அமைச்சர் பினாய் விஸ்வம் வனத்துறைக்கும் வீட்டு வசதித்துறைக்கும் பொறுப்பேற்றுள்ளார். இவரது தந்தை சி.கே. விஸ்வநாதன் கம்யூனிஸ்டு இயக்கத்தின் மூத்த தலைமுறையைச் சார்ந்தவர். சட்டமன்ற உறுப்பினராகவும் பொறுப்பேற்றுச் செயல்பட்டவர்.

பினாய் பள்ளிப் பருவத்திலேயே அனைத்திந்திய மாணவர் பெருமன்றத்தில் இணைந்து, பல ஆண்டுகள் தொடர்ந்து மாணவர்களிடையே பணியாற்றி, கடைசியாக கேரள மாநிலத்தின் பொதுச்செயலாளராகப் பொறுப்பேற்றுச் செயல்பட்டவர். உலக இளைஞர் சம்மேளனம், உலக முற்போக்கு இளைஞர்களின் புகழ் மிக்க அமைப்பு. இதில் உலகத் துணைத்தலைவராக பொறுப்பேற்றுச் செயல்பட்டவர்.

வனத்துறை அமைச்சர் பொறுப்பிலிருந்த காலத்தில் கேரள வனப்பரப்பைக் கூடுதலாக்கிக் காட்டியதால், ‘இந்திரா பிரிதர்ஷினி வர்ஷா விருது’ என்ற இந்திய சிறப்பு விருது பெற்றுள்ளார்.

கேரளத்தில் காடுகளும் மலைகளும் அதிகம். சமவெளிகள் குறைவு. தொடர்ந்து இலவச வீட்டு மனைப்பட்டா பெற்றுத் தருவதில் தொடர்ந்து பிரச்சினைகள் இங்கு எழுந்து கொண்டேயிருந்தன. இருப்பினும் இலவச மனைகள் வழங்குவதிலும், வீடுகள் கட்டித்தருவதிலும் இந்தியாவிலேயே கேரள மாநிலம் தான் முதலிடத்தில் இருக்கிறது. இந்தச் சாதனைக்கு இந்தக் காலகட்டத்தில் முக்கிய பங்கு வகித்தவர் பினாய் விஸ்வம்தான்.

கேரள அமைச்சர் பினாய் விஸ்வம், இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியைச் சேர்ந்தவர். அமைச்சரவையில் வனத்துறைக்கும் வீட்டு வசதித் துறைக்கும் பொறுப்பேற்றுள்ளவர். இவரது மகளின் திருமணம் அண்மையில் நடந்து முடிந்திருக்கிறது. சாதியை மறுத்து, மதங்களைக் கடந்து வென்று நிற்கும் திருணம் இது.

இவர் இந்து சமூகத்தில் பிறந்தவர். இவரது மனைவி கிறிஸ்துவ சமூகத்தில் பிறந்தவர். அண்மையில் திருமண வாழ்வைப் பெற்றுள்ள இவரது மகளின் கணவர் ஒரு இஸ்லாமிய சமூகத்தைச் சார்ந்தவர். சாதியை மறுத்து, மதச்சார்பற்று நடைபெறும் திருமணத்திற்கு இதைவிட முன்னுதாரணம் தேவை இல்லை என்றே கருதுகிறேன். இதற்குப் பெயர் தான் மதச்சார்பின்மையாகும்.

பினாய் விஸ்வத்தின் குடும்பத்தினர் கம்யூனிஸ்டுகள் என்பதால், இவர்கள் கடவுள் இல்லை என்பதை அடிப்படையாகக் கொண்டிருக்கலாம். கடவுள் உண்டு என்று சொல்லும் ஞானிகள் கூட, பல்வேறு மதங்களில் பல்வேறு பெயர்களில் கடவுள் அழைக்கப்பட்டாலும் அடிப்படையில் கடவுள் ஒருவர்தான் என்று கூறுகிறார்கள். எல்லா மதங்களும், அவை உருவாக்கிய கடவுள்களும் புனிதம் பற்றித்தான் பேசுகின்றன.

ஆனால் ஒவ்வொரு மனிதனிடமும் புனிதம் நிறைந்திருக்கிறது. இந்தப் புனிதத்தை அவன் முழுமை பெறச் செய்துகொண்டாலே வழிபாடு தேவையில்லை என்று தான் சுவாமி விவேகானந்தர் குறிப்பிட்டுள்ளார். மேடையில் அரசியல்வாதி களிடமிருந்து எத்தனையோ முழக்கங்கள்கேட்டுக் கொண்டேயிருக்கின்றன. பேச்சில் பிறக்கும் சொல்லை விட, செயலே மேலானது என்பதை இவர்கள் மறந்துவிடுகிறார்கள். ஆனால் பினாய் விஸ்வத்தின் குடும்பத்தினர், சாதியையும் மதத்தையும் கடந்தவர்கள் என்பதைச் செயலின் மூலம் நிரூபித்துவிட்டார்கள். ஒரு மனிதன் எந்த மதத்தைச் சார்ந்தவன் என்பதை விட, எத்தகைய நேர்மையானவன் என்பது தான் முக்கியம் என்று நாராயண குரு குறிப்பிடுகிறார். மதங்களைவிட, மனித நேர்மை உயர்வானது என்பது தான் நாராயண குரு குறிப்பிட விரும்புவது. இந்த மகான்கள் கருதும் மனித வேறுபாடுகளைக் கடந்த மானுட மேன்மையை பினாய் விஸ்வத்தின் குடும்பம் பெற்றுள்ளதாகவே உணர்ந்துகொள்ள முடிகிறது.

