இந்தியா தனிப்பட்ட ஒரு நாடா அல்லது பல நாடுகளின் தொகுப்பாக வடிவம் பெற்றுள்ள ஒரு நாடா? இதற்கு விடை காண்பது ஓர் எளிய முயற்சி அல்ல. இதனாலேயே இந்தியாவை ஒரு துணைக் கண்டம் என்று அழைப்பது எல்லோருக்கும் வசதியாக இருக்கிறது. இந்தியா என்று கருதப் படும் இன்றைய விசாலமான நிலப்பரப்பு பல வகையான மாறுபாடுகளையும், வேறுபாடுகளையும் தன்னுள் அடக்கியுள்ளது. பலவிதமான தேசிய இனங்கள் ஒன்று கூடி ஒரே நாடாக வாழும் வியக்கத் தகுந்த ஒரு நிலைமை இங்கு எதார்த்தமாக உள்ளது.

parthibaraja_400பலவகையான மக்கள் அவரவர்களுக்கென்றே இயல்பாக உள்ள தனித்தன்மை வாய்ந்த அடையாளங்களோடு இந்தியாவில் வாழ்ந்து வருகிறார்கள். இனம், மதம், மொழி, நிறம், தோற்றம் போன்ற தனித்தனியான அடையாளங்களைப் பாதுகாக்கும் விதத்திலான ஓர் அரசியல் அமைப்புச் சட்டத்தை வடிவமைத்துக்கொண்டு மக்கள் வாழ்ந்து வரு கிறார்கள். அவரவருடைய தனிப்பட்ட அடையாளங் களைப் பாதுகாப்பதும், அவற்றின் அடிப்படை யிலேயே மாறிக்கொண்டிருக்கும் சமுதாய வாழ்க் கையை ஒழுங்கமைத்து அமைதியாக வாழ முனைவதும் இந்தியாவில் உள்ள ஓர் எதார்த்தம். இது, பல விதமான நெருக்கடிகளையும், சிக்கல்களையும் தன்னளவில் கொண்டுள்ளது.

இதனால், இந்திய மக்களாட்சி முறையில் மாறுபட்ட தனித்தன்மைகளை ஒருங்கிணைத்து முன்னேறுவது மிகப் பெரிய பிரச்சினையாக உள்ளது. சாதி, மதம், இனம், மொழி என்ற தனித் தனியான அடையாளங்களைப் பாதுகாக்கும் நோக்கத்தில், அந்த அடிப்படைகளை முதன்மைப் படுத்தி அரசியல் இயக்கங்கள் தோன்றுவதும் செல்வாக்குப் பெறுவதும் இயல்பாகிவிட்டன. அந்த இயக்கங்களை ஒருங்கிணைத்து ஒரு நாட்டில் வளர்ச்சியை ஏற்படுத்துவதும், அதை முன்னெடுத்துச் செல்லுவதும் மிகமிகச் சிரமமான முயற்சி. இந்த ஒருங்கிணைப்பு முயற்சிக்குத் தடையாக இருப்பவை அடிப்படையிலான மாறுபாடுகளும், வேறுபாடு களும் தான். இது பற்றிய விரிவான, ஆழமான, தெளிவான புரிதல் சமூக அறிவியல் அடிப்படையில் நிகழ்த்துவது இன்றைய முக்கியமான கடமைகளில் ஒன்றாக அமைய வேண்டும்.

அந்தவிதமான ஒரு முயற்சிக்கு முன்னோட்ட மாக அண்மையில் வெளிவந்திருக்கும் நூல்தான், “தமிழ் மொழி அரசியல்” ஒருவிதமான ஆழ்ந்த ஈடுபாட்டுடன் இந்த நூலை வடிவப்படுத்தியிருக் கிறார் கி.பார்த்திபராஜா. தன்னுடைய புரிதலுக்காக இவர், ஏராளமான ஆதாரங்களையும், ஆவணங் களையும், தகவல்களையும் திரட்டி ஆய்வை நிகழ்த்தி யிருக்கிறார். விருப்பு, வெறுப்புக்களை இயன்ற வரை தவிர்த்து சமூக அறிவியல் அணுகுமுறைக்கு நெருக்கமாக இணக்கமாகச் செயல்பட்டிருக்கிறார்.

