பேராசிரியர் கமில் வாக்லேவ் சுவெலெபில் (Kamil Vaclave Zuelebil) செக்கோஸ்லேவிய நாட்டின் பராக் நகரில் 1927ஆம் ஆண்டு நவம்பர் ஏழாம் நாள் பிறந்தவர். கடந்த சனவரி மாதம் பதினேழாம் நாளில் (17-1-2009) பாரிசுக்கு அருகில் உள்ள ஒரு குக்கிராமத்தில் மறைந்தார். திராவிட இயல்/தமிழியல் ஆய்வுக்குப் பெரும்பங்களிப்புச் செய்த பெருமகனை நினைவுகூர்ந்து போற்றும் கடமை நமக்குண்டு. இவர் தமிழியல் ஆய்வில் செய்துள்ளவற்றை நினைவுபடுத்திக் கொள்வதே நாம் அவருக்குச் செய்யும் அஞ்சலியாக அமையும். இவரது ஆய்வுகளை நமது புரிதலுக்காகக் கீழ்க்கண்டவாறு பாகுபடுத்திக்கொள்ளலாம்.

-தமிழ்ச் செவ்விலக்கியங்களை இவர் எப்படி அணுகியுள்ளார்? அவ்விலக்கியங்களைப் புரிந்துகொள்ள இவரது அணுகுமுறை எத்தகைய பரிமாணத்தை உருவாக்கியுள்ளது?

-தமிழ் இலக்கிய வரலாற்றை உலகுக்கு எப்படி அறிமுகப்படுத்தியுள்ளார்? ஐரோப்பிய சமூகம் தமிழ் இலக்கியங்களைப் பற்றி அறிந்துகொள்ள இவரது இலக்கிய வரலாற்று நூல்கள் எவ்வகையில் உதவுகின்றன?

-திராவிட மொழி/மொழியியல் ஆய்வுகளைப் பேராசிரியர் நிகழ்த்தியுள்ள பரப்பை எப்படி அறிவது? திராவிட மொழிக் குடும்பம் குறித்து ஐரோப்பிய சமூகம் புரிந்துகொள்ள இவரது ஆய்வுகள் எவ்வகையில் உதவுகின்றன?

-மொழியர்ககம், தொன்மவியல், சிற்பவியல், நவீன இலக்கி ஆய்வுகள் ஆகிய பிற துறைகளில் இவரது பங்களிப்புகள் எவையெவை?

இவை போலும் பல கேள்விகளுக்கு விடையறியும் கடமையும் தேவையும் நமக்குண்டு. மேற்குறித்த பல்துறைகள் தொடர்பான இவரது ஆங்கில நூல்தொகுதிகளைத் தொகுத்துக்கொள்வதன் மூலம் சுவெலெபில் அவர்களைப் புரிந்துகொள்ள முயலலாம். தமிழியல் ஆய்வில் ஈடுபட்ட பிற ஐரோப்பிய /அமெரிக்கர் களைவிட இவர் எங்கே தனித்துச் செயல்பட்டார் என்பதை யும் அறிந்துகொள்ள முடியும். இந்தப் புரிதல் இவரை நமது நெஞ்சில் நிறுத்தும். தமிழியல் தொடர்பான ஆய்வுகளுக் குள் செயல்படும் எவரும் புறக்கணிக்க முடியாத மனிதராக இவர் இருக்கிறார் என்பதையும் அறிந்துகொள்ள முடியும். தமிழ்ச் செவ்வியல் இலக்கியங்கள் தொடர்பாக இவரது இரண்டு ஆய்வு நூல்கள் உள்ளன. தமிழ் இலக்கிய வரலாற்று நூல்களிலும் செவ்விலக்கியம் தொடர்பான விரிவான பதிவுகளைச் செய்துள்ளார்.

