ந.முத்துமோகன்

அண்ணாச்சி பொன்னீலன் அவர்களின் புதிய நாவல் “மறுபக்கம்”. 1972-இல் ஸ்காட் கிறிஸ்தவக் கல்லூரி நூலகத்தில் குமரி மாவட்டத்தின் வரலாற்று நூல்களைப் புரட்டிய காலத்தில் அவற்றை அடிப்படையாகக் கொண்டு அவர் எழுத விரும்பிய ஒரு மாபெரும் நாவல் 38 வருடங்களுக்குப் பிறகு இன்று வெளியாகியுள்ளது. இடையில் கரிசல், புதிய தரிசனங்கள் என்ற மிகச்சிறந்த அவரது சாதனை நாவல்கள் வெளிவந்தன. அந்நூல்கள் வெளிவந்த போதெல்லாம் மறுபக்கம் நாவலுக்கான பணிகள் பின்தங்கிப் போயின. 1972க்கும் 2010க்கும் நடுவில் கரிசல், புதிய தரிசனங்கள் நாவல்கள் வெளிவந்தது மட்டுமல்ல, அவரது மொத்த இலக்கியப் பயணமே அக்காலத்தில் நிகழ்ந்துள்ளது எனலாம். இக்கால கட்டத்தில் அவர் சாகித்ய அகாடமி விருது பெற்ற நாவலாசிரியர், சிறுகதை ஆசிரியர், கவிஞர், (ஜீவா, ரகுநாதன், குன்றக்குடி அடிகளார் ஆகியோரின்) வாழ்க்கை வரலாற்றாசிரியர், மொழிபெயர்ப்பாளர், இலக்கிய விமர்சகர், தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் மூத்த முனைப்பான தலைவர், அற்புதமான மேடைப் பேச்சாளர், எல்லாவற்றிலும் மேலாக, சிறந்த மனித நேயவாதி, தமிழ்நாடு முழுவதும் ஏராளமான இளைஞர் களைத் தம்பிகளாகக் கொண்ட அண்ணாச்சி என

அறியப்பட்டுள்ளார். இத்தனை ஆண்டுகளையும் அனுபவங்களையும் ‘மறுபக்கம்’ நாவல் பின்புலமாகக் கொண்டிருப்பதனாலேயே இந்நாவல் நமது கூடுதல் கவனத்தைப் பெறுகிறது. மறுபக்கம் நாவல் 1982-இல் குமரி மாவட்டத்தில் நிகழ்ந்த மண்டைக்காடு கலவரத்தை மையமாகக் கொண்டுள்ளது. அவர் 72-இல் விரும்பிய வரலாற்று நாவல் குறித்த திட்டங்கள் 82-ன் மண்டைக்காடு சம்பவங்களோடு சேர்ந்துகொண்டன. மண்டைக்காடு கலவரம் பற்றி ஆராய்ச்சி மேற்கொள்ளும் சேது மாதவன் என்ற இளைஞனின் பார்வையில் இந்நாவல் சம்பவங்கள் விரிகின்றன. மண்டைக்காடு கலவரம் குமரி மாவட்டத்தில் நிகழ்ந்தபோதும், இந்தியா முழுவதும் அது இந்துத்துவ எழுச்சியின் ஒரு குறியீடாக அமைந்து போயிற்று. இந்துத்துவச் சார்பு கொண்ட மனோநிலையோடு சேது என்னும் ஓர் இளைஞன் தஞ்சாவூரிலிருந்து பனைவிளை கிராமத்திற்கு, வெங்கடேசன் என்ற இடதுசாரிச் சிந்தனையாளரின் வீட்டுக்கு வந்து சேருகிறான். மாவட்டம் முழுவதும் அலைந்து திரிந்து மண்டைக்காடு கலவரம் பற்றிய தகவல்களைத் திரட்டுகிறான். வெங்கடேசன் அவனுக்கு உதவுகிறார். மண்டைக்காடு கலவரம் குறித்த விசாரிப்புகள் படிப்படியாக குமரி மாவட்டத்தின் மொத்த வரலாறாகவே விரிகின்றன. காலனி ஆட்சிக் காலத்தில் குமரி மாவட்டத்தில் கிறித்தவ மதம் பரவிய கதை,