இவர், தன்னுடைய ஆய்வின் அடித்தளமாக இந்தியாவை முழு அளவில் தேர்ந்தெடுத்துள்ளது வியக்கத்தகுந்த ஒரு முயற்சியாக உள்ளது. அதைக் குறித்து இவர் இப்படிக் குறிப்பிடுகிறார். “இந்தியா என்று அழைக்கப்படும் நிலப்பரப்பில் வழங்கப் படும் மொழிகளின் எண்ணிக்கை மிகப் பலவாகும். இந்திய மானிடவியல் கணக்கெடுப்பு நிறுவனம் தனது மொழிகள் குறித்த கணக்கெடுப்பின்படி, இந்தியாவில் மொத்தம் பன்னிரண்டு மொழிக் குடும்பங்களைச் சேர்ந்த 325 மொழிகள் பேசப்படுவதாகக் குறிப்பிடுகிறது. இந்தியாவில் மொத்தம் 1300க்கும் மேற்பட்ட மொழிகளும், கிளை மொழிகளும் உள்ளன என்பார் மொழியியல் பேராசிரியர் அகத்தியலிங்கம். எனவே, இந்தியாவை மொழிகளின் அருங்காட்சியகம் என்றும் புகழ்வார்.”

இந்திய மொழிகளில் நீண்ட வரலாற்றுப் பின்னணியைக் கொண்டிருப்பது தமிழ்மொழி. அதனுடைய தொன்மையைக் கணக்கிடுவதில் இன்று வரை மாறுபட்ட கருத்துக்கள் இருந்து வருகின்றன. இருந்தாலும், வரலாற்றில் தன்னுடைய தனித் தன்மையைத் தொடர்ந்து காப்பாற்றி வருகிறது. வளர்ச்சிப் போக்கைக் கணக்கில் எடுத்துக் கொண்ட நமது முன்னோர்கள் தமிழ் மொழி வளர்ச்சிக்கான அடிப்படைகளை வரையறுத்து வைத்துள்ளனர். அதன் அடிப்படையிலேயே புதிய போக்குகளை உள்வாங்கிக் கொண்டு தமிழ்மொழி தன்னைத் தற்காத்துக் கொண்டு தனிப்பட்ட விதத்தில் தொடர்ந்து வரலாற்றினூடாக வளர்ந்து வருகிறது. சமூகம், அரசியல், பொருளாதாரம், கலை, இலக்கியம் போன்ற பல துறைகளையும் தழுவிக் கொண்டு தமிழ் மொழி வளர்ந்துகொண்டே இருக்கிறது. வெளியிலிருந்து வரும் தாக்கங்களை ஏற்றுக்கொண்டு தன்னுடைய தனித்தன்மையை இழக்காமல் தனித் துவத்தோடு தமிழ்மொழி இயங்கிக் கொண்டிருக்கிறது.

இதனாலேயே, கடவுளை வாழ்த்தும் மரபுக்கு இணையாக மொழியை வாழ்த்தும் இயல்பும் தமிழகத்தில் தொடர்ந்து இருந்து வருகிறது. இதற்குக் காரணமாக இருப்பது தமிழ்மொழியின் தனிச்சிறப்புத்தான்.

இந்திய மொழிகள் பலவற்றிலும் வடமொழியின் தாக்கம் தொடர்ந்து நிகழ்ந்துகொண்டிருந்த பொழுது, அதிலிருந்து முழுவதுவமாக விலகி நின்று தனித்து இயங்கி வருவது தமிழ்மொழி. வியக்கத்தகுந்த இந்தப் போக்கிற்கு உரிய அறிவியல் ரீதியான காரணங் களை முன்வைத்து இவர் தன்னுடைய ஆய்வை நிகழ்த்துவது இந்த நூலின் குறிப்பிடத்தகுந்த ஒரு சிறப்பு.

