தமிழ்மொழி, எழுத்து வழக்கு, பேச்சு வழக்கு என்னும் இரு வழக்குகளைக் கொண்ட ஒரு இரட்டை வழக்கு மொழி. பேச்சு மொழியின் தாக்கத்தை எழுத்து மொழியில் காணமுடிகின்றது. அது மட்டு மல்லாமல் இன்றைய உலகமயமாக்கல், தாராள மயமாக்கல் ஆகியவற்றின் காரணமாக எண்ணற்ற பொருள்கள் மேலை நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன. அப்பொருள்களோடு மேலை நாட்டு மொழியும் இறக்குமதி செய்யப்பட்டு தமிழ் மொழியுடன் இரண்டறக் கலந்து தமிழ்மொழியின் அமைப்பிலும், பயன்பாட்டிலும் பல குழப்பங் களை ஏற்படுத்துகின்றன. ஊடகங்களின் மொழி பயன்பாட்டிலும் பல குழப்பங்கள் காணப்படுகின்றன. இக்காரணங்களால் இன்றைய தலைமுறையினர் எது சரியான தமிழ் என்பதைக் கண்டறிவதிலே தடுமாற்றம் கொள்கின்றார். அவர்களின் குழப்பங் களுக்குத் தீர்வு காணும் வழியாக பேராசிரியர். மா.நன்னன் அவர்கள் வரிசையாக உரைநடை நூல்களை எழுதி வருகிறார்கள். அந்த வரிசையில் பதினோராம் நூலாக வெளிவந்துள்ள நூல் ‘செந்தமிழைச் செத்தமொழி யாக்கிவிடாதீர்.’ இந்நூலுக்கு இப்பெயர் சூட்டப்பட்டதன் காரணமாக இவ்வாறு கூறுகிறார்:

nannan_400“தென்மொழி என்பது தமிழையும் வடமொழி என்பது சமஸ்கிருதத்தையும் குறிக்கும். இவ்விரு மொழிகளும் செம்மொழிகளே ஆயினும் வட மொழியாளர் தம் மொழியைத் செத்தமொழி ஆக்கினர். அதுபோல் தமிழர்களாகிய நாமும் நம் செம்மொழியாம் செந்தமிழைச் சாக்காட்டு மொழி யாக ஆக்குகிறோமோ என்னும் அய்யத்தாலும் இயல் பாகவே செம்மை வாய்ந்த செந்தமிழாம் செம் மொழியை வடமொழி போல் செத்தமொழியாக்கி விடக்கூடாதே என்னும் எண்ணத்தாலும், நோக்கத் தாலும், அவாவினாலுமே இந்நூலுக்கு இப்பெயர் சூட்டப்படுகிறது” என விவரிக்கிறார்.

ஆசிரியர் மேலும் ‘பலகணி யுட்பட்டவற்றின் கதவுகள் எல்லாம் அடைத்துக் கிடக்கும் யாரும் குடியிருக்காத வீடு போலன்றி, நிறைய மக்கள் வாழும் நம் வீடு பல ஆண்டுகளாகக் கூட்டிப் பெருக்கி ஓடு மாற்றி ஒட்டடையடித்துப் பாதுகாக்கப்படாதது போல் கிடக்கிறது. அதைச் செப்பனிட்டுப் புதுக்கித் துலக்குவதே தமிழைத் தமிழாக்கும் முயற்சி என்கிறார். ஆசிரியரின் இந்நோக்கம் நூல் முழுவதும் வெளிப்பட்டுள்ளது.

இந்நூல் உள்ளுரை, முகவுரை, முன்னுரை, கிளவியாக்கம், தொடராக்கம், முதற்குறிப்பு விளக்கக் குறிப்புகள் என்னும் ஏழு பிரிவுகளாக அமைந்துள்ளது.

