கீற்றில் தேட...

 

தமிழ்நாட்டில் பதினெட்டு, பத்தொன்பதாம் நூற்றாண்டுகளில் சீர்திருத்தக் கிறித்தவம் விரை வாகப் பரவியது. இவ்வாறு பரவிய கிறித்தவம் தமிழ் மண் சார்ந்த கிறித்தவ இலக்கியப் படைப்பாளிகள் சிலரை உருவாக்கியது. இவ்வாறு உருவாகி, சமய எல்லையைத் தாண்டி அறிமுகமாகியுள்ள ஒரு கவிஞர் வேதநாயக சாஸ்திரியார். இவரது ‘பெத்லகேம் குறவஞ்சி’ சீர்திருத்தக் கிறித்தவத்திற்குக் கிடைத்த கொடை எனலாம்.

பிறப்பும் வாழ்வும்:

கிறித்துவத்தின் தொட்டில் என்று கூறப்படும் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பாளையங் கோட்டை நகரில் 1772இல் இவர் பிறந்தவர். இவரது தந்தை அருணாசலம் பிள்ளை கத்தோலிக்க சமயத்தை 1760இல் தழுவியவர். தேவசகாயம் பிள்ளை என்பது இவரது கிறித்தவப் பெயராயிற்று. தமது சமய மாற்றத்துக்குப் பின் பிறந்த தம் மகனுக்கு வேத போதகம் என்ற பெயரை இட்டார். இதுவே பின்னர் வேதநாயகம் என்றாயிற்று.

vedanayagam_sasthiri1784இல் திருநெல்வேலி வந்த சுவார்ட்ஸ் என்ற சீர்திருத்தக் கிறித்தவ சபைக் குரு பன்னிரண்டு வயதான வேதநாயகரைக் காண நேர்ந்தது. வேத நாயகத்தின் அறிவாற்றலால் ஈர்க்கப்பட்ட சுவார்ட்ஸ், வேதநாயகத்தின் தந்தையின் அனுமதியுடன் தஞ்சா வூருக்கு அவரை அழைத்துச் சென்றார். அங்குச் செயல்பட்டு வந்த ‘நவீன பள்ளியில்’ வேதநாயகர் மாணவராகச் சேர்க்கப்பட்டார். இப்பள்ளியின் பாடத்திட்டம் குறித்து இராபர்ட் எரிக்ஃபிரிக்கன் பெர்க் என்பவர் பின்வருமாறு குறிப்பிடுகிறார்.

“பாடத்திட்டம் தமிழும் ஆங்கிலமும் கலந்தது. வேதாகமும், வேதபாடங்களும் அத்தோடு மிக நவீனமான பகுத்தறிவொளிக் கொள்கைகளில் பிறந்த அறிவியலும், தொழில்நுட்பமும் பாடத் திட்டத்தில் இருந்தன. இம்மாதிரியான கல்வி இந்தியாவில் அப்போது வேறெங்கும் கிடைத்த தில்லை.

இத்தகைய நவீனகல்வியைக் கற்றுக் கொடுத்த இப்பள்ளியில் வேதநாயகத்துடன் பயின்றவர் சர போஜி ராஜா. கல்வி கற்று முடித்த பின்னர் ஆசிரிய ராகவும், தலைமையாசிரியராகவும் வேதநாயகர் பணி யாற்றினார். கிறித்தவ மறைபரப்பாளர்களுடனும், திருச்சபை உயர் அதிகாரிகளுடனும் அவருக்கு நெருக்கமான தொடர்பிருந்தது. சைவ வைணவ சமயத்தினரின் கதாகாலட்சேபப் பாணியைப் பின் பற்றி கிறித்துவசமயம் சார்ந்த கதாகாலட்சேபக் குழுவை உருவாக்கினார். இக்குழுவுடன் தமிழ் நாட்டின் பல ஊர்களுக்கும் சென்று கிறித்துவம் சார்ந்த கதா காலட்சேப நிகழ்ச்சிகளை நிகழ்த்தி வந்தார். அத்துடன் சிறிதும் பெரிதுமாக எண்பதுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். ‘சாஸ்திரி வந்தல்லோ எண்பது நூல்களைச் சாதித்தானடி’ என்று வேதசாஸ்திரிக் கும்மியில் குறிப்பிட்டுள்ளார். இதற்குப் பின் இவர் நாற்பது நூல்களை எழுதி யுள்ளார். எனவே தான் இவரது கல்லறையில் 120 நூல்களை இவர் எழுதியுள்ளதாகக் குறிப்பிடப் பட்டுள்ளது. 1864ஆம் ஆண்டில் தமது 92ஆவது வயதில் இவர் மரணமடைந்தார். இவரது உடல் தஞ்சையில் அடக்கம் செய்யப்பட்டது.