ரிங்கல் தௌபே, மீட் அய்யர் ஆகிய முதல் பாதிரியார்கள், கடற்கரையிலும் (மீனவர்களுக்கிடையேயும் உள் நாட்டிலும் (நாடார்களுக்கிடையேயும்) கிறித்தவ மதமாற்றங்கள், காலனிய ஆட்சி மற்றும் கிறித்தவம் ஆகியவற்றின் ஆதரவோடு திருவிதாங்கூர் சமஸ்தான மனுதர்ம சாதி ஏற்பாடுகளுக்கு எதிராக நடந்த சமூக எழுச்சிகள், குறிப்பாக தோள்சீலைப் போராட்டம் என அறியப்பட்ட சாணார்கள் போராட்டம், வைகுண்ட சாமியின் அய்யா வழி இயக்கம், திருவிதாங்கூர் சமஸ் தானத்தில் பிரிட்டிஷ் தலையீட்டால் அடிமைமுறை ஒழிப்புச் சட்டங்கள், குமாரகோவில் அக்கினிக் காவடிப் போராட்டம் (அதன் உயிர்ப் பலி 150), சாணார்கள் ஊர்த்தலைவர்களான நாடார்கள் என்ற பெயரைச் சம்பாதித்த வரலாறு, குமரி மாவட்டத்தில் பிரம்ம சமாஜம், காந்திய இயக்கம், குமரி மக்கள் தாய்த் தமிழகத்தோடு இணைவதற்காக நடத்திய போராட்டங்கள் என மறுபக்கம் நாவல் மண்டைக்காட்டைக் கடந்து 19 ஆம் நூற்றாண்டின் சமூக அசைவுகள் அனைத்தையும் பற்றிப் பிடித்துப் பரவுகிறது.

19ஆம் நூற்றாண்டையும் வெகுவாகக் கடந்து மறுபக்கம் நாவல் புராணியக் காலத்தினுள் ஆழப்பாயும் சந்தர்ப்பங்களும் இந்நாவலில் ஏராளமாக உண்டு. மண்டைக்காட்டு அம்மனின் வரலாறு, பத்ரகாளி அம்மனின் கதை, கன்னியாகுமரி அம்மனின் புராணம் எனப் பல மாந்திரிகப் புராணங்கள் வரலாற்றோடு சேர்த்துப் பிசையப்பட்டுள்ளன. எங்கே மாந்திரிகம், எங்கே புராணம், எங்கே எதார்த்தம் எனப் பிரித்துப் பார்க்க முடியாதபடி வழக்கமான வாசகன் திணரும் சந்தர்ப்பங் களும் இந்நாவலின் பல பக்கங்களில் உண்டு. பழைய பனை ஓலை ஏடுகள் சொல்லும் கதைகள், அச்சு எந்திரம் பதிந்த காகிதங்கள் சொல்லும் வரலாறுகள், தனிப்பட்ட சில மனிதர்கள் பேனாக்களாலும் பென்சில்களாலும் எழுதி வைத்த பல நாட்குறிப்புகள், தினசரி ஆங்காங்கே ஆட்கள் கூடிக் கூடிப் பேசிப் பேசி வளர்த்தெடுத்த வாய்மொழிக் கதைகள், காலம்காலமாக நடந்தனவாகவும் நம்பியவை யாகவும் மக்கள் மனங்களில் கூடிக் குமைந்து கிடக்கும் நினைவுப் படிமங்கள் எல்லாமே இந்த நாவலின் முதன்மை ஆதாரங்களாக ஆக்கப்பட்டுள்ளன. வரலாற்றுக்கும் வதந்திகளுக்கும் இடையில் விசேஷமான வேறுபாடுகள் எதுவுமின்றி மறுபக்கம் நாவல் அவற்றை எடுத்தாளுகிறது. அவை அடுத்த கட்ட வரலாற்றைப் படைக்கின்றன.