உள்ளுரையில் இயல்பிரிப்புத் தரப்பட்டுள்ளது. முகவுரையில் நூலின் இன்றியமையாமை பற்றி விளக்கப்பட்டுள்ளது. முன்னுரையில் ஆசிரியரின் உரைநடை நூல்கள் பற்றிய குறிப்புகள் தரப்பட்டு உள்ளன. கிளவியாக்கம் தனிமொழியியல், தொடர் மொழியியல் என இரு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு 233 சொற்கள் பற்றிய விவரங்கள் தரப்பட்டுள்ளன. தொடராக்கம், தொடரமைப்பியல், சொல்லாட்சி யியல், மரபியல், இடவியல், மூவிடவியல், இடையியல், திணையியல், பாலியல், வேற்றுமையியல், புணரியல், சுருக்கவியல், நோயியல் என்னும் பன்னிரு இயல் களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இவற்றில் முந்நூற்று எழுபத்து ஒன்று (371) துளக்கங்கள் துலக்கப்பட்டு உள்ளன என்று குறிப்பிடப்பட்டுள்ளது. முதற்குறிப்பு விளக்கம் என்பது நூலில் பயன்படுத்தப்பட்டுள்ள சுருக்கக் குறியீடுகளின் விரிவைத் தருகின்றது. குறிப்புகள் இறுதியில் கொடுக்கப்பட்டுள்ளன.

சொற்கள் தமக்குரிய பொருண்மையிலிருந்து மாறி வேறு பொருண்மையைக் கொண்டு ஆளப் படுவதாக ஆசிரியர் கூறுகிறார். கோவிந்தா, அரோகரா, காவடி, பிரகஃச்பதி என்பன போன்ற பற்பல சொற்களும் பொருண்மை மாற்றம் பெற்று உள்ளன. அரசியல் என்னும் சொல்லும் மோசடி, பித்தலாட்டம், ஏமாற்று, பொய் போன்ற பொருண்மை கொண்டதாகவே அரசியல் தலைவர்களால் ஆளப் படுவதாக ஆசிரியர் குறிப்பிடுகின்றார்.

இணைச் சொற்களும் விளக்கப்பட்டுள்ளன. அவை ஒரே பொருண்மை உடையன போல் தோன்றி னாலும் வெவ்வேறு பொருண்மைகளைத் தருவதாகக் கூறுகிறார். எடுத்துக்காட்டாக, இடுக்கு என்பது விரலிடுக்குப் போல் இரு பொருள்களுக்கிடையில் இருப்பது. துளை என்பது வடையின் துளைபோல் ஒரே பொருளில் இருப்பது. விரல்கள், பற்கள் போன்ற வற்றுக்கிடையில் உள்ளதை இண்டு, இடுக்கு எனவும் குடம், சல்லடை, மாம்பழம் போன்றவற்றில் உள்ளதை ஓட்டை, துளை, பொத்தல் எனவும் விளக்குகிறார், மா.நன்னன்.

இதைப் போல ஊட்டு, மூட்டு, உடைதல்; சிதறல்; தெறித்தல், அழுக்கு; தூசு, காதல்; காமுறுதல், கிளம்பல்; புறப்படல், குண்டு; குழி, கொப்பளம்; கட்டி, சிக்கு; சிக்கல், செம்மாப்பு; இறுமாப்பு, தகவல்; செய்தி, பள்ளம்; குழி, பொய்; புளுகு; புரட்டு போன்ற இணைச் சொற்கள் தெளிவாக விளக்கப்பட்டுள்ளன.

கண்ணாடி உடைந்து தெறிக்காது. பானை உடைந்து அதிலிருந்த நீர் தெறிக்கும். நீர் சிதறாது கண்ணாடி உடைந்து சிதறும்.

காதல் என்னும் சொல் எவ்வாறு உருவானது என்பதை இவ்வாறு விளக்குகின்றார். காமுறுதல் என்னும் சொல்லின் முதல்நிலை அஃதாவது பகுதி ‘கா’ அதன் இறுதி நிலை அஃதாவது விகுதி ‘தல்’ முதல் நிலையும் இறுதி நிலையும் இடையன் விடுத்துக் கூடுவதே காதல்.

கிளம்பல், புறப்படல் என்னும் சொற்களிரண்டும் பொது நோக்கில் ஒரே பொருளுடையனவாயினும் சிறப்பு நோக்கில் அவை தம்மில் பொருள் வேறுபாடுடையன என்கிறார்.

குண்டு என்பது ஒரு வயல் அல்லது ஒரு பகுதி நிலப்பரப்பு. அதன் அருகில் உள்ள பிறவற்றைவிட ஆழமாக இருப்பதைக் குறிக்கும். குழி என்பது அடிக்கணக்கில் உள்ள சின்னச்சிறு பள்ளத்தைக் குறிப்பதாகக் கூறுகிறார்.

