ஒரு பொன்மாலைப்பொழுதில் ஆந்திர அரசின் ஊராட்சி மற்றும் நகராட்சி நிர்வாகத்தின் அரசுச் செயலாளராக இருந்த திருமிகு. காசிப்பாண்டியன் அவர்களின் அலுவலகத்தில் திராவிடப் பல்கலைக்கழக உருவாக்கம் கருக்கொண்டது. இப்பல்கலைக் கழகத்தின் கருத்துரு தமிழக அரசின் மாண்புமிகு அமைச்சர் பேராசிரியர் க.அன்பழகன் அவர்களின் 70ஆம் ஆன்டு நிறைவு விழா மலரில் இடம் பெற்றது. தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகள் பேசப்படும் குப்பம் பகுதி தேர்ந்தெடுக்கப்பட்டு, சென்னையில் இருந்து முனைவர் வ.ஐ.சுப்பிரமணியம் அவர்களும், திருமிகு காசிப்பாண்டியன் அவர்களும் தொடர்வண்டிப் பயணம் மேற்கொண்டனர். திராவிடப் பல்கலைக்கழகத்தின் உருவாக்கம் மற்றும் செயல்பாடு குறித்து பயணத்தின்போது தொடர்ந்து உரையாடினர்.

குப்பம்- குடிப்பள்ளி - சமண மையம்

குப்பத்தில் ‘குடிப்பள்ளி’ என்னுமிடம் திராவிட மொழிகள் - பண்பாட்டு ஆர்வலர்கள் இருவரால் ஆய்வு செய்யப்பட்டது. நில அளவைப் பணியைச் செய்தவர் ஒரு மலையாளி. தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழி பேசும் மக்கள் பாறைகள் நிரம்பிய அப்பகுதியில் கூடி நின்றனர். கோலாரின் பொன்மலை/தங்கமலை குப்பத்திலிருந்து காண்போரின் கண்களுக்கு வசப்பட்டது. குடிப்பள்ளி ஒருகாலத்தில் சமண (ஜைன) மையமாக விளங்கிய இடம்.

திராவிடப் பல்கலைக்கழக அமைப்புக்குழு

திராவிடப் பல்கலைக்கழகத்திற்கான குழுவில் நீதியரசர் அவுலு சாம்பசிவராவ் தலைமையராகவும், மேநாள் தமிழ்நாடு அரசின் கல்லூரிக்கல்வி இயக்குநர் திருமிகு கே.மோகனரங்கன், மைசூர் மகாராஜா கல்லூரி மேநாள் முதல்வர் பேரா.எஸ். சாந்தவீரப்பா ஆகியோர் உறுப்பினராகவும் இடம் பெற்றனர். இக்குழுவின் உறுப்பினர்-செயலாளர் முனைவர் வ.ஐ. சுப்பிரமணியம் அவர்கள். திராவிடப் பல்கலைக்கழகத்தின் சட்ட வரைவு பல்கலைக்கழக நிதி நல்கை ஆணையத்தின் போல்மைச்சட்டம் மற்றும் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் சட்டம் ஆகியவற்றைப் பின்பற்றி முனைவர் வ.ஐ. சுப்பிரமணியம் அவர்களால் உருவாக்கப்பட்டதாகும்.

மாண்புமிகு முதல்வரின் விருந்தோம்பல்

திருமிகு. காசிப்பாண்டியன் முயற்சியால் திராவிடப் பல்கலைக்கழகக் குழுவின் உறுப்பினர்களுக்கு மாண்புமிகு ஆந்திர முதல்வர் என்.டி.இராமாராவ் இல்லத்தில் விருந்து ஏற்பாடு செய்யப்பட்டது. விருந்தோம்பலைச் சிறப்பாகச் செய்த முதல்வர், முனைவர் வ.ஐ.சுப்பிரமணியம் அவர்களைப் பேச அழைத்தார். முனைவர் வ.ஐ. சுப்பிரமணியம் நான்கு தென் மாநிலங்களிடையே நிலவும் பண்பாட்டு ஒற்றுமை, கூட்டுறவு குறித்து விளக்கம் அளித்தார். ஆந்திர முதல்வர் திராவிடப்பல்கலைக்கழகத்தின் கருத்துருவை ஏற்றுக் கொண்டு நீதியரசர் திருமிகு அவுலு சாம்பசிவராவ் அவர்களைச் செயல்படுத்தும் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டினார். திராவிடப் பல்கலைக்கழத்தின் சட்ட வடிவமைப்புக்குழு செயல்படுத்தும் குழுவாக மாற்றப்பட்டு, மாநிலத் தலைநகர் ஐதராபாத்தில் கூடியது; குழுவின் கருத்துரு கீழ் வருவன:

(அ) திராவிடப் பல்கலைக்கழகத்திற்கான நிதியை நான்கு தென்மாநிலங்களும் நடுவன் அரசும் பகிர்ந்து கொள்ள வேண்டும்.
(ஆ) உயர்பதவிகள் நான்கு திராவிட மாநிலத்தவர்களால் பகிர்ந்து கொள்ளப்பட வேண்டும்.
(இ) கொள்கை வகுப்பது தொடர்பான அமையங்களில் (ஙிஷீபீவீமீs) நான்கு தென்மாநிலத்தவரும் நிதி வழங்கும் அமைப்பும் இடம் பெற வேண்டும்.
(ஈ) ஆந்திர மாநில அரசு 1,090 ஏக்கர் நிலத்தைத் திராவிடப் பல்கலைக்கழகத்திற்கு விலையின்றி அளிக்கவேண்டும்.

