுங்கள வச்சிருந்தாங்களாம். செய்தி தெரிஞ்சி மனைவியும் தம்பிங்களும் அடையாளம் காட்டி அதுங்க சிவசாமிதான்னு ஒப்புதல் எழுதி குடுத்துட்டு சிவசாமி செத்துட்டார்ன்னு நெனச்சி கருமாதி காரியங்களையெல்லாம் பண்ணினாங்களாம்.

தம்பிங்க கடன்கொடுத்தவங்கள சமாதானப் படுத்தி படிக்கிறத நிறுத்திட்டு காப்பி தோட்டத்த கவனிச்சி நல்ல வெளச்சல் வந்து வேர்வ சிந்தி உழைச்ச பணத்தினால கடனயெல்லாம் அடைச்சி இப்போ நிம்மதியாயிருக்காங்களாம். சித்தப்ப வாத்தியாரோட கடிதத்தைப் பாத்து ஆச்சரியப் பட்டு சிவகங்கெக்குப் பக்கத்திலிருக்கிற கம்பாளுவுக்கு வந்திருந்தாங்க. இவரே சிவசாமியாகயிருக்கட்டும்ன்ற விருப்பம் எல்லார்கிட்டேயும் நிறைஞ்சிருந்தது.

சாது - சன்யாசிகளோட கூட்டத்துல ஒருத்தர் புத்தகம் இன்னொருத்தர் கிட்ட வந்து சேர்வது சாதாரண சங்கதி. ஒருவேள அந்த சாது சிவசாமியா யில்லாமப் போயிட்டான்ற சந்தேகம். ஆனா சாது சொன்ன கதைக்கும் சிவசாமி சொன்ன கதைக்கும் சில அம்சங்க பொருந்திவரக்கூடியதாயிருந்தது. சிவசாமியத் தவிர வேற யாரும் அவர்கூட போகல. நீலாம்பிகை அம்மா சிவசாமியோட மனைவியின் வெறும் நெத்தியில குங்குமம் வச்சி பூ சூட்டினாங் களாம். விதவ மாதிரி வந்த அந்த அம்மா கட்டுக் கழுத்தியாகி மேலும் களையேறினவங்களா தெரிஞ் சாங்களாம். கறுப்பு ரேவண்ணனும் சங்கர லிங்கய்யனும் சிவசாமி சன்யாசிய கண்காணிச்சினு உக்காந்திருக்க, சித்தப்ப வாத்தியார் சிவசாமியின் குடும்பத்தார அழைச்சிகிட்டு மனைவி நீலாம்பிகை யோடு ரேவண்ணப்பன் கொகைய நோக்கி மலயேறி னாங்களாம். பெண்ஜாதியையும் தமிங்களயும் தொலைவிலிருந்தே பாத்து அவமானப்பட்டவராக கொகையோட இருட்டு மூலையில மறைச்சுவச் சிருந்த விஷத்த எடுத்து குடிக்கத்தொடங்கினா ருன்னும் அத பூசாரி சங்கலிங்கய்யா பாத்துட்டு ஓடிப்போய் தட்டிவிட்டு அவர காப்பாத்தினா ருன்னும் நாடகீயமான சங்கதிய சொல்லத்தொடங்கி னாராம்.

சித்தப்ப வாத்தியார் சிவசாமிக்கு புத்திசொல்லி, அவசரத்துக்கு ஏற்படுத்திக்கிற வைராக்கியத்தினால பிரயோஜனம் இல்லன்னும், மனைவி, மக்கள நல்லபடியா பாத்துக்கிறதுமே மகா யோகம்ன்னும் சிவசரணர்கள்ல பலபேர் சன்யாசிகளாகாமலேயே உலக மக்கள் நல்லதுக்கு நிறைய செய்திருக்காங் கன்னும் சொல்லி, சன்யாசி வேஷத்த ஏத்துகிட்ட பின்னால பொய் சொன்னா வேதாந்தமே பொய்யா யிடும்ன்னு வாதிட்டு சிவசாமிய சன்யாசத்துலேருந்து மறுபடியும் சம்சார வாழ்க்கைக்கு திரும்பி வரும் படி செய்தாராம். இதெல்லாம் நடந்த சமயத்துல நான் சித்தகங்கெயில் படிச்சிகிட்டிருந்தேன்.

கன்னட மூலம்: சித்தகங்கய்ய கம்பாளு

தமிழில் : தி.சு.சதாசிவம்

Pin It