மேலாண்மை பொன்னுச்சாமியின் உயிர் நிலம் நாவலை முன்வைத்து

இலக்கியவெளியின் தமிழ்ப்பரப்பில், நாவல்களுக்கான இடம் தேக்கமாகவே இருந்து வருகிறது. கடந்த நாலைந்து ஆண்டுகளாகத்தான் நீண்ட... நெடிய... அத்தேக்கத்தை உடைத்துக் கொண்டு ஒருசில நாவல்கள் வரத்துவங்கியுள்ளன. கீழ வெண் மணி நிகழ்வை மையமாகக் கொண்டு செந்நெல், கீழைத் தீ ஆகிய இரண்டு நாவல்களும், கரையைத் தாண்டி நீருக்குள் சென்று, புதிய கடல் தரிசனத்தைக் காட்டிய ஆழிசூழ் உலகும், மண்டைக்காட்டுக் கலவரத்தின் உள்முகத்தைப் பார்க்க வைத்த மறு பக்கமும், தமிழ்வாழ் உருது முஸ்லிம்களின் வாழ்வுச் சிதிலங்களை முதல் பதிவாக ஏந்தி வந்த ஏழரைப் பங்காளி வகையறாவும், மதுரையின் ஒரு முகத்தை மீள் வரலாறாகப் பதிவு செய்த காவல் கோட்டமும், தாண்டவராயன் கதை, சலவான், மீன்காரத் தெரு போன்றவை அவற்றில் முக்கியமானவை. தமிழ் இலக்கியத்திற்குக் கிடைத்த, சிறந்த வரவுகள், புத்தம் புதிய கருக்கள்; புதிய புதிய தளங்கள்; தமிழ் எழுத்துக்குப் புதிய விஷயங்கள்!

melanmai_book_340ஆகஸ்ட் மாதம் பத்தாம் தேதி வாக்கில், நியூ செஞ்சுரி புக் ஹவுஸின் மதுரைக் கிளைக்குச் சென்றிருந்தபோது, விற்பனையாளர் பாலா, “நெறைய அய்ட்டம்ஸ் வந்துருக்கு, சார்” என்று, புதிதாக வந்திருந்த புத்தகங்களைக் காட்டினார்.

சற்றே இடைவெளி விட்டிருந்த நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், 2011 ஆம் ஆண்டின் இடைப்பகுதியில் ஒரே மூச்சில் அறுபது தலைப்புகளில் புதிய புத்தகங்களை வெளியிட்டிருந்தது. அதில், ஏழெட்டுப் புத்தகங்களைப் பொறுக்கியெடுத்தபோது, அவற்றில் ஒன்றாக, மேலாண்மை பொன்னுச்சாமி எழுதிய ‘உயிர் நிலம்’ நாவலும் வந்தது.

மேலாண்மை பொன்னுச்சாமியைப் பற்றித் தமிழ்ச் சிறுகதை உலகுக்கு அறிமுகம் தேவையில்லை. 300க்கும் மேற்பட்ட சிறுகதைகளைக் கொண்ட 22 தொகுதிகள் அவரைத் தமிழ் கூறும் நல்லுலகம் முழுவதும் உலாபோகச் செய்துள்ளன. வணிகப் பத்திரிகையிலிருந்து வராமல் நின்று போய்விட்ட வத்தல் பத்திரிகைவரை பாகுபாடின்றி எழுதிக் குவிப்பவர். வனப்பும் வளமும் மிகுந்த இந்திய கிராமங்களுக்கான அடையாளத்தை, தன் சொந்தக் கரிசல் கிராமத்தைக் குறியீடாகக் கொண்டு அவரது சிறுகதைகள் பேசி வருகின்றன. மரபுகளைப் புகட்டும் மனித நேயம்தான் அவர் சிறுகதைகளின் அடிநாதம். எளிமை, அழகு, உண்மை, உழைப்பு, அன்பு என்ற உள்ளடக்கம்தான் அவரது கிராமங்கள். அதே வேளையில் கிராம மக்களின் வாழ்வியல் முரண்களை, (மனப்) போராட்டங்களை, அவற்றிற்கான காரணங்களைத் தேடித்தேடி அவரது கதைகள் அலசுகின்றன. அதனால் கிராம மக்களின் சிறு அசைவுகூட அவர் கண்களிலிருந்து தப்புவதில்லை. தப்பியதுமில்லை. இதனைத் தமிழ் எழுத்துலகின் அடையாளங்களில் ஒருவரான சுஜாதா, ஆனந்த விகடனில், அவர் எழுதிய கற்றதும் பெற்றதும் பகுதியில், ‘மேலாண்மை பொன்னுச்சாமி அவர் பாட்டையில் ராஜா’ என்று சிலாகித்துக் கூறியிருக்கிறார். அது, பெரும் பேறு!

270 ரூபாய் விலை மதிப்பில் 540 பக்கங்களைக் கொண்டு வெளியாகியிருக்கும் உயிர் நிலம், ‘இயற்கை உரங்களைப் போட்டு உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்... நவீன இயந்திரங்கள், செயற்கை உரங்கள், பூச்சி மருந்துகள் பயன்படுத்தி விவசாயம் செய்வோர், கடன் சுமையாகி கடைசியில் பூச்சி மருந்து குடித்துச் சாவார்’ என்று பேசுகிறது. இதுதான், அத்தனை பெரிய நாவலின் ஒன் லைன்!