மேற்கண்ட திட்டங்கள் உள்ளடங்கிய கருத்துரு மாண்புமிகு ஆந்திர முதல்வருக்கு அனுப்பி வைக்கப்படடது.

திராவிடப் பல்கலைக்கழகத்திற்கு வாய்ப்பு கேடுகள்

திராவிடப் பல்கலைக்கழகத்திற்கான முயற்சிகள் அடுத்து வந்த ஆந்திராவின் தேர்தல் முடிவுகளால் பின்னடைவு கண்டது. ‘தெலுங்கு தேசம்’ கட்சி தோல்வியைத் தழுவியது. இந்திய பேராயக்கட்சி ஆட்சிக்கு வந்தது. திருமிகு காசிப்பாண்டியன் இந்திய உணவு இணையத்தில் சென்னையில் பணியேற்றார். ஆந்திர அரசின் செயலாளர்கள் பலர் திராவிடப் பல்கலைக்கழக உருவாக்கத்திற்கு எதிர்ப்பாளர்கள். திருமிகு காசிப்பாண்டியன் இடமாற்றத்தோடு திராவிடப் பல்கலைக்கழகம் ‘புதையுண்டு போனது’ என்ற உணர்வுகளைக் காட்டினார்கள். இந்தியாவில் ஆந்திர மாநிலம் உள்ளிட்ட ஒவ்வொரு மாநிலத்திலும் அமையவிருந்த சமத்கிருதப் பல்கலைக்கழகம் அமைய ஆர்வம் காட்டினார்கள்.

திராவிடப் பல்கலைக்கழகத்திற்கு உதவிகள்

திராவிட மொழிஇயல் கழகத்தின் முயற்சியால் திராவிடப் பல்கலைக்கழக உருவாக்கத்திற்கு எதிர்பாராத பகுதியிலிருந்து உதவிகள் வந்தன. பல்கலைக்கழக நிதி நல்கை ஆணையத்தின் துணைத் தலைமையர் திருமிகு இராமசந்திரராவ் அவர்களிடம் திராவிடப் பல்கலைக்கழகம் குறித்து விளக்கப்பட்டது. திருமிகு இராமச்சந்திரராவ் சத்தீஸ்கர் மாநிலத்தின் முன்னாள் முதல்வர் மாண்புமிகு அஜித்ஜோகியின் நண்பர். இவர் மத்திய அரசின் நிதி உதவி குறித்து மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சராக விருந்த மாண்புமிகு அர்ஜூன்சிங் அவர்களிடம் எடுத்துரைத் தார். திருவனந்தபுரத்தில் அனைத்து நாடுகள் திராவிட மொழி இயல்கழகம் சார்பில் கட்டப்பட்ட மருத்துவமனை திறப்பு விழாவிற்கு வந்தபோது மாண்புமிகு அர்ஜூன்சிங் அவர்கள் இக்கழகம் தன் பணிகளை வெளிபடுத்த வேண்டும் என்றும் தென்மாநில முதல் அமைச்சர்களுக்கு நிதிஉதவி குறித்து தான் கடிதம் எழுதுவதாகவும் உறுதியளித்தார். திருமிகு காசிப்பாண்டியன் அவர்களின் உறவினர், ஆந்திர மாநிலத்தின் இந்திய ஆட்சிப்பணி அலுவலர் முனைவர் சு.செல்லப்பா அவர்கள் ஜதராபாத்தில் திராவிடப் பல்கலைக் கழகத்தைச் சட்டப்படி பதிவு செய்தார். முனைவர் செல்லப்பா, இந்திய ஆட்சிப்பணித் தேர்வுகளை முதன் முதலாக தமிழில் எழுதி வெற்றி பெற்றவர். ‘இந்திர காவியம்’ நூலைப்படைத்தவர்; தமிழக அரசின் பரிசையும் பெற்றவர்.

திராவிடப் பல்கலைக்கழகத்திற்குப் பகையும் நட்பும்

தில்லியில் கல்வி அமைச்சகத்தில் பணியாற்றிய தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு செயலாளர் திராவிடப் பல்கலக்கழகம் தொடர்பான பணிகளைக் காலதாமதத்திற்கு ஆட்படுத்தினார். திராவிடப் பல்கலைக்கழகத்தின் கருத்துருவை தில்லி பிராமணிய ஆட்சியாளர்கள் கொல்வதற்கு முயன்றனர் என்பது முனைவர் வ.ஐ.சுப்பிரமணியம் அவர்களின் கருத்து.