கொப்புளம் என்பது முகிழ்த்துத் தோன்றும் கடி போன்றதே. ஆயினும் அது போன்று கெட்டியாய் இராமல் மெதுவாயும் அழுந்தக் கூடியதாயும், நீர்மத்தை மிகுதியாகக் கொண்டதாயும், சிறு ஊசியால் மெல்லக் குத்தினாலும் சிதையக் கூடிய தாகவும் இருக்கும் என்கிறார்.

சிக்கு என்பதற்கு அகப்படு, மாட்டிக்கொள், சிக்கல், அழுக்கு, நாற்றம் போன்ற பல பொருள்கள் உள்ளன. தலை மயிரில் அழுக்கினால் ஏற்படும் பிணைப்பு சிக்கல் எனப்படுகின்றது.

தகவல், செய்தி என்னும் இவ்விரு தனிமொழி களும் வெவ்வேறு பொருள்தரும் சொற்கள். இதைத் துலக்குமிடத்து தகவல் என்பது அதனைப் பெற்றுச் செயற்பட வேண்டியது; செய்தி என்பது அதனைப் பெற்றுக் கொள்வது அல்லது அறிந்துகொள்வது அல்லது கேட்டுக் கொள்வது மட்டுமே எனவும் கேட்டுக் கொள்பவர் செயற்படவும் வாய்ப்பு நேரலாம். அஃது அவரோடு தொடர்புடைய செய்தியாக இருந்தால் மட்டுமே எனத் துலக்கியுள்ளார்.

குழி தோண்டப்படுவது; ஒரு நோக்கத்தோடு அமைக்கப்படுவது; சிறியது. பள்ளம் தோண்டப் படாமல் இயற்கையாக அமைந்திருப்பது; பெரியது.

இல்லாததைச் சொல்வது பொய் என்றும், இட்டுக்கட்டிச் சொல்வதை புளுகு என்றும் ஒன்றை மேல் கீழாகப் புரட்டிப் போட்டு மாற்றிக் காட்டுவது போன்று பேசுவதைப் புரட்டு என்றும் துலக்கு கிறார்.

தொகுக்கப்படுவதே தொகை என்றாற்போல் துவைத்து உருவாக்கப்படுவது ஆதலின் அது துவையல் ஆகும் என்கிறார்.

இணைச் சொற்களுக்கு விளக்கம் அளிப்ப தோடு இல்லாமல் ஆங்கிலச் சொற்களுக்கு இணை யான தமிழ்ச் சொற்களும் ஆக்கம் செய்யப்பட்டு உள்ளன. காட்டாக, எ.சி. என்னும் சொல்லுக்கு இணையாகக் குளிர்பதனம் செய்தல், குளிரி, குளிர்ப்பி, தட்பி என்றும் கேமரா, கேமராமென், இசுடூடியோ என்னும் சொற்களுக்கு இணையாக படவி, படவர், பப்பிடம் என்னும் சொற்களைக் கொடுத்துள்ளார். இவை பொது மக்களைச் சென்று அடையுமா? என்பதற்குக் காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.

சொற்களைச் சுருக்கல், சுருங்கச் சொல்லல் என்பது அழகைச் சேர்ந்தது. சொற்களைச் சிதைத்தல் (கிழித்தல்) அஞ்சி அகற்றத்தக்கதே. அம்மான் சேய் அம்மாஞ்சி என்னலும், தஞ்சாவூரைத் தஞ்சை என்னலும் பேச்சு வார்த்தை நடத்தினார் என்பதைப் பேசினார் என்பதும் சுருக்கங்களாகும். முண்டகக் கண்ணியை முண்டக்கண் என்பதும், எழுந்தருளல் என்பதை ஏளல் என்பதும், இருக்கிறார் என்பதைக் கீறார் என்பதும் சிதறல்கள் ஆகும் என்பது ஆசிரியரின் கருத்து.

சொற்கள் எவ்வாறு மருவி வழங்குகின்றன என்பதும் எடுத்துக்காட்டுகளின் வழியாக விளக்கப் பட்டுள்ளன. தாவாங்கொட்டை என்பது கடலூர் மாவட்டத்தில் உள்ள ஒரு பகுதி. தாழ்வாய்க் கொட்டை, தாழ்வாங்கொட்டை என மருவியது. பின்னர் அதுவே தாவாங்கொட்டை என மருவி வழங்குகிறது. இல் முன் என்பது முன்றில் என்றானாற் போல் வாய்தாழ் என்பதே தாழ்வாய் என்றாயிற்று. எனவே வாயின் தாழே (கீழே) கொட்டை போல் கெட்டியாக உள்ள உறுப்பு வாய்த் தாழ் கொட்டை. அது தான் தாழ்வாய்க் கொட்டையாகித் தாவரங் கொட்டையாக மாறியுள்ளது.