Thirumurugan (1981), Literary conventions in Akam poetry (1986) என்னும் இவரது இரண்டு சிறு நூல்கள் செவ்விலக்கியத் தமிழ் மரபு குறித்த உரையாடல்களை முன்வைக்கின்றன. "அகப்பாடல்கள் வழி பெறலாகும் இலக்கிய மரபுகள்” எனும் நூல் உரையாடலுக்கு உட்படுத்தும் செய்திகளைப் பின்கண்ட வாறு நாம் தொகுக்கலாம்.

2382 சங்கப் பாடல்களில், 1862 பாடல்கள் அகம் சார்ந்தவை. அதாவது, மொத்த சங்கப் பாடல்களில் நான்கில் மூன்று பங்கு அகப்பாடல்களாக உள்ளன. அவற்றிலும் 'பாலை” குறித்த அகப்பாடல்கள் 531. இவை எண்ணிக்கையில் அதிகம். ஏன் இவ்வளவு அதிகமான பாலைப் பாடல்கள் உள்ளன? சங்கப்பாடல்களில் பேசப்படும் பிரிவிற்கும் பாலைப் பாடல்களுக்குமான உறவுகளை எப்படிப் புரிந்துகொள்வது? ஆகிய பல உரையாடல்களை சுவெலெபில் முன்வைக்கிறார். இடமும் வெளியும் முதற்பொருளாகவும், சூழலும் உயிரினங்களும் கருப்பொருள் களாகவும், உணர்வுகள் உரிப்பொருளாகவும் அமைக்கப்பட்ட கவிதை மரபே அகம்-புறமாக வடிவமைக்கப் பட்டுள்ளது. இதில் அகமரபே முதன்மையாகவும் பெரும்பான் மையாகவும் இடம் பெற்றிருக்கிறது என்று கூறுகிறார். இத்தன்மையை " there is a spontaneous identification of human reality with objects of Nature @ Gußm. " the realities of human life in an undifferentiated relationship with the life” எனறும் பேசுகிறார்.

"இயற்பொருளும் உயிரும் வேறல்ல” எனும் " Hylozoistic” கோட்பாட்டை அடிப்படை யாகக்கொண்டு செவ்விலக் கியங்களை மதிப்பீடு செய்கிறார். நற்றினை 35, 47, அகநாநூறு 371 ஆகிய பிற பாடல்கள் மூலம் மேற்குறித்த தன்மையை விளக்குகிறார். தன் துணையை இழந்த மான் உணவு உண்ணாமல் இருத்தல், பெண் யானை கொல்லப் பட்டதால் ஆண் யானையும் குட்டி யானையும் அடையும் துன்பங்கள், புன்னை மரத்தைத் தனது தங்கையாகக் கருதும் பெண் ஆகிய பிற நிகழ்வுகள் சார்ந்து மேலே குறிப்பிட்ட செய்திகளை உரையாடலுக்கு உட்படுத்து கிறார். செவ்விலக்கிய மரபுகளின் வளத்தை இதன்மூலம் அறிந்துகொள்ள முடிகிறது.

தமிழில் பேசப்படும் "களவு” மரபிற்கும் சமசுக்கிருத "கந்தர்வ” மரபுக்கும் தொடர்பில்லை என்று கூறுகிறார். பிற்கால வைதிக வளர்ச்சிகளை செவ்விலக்கிய மரபுகளோடு இணைத்துப்பேசுவதை இவர் ஏற்கவில்லை. நச்சினார்க்கினியர், பரிமேலழகர் அகியோர் எழுதியுள்ள உரைகளைக்கொண்டு செவ்விலக்கிய மரபுகளைப் புரிந்துகொள்ள முடியாது என்றும் விவாதிக்கிறார். ஆரிய மயமாதல், பார்ப்பனிய மயமாதல் ஆகியவற்றை வெவ்வேறு தளங்களில் வைத்துப் புரிந்துகொள்ள வேண்டுமென்கிறார். இம்மூன்றையும் ஒரே அடிப்படையில் அணுகுவதால் ஏற்படும் சிக்கல்கள் குறித்தும் சுவெலெபில் விவாதித்துள்ளார். சமசுக்கிருத மயமாதல் மற்றும் பார்ப்பனிய மயமாதல் ஆகிய நிகழ்வுகளுக்கு முற்பட்டது முருகன் மற்றும் கொற்றவை தொடர்பான சங்க இலக்கியப் பதிவுகள் என்பது இவரின் கருத்தாகும்.