திராவிடப் பல்கலைக்கழகத்தின் அமைப்புத் திட்டம் பல்கலைக்கழக நிதிநல்கை ஆணையத்தின் தலைமையர் முனைவர் இராமிரெட்டி அவர்களுக்கு அனுப்பப்பட்டது. முனைவர் இராமிரெட்டி, திருமிகு. இராமச்சந்திரராவின் நண்பர். பல்கலைக்கழக நிதிநல்கை ஆணையத்தின் சார்பில் முனைவர் எம்.வி.பைலி குப்பம் சென்ற பின்னர், திருவனந்தபும் வந்தார். அது சமயம் திருமிகு காசிப்பாண்டியன் கொச்சியில் நிர்வாக தீர்ப்பாயத்தின் உறுப்பினராகப் பணியாற்றி வந்தார்; பல்கலைக்கழக நிதிநல்கை ஆணையக் குழுவின் விவாதங்களில் திருவனந்தபுரத்தில் பங்கு பெற்றார்.

திருமிகு காசிப்பாண்டியன் பிறகு ஆந்திர மாநிலத்தின் தேர்தல் ஆணையராகப் பணி அமர்த்தப்பட்டார். அப்போது ஆந்திர மாநிலத்தின் முதல்வராக இருந்த மாண்புமிகு. ஜனார்த்தன ரெட்டி அவர்களைத் திராவிடப் பல்கலைக்கழகத்திற்கான குழு உறுப்பினர்கள் சந்தித்தனர். “திராவிடப் பல்கலைக்கழகம் ஏன் ஆந்திரத்தில் உருவாக்கப்பட வேண்டும்?” என்று முதல்வர் கேள்வி எழுப்பினார். இந்த எதிர்பாராத கேள்விக்கு விடையளித்த முனைவர் வ.ஐ.சுப்பிரமணியம் “ஆந்திரத்தின் அமாராவதி பௌத்த மையமாக விளங்கியது; இங்கிருந்துதான் கீழ்த்திசை நாடுகளுக்கு பௌத்தம் பரவியது,” என்று விடையளித்தார். இது திராவிடப் பல்கலைக்கழகம் அமைய நயன்மை விளக்கமானது (யிustவீயீவீநீணீtவீஷீஸீ). இச்சந்திப்பைத் தொடர்ந்து முதல்வர் அலுவகத்திலிருந்து நாளேடுகளுக்கு திராவிடப் பல்கலைக் கழகத்திற்கு 1090 ஏக்கர் நிலம் வழங்கப்பட்டதாகச் செய்தி அறிவிக்கப்பட்டது. ஆனால் அரசாணை வெளியிடப்படவில்லை.

அடுத்து நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் திருமிகு என்.டி.இராமராவ் முதல்வரானார். இதனால் திருமிகு. காசிப்பாண்டியனின் துலக்கம் ஆந்திர அரசு வட்டாரத்தில் பெருகியது. மாண்புமிகு முதல்வர் இல்லத்தில் நடந்த திராவிடப் பல்கலைக்கழகத்திற்கான கூட்டத்தில் ரூ.170 கோடிகள் நிதி ஒதுக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. திராவிடப் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தராக பொறுப்பேற்கும்படி முனைவர் வ.ஐ.சுப்பிரமணியம் கேட்டுக்கொள்ளப்பட்டார். ஆனால் அவர் மறுத்துவிட்டார். திருமிகு சந்திரபாபு (நாயுடு) முதல்வரானபோது தெலுங்கு கவிஞர் முனைவர் பி.வி. அருணாசலம் அவர்கள் துணைவேந்தராக நியமிக்கப்படார்.

திராவிடப் பல்கலைக்கழகத்திற்கான அவசரச் சட்டம் ஆந்திரப் பேரவையில் நிறைவேற்றபட்டது. அப்போதைய மாநில ஆளுநர் மேதகு கிருஷ்ணகாந்த் இச்சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கக்காமல் காலம் கடத்தி வந்தார். மேதகு கிருஷ்ணகாந்த் அவர்களின் நண்பர் என்ற நிலையில் மாண்புமிகு தமிழக முதல்வர் கலைஞர் அவர்களின் வேண்டுகோள்படி திராவிடப் பல்கலைக்கழகச் சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. முனைவர் வ.ஐ.சுப்பிரமணியம் திராவிடப் பல்கலைக்கழகத்தின் இணைவேந்தராகவும் முனைவர் பி.வி அருணாசலம் துணை வேந்தராகவும் பணியமர மேதகு ஆளுநரால் ஒப்புதல் வழங்கப்பட்டது. அடுத்து வந்த ஆளுநர் மேதகு அரங்கராஜன், திராவிடப் பல்கலைக்கழகம் தொடர்பான எந்த முடிவுக்கும், எவரின் உணர்வுகளையும் பாதிக்காமல் கருத்தாக இருந்தார். ஆளுநர் அலுவலகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற பிராமண அலுவலர் ஒருவர் முற்போக்கான செயல் திட்டங்களை நிராகரிக்க ஆளுநரிடம் பேசி வந்ததாக முனைவர் வ.ஐ.சுப்பிர மணியம் குறிப்பிடுகிறார்.