அழைத்துவருதல்; கூட்டி வருதல்; கொண்டு வருதல்; எடுத்துவருதல் என்னும் இச்சொற்களை வாக்கியங்களில் எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பதை,

அ.    அவர் தம் மனைவியை அழைத்து வந்தார்

ஆ.    அவர் தம் நாயைக் கூட்டி வந்தார்

இ.     அவர் தம் பணப்பையைக் கொண்டு வந்தார்

ஈ.     அவர் தம் குடையை எடுத்து வந்தார்

என்று ஐயத்திற்கு இடமின்றி எடுத்துக்காட்டுகளுடன் விளக்கிக்காட்டப்பட்டுள்ளது, போற்றத்தக்கது.

தொடர்களைப் பொருள் மயக்கமின்றி எவ்வாறு புரிந்துகொள்ள வேண்டும் என்பது பல எடுத்துக் காட்டுகள் வழி விளக்கப்பட்டுள்ளது. சான்றாக, இறைவன் தேவையில்லை என்னும் தொடரில் இறைவன் என்னும் எழுவாய் தேவையற்றவன் என்னும் பயனிலையைக் கொண்டு முடிந்திருப் பதால் இறைவன் தேவையில்லாதவன் என்றே அதுபொருள் தருகிறது. இறைவன் எனப்படுபவர் மனைவி, உணவு, ஊர்தி, உடை, அணிகலன், மக்கள், வாழ்விடம் போன்ற எத்தேவையும் இல்லாதவர் என்பது தான் அதன் பொருளாயிருக்க முடியும். எனவே அது சரியான தொடரே என்று விளக்கிக் கூறப்பட்டுள்ளது.

பழமொழிகள், தொடர்கள் போன்றவையும் இந்நூலில் துலக்கப் பெற்றுள்ளன. எத்திலே பிள்ளை பெற்று இரவலில் தாலாட்டிக் கொள்ளல் என்பதை, சூல் சுமந்து வருந்தி ஈனாமல் எவளோ ஒருத்தி சுமந்து உழன்று பெற்ற பிள்ளையை ஏமாற்றிப் பெற்றுக் கொள்வது. அவ்வாறு சிறிதும் வருந்தாது பெற்ற பிள்ளையையும் தாலாட்டிச் சீராட்டி வளர்க்கும் கடமையையும் தான் செய்யாது அவற்றை இரவல் செவிலியர் மூலமாகச் செய்வித்துக் கொள்வது தான். இவ்வாறு வாழ்வின் எல்லாத் துறைகளிலும் ஏமாற்றி வாழ்வோரை நாம் இன்றும் காண முடிகிறதன்றோ?

எள் எண்ணெய்க்குக் காய்கிறது; எலிப் புழுக்கை என்னத்திற்குக் காய்கிறது? என்ற பழமொழியை எண்ணெய் எடுப்பதற்காக எள் உலர்கிறது. அந்த எள்ளோடு சேர்ந்து உலரும் எலிப்புழுக்கை எதற்காக அப்படி உலர்கிறது? ஏதோ ஒரு பயன்பெறவோ வேறொரு காரணத்திற்காகவோ பாடுபடுகிறான் ஒருவன்; அவனோடு சேர்ந்து உழலும் இவன் எப் பயனும் பெறானாதலின் ஏன் அவனுடன் சேர்ந்து உழலுகிறான் என்பதே அப்பழமொழியின் பொருள்.

கொக்குக்கு ஒன்றே (ஒண்ணே) மதி என்பதை “ஓடு மீன் ஓட உறு மீன் வருமளவும் வாடி யிருக்குமாம் கொக்கு.” அதாவது கொக்கு வேறு எதையும் பொருட்படுத்தாமலும், அப்படியிருந்து விடாமல் உறுமீனையும் பார்க்க வேண்டும். அதாவது அண்டை அயலையும் அவ்வப்போது நோக்க வேண்டும். கொக்கைப் போல் ஏதேனும் ஒன்றிலேயே நம் அறிவை ஈடுபடுத்திக் கொண்டிருந்து விடக் கூடாது என்பது இதன் கருத்தாகும் என்கிறார்.