சங்க இலக்கியத் தொகுப்பு முறைகளில் இடம் பெற்றுள்ள அடிக்குறிப்புகள், திணைத் துறைகள், உரைகள் ஆகியவை பிற்கால இலக்கண நூல்களான இறையனார் அகப்பொருள், நம்பியகப்பொருள் ஆகியவற்றை உள்வாங்கிச் செயல்படுத்தப் பட்டிருப்பதைப் பேராசிரியர் சுட்டுகிறார். இதனால் செவ்விலக்கியங்கள் அவற்றின் மூலத்தை இழந்துவிடாது, அவை தம்மளவில் பாதுகாத்துக்கொள்ளும் தன்மை பெற்றுள்ளன என்று கூறுகிறார். செவ்விலக்கியங்கள் காலந்தோறும் வாசிக்கப்படும் முறைமைகளால் அவற்றின் அடிப்படைகள் மேலும்மேலும் செழுமையுறுவதை மேற்குறித்த குறிப்பின் மூலம் அறிந்துகொள்ள முடியும். சங்க இலக்கியப் பாடல்கள் வாய்மொழி மரபைச் சார்ந்தவை என்று கூறுவது அவ்வளவு சரியாக இருக்க முடியாது. இவற்றில் வெகுமக்களின் வழக்காறு கள் இடம் பெறவில்லை. இவையனைத்தும் சபை சார்ந்த இலக்கியங்களாகவே கருத வேண்டும். இப்பின்புலத்தில் இவற்றைச் “சான்றோர் செய்யுள்” என்று கூற முடியும் என்கிறார். செவ்விலக்கியங்களில் உள்ள கூற்று மரபை இதற்கு ஆதாரமாகக் கொள்கிறார்.

அகப்பாடல்களின் இலக்கிய மரபைக் குறித்து விவாதித்ததைப் போல் செவ்விலக்கியங்களில் பேசப்படும் முருகன் குறித்த உரையாடலைத் "திருமுருகன்” நூலில் முன்வைக்கிறார். வீரன், இளைஞன், அழகன், வேலன் ஆகிய பலபொருளில் முருகன் குறித்த செய்திகளை விவாதிக்கிறார். "சுப்ரமண்யன்” எனும் கருத்தாக்கம் பதினொன்றாம் திருமுறைக் காலத்திற்குப் பிற்பட்டது என்கிறார். தெய்வானை மணம், அசுரனைக் கொல்லுதல், சுட்ட பழம்- சுடாத பழம் கதை, ஆறுமுகச் சிற்பங்கள் ஆகியவை தமிழ் மரபல்ல என்பது சுவெலெபில் வாதமாகும். இவ்விவாதத்தை ஆதிச்சநல்லூர் அகழ்வாய்வுச் சிற்பங்கள், புதிய கற்காலப் பொருட்கள் ஆகிய பிற அடிப் படையில் நிகழ்த்துகிறார். மலைவாழ் மக்களின் தொன்மமாக முருகன்-வள்ளி கதையைத் தெளிவுபடுத்துகிறார். சூர் மற்றும் கொற்றவை தொடர்பான செய்திகளை முருகனோடு இணைக் கிறார். சுப்ரமண்யன் வள்ளி-தெய்வானையோடு இருக்கும் சிற்பம் பதினோராம் நூற்றாண்டுக்குப் பிற்பட்டது என்று கூறுகிறார்.