“திராவிடப் பல்கலைக்கழக உருவாக்கத்தில் பெரும் பகுதி பணி/பெருமை திருமிகு காசிப்பாண்டியன் அவர்களையே சாரும்.” இது முனைவர் வ.ஐ. சுப்பிரமணியம் அவர்களின் கருத்து. திருமிகு காசிப்பாண்டியன் மறைவிற்கு கண்ணீர் மல்கி தன் இனிய நண்பரை இழந்த துயரம் கொடியதெனக் குறிப்பிடுகிறார். சென்னையில் கீழ்ப்பாக்கம் கிருத்துவக் கல்லறைத் தோட்டத்தில் தன் உடலைப் புதைக்கச் செய்து உயிர் நீத்த நிலையில் சாதியைத் துறந்தார் திராவிடத் தமிழ் மாமள்ளர் திருமிகு காசிப்பாண்டியன்.

திராவிடப் பல்கலைக்கழக உருவாக்கத்திற்கு உதவியவர்களாக அட்டவணை சாதிகள்/பழங்குடிகள் ஐவரைப் பட்டியலிடுகிறார் முனைவர் வ.ஐ சுப்பிரமணியம் அவர்கள்

1) திருமிகு காசிப்பாண்டியன்.
2) ஆந்திர முதல்வரின் தனிச்செயலர்.
3) மாண்புமிகு முன்னாள் சத்தீஸ்கர் மாநில முதல்வர் அஜித் ஜோகி.
4) பல்கலைக்கழக நிதி நல்கை ஆணையக்குழுவின் செயலாளர் முனைவர் கங்குருடு (ஞிக்ஷீ. நிணீஸீரீuக்ஷீuபீu).
5) இந்திய ஆட்சிப்பணி அலுவலர் கவிஞர் முனைவர் சு.செல்லப்பா ஆகியோர்.

திராவிடப் பல்கலைக்கழகத்திற்கு எதிராக செயல்பட்டவர்கள்

1) தில்லி மனிதவளமேம்பாட்டு அமைச்சரக பிராமணிய அலுவலர்.
2) முன்னாள் ஆந்திர மாநில ஆளுநர் மேதகு கிருஷ்ணகாந்த்.
3) ஓய்வு பெற்ற ஆந்திர பிராமண அலுவலர் ஒருவர்.

திராவிடப் பல்கலைக்கழக ஆக்கத்தில் உறவாக அட்டவணை சாதியினர், துணையாக முற்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர், பகையாக பார்ப்பனர்கள் இந்திய வரலாற்றுப் போக்கில் வழக்கமானதேயாகும். திருமிகு. காசிப்பாண்டியன் அவர்கள் திருவனந்தபுரத்தில் அமையப் பெற்ற அனைத்து நாடுகள் திராவிட மொழி இயல் கழகத்தின் வளர்ச்சியிலும் ஆர்வம் கொண்டவர். ஆந்திர அரசிடமிருந்து நிதி நல்கை பெற்றுத் தந்தவர். இந்த அமைப்புக்குக் கர்நாடக அரசின் முதல்வராக மாண்புமிகு தேவராசஅர்சு இருந்த போது கர்நாடக அரசின் நிதிநல்கை பெற்றுத் தந்தவர் முன்னாள் பேராயக்கட்சித் தலைவர், இந்நாள் தமிழ்த்தேயத்தின் தலைவர் திரு பழ.நெடுமாறன் என்பது ஒரு கூடுதல் செய்தி.

இந்திய அடுக்கமைவுச் சாதியச் சமுதாயத்தில் சாதிய மோதல்கள், சாதியை அடிப்படையாகக் கொண்ட சமய மோதல்கள், மக்கள் தொகைப் பெருக்கம், மிகுதியான வேளாண்மை, மிகுதியான நீர்த்தேவை, சமுதாயத் தேக்கம், பொருளாதாரத் தேக்கம் போன்ற பல சிக்கல்களை நடுவன் அரசும் ஒவ்வொரு மாநில அரசும் எதிர்கொள்ள வேண்டியுள்ளது. சிக்கல்களுக்குத் தீர்வு காண்பதை விட அரசியலாக்கும் போக்கு, போலி மக்களாட்சி முறை, ஊழல் மலிந்த தேர்தல் முறை ஆகியவற்றால் பண்பாடு குறித்த கருத்தாக்கங்கள் மக்கள் எண்ணச்சூழலில் ஏற்ற அளவு இடம் பெறமுடியவில்லை.

