நாளிதழ்களில் அண்மையில் வெளிவந்த துண்டுச் செய்தி -

நூறு ரூபாய் கள்ள நோட்டைத் தமிழக அரசின் டாஸ்மாக் கடையில் மாற்றியதாகக் கைது செய்யப்பட்ட ஒருவருக்கு ஆறு மாத சிறைத் தண்டனை. ஆனால் இந்தக் கள்ள நோட்டுகளை அச்சிட்டவர்கள், புழக்கத்தில் விட்டவர்கள், பின்னணியிலிருந்து இயக்குபவர்கள் பற்றியெல்லாம் - இந்த வழக்கில் சட்டத்தை நிலை நாட்டியவர்கள் உள்பட - யாருக்கும் எந்தக் கவலையுமில்லை!

தொலைத்தொடர்புத் துறையின் ‘ஸ்பெக்ட்ரம்’ அலைவரிசை ஒதுக்கீட்டில் அரசுக்கு ஒரு லட்சத்து எழுபத்தாறாயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்தியதாகக் கூறப்படும் புகாரின் அடிப்படையில் நீ....ண்....ட... காலத்துக்குப் பிறகு முன்னாள் தொலைத்தொடர்புத் துறை அமைச்சரான ஆ.ராசாவையும் சில உயர் அலுவலர்களையும் மத்திய புலனாய்வுத் துறை கைது செய்திருக்கிறது.

இன்னொரு நீ...ண்...ட... விசாரணைக்குப் பிறகு நின்றுகொல்லும் நீதியால் ஒருவேளை ‘இந்திய அரசியல் வரலாற்றில் முதன்முறையாக’ இவர்களுக்குச் சிறைத் தண்டனைகூட விதிக்கப்படும் வாய்ப்பும் இருக்கிறது.

ஆனால், ஸ்பெக்ட்ரம் ஊழலுக்குப் பின்னால் இருக்கும் எண்ணற்ற கேள்விகளுக்கான பதில்கள்?

இந்த ஊழல் தொடர்பான விசாரணையை உச்சநீதிமன்றம் கைக் கொண்டு கடும் விமர்சனங்களை முன்வைத்த பிறகுதான் மத்திய புலனாய்வுத் துறை விறுவிறுப்பாகச் செயல்படத் தொடங்கியிருக்கிறது என்றால் இத்தனை காலமாகப் புலனாய்வுத் துறையின் கரங்களைக் கட்டிப் போட்டிருந்தது யார் அல்லது எது?

2009 அக்டோபரில் தகவல் - தொலைத்தொடர்புத் துறை அலுவலகங்களில் மத்திய புலனாய்வுத் துறை சோதனைகள் நடத்தியதே, அப்போதே ஏன் கைது, விசாரணை போன்ற தொடர் நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை?

2 ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் முதல் எச்சரிக்கை மணியை ஒலிக்கும் விதமாக, ‘சட்ட அமைச்சகமும் நிதி அமைச்சமும் எழுப்பிய ஐயங்களைப் பற்றியும் சிந்தித்து முடிவெடுக்குமாறு’, தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் ஆ. ராசாவை எச்சரித்துப் பிரதமர் மன்மோகன் சிங் எழுதிய கடிதம் கிடைத்த நாளிலேயே அவருக்குத் ‘துடுக்குத்தனமான’ பதிலெழுதியதுடன் தொடர்ந்து, தான் நினைத்த போக்கிலேயே செயல்பட்ட ஆ. ராசாவை அமைச்சரவையில் தொடரும் வகையில் பிரதமரைச் சகித்துக் கொள்ளச் செய்தது யார் அல்லது எது? ஏன்?

ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் முறைகேடான வகையில் ‘உரிமம் பெற்றவர்கள் மிகக் குறைந்த இடைவேளையிலேயே தங்கள் பங்குகளை மிகுந்த லாபத்துக்குக் கைமாற்றிவிட்டிருக்கின்றனரே? இவையெல்லாம் அரசுக்கோ, பிரதமருக்கோ ஏற்கெனவே தெரியுமா? தெரியாதா? (தெரியாமல் இருந்தால் இவர்களை நம்பியா நாம் நாட்டை ஒப்படைத்திருக்கிறோம் என்று வேதனைப்பட வேண்டியதுதான்; தெரிந்திருந்தாலும் கூட அதே வேதனைதான்.)

‘முதலில் வருபவருக்கே முன்னுரிமை’ என்ற கொள்கைப்படிதான் எல்லாம் நடந்தது என்பதாகவே இன்னமும் மீண்டும் மீண்டும் பிரதமரும் தமிழக முதல்வரும் ஆ. ராசாவும் கூறிக் கொண்டிருக்கின்றனர். ஆனால், பதிவு செய்வதைப் பொருத்துதான் முன்னுரிமை என்ற நடைமுறையை மாற்றிப் ‘பணம் கட்டுவதே முன்னுரிமைக்கான அடிப்படை’ என்றாக்கியதைப் பற்றி ஏன் யாரும் வாய் திறக்க மறுக்கிறார்கள்?

