“பல ஆண்டுகளாகப் பலதிறப்பட்ட அறிஞர்பால் கேட்டனவும் பல மொழிகளிலிருந்து கற்றனவும் தொகுத்து வைத்தனவுமாய்த் தமிழ்நாடு, வரலாறு, கலை, இலக்கியம், இலக்கணம், தத்துவம், சமயம் முதலிய பல துறைகளைச் சார்ந்த பொருள்களை, ஒரு உருவில் ஆக்கவில்லையே என்ற ஏக்கமும், எஞ்சிய சில நாட்களுக்குள்ளேனும் அவற்றை மலராகவேணும் மணியாகவேணும் தமிழ்த்தெய்வத்தின் திருவடிகளில் சேர்த்து வழிபடவேண்டும் என்ற ஊக்கமும் உண்டாகின்றது.” (நீ.கந்தசாமி. இரங்கற்பா, முன்னுரை: 1956)

தாமஸ் கிரேயின் ‘நாட்டுப்புற இடுகாட்டில் எழுதியது’ என்ற பாடல்களை ‘இரங்கற்பா’ எனும் தலைப்பில் மொழிபெயர்த்த நீ.கந்தசாமிப் பிள்ளை (1898 - 1977) எழுதியவை மேற்கண்ட வரிகள். இளம் வயது முதல் மிக விரிவான வாசிப்புப் பழக்கத்தை நீ.கந்தசாமிப்பிள்ளை (நீ.க.) கொண்டிருந்தார். தமது ஐம்பத்தெட்டாவது வயதில், சுயமதிப்பீடாக அவர் வெளிப்படுத்தியுள்ள மேலே கண்ட செய்திகள் மிகையானவை அல்ல. ஆங்கிலம், இலத்தீன், சமசுகிருதம், பிரெஞ்சு ஆகிய மொழிகளை அறிந்திருந்த அவர், தமிழ்ச்சூழலின் மிக முக்கியமான புலமையாளர்களில் ஒருவர். அவரது புலமைத்திறன் குறித்த அறிமுகம் தமிழ்ச்சூழலில் இருப்பதாகவே அறிய முடியவில்லை. இப்பின்புலத்தில் நீ.க. அவர்களின் வாழ்க்கை, அவரது புலமை சார்ந்த செயல்பாடுகள் ஆகியவற்றைப் பதிவு செய்யவேண்டிய அவசியம் இருக்கிறது. அவர் செயல்பட்ட மரபின் மூன்றாம் தலைமுறையைச் சேர்ந்தவர்களுக்கு, அவரின் தொடர்ச்சியான இரண்டாம் தலைமுறையினர், அவர் குறித்த பதிவுகளைச் செய்யாமல் விட்டிருப்பதைக் காண முடிகிறது. பல துறைகளிலும் புலமையாளராகச் செயல்பட்ட அவர் குறித்த பதிவுகள் இல்லாமல் போனது தமிழ்ச்சூழலின் அவலம்,

இப்புலமையாளரின் செயல்பாடுகளைப் புரிந்து கொள்ள, நமது வசதிக்காகக் கீழ்க்கண்ட பாகுபாடுகளைச் செய்து கொள்ளலாம்.

• இளமைக்காலம் தொடங்கி, கரந்தைத் தமிழ்ச்சங்கத்தில் செயல்படத் தொடங்கிய காலம் வரை. (1898 - 1923)
• கரந்தைத் தமிழ்ச் சங்கத்தில் செயல்பட்ட காலம் (1923 - 1945)
• அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தோடு அவர் கொண்டிருந்த உறவு (1946 - 1961)
• பிரெஞ்சு இந்திய நிறுவனத்தோடு அவருக்கிருந்த தொடர்பு (1962 - 1967)
• சரசுவதி மகால் நூலகக் கௌரவச் செயலாளர் பணி (1968 - 1973)
• சித்த மருத்துவக்குழு அறிஞர் (1974- 1975)

மேற்குறித்த காலப்பாகுபாடுகள் துல்லியமானவை என்று கூற முடியாது. மாறாக, இக்காலங்களில் குறிப்பிட்ட நிறுவனங்களோடு நெருக்கமான உறவு கொண்டிருந்தார் என்று கூறலாம். நீ.க. தம் வாழ்நாள் முழுவதும் ஒரு குறிப்பிட்ட நிறுவனத்திற்குள் தன்னை நிறுத்திக்கொண்டவரும் இல்லை. பல நிறுவனங்களிலும் ஒரே நேரத்தில் பலவிதமான பணிகளைச் செய்திருக்கிறார் என்று கூறவேண்டும். எனவே மேற்குறித்த கால வரையறை என்பது அவரது நிறுவனத்தொடர்புகள் குறித்த புரிதலுக்காகவே. அதுவே திட்டவட்டமானதன்று. இவ்வகையில் சுதந்திர ஆய்வாளராகவே அவர் செயல்பட்டு வந்துள்ளார் என்பதைப் புரிந்துகொள்ளவேண்டும்,

பள்ளிக் கல்விக்குப் பிறகு அவரது படிப்புமுறை என்பது பல்பரிமாணங்களில் நிகழ்ந்தது. அவரது ஆய்வு சார்ந்த பணிகளும் பல்பரிமாணங்களில்தான் நடைபெற்றன என்பதையும் நாம் புரிந்துகொள்வது அவசியம். கல்விச் சூழல் உடைய குடும்பப் பின்புலத்தில் பிறந்தவர். இரண்டு தலைமுறைகளாகவே பிரித்தானியர் அறிமுகப்படுத்திய கல்விமுறைகளில் பயிற்சி பெற்ற குடும்பத்தைச் சேர்ந்தவர். இவர், அவ்வகையில் மூன்றாம் தலைமுறையினர். தமது இளமைக் காலத்தில் (சுமார் பன்னிரண்டு வயதில்) சாமிநாதப்பிள்ளை என்பவரிடம் ‘திருமுருகாற்றுப்படை’ பாடம் கேட்டவர். சாமிநாதப்பிள்ளை, மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளையின் மாணவர். சாமிநாதப்பிள்ளையைத் தொடர்ந்து திருவெண்காடு வேங்கடசாமி நாயுடு என்பவரிடம் கம்பராமாயணப் பாடம் கேட்டவர். இக்காலங்களில் இவரது இன்னொரு ஆசிரியர் அப்பாவு ஆச்சாரியார். இவரிடம் அறிவு நூல் (Logic), இயற்கை நூல் (Natural Science), எண்ணியல் (Mathematics) ஆகிய பாடங்களைக் கேட்டார். பூவிழுந்த நல்லூர் ஆசிரியர் ஒருவர் உமாபதி சிவம் குறித்த பாடத்தையும் போதித்துள்ளார்.

1914இல் யாழ்ப்பாணத்திலிருந்து இவரது வீட்டுக்கு வருகை புரிந்த முதிய துறவி ஒருவர் மூலம் சங்கப் பாடல்கள் குறித்த விவரங்களை அறிந்தார். அவர் சிந்தாமணி அச்சுப் புத்தகம் ஒன்றை நீ.க. அவர்களுக்குப் பரிசளித்தார். சதாவதானம் சுப்பிரமணிய அய்யரின் இராமாயணச் சொற்பொழிவுகள், இவரது இராமாயண ஈடுபாட்டை வளர்த்தது.