மகாராஷ்டிராவிலும் ஆந்திராவிலும் பருத்தி விவசாயிகள், வயலுக்கு அடித்த பூச்சி மருந்தின் மிச்சத்தைக் குடித்து, கொத்துக் கொத்தாய்த் தற்கொலை செய்து கொண்டார்கள். மழையின்மை, அதிக உரம், ஆர்ப்பாட்டமான பூச்சி மருந்துகள், மகசூலின்மை, வருமானமின்மை, முதல் நட்டம், வரி, வட்டி, கடன் சுமை, அரசின் மெத்தனம், அரசின் கண்டுகொள்ளாமை, அரசின் கையாலாகாத் தனம், வட்டிக்குக் கொடுக்கும் நபர்களின் அழிச் சாட்டியம், அசலையும் வட்டியையும் திருப்பி வாங்க, அவர்கள் கையாளும் புதிய புதிய முறைகள், நிலம் அபகரிப்பு, கடன் வாங்கிய குடும்பத்தைச் சேர்ந்த பெண்களைப் பெண்டாளுதல் ஆகியவை விவசாயிகளைத் தற்கொலை முடிவுக்குத் தள்ளியது. விஷம் கலந்த தண்ணீரைக் குடித்த ஆடு மாடுகள் போல நீலம் பாரித்து, நுரை தள்ளி அவர்கள் குடும்பம் குடும்பமாகச் செத்துப் போனார்கள். நீண்ட காலமாய் நடந்துவரும் இச்சம்பவங்களால், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை பல லட்சத்தைத் தாண்டிப் போய்விட்டது.

அதை நாம், தொலைக்காட்சிகளிலும், தி ஹிந்துவில் சாய்ராம் எழுதிய கட்டுரைகள் மூல மாகவும் அதன் தமிழாக்கத்தை தீக்கதிர் வழியாக அரைகுறையாகத் தெரிந்துகொள்வோம். பார்த்ததும், படித்ததும் சில நிமிடங்கள் பதறுவோம். நண்பர் களுடன் அகமுடைந்து பேசுவோம். நமது லௌகீக வாழ்வு, நம்மை இழுத்துக்கொண்டு போய்விடும். ஒருபெரும் அவலத்தை சுவாரசியமாக ஏற்றுக் கொண்டவர்களாவோம். காலப்போக்கில், அதை மறந்தும்போவோம். அந்தத் தற்கொலையில் ஒன்றை, மேலாண்மை பொன்னுச்சாமி தன் கிராமத்துச் சூழலில் நாவலாக எழுதியிருக்கிறார்.

அடிப்படையான விவசாயி, ஒருபோதும் நிலத்தை விட்டுக்கொடுப்பவனில்லை. அதை உயிராக நேசிப்பான். அவனால் அதை மட்டுமே நேசிக்க முடியும். அதைத்தான் அவன் செய்வான். அப்படியான ஒரு விவசாயி பரமசிவத்தை, நம் கண்முன்னே மேலாண்மை பொன்னுச்சாமி உலவ விடுகிறார், உயிர் நிலத்தில்!

நாம் பலமுறை பார்த்திருக்கும் விவசாயிதான், அவன். கிராமத்தின் வயல்களுக்கு ஊடே செல்லும் ஒற்றைத் தார்ச்சாலையில், பேருந்தில் நாம் பயணிக்கும் போது, கோமணம் கட்டிய உழவன் ஒருவன் வயலுக்குக் குப்பை அடித்துக் கொண்டிருப்பானே... முதுகில் மண்வெட்டிக் கணை தொங்க, தண்ணீர் போகும் பாதையில் கிடக்கும் குப்பையைக் காலால் ஒதுக்கிக் கொண்டு போவானே... அவன்தான் பரமசிவம்!

என்றபோதும் மேலாண்மை பொன்னுச்சாமியின் கைவண்ணத்தில் அவன் பாத்திரமாக எழுதப்படும் போது, அவனுக்குக் கூடுதல் உயிர்ப்பு வருகிறது. ‘மண்ணை புள்ளைமாதிரி மதிக்கிறவன்’ என்ற உபாசனை வார்த்தைகளாலும், பரமசிவத்தின் அகலமான முதுகு, நடுவில் முதுகுத் தண்டின் ஓடைப் பள்ளம் உயர்ந்த தாட்டியமான திரேகம், மூட்டுப்பெருத்த கைகால், பீமன் மாதிரி தேகக் கட்டு, உயரம் கருப்பண்ணசாமி மாதிரி, அகலமும் கச்சிதம் என்று அவனைக் கட்டம்கட்டமாக அறிமுகப்படுத்தி, நாவல் முழுக்க திரும்பத் திரும்பச் சொல்லுவதால் அவன் நம் மனதுக்குள் திணிக்கப் படுகிறான். கோமணம் கட்டிய தாத்தாவிலிருந்து லங்கோடுக்கு மாறிய அப்பனைத் தொடர்ந்து, டவுசருக்கு தான் மாறியிருந்தாலும் மாடுகட்டி, கமலையில் தண்ணீர் இறைத்து வயலுக்குப் பாய்ச் சினால்தான் அவனுக்கு நிம்மதி. கரண்ட் மோட்டார் மூலமாக தண்ணீர் பாய்ச்சினால் பயிர்கள் செத்து விடும் என்ற அறியாமை அவனுக்குள் (?) இருக்கிறது.