"திருமுரு காற்றுப் படை” மூலம்தான் முருகன் தொடர்பானவை பார்ப் பனிய மயமாக்கப்பட்டன என்கிறார். நக்கீரன் எனும் பார்ப்பனக் கவிஞன் இதற்கு அடிப்படையாக அமைவதாகவும் கூறுகிறார். முருகன் பின்னர் சுப்ரமண்யன் ஆக்கப்பட்டதற்கான காரணங்கள் பலவற்றைத் தெளிவு படுத்துகிறார். ஆரியர்கள் தொடர்பான தொன்ம உருவாக்கம், சமசுக்கிருத மொழியின் மேன்மை கட்டப்படுதல், சடங்கு களைத் தரப் படுத்துதல், பின்னர் உருவான சாதியக் கூறுகள் ஆகிய பிறவும் முருகனை சுப்ரமண்யன் ஆக்கின என்பது சுவெலெபில் அவர்களின் வாதமாகும். முருகன்- வள்ளி எனும் மரபு முழுக்கமுழுக்கத் தமிழ் மரபு. இதனை வைதிக மரபு உள்வாங்கியது என்கிறார். "முருக-ஸ்கந்த இணைப்பு” குறித்துப் பேசும் பேராசிரியர் நா.வானமாமலை இதனை இரு மரபுகளின் இணைப்பு என்று கூறுவார். ஆனால் அம்மரபுகள் எந்தத் தேசிய இனத்திற்கு உரியவை என்னும் உரையாடலை அவர் முன்னெடுக்கவில்லை. இவ்வகையில் சுவெலெபில் தமிழ்த் தேசிய மரபாக முருகன்-வள்ளியை அடையாளப் படுத்துகிறார்.

செவ்விலக்கியம் சார் இலக்கிய மரபையும் அதில் காணப் படும் தொன்மங்களையும் சமூக வரலாற்றைக் கட்டமைப்பதற்கு எவ்வகையில் உள்வாங்குவது என்பதனைப் பேராசிரியர் சுவெலெபில் செவ்விலக்கிய ஆய்வில் கவனப்படுத்தியிருப்பதைக் காண்கிறோம். தேசிய இனங்களின் வரலாற்றுத் தரவுகளைப் பதிவு செய்வது என்பதும் தேசிய இன ஈடுபாடு என்பதும் வெவ்வேறு தளத்தில் நடைபெற வேண்டும். இவ்வகையில் சுவெலெபில் ஆய்வுகள் தமிழ்த் தேசிய இன வரலாற்றுக்கு அரிய தரவுகளை அடையாளப்படுத்துவதைக் காண்கிறோம்.

பேராசிரியர் கமில் சுவெலெபில் எழுதியுள்ள தமிழ் இலக்கிய வரலாறு தொடர்பான நூல்கள் பின்வருவன:

- Tamil Literature: A History of Indian Literature -1974
- Tamil Literature (Leiden) - 1975
Companion Studies to the History of Tamil Literature - 1992
- The Smile of Murugaa: on Tamil Literature of South India (Leiden)-1993
- Lexicon of Tamil Literature
- Introducing Tamil Literature

பேராசிரியர் சுவெலெபில் தமிழ் இலக்கிய வரலாறு குறித்துப் பல நூல்கள் எழுதியுள்ளார். ஐரோப்பியர்களுக்குத் தமிழ் இலக்கிய வரலாற்றை மிக விரிவாக அறிமுகம் செய்தவர் இவர்தான். தமிழியல் குறித்த ஆய்வில் ஈடுபடும் ஐரோப்பியர், சுவெலெபில் அவர்களின் தமிழ் இலக்கிய வரலாற்று நூல்களைப் படித்துத்தான் தமிழ் குறித்த புரிதலைப் பெறுகின்றனர். இந்நூல்கள் குறித்து விரிவாக எழுதும் தேவையுண்டு. இந்நூல்களைப் புரிந்துகொள்ள- -Tamil Literature (Leiden)- 1975 எனும் நூலில் உள்ள செய்திகளைக் கீழ்க்காணுமாறு தொகுத்துக்கொள்ளலாம்.