திராவிடப் பல்கலைக்கழகத்தின் தேவை

இந்தியாவின் பண்பாட்டுத்தளமாக இதுவரை விளங்கிய மொழி சமத்கிருதம், அம்மொழி உள்ளடக்கிய வேதங்கள், வேதாந்த கருத்துகள், புராணங்கள், இதிகாசங்கள் ஆகியன. தேவமொழியென்று கற்பிதம் செய்யப்பட்ட சமத்கிருதத்தின் உள்ளடக்கங்கள் போற்றிப் புகழப்பட்டன. கடந்த இரு நூற்றாண்டுகளாக சமத்கிருதம் ஆழ்ந்த ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது. பல கருத்தியல்கள், கொள்கைகள் மற்றும் கோட்பாடுகள் கட்டமைக்கப்பட்டன. “உலகின் கிழக்கு- மேற்குப் பகுதிகளின் வரலாற்றாசிரியர்கள், அகழ்வாய்வாளர்கள், புறவரைவியலார், மொழி கூறுஇயலார் ஆகியோர் காட்டிய ஆர்வத்தால், கடந்த இருநூற்றாண்டுகள் ஆழ்ந்து முழுமையாக சமத்கிருதப் பங்களிப்புகளை ஆய்வு செய்துள்ளனர். இந்தியாவின் பன்முகப் பண்பாட்டின் இணையான பங்காளியான தமிழ், 20க்கும் மேற்பட்ட திராவிட மொழிகளின் தலையூற்றாகும். இம்மொழி சமத்கிருதம் போன்று ஆய்வுகள் செய்யப் பொருத்தமான மொழியாகும்” (அர்ஜூன் சிங், 2007).

இந்தியப் பண்பாட்டின் பன்முகப்பாங்கும் சமத்கிருதமும் இந்திய சமுதாய, பொருளியல், அரசியல் அரங்குகளில் உருவாக்கிய துலக்கங்கள் ஆழ்ந்த விவாதத்திற்குரியவை. இந்தியப் பண்பாட்டின் அடிப்படைகளைக் கேள்விக் குறியாக்கிய வளநோக்காளர்களில் முதன்மையானவர் அண்ணல் அம்பேத்கர் அவர்கள். “பிராமணர்கள் ஐயம் எழுவதற்கு இடமே வைக்கவில்லை. ஏனென்றால் அவர்கள் நச்சுத்தனமான ஒரு கருத்தை மக்களிடையே பரப்பியிருக்கிறார்கள். வேதங்கள் பொய்யாதவை, தவறுக்கிடமற்றவை என்பதே இந்தக் கருத்து. இந்துக்களின் அறிவு வளர்ச்சி நின்றுவிட்ட தென்றால், இந்து நாகரிகமும் பண்பாடும் தேக்கமடைந்து முடைநாற்றக் குட்டை ஆகிவிட்டது என்றால் இதுதான் காரணம். இந்தியா முன்னேற வேண்டுமானால் இந்தக் கருத்தை வேரோடும் வேரடி மண்ணோடும் அழித்து ஒழிக்க வேண்டும். வேதங்கள் உதவாக்கரையான படைப்புகள். அவற்றைப் புனிதமானவை என்றோ பொய்யாதவை என்றோ கூறுவதற்கு எந்தக் காரணமும் இல்லை. பிராமணர்கள்தான் அவற்றைப் புனிதம் என்றும் பொய்யாதவை என்றும் போற்றும்படிச் செய்து வைத்திருக் கிறார்கள். ஏனென்றல் பிற்காலத்திய இடைச்செருகலான புருஷ சூக்தத்தின் மூலம் வேதங்கள் பிராமணர்களைப் பூமியின் அதிபதிகளாக ஆக்கியுள்ளன.

இனக்குழுவின் கடவுளர்களைத் துதித்து, அவர்கள் எதிரிகளை அழித்து, அவர்களின் உடைமைகளைக் கொள்ளையடித்து தங்களை வழிபடுவோருக்குக் கொடுக்கும்படிக் கேட்டுக் கொள்ளும் வேண்டுகோளைத் தவிர வேறெதுவும் இல்லாத இந்த உதவாக்கரை நூல்களைப் புனிதமானவை என்றும் பொய்யாதவை என்றும் ஆக்கப்பட்டது ஏன்? என்று கேட்பதற்கு யாருக்கும் தைரியம் இல்லாமல் போயிற்று. ஆனால் பிராமணர்கள் பரப்பியுள்ள இந்த விவேகமற்ற கருத்தின் பிடியில் இருந்து இந்து மனத்தை விடுவிக்க வேண்டிய தருணம் வந்துவிட்டது. இந்த விடுதலை ஏற்படாமல் இந்தியாவுக்கு வருங்காலம் இல்லை. இதில் உள்ள அபாயத்தை நன்றாக அறிந்தே இந்தப்பணியை மேற்கோண்டிருக்கின்றேன். விளைவுகளுக்கு நான் அஞ்சவில்லை. மக்களைத் தட்டி எழுப்பி விடுவதில் நான் வெற்றி பெற்றால் பெரிதும் மகிழ்வேன்,” என்கிறார் அண்ணல் அம்பேத்கர்(1996). வேதங்கள் பொய்யானவை; இதிகாசங்கள் பொய்க்கதைகள். இவற்றின் மீது கட்டமைக்கப்பட்ட இந்தியப் பண்பாடும் அத்தகையதேயாம்.