1923இல் ‘கம்பராமாயணம்’ குறித்துக் கரந்தைத் தமிழ்ச்சங்கத்தில், தமது இருபத்தைந்தாவது வயதில் செய்த முதல் சொற்பொழிவுக்கு முன் அவருக்குக் கிடைத்த கல்விச்சூழல் குறித்து மேலே கண்டோம். அதாவது, தமது இருபத்தைந்து வயதிற்குள், கம்பராமாயணம், சங்க இலக்கியம், சைவ நூல்கள் ஆகியவை குறித்த விரிவான அறிமுகமும் தர்க்கம், அறிவியல், தத்துவம், இலக்கியம் ஆகிய துறைகள் சார்ந்த வாசிப்பும் கைவரப் பெற்றிருந்தார். அன்றைய தமிழ்ச்சூழலில் மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை மரபில் உருப்பெற்று வந்த ஆசிரியர்கள், பிரித்தானிய அலுவலர்கள் மற்றும் தொண்டூழியர்கள் எனப் பல தரப்பினரிடத்தும் தொடர்பு கொண்டு கல்வி பெறும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது. இந்தச் சூழலே இவரைப் பிற்காலத்தில் பல்துறை புலமைசார் மனிதனாக உருவாக்கியுள்ளது என்று கருத இயலும். அவரது இளமைக்காலம் குறித்த அவரது பதிவுகள் பின்வருமாறு:

“வீட்டிலிருந்தவர்களில் என் பெரிய பாட்டனார் சுமார் அறுபது ஆண்டுகளுக்கு முன்பு சென்னைக் கிறிஸ்தவக் கல்லூரியில் பயின்று பி.ஏ. பட்டம் பெற்றவர்களிருந்தார்கள். என்னிடம் மிகவும் அன்புடையவர்கள். நான் நல்ல கல்வியுடையவனாக வேண்டுமென்று கருத்துடையவர்கள். ஒருவர் அக்காலத்துக் கிறித்துவக் கல்லூரி ஆசிரியர்களில் ஒருவரான அறிஞர் லாசரஸ் (ஞிக்ஷீ. லிணீக்ஷ்ணீக்ஷீus) என்பவரின் முதல் மகளை மணந்து கிறிஸ்தவ சமயத்தைத் தழுவியவர். இன்னொருவர் சூரியநாராயண சாஸ்திரியாருடன் ஒரு சாலை மாணாக்கராகப் பயின்றவர்.... வீட்டில் தங்கியிருந்த (முன்சொன்ன) என் அண்ணன்மார்களை மறுமுறையும் ‘சங்கப்பாட்டு, பெரிய பெயர்’ என்று ஏன் அவர் (யாழ்ப்பாணத் துறவி) சொன்னார் என்பதைக் கேட்டேன். அவர்கள் சங்க காலப் பாட்டுக்களைப் பற்றிச் சுருக்கமாகச் சொன்னதுடன் பி.ஏ வகுப்பில் படித்தபோது ‘மதுரைக்காஞ்சி’ என்ற சங்கப்பாட்டு பாடமாக இருந்ததாகவும்..... பின்னர் தங்களுக்கு மில்லர் (ஞிக்ஷீ. விவீறீறீமீக்ஷீ) என்னும் தலைவர் சொல்லிக் கொடுத்த மொழிநூல்முறை, இலக்கியவாராய்ச்சி முறைகளை நான் அறியும் அளவில் சொல்லி அம்முறைகளில் ஒரு சுவையை உண்டு பண்ணினார்கள்” (நீ.க. கம்பராமாயணப் பதிப்பும் நிலையும், தமிழ்ப்பொழில்: 1954 ஜூலை)

நீ.க. அவர்களைப் புரிந்துகொள்ள மேலே விவரித்த அவரது இளமைக்காலச் சூழல் உதவும். 1911இல் உருவாக்கப்பட்ட கரந்தைத் தமிழ்ச் சங்கத்தில் தான் சிறுவனாக இருப்பதால் உறுப்பினர் ஆக முடியவில்லை என்றும், ஆனால் அச்சங்கப் பணிகளில் தம்மை ஈடுபடுத்திக்கொண்டதையும் பதிவு செய்துள்ளார். கரந்தைத் தமிழ்ச்சங்கம் 1925இல் ‘தமிழ்ப்பொழில்’ மாத இதழைக் கொண்டுவந்தது. அவ்விதழின் ஆசிரியர் குழுவில் இவர் ஒருவர். மற்ற இருவர் உமாமகேசுவரம் பிள்ளையும் வேங்கடாசலப் பிள்ளையும் ஆவர். 1925இல் தொடங்கிய தமிழ்ப்பொழில் தொடர்பு அவரது இறுதிக்காலம் வரை தொடர்ந்தது. கரந்தைத் தமிழ்ச்சங்கத்தின் தொடக்க கால வளர்ச்சிகளில் நீ.க. அவர்களுக்கு முதன்மையான இடமுண்டு. 1920களில் தொடங்கி 1950 வரை கரந்தைத் தமிழ்ச்சங்கத்தின் நிர்வாகப் பொறுப்புகளில் இடம் பெற்றிருந்தார். 1938இல் சங்கத்தின் வெள்ளிவிழாவைப் பொறுப்பேற்று நடத்தியுள்ளார். 1941-1945 ஆண்டுகளில் சங்க அமைச்சராகவும் பணிபுரிந்தார்.

தமிழ்ச்சூழலில், கரந்தைத் தமிழ்ச்சங்கத்தின் உருவாக்கம் மற்றும் செயல்பாடுகள் உருவாக்கிய மதிப்பீடுகள் குறித்து அறிவது அவசியம். இதன்மூலம் நீ.க. அவர்களின் புலமைத்தளச் செயல்பாடுகள் குறித்து அறிய இயலும். 1900ஆம் ஆண்டு மதுரைத் தமிழ்ச்சங்கம் உருவாக்கப்பட்டது. 1902இல் ‘செந்தமிழ்’ இதழ் வெளிவரத் தொடங்கியது. தமிழ்ச்சங்கமும் அதன் வெளியீடான செந்தமிழும் தமிழியல் ஆய்வில் திருப்புமுனைகளாக அமைந்தன. திராவிட மொழிகள் கண்டுபிடிக்கப்பட்டு அங்கீகாரம் பெற்றமை, சிந்துசமவெளி அகழ்வாய்வு குறித்த உரையாடல், பழந்தமிழ் நூல்கள் அச்சுவழி வெளிப்பட்டு தமிழ் தொடர்பான புதிய மதிப்பீடுகளை உருவாக்கியமை ஆகியவை நிகழ்ந்து கொண்டிருந்த சூழலில், ‘செந்தமிழ்’ வெளிவந்தது.

மேற்குறித்த சூழல் உருவான போது, தமிழ்/சமசுகிருதம் தொடர்பான உறவுகள் குறித்த உரையாடல்களும் முனைப்புறத் தொடங்கின. தமிழ் நூல்கள் குறித்த கால ஆய்வுகள் உருவாயின. சமசுகிருத இலக்கிய, இலக்கணத் தோடு, தமிழ் இலக்கண இலக்கியங்கள் ஒப்பாய்வு செய்யப்பட்டன. இதன்மூலம் இரு தேசிய இனங்களின் பண்பாடு மற்றும் மொழிசார்ந்த கருத்தாடல்கள் உருவாயின. இதில் தமிழை முதன்மைப்படுத்தும் பிரிவும் அதற்கு எதிர்நிலை எடுத்த பிரிவும் உருவாயின. செந்தமிழ், சமசுகிருத மரபுகளைப் பலவகையில் முன்னெடுக்கும் வகையில் அமைந்தது. சமசுகிருதம் பயின்ற அறிஞர்கள் கூட்டம் செந்தமிழோடு பெரிதும் தொடர்புடையவர்களாக இருந்தனர். மு.இராகவையங்கார் போன்றவர்கள், சமசுகிருத மரபிலிருந்து தமிழ் மரபுகள் உருப்பெற்றிருக்கவேண்டும் என்ற அணுகுமுறைகளை முன்னெடுத்தார்கள். பின்னர் பி.சா. சுப்பிரமணிய சாஸ்திரியார் முன்னெடுத்த கருத்துநிலைகளுக்குத் தளம் அளிப்பதாகச் செந்தமிழ்க் கட்டுரைகள் அமைந்தன.