அறுபதுகளைத் தாண்டிவிட்ட அவனுக்கு ஒரு மனைவி. பெயர் காமாட்சி. கணவனே கண் கண்ட தெய்வம். பதிபக்தி. கிழவ(மணாள)னே கிழவி (மங்கை)யின் பாக்கியமாக வாழ்பவள். ஒரு சொல் அதிராதவள். தாண்டாதவள். மேலாண்மை கிராமப் பெண்ணின் அத்தனை லட்சணங்களையும் ஒருங்கே கொண்டவள். ‘சாப்புடுற புருஷன் முகம் பாக்குறதும்... சோறு கொழம்பு ருசியைச் சொல்லுற கண்ணைப் பாக்குறதும்... புருஷனுக்கு சோறு கொழம் போடச் சேர்த்து முகச்சிரிப்பையும் பரிமாறுறதும் தான் ஒரு பொண்ணுக்குத் திருப்தி’ என்று வாழும் மகாலட்சுமி. மகராசி. இப்படியோர் தம்பதியாக வாழ அவர்கள் கொடுத்து வைத்திருக்கிறார்கள். நினைத்து நினைத்து ஏங்கும்படியாக இருக்கிறது, அவர்களின் அன்னியோன்யம். தேசத்தின் எந்தப் பகுதியிலாவது இப்படி மனமொத்து, விட்டுக் கொடுத்து வாழ்கிறார்களா என்று சாலமன் பாப்பை யாவையோ, திண்டுக்கல் லியோனியையோ நடுவராகப் போட்டுத்தான் ஆகவேண்டும். ஆனாலும் திகட்டிப் போகுமளவுக்கு அன்னியோன்யம் கரைபுரளுகிறது. அதில் வாசகன் மூழ்கித் திளைக்கிறான். அந்த லாவகம் மேலாண்மைக்கே உரியது! அப்படியாகப் பட்ட அந்தத் தம்பதிக்கு இரண்டு பையன்கள். மூத்தவன் அழகேசன். இளையவன் முருகேசன். மகள்கள் இல்லை. மூத்தவன் முருகேசன் அய்யாவின் இயற்கை விவசாயத்துக்குத் துணையாக இருப்பவன். அய்யா சொல்வதே வேதம். ஊற்றும் கஞ்சியே அமிர்தம். இருக்கும் இடமே சொர்க்கம். மொத்தத்தில் அய்யாவின் கைப்புள்ள, அமுக்கினி!

இளையவன் முருகேசன் அப்படியே அண்ணனின் நேர் எதிர். அய்யாவின் இயற்கை விவசாயத்தைக் கேலி செய்பவன். நவீன வேளாண்மையை நம்பு கிறவன். நகக்கண்ணில் அழுக்குப் படாமல் நவீன விவசாயம் செய்யத் துடிப்பவன். சாண்டில்யன் நாவல்களில் மூழ்கிப் போகின்றவன். வெளிப் படையானவன்!

கழிவுத் தண்ணீரும் பழைய சோற்றுத் துண்டு களும், நீச்சுத்தண்ணீருமாக நிறைந்து, திண்ணை விளிம்பில் இருக்கிற குளுதாடியில் மாடுகளை நிறுத்தி, அவை ஆவலாதியுடன் குடிப்பதைப் பார்த்து ரசிக்கும் அய்யா, இளைய மகனைக் கண்டுகொள்வதே இல்லை. அவன் உணர்வை மதிப்பதும் இல்லை. ‘வெளங்காதப் பய’ என்றே அவனை விளிக்கிறார். இங்கேதான் அய்யாவுக்கும் இளைய மகனுக்கும் இயற்கை விவசாயத்துக்கும் நவீன விவசாயத்துக்குமான எதிர்நிலை உருவாகிறது.

அதனால் மகன், ஊர்ப் பஞ்சாயத்து மூலமாக நவீன விவசாயம் செய்ய, நிலத்தைப் பிரித்துக் கேட்கிறான். ‘இப்படியொரு மகனைப் பெற்று விட்டோமே...’ என்று பெற்றவர்கள் மட்டுமல்ல.... ‘இந்தப் பெற்றோருக்கு இப்படியொரு மகன் பிறந்திருக்கிறானே...’ என்று கிராமமே அரற்றுகிறது. ஊருக்கே அத்தனை கொடியவனாகி விடுகிறான், இளைய மகன் முருகேசன்.

பாலையா நாயக்கரை, சின்னராஜ் நாயக்கரைப் பார்த்ததும் துண்டை எடுத்துக் கையில் போட்டுக் கொள்ளும் பரமசிவத்துக்கு, தக்க ஆலோசகராகவும் உதவி செய்பவராகவும் வருகிறார், பல சரக்குக் கடை அருஞ்சுனை. புளியைக் காகிதத்தில் சுருட்டியும் பருப்பைக் காகிதத்தில் கூம்பாகப் பொட்டலம் கட்டியும் எண்ணெய்யை வேகமாக சீசாவில் ஊற்றிக் கொடுக்கும் லாவகம் தெரிந்த அவர், பரம சிவத்தை “மாமா” என்று அழைக்கிறார். அவரும் அருஞ்சுனையை “மாப்ளே” என்கிறார். குடும்ப உறவு, நெருக்கம், பாசம், பணப் பரிவர்த்தனை எல்லாமே அவர்களுக்குள் இழையோடுகிறது.

மகன் வைக்கப் போகும் பஞ்சாயத்து நடப்பதற்கு முன்பே, நிலத்தைத் தனியே பிரித்து முருகேசனுக்குக் கொடுத்துவிட்டால், அவமானத்துக்கு ஆளாகாமல் தப்பித்துக் கொள்ளலாம் என்றும் பரமசிவத்துக்கு வழி சொல்லுகிறார், அருஞ்சுனை. அதன்படியே அவன் கேட்கும் நிலம் ஒதுக்கப்படுகிறது.