1. தமிழ்ச் செவ்விலக்கியங்களின் மீள்கண்டுபிடிப்பு, 2. தொகுப்பு மரபுகள், 3. தமிழ் இலக்கியங்களைக் கால ஒழுங்கில் பாகு படுத்தல், 4. கால ஆய்வுகள், 5. வரலாற்றுக்கு முந்தைய தமிழ் இலக்கிய மரபு, 6. பாணர் மரபு, 7. செவ்விலக்கிய பிற்காலம் (கிபி 250-600), 8. பக்தி இலக்கியம் (கிபி 600-900), 9. முன் இடைக்காலம் (கிபி 900-1200), 10. பின் இடைக்காலம் (1200-1750) பகுதி 1, 11. பின் இடைக்காலம் (1200-1750) பகுதி 2.

வரலாற்றுக்கு முந்தைய காலம் தொடங்கி பதினெட்டாம் நூற்றாண்டு முடிய உரையாடலுக்கு உட்படுத்தப்பட்டுள்ள இந்நூல் தமிழ் இலக்கிய வரலாற்றை அணுகும் முறை வழக்கமான முறைகளிலிருந்து முற்றிலும் மாறுபட்டதாகும்.

ஓலைச்சுவடிகளிலிருந்த தமிழ் இலக்கியம் அச்சு வடிவம் பெறும்போது உருவாகும் பரிமாணங்களையும், தமிழ் இலக்கிய வரலாற்றைப் புரிந்துகொள்ள உதவும் அடிப்படைகளையும் முதன்நிலையில் விரிவாக விவாதிக்கிறார். பத்தொன்பதாம் நூற்றாண்டின் இடைக்காலம் வரை தமிழ் செந்நெறி மரபு உலகம் அறியாத மரபாகும். காலனியச் செயல்பாடுகளும் அச்சுக் கருவியும் தமிழ்ச் செவ்விலக்கிய மரபை வெளிக்கொண்டு வருவதில் முதன்மையான காரணிகள். இக்காரணிகள் தொடர் பான விரிவான விவரணங்களை இந்நூல் முன்வைக்கிறது.

பத்தொன்பதாம் நூற்றாண்டின் இடைக்காலம் தொடங்கி, தமிழ்ச் சமூக இயங்குதளத்தில் ஏற்படத் தொடங்கிய மாற்றங்கள், செவ்விலக்கியக் கண்டுபிடிப்புகளுக்கு அடிப்படையாக அமைந்தன. இக்கண்டுபிடிப்பில் செயல் பட்டவர்களின் நோக்கங்கள், பின்புலங்கள் எவ்வகையில் இருந்தன? ஆகியவை குறித்த உரையாடல்கள் இடம் பெற்றுள்ளன. சுவடிகளில் கிடைத்த பாடங்கள் எவ்வகையில் இருந்தன? அப்பாடங்களை எவ்விதம் அச்சுக்கு மாற்றினர்? ஆகிய பிற செய்திகள் குறித்த விவரணங்களைத் தொகுத்து வழங்குகிறார். இவ்விதம் தமிழில் உள்ள நூல்கள் குறித்து உருவாக்கப்பட்டுள்ள தரவு நூல்களைப் (இஹற்ஹப்ர்ஞ்ன்ங்ள்) பேராசிரியர் பட்டியலிட்டுள்ளார். இவர் கொடுத் துள்ள 22 பட்டியல் நூல்கள் தமிழின் வளத்தைப் புரிந்துகொள்ள உதவுகின்றன. இந்நூல்கள் இலண்டன் அருங்காட்சியக நூலகத்தில் இன்றும் உள்ளன.

இவற்றில் ஒருசில பட்டியல் நூல்களே இங்கே உள்ளன. தமிழின் வளங்களை அறிய நாம் இலண்டனுக்குத்தான் செல்ல வேண்டும். இப்பட்டியலில் உள்ளவை அனைத்தும் இணைக்கப்பட்ட பட்டியல் நூல் இதுவரை உருவாக்கப் பட்டதாக அறிய முடியவில்லை. சுவெலெபில் குறிப்பிடும் இந்நூல்களைப் பார்த்த தமிழியல் ஆர்வலர்கள் ஒரு சிலரே இருக்கக் கூடும். அதுவும் ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்தவர் களால் மட்டுமே இயலும். தமிழ்நாட்டில் இருந்துகொண்டு தமிழியல் ஆய்வு செய்வதன் பின்புலத்தை இதன்மூலம் புரிந்துகொள்ள முடியும். இந்நூல்கள் குறித்த விரிவான விவரங்களை விரிவு கருதி தவிர்க்கிறேன்.