மேற்குறித்த பின்புலத்தில் அத்தன்மைக்கு மாற்றான, தமிழை முதன்மைப் படுத்தும் கருத்தாடல் சார்ந்த அமைப்பாகவே ‘கரந்தைத் தமிழ்ச் சங்கம்’ உருவானது. இச்சங்கம், தமிழ்ப் பல்கலைக்கழகம் உருவாக்குதல், பிறமொழி ஆதிக்கத்தைத் தடுத்தல் ஆகியவற்றை முதன்மைப்படுத்தியது. எனவே, ‘செந்தமிழ்’, ‘தமிழ்ப்பொழில்’ ஆகிய இதழ்கள் தமிழியல் ஆய்வை முன்னெடுத்தாலும் அடிப்படையான கருத்துநிலைகளில் வேறுபட்ட கண்ணோட்டங்களோடு செயல்பட்டன. நீ.க. அவர்கள், இதில் `தமிழ்ப்பொழில்` சார்ந்த கண்ணோட்டத்தில் செயல்படுபவராகவே தொடக்க காலத்தில் இருந்தார். திருக்குறளும் உபநிடதங்களும் (1938) என்று தமிழ்ப்பொழிலில் அவர் எழுதிய கட்டுரை மேற்குறித்த கருத்துநிலையை உறுதிப்படுத்துகிறது. அக்கட்டுரையின் ஒரு பகுதி பின்வருமாறு:

“மாறுபட்ட பலவுணர்ச்சிகளும் மலிந்த இக்காலத்து, திருக்குறளைப் பற்றி ஆராய்ச்சி செய்வதாக முன்வந்து பிழை பல பிதற்றும் பேதமையைத் தமிழறிஞர் புறக்கணித்து, பொருள் செய்யாது வாளாவிருத்தல் அவர்தம் தகுதிக்கு ஏற்புடைத்தேயெனினும் இத்தகைய போலி ஆராய்ச்சி மக்களுக்கும் அறிவு வளர்ச்சிக்கும் உண்மைக்கும் சிறுகச் சிறுக பிறரறியாது தீங்கிழைக்கப் புகுமாயின்... விஜயவாசிரியர் தம் அறியாமை உணர்ந்து திருத்திக் கொள்ளவும் பயன்படுமாறு இம்மறுப்புரை எழுதப்பட்டதேயன்றி, இப்பேராராய்ச்சியால் திருவள்ளுவர் பெருமை குறைந்து வரும் என்ற அச்சத்தாலல்ல...” (நீ.க. தமிழ்ப்பொழில்: 1938: 14:10)

இவ்வகையில், பிரித்தானியர் மரபு சார்ந்து உருவான நவீன கல்வி வளர்ச்சியும் நவீன நிறுவனங்கள் வழி உருவான தமிழியல் ஆய்வும் மேலெழுந்த சூழலில் நீ.க. போன்ற புலமையாளர்களின் செயல்பாடுகள் எவ்விதம் இருந்தன? என்ற கேள்விக்கு விடையளிப்பதாகக் கரந்தைத் தமிழ்ச்சங்கச் செயல்பாடுகள் இருந்தன. அதில் தம்மை நீ.க. இணைத்துக் கொண்டிருந்தார்.

1917 முதல் தமிழகத்தில் உருவாகி வந்த நீதிக்கட்சி தொடர்பான செயல்பாடுகளிலும் தம்மை இணைத்துக்கொண்டார். கரந்தைத் தமிழ்ச்சங்கம் நீதிக்கட்சியின் ஆதரவாகவே செயல்பட்டது. எனவே, பண்பாடு மற்றும் அரசியல் தளத்தில், தமிழகத்தில் உருப்பெற்று வந்த புதிய நிலைமைகளோடு தம்மை ஐக்கியப் படுத்திக்கொண்டார். 1929இல் உருவாக்கப்பட்ட அண்ணாமலைப் பல்கலைக்கழகம் தமிழியல் ஆய்வில் பல புதிய பரிமாணங்களுக்கு வழி கண்டதாகக் கூறமுடியும். கட்டிட ஒப்பந்தக்காரராகத் தொழில் செய்தவர் நீ.க. இதனால் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பல புதிய கட்டிடங்களை இவரே வடிவமைத்தார். இதன்மூலம் அண்ணாமலை அரசர் குடும்பத்தில் இவருக்குத் தொடர்பு இருந்தது. இத்தொடர்பைக் கல்வி சார்ந்த செயல்பாடுகளுக்கும் பயன்படுத்தினார்.

1950களில் கம்பராமாயணத்துக்குப் புதிய பதிப்பு தேவை என்பது, தமிழ்ப் புலமையாளர் தளத்தில் ஒரு சொல்லாடலாகவே இருந்தது. டி.கே.சிதம்பரநாத முதலியார், ச.வையாபுரிப்பிள்ளை, சா. கணேசன், பெ. நா. அப்புசாமி ஆகியோர் இம்முயற்சிகளில் ஈடுபட்டனர். காரைக்குடியில் இதற்கெனக் குழுவும் உருவாக்கப்பட்டது. அதற்கான திட்ட வரையறைகளை ச.வையாபுரிப்பிள்ளை உருவாக்கினார். (விரிவுக்குப் பார்க்க: ச.வையாபுரிப்பிள்ளை நூற்களஞ்சியம்: தொகுதி: 5, 1993) ஏறக்குறைய இதே காலத்தில் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திலும் கம்பராமாயணப் பதிப்புப் பணி தொடர்பான உரையாடல்கள் நடைபெற்றன. அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தருக்கு நீ.க. அவர்கள் எழுதி அனுப்பிய ‘கம்பராமாயணப் பதிப்புத் திட்டம்’ தான் அப்பணிக்கு மூலமாக அமைந்தது. 15.10.1952இல் இவர் உருவாக்கிய திட்டம் தமிழ்க்காப்பியம் ஒன்றைக் கால வளர்ச்சியோடு எவ்விதம் பதிப்பிக்க வேண்டும் என்பதற்கான விரிவான அடிப்படைகளைக் கொண்டிருப்பதைக் காண முடிகிறது.