ஒரே குடும்பம், இருவகையான விவசாயத்தை மேற்கொள்கிறது. அய்யா இயற்கை விவசாயத்தின் மூலமாக மேலும் மேலும் நிலமும் பணமுமாகப் பெருகுகிறார். மகன் நவீன விவசாயத்தின் மூலமாக மேலும் மேலும் கடனாளியாகிறான். பல இடங்களில் வாங்கிய கடனை அடைக்க ஒரே இடத்தில், பழநி மலை என்பவனிடம் ஒன்றரை லட்ச ரூபாய்க்கு பத்திரத்தில் கையெழுத்துப் போடுகிறான். அது பல்கிப் பெருகிப் பெருங்கடனாகி அவனை மூழ்கடித்து விடுகிறது. கடன் கொடுத்தவன் உடனடியாக ‘முடிக்கச்’ சொல்லி திடீரென வாய்தா போடு கிறான். அந்த வாய்தாவுக்குள் பணம் வராத பட்சத்தில், அவன் மனைவியை விபசாரத்தில் ஈடுபடுத்தி, பணம் சம்பாதித்துக் கொள்வதாகச் சொல்லிப் போகிறான்.

முருகேசன் பொண்டாட்டி ஈஸ்வரி அப்படி யொரு அழகான பெண்ணாக இருக்கிறாள். அவளது நிறம், அழகு குறித்து கிராமமே வியந்து பேசியதாக ஒரு குறிப்பும் வருகிறது. இங்கே கறுப்புக்கும் செகப்புக்குமான முரண் இப்படியாக அர்த்தப் படுகிறது : கறுப்பானவர்களெல்லாம் உழைப் பாளிகள். உண்மை பேசுபவர்கள். செகப்பான வர்கள் பணம் சம்பாதித்துக் கொள்ள மட்டுமே பயன்படுபவர்கள்.

கடனை அடைத்து நிலத்தையும் மனைவியையும் மீட்க, வேறு வழி தெரியாத முருகேசன் மிச்ச மிருந்த மருந்தைக் குடித்துச் செத்துப் போகிறான்.

இதுதான், நாவலின் ஒன் லைன் விரிவாகி உயிர் நிலமாகியிருக்கிறது. முக்கிய பாத்திரங்களை நிலைநிறுத்த, அவர்களைத் திரும்பத் திரும்ப அறிமுகப்படுத்திக்கொண்டே இருக்கிறார். நாவல் முடிவடையும் நிலையிலும்கூட அறிமுகம் தொடர் கிறது.

இதனிடையே மூன்று பெண் பாத்திரங்கள் நாவல் முழுவதும் விரவி வருகின்ன. அவைதான் உயிர் நிலத்தை உயிர்ப்பாக வைத்திருப்பவை. முதலாவது பெண் பாத்திரம், காமாட்சி, பரம சிவத்தின் மனைவி. தர்மபத்தினி. ‘பாடுபடறதுல சொகம் பாக்குற சீதேவி’. சொல்லவே வேண்டாம். அறுபது வயதுக்குமேல் ஆசைப்படும் கிழவனுக்கு, ஆகாரமாகத் தன்னைக் கொடுக்கிறாள்.

இரண்டாவதாக வரும் பெண், செண்பகம். இளையமகன் முருகேசனை முழுமையாகக் காதலிக்கும் பெண். முருகேசன் விரும்பும் நவீன விவசாயத்தை ஆதரித்து, ‘அப்பாவிடம் நிலம் கேள்’ என்று வழி சொல்பவள். காதலை நெஞ்சிலும் காதலனை உடம்பிலுமாகத் தாங்குபவள். ‘பாலையா நாயக்கருக்கிட்ட வாங்குன புஞ்சையை மாமா கிட்டே பேசி, வாதாடி வாங்குங்க. நீங்க ஒங்க முறையில வெவசாயம் பண்ணி, உங்க ஞாயத்தை ஜெயிக்க வெச்சுக் காட்டுங்க’ என்று போதி மரமாக இருப்பவள். அவன் வாங்கிக் கொடுத்த வாசனைக் குளியில் சோப்பை உடம்பில் தேய்க்கும்போது, புல்லரித்துப் போகிறவள். சோப்பை கையில் எடுக்கும் போது முருகேசனே உள்ளங்கையில் இருப்பதாக பாவித்துக் கொள்பவள். அவன் கேட்ட பொழுதிலும்.... கேட்காத பொழுதிலும்கூட பெரிதுவந்து தன்னை ஈபவள். பரமசிவத்தின் புஞ்சைக் காட்டில் வேலை செய்பவள்.

தன் காதலனுக்கு தனியே புஞ்சைக்காடு இருக்கிறது என்று மகிழ்ந்து போகும் செண்பகம், தடாலடியாக அவன் காதலைத் துறந்து விடுகிறாள். முருகேசனும் அதை சாதாரணமாக விட்டு விடு கிறான். வசதியான வீட்டுப் பெண்ணாக ஈஸ்வரி வந்ததும் எல்லாவற்றையுமே மறந்து போகின்றான். செண்பகத்தின் உடம்பை அணுஅணுவாக ரசித்து ஆட்கொண்டவனுக்கு, அவளது பிரிவு பெரிதாகப் படவில்லை என்பது அவனுக்குள்ளிருந்தது, காதலாகத் தெரியவில்லை. அதனால்தான் என்னவோ கதாசிரியர் வழிந்து வழிந்து அவள் உடம்பை, நிறுத்தி வைத்த உடுக்கை போலிருந்தது. மேலும் கீழும் அகன்று இடுப்பு மெலிந்திருந்தது. அவள் புதுமைப்பெண் ரேவதியைப் போல சிற்றுடம்பாக இருந்தாள் என்று அவள் வரும் காட்சிகள் முழுவதுமே மறக் காமல் ஆசிரியர் கூற்றாகச் சொல்லிக் கொண்டே வருகிறார். நடுக்காட்டில் வழிதவறிய அபலையாக அவள் கதை முடிந்து போகிறது.