மொழி ஞாயிறு தேவனேயப்பாவாணர் அவர்களும் அண்ணல் அம்பேத்கரின் கருத்துகளுக்கு வளம் கூட்டியுள்ளார். “விரல் விட்டு எண்ணத்தக்க பிராமணர் தென்னாடு வந்து தாம் நிலத் தேவரென்றும், தம்மொழி தேவமொழியென்றும் சொல்லி மூவேந்தரையும் அடிமைப்படுத்தினர். ஆரியப்பூசாரிகள், அகக்கரண வளர்ச்சியின்றி சிறுபிள்ளைகள்போல் இயற்கையும் செயற்கையுமான பல்வேறு சிறுதெய்வங்களைப் பற்றி முன்னிலைப் பரவலாகவும், படர்க்கைப்பரலாகவும் பாடிய பாடற்றிரட்டே ஆரிய வேதங்களின் தொகுப்பாம். முதன் முதலாகத் தோன்றிய தொகுப்பு இருக்கு (ருக்) வேதம் ... அவ்வேதப்பிரிவுகளான பத்து மண்டலங்களுள் முதல் தொண்டுள்ளும் (ஒன்பதுள்ளும்) நாற்குலப்பகுப்பு பற்றிய குறிப்பேயில்லையென்று சொல்லப்படுகிறது. பத்தாம் மண்டலத்திலுள்ள புருடசுக்தம் என்னும் குழறுபடை மந்திரம் போலியும் பிற்காலத்து சேர்க்கப்பட்ட செருகலே” (பாவாணர்-இராசகோபால் மேற்கோள் காட்டியவாறு, 2007).

இராமலிங்க வள்ளலாரும் “வேதம், ஆகமம், புராணம், இதிகாசம், சைவம், வைணவம் ஆகியவற்றைக் கருத வேண்டாம்,” என்று தனது இறுதிப் பேருரையில் குறிப்பிட்டார். “வேதம், ஆகமம், புராணம், இதிகாசம், முதலிய கலைகள் எதினிலும் லட்சியம் வைக்க வேண்டாம். ஏனென்றால், அவைகள் ஒன்றிலாவது குழுஉக்குறியின்றி தெய்வத்தை இன்னபடி என்றும், தெய்வத்தினுடைய உண்மை இன்னதென்றும் கொஞ்சமேனும் புறங்காவியச் சொல்லாமல் மண்ணைப் போட்டு மறைத்து விட்டார்கள், அணுமாத்திர மேனுந் தெரிவிக்காமல், பிண்ட லட்சணத்தை அண்டத்தில் காட்டினார்கள் ..... கைலாசபதி என்றும், வைகுண்டபதி என்றும் சத்தியலோகாதிபதி என்றும் பெயரிட்டு, இடம் வாகனம் ஆயுதம் வடிவம் ரூபம் முதலியவையும் ஒரு மனுஷனுக்கு அமைப்பதுபோல் அமைத்து உண்மையாக இருப்பதாகச் சொல்லியிருக்கிறார்கள்.... இஃது உண்மை இருப்பதாகவே முன்னும் பின்னும் உள்ள பெரியவர்கள் என்று பெயரிட்டுக் கொண்டிருந்தவர்களும் உண்மையை அறியாது அப்படியே கண்ணை முடிக் கொண்டு உளறியிருக்கிறார்கள்.... சைவம், வைணவம் முதலிய சமயங்களிலும் வேதாந்தம் சித்தாந்தம் முதலிய மதங்களிலும் லட்சியம் வைக்க வேண்டாம். ... நான் முதலில் சைவசமயத்தில் லட்சியம் வைத்துக்கொண்டிருந்தது இவ்வளவென்று அளவு சொல்ல முடியாது.... அப்படி லட்சியம் வைத்ததற்கு சாட்சி வேறே வேண்டியதில்லை; நான் சொல்லியிருக்கிற திருவருட்பாவில் அடங்கியிருக்கிற ஸ்தோத்திரங்கள் போதும்.... ஏன் அவ்வளவு மிகுந்த அழுத்தம் எனக்கு அப்போதிருந்ததென்றால், அப்பொழுது எனக்கு அவ்வளவு கொஞ்சம் அற்ப அறிவாக இருந்தது” (இராமலிங்க அடிகளார், 1873).