இத்திட்டம் தமிழ்ப்பொழிலில் (1954 - ஜூலை) வெளியிடப்பட்டுள்ளது. ஆங்கிலத்தில் வெளியிடப்பட்டுள்ள இத்திட்டத்தில், அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தமிழியல் ஆய்வு எவ்வகையில் செயல்படவேண்டும் என்பது குறித்தும், அதில் ஒரு திட்டமாகக் கம்பராமாயணப் பதிப்பு எவ்வகையில் அமைய வேண்டும் என்பதையும் வெளிப்படுத்தியுள்ளார். தமிழ்ப்பொழிலில், மேற்குறித்த திட்டம் ஆங்கிலத்தில் வெளியிடப்பட்டுள்ள பக்கங்களின் தொடர்ச்சியாகக் ‘கம்பராமாயணப் பதிப்பும் நிலையும்’ எனும் (1954 - ஜூலை) நீண்ட கட்டுரையையும் எழுதியுள்ளார். இக்கட்டுரை நீ.க. வின் புலமைத்தளம் குறித்த புரிதலுக்கு நல்ல சான்றாதாரமாக இருக்கிறது. தமிழ்நாட்டின் கம்பராமாயண வாசிப்பு முறைகள் குறித்த விரிவான பதிவுகளைச் செய்துள்ளார். தமிழ்ப் புலமையாளர்கள் கம்பராமாயணம் மீது கொண்டிருந்த ஆழ்ந்த ஈடுபாட்டை நீ.க. மற்றும் வையாபுரிப்பிள்ளை ஆகியோர் பதிவுகளிலிருந்து விரிவாகப் புரிந்துகொள்ளமுடிகிறது. அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் கம்பராமாயணப் பதிப்பு பின்னர் மேற்கொள்ளப்பட்டு பல தொகுதிகளாக வெளியிடப்பட்டன. கம்பராமாயணத்தின் அனைத்துப் பாடங்களையும் பதிவு செய்த பதிப்பாக அது அமைந்திருக்கின்றது. இதனை நடைமுறைப்படுத்தியதில் நீ.க. அவர்களின் திட்ட வரையறை பெரிதும் உதவியிருப்பதைக் காணலாம். 1956இல் நடைபெற்ற மர்ரே இராஜம் அவர்களின் கம்பராமாயணப் பதிப்பிற்கும் பின்னர் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பதிப்பிற்கும் மூலவளங்களைத் தெளிவுபடுத்தியவர்களாக நீ.க.வையும் வையாபுரிப்பிள்ளையையும் கூறமுடியும். அண்ணாமலைப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் சி.பி.இராமசாமி ஐயர் அவர்களிடம் நீ.க. கொண்டிருந்த தொடர்புகளைப் பின்வரும் அவரது பதிவுகள் உறுதிப்படுத்துகின்றன.

“பல நாள் முயன்று 22.11.1953இல் அவர்களை (சி.பி. இராமசாமி ஐயர்) அண்ணாமலை நகரில் நேரில் கண்டு, கம்பராமாயணப் பதிப்பு பற்றி ஒரு சிறிது பேசும் வாய்ப்பு கிடைத்தது. பின்னர் பல்கலைக்கழகம் விரும்பியபடி 28.12.1953இல் கம்பராமாயணப் பதிப்பு பற்றி அவ்வேலையை மேற்கொண்டுள்ள பேராசிரியர் ஜி.சுப்பிரமணிய பிள்ளையவர்களுடனும் கலாஷேத்திர கௌரவக் காவலர் விசுவநாதய்யர்களுடனும் கலந்து பேசி, என் கருத்துகளையும் செலவு, வேலை, காலம், வெளியீட்டு முறை, ஏடுகளைப் பதிவு செய்யும் முறை முதலியவைகளையும் 23.12.1953இல் அறிஞர் சி.பி. அவர்களுக்குத் தெரிவித்தேன்.” (தமிழ்ப்பொழில்: 1954: ஜூலை)

இவ்விதம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் இவர் கொண்டிருந்த தொடர்பு காரணமாகப் பின்னர் திருவாசகப் பதிப்பை (1964), அண்ணாமலைப் பல்கலைக் கழகத்திற்காகச் செய்து கொடுக்க முடிந்தது. இவ்விதம் கல்வி நிறுவனங்கள் எவ்விதம் செயல்படவேண்டும், அதில் புலமையாளர்களின் பங்களிப்பு எவ்வகையில் அமையவேண்டும் ஆகிய பல தன்மைகள் குறித்த புரிதலுக்கு நீ.க. அவர்களின் அண்ணாமலைப் பல்கலைக்கழக உறவு முன்மாதிரியாக அமைகிறது.

நீ.க. அவர்கள் புதுச்சேரி பிரெஞ்சு - இந்திய ஆய்வு நிறுவனத்தோடும் தொடர்பு கொண்டு செயல்பட்டதின் விளைவாகவே நற்றிணை மொழிபெயர்ப்பு வெளிவருகிறது. சங்க இலக்கியத்தில் இளமைக் காலம் முதல் அவர் ஈடுபாடு கொண்டிருந்தார். இவரது தலைமையில், சங்க இலக்கிய அகராதி உருவாக்கப் பணி பிரெஞ்சு - இந்திய நிறுவனத்தில் தொடங்கப் பெற்றது. இதன் விளைவாகப் பழந்தமிழ்ச் சொல்லடைவுகள் (1967) மூன்று தொகுதிகள் வெளிவந்தன. பழந்தமிழ் இலக்கிய - இலக்கணங்களுக்கு உருவாக்கப்பட்டுள்ள அகராதி இன்னும் அச்சு வடிவம் பெறாமல் உள்ளது. விரைவில் அச்சு வடிவம் பெறும் என்று நம்பலாம். கரந்தைத் தமிழ்ச்சங்கம், அண்ணாமலைப் பல்கலைக்கழகம் ஆகிய நிறுவனங்களின் தொடர்ச்சியாகவே இவரது பணி பிரெஞ்சு - இந்திய நிறுவனத்தில் தொடர்ந்தது.

1968 - 1973 காலப் பகுதிகளில் தஞ்சாவூர் சரசுவதி மகால் நூலகக் கௌரவச் செயலாளராகவும் செயல்பட்டிருக்கிறார். இதன் மூலம் பல அரிய நூல்கள் பதிப்பிக்கப்பட்டும், மொழிபெயர்க்கப்பட்டும் வெளிவருவதற்கு மூலமாக அமைந்திருக்கிறார். இவர் இந்நிறுவனத்தில், செயலாளராகச் செயல்பட்டபோது, இவர் கொண்டிருந்த கண்ணோட்டங்களைப் புரிந்து கொள்வதற்குக் ‘கொடுந்தமிழ்‘ நூலில் எழுதியுள்ள பதிப்புரை சான்றாக அமைகிறது. ஆங்கிலத்தில் உள்ள அப்பகுதியைக் கீழே அப்படியே தருகிறேன்.