வேதசாஸ்திரக் கும்மி

1814இல் வேதநாயகர் எழுதிய இந்நூல் தற்போது விற்பனையில் இல்லை. இருபது ஆண்டுகளுக்கு முன் இந்நூலை தஞ்சை சரஸ்வதிமகால் நூலகம் வெளி யிட்டது. நூலைக் குறித்து தினமணி நாளேட்டில் கண்டனக் கடிதம் வெளிவந்த பின்னர் இரண்டு அல்லது மூன்று படிகளே விற்றிருந்த நிலையில் விற்பனையை நிறுத்தி வைத்துவிட்டனர். நூலின் எஞ்சிய படிகள் என்ன ஆயிற்று என்பது தெரிய வில்லை.

இந்நூலில் உள்ள தேர்ந்தெடுத்த பாடல்களைக் குறுநூலாக கிறித்துவ மிஷனரிகள் ஆங்காங்கே சென்ற நூற்றாண்டின் தொடக்கத்தில் வெளியிட்டு உள்ளதாகத் தெரிய வருகிறது. 1915ஆம் ஆண்டிலும் 1969ஆம் ஆண்டிலும் ‘சாஸ்திரக்கும்மி’ என்ற பெயரில் இந்நூல் வெளியாகியுள்ளது.

1969இல் இந்நூலைப் பதிப்பித்த திரு தாமஸ் ரத்தினம் தமது முகவுரையில்,

“சங்கைக்குரிய வேதநாயகம் சாஸ்திரியாரவர்கள் கிறித்துவர்கள் தங்களின் பழைய மதமாகிய இந்துமத சாஸ்திரங்களை விட்டுவிடாமல், தலைமுறை தத்துவமாய் இறுகப் பிடித்துச் சாதித்து வருகிறார்கள் என்பதைக் கண்டு சாஸ்திரக் கும்மியைப் பாடினார்கள்”

என்று எழுதியுள்ளார். நூலின் உள்ளடக்கம் இக்கருத்தை உறுதி செய்கிறது. சான்றாக சில பாடல்களைக் காண்போம். நல்லநாள், நல்லநேரம் என்று கணித்துப் பார்க்கும் செயல் குறித்து,

“ஆகாத நாளிலே புத்தியறிந்தவ

ளாலே நஷ்டம் வரும் என்றும்

சாகாமல் தாலி அறுப்பள் என்று சொன்ன

சாஸ்திரம் ஏதடி ஞானப் பெண்ணே.”

“ஆகாத நாளில் சமைந்தவள் தாலி

அறுபட்டுப் போவது மெய்யானால்

வாகான நாளில் சமைந்தவளும் அவ

மங்கிலி ஆவானேன் ஞானப் பெண்ணே.”

“சாஸ்திரம் பார்த்துச் சமைந்தாளே பின்னும்

சாஸ்திரத்தாலி புனைந்தாளே

சாஸ்திரக் காரப் பார்ப்பாத்தியவள்

தாலியறுப்பானேன் ஞானப் பெண்ணே.”

“நாளுந்தேதியும் திங்களும் பார்த்து

ராசிப் பலன்க ளெலாம் பகுத்து

நீளுந் தாரகை நன்றெனத் தீதென

நிமித்தங் கேட்ப தார் ஞானப் பெண்ணே.”

“பிள்ளைக்கு நூறு வயதென்று சொல்லியே

பெரிய சாதகம் ஒன்றெழுதிக்

கள்ளத் தனமாக முப்பதில் நாற்பதில்

கண்டம் என்பானேன் ஞானப் பெண்ணே.”

என்று பகடி செய்யும் சாஸ்திரியார், பறவைகள், ஒலியெழுப்பல், பூனை, நாய் குறுக்கேவரல் என்பன வற்றை மையமாகக் கொண்ட நம்பிக்கைகளை

“காக்காய் கத்துதல் ஆந்தை கத்துதல்

காரியத்தைக் கெடுத்துப் போட்டால்

போக்காய் மற்றக் கருவிகள் கத்தலில்

புண்ணியம் உண்டாமோ ஞானப் பெண்ணே.”