செவ்விலக்கியங்களின் காலத்தொடர்ச்சிக்கும் இலக்கியப் பிரதிகளுக்குமான உறவு என்பது அப்பிரதிகள் பல பரிமாணங்களில் வளர்ந்து செல்ல உதவும். ஒவ்வொரு காலச் சூழலிலும் ஒவ்வொரு வகையான வாசிப்பும் அதனைச் சார்ந்த பிரதியாக்கமும் நடைபெறும். இலக்கிய வரலாறு எழுதும்போது இதனை எவ்விதம் பதிவு செய்வது என்ற உரையாடலை இந்நூலின் இரண்டாம் இயலில் விவாதித்திருப்பதைக் காண்கிறோம். தமிழ் இலக்கிய வகைமைகளை எவ்விதம் வகைப்படுத்திப் பேசுவது? என்பது சிக்கலான ஒன்றாகும். இச்சிக்கல் குறித்த உரையாடல் இந்நூலில் விரிவாகச் செய்யப்பட்டிருப்பதைக் காண்கிறோம். தமிழ் இலக்கியங்களின் காலம் பற்றிய கணிப்பு என்பது தம்முள் பல சிக்கல்களைக் கொண்டிருப்பதை இந்நூல் விரிவாக விவாதிக்கிறது. நூல்கள் உருவாக்கம் என்பதைக் குறிப்பிட்ட காலமாகக் கொள்வதா? மரபு உருவாக்கத்தைக் கால எல்லைக்குள் எப்படி அடக்குவது? மேற்குறித்தவை தமிழ் இலக்கிய வரலாறு எழுதுவோர் முன் எழும் சிக்கல்கள். இவற்றை சுவெலெபில் விரிவான உரையாடலுக்கு உட்படுத்துகிறார். இதன் மூலம் "இலக்கியத்தின் காலம்” குறித்துக் காட்டமைக்கப் படும் அரசியலுக்கும் தேசிய இன அடையாளங்களுக்குமான உறவுகளைப் புரிந்துகொள்ள முடியும்.

மொழியின் அமைப்பிலிருந்து அம்மொழியிலுள்ள இலக்கியங் களின் காலத்தை அறியும் முறை குறித்தும் இந்நூல் பேசுகிறது. இலக்கிய வரலாற்றை மொழி வரலாறு மூலம் கட்டமைக்கும் முறைமைகளை இந்நூல் தெளிவு படுத்தும் முறை புதிய அணுகுமுறையாகும். மொழி, இலக்கியம் ஆகியவற்றின் இணைவு மற்றும் உறவு ஆகியவற்றை இதன்மூலம் புரிந்துகொள்ள முடியும். தமிழ்ச் செவ்விலக்கிய மரபின் பாணர் மரபை அடிப்படையாகக் கொண்டு தமிழ் இலக்கிய உருவாக்கத்தைப் பேராசிரியர் பேசுகிறார். இம்மரபு குறித்த மிக விரிவான விவரணங்களை இந்நூல் ஆவணப் படுத்தியுள்ளது. சிலப்பதிகாரம், மணிமேகலை, களவழி நாற்பது உள்ளிட்ட கீழ்க்கணக்கு நூல்கள், முத்தொள்ளாயிரம் ஆகிய நூல்களின் உருவாக்கப் பின்புலத்தைப் இந்நூல் உரையாடலுக்கு உட்படுத்தியுள்ளது. வைதிக மரபுகள் எவ்வகையில் தமிழ் பக்தி இலக்கியங்கள் உருவாகப் பின் புலமாக அமைந்தன என்ற விவாதத்தை நூல் முன்வைக்கிறது. திருமுறைகளும் வைணவப் பிரபந்தங்களும் எவ்வகையில் அமைந்துள்ளன, அதில் இசையின் இடம் எத்தகையது, என்ற விவரங்களை நூல் விவாதத்திற்கு உட்படுத்தியுள்ளது.