எண்ணிக்கையில் மக்கள் பேசாத (கணக்கெடுப்பில் சிலர் மட்டுமே பேசும்) மொழியைத் தேவமொழியென்றும், தேசிய மொழியென்றும், செம்மொழியென்றும் நிலை நாட்டப் படுவதன் தேவை: நாட்டு மக்களைச் சாதிகளாகப் பிரித்தாண்டு அவர்கள் மீது வருணாசிரம, சாதிய, அடுக்கமைவு, தேக்கச் சமுதாய நிலையைப் பேணுவதற்கு நிலவும் நிலையைத் தொடர்வதற்கே யாகும். உறவுடைய தேய இனங்களை மோத விடுவதில் நடுவன் அரசும், உச்ச அமைப்பு களும் (காவேரி நதிநீர்ச் சிக்கல் போன்று) கருத்தாகச் செயல் படுகின்றன. இந்து, ஹிந்தி, பசுமாடு, பொய்மையியல் (தொன்ம) இதிகாசங்கள் வழி உழைக்கும் மக்களை உசுப்பிவிட்டு அலைக்கழிக்கப்படுவதும் வேதப் பண்பாட்டு ஆர்வலர்களின் அன்றாட அரசியல் செயல்பாடுகள். சமத்கிருத மொழியில் படைக்கப்பட்ட “பொய்க் கதைகளைச் சமய நம்பிக்கை எனக் காரணம் காட்டி மெய்போலாக்கி” (பணிக்கர், 2007) மெய்யான பண்பாட்டுக் கூறுகளைப் பொய்யாக்கி வருகின்றனர். வெள்ளையர் ஆட்சியில் அடக்கப்பட்ட தக்கர்-பிண்டாரியர் வழி தோன்றிய குற்ற சாதியக்குழுக்கள் விடுதலைக்குப்பின்னர் பெரும் ஈகையராகக் காட்டப்பட்டு சாதிக்கோட்டையின் காவல் பணியாளர்களாக்கப்பட்டு, சமுதாய, சமய, பொருளாதார, அரசியல் அரங்குகள் குற்றமயமாக்கப்பட்டு விட்டன. நாட்டு வாழ்வில் அரசியல் பாங்கமைவு போல், பொருளியல் பாங்கமைவுபோல் பண்பாட்டுப் பாங்கமைவும் தேவை என்பதை மேதகு முன்னாள் குடியரசுத்தலைவர் உழவூர் கே.ஆர். நாராயணன் அவர்கள் எடுத்துரைத்தார்.

அரப்பா நாகரிகம் முதல், திருக்குறள், சங்க இலக்கியங்கள் ஆகியவை இந்தியாவிற்குப் புதிய பண்பாட்டுத் தளத்தை அளிக்கவல்லவை. செம்மொழித் தமிழ், அதன் உடனுறவு திராவிட மொழிகளும், திராவிடப் பண்பாடும் சமுதாய அளவில் இந்திய வாழ்விற்கு வளம் சேர்ப்பவை. திராவிடப் பல்கலைக்கழகம், இந்தியாவில் புதிய போக்குகளைக் கொண்ட பண்பாட்டு விளைப்புக்குப் புதிய கழனி. இதற்குப் பொன்னேர் பூட்டி கழனி திருத்திய உழவர்கள் திருமிகு காசிப்பாண்டியன் மற்றும் திராவிட மொழி இயல் அறிஞர் முனைவர் வ.ஐ. சுப்பிரமணியம் ஆகியோர். திராவிடப் பல்கலைக்கழகத்தின் உருவாக்கத்தில் பங்களித்த அட்டவணைச்சாதிகள் / பழங்குடிகள் ஐவர், மற்றும் திராவிட மொழி சார்ந்த அறிவாளர்கள் பாராட்டுக்குரியவர்கள். மாண்புமிகு அர்ஜூன் சிங் அவர்கள் திராவிடப் பண்பாட்டை இந்திய பன்முகப் பண் பாட்டிற்குத் தளமாக்கும் பண்பாட்டு ஆர்வலர். மாண்புமிகு முன்னாள் முதல்வர் அஜித் ஜோகி, தனது பங்களிப்பு வழி பண்பாட்டுச் செழுமைக்கு உதவியுள்ளார். இவர் வடக்குத் திராவிட இனக்குழு சார்ந்த முற்போக்காளரும் ஆவார்.

சுருக்கம்

- திருமிகு காசிப்பாண்டியன் ஆந்திர மாநிலத்தின் ஆட்சிப்பணி அலுவலராகப் பணியாற்றியவர், அந்நாள் முதல்வரின் நண்பர், தெலுங்கு மொழி படித்தவர், திராவிடப் பண்பாட்டு ஆர்வலர்.

