சிறுகதை இலக்கியத்தில் முக்கியமான இடத்தைப் பெற்றவர் ருசிய எழுத்தாளரான ஆன்டன் செகாவ். நாற்பத்துநான்கு ஆண்டுகள் மட்டுமே வாழ்ந்த அவர் பல அமரகதைகளையும் முக்கியமான நாடகங்களையும் படைத்திருக்கிறார். பலசரக்குக்கடை நடத்திவந்த குடும்பத்தில் பிறந்த செகாவ் மருத்துவத்துறையில் பட்டம் பெற்றவர். மருத்துவராகப் பணிசெய்துகொண்டே படைப் பாளியாகவும் வாழ்ந்து வந்தார். மருத்துவப் படிப்பின் போது செலவுக்காகச் சில நடைச்சித்திரங்களைப் பத்திரிகைகளுக்குத் தொடர்ச்சியாக எழுதிச் சம் பாதித்தார். ஓர் அவசரத்துக்காக எழுதத் தொடங்கிய செகாவ் நாளடைவில் ருசிய மண்ணில் தன்னை ஒரு முக்கியமான எழுத்தாளுமைகளில் ஒருவராக நிறுவிக்கொண்டார். பச்சோந்தி, மெலிந்தவரும் உடல் பருத்தவரும், வான்கா, கீழ்நிலை இராணுவ வீரர் ப்ரிஷி பேயெவ், ஆறாவது வார்டு ஆகிய படைப்புகள் அவருக்கு உலக அளவில் பெயர் வாங்கித் தந்தவை. அவருடைய முக்கியமான நாடகங்கள் கடற்பறவை, மூன்று சகோதரிகள்.

காதல் என்பது என்னுடைய கழுத்துடன் கயிற்றால் கட்டப்பட்ட ஒரு பாறைபோன்றது. அது என் கழுத்தை இறுக்கிக்கொண்டே இருக்கிறது. எங்குச் சென்றாலும் நான் அதை இழுத்துக்கொண்டே செல்கிறேன். என்னை முன்நகரவிடாமல் பின்னோக்கி அதன் பாரம் இழுத்தபடி இருக்கிறது. ஆனாலும் அப்பாறையை என்னால் உதறமுடியவில்லை. அந்தப் பாறையின்மீது என் நேசம் வளர்ந்தபடி இருக்கிறது. அந்தப் பாறை இல்லாமல் என்னால் வாழவே முடியாது என்பது செகாவுடைய ஆண் பாத்திரமொன்று சொல்லும் வரிகள். காதலின் தவிர்க்கமுடியாத தன்மையையும் அதன் வேதனையையும் அந்த வேதனையைக்கூட

இன்பத்தோடு ஏற்றுக்கொள்கிற விசித்திர மனப் பான்மையையும் அவருடைய பல படைப்புகள் ஆய்வுக்குட்படுத்துகின்றன. அவ்வகையில் “மூன்று ஆண்டுகள்” என்னும் நெடுங்கதை முக்கியமான ஒரு படைப்பு. காதல் தளத்தில் உருவாகும் தடுமாற்றங்களையும் அமைதியையும் சித்திரிக்கும் முக்கியமான கதை அது.