It will be gratifying to our readers to know that Maharaja Serfoji was keenly interested in the study of Tamil and of the contribution of western savants towards spreading the understanding of Tamil, as is evidenced by the Raja’s collection of several works of Viramamunivar for his private library which is preserved in Sarasvati Mahal.
Though much in demand, the work has been out of print for more than a century and quarter. There is an earlier translation in English of the work by Christopher Henry Horst to which a reference is made by George William Mahon in the preface to his translation. On the increased wake of international interest in Tamil, consequent on the recent Tamil world conferences in India and abroad, we hope this publication will help in advancing the study of Tamil, outside Tamil land.
We intend this publication to be the first of a series of reprints of similar old works in English on Tamil Grammar which are enlisted below:
• A True and Exact Description of the Most celebrated East-India Coast of Malabar and Coromandel as also of the Island of Ceylon. Also a most Circumstantial and complete Account, of the Idolatry of the Pagans in the East-Indies... Translated from the High Dutch in A Collection of Voyages and Travels, 4 Vols. Vol. III. Printed for Awnsham and John Churchill, London 1704. 561-901.P.
• Beschi, joseph constantine. Clavis humaniorum litterarum sublimioris tamulici idiomatis auctore R.P. Constantio Josepho Beschio Societatis Jesu, in Madurensi Regno Missionario. Printed for A. Burnell by the Evangelical Lutheran Mission Press, Tranquebar, 1876. will 171 P. (Grammar of Literary Tamil)
• A Grammar of the High Dialect of the Tamil Language Termed Shen - Tamil; to which is added an introduction to Tamil Poetry. By the Reverand Father. C.J. Beschi, Jesuit Missionary in the Kingdom of Madura. Translated from the Original Latin by Benjamin Guy Babington. Printed at the College Press, Madras, 1822, xii.V. 177 P.
• English missionaries of Madras. A Grammar for Learning the principles of the Malabar Languages, Properly called Tamil or the Tamulian Language. Vepery, near Madras. 1778. 63 P. (2nd Ed. 1789. 63. P.)
• Graul, Karl, Outline of Tamil Grammar. Otto Harrassowitz, Leipzig 1855. 101.P.
• Lazarus john, A Tamil Grammar Designed for use in Colleges and Schools, John Sno and Co., Trubner and Co., London, 1878, vii, 230 p.
• Rhenicus. C.T.E. A Grammar of the Tamil Language with an Appendix, Printed at the Church Mission Press, Madras. 1836 ix, vi, 294 P.
Ziegenbalg, Bartholomaeus. Grammatica Damulica (1716) xii, 128 P. (Tamil Grammar).(‘கொடுந்தமிழ்’ றிக்ஷீமீயீணீநீமீ. சரசுவதி மகால் நூலகம், இரண்டாம் பதிப்பு, 1997)

இவரது இவ்வகை அணுகுமுறையால்தான் வீரமாமுனிவரின் ‘கொடுந்தமிழ்‘ மற்றும் ‘செந்தமிழ்’ ஆகிய நூல்கள் அச்சிடப்பட்டன. இவர் கருதியபடி அனைத்து இலக்கண நூல்களும் அச்சிடப்பட்டிருக்கவேண்டும். ஆனால் அது நிகழவில்லை. ஒரு புலமையாளரின் தூரப்பார்வையை (Vision) இவரது, சரசுவதி மகால் நூலகச் செயல்பாடுகளின் மூலமாக அறிந்துகொள்ள முடிகிறது.

இவரது இறுதிக்காலங்களில், இந்திய அரசு உருவாக்கிய சித்த மருத்துவத் துறையில் உறுப்பினராகச் செயல்பட்டார். இதன்மூலம் இவர் ஆங்கிலத்தில் உருவாக்கியுள்ள சித்த மருத்துவ வரலாறு (1979) எனும் நூல் மிக முக்கியமான பங்களிப்பாகும். இவரது மறைவிற்குப் பின்பே இந்நூல் வெளியிடப்பட்டது. சரசுவதி மகால் நூலகத்தில் இவர் மூலம் வெளியிடப்பட்ட மருத்துவத்துறை தொடர்பான நூல்களை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்நூல், உலக மருத்துவ வரலாற்றை விரிவாக ஆய்வு செய்து, அதில் சித்த மருத்துவம் பெறுமிடத்தைப் பதிவு செய்கிறது.

1910 - 1975 கால கட்டங்களில், தமிழ்ச் சூழலில் செயல்பட்ட நீ.க. தஞ்சாவூர் அருகில் உள்ள பள்ளியகரத்தில் நீலமேகம் பிள்ளை, சவுந்திரவல்லி தம்பதியருக்கு ஒரே மகனாய் 1898ஆம் ஆண்டு பிறந்தார். தஞ்சையில் உள்ள தூயபேதுரு உயர் நிலைப் பள்ளியில் பள்ளிப் படிப்பை முடித்தார். பின்னர் தன் சொந்த முயற்சியால்தான் பல்துறை சார்ந்த படிப்பில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். 1977இல் மறைந்த இவர், தமிழியலுக்குச் செய்த பங்களிப்புகள், மொழிபெயர்ப்பு, பதிப்பு, அகராதியியல் ஆகிய துறைகளை உள்ளடக்கியதாகக் கருதமுடியும்.

பிரித்தானியர் வருகையால், ஆங்கில மொழி நமது புலமைத்தளத்தில் மிகப் பரவலாக இடம் பெற்றதை நாம் அறிவோம். ஒரு காலத்தில் சமசுகிருதமொழி பெற்றிருந்த இடத்தை ஆங்கிலம் பிற்காலத்தில் பெற்றிருந்தது. நீ.க. அவர்கள் ஆங்கிலத்தில் ஆழமான புலமையாளராக உருவானார். இதன்மூலம் மொழிபெயர்ப்புத் துறையில் சாதனையாளராகச் செயல்பட்டுள்ளார். இவரது மொழிபெயர்ப்புப் பணி மிகவும் தனித்திருப்பதாகக் கருதமுடியும். தமிழ் மொழிபெயர்ப்பு வரலாற்றில் இவரது இடம் தனித்தே இருப்பது. இதனை உறுதிப்படுத்துகின்றன இவரது மொழிபெயர்ப்பான இரங்கற்பாவும் (1961) அதில் எழுதியுள்ள தாமஸ்கிரே வாழ்க்கை வரலாறு மற்றும் மொழிபெயர்ப்பு வரையறைகள் குறித்த கட்டுரைகளும். மொழிபெயர்ப்பு தொடர்பான அவரது பதிவு பின்வருமாறு அமைகிறது.

“சில சமயங்களில், ஒரு அருமையான நூலை மூலமொழியில் பயிற்சியுடைய வர்கள் பயிலும்போது பெறுகின்ற இன்பத்தையும் பயனையும்விட மொழிபெயர்ப்பு நூலைப் பயிலுகின்றவர்கள் மிகுதியாக அடையும் நிலையும் ஏற்படுவதுண்டு. இத்தகைய நிலை ஏற்படுவதற்கு மொழிபெயர்ப்பாசிரியர் தான் எடுத்துக்கொண்ட நூலிலும், மூல மொழியிலும் தெளிந்த பயிற்சியுடையவராய் இருத்தலோடு அந்த நூல் ஏற்பட்ட காலத்தில், ஏற்பட்ட நாட்டுக்குத் தொடர்பாகவுடைய நாட்டிலுள்ள இலக்கியங்களில் பயிற்சியும், தான் எடுத்துக்கொண்ட நூலில் கூறப்பெறும் பொருள்களைக் கூறும் ஏனைய நூல்களில் பயிற்சியுடையவராகவும் அந்நூலின் கருத்துக்கு அடிப்படையாக வுள்ள கருத்துக்களைத் தெரிந்தவராகவும், சுருங்கச் சொல்லின், ஆசிரியன், நாடு, காலம் என்னும் இம்மூன்றனது அறிவு நிலை, பொருள் நிலை, ஊக்க நிலை, உணர்ச்சி நிலை என்ற பல நிலைகளையும் உற்ற துணையாகக் கொண்டு, உண்மையினைத் தெரிந்து, மொழிபெயர்க்கும் மொழியிலும் ஒத்த தகுதியும் ஆற்றலும் உடையவராக இருத்தல் வேண்டும். இத்தகைய மொழிபெயர்ப்பே மொழியையும், மக்கள் உள்ளக் கருத்தையும் பண்படுத்துவ தாகும்.” (இரங்கற்பா: 1961 :170)
மேலும்...