- திராவிடப் பல்கலைக்கழக உருவாக்கத்தில் பெரும் பங்களித்து, பண்பாட்டுத்தளத்தில் தன் வரலாற்றுக் கடமையைச் செய்தவர் திருமிகு காசிப்பாண்டியன். இவருக்கு இணையாகப் பங்களித்தவர் திராவிடமொழி இயல் அறிஞர் முனைவர் வ.ஐ. சுப்பிரமணியம் அவர்கள்.

- ஆந்திரத்தின் மூன்று முதல் அமைச்சர்களும் நீதியரசர் அவுலு சாம்பசிவராவும் திராவிடப் பல்கலைக்கழகம் அமைய உதவியவர்கள்.

- திராவிடப் பல்கலைக்கழக உருவாக்கத்தில் அட்டவணைச் சாதிகள்/பழங்குடிகள் சார்ந்த ஐவர் ஆற்றிய நற்பங்கு வரலாற்றின் வளமான பதிவுகள்.

- திராவிடப் பல்கலைக்கழகத்திற்கு வந்தடைந்த பகைகள் தில்லியிலும், அய்தராபத்திலும் பிராமணிய வழியினரால் உருவாக்கப்பட்டவை.

- மாண்புமிகு அர்ஜூன்சிங் அவர்கள் இந்தியாவின் பன்முகச் சமுதாயப் பண்பாட்டுச் சூழலில் திராவிடப் பங்களிப்பைத் தேவையாகக் கருதுவதும் தமிழைத் தளமாகக் கொள்வதும் ஒரு புதிய போக்கு.

- திராவிடப் பல்கலைக்கழகம் ஜைன மையமான குடிப்பள்ளியில் குடி அமர்ந்துள்ளது; பௌத்தமும் இப்பல்கலைக்கழகத்திற்குக் கைகொடுத்துள்ளது.

- திராவிடப் பல்கலைக்கழகம் புதிய இந்தியப் பண்பாட்டு விளைப்புக்குப் புதிய கழனி. இதில் பொன்னேர் பூட்டி கழனி திருத்திய உழவர்கள் திருமிகு காசிப்பாண்டியன் (மள்ளர்/உழுதுண்ணும் வேளாளர்) மற்றும் முனைவர் வ.ஐ. சுப்பிரமணியம் (உழுதுவித்துண்ணும் வேளாளர்). நாட்டு வளர்ச்சிக்குப் பண்பாட்டுப் பாங்கமைவு இந்தியாவின் வரலாற்றுத் தேவை.

நோக்கீடு

1. அம்பேத்கர், பி.ஆர். (1996), முன்னுரை, பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் எழுத்தும் பேச்சும், நூல்தொகுப்பு, தோகுதி 8 (தமிழ்) பக்: 10.

2. இராசகோபால், அருணா. (2007), பாவாணர் அவர்களை மேற்கோள் காட்டியவாறு - ‘மொழி, சமுதாய, சமயத்தளங்களில் பாவாணர் பங்களிப்பு’, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை - 600 013. பக்:121.

3. இராமலிங்க அடிகளார். (1873), இறுதிப் பேருரை (22.10.1873), ‘ஊரும் உலகும்’ (ஆசிரியர் கு.வெ.கி. ஆசான்) 5(8): 1-2, 1984).

4. Arjun Singh, (2007), Speech delivered by Hounourable Minister for HRD in the Inaugural function of Central Institute on Classical Tamil at Chennai, 18.08.2007.

5. Panikkar, K.N.(2007) Myth, History and Politics. Frontline, October, 2007, p:23.

6. Subramniam, V.I. (2007) Origin of the Dravidian University, International Journal of Dravidian Linguistics, 37(1): 191 -202 (Basis of this Tamil article).

[பாரதியார் பல்கலைக்கழகத் தமிழ்த்துறை மற்றும் தமிழ்ப் பண்பாட்டு ஆய்வு நிறுவனம் இணைந்து நடத்திய இந்தியப் பல்கலைக்கழகத் தமிழாசிரியர் மன்றத்தின் 39ஆம் பன்னாட்டு தமிழியல் கருத்தரங்கில் படிக்கப்பட்ட ‘திராவிடப் பல்கலைக் கழக உருவாக்கத்தில் தமிழ் மள்ளர் திருமிகு காசிப்பாண்டியன் பங்களிப்பு’ (ஆய்வுக்கோவை 2008, தொகுதி ஐந்து, பக்: 11-18) சுருக்கம் கருதி வெளியிடப்பட்ட பகுதி, இக்கட்டுரையின் ஒரு பகுதியாகும். நன்றி: பதிப்பாசிரியர்கள் முனைவர்கள் இரா.மோகன். மு.மணிவேல், சி.நாச்சிமுத்து, தூ.சேதுராம பாண்டியன், இந்தியப் பல்கலைக்கழக தமிழாசிரியர் மன்றம், மதுரை காமராசர் பல்கலைக்கழகம், மதுரை – 625021.]