19-20 ஆம் நூற்றாண்டுகளில் வரலாறு குறித்த நினைவுகளை ஒவ்வொரு பக்கத்திலும் புரட்டிப் பார்க்கும் இந்நாவல் மண்டைக்காட்டுக் கலவரத்தை அதன் எல்லாக் கொடூரங்களோடும் பதிவு செய்துள்ளது. மண்டைக் காட்டிலிருந்து தொடங்கி, பள்ளம், ராஜாக்க மங்கலம், ஈத்தாமொழி, கிருஷ்ணன் புதூர், புத்தன் துறை, மணக்குடி, முட்டம், குளச்சல், புத்தளம் என குமரி மாவட்டத்தின் மேற்குக் கடற்கரை ஊர்களின் வழியாக மக்கள் கூட்டங்களைக் கிழித்துக்கொண்டு பரவிய உள்நாட்டு யுத்தம் மறுபக்கம் நாவலில் பிரும்மாண்டமாகப் பதிவாகியுள்ளது. ஒரு கோர நாடகத்தின், ஒரு சோகக் காவியத்தின் பிரும்மாண்டப் பதிவு இது. இதற்கு முன்னும், இனியும் இப்படி ஒரு பதிவு, மனிதர்கள் மனிதர்களைத் தேடிப் பிடித்துக் கொல்லும் பயங்கரப் பதிவு, ரத்தமும் சதையும் சகதியாகச் சரியும் கொலைப் பதிவு, கடைகளும் வீடுகளும் மட்டுமல்ல, நிலமும் கடலும் பழிநெருப்பில் எரிந்து பிடிச் சாம்பலாகும் அக்கினிப் பதிவு இலக்கியத்தில் நிகழ்ந்ததில்லை, நிகழப்போவதுமில்லை. மண்டைக் காட்டுக் கலவரத்தில் விழுந்த கொலைகளையும் எரிந்த நெருப்பையும் கடவுள்களும் இறையியல்களும் ஆசீர்

வதித்தார்கள் என்பதை மறந்து விடமுடியாது. மானுடரின் பெயரால் சொல்லப்படும் கருத்தியல்களை விட கடவுளர்களின் நாமத்தால் எழுதப்பட்ட கருத்தியல்களுக்கு ஆணவம், அகங்காரம், மமதை, உயிர்க்கொலைவெறி பலமடங்கு அதிகம் என்பதற்கு மண்டைக்காடு கலவரம் பற்றிய மறுபக்கம் நாவலின் சித்திரிப்புகள் இன்னும் பலநூறு ஆண்டுகள் சாட்சியாக நிற்கும். 20ஆம் நூற்றாண்டின் கடைசி ஆண்டுகளில் நிகழ்ந்த மண்டைக்காடு கலவரம் பற்றி 21 ஆம் நூற்றாண்டின் முதல் ஆண்டுகளில் எழுதப்பட்ட மறுபக்கம் நாவலின் ஒவ்வொரு அத்தியாயமும் 19 ஆம் நூற்றாண்டின் நினைவுப் பதிவுகளை நோக்கி மீண்டும் மீண்டும் வழுக்கிக் கொண்டு செல்வதன் மர்மம் என்ன? என்றொரு கேள்வியை எழுப்பிப் பார்க்கவேண்டிய அவசியம் உள்ளது. இன்னும் கூடுதலாக, கடந்த 20-30 ஆண்டுகளாகத் தமிழ் எழுத்தும் சொல்லாடல்களும் திரும்பத் திரும்ப கடந்த காலத்தின் நினைவுப் பதிவேடுகளைப் புரட்டிக்கொண்டே இருப்பதன் மர்மம் என்ன? என்றும்கூட விரிவாக ஒரு கேள்வியைக் கேட்டுப் பார்க்க வேண்டிய அவசியம் உள்ளது.