“செய்யுளை மொழிபெயர்க்குங்கால் நான் கொண்ட நோக்கம் மூலத்தில் காணப்பெறும் சொற்களும் கருத்துக்களும் ஒரு சிறிதும் சிதைவுபடாமல் மொழிபெயர்ப்பில் வரவேண்டுமென்பதும், இம்மொழிபெயர்ப்புத் தமிழ் மொழியிலே ஆக்கப்படுவதனால் தமிழ்மொழியின் பண்புக்கும், அதைப் பயிலவிருக்கும் தமிழ் மக்களின் உணர்ச்சிக்கும், தமிழ் இலக்கிய மரபிற்கும் ஒத்திருக்க வேண்டும் என்பதுமேயாம். ஆங்கில மொழியிலிருந்து தமிழில் சொற்களை மொழிபெயர்க்கும்போது சொல்லுக்குச் சொல்லாக மொழி பெயர்க்காமல் கருத்தைத் தெள்ளிதின் விளக்கக்கூடிய முறையில் மொழிபெயர்த்தேன்.” (மேற்படி: 172)

இப்பின்புலத்தில், தாமஸ் கிரே அவர்களின் ‘Elegy written in a Country Churchyard’ மொழிபெயர்ப்பு தமிழில் எழுதப்பட்டதைப் போன்ற உணர்வைத் தருவதாக அமைந்திருப்பதைக் காண்கிறோம். தனது மகள் இறப்பின் சோகத்தை, இம்மொழிபெயர்ப்பின் மூலம் நீ.க. பதிவு செய்துள்ளார். இந்நூலை மறைந்த தமது மகளுக்கே காணிக்கையாகப் படைத்திருக்கிறார்.

ஆங்கில - தமிழ் மொழிபெயர்ப்பில்லாமல், சமசுகிருத - தமிழ் மொழிபெயர்ப்புத் தொடர்பாகவும் ஈடுபாடு உடையவராக இருப்பதை இவரது கட்டுரைகள் உறுதிப்படுத்துகின்றன. விஜயநகர மன்னர்கள் குடும்பத்தைச் சேர்ந்த குமார கம்பண்ண உடையாரின் மனைவி கங்காதேவி, தனது கணவர் மறைவை அடிப்படையாகக் கொண்டு ‘மதுரா விஜயம்’ எனும் காப்பியத்தை சமசுகிருதத்தில் எழுதியுள்ளார். இந்நூல் அண்ணாமலைப் பல்கலைக்கழகப் பேராசிரியர் எஸ். திருவேங்கடாச்சாரி அவர்களால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டது. இந்நூல் குறித்த மிக விரிவான மதிப்புரைத் தொடர் ஒன்றைத் தமிழ்ப் பொழிலில் (அக். 1957 - ஏப். 1958) எழுதியுள்ளார். தமிழ்ப்பொழில் ஏழு இதழ்களில் வெளிவந்துள்ள இத்தொடர், நீ.க. அவர்களின் சமசுகிருதப் புலமையைப் புரிந்துகொள்ள உதவுகிறது.

“மதுரா விஜயம் என்னும் இந்நூல், அளவால் சிறியதாகவிருப்பினும், இலக்கிய நயத்தாலும், வரலாற்றுச் செய்திகளாலும், பல வரலாற்றுச் செய்திகளைத் தெரிந்துகொள்ளுவதற்கும் சிந்திப்பதற்கும் தூண்டும் முறையாலும் பெருநூல் என்றே கொள்ளவேண்டும். இந்த நூலிலுள்ள வடமொழி ஸ்லோகங்களின் நடை, இனிமையாகவும், பழம்பெருநூல்களின் நடையை நினைவூட்டுவதாகவும் இருக்கிறது. பாயிரத்துள், தொல்லாசிரியர்களை வணங்கும் முறையும், ஒவ்வொரு ஆசிரியரின் பெருமையையும் சுருங்கச் சொல்லும் பொருளாழமும், இந்த ஆசிரியையின் பண்பாட்டையும் நுனித்த ஆராய்ச்சியையும் நன்கு தெரிவிக்கின்றன. வான்மீகியை, நெறியுடையார் உள்ளத்தை மகிழ்விக்கும் முதற்கவி என்றும், வியாசருடைய சொற்றொடர்கள் செங்கரும்பின் கரணைகள் ஒப்பனவென்றும், காளிதாசனுக்கு அடிமையாகவிருக்க விரும்பாத கவிகள்தான் யாவர் என்றும், பவபூதியின் பனுவல்கள் காமதேனுவின் இனத்தன என்றும் கூறுவது கருதற்பாலது. மேலும், தன் காலத்துப் புலவர்களையும் குறிப்பிடுகின்றார். அதில் எழுபத்து நான்கு காவியங்கள் இயற்றிய அகஸ்த்தியர் என்னும் ஒரு புலவருடைய கல்விப் பெருக்கைச் சிறப்பித்துப் பாராட்டுகின்றார். திருத்தொண்டர் புராணத்தை வடமொழியி லாக்கியவரும், அகத்தியர் தேவாரத்திரட்டு என்ற தொகுப்பைத் திரட்டியவரும் இவராகவிருக்கலாமோ என்பது ஆராயற்பாலது. இவ்வாசிரியை, பொதுவாகக் கூறும் சில இலக்கியப் பண்புகள், இலக்கிய ஆராய்ச்சிக்கு அடிப்படையான குறிப்புகளாக இருக்கின்றன.” (தமிழ்ப்பொழில், 1957:178)

நீ.க. சொந்த நூலகத்தில் காணப்படும் நூல்கள் இவரது ஆங்கிலம் சார் புலமையைப் புரிந்துகொள்ள உதவுகிறது. ஆங்கிலப் புலவர் ரஸ்கின் அவர்களின் 38 தொகுதிகளை இவரது நூலகத்தில் காண முடிகிறது. ஆங்கில - கிரேக்கம் தொடர்பான அகராதித் தொகுதிகள் இவரது நூல் தொகுப்பில் உள்ளன. (இந்நூல்கள் இப்போது குற்றாலம் பராசக்தி மகளிர் கல்லூரி நூலகத்தில் உள்ளன)

நீ.க. அவர்களின் மொழிபெயர்ப்புப் பணியை ஒத்ததாகவே பதிப்புத்துறை தொடர்பான பணிகளும் அமைந்துள்ளன. கம்பராமாயணப் பதிப்பு தொடர்பான அவரது ஈடுபாடுகளை முன்னர் கண்டோம். அதைப் போல பாதிரியார்களின் ஆங்கில நூல்கள் மீண்டும் பதிப்பிப்பதற்கு அவர் மேற்கொண்ட செயல்பாடுகளையும் முன்னர் விளக்கினோம். தமிழ்ப் பதிப்பு வரலாற்றில் இவர் செய்துள்ள திருவாசகப் பதிப்பு (1964) பல நிலைகளில் தனித்திருப்பதாகவே கூற முடியும்.