நோய்வாய்ப்பட்ட தன் சகோதரி நீனாவுக்குத் தேவையான சிகிச்சை ஏற்பாடுகளைச் செய்வதற்காக அவள் வாழும் சிறிய ஊருக்கு மாஸ்கோவிலிருந்து வந்து தங்கியிருக்கிறான் லாப்தாவ். அந்தத் தருணத்தி லிருந்துதான் கதை தொடங்குகிறது. மாஸ்கோ நகரத்தில் ஆண்டுக்குப் பல லட்சம் ரூபிள் வருமானம் ஈட்டித் தரக்கூடிய பண்டசாலையை நிறுவி நடத்தி வரும் குடும்பத்தைச் சேர்ந்தவன் அவன். இளமையின் எல்லைப்புள்ளியில் இருப்பவன். காதலைப்பற்றி பல கனவுகள் உள்ளவன். இரக்கமுள்ளவன். இலக்கியம் படிப்பவன். உதவி என வருபவர் களுக்கு மனமுவந்து உதவி செய்பவன். நகர வாழ்வில் அடுத்தடுத்து மூன்று பெண்களைக் காதலித்தும் கூட ஒரு முயற்சியிலும் அவனால் வெற்றியடைய முடியவில்லை. எல்லாமே நிராசையிலும் கசப்பிலும் முடிவடைந்துவிடுகின்றன. பெண்கள் மனத்தைத் தன்னால் ஏன் புரிந்துகொள்ளமுடியவில்லை அல்லது பெண்கள் விரும்பும்விதமாக தன்னால் ஏன் நடந்துகொள்ள முடியவில்லை என்ற கேள்விக்கு அவனால் ஒருபோதும் விடைசொல்லமுடிந்த தில்லை. வாழ்வின் அலுப்பைப் பண்டசாலையிலும் பண்டசாலை வணிக அலுப்பை ஊர்சுற்றியும் போக்கிக்கொள்வதை வழக்கமாகக் கொண்டிருக் கிறான். லாப்தாவின் குடும்பப் பெயர் பியோதர். அவனுக்கு ஒரு சகோதரனும் உண்டு. பொறுப் பில்லாமல் ஊர் சுற்றுபவன் அவன். பணத் தேவைக்கு மட்டும் அவ்வப்போது தந்தையைச் சந்தித்து பணத்தைப் பெற்றுக்கொண்டு வெளியேறி விடுவான்.

நீனாவின் திருமணம் தந்தையின் சம்மத மில்லாமல் நடந்த ஒன்றாகும். அதனால் தந்தைக்கு அவள்மீது கடுமையான கோபம். தந்தையிட மிருந்து வாதாடிப் பெற்ற சொத்துப் பங்கை யெல்லாம் அவள் கணவன் அழித்துவிடுகிறான். புற்றுநோயால் பாதிக்கப்பட்ட அவளையும் இரண்டு குழந்தைகளையும் உதறிவிட்டு வீட்டிலிருந்து வெளியேறி வேறொரு பெண்ணோடு வாழத் தொடங்குகிறான். அவள் காதல் கருகிச் சாம்பலாகி விடுகிறது. தனக்கு நேர்ந்த காதல் அனுபவங் களாலும் தன் சகோதரிக்கு நேர்ந்த காதல் அனுபவங் களாலும் காதல் என்ற கருத்தாக்கத்தையே அவன் கசப்பானதாக உணர்கிறான். காதலைப் பற்றி ஒரு முடிவுக்கு வரமுடியாமல் தடுமாறுகிறான். காதலில்லாமல் வாழ்வது சாத்தியமென்றும் காதல் என்பது ஒரு மனநோயே என்றும் உடற்கவர்ச்சியைத் தவிர காதலில் வேறொன்றும் இல்லையென்றும் கணத்துக்குக்கணம் அவன் எண்ணம் மாறியபடி உள்ளது. உண்மையில் காதலைப்பற்றி என்ன தெரியும் என்று கேட்டால் தன்னால் எதுவும் சொல்லத் தெரியாதென்று வருத்தத்தோடு நினைக்கிறான்.