19 ஆம் நூற்றாண்டின் காலனிய அரசியல் சமீப காலங்களில் ஆகப் பெரும் முக்கியத்துவத்தைச் சம்பாதித்து வருகின்றது. 19 ஆம் நூற்றாண்டைத் தமிழர்களின் அடையாள அரசியல் நூற்றாண்டு என்று சொல்ல வேண்டும். தமிழர் கூட்டங்கள் தத்தமது அடையாள உருவாக்கங்களோடுதான் காலனிய நவீன அரசியலினுள் நுழைந்தார்கள் என்று சொல்லவேண்டும். அவர்களது சாதிகளும் மதங்களும் அவற்றிற்கிடையிலான எல்லாவித மோதல்களோடும் முரண்களோடும் அப்போதுதான் காலனிய நவீன அரசியலினுள் நுழைந்தன. அடையாள அரசியல் ஒடுக்கப்பட்டிருந்த தமிழர் கூட்டங்களின் விடுதலை அரசியலுக்கு சில வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்ததுண்டு; அதே அடையாள அரசியல் இன்னும் சில தமிழர் கூட்டங்களின் ஆதிக்க அரசியலுக்கும் வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்தது. இந்த வகையில் காலனிய முதலாளியம் அறமற்ற நடுநிலைத் தன்மை கொண்டது. அது ஒரே வகையாக ஆதிக்கத்தையும் விடுதலையையும் ஒரு சேர உசுப்பி விட்டது. இருவகைச் சமூக சக்திகளையும் அது ஒரு சேர விளையாட விட்டது. அந்த சோக விளையாட்டு இன்று வரை தொடர்ந்து நீடிக்கிறது என்பதையே மண்டைக்காட்டு கலவரம் எடுத்துக் காட்டுகிறது.

ஒவ்வொரு கூட்டமும் தனது நினைவு அடுக்குகளினுள் துழாவித் தேடி, அகப்படும் ஆயுதத்தை ஏந்தி விடுதலைக்கு அல்லது ஆதிக்கத்திற்கு முயலுகிறது. விடுதலையோ ஆதிக்கமோ சாத்திய மில்லாமல் போகும்போது கூட அடையாள ஆயுதத்தைப் பழிதீர்த்துக் கொள்ளப் பயன்படுத்திக் கொள்ளுகிறது. பல நூற்றாண்டுகளைப் பற்றிப் படர்ந்து கதைகள் பேசும் இந்நாவலின் பரப்பு சமகால அரசியலிலும் சாதி மத அடையாளங்களின் ஆற்றலைச் சுட்டிக்காட்டுகிறது. புராணங்களாகவும் வரலாறாகவும் மறுபக்கம் நாவல் வரைந்து காட்டும் சித்திரங்கள் சமூக எதார்த்தம் என நாம் அறிந்து வைத்திருக்கும் வரைபடங்களைக் கலைத்துப் போட்டு விடுகின்றன. இந்தச் சமூகத்தின் பல படித்தான அடுக்குகளில் ஏதோ ஒன்றை மட்டுமே எல்லாமாகச் சித்திரிக்கும் நமது இயலாமையை இந்நாவல் எடுத்துக் காட்டி விடுகிறது. 19ஆம் நூற்றாண்டினுள்ளும் அதற்கு முன்பான காலங்களினுள்ளும் கட்டுப்பாடின்றி நுழையும் மறுபக்கம் நாவல் 20 ஆம் நூற்றாண்டில் நாம் அறிந்து வைத்துள்ள ஒற்றைப்படையான அரசியலைக் கடந்து செல்லுமாறு நம்மைத் தூண்டுகிறது. இந்த நாட்டின் இருநூறு வருட கால அடையாளங்களின் அரசியலை நாம் அறிந்துகொண்டோமா? என்றொரு கேள்வியை மிகக் காத்திரமாக முன்வைக்கிறது.

மறுபக்கம் நாவலில் பல அம்மன்கள் பேசப் படுகின்றனர். மண்டைக்காட்டு அம்மன், பனைவினை கிராமத்தின் முத்தாரம்மன், கன்னியாகுமரி அம்மன் இப்படிப் பல அம்மன்கள். குமரி மாவட்டத்திற்கு ஆராய்ச்சி செய்வதற்காக வந்த சேது மாதவன் அவனைப் பெற்ற அம்மையின் பூர்வீகத்தை அறிந்து கொள்வதற்காக அலைகிறான் என்பதையும் விரைவில் புரிந்துகொள்கிறோம். 19-20 ஆம் நூற்றாண்டுகளின் சமூக அசைவுகளையும் அவற்றின் உக்கிரமான முரண்களையும் மறுபக்கம் நாவல் பேசும்போதே, அவற்றின் ஊடாக அம்மன் என்னும் ஆதித்தாயைத் தேடும் ஓர் அடிப்படையான குரல் நாவல் முழுவதிலும் ஒலித்துக் கொண்டே இருக்கிறது. கிறித்தவப் பரவல், அய்யா வழி, பிரம்ம சமாஜம், காந்தி வழி ஆகிய புது முயற்சிகளெல்லாம் சமூக விடுதலைக்கு அல்லது சமூக சீர்திருத்தங்களுக்குக் கொஞ்சமாக அல்லது அதிகமாகப் பங்களித்திருக்கின்றன என்பதை ஆங்காங்கே நாவல் ஒத்துக்கொள்ளும் போது கூட அது அம்மை என்னும் ஆதித்தாயைத் தேடுவதைக் கைவிட்டதாகத் தெரிய வில்லை. கன்னியாகுமரி அம்மனின் கதையில் அவள் இந்து, கிறித்தவம் என்ற எல்லைகளைக் கடந்த வெளியில் நிறுத்தப்படுகிறாள். அம்மன் என்பது தெய்வம் அல்ல, அவள் நம் ஆதித்தாய் என்ற விளக்கமும் ஒலிக்கிறது.