தமிழ்ப் பதிப்புலகில் சீர் பிரித்துப் பதிப்பிப்பது தொடர்பான உரையாடல்கள் தொடர்ந்து நிகழ்ந்தன. அவ்வுரையாடல்களை இவரது பதிப்பில் பின்னிணைப்பாகத் தொகுத்துத் தந்துள்ளார். இப்பின்புலத்தில் திருவாசகத்தைச் சீர் பிரித்து ஒரு பக்கமும், சீர் பிரிக்காமல் இன்னொரு பக்கத்திலும் பதிப்பித்துள்ளார். இவரது இவ்வித அணுகுமுறை, பழைய மரபான கூறுகளை நவீன முறையில் எதிர்கொள்வதற்கான சிறந்த அணுகுமுறையில் அமைந்திருப்பதைக் காண்கிறோம். இத்தன்மை குறித்த அவரது பதிவு வருமாறு:

“திருவாசகத்தைப் பெரும்பாலும் இசையுடன் பாடி இன்புறுவதே மரபாக இருந்து வருகிறது. ஆகையால் இதன் இசையமைப்பு பழுதுபடா வண்ணம் பதிப்பிக்க வேண்டுவது பதிப்பாசிரியருடைய முதற்கடமையாகிறது. சீர்பிரித்து அடிவரையறையையும் காட்டிப் பதிப்பிப்பதுதான் இம்முறைக்குத் துணையாக இருக்கும். ஆனால் பொருளுணர்ச்சிக்குச் சந்தி பிரித்து ஒவ்வொரு சொல்லையும் தனியாகத் தெரிந்துகொள்ளும் முறையில் பதிப்பிப்பது இன்றியமையாத தாகின்றது. எனவே, எல்லோரும் பயன்பெறவேண்டி, இப்பதிப்பில், இருமுறையும் கையாளப் பெற்றுள்ளது.” (திருவாசகம்: இரண்டாம் பதிப்பு: 2004: 3-4)

இவரது மொழிபெயர்ப்புப் பணியில் ‘இரங்கற்பா’ தனித்திருப்பதைப் போலவே இவரது பதிப்புப் பணியிலும் ‘திருவாசகம்' தனித்தே இருக்கிறது. தமிழில் இசைவழி உருவாக்கப்பட்ட இப்பனுவலை, அதன் தன்மை கெடாமல் பதிப்பிப்பது என்ற இவரது அணுகுமுறையைப் புரிந்து கொள்ள வேண்டும்.

மொழிபெயர்ப்பு, பதிப்பு ஆகிய துறைகள் சார்ந்து செயல்படும் புலமையாளர்கள், அகராதியாளர்களாகவும் செயல்படுவது தவிர்க்க இயலாது. இப்பின்புலத்தில், இவரது பழந்தமிழ்ச் சொல்லடைவு (1967) எனும் அகராதிப் பணியைப் புரிந்துகொள்ள வேண்டும். தமிழ்மொழி மற்றும் பண்பாடு சார்ந்த ஆய்வுக்கு இச்சொல்லடைவு அடிப்படையான தரவாக அமைந்திருக்கிறது. இதனை அடிப்படையாகக் கொண்டு தமிழில் பல சொல்லடைவுகளும் அகராதிகளும் பின்னர் உருப்பெற்றுள்ளன. பேரா. ச. வையாபுரிப்பிள்ளை உருவாக்கிய சென்னைப் பல்கலைக்கழக லெக்சிகனில், சங்க இலக்கியச் சொற்கள் இடம்பெறும் வாய்ப்பு இல்லாமல் போயிற்று. இச்சொல்லடைவு மூலம் பண்டைத் தமிழ்ச்சொற்கள் குறித்த புரிதலை நாம் பெற முடியும். இச்சொல்லடைவைத் தொடர்ந்து, நீ.க. அவர்கள் உருவாக்கியுள்ள செந்தமிழ் அகராதி இன்னும் அச்சுவடிவம் பெறவில்லை. அது அச்சாகுமானால், தமிழுக்குக் கொடையாக அமையும்.

நீ.க. அவர்கள் இறுதிக் காலங்களில் ‘பிரகதி‘ எனும் படப்பிடிப்பு நிறுவனத்தைச் சென்னையில் உருவாக்கி, இரண்டு திரைப் படங்களை எடுத்தார் என்று அறிகிறோம். இதன்மூலம் பெரும் பொருள் இழப்பிற்கு ஆளானார். மொழி பெயர்ப்பாளர், பதிப்பாளர், அகராதிக் கலைஞர் என்ற பல்பரிமாணங்களில் செயல்பட்ட நீ.க. அவர்கள் குறித்த மதிப்பீட்டைப் பின்வருமாறு கூற இயலும்.

சைவப் புலமையாளராகவும், சைவ ஈடுபாடு உடையவராகவும் இருந்த நீ.க., கிறித்தவப் பாதிரியார்கள் மற்றும் அறிஞர்கள் மீது கொண்டிருந்த மரியாதை ஆழமாக இருப்பதைக் காண்கிறோம். கால்டுவெல் குறித்த இவரது மதிப்பீடு இதற்கு நல்ல சான்று. கால்டுவெல்லின் ஒப்பிலக்கணம் அச்சிட்ட ஆண்டை அடிப்படையாகக் கொண்டு, ‘கால்டுவெல் நூற்றாண்டு மலர்’ என்று தமிழ்ப்பொழில் (1958 ஆகஸ்டு) ஒன்றைக் கொண்டு வந்துள்ளார். இதில் இவர் எழுதியுள்ள ‘கால்டுவெல்லும் அவர் வாழ்ந்த காலமும்’ எனும் கட்டுரை, தமிழியல் ஆய்வில் ஈடுபட்ட பிரித்தானியர்களை இவர் எவ்விதம் மதிப்பீடு செய்தார் என்பதைப் புரிந்து கொள்ள உதவுகிறது. கால்டுவெல், போப், வீரமாமுனிவர் ஆகிய பிறர் மீது மிக ஆழமான மரியாதையுடையவராக இருந்துள்ளார். இதன் மூலம் புலமைத்தளம் வேறு, சமய ஈடுபாடு வேறு என்பதைத் தெளிவாக வேறுபடுத்தி அணுகிய இவரது பார்வையைப் புரிந்துகொள்ளமுடியும். புலமையாளர்களாக இருந்த பல சைவர்களிலிருந்து இவர் இத்தன்மையில் வேறுபடுவதை இவரது அடையாளமாகக் கருதமுடியும். கால்டுவெல் பற்றி இவர் எழுதும் வரிகள் வருமாறு:

“இவருடைய ஆராய்ச்சிமுறையில், நாம், ஒன்று கூர்ந்து நோக்க வேண்டும். இவர் இங்கு வந்த நாட்களிலிருந்து, தென்னாட்டில், வளர்பிறையென்ன பிரிட்டிஷ் ஆட்சி, வளர்ந்து பேரரசாகி, உலகத்திலேயே உயர்ந்த வல்லரசு என்ற நிலைக்கு, இவருடைய இறுதிக் காலத்துக்குள் வந்துவிட்டது. இவருடைய நரம்புகளில் ஓடுகிற செந்நீரோ, ஆட்சி செலுத்தும் பிரிட்டிஷ் செந்நீர்; இவருடைய உள்ளத்தில் உறைந்துள்ளதோ, மேல்நாட்டு மொழிகளும் கலைகளும்; இவர் உயிரோ, கிறிஸ்துவின் திருவடிகளில் கட்டுண்டது. இவ்வாறிருந்தும், இவையன்றேனும், இவருடைய ஆராய்ச்சிகளில் உண்மை காணும் ஊக்கத்தையும் நெறியையும் தடைசெய்தனவல்ல; பிறழச்செய்தனவுமல்ல. எச்சமயமாயினும் என்ன? உண்மைத் தொண்டர் களுக்கு, இறைவன்,

‘பொய்யாயினவெல்லாம் போயகல வந்தருளி
மெய்ஞ்ஞானமாகி மிளிர்கின்ற மெய்ச்சுடர்' அல்லவா?