அந்தச் சிறிய நகரவாழ்வும் அவனுக்கு அலுப்பைத் தருகிறது. சகோதரிக்கு மருத்துவம் பார்க்கும் மருத்துவரின் மகள் யூலியாவை தற்செயலாகப் பார்த்து மனம் பறிகொடுத்து காதல்வயப்படுகிறான். தன் வீட்டில் மறதியாக அவள் விட்டுச் சென்ற குடையைத் திருப்பித் தரும் பொருட்டு அவளைச் சந்திப்பதற்காக அவளுடைய வீட்டுக்குச் செல்லும் லாப்தாவ் உரையாடலின் உச்சத்தில் தன் மனத்திலிருக்கும் காதலை வெளிப் படுத்துகிறான். அதே வேகத்தில் தன்னைத் திருமணம் செய்துகொள்ளமுடியுமா என்றும் ஆசையோடு வினவுகிறான். அதைச் சிறிதும் எதிர்பாராத யூலியா அதிர்ச்சியில் மூழ்குகிறாள். அவளுக்கு அவன்மீது எவ்விதமான ஈடுபாடும் தோன்றவில்லை. அவனுக்கு எந்தப் பதிலையும் சொல்லாமல் அவனைத் தவிர்க்கிறாள். அந்தச் செய்கை அவனை மிகுந்த துக்கத்தில் ஆழ்த்துகிறது. ஓர் இளம்பெண்ணைக் கவர்வதற்குரிய எந்த அம்சமும் தன்னிடம் இல்லை என்பதை வருத்தத்துடன் நினைத்துக்கொள்கிறான். தன் காதலை அவசரமாக வெளிப்படுத்தியதைச் சில நாட்கள் கழித்து, அவனைக் காதலிக்கிறாளா இல்லையா என்பதை உறுதிசெய்யாமலேயே திருமணத்துக்கு இசைவு தெரிவிக்கிறாள். இந்தச் செய்கை லாப்தாவை மிகுந்த சங்கடத்துக்குள் ஆழ்த்துகிறது. காதலே இல்லாதவள் ஏன் திருமணம் செய்துகொள்ளவேண்டும் என்பதை அவனால் புரிந்துகொள்ளவே முடியவில்லை. தொடக்கத்தில் காதலிப்பதாகச் சொன்ன பிறகு, திருமணத்திலிருந்து பின்வாங்கக் கூடாது என்கிற ஒரே காரணத்துக்காக அவனும் திருமணத்துக்குத் தயாராகிறான். ஒருவரோ டொருவர் காதல் கொள்ளாமலேயே திருமணம் நடைபெற்றுவிடுகிறது. சகோதரிக்குத் தேவையான மருத்துவம் தொடர்ச்சியாக நடைபெற்றுவர, புது மனைவியோடு லாப்தாவ் மாஸ்கோவுக்குத் திரும்பி விடுகிறான்.

லாப்தாவும் யூலியாவும் இணைந்து வாழும் காலத்தின் அளவுதான் மூன்று ஆண்டுகள். இந்த இடைப்பட்ட காலத்தில் அவள் காதலைப் பெற அவன் பல வழிகளில் முயற்சி செய்கிறான். வண்டிகளில் பயணம் செய்யும்போதும் ஓவியக் கூடங்களுக்குச் செல்லும்போதும் உணவு மேசையில் ஒன்றாக அமர்ந்திருக்கும்போதும் என வாய்ப்பு கிடைக்கும் ஒவ்வொரு தருணத்திலும் தன் காதலைப் புலப்படுத்தியபடி இருக்கிறான். ஆனால் அவளிட மிருந்து ஒரேஒரு அன்பான எதிர்வினையைக்கூட அவனால் பெறமுடியவில்லை. எல்லாமே ஏமாற்றத்தில் முடிவடைகின்றன. வாழ்வில் பல மாற்றங்கள் நடைபெறுகின்றன. நிராசையோடு வாழும் அவளைக் கவர்கிற நோக்கத்தோடு, பியோதர் குடும்பத்திலேயே வளரக்கூடிய ஓர் இளைஞன் பயணமொன்றில் அவளை முத்தமிடுகிறான். எதிர்ப்பின்றி, அவற்றை ஏற்றுக்கொண்டாலும் அவனை அக்கணத்திலேயே நிராகரித்துவிடுகிறாள் யூலியா. ஒரு குழந்தை பிறந்து இறந்துபோகிறது. மருத்துவம் பயனளிக்காமல் நீனாவும் இறந்து விடுகிறாள். கொள்ளிவைப்பதற்காக புதுமனைவியின் வீட்டிலிருந்து வந்த நீனாவின் கணவன் எந்தப் பொறுப்பையும் எடுத்துக்கொள்ளத் தயாராக இல்லை. இரண்டு பிள்ளைகளும் லாப்தாவ் பொறுப்பில் வளர்கிறார்கள். மாஸ்கோவில் அவர்களுக்கு நல்ல கல்வி புகட்டப்படுகிறது. அவர்களுடைய பாடங்களை யூலியா சொல்லித் தருகிறாள். கோபம் கொண்ட மாமனாரின் மனத்தை மாற்றி, குழந்தைகள் மீது பாசம் உருவாகக் காரணமாக இருக்கிறாள்.