தமிழில் பாரத நூலின் தாக்கம், சமண மரபுகளின் தொடர்ச்சி, கம்பன் உருவாக்கம், சாத்திர நூல்கள் உருவாக்கம், உரையா சிரியர்கள் உருவாக்கம் ஆகிய பிற செய்திகள் முன்இடைக்காலத் தமிழ் இலக்கிய வரலாறாக அமைகிறது. பிற்பகுதியில் தமிழ்ச் சமூகத்தில் அரச நிர்வாகங்களில் ஏற்பட்ட இலக்கிய மாற்றங் களுக்கும் இலக்கிய உற்பத்திக்குமான உறவுகளைப்பற்றி நூல் பேசுகிறது. இவ்வகையில் தமிழ்ச் சமூக வரலாற்றின் ஒரு பகுதியாக தமிழ் வரலாறு அமைவதை பேராசிரியரின் நூல் தெளிவுபடுத்துகிறது. ஐரோப்பியத் தமிழியல் ஆய்வாளர் களின் கையேடாக இந்நூல் அமைகிறது. பேராசிரியரின் பிற இலக்கிய வரலாற்று நூல்கள் வெவ்வேறு தேவை சார்ந்தவை. இந்நூல் விரிவான தளத்தில் தமிழ் இலக்கிய வரலாற்றைப் பதிவுசெய்திருக்கிறது.

பேராசிரியர் கமில் சுவெலெபில் அவர்களின் மொழி/மொழியியல் சார்ந்த நூல்கள் பின்வருமாறு:
- Comparative Dravidian Phonology (1970)
- Introduction to the Historical Grammar of Tamil Language (1970)
- Classical Tamil Prosody: An introduction (1989)
- Dravidian Linguistics: An introduction (1990)
- Tamulica et Dravidica: A selection of papers on Tamil and
Dravidian Linguistics (1998)

மொழியியல் குறித்து இந்நூல்கள் மட்டுமின்றி பல்வேறு இதழ்களிலும் கட்டுரைகளை எழுதியுள்ளார். "Tamil culture" "Journal of Tamil studies" ஆகியவை அவ்வகையில் குறிப்பிடத் தக்க இதழ்கள். இதழ்களில் எழுதப்பட்ட கட்டுரைகள் அனைத்தும் தொகுக்கப்படவில்லை. இப்பின்புலத்தில் திராவிட மொழியியல் குறித்து மிக விரிவாகவும் எண்ணிக்கை அளவில் கூடுதலாகவும் ஆய்வை மேற்கொண்டு நூல்களையும் கட்டுரைகளையும் கமில் சுவெலெபில் எழுதியுள்ளார். திராவிட மொழியியல் ஆய்வில் ஐரோப்பியப் பேராசிரியர்களில் இவரையே முதன்மையானவராகக் கருத இயலும்.

திராவட மொழிகள் குறித்து பிரிட்டானிக்கா கலைக்களஞ்சி யத்தில் மிக விரிவான கட்டுரையைப் பேராசிரியர் எழுதியுள்ளார். "One hundred years of Dravidian Comparative Philology" (Tamil culture. vol. ix: No.2: 1961) எனும் கட்டுரையை இராபர்ட் கால்டுவெல் (7.5.184--26.8.1891) நூலை அடிப்படையாகக் கொண்டு எழுதியுள்ளார். அக்கட்டுரை யில் இவர் தரும் விவரங்களைத் தொகுத்துப் பார்க்கும்போது, திராவிட மொழியியலுக்கு இவரது பங்களிப்பை நாம் புரிந்துகொள்ள முடியும். 1856இல் கால்டுவெல் நூல் வெளிவந்தது முதல் 1961 வரை திராவிட மொழியியல் கிறித்தவத் தொண்டூழியம் செய்ய வந்தவர்களாலும், காலனிய ஆட்சியின் நிர்வாகத்திற்கு வந்தவர்களாலும், சுதேச ஆய்வாளர்களாலும் எப்படி யெல்லாம் படிப்படியாக முன்னெடுக்கப்பட்டது என்பதைப் பதிவு செய்துள்ளார். இப்பதிவுகளின் தொடர்ச்சியாக, 1950கள் முதல் சுவெலெபில் செய்த மொழி சார்ந்த ஆய்வுகளை மேலே கொடுத்துள்ள நூல்கள் மற்றும் கட்டுரைகளின் மூலம் நாம் விளங்கிக் கொள்ள முடியும். Tamil culture (1951-1963) இதழ்களில் பேராசிரியரின் கட்டுரைகள் தொடர்ச்சியாக வெளியிடப்பட் டுள்ளன. அவற்றைத் தொகுப்பாக வாசிக்கும் போது இவரது பணியின் பெருமையைப் புரிந்துகொள்ளலாம்.