இந்த முன்னுரிமை மாற்றத் தகவல்கள் அனைத்தும் முன்னதாகவே (ஊழலால் பயன்பெற்ற) சிலருக்குத் தெரிவிக்கப்பட்டிருக்கின்றனவே, எவ்வாறு? ஏன்? தெரிவித்தது யார்?

இவ்வளவு கூத்துகளுக்குப் பிறகும், ‘இந்த அலைவரிசை ஒதுக்கீட்டால் அரசுக்கு எவ்வித இழப்பும் ஏற்படவில்லை’ என்று தற்போதைய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் கபில் சிபல் ‘வெள்ளந்தி மாதிரி’ கூறிக்கொண்டிருக்கிறாரே? உண்மை தெரிந்துதான் பேசுகிறாரா? அல்லது எல்லாவற்றையும் ஒரேயடியாக மறைக்கப் பார்க்கிறாரா? அல்லது இவருக்கு எதுவுமே தெரியாதா? அவ்வாறெனில் இவரை நம்பி எவ்வாறு தகவல் - தொழில்நுட்பத் துறையை ஒப்படைக்கலாம்?

ஒட்டுமொத்த கூட்டத் தொடரும் முடங்கிய போதிலும் நாடாளுமன்றக் கூட்டுக்குழு விசாரணையை மட்டும் நடத்த மறுப்பது ஏன்? அத்தகைய ஒரு விசாரணை நடத்தப்படும்பட்சத்தில் பிரதமரின் கட்டுப்பாட்டிலேயே இல்லாமல் அமைச்சரவையும் அமைச்சர்களும் செயல்பட முடியுமா என்பதெல்லாம்கூட வெட்டவெளிச்சமாகும் வாய்ப்பு இருக்கிறதே? தொடர்ந்து ஏன் மறுக்கிறார்கள்?

‘மத்திய அமைச்சர் ராசா ஒருவரால் இவ்வளவு பெரிய முறைகேட்டைத் தனியாக எவ்வாறு செய்திருக்க முடியும்?’ என்று முன்னொரு தருணத்தில் தமிழக முதல்வர் கருணாநிதி எழுப்பிய கேள்வி கோடி, மன்னிக்கவும் பல்லாயிரம் கோடி, பெறும். ஏனெனில் நாட்டு மக்களுக்கும்கூட இதே கேள்விதான்.

சுதந்திர இந்தியாவில் நடைபெற்ற இந்த மிகப் பெரிய ஊழலில் யார் யாரெல்லாம் பயன் பெற்றிருக்க முடியும்? என்பதெல்லாம் நாட்டிலுள்ள ஒவ்வொரு பாமரனுக்கும்கூட நன்றாகவே தெரிந்திருக்கிறது என்றுதான் சொல்லவேண்டும். இதுவரை நடந்த ஊழல்களை எல்லாம் தின்று ஏப்பமிட்டுவிட்ட இந்த ஊழலில் பயன் பெற்றவர்கள் அனைவரும் அடையாளம் காணப்படுவார்களா?

அவ்வாறு அடையாளம் காணப்பட்டாலும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்படுவார்களா? அவ்வாறே தண்டிக்கப் பட்டாலும் கொள்ளை போன கோடிகள் திரும்பப் பெறப்படுமா?

இந்தக் கைது மூலம் பெரும் சாதனை நிகழ்த்தப்பட்டு விட்டதாகப் பெருமைப்பட்டுக் கொள்வதாலும், எந்தெந்த நாடுகளில் எத்தனை ஆயிரம் கோடிகள் முதலீடு செய்யப்பட்டிருக்கின்றன என்று வியந்து பேசிக் கொண்டிருப்பதாலும் எவ்விதப் பயனுமில்லை. ஏனெனில் பதினைந்து நாள்களிலோ, ஒரு மாதத்திலோ ஆ. ராசாவும் மற்றவர்களும் பிணையில் வெளியே வந்துவிடுவார்கள்; வழக்கும் வருடக்கணக்கில் நடந்து கொண்டிருக்கும்; வேறெதுவும் நடக்காது என்றுதான் மக்கள் நினைக்கிறார்கள். தேனை எடுத்தபோது புறங்கையைச் சுவைத்ததாகக் கருதப்படும் (டாஸ்மாக் கடையில் நோட்டை மாற்றியவரைப் போன்ற) சிலர்தான் இப்போது சிக்கியிருக்கிறார்கள்; உண்மையில் தேனை மொடாக்களில் ஊற்றிக்கொண்டு சென்றவர்களும் குடித்து ஏப்ப மிட்டவர்களும் இங்கேதானே இருக்கவேண்டும்? அவர்கள் சிக்கும் அல்லது அம்பலமாகும் வாய்ப்பு உண்டா? மக்களுடைய எதிர்பார்ப்பும் அதுதான்!

Pin It