வரலாறு நெடுகிலும், தமிழ் மொழியின் மீது ஆதிக்கத்தைச் செலுத்த முனைந்த வடமொழி இயலாளர்களைப் புறக்கணித்து தமிழ் மொழி வல்லுநர்கள் தனிப்பட்ட ஒரு போக்கை நிறுவியிருக் கிறார்கள். அதைக் குறித்துத் தன்னுடைய கருத்துக் களை இந்த விதத்தில் முன்வைக்கிறார். “வட மொழி ஓ தமிழ் என்ற எதிர்ப்பு முரணுக்குத் தத்து வார்த்த அடிப்படையை அமைத்துக் கொடுத்தவர் கால்டு வெல்லே என்பார் க.கைலாசபதி. உண்மை தான். இறைநிலை அடிப்படையிலும் தமிழ்மொழி ஈடுபாடு என்ற அடிப்படையிலுமே நின்று வட மொழியை எதிர்கொண்டுவந்தவர்களுக்குக் கால்டு வெல் (1814-1891) திராவிட மொழிகளை ஆராய்ந்து 1856-இல் வெளியிட்ட திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் மிகச் சிறந்த பேராயுதமாயிற்று. திராவிடம் சமஸ்கிருதத்திலிருந்து பிறந்தது என்ற கருத்து, முந்தைய தலைமுறையினராகிய மொழி நூல் வல்லுநர்க்கு ஏற்புடையதாக விளங்கினும், இக்கால அறவே அடிப்படையற்றும் போன கட்டுக் கதையாகி விட்டது.” வடமொழியைக் கற்றுக் கொண்டவரான பார்த்திபராஜா கால்டு வெல்லின் கருத்துக்களை முதன்மையாக்கித் தொடர்ந்து ஆய்வுகளை மேற்கொள்கிறார்.

தமிழ் தவிர்த்த பிற திராவிட மொழிகளைப் பற்றிய தெளிவான கருத்தையும் இவர் தன்னுடைய ஆய்வில் வெளிப்படுத்துகிறார். வடமொழி பிற திராவிட மொழிகளைத் தாக்கத்திற்கு உள்ளாக்கி யதைப் போலத் தமிழ் மொழியை உள்ளாக்க முடியவில்லை என்பதை இவர் இப்படிக் குறிப்பிடு கிறார். “தெலுங்கும், கன்னடமும், மலையாளமும் தத்தம் தனிநிலைகளை நிலைநாட்டுவது அறவே இயலாத அளவு சமற்கிருதச் சொற்களை அளவிற்கு மீறிக் கடன் வாங்கியுள்ளன; அவற்றின் துணைமை எதிர்நோக்கிப் பழகிவிட்டன. ஆதலின், தன்னுடைய சமற்கிருதக் கலவைகளைக் கைவிடுவது தெலுங்கு மொழிக்கு அரிதாம் என்பது உண்மை. கன்னடத்திற்கு அதனினும் அரிதாம். மலையாளத்திற்கு அவை எல்லாவற்றைக்கும் அரிதாம். அவற்றின் இயல்பு அதுவேயாயினும் திராவிட மொழிகள் அனைத்திலும், உயர்தனிச் செம்மொழியாக நிலைபெற்றிருக்கும் தமிழ், தன்னிடையே இடம்பெற்றிருக்கும் சமற்கிருதச் சொற்களை அறவே ஒழித்துக் கட்டிவிட்டு உயிர் வாழ்வதோடு, வளம் பெற்று வளர்வதும் இயலும்.”

இவர் மேலே குறிப்பிட்டுள்ள கருத்துக்களைத் தகுந்த அடிப்படைகளோடு ஆய்வு செய்து தன்னுடைய முடிவை இந்த நூலில் நிறுவுகிறார்.

இந்திய வாழ்க்கையில் வரலாறு நெடுகிலும் தொடர்ச்சியான மாற்றங்கள் பலவகையான தளங் களில் தொடர்ந்து நிகழ்ந்துகொண்டிருக்கின்றன என்பது வெளிப்படையான ஒரு போக்கு, வெளி நாட்டினர்களான ஆரியர், ஹுணர், அராபியர், ஐரோப்பியர் போன்றவர்களின் படையெடுப்பு களால் இந்திய வாழ்வில் தொடர்ச்சியான மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. மேற்கின் ஆதிக்கம் கிழக்கின் மீது பல நூற்றாண்டுகளாகத் தொடர்ந்து நிலவி வருகிறது. அந்தத் தாக்கங்களை எதிர்கொண்டு, இந்தியா தன்னுடைய தனித்தன்மைகளைக் காப்பாற்றிய படியே உருமாறிக் கொண்டிருக்கிறது. இந்தியாவில் கிறித்துவமும், இஸ்லாமும் தாக்கங்களை நிகழ்த்தி யிருக்கின்றன. சமணமும், பௌத்தமும், வேதங்களும், புராணங்களும் இந்திய தேசிய இனங்களின் மீது தாக்கத்தை நிகழ்த்தியிருக்கின்றன. கீழை, மேலை நாடுகளின் தொடர்புகளும் இந்தியாவில் பல வகையான மாற்றங்களை உருவாக்கியிருக்கின்றன. இந்த வகையான வளர்ச்சிப் போக்கில் அதிக அளவிற்குப் பிறவற்றின் தாக்கங்களை உள்வாங்கிக் கொண்டு தன்னிலை பிறழாமல் தனித்த அடை யாளத்துடன் தமிழ்மொழி தொடர்ந்து வளர்ந்து கொண்டே இருக்கிறது. இனியும் மேலும் மேலும் வளர்ந்துகொண்டே இருக்கும். அதற்கான அடிப்படை களைத் தமிழ் தன் இயல்பில் கொண்டிருக்கிறது என்பதே உண்மை.