“தன் வயிறு தனக்குப் பசிக்கையில்

சகல பட்சியும் கத்தாதோ?

உன் இழவுக்குக் கத்துதென் றெண்ணி நீ

உலைந்திருப்பானேன் ஞானப் பெண்ணே.”

“பூனையும் நாயும் குறுக்கிட்டால் கன

பொல்லாப்பு வரும் என்று சொன்னாய்

பூனையும் நாயும் உன் வீட்டில் இருப்பது

பொல்லாப் பல்லவோ ஞானப் பெண்ணே.”

என்று பகடி செய்கிறார். சில சாதியினரைத் தொட்டால் தீட்டு என்ற கருத்து குறித்து

“உன்னைப் போல மனுஷனானவன்

உன்னுடை ரூபஞ் சரியானேன்

உன்னைப் போல் ஆத்துமத்தைக் கொண்டிருப்பவன்

என்னமாய்த் தீட்டானான் ஞானப் பெண்ணே.”

“மாட்டைத் தொட்டுத் தலைமுழுகாத நீ

மனுஷனைத் தொட்டு ஸ்நானம் செய்தாய்

மாட்டைப் பார்க்க மனுஷன் இளப்பமோ

மறுமொழி கொடு ஞானப் பெண்ணே.”

“மாட்டு மூத்திரத்தைக் குடித்தே அந்த

மாட்டுச் சாணியைப் பூசிக் கொண்டு

மாட்டைத் தானே கும்பிட்டு நின்ற வுன்

மாட்டுப் புத்தியோ ஞானப் பெண்ணே.”

“நாயைத் தொட்டுத் தலை முழுகாத நீ

நரனைத் தொட்டுத் தலை முழுகப்

பேயைக் கும்பிட்ட புத்தியினால் வந்த

பேதைமைப் புத்தியோ ஞானப் பெண்ணே.”

“மிருகத்திலும் மனுஷனை இப்படி

மெத்தவும் நிஷிதப் படுத்து வது

அருவருக்கப் படத்தக்க பாவ மென்

றறிந்த தில்லையோ ஞானப் பெண்ணே.”

என்று வினா எழுப்புகிறார்.

இதுபோன்ற முற்போக்கான பல கருத்துக்கள் வேதசாஸ்திரக் கும்மியில் இடம்பெற்றுள்ளன. ‘கிறித்துவச் சித்தர்’ என்று குறிப்பிடுமளவுக்கு அவரது சீர்திருத்தக் கருத்துகள் உள்ளன. ஆனால் அவரது வாழ்க்கையுடன் இப்பாடல்களை இணைத்துப் பார்த்தால் தன் சுயசாதி அடையாளத்தைத் துறக் காதவராகவே அவர் வாழ்ந்துள்ளார் என்பது தெரிய வருகிறது. இது குறித்து விரிவாக ஆராய்வது இக் கட்டுரையின் தலைப்புடன் பொருந்தாது. என்றாலும் ஒரு படைப்பாளியின் படைப்புக்கும் அவனது வாழ்க் கைக்கும் இடையிலான இடைவெளியை உணர்ந்து கொள்ள ஒன்றிரண்டு செய்திகளை அறிந்து கொள்வது அவசியமாகிறது.

1834ஆம் ஆண்டில் பதினோரு செய்யுட்களை இவர் எழுதியுள்ளார். இவற்றின் இறுதியில் ‘புதுக் குருமார் தமிழ்ச்சனங்களுக்குச் செய்த கொடுமையைப் பற்றிப் பராபரனை நோக்கிக் கூப்பிட்ட முறைப் பாடு’ 1834ஆம் ஆண்டு என்று எழுதியுள்ளார். இக்குறிப்பு இச் செய்யுள்கள் எழுதப்பட்ட சூழலை உணர்த்துகிறது. இது குறித்து இப்பதிப்பைப் பதிப்பித்த சவரிமுத்து அடிகளார்

“இப்பதிகம் எழுதப்பட்ட சூழ்நிலையைக் கவிஞரது குறிப்பு வெளிப்படுத்துகிறது. 19 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தஞ்சை மாவட்டத் திலுள்ள கிறித்துவச் சபைகளினூடே சாதிப் பிரச்சினை தாண்டவமாடிற்று. மேல்சாதி, கீழ்ச்சாதி என்ற பிரிவினைப் போராட்டத்தில் சுவார்ச்சையருக்குப் பின் வந்த கோலேப்பையர் முதலானவர்கள் கீழ்ச் சாதியினரைச் சார்ந்து ஏனைய சாதியினரை ஒடுக்கினர்.”