தற்செயலாகச் சந்திக்க நேர்ந்த பழைய காதலி பொலினாவும் லாப்தாவ் மீது வெறுப்பை உமிழ்கிறாள். அவளுக்கும் லாப்தாவின் நெருக்கமான நண்பன் யார்த்ஸெவுக்கும் இடையே ஆச்சரியமான விதத்தில் ஒரு தொடர்பு உருவாகிவிடுகிறது. அதை யார்த்ஸெவே லாப்தாவைச் சந்தித்துச் சொல்கிறான். ஆனால் அதன் பெயர் காதல் அல்ல என்றும் சொல்கிறான். பொலினாவை தான் அடைந்தது தெய்வாம்ச மென்றும் அவளோடு தொண்டுகிழமாகிறவரை அமைதியாக வாழமுடியும் என்பதில் ஐயமில்லை என்றும் மனப்பூர்வமாகச் சொல்கிறான். அவன் சொல்வதை நம்பவும் முடியாத நம்பாமல் இருக்கவும் முடியாத மனநிலையில் இருக்கிறான் லாப்தாவ்.

லாப்தாவின் சகோதரன் மனநோயாளியாகி விடுகிறான். பண்டசாலையில் பல மாற்றங்கள் உருவாகின்றன. அவனுடைய தந்தையாருக்குப் பார்வை குறைந்துவிடுகிறது. காலம் பல மாற்றங் களை அந்தக் குடும்பத்தில் ஏற்படுத்துகிறது. எதிர் பாராத பொழுதொன்றில் யூலியாவும் மனமாற்ற மடைகிறாள். அதுதான் கதையின் மிகப்பெரிய திருப்பம். நீ இல்லாமல் ஏதோ போல இருக்கிறது என்று லாப்தாவைப் பார்த்து முதன்முதலாகச் சொல்கிறாள். அவன்மீது காதல் கொண்டுவிட்டதாக சிவந்த முகத்துடன் சொல்கிறாள். அவள் சொல் வாளா மாட்டாளா என்று மூன்று நீண்ட ஆண்டு களாகக் காத்திருந்த வார்த்தையை ஆசையோடு சொல்கிறாள் யூலியா. தன் வாழ்வில் முதன்முதலாக அவளைப் பார்ப்பவன்போலப் பார்க்கிறான் லாப்தாவ். அவளை அப்படியே பார்த்தபடி இன்னும் எத்தனை ஆண்டுகள் வேண்டுமானாலும் வாழ்ந்துவிடலாம் என்று எண்ணுகிறான்.

கதையில் மூன்று இணையர் இடம்பெறு கிறார்கள். காதல் திருமணம் செய்துகொண்ட நீனா - பனவூரவ் முதல் இணையர். ஆனால் அவர்கள் வாழ்வில் காதல் துணைசெய்யவில்லை. தொடக்கத்தில் அவர்களிடையே அரும்பிய காதல் இறுதிவரைக்கும் அவர்களோடு துணையாக வரவில்லை. பாதியிலேயே வற்றிவிடுகிறது. அவர் களால் தம் வாழ்வில் அமைதியைக் கண்டடைய முடியவில்லை. கசப்போடு பிரிந்துவிடுகிறார்கள். காதல் இல்லாமலேயே சேர்ந்து வாழத் தலைப்படும் பொலினா - யார்த்ஸெவ் மூப்படையும்வரை தம்மால் இணைந்து அமைதியாக வாழமுடியும் என்று நம்பிக்கையோடு இருக்கிறார்கள். மனம் நிறைந்த காதலோடு வாழத் தொடங்குகிற லாப்தாவ் தன் மனைவியின் காதலைப் பெறமுடியாமல் தவியாய்த் தவிக்கிறான். மூன்று ஆண்டுகள் நிம்மதி யில்லாமல் இப்படியும் அப்படியுமாக ஆடிக் கொண்டிருந்த ஊசல் ஒருவழியாக சமநிலையை அடைகிறது. பரஸ்பர நிராகரிப்புகளைத் தாண்டி ஒருவரையொருவர் ஏற்றுக்கொள்கிற மனநிலை இருவருக்கும் உருவாகிறது.