புதிய கருத்துக்களை உள்வாங்கிக் கொண்டு, அவற்றிற்கே உரிய சொல்லாக்கங்களைத் தமிழில் உருவாக்கிக் கொள்ளக்கூடிய தனித்தன்மை தமிழுக்கு இயல்பு. அதற்கேற்ற விதத்தில் தமிழ் மொழியின் இலக்கணம் வடிவமைக்கப்பட்டிருக்கிறது.

கடந்த பல நூற்றாண்டுகளாக வடமொழியை எதிர்கொண்டு அதற்கு இரையாகாமல் தனித்து இயங்கிவரும் தமிழ் மொழிக்குத் தமிழ் மரபாளர்கள் ஆற்றிய அளவற்ற பணியை இந்த நூல் முழுவதுமாக இவர் விவரிக்கிறார்.

நாடு பிடிக்கும் போர் முறையை விடக் கடுமை யான போர் முறையைத் தமிழ் வல்லுநர்கள் தொடர்ந்து பின்பற்றி வருகிறார்கள் என்பதை இவர் தகுந்த எடுத்துக்காட்டுக்களோடு நூல் முழுவது மாக விளக்குகிறார். ஒரு வகையான ஏகாதிபத்தியத் தன்மையுடன் நிகழ்ந்து வரும் இந்த மொழிப் போரில் தமிழர்கள் தங்களுடைய தாய்மொழியைக் காப்பாற்றத் தொடர்ந்து போராடி வருகின்ற வரலாற்றை இவர் விரிவாகவும், ஆழமாகவும் ஆய்வு செய்து மிகுந்த ஈடுபாட்டுடன் தன்னுடைய கருத்துக்களை நிறுவுகிறார்.

தமிழ்மொழி வரலாற்றில் சமயங்கள் ஏற்படுத்திய தாக்கங்களை மிகுந்த அக்கறையோடு விருப்பு வெறுப்பு இல்லாமல் இனம் கண்டுகொண்டு அடை யாளப்படுத்துகிறார். நிலவுடைமைச் சமுதாய வாழ்க்கையில் இந்தியச் சமயங்களின் பங்களிப்பு தவிர்க்க முடியாத ஒன்றாகவே இருந்து வந்திருக்கிறது. அடிப்படையில் பலவிதமான மாறுபாடுகளையும், வேறுபாடுகளையும்கொண்டு வாழ்ந்து வந்த மக்களை ஆன்மிக ரீதியாக ஒருங்கிணைப்பதைச் சமயவாதிகள் தொடர்ந்து நிகழ்த்தி வந்திருக் கிறார்கள் என்பதையும் இந்த நூலின் வாயிலாக உணர முடிகிறது.