என்று குறிப்பிடுகிறார். அத்துடன் ‘அவ்வாறு ஒடுக்கப் பட்டவர்களின் அவலக் குரல்கள்’(!) இப் பதிகத்தில் இடம்பெற்றுள்ளதாக விளக்கியுள்ளார்.

தொடக்ககாலக் கிறித்துவத் திருச்சபைக்குள் நிலவிய மேட்டிமை சாதிய மேலாண்மைக்கெதிராக குருக்கள் சிலர் மேற்கொண்ட செயல்பாடுகள் வேதநாயகருக்குப் பிடிக்கவில்லை. சாதிய வேறு பாட்டை கிறித்துவத்தில் நீக்க முயன்ற குருக்களால் தாம் பாதிக்கப்பட்டதாக அவர் எழுதியுள்ள பதிகங்களில் இடம்பெறும் வரிகள் வருமாறு

‘குருக்களும் பகைவரானார் கோவிலும் வேறதாயிற்று.’

‘சங்கையை இழந்தோம் பின்னும்

 சாதியின் நலமுமற்றோம்,’

(சங்கை - மரியாதை)

சாதி அடிப்படையிலான கல்லறைகளுக்குத் தடை விதிக்கப்பட்டதால் தமக்கு நேர்ந்த துயரத்தை ‘கல்லறைக் கிடமுமுற்றுக் காட்டினுக் ககற்றப் பட்டோம்’ என்று வெளிப்படுத்தியுள்ளார். இறுதியில்,

“ஆதரவருளி யெங்கள் ஆபத்தை நீக்கி மேலும்

சாதியின் இடறலின்றிச் சபையெலாந் தழைக்கச் செய்து வேதநாயக கன்பாட்டெங்கள் விண்ணப்பங்களைக் கேட்டன் பாய் ஏதமே பொறுத் தெந்நாளும் எம்மையாள் ஏசுநாதா.”

என முடிக்கிறார். தமிழறிஞர் ஜி.யூ.போப் சாதி வேறுபாட்டை கிறித்துவத்தில் நீக்க முயன்றதை எதிர்த்து ‘போப்பையரின் உபத்திரா உபத்திரவம்’ என்ற குறுநூலை அவர் வெளியிட்டுள்ளதாக அ.மார்க்ஸ் குறிப்பிட்டுள்ளார்.

a_sivasubramanian_321சாதி குறித்த இத்தகைய அணுகுமுறையைக் கொண்டிருந்த வேதநாயக சாஸ்திரியார் ‘வேத சாஸ்திரக் கும்மி’ என்ற முற்போக்கான நூலை ஏன் எழுதினார் என்ற வினா எழுவது இயற்கை. அய்ரோப்பிய மிஷனரிகளின் அன்பிற்குரியவராக அவர் இருந்தமையால் புதிய கிறித்தவர்கள் தம் பழைய பழக்கவழக்கங்களைக் கைவிடும் வகையில் நூலொன்றை எழுத வேண்டிய கடப்பாடு அவருக்கிருந்துள்ளது.

இந்நூல் முழுவதையும் படித்துப் பார்த்தால் ‘சாதிகள்’ என்று சாஸ்திரியார் சுட்டுவது சைவ, வைணவ, நாட்டார் சமயநெறிகளைப் பின்பற்று வோரைத்தான் என்பது புலனாகிறது.

மேலும் அவரைப் பொறுத்த அளவில் சுய சாதிப்பற்று என்பது மூடப்பழக்கவழக்கமாகத் தோன்றவில்லை.

தம் பாரம்பரிய மதத்தைத் துறந்து கிறித்தவர்களாக மாறியவர்களால் தம் சுயசாதி அடையாளத்தைத் துறக்க இயலவில்லை. தமிழ்க் கிறித்து வத்தின் அடிப்படைக் குறைபாடு இதுதான். இதி லிருந்து வேதநாயக சாஸ்தியாரும் தப்பவில்லை.