காதல் என்பது என்ன என்கிற கேள்வியை முன்வைத்து, இந்த மூன்று இணையர்களின் வாழ்க்கை வழியாக ஒரு விடையை உருவாக்க செகாவ் நினைத்திருப்பதுபோலத் தெரிகிறது. காதல் என்பது முத்தமிடுவதோ, இன்பம் துய்ப்பதோ மட்டுமல்ல, அதன் உருவகம் அமைதி. அன்பில் கரைகிற அமைதி. ஒருவரையொருவர் ஏற்றுக் கொள்வதால் விளையும் அமைதி. இதயத்தில் அது ஓர் ஊற்றைப்போலப் பொங்கிக்கொண்டே இருக்க வேண்டும். ஒருதலைக் காதலோடு வாழ்க்கையைத் தொடங்கிய லாப்தாவ் கடுமையான மனக்குழப்பங் களுக்கிடையே அகப்பட்டு, மீண்டு, மூன்று ஆண்டு களுக்குப் பிறகு ஒருவழியாக அந்த அமைதி என்னும் புள்ளியை அடைகிறான். அதிர்ஷ்ட வசமாக காதலே இல்லாமல் வாழ்க்கையைத் தொடங்கும் பொலினா - யார்த்ஸேவ் இணையரும் அந்த அமைதியில் திளைக்கிறார்கள். துரதிருஷ்ட வசமாக இரு பக்கங்களிலும் காதலோடு தொடங்கப் பட்ட நீனா - பனவூரவ் இல்வாழ்க்கை அமைதி யிழந்து தோல்வியில் முடிவடைகிறது. ஒருபோதும் காதல் என்பதோ அமைதி என்பதோ - நிர்ணயிக்கப் பட்ட ஒரு தடத்தில் பயணம் செய்து அடையக் கூடிய இலக்கு அல்ல. அது தற்செயலாக அரும்பி, தன் காந்த ஆற்றலால் வழிநடத்திச் சென்று சேர்ப்பிக்கிற புள்ளி.

காதலின் அமைதியையும் ஆழத்தையும் புரிந்து கொண்டவளாக இறுதிக்கட்டத்தில் யூலியா சித்திரிக்கப்படும் காட்சியை உள்வாங்கிக் கொள் வதில் ஒரு வாசகனாக முதலில் குழம்பியதுண்டு. அடுத்தடுத்த வாசிப்பில் அந்தக் குழப்பம் மறைந்து விட்டது. அமைதியைக் கண்டடையும் ஆற்றல் யூலியாவிடம் இயற்கையாகவே நிறைந்திருக்கிறது என்பதை உணரக்கூடிய காட்சி தொடக்கப் பகுதியில் இடம்பெற்றுள்ளது. லாப்தாவோடும் காஸ்த்யா வோடும் ஓவியக்கூடமொன்றுக்கு யூலியா செல்லும் காட்சியொன்று கதையின் நடுப்பகுதியில் இடம் பெறுகிறது. அங்கே யூலியா ஓர் ஓவியத்தைக் காண்கிறாள். இயற்கைக்காட்சி நிறைந்த அந்த ஓவியத்தில் ஆற்றின் போக்குக்குக் குறுக்கே கட்டப் பட்ட பாலமொன்று தீட்டப்பட்டிருக்கிறது. கரையில் உள்ள பச்சைப் பசேலென்றிருந்த புல்வரை நீண்டு செல்லும் பாதை பிறகு மறைந்துபோகிறது. வயல், அதற்கு வலப்புறம் காட்டின் சிறுபகுதி, அருகில் எரியும் தீ என கண்ணைக் கவர்கிற வகையில் அழகாகத் தீட்டப்பட்டிருக்கிறது அந்த ஓவியம். மாலை நேரம் என்பதைக் குறிக்கும் வகையில் வானத்தின் கீழ்ப்பகுதி சிறிது சிவப்பேறியிருப்பதாகத் தீட்டப்பட்டிருக்கிறது. பார்த்ததுமே அந்த ஓவியத்தின்பால் மனம் பறிகொடுத்து விடுகிறாள் யூலியா. அதையே நெடுநேரம் வைத்த கண் எடுக்காமல் பார்க்கிறாள். தான் அந்த ஓவியப் பாலத்தைக் கடந்து, அந்தியிருளின் அமைதியில் செல்வதாகக் கற்பனை செய்துகொள்கிறாள்.