தமிழ்மொழிக்கும், வடமொழிக்கும் இடை யிலான மொழிப் போர் இந்திய விடுதலைக்கு முன்பே தொடங்கப்பட்டுவிட்டது. கால்டுவெல்லின் வருகைக்குப் பின் தமிழ்மொழியின் தனித்தன்மை பற்றிய விழிப்புணர்வு பெருகி வளர்ந்த போக்கைத் தகுந்த எடுத்துக்காட்டுகளுடன் விளக்குகிறார் இவர். மனோன்மணியம் பெ.சுந்தரம்பிள்ளை, மா.பொ.சிவஞானம், தேவநேயப் பாவாணர் முதல் பிற்காலத் தமிழறிஞர்கள் வரை தொடர்ந்து நடத்திய மொழிப் போர் கருத்துக்களைத் தன்னுடைய ஆய்வுக்கு இவர் எடுத்துக்கொண்டார். அரசியல் தளங்களில் நிகழ்த்தப்பட்ட மொழிப் போர்களையும் குறிப்பிட்டு இவர் கருத்துக்களை முன்வைக்கிறார். திராவிட இயக்கத்தின் தலைவர் ஈ.வெ.ரா.வின் மொழிப் போராட்டங்களின் தன்மைகளையும், விளைவுகளையும் தெளிவுபடுத்துகிறார். இதில், பிராமணர் மற்றும் பிராமணர் அல்லாதார் இடையே நிலவி வந்த மொழிபற்றிய கண்ணோட்டங்களும் விளக்கப்படுகின்றன. அதன் பின்னணியில் இயங்கிய அரசியலையும் இவர் சுட்டிக் காட்டுகிறார். அந்தப் போராட்டங்களின் தன்மைகளை விளக்குகிறார்.

தமிழகத்தில் முதலாவதாக நிகழ்ந்த மொழிப் போரின் சமுதாய வரலாற்றுப் பின்னணியை இனம் காண்கிறார். இந்தி மொழி பெரும்பான்மையினர் பேசும் மொழி என்ற கருத்தை மறுக்கத் தகுந்த புள்ளி விவரங்களை முன்வைத்துப் பேசுகிறார். இந்தி வளர்ச்சியடையாத மொழி என்று குறிப்பிடும் இவர், இதை இந்தியப் பொதுமொழியாக்குவது பொருத்தமில்லாதது என்ற கருத்தை வலியுறுத்திக் கூறுகிறார்.

தமிழர்கள் நிகழ்த்திய மொழிப் போர்களை அவற்றிற்கே உரிய காலச் சூழலை முன்வைத்து விளக்குகிறார். இந்த மொழிப் போர் தமிழகத்தைப் பொருத்தவரை மிகப் பெரிய அரசியல் மாற்றத்தைக் கொண்டு வந்ததோடு, தேசிய கட்சிகளின் செல் வாக்கைக் குறைத்துவிட்டது என்ற உண்மையையும் இவர் இந்த நூலின் வாயிலாகப் புலப்படுத்துகிறார்.

“இந்திய தேசம் என்பது பிரிட்டிஷ் ஏகாதி பத்தியவாதிகளால் தங்களின் நிர்வாக நலனுக்காக வலிந்து உருவாக்கப்பட்ட ஒரு அமைப்பாகும். அது ஒருபோதும் மக்கள் சமூகமல்ல; அது ஒரு அரசு சமூகம்” என்ற கருத்தை வெளிப்படுத்திய இவர் தொடர்ந்து தேசிய இயக்கம் பற்றிய தனது வரை யறைகளைத் தெளிவாக்குகிறார்.” தேசிய இயக்கம் என்பது நான்கு பண்புக் கூறுகளைக் கொண்டிருக்கும் என்பர். முதலாவதாக, ஒரு தேசிய இயக்கம் என்பது மொழி .கலை, இலக்கிய, கலாச்சார மறுமலர்ச்சி இயக்கமாகும். இரண்டாவதாக, அது ஒரு விவசாயிகள் இயக்கமாகும். மூன்றாவதாக, அது ஒரு சனநாயக இயக்கமாகும். நான்காவதாக, அது ஒரு தேசிய அரசை நிறுவுவதற்கான இயக்கமாகும் என்பர். இந்திய தேசிய விடுதலை இயக்கம் ஒரு போதும் தேசிய இயக்கமாக இருக்கவில்லை” தனது அடிப்படையான இந்தக் கண்ணோட்டத்தில் இந்தி மொழித் திணிப்பை இவர் இனம் கண்டு அதை எதிர்க்கிறார்.

இரண்டாம் மொழிப் போர் நடைபெற்ற சூழலைத் தகுந்த ஆவணங்களை முன்வைத்து இவர் விளக்குகிறார். குறிப்பாக, நேரு தேசிய மொழி குறித்து அளித்த விளக்கத்தையும், இந்தி பேசாத மக்களுக்கு அவர் அளித்த உறுதி மொழியையும் குறிப்பிட்டு, “உண்மையில் நேருவின் உறுதி மொழியால் இந்தியே இந்தியாவின் அலுவலக மொழி என்பதை உறுதிப்படுத்துகிறார்” என்ற கருத்தை இவர் வெளிப்படுத்துகிறார்.