மூன்றாவது பெண் ராஜாத்தி. கிணறு வெட்டப் போன புருஷன் வெடிவெடித்து, பாறை விழுந்து இறந்துபோக விதவையானவள். பரமசிவத்தின் புஞ்சைக் காட்டில் அவளும் வேலை செய்கிறாள். மகளை பாண்டிச்சேரியில் கட்டிக்கொடுத்துவிட்டு, இங்கே தனியாக இருப்பவள். மோட்டார் பம்பு செட்டில் குளிக்கும்போது மூத்தவன் அழகேசன் அவளை வழிமறித்துக் கையாள... அவள் ஓடி விடுகிறாள். பயந்துபோன அவன், ‘எங்கே விஷயம் வெளியில் தெரிந்து விடுமோ?’ என்று மனம் திருந்தி (?) மன்னிப்புக் கேட்க, அன்றிரவு அவள் குடிசைக்குப் போகிறான். அவள் தூங்கிக் கொண் டிருக்கிறாள். அதனால் அவனும் அதே குடிசையின் ஒரு ஓரத்தில் தூங்கிவிடுகிறான். முதலில் விழித் தெழுந்த ராஜாத்தி, தூங்கிக் கொண்டிருக்கும் அவனைக் கண்டு முதலில் திடுக்கிட்டாலும், விழித்த பின் மன்னிப்புக் கேட்கும் அவனுக்கு ராஜ சுகத்தைக் கற்றுக் கொடுக்கிறாள். இருபதாண்டு வெப்பத்தை அவன் தணிக்கிறான். தவறுக்கு மன்னிப்புக் கேட்கப் போனவன், தொடர்ந்து தப்புக்கு ஆளாகிறான். அதன் மூலம் தினமும் அவள் அவனுக்குத் தின்பண்டமாகிறாள். எச்சில் ஒழுக வாயைத் துடைத்துக் கொள்ளும் ஊர், பொரணி பேச ஆரம்பிக்கிறது.

ஆக கதையில் வரும் வயதான காமாட்சி உட்பட மூன்று பேருமே சல்லாபக் காட்சிப் பொருட் களாக நாவலில் இடம்பெறுகின்றனர். மூவருக்கும் ஒரே விதமான வருணனைதான். ஒதுங்கிக் கிடந்த மாராப்பு. சூரிய ஒளிய பார்த்திராத வலது பக்க மார்பகச் சதை. அதன் மாம்பழ நிறத் தகதகப்பும் குழைவும் என்பதாகப் பதிவு செய்யப்படுகிறது. சில வேளைகளில் கொக்கி அவிழ்ப்பு வருணனைகளும் மோட்டார் பம்புசெட் தண்ணீர் உபயத்தில் ஈரவர்ணிப்பும் உண்டு.

நாவலில் வரும் பழநிமலை பாத்திரம் தேசத்தின் அத்தனை பகுதிகளிலும் உலாவரும் ஒன்று. பீகாரில் கூட இதே போல பழநிமலைகள் இருக்கிறார்கள். உத்தரப் பிரதேசத்திலும் ஒரிசாவிலும்கூட.. தன்னை விவசாயிகளின், ஏழைகளின், வக்கற்றவர்களின் ரட்சகராகக் காட்டிக் கொள்ளும் அப்பாத்திரம் எமகாதகனாக மாறும் போக்கு தேசமெங்கும் நீக்கமற நிறைந்திருக்கிறது. விவசாயம் மட்டுமன்றி வேறு தொழில்களுக்கும் உதவுவதுபோலச் செயல் படும் பழநிமலைகள், ரத்தம் உறிஞ்சும் அட்டைகள். பிச்சைக்காரர்களைக்கூட அவர்கள் விட்டு வைப்ப தில்லை. ஜெயமோகனின் ஏழாம் உலகம் ஓர் உதாரணம்!

இவர்களைத் தவிர நாவலின் போக்கில், வேறு பாத்திரங்கள் எதுவும் பெரிய அளவில் பின்னப்பட வில்லை. நாவல்களைக் காப்பியமாக்கும் கிளைக் கதைகள் எதுவும் இந்த 540 பக்கங்களில் சொல்லப் படவில்லை. ஒரே நேர்க்கோட்டில், இயற்கை விவசாயம் என்று மட்டும் வழிந்து பதிவாக்கம் செய்யப்படுகிறது. உலகெங்கும் நவீன விவசாயமாகி விட்ட நிலையில், மறக்கடிக்கப்பட்ட... மறந்து போன... இயற்கை விவசாயம் குறித்த பதிவுகள் எதுவும் ஆதங்கத்தோடு நாவலில் இடம் பெற வில்லை. குறியீட்டு கிராமத்தில் பரமசிவம் மட்டுமே இயற்கை விவசாயியாக இருக்கிறார். ஒற்றைக்குரல். இயற்கை விவசாயம் என்றால் மாட்டுச்சாணி, ஆட்டுப் புழுக்கை, குப்பை, கொழிஞ்சி, ஆதாளைச் செடி, உழும் போது புரளும் மினுமினுக்கும் ஈரல்நிற மண் என்று மட்டுமே வகைப்படுத்தப்பட்டிருக்கிறது.