சேது அவனது அம்மையின் அடையாளத்தைத் தேடி அலைவதும் நாவலின் பல கதாபாத்திரங்கள் பல நெருக்கடியான சந்தர்ப்பங்களில் அம்மன் என்னும் ஆதித்தாயைத் தேடுவதும் விசித்திரமான முறையில் மறுபக்கம் நாவலின் குறியீட்டு ஒற்றுமையை எடுத் துரைக்கின்றன. இதற்குப் பொருந்தும் வகையில் நாவலில் பல ஆண் கதாபாத்திரங்களை விட பெண் கதாபாத்திரங்கள் மிக வலுவானவர்களாகச் சித்திரிக்கப்பட்டுள்ளனர். முத்து, பிச்சிப்பூ, சிவகாமி ஆகிய கதாபாத்திரங்களுக்கு நிகரான ஆண் கதாபாத்திரங்கள் நாவலில் இல்லை. முத்து இந்நாவலின் ஆகப் பெரும் விடுதலைக் குரல். சாதிச் சமூகம் அனக்கமில்லாமல், குடும்பச் சுவர்களின் எல்லை களுக்குள், பெண்களின் மீது நிகழ்த்தும் வன்முறைகள் சேதுவின் தாய், முத்து ஆகியோரின் வாழ்க்கைகளின் வழி தீவிர மொழியில் எடுத்துரைக்கப்பட்டுள்ளன. அதே விதமான வன்முறை இந்திய வரலாற்றில் சமயச் சுவர்களின் எல்லைகளுக்குள் தாய்த் தெய்வங்களின் மீதும் நடத்தப் பட்டு வந்திருக்கிறது என்பது நாவலின் அழுத்தமான செய்தி. இந்த அர்த்தத்தில் அம்மையைத் தேடுவது என்பது இந்நாவலில் சொந்த மரபைத் தேடுவது என்ற பொருளிலும் பயின்று வருகிறது. அத்தனை சீர்திருத்தங்களையும் மீறி, அத்தனை அரசியல் இலக்குகளையும் மீறி மரபு குறித்த தேடல் நாவலில் குறிப்பான ஓர் இடத்தைப் பெற்றிருக்கிறது. மரபில் வேர் பதிக்காமல், மரபைக் கைப்பற்றாமல் விடுதலை அனுபவம் கைகூடாது என்பது போன்ற ஒரு செய்தி நாவலில் மறைத்து வைக்கப்பட்டுள்ளது.