“பணம் பத்தும் செய்யும்; பதினொன்றும் செய்யும்” என்ற தொடர் வழக்கத்தில் உள்ளது. ஆனால் அது பொருத்தமற்றது என்று ஆசிரியர் கருதுகின்றார். ஏனெனில், பத்தும் என்பதிலுள்ள உம்மை, முற்றும்மை. செய்ய வேண்டியதே பத்து தான் என்பதை அவ்வும்மை உணர்த்துவதால் பதினொன்றாக எதுவும் இல்லாதபோது அதை எப்படி இது செய்ய முடியும். அதுவே பணம் பத்து செய்யும் என்று உம்மையின்றி இருந்தால் அங்குப் பதினொன்றும் செய்யும் என்பதற்கு இடமுண்டு. முற்றும்மை ஓரிரு இடங்களில் எச்ச உம்மை யாகவும் வர நேரலாம் என்னும் கருத்துப்படி இதை அமைக்க முடியாது. பத்தும் செய்யும் என்பது சிலவற்றைச் செய்யாது எனப் பொருள் கொண்டு எட்டைச் செய்யும் என்றும் பொருள் கொள்ள வாய்ப்புக் கிட்டலாமேயன்றிப் பதினொன்றைச் செய்யும் எனப் பொருள் கொள்ள வாய்ப்பே இல்லை என்பது இந்நூலில் விளக்கப் பெற்றுள்ளது.

“மண் குதிரையை நம்பி ஆற்றில் இறங்கினாற் போல” இப்பழமொழி பொருத்தமற்றது என்கிறார். “ஓட்டைப் படகை நம்பி” என்றால் அது பொருத்த மான உவமையாகலாம். படகில் ஓட்டை இருப்பது தெரியாமல் நீரில் பயணம் செய்தால் கரையேற முடியாது என்பது பொருந்தும். ஆனால் மண் குதிரையின் மேல் ஏறி அமர்ந்தால் அது ஆற்றுக்கு எப்படிப் போகும்? அது அய்யனார், வீரனார் கோயில் அருகில் தானே நிற்கும். அதை ஆற்றுக்குத் தூக்கிக் கொண்டு போய் நீரில் இறக்கி அதன் பிறகு அதன் மேல் ஏறிப் பயணம் செய்வோர் எவரேனும் இருப்பராயின் அவருக்கு மட்டுமே இது பொருந்தும்; உவமையாகக் கூடும் என்பது ஆசிரியர் கருத்து.

இதைப் போன்று தொடரமைப்பு இன்றைய தலைமுறையினரால் எவ்வாறு பயன்படுத்தப்படு கின்றது என்பதற்கு எடுத்துக்காட்டுகள் வழி விளக்கம் கொடுத்துள்ளார்.

அ.    பேரறிஞர் அண்ணா பிறந்த நூற்றாண்டில் மலர்கிறது இந்தப் புத்தாண்டு

ஆ.    பேரறிஞர் அண்ணா பிறந்த நூற்றாண்டின் நிறைவாக மலர்கிறது இப்புத்தாண்டு.

என்னும் இரண்டு தொடர்களில் பேரறிஞர் அண்ணா பிறந்த நூற்றாண்டின் நிறைவாக மலர்கிறது இப்புத்தாண்டு என்பதே சரியான பயன்பாடு. ஏனென்றால், அண்ணா பிறந்த நூற்றாண்டில் ஏற்கெனவே தொண்ணூற்றொன்பது புத்தாண்டுகள் மலர்ந்துவிட்ட காரணத்தினால் பேரறிஞர் அண்ணா பிறந்த நூற்றாண்டில் மலர்கிறது இந்தப் புத்தாண்டு என்னும் வாக்கியம் தவறானது எனக் கருதப்படுகிறது.

இவ்வாறாக இந்நூலில், தமிழ் மொழி செத்த மொழி ஆகாமல் செந்தமிழ் மொழியாக, செம்மொழியாக, செம்மையாக வாழவும் வளரவும் பல அரிய விளக்கங்கள் பேராசிரியர். நன்னன் அவர்களால் கொடுக்கப்பட்டுள்ளது பாராட்டுக்குரியதாகும்.

செந்தமிழைச் செத்த மொழியாக்கி விடாதீர்

ஆசிரியர் : மா.நன்னன்

வெளியீடு : ஏகம் பதிப்பகம்

விலை : ரூ.70.00