இயற்கை விவசாயமோ... நவீன விவசாயமோ... ஒவ்வொரு பயிரையும் அதற்குரிய தொழில்நுட்பத் திற்குத் தகுந்தாற்போல் நடவு செய்தால், அப்பயிர் நன்கு விளைச்சலைத் தரத்தான் செய்யும். அவ்வாறு செய்யவில்லையென்றால் எந்த விவசாயமென் றாலும் விளைச்சல் குறையும். இதுதான் நியதி. நவீனத்தில் முருகேசன் தோற்றுப் போவதற்கு அந்த விவசாய முறைதான் காரணம் என்று எங்கும் காட்டப்படவில்லை. இயந்திரங்கள் புஞ்சைக் காட்டுக்குள் ஓடியதால், நிலம் கெட்டிப்பட்டுப் போயிருக்கிறது என்று இரண்டு இடங்களில் வருகிறது. புஞ்சையில் மருந்தடிக்கும்போது, அவன் சாண்டில்யனைப் படித்துக் கொண்டிருந்தான் என்றுதான் சொல்லப்படுகிறது. அவன் தோற்றதற்கு அவனது பொறுப்பின்மை, விட்டேத்தித்தனம், யாந்திரிகம் தான் காரணமே தவிர, விவசாய முறை யில்லை!

அதே வேளையில், ஊர் முழுவதுமே மரியாதை தரும் மனிதராகப் பரமசிவம் காட்டப்படுகிறார். இயற்கை விவசாயி. அவரும் ஊருக்கு நல்ல மரியாதை தருகிறார். கிராமத்துக்குள்ளிருக்கும் அரசுடைமை யாக்கப்பட்ட வங்கியில் அலுவலக உதவியாளனை அதிகாரியாகக் கருதிக்கொண்டு, கடன் வாங்க அவனைத் தொங்கிக் கொண்டிருப்பதை வெறுக் கிறார். சொசைட்டியில் உறுப்பினராகி கடன் வாங்க மறுக்கிறார். அது அவரது விருப்பம். அப்படியாகப் பட்ட நல்ல மனிதருக்குப் பிரியமான மூத்தமகன் அழகேசன், விதவைப் பெண் ராஜாத்தியை தினமும் தின்பண்டம் போல முழுங்கும் விஷயம் ஊருக்குத் தெரிந்ததுபோல அவருக்கும் தெரியவருகிறது. ராஜாத்தி மனமுடைந்து தற்கொலை செய்து கொள்ள முயலும்போது, அவள் குடிசைக்கு வந்து அவளைக் காப்பாற்றுகிறார், பரமசிவம். அவரது பெரிய மனது, அங்கு தெரிகிறது. அதைப் படிக்கும் வாசகனுக்கு உண்மையாகவே சந்தோஷமாக இருக்கிறது. பரமசிவத்தின் செய்கை, கிராம மக்களின் பண்பு, அழிந்து கொண்டிருக்கும் மாண்பு. வாகன விபத்தில் அடிபட்டு உயிருக்குப் போராடிக் கொண் டிருப்பவனைத் தூக்கிச் சென்று மருத்துவமனையில் சேர்க்கப்பயப்படுகிறவர்கள், நாம். நகரவாசிகள், நரகவாசிகள். 108க்கு போன் செய்தால், அவன் கேட்கும் கேள்விகளுக்குச் சரியான பதிலைச் சொல்லாமல் அலைக்கழிப்பவர்கள்தான் நாம். இங்கே பரமசிவத்தின் வருகையை, அழிவிலிருந்து மீட்கும் ஓர் குறியீடாகக் கொள்ளலாம். மனசு, அவரை நினைத்துப் பரபரக்கிறது. பாசத்தில் தழுவிக்கொள்ளச் செய்கிறது.

ஆனால், அடுத்து அவர் சொல்லும் வாசகம், வாசகனின் நெஞ்சை அறுத்துப் போடுகிறது. அவர் சொல்கிறார். “நீயும் அழகும் ஒடம்பு கொழுத்துப் போன மப்புல தப்பு செஞ்சீங்க. அதுக்கு நீ மாண்டு மடிஞ்சுட்ட. நான் என்னத்துக்கு தலை குனியணும்? நா என்ன தப்பு செஞ்சேன். நீ செத்ததுக்கு அழகு தான் காரணம்ன்னு ஊரெல்லாம் பேசுறப்ப... நான் தலை தொங்கி நிக்கணுமே... என்னத்துக்கு? நான் என்ன தப்பு செஞ்சேன்? என்னத்துக்கு எனக்குத் தண்டனை?... நீ சாகக்கூடாது. நீ செத்தா அது ஒன்னையும் கேவலப்படுத்தும். எங்களைக் கேவலப் படுத்தும். ஒம்மகளோட வாழ்க்கையைச் சீரழிக்கும். அதனால... நீ சாகுறதை நிறுத்து. ஆறுமாசமா பண்ணுன தப்பை நீயே நிறுத்து. அழகு வருவான். அவனை வெளக்கமாத்தாலே அடிச்சு வெரட்டு. ஒன்னை நினைக்காத அளவுக்கு... அதட்டி வெரட்டு. நீ ஒண்ணை ஒடுக்கிக்கோ. வழக்கம்போல புஞ்சைக்கு வா. வேலையப் பாரு. மனச் சுத்தத்தோட நடந்துக் கோ. ஆறுமாசத் தப்பு ஆறுமாச ஒழுக்கத்துல அயந்துரும். அப்புறம் நீ ஒம்மகக்கூட போயிரு. பாண்டிச்சேரியிலேயே இரு. யாருக்கும் எந்தக் கெடுதலும் வராது. நடந்த தப்பு இனி நடக்கப் போற நடத்தையில கழுவப்பட்டுரும்”.