சுற்றிலும் தூங்கப்போகும் குருவிகள் கூவுவது போலவும் தொலைவில் ஒரு நெருப்பொளி மினுக் மினுக்கென்று பளபளப்பதுபோலவும் கற்பனை செய்துகொள்கிறாள். வானத்தின் சிவப்புப் பகுதியில் காணப்படும் அந்த மேகங்கள், காடு, வயல் எல்லாமே மிக வினோதமானவகையில் அவளுக்கு மிகப் பழக்கமானவைபோலத் தென்படுகின்றன. அவ் வழியே நடந்து சூரியன் மறையும் இடம்வரைக்கும் நடந்து வானப்பகுதியை அடைய விரும்புகிறாள். அந்த ஓவியத்தைத் தன்னால் உள்வாங்கிக்கொள்ள முடிந்ததை நினைத்துப் பூரித்துப் போகிறாள். இந்த ஓவியத்தில் நிலவும் அமைதியை நீ உணரவில்லையா என்று தன் கணவனான லாப்தாவைப் பார்த்துக் கேட்கிறாள். அந்த இயற்கைக்காட்சியைத் தான் விரும்பிய காரணத்தை எல்லாரிடமும் சொல்ல விரும்புகிறாள். ஆனால் அவள் வார்த்தைகளை இருவருமே செவிகொடுத்துக் கேட்கவில்லை. சிக்கலான அமைப்பொன்றை ஊடுருவிச் சென்று அமைதியடையக்கூடிய ஆற்றல் உள்ளவளாக யூலியாவை இந்த ஓவியக்கூடக்காட்சி காட்டுகிறது. யூலியாவின் பாத்திரவார்ப்பில் இது ஒரு முக்கியமான சித்திரிப்பு. சொந்த வாழ்வில் தெளிவில்லாத வளாகவும் காதல் உணர்வை விவரிக்கத் தெரியாத வளாகவும் சிரத்தை இல்லாதவளாகவும் சித்திரிக்கப் படுகிற யூலியா, ஓவியத்தின் நுட்பங்களைச்

சிக்கலில்லாமல் உள்வாங்கிக்கொள்ளும் ஆற்றல் நிறைந்தவளாகச் சித்திரிக்கப்படுகிறாள். அமைதியைக் கண்டடைந்து திளைக்கும் ஆற்றல் அவளிடம் இயற்கையாகவே நிறைந்திருக்கிறது என்பதையே இக்காட்சி உறுதிப்படுத்துகிறது. பல குணங்களில் ஒன்றாக இதுவும் அவளுக்குள் குடியேறியிருக்கிறது. யூலியா இன்னும் கருவுற்றிராத தருணம் அது. இதற்குப் பிந்தைய வாழ்க்கையில் அவள் பெற்றெடுப்பதும் அக்குழந்தை மரணமடைவதுமாகப் பல சம்பவங்கள் நிகழ்ந்துவிடுகின்றன. பல குணங்களில் ஒன்றாக இருந்த அமைதியைக் கண்டறியும் நுட்பம் மெல்ல மெல்ல வலிமையடைந்து, மற்ற குணங்களைப் பின்னுக்குத் தள்ளி மேலெழும் வகையில் வாழ்க்கை அவளைப் பக்குவப்படுத்தி வைத்திருக்கிறது. அவள் மனமாற்றம் திடீரென ஏற்படும் ஒன்றல்ல. வெளிப் படுத்தும் தருணமாக அந்தக் கடைசிக்காட்சி அமைந்துவிடுகிறது என்றுதான் சொல்ல வேண்டும்.

நிலவு ஒளிர்கிறது என்று சொல்லாதே, உடைந்துபோன ஒரு கண்ணாடித் துண்டிலாவது அதன் ஒளிக்கதிரை உள்வாங்கி உணர்த்து என்பது செகாவுடைய பாத்திரமொன்று சொல்லும் உரை யாடல். காதலை உணர்வதுகூட ஒருவகையில் கண்ணாடித் துண்டில் நிலவின் பிம்பத்தை உள்வாங்கி நிறுத்தும் அனுபவத்துக்கு நிகரான ஒன்று. கைப்பக்குவத்தாலோ அல்லது கண்ணாடித் துண்டின் அசைவாலோ, ஏதோ ஒன்றால் நிலவின் பிம்பம் சில சமயங்களில் மிகவிரைவில் வசப்பட்டு விடுகிறது. சில சமயங்களில் அதிக தடுமாற்றங் களுக்குப் பிறகுதான் வசப்படுகிறது. பல சமயங்களில் வசப்படுவதே இல்லை.

Pin It