பினாய் விஸ்வத்தின் மற்றொரு சிறப்பு, இவர் தன் மகளுக்கு அண்மையில் நடத்திய மிக எளிமையான திருமணத்தில் தெரிகிறது. திருமணங்கள் இன்றைய காலத்தில் மிகுந்த ஆடம்பரத்துடன் நடத்தப்படுகின்றன. வறுமையும், ஏழ்மையும் மிகுந்த நாட்டில் இவ்வாறான ஆடம்பரமான திருமணங்கள் அவசியம் தானா? என்ற கேள்வி நம் மனச்சாட்சியை உறுத்திக் கொண்டிருக்கிறது. ஒரு கம்யூனிஸ்டுக்கே உரிய எளிமையுடனும், மதச்சார்பின்மைக்கு உரிய மேன்மையுடனும் திருமணம் நடைபெற்றிருப்பது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது; பாராட்டத் தோன்றுகிறது.

இன்றைய நாட்களில், பினாய் விஸ்வத்தைப் போன்று அமைச்சர்களாக இருப்பவர்கள் திருமணத்தை எளிமையாக நடத்துதல் அவ்வளவு எளிதானது அல்ல. இன்றைய அமைச்சர்கள் பலரின் சுகபோக வாழ்க்கை அருவருப்பைத் தருவதாகவே அமைந்து விட்டது. ஊழலின் உயரத்திற்கே சென்றுவிட்ட இவர்கள், அதிகாரத்தைப் பயன்படுத்தி நடத்தும் ஆடம்பர வாழ்க்கை சகித்துக்கொள்ளக்கூடியதாக இல்லை. மறுக்கப்பட்டவர்களாய் ஏழைகள் அதிகம் வாழும் நாட்டில் தான், நாம் வாழ்கிறோம். மின்னும் விலையுயர்ந்த ஆபரணங்கள், படாடோபமான ஏற்பாடுகள் விரல் விட்டு எண்ணக்கூடிய திருமணங் களில் நிகழ்ந்துகொண்டேயிருக்கிறது. இதிலிருந்து பினாய் விஸ்வம் முற்றிலும் வேறுபட்டிருக்கிறார். புறச்சூழல் தரும் பல்வேறு நெருக்கடிகளை முறியடித்துக் காட்டியிருக்கிறார்.

திருமணத்திற்கு அவர் அனுப்பிய அழைப் பிதழைப் பார்த்தேன். அழைப்பிதழ் என்பது திருமணம் நடைபெறுகிறது என்பதற்கான தகவல் மட்டும்தான். தாங்கள் சிரமப்பட்டு திருமண விழாவில் கலந்துகொள்ளவேண்டும் என்பது கட்டாயம் இல்லை என்று இதில் தெரிவிக்கப் பட்டிருந்தது. இந்த எளிமை என்னை மிகவும் கவர்ந்தது.

அமைச்சர் பினாய் விஸ்வத்தின் இல்லத் திருமணம் முன்னாள் கேரள முதலமைச்சர் அச்சுதமேனன் மகன் திருமணத்தை எனக்கு நினைவுபடுத்திடவே செய்கிறது. அவர் முதலமைச் சராக இருந்தபோது, நடைபெற்ற அவரது மகன் திருமணத்தை இப்பொழுது நினைவுபடுத்திப் பார்த்துக் கொள்கிறேன். அந்தத் திருமணத்தில் விருந்து எதுவும் இல்லை. இசைக்கச்சேரிகளும் இல்லை. ஒரு கப் பாயசம் கொடுத்து, நன்றி என்று மட்டும் கூறினார் அச்சுதமேனன். இதைப் போன்று இ.எம்.எஸ். நம்பூதிரிபாட் இல்லத் திருமணமும் மிகுந்த எளிமையுடன் குருவாயூரில் நடைபெற்றது.

இன்றைய ஆடம்பர உலகில் கம்யூனிஸ்டுகள், இவ்வாறு எளிமையான திருமணத்தை நடத்தி, சமுதாயத்திற்கு முன்மாதிரியாகத் திகழ்வது எனக்கு மகிழ்ச்சியைக் கொடுக்கிறது. அமைச்சர் பினாய் விஸ்வம் என்றும் எளிய வாழ்க்கைக்கு ஒரு முன்னுதாரணம். இந்த எளிய திருமணமுறையை மற்றவர்களும் பின்பற்ற வேண்டும் என்பது எனது தாழ்மையான அபிப்ராயமாகும். வளர்ச்சி என்பது பொருளாதாரத்தைக் குவித்துக் கொள்வது அல்ல என்பதில் காந்தித் தத்துவம் தெளிவாக இருக்கிறது. ஆசை கொண்டு, சுயநலம் மிக்க வழிகளில் தன் சொந்தப் பொருளாதாரத்தை மனிதன் திரட்டிக் கொள்கிறான். மனிதனின் ஆசைக்கு அளவில்லை. இதை எப்படி வளர்ச்சி என்று கூறமுடியும் என்று காந்தியடிகள் கேட்கிறார்.

குறுக்கு வழியில் உயரத்தில் ஏறிச் சேர்க்கும் பணக்குவிப்பைப் பொருளாதார வளர்ச்சி என்று கொண்டாடுகிறார்கள். மலை உச்சிக்குச் சென்றதாக நினைக்கும் இவர்கள் அடுத்து பள்ளத்தில் விழப் போகிறோம் என்பதை அறியாமல் இருக்கிறார்கள். அமைச்சர் பினாய் விஸ்வம் மகளின் திருமணம், அதிகாரம், ஆடம்பர விரயம் ஆகிய அனைத்திற்கும் எதிராக இவ்வாறு நடந்து முடிந்துள்ளது.

நன்றி : ‘இந்து’ நாளிதழ்

Pin It