அதைப் போலவே, 1999க்குப் பின் நடந்த மூன்றாம் மொழிப் போரின் நிகழ்வுப் போக்கு களைச் சுருக்கமாகவும் தெளிவாகவும் தகுந்த தகவல் களுடன் ஆய்வு செய்கிறார். முதன்மையான மூன்று கோரிக்கைகளை முன்வைத்து தமிழகமெங்கும் 78 இடங்களில் ஒரு நாள் அடையாளப் பட்டினிப் போர் நடைபெற்ற சூழலைக் குறிப்பிடுகிறார். அந்தப் போராட்டம் சிதைக்கப்பட்ட விதத்தையும் வருத்தத்தோடு விளக்குகிறார்.

தமிழ்மொழியை முன்னிலைப்படுத்தித் தமிழர் களின் வாழ்வுரிமையை வலியுறுத்திப் பேசிய திராவிட இயக்கங்களில் மாறுபட்ட நிலைப்பாடுகளை இவர் ஆய்வு செய்கிறார். “பெரியாரின் மொழிக் கொள்கை”யையும், “அண்ணாவின் மொழிக் கொள்கையையும் தனித்தனியாகவும், விரிவாகவும் ஆய்வு செய்கிறார்.

“தமிழ் - சொந்த மக்களிடமிருந்தே அந்நியமாக்கப்பட்ட வரலாற்றை” இவர் மிகுந்த வருத்தத்தோடு குறிப்பிடுகிறார். “நவீன கல்வியை ஆங்கில மொழியிலேயே இந்தியாவில் வழங்க வேண்டுமென்று மெக்காலே, கார்லஸ்வுட், எல்பின் ஸ்டோன், டிரெவெலின் ஆகியோர் வற்புறுத்தினர். வாரன் ஹேஸ்டிங்ஸ், மிண்டோ ஆகியோர் வடமொழி அல்லது அரபி மொழி வழியாகக் கற்கும் முறையை வற்புறுத்தியது எடுபடவில்லை. இராசாராம் மோகன்ராய், துவாரகநாத் தாகூர் ஆகியவர்கள் ஆங்கில வழிக் கல்வியை ஆதரித்து அரசுக்கு மனு கொடுத்தனர். அன்றிலிருந்து, காலனியாதிக்கம் விடைபெற்றுச் சென்ற பிறகும்கூட, ஆங்கிலத்தின் ஆதிக்கம் கல்வி மற்றும் நிர்வாக அடிப்படையி லிருந்து அகலவில்லை” என்று வருத்தத்துடன் குறிப்பிடுகிறார்.

வரலாற்றுப் போக்கில் தமிழகச் சூழலில் ஆங்கிலத்திற்கு இருந்துவந்த வரவேற்பும், செல் வாக்கும், பயன்பாடும் இன்றும் குறையாமலே இருந்து வருகிறது. இன்று மட்டுமல்ல இந்திய விடுதலைப் போராட்ட காலத்தில்கூட ஆங்கிலத்திற்கு எதிரான குரல் அழுத்தமாக வெளிப்படவில்லை என்பதையும் இவர் நினைவு கூர்கிறார். “இந்திய தேசிய விடுதலை இயக்கத்தின் மாபெரும் வெகுசனத் தலைவராக மேற்கிளம்பிய காந்தி போன்றோர் ஆங்கிலத்திற்கு எதிராகப் பரப்புரை செய்தமை தமிழகத்தில் பெருத்த வரவேற்பைப் பெறவில்லை. இங்கு நீதிக் கட்சித் தலைவர்களாக இருந்தோரில் பெரும்பாலானோர் ஆங்கில மொழி ஆதரவாளர் களேயாவர்” என்பதையும் இவர் இனம் காட்டி ஆய்வு செய்கிறார்.