பாரதியாரின் கவிதைகள் முதல் இருபதாம் நூற்றாண்டின் பல்வேறு புனைகதைகள் வரை இவர் கவனத்தில் கொண்டு செயல்பட்டார். இவற்றில் பலவற்றை ஐரோப்பிய மொழிகளில் மொழியாக்கம் செய்துள்ளார். தொ.மு.சி.ரகு நாதன் அவர்களின் "பஞ்சும் பசியும்” நாவலை 1960களில் செக் மொழியில் பெயர்த்துள்ளார். தொல்காப்பிய எழுத்து மற்றும் சொல்லதிகாரங்களை "ஒர்ன்ழ்ய்ஹப் ர்ச் பஹம்ண்ப் ள்ற்ன்க்ண்ங்ள்" என்ற இதழில் மொழிபெயர்த்து வெளியிட்டார். சங்கப் பாடல்கள், திருக்குறள், மணிமேகலை, இக்காலக் கவிதைகள், புனை கதைகள் ஆகியவற்றிலிருந்து தெரிவு செய்யப்பட்ட பகுதிகளை ஆங்கிலம் மற்றும் செக் மொழியில் மொழி பெயர்த்துள்ளார். உ.வே.சாமிநாத அய்யரின் "என் சரித்திரத்தை” ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துள்ளார்.

நாட்டார் வழக்காற்றியல் துறையிலும் ஈடுபாடு உடையவர். தோடர், இருளர் குறித்த ஆய்வுகளைச் செய்துள்ளார். அவை நூலாக வெளியிடப்பட்டுள்ளன. பழங்குடி மக்களின் வாழ்க்கை மற்றும் மொழி குறித்த ஆய்வுகளைச் செய்துள்ளார். சிற்பத்துறை சார்ந்த ஆய்வுகளையும் மேற்கொண்டுள்ளார். "சிவனின் ஆனந்த தாண்டவம்” குறித்து அவர் எழுதியுள்ள நூல் சிற்ப மரபிற்கும் இலக்கிய மரபிற்குமான உறவுகள் குறித்துப் பேசுவதாகும். இவ்வகையில் தமிழியல் ஆய்வை மேற்கொண்டு ஐரோப்பிய அறிஞர்களிடத்தில் தமிழ் குறித்த புரிதலை உருவாக்கியதில் இவருக்குத் தனித்த இடமுண்டு. “தமிழணங்கை ஓர் ஐரோப்பி ஆங்கிலத் தேரில் ஏற்றி அனைத்துலக உலா விட்டால்தான் பாருலகம் வியந்து மகிழ்ந்து போற்றும். மதிக்கும். இதனைச் செய்துள்ள டாக்டர் கமில் சுவெலெபிலுக்கு ஒரு காலத்தில் சென்னைக் கடற்கரையில் சிலை எழுப்பப்பட்டாலும் தவறில்லை.” (1974)

பேராசிரியர் ந.சஞ்சீவி அவர்களின் மேற்குறித்த கூற்று பேராசிரியர் கமில் சுவெலெபில் அவர்களை அடையாளப்படுத்துவதாகவே அமைந்திருக்கிறது.