என்ன நியாய உணர்வு? எத்தனை அருமையான போதனை? இதில் பக்கத்துக்குப் பக்கம் ராசா, தெய்வம், மகராசன் என்று அவருக்கு வார்த்தை களின் ஆராதனை! உழுகுறப்போ ஊருக்குப் போயிட்டு அறுக்குறப்போ அருவாளோட வர்ற கதை என்பது, இதுவாகத்தான் இருக்க முடியும்!

ஒடிச்சு வளர்க்காத முருங்கையாக... அடிச்ச வளர்க்காத பிள்ளையாக... கள்ள மனத்துடன் தினவெடுத்துத் திரியும், தன் மகன் தப்பு செய் கிறான் என்று தெரிந்ததும் ஊர் போற்றும் அந்த உத்தம அய்யா என்ன செய்திருக்க வேண்டும்? மகன் பெண்டாடிய விதவைப் பெண்ணை, அவனுக்கே மணமுடித்து வைத்திருக்க வேண்டும். அப்படிச் செய்திருந்தால், அவர் நாவலில் குறிப்பிடப்படு வதைப் போலப் பெரிய மனிதர். கரட்டுக்காட்டுக்கு முரட்டு மண்வெட்டிதானே சரியாக இருக்க முடியும்? அதை விட்டுவிட்டு, ‘நீ செத்தா அது ஒன்னையும் கேவலப்படுத்தும். எங்களைக் கேவலப் படுத்தும்’ என்று தன் கௌரவம் பார்க்கிறார். மகனை ஒரு வார்த்தைகூட கண்டிக்காமல் கண்டும் காணாததுபோல இருந்துவிடுகிறார். ஆறுமாசத் தப்பு ஆறுமாச ஒழுக்கத்துல அயந்துரும் என்று விதவைப் பெண்ணிடம் நுட்பமும் நுணுக்கமுமான விரிவுரை வேறு. இலக்கிய வழி வரலாற்றுப் பெருமிதம் எதன் குறியீடாகக் கொள்வது?

சிறுகதை என்பது கரு, போக்கு, அப்புறம் ஓர் உச்சத்துடன் அல்லது வீழ்ச்சியுடன் நிறைவடைந்து விடுவது. நாவல் அப்படியல்ல. ஒன்றிலிருந்து ஒன்றாக அது கிளைவிட்டுக் கொண்டே செல்லும். வெவ்வேறு பாதைகளைத் திறந்துவைத்துக்கொண்டே போகும். ஒன்றிலிருந்து வேறொன்றைக் காட்டும். வேறொன்றிலிருந்து பிறிதொன்றைத் தொடும். நீள் பயணத்துக்கான வழி அது. அதன் போக்கு முடிவடையாதது. தொடர் ஓட்டம் கொண்டது.

மேலாண்மையின் அரும்பு / தாவணி சிறுகதை களைப் படித்துவிட்டு, ‘இப்படியும் எழுத முடியுமா?’ என்று வியந்தவன் நான். அச்சிறுகதையின் வார்த் தைகள் எனக்குள் ஒரு உக்கிரத்தை, வரலாற்றை, எளிமையின் ஆழத்தை, ஒரு தரிசனத்தை எனப் பல ஊற்றுக்கண்களைத் திறந்துவிட்டுக் கொண்டே போயிருக்கிறது. அதன் பிறகு நான் படித்த மேலாண் மையின் சிறுகதைகளில் அதே வார்த்தைகள்தான் இருந்தன. அதே வார்த்தைகள்தான் உயிர் நிலத்திலும் உலவுகின்றன. ஒரு சம்பவத்தை எடுத்துக்கொண்டு, அதன் அத்தனை கோணங்களையும் கோனார் நோட்ஸ் பதவுரைபோல வார்த்தைகளால் சதிராடுவது என்பது மேலாண்மையின் உத்தி. வெறுமனே சம்பிரதாயத்துக்கு எழுதப்பட்ட சலிப்பைத் தரும் சாகசம். ‘ஒரே பொருள் குறித்து எப்பொழுதும் புதிய அம்சங்களைக் குறிப்பிடுவது இயலாது’ என்று தேவி பிரசாத் சட்டோபாத்தியாயா தனது உரையில் ஒருமுறை குறிப்பிட்டு இருக்கிறார்.

மேலாண்மையின் பிறிதொரு அம்சம், அவர் எழுதிய அத்தனை சிறுகதைகளுக்குள்ளும் ஓர் இழை ஓடிக்கொண்டே இருக்கும். அச்சிறுகதைகள் ஒன்றையொன்று நினைவுபடுத்தும். ஆனந்தவிகடனில் பரிசு பெற்ற ‘ஆட்டுக்கம்பும் பூ மொட்டும்’ என்ற சிறு கதை, அப்படியே இந்தியா டுடேயில் ‘பீர்க்கை’ என்ற பெயரில் வந்திருந்தது. இதற்கு முன்பு அவர் ஆறு நாவல்கள் எழுதியதாக எப்போதோ சொன்ன ஞாபகம் எனக்குண்டு. அவற்றில் சில கல்லூரிகளில் பாடத்திட்டமாக வைக்கப்பட்டுள்ளன என்றும் கூறியிருக்கிறார். மு.வ., அகிலன்., தெ.பொ.மீ., ஆகியோரின் படைப்புகளாக வைக்கப்பட்ட

பாடத்திட்டங்களின் இடத்தில், தன்னாட்சிக் கல்லூரிகளின் / சுயநிதி ஆசிரியர்கள் எழுதிக் கொள்ளும் நூல்கள்தான் இப்போது வைக்கப் படுகின்றன. அவற்றின் தரம் குறித்துப் பெரிதாகச் சொல்லிக் கொள்ளும்படி ஏதும் இருப்பதில்லை. சில கல்லூரிகளில் சாதிய அபிமானத்தில் ஓரிரு நல்ல நூல்கள் வைக்கப்படுகின்றன. சில கல்லூரிகளில் படைப்பாளர்களின் நச்சரிப்பு, பாடத்திட்டமாக இருக்கிறது. இந்த நிலை பொதுவானதே!