மண்டைக்காடு கலவரத்திற்கான காரணங்கள், இன்னும் விரிவாக இந்துத்துவ எழுச்சிக்கான காரணங்கள் மறுபக்கம் நாவலில் பல கோணங்களில் தேடப்படுகின்றன. கிறித்தவ மதமாற்றமும் அது சமூக விடுதலையின் தூண்டலாகத் தொழில்படுவதும் பழைய ஆதிக்கச் சாதிகளிடையில் மிகச் சிக்கலான எதிர்விளைவுகளை ஏற்படுத்துகின்றன. காலனிய ஆட்சி இந்தியர்களை நாகரிகப்படுத்துகிறது என்ற வாதமும் இதன் எதிர் நிலையில் இந்தியர்கள் நாகரிகமற்றவர்களா? என்ற மறுவாதமும் முன்னுக்கு வருகின்றன. மண்டைக்காட்டில் நடந்தவை சமய மோதல்களே அல்ல, அவற்றுக்குப் பின்னால் காயம் பட்ட பழைய ஆதிக்கச் சாதிகளின் பழி உணர்வே உள்ளது என்ற குரலும் ஒலிக்கிறது. துலக்கமாக அறியப்பட்ட மேட்டுக் குடிச் சாதிகள் மட்டுமின்றி, ஒடுக்கப்பட்ட சாதிகள் என அறியப்பட்ட மக்கள் கூட்டங்களினுள்ளும் ஆதிக்கப் பண்பு கொண்ட அணிகள் உள்பொதிந்து நிலவுவதை நாவல் சுட்டிக்காட்டுகிறது. மறுபக்கம் நாவல் இந்தியச் சாதிகளின் வரலாறு குறித்த ஒரு நுட்பமான, ஆய்வின் உண்மையான தகவலை இங்கு விவாதிக்கிறது. அதாவது மறுபக்கம் நாவல் சாதிகளின் வரலாற்றைக் கட்டுடைப்பு செய்கிறது. இந்த நாவலைப் படித்து முடித்துவிட்டு, இந்நாவலுக்கு அணிந்துரை வழங்கிய அண்ணன் சி.சொக்கலிங்கம் அவர்களோடு பேசிய போது, அவர் இந்நாவலின் மிகப்பெரிய சாதனை சாதிகளின் உள்ளடக்கத்தை, சாதிகளின் அடிப்படையைக் கட்டுடைத்துக் காட்டுவதே என்றார்.

சாதிகளின், மதங்களின் அடையாள அரசியலை மையப் பொருளாகக் கொண்டிருப்பது போலக் காட்சியளிக்கும் இந்நாவல் உண்மையில் மதங்களுக்குப் பின்னால் சாதிகளையும் மத மோதல்களுக்குப் பின்னால் சாதித் துவேஷங்களையும் கண்டறிகிறது. தொடர்ந்து செல்லும் போது, ஒவ்வொரு சாதியினுள்ளும் பல சாதி அடுக்குகள் உள்ளமைந்திருப் பதையும் அவற்றிற்கிடையில் மௌனமாகக் குவிந்துள்ள குரோதங்களையும் வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. இன்னும் கூடுதலாக, எந்தச் சாதியும் “சுத்தமான” சாதியில்லை, எல்லாச் சாதிகளுமே கொஞ்சம் முந்திய வரலாற்றுக் காலத்தில் கலப்பில் பிறந்த சாதிகள் தான் என்ற முடிவுக்கு வருகிறது. மண்டைக்காட்டுக் கலவரம் குறித்த தகவல் சேகரிப்பிலும் ஆய்விலும் ஈடுபடும் மறுபக்கம் நாவல் அதன் போக்கில் இந்தியச் சாதிச் சமூகம் குறித்த ஓர் அடிப்படையான இரகசியத்தைக் கண்டறிந்து சொல்லு வதாகத் தெரிகிறது. சாதிகளின் “கலப்பு வரலாறு” என்ற ஓர் இரகசிய உண்மையை இந்த நாவல் எட்டியுள்ளது. இது இந்தியச் சாதியச் சமூகத்தைக் கட்டுடைப்பதற்கான ஒரு மாபெரும் கருத்தியல் கருவியாகத் தொழில்பட முடியும். அண்ணன் சொக்கலிங்கம் அவர்களின் இக்கருத்தை நாம் ஏற்றாக வேண்டும். அடையாள அரசியல் தீவிரமடையும் போது அது அதன் எதிர்நிலையைச் சென்றடையும் என்ற இயக்கவியல் உண்மையை நாம் இங்குச் சந்திக்கிறோம். சாதி, மத அடையாள அரசியல் குறித்த இந்நாவல் சாதி, மத அடிப்படைகளை உள்ளீடற்றவை என வெறுமைப் படுத்திக் காட்டுவதில் சென்று முடிந்திருக்கிறது. இது இந்நாவலின் அண்ணாச்சி பொன்னீலன் அவர்களின் மாபெரும் வெற்றி எனக் கொள்ளப்பட வேண்டும்.

மறுபக்கம்

ஆசிரியர் : பொன்னீலன்

வெளியீடு

நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிமிடெட்.,

விலை : ரூ.375.00