தொடர்ந்து, இன்று பரவலாக இருந்துவரும் தமிழ்ச் சூழலைப்பற்றி விரிவான ஆய்வுகளை இவர் நிகழ்த்துகிறார். “தேவை : தமிழ் வழிக் கல்வியா? தமிழ்க் கல்வியா?” “வேலை வாய்ப்பு மாயைகள் : இந்தியும், ஆங்கிலமும்” போன்ற கட்டுரைகளின் வாயிலாக நிகழ்காலப் போக்குகளை ஆய்வு செய்து தான் கண்டறிந்த கருத்துக்களை இவர் வெளிப் படுத்துகிறார். தாய்மொழிக் கல்வியின் முதன்மையை வலியுறுத்தி தமிழர்களின் அறிவுத்திறனைப் பெருக்கிக் கொள்ளுவதற்கு ஏற்ற வழிமுறையையும் இவர் குறிப்பிடத் தவறவில்லை.

“தாய்மொழி வழிக் கல்வியினைப் பெரும்பாலான மக்கள் பெறுவதன் வாயிலாக, உலக நாடுகளின் மாதிரிகளைப் பின்பற்றி, புதிய கண்டு பிடிப்புக்கான சிந்தனைத்தளம் திறந்து விடப்படும். உலகத்தோடு தொடர்பு கொள்ள ஆங்கிலம் மட்டு மல்ல, பிரெஞ்சு, ஜெர்மன், ருஷ்ய மொழிகளைக் கற்பதும் இந்தி உள்ளிட்ட ஏனை இந்திய மொழி களைக் கற்பதும் அவரவர்களின் தனிப்பட்ட விருப்பத்தைப் பொறுத்தது ஆகிவிடும். அது ஆரோக்கியமான மொழிச் சூழலை உருவாக்கும்.”

தொடர்ந்து, அதன் சாத்தியப்பாடுகளை ஆய்ந்து தன்னுடைய கருத்தைத் தெளிவாக முன்வைக் கிறார். “உண்மையில் இன்றைய தமிழகத்தின் மீது இருக்கும் தேசிய ஒடுக்குமுறைக்கும் மொழி ஒடுக்குமுறைக்கும் காரணமான சமூக, அரசியல், பொருளாதார அமைப்பை மாற்றியமைப்பதன் மூலமே இதனைச் சாத்தியமாக்க முடியும்.”

இன்றைய தமிழ்ச் சூழலில் தமிழ்மொழி பற்றிய உணர்வு அரசியல் காரணங்களுக்காக எப்படிக் கொச்சைப்படுத்தப்படுகிறது என்பதை, “செம்மொழித் தமிழ் மாநாடு என்னும் தமிழ் வியாபாரம்” என்ற கட்டுரையில் விலாவாரியாகப் பகுப்பாய்வு செய்கிறார்.

“தமிழ்மொழி அரசியல்” என்ற இந்தச் சிறிய நூல் ஆலம்பழம் தன்னுள் எண்ணிறந்த விதை களை உள்ளடக்கியிருப்பதைப் போல ஏராளமான செய்திகளைத் தன்னுள் தாங்கியிருக்கிறது. தமிழ் மொழி குறித்த மாயையான கருத்துக்களை இந்த நூல் தகர்த்து, புதிய கருத்தோட்டங்களை உருவாக்கக் கூடிய விதத்தில் வடிவம் பெற்றிருக்கிறது.

இன்றைய உலகமயமாதல் சூழலில், நவீன காலனியாதிக்கம் நிறுவப்படும் காலகட்டத்தில், அறிவியல் தொழில்நுட்ப மொழியாக ஆங்கிலம் முதன்மை பெற்றுவரும் ஒரு நிலைமையில், தமிழ் மொழியின் எதிர்காலம் எப்படிப்பட்ட ஒன்றாக இருக்கும் என்பதைப்பற்றிச் சிந்திப்பதற்கான கருத்துக்களை விரிவான அளவில் உள்ளடக்கி யிருக்கிறது “தமிழ் மொழி அரசியல்”

தமிழ் உணர்வு உள்ள ஒவ்வொருவரும் இந்த நூலைக் கவனத்தில் கொள்வது தமிழர்களின் வாழ்விற்கும், வளத்திற்கும் உகந்தது. இது மறுக்க முடியாத ஓர் உண்மை.

தமிழ் மொழி அரசியல்

ஆசிரியர் : கி.பார்த்திபராஜா

வெளியீடு : என்.சி.பி.எச்

விலை : ரூ.110.00