நாவலைப் படித்துவிட்டு மூடும்போது, எனக்குள் எந்த அதிர்வும் இருக்கவில்லை. வேறொரு கதைக் கான இடமும் அங்கே இருக்கவில்லை. ஏமாற்றமாக இருந்தது. பாத்திரங்களுடன் படைப்பாளியும் சிரிக்கிறார்; படைப்பாளியும் அழுகிறார். எல்லா வற்றையும் அவரே ஆசிரியரின் கருத்தாக, வாசகனுக்கு இடம் வைக்காமல், வாசக வெளியை உருவாக் காமல் சொல்லிக் கொண்டே போகிறார். இந்த நாவலுக்கான ஒன் லைனை விரித்தால், அதிக பட்சம் ஒரு நல்ல சிறுகதைக்கான வெளி மட்டுமே இருக்க முடியும். அதுவும் ஒரு தலைமுறைக்கு முந்தியதான, புதுமைப்பெண் படம் வந்த கால கட்டத்துக்கான சிறுகதை!

சிறுகதையின் சம்பவத்தை வேறுவேறு வார்த்தைகளால் விரித்து விரித்து எழுதினால், அது நாவலாகி விடும் என்ற தப்பான கருதியல் எங்கிருந்தோ பரப்பப்படுகிறது. அதன் விளைவுதான் ஆயிரம் பக்கங்களுக்கு எழுதப்போவதாகச் சொல்லிக்கொள்ளும் விளம்பரங்கள். பத்தாயிரம் பக்கங்களுக்கான அறிவிப்புகள். இதை கிராமியப் பழமொழியில், ‘வலுத்தவனுக்கு வாழை; இளைத்தவனுக்கு எள்ளு’ என்று சொல்லலாம். ஆனால் வாழை, உடனே அழியக்கூடியது. எள்ளு அப்படியல்ல!

நிலவுடைமை அட்டூழியங்களைச் சுமந்து, 180 பக்கங்களுக்குள் வந்த மலரும் சருகும், அரசுத் துறையின் மேதாவிலாசத்தைப் பகிர 120 பக்கங் களுக்குள் முடிந்துபோன மின்னுலகம், சமூக நாற்றத்தை அள்ளிக்கொண்டு 144 பக்கங்களுக்குள் வந்த வடக்கேமுறி அலிமா, ஏழை விவசாயிகளின் நிலங்கள் லாபவெறி கொண்ட மனிதர்களால் அபகரிக்கப்பட்டு, சமூகத்தின் சொத்துடைமையாளர்களிடம் மறுபங்கீடு செய்கிற அவலநிலையை அதிர்ச்சியோடு பதிவு செய்யும் 152 பக்கங்களைக் கொண்ட பொய்கைக்கரைப்பட்டி எல்லாமே சின்னச் சின்ன நாவல்கள் தான். பெரிய அளவில் இருந்ததால்தான், நாவல் என்ற கற்பிதத்தை உடைத் தவை, இவை. மையப்பொருள், என்ன சொல்ல விரும்பியதோ அவற்றை மட்டுமே பேசியவை. ஆனால் இன்று, பக்கங்கள் அதிகமுள்ள புத்தகம் தான் நல்ல நாவல் என்று சொல்லிக் கொள்ளப் படுகிறது. ‘500 / 1000 பக்கத்துல எழுதிருக்கேன்’ என்று பெருமையாகப் பேசுவதைக் கேட்க முடிகிறது. அதை உயிர் நிலத்திலும் பார்க்க முடிகிறது.

“என்னைப் பொறுத்தவரை இலக்கியம் என்பது பகிர்ந்து கொள்வது. இன்பத்தை மட்டுமல்ல; துன்பத்தைப் பகிர்ந்து கொள்வது; வலிகளைப் பகிர்ந்து கொள்வது; வாசகனை, வளரும் தலை முறையைத் தயார்ப்படுத்துவது, தகுதிப்படுத்துவது, அவனை உயர்ந்த மனிதனாக்குவது, சமூகத்தை மேம்படுத்துவது, சீர்ப்படுத்துவது, பண்படுத்துவது. பேதங்களை ஒழிக்க வேண்டும். இதுதான் இலக்கியம். எதிலும் முற்போக்கு இருக்க வேண்டும். யதார்த்தம் இழையோட வேண்டும். எளிமை வேண்டும். அது தான் கலையின் உயிர். மற்றபடி யார் என்ன சொன்னாலும் அதைப் பற்றி எனக்குக் கவலையில்லை.” மேலாண்மை பொன்னுச்சாமி சாகித்திய அகாடமி விருது பெற்றதும் சொன்ன கருத்து, இது.

ஆனால் எங்களுக்குக் கவலையாக இருக்கிறது!

உயிர் நிலம்

ஆசிரியர் : மேலாண்மை பொன்னுச்சாமி

வெளியீடு : என்.சி.பி.எச்.

விலை : ரூ.270.00