தமிழகத்தின் பழமையையும் தமிழ்மொழியின் அமைப்பையும் ஆற்றலையும் ஆழ்ந்து ஆராய்ந்து, அவற்றின் உண்மை நிலைகளில் சில பகுதியை நன்குணர்ந்த கால்டுவெல், நாளாக நாளாகத் தமிழ்த்தாயின் உண்மை மகனாகவே மாறிவிட்டார்.

இவர், தமிழ் மக்கள் ஊக்கமும் விடாமுயற்சியும் உடையவர்களென்றும், குருட்டுக் கொள்கைகள் அதிகமாக இல்லாதவர்களென்றும், எங்கெங்கே வாய்ப்பிருக்கின்றதோ அங்கெல்லாம் சென்று பொருள் ஈட்டும் துணிபு உடையவர்களென்றும் கருதினார். பழைய முறையில் பயின்று வந்த இலக்கண நூல் முறை, எவ்வாறு மக்கள் உள்ளத்தைத் தெளிவுபடுத்தியுள்ள தென்பதையும், மொழிகளைச் செம்மைப் படுத்தியுள்ளது என்பதையும் உணர்ந்தார்; அக்காலப் புலவர்கள், ஒரு துறையிலே நின்று, அதில் ஆழ்ந்து சென்றிருக்கும் அறிவை வியந்தார்; அவர்களுக்குப் பரந்த பயிற்சி இன்மையால் மொழிகளின் பொதுத் தன்மையையும், தொடர்பையும், உள்ளத்தே கொள்ள முடியவில்லை என்பதையும் கண்டார். ஆங்கிலப் பயிற்சியும், மேல்நாட்டுக் கல்வி முறைகளும் இந்நாட்டில் புகுந்தவுடனே, அப்பயிற்சியைப் பெற்றவர்கள், மேல்நாட்டவருக்கு ஓரளவும் குறையாமல் பல துறைகளிலும் சிறந்த ஆற்றலுடன் வெளிவருவதைக் கண்டார். ஐரோப்பாவில், கலைநலம் பெற்றவர்கள், தங்கள் தங்கள் மொழிகளை ஆராய்வதிலும் ஊர், நாடு முதலியவைகளின் வரலாறுகளையும் பழமையையும் கண்டறிவதிலும் கொண்டுள்ள ஆர்வமும் முயற்சியும் போல தமிழகத்திலும், ஒவ்வொரு மாவட்டத்துக்கும் ஒரு சிலரேனும் கருத்திற்கொள்வார்களானால், இதுவரை தெளிவுபெறாத பல செய்திகள் தெளிவுபெறுமே என எண்ணினார்.” (தமிழ்ப்பொழில், 1958: 34: 4.133)

இவ்வகையில், இவரது புலமைத்தளத்தின் பரிமாணத்தை நாம் புரிந்து கொள்ளவேண்டும். இவரது ஆய்வுகளை இன்றைய தலைமுறை உள்வாங்கிச் செயல்படவேண்டிய தேவை உண்டு.

நீ.கந்தசாமிப் பிள்ளையின் ஆக்கங்கள்:
1. 1926 - தொல்காப்பிய மரபியல் - தமிழ்ப்பொழில் - 2: 3 - 4
2. 1927 - கம்பரும் மக்களுள்ளமும் - தமிழ்ப்பொழில் - 2: 5 - 6
3. 1932 - தமிழ்நாட்டு வரலாறு - தமிழ்ப்பொழில் - 8: 1 - 2
4. 1932 - முற்காலத்தில் நாட்டுப்புற ஊர் (கிராம) வாழ்க்கை - தமிழ்ப்பொழில் - 8: 1-2
5. 1938- பள்ளியகரப் பழங்கதை- பதிப்பு: தமிழ்ப்பொழில் (மூலமும் பழையவுரையும்) 14:7
6. 1938 - திருக்குறளும் உபநிடதங்களும் - தமிழ்ப்பொழில் - 14:10
7. 1938 - இலக்கணப்புலவர்- ம.நா.சோமசுந்தரம் பிள்ளை- தமிழ்ப்பொழில் - 15:11
8. 1954 - Suggestions for the proposed Kambaramayanam Edition and tentative programme for the Tamil Research Department, being extracts from the letters sent to the Vice - Chancellor, Annamalai University on 15.10.52, 29.11.52 & 23.12.53
9. 1954 - கம்பராமாயணப் பதிப்பும் நிலைமையும் - தமிழ்ப்பொழில் - 30: 5 - 6
10. 1957 - கங்காதேவி எழுதிய மதுரா விஜயம்: மதிப்புரை - தமிழ்ப்பொழில்
(ஏழு இதழ்கள் - தொடர் கட்டுரை) 33: 6-12
11. 1958 - பேராசிரியர் பெ. சுந்தரம் பிள்ளை (பேரா. பெ. சுந்தரம் பிள்ளை நினைவுமலர்) - தமிழ்ப்பொழில் - 33: 6-12
12. 1958 - கால்டுவெலும் அவர் வாழ்ந்த காலமும் - தமிழ்ப்பொழில் - 34: 4
13. 1961 - தாமஸ்கிரேயின் இரங்கற்பா (மொழியாக்கம்) - நாட்டுப்புற இடுகாட்டில் எழுதியது - விற்பனை உரிமை: சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், திருநெல்வேலி.
14. 1964 - திருவாசகம் (முதற்பகுதி, மூலம்) அண்ணாமலைப் பல்கலைக்கழகம், இரண்டாம் பதிப்பு - 1984, மூன்றாம் பதிப்பு - 2004
15. 1967 - பழந்தமிழ்ச் சொல்லடைவு: புதுச்சேரி பிரெஞ்சு இந்திய நிறுவனம்
(மூன்று தொகுதிகள்)
16. History of Siddha Medicine - Department of Indian Medicine & Homoeopathy, Chennai - 106
17. குறிப்பு: ஏழூர் தேவாரத்திரட்டு மற்றும் இரு ஆங்கிலக் கவிதை நூல்கள் ஆகியவற்றைத் தொகுத்தார் என்ற குறிப்பை அறிய முடிகிறது. நூல்கள் பார்வைக்குக் கிடைக்கவில்லை. இப்பட்டியல் முழுமையன்று.
(இக்கட்டுரை எழுத மூலமாக அமைந்தவர்கள் பேராசிரியர் குரோ மற்றும் கண்ணன். தமிழ்ப்பொழில் கட்டுரைகளைத் தொகுக்க உதவியவர் ஆய்வாளர் க.அய்யப்பன். சரசுவதிமகால் தொடர்பான செய்திகளைச் சேகரித்தவர் ஆய்வாளர் பா.ஜெய்கணேஷ். இக்கட்டுரை கணிப்பொறி வழி தட்டச்சு செய்தவர் ஆய்வாளர் லோ.ஜெயலட்சுமி. இவர்கள் அனைவருக்கும் நன்றியுடையேன். க. ஆ. ர்


-- பாண்டிச்சேரி ப்ரெஞ்ச் இந்திய நிறுவனம் வெளியிட்டுள்ள அறிஞர் நீ.கந்தசாமிப் பிள்ளையவர்களின் நற்றிணை ஆங்கில மொழிபெயர்ப்பு நூலில் (Narrinai ext and Translation) இடம் பெற்ற கட்டுரை இது