(“இந்திய முஸ்லிம்கள் எப்படி இருக்கவேண்டும் என்பதற்கு இவர் முன்னுதாரணம்” என்று சொல்லித்தான் அப்துல்கலாம் ஐயர் குடியரசுத் தலைவராக்கப்பட்டார். “அப்துல் கலாமும் ஆர்.எஸ்.எஸ்.ஸம்” என்னும் தலைப்பில் அப்போது நாம் ஒரு கட்டுரை எழுதி அவருக்கும் அனுப்பி வைத்தோம். அந்த வரையரையிலிருந்து அவர் இன்று வரை வழுவவில்லை என்பதுதான் அவருக்கான சிறப்பு. மக்களை நேசித்துத்தான் தேசபக்தானாய் இருக்கவேண்டும் என்பதோ, சுதந்திர காற்றை சுவாசித்துத்தான் கனவு காண வேண்டும் என்பதோ, தன்னால் கடைபிடிக்கப்படுவதைத்தான் போதிக்கவேண்டும் என்பதோ இவரைப் போன்ற ஐயர்களுக்கு முன்னிபந்தனையாகாது. அதற்கொரு சான்றுதான் கீழ்க்காணும் நக்கீரன் செய்தி. - கவிதாசரண்)

குடியரசுத் தலைவராக பதவி ஏற்றதிலிருந்து தொடர்ந்து மூன்றுநாள்... அப்துல் கலாம் தமிழகத்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டது இந்தமுறை தான். திருவனந்தபுரத்திலிருந்து 22-ந் தேதி காலை கன்னியாகுமரி வந்தவர்... அங்கு விவேகானந்தர் பாறையில் மூன்று நிமிடம் தியானம் பண்ணிவிட்டு... வரவேற்பு மேளம் இசைக்க வந்த தவில் நாகசுரக் கலைஞர்களிடம் தனக்குப் பிடித்த “ஸ்ரீராஜகீர்த்தனா”வை வாசிக்கச் சொல்லி ரசித்தார். அதேபோல் 3 வயது சிறுவன் ஒருவனின் தவில்வாசிப்பில் மயங்கி அவனைக் கட்டித் தழுவி பாராட்டினார்.

பின்னர் மனோன்மணியம் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா, கொடைக்கானல் அன்னை தெரசா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா, மதுரை காந்தி கிராம விழா, சொந்த ஊரான ராமநாதபுர விசிட், காரைக்குடி பட்டமளிப்பு விழா என தொடர்ந்து 3 நாள்... பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட கலாம்... அங்கங்கே தனது பாணியில் மாணவ, மாணவியர் கலந்துரையாடலையும் நடத்தினார். சில இடங்களில் அவர் நடத்திய இந்த உரையாடல்கள் சர்ச்சைகளையும் கிளப்பி விட்டிருக்கிறது.

கன்னியாகுமரி விவேகானந்தா கேந்திராவில் பள்ளி மாணவ மாணவிகளின் கலந்துரையாடலை நிகழ்த்திய கலாம் முதலில்...

“நான் எனது வாழ்க்கையில் நல்லதோர் லட்சியத்தை மேற்கொண்டு அதற்காகக் கடுமையாக உழைப்பேன்” - என்பது போன்ற 9 உறுதிமொழிகளைப் படித்து... அதை மாணவ மாணவியரை எதிரொலிக்கச் செய்தார்.

பின்னர் மாணவ மாணவியரிடம் “உங்களில் எத்தனை பேர் அரசியல்வாதிகளாக வர ஆசைப்படுகிறீர்கள்?” என கலாம் கேட்க... திரண்டிருந்த 500 பேரில் 7 மாணவிகள் மட்டும் கைகளை உயர்த்தினர்.

“ஏன்?” என அவர்களிடம் கலாம் திரும்பவும் கேட்க... நிவேதிதா என்ற மாணவி எழுந்து “அரசியல்வாதிகளுக்குத்தான் மதிப்பும் மரியாதையும் இருக்கிறது. அவர்கள் நினைத்த காரியத்தை சாதித்து விடுகிறார்கள். அவர்கள் நினைத்தால் நாட்டை வல்லரசாகவும் லஞ்சம் ஊழல் இல்லாத நாடாகவும் ஆக்கலாம்” என டாண் டாண் என பதில் தர... கலாமின் புருவம் உயர்ந்தது. புன்னகை வழிந்தது.

அடுத்து எழுந்த மாணவி ராகினி, “ஏழை எளிய குழந்தைகளைப் படிக்க வைக்க வேண்டும். அதற்காக நான் அரசியல்வாதியாகப் போகிறேன்,” என்றாள். நெகிழ்ந்த கலாம், “உனக்கு 100 மார்க் போடுகிறேன். கனவு காண்; நிச்சயம் நீ வெல்வாய்,” என்று வாழ்த்தினார்.

பின்னர் “ஆளுக்கு ஒரு கேள்வி வீதம் 5 மாணவிகள் மட்டும் கேள்வி கேளுங்கள். அவர்களை நானே செலக்ட் செய்கிறேன்,” என 10 பேர் கொண்ட ஒரு பட்டியலை மெல்லப் பரீசீலித்தார் கலாம். இதன்படி 4 மாணவிகளை தன் விருப்பத்துக்கு கேள்வி கேட்க செலக்ட் செய்தவர்... “5ஆவது மாணவியின் பெயரை இப்போது சொல்கிறேன்” என தன் கண்ணாடியை லேசாக சரி செய்தபடியே பட்டியலை ஊடுருவிப் பார்த்தார்.

“தன்னைக் கூப்பிடமாட்டாரா கலாம்?” - என மாணவிகள் பலரும் பரிதவிப்பாய் சஸ்பென்சோடு காத்திருந்த நிலையில்... மாவட்ட ஆட்சியர் சுனில் பாகவாலிடமிருந்து கலாமுக்கு ஒரு துண்டுச்சீட்டு போனது. அதில் “என் மகள் சிருஷ்டி பாகவாலை கேள்வி கேட்கத் தேர்ந்தெடுங்கள்,” என்ற பரிந்துரைக் குறிப்பு இருந்தது.

“லஞ்சம், ஊழல், பவர்புல் பரிந்துரைகள், நாடு முன்னேறத் தடைக் கற்கள்” என்ற ரீதியில், கருத்துரையாடி வந்த கலாமுக்கே பரிந்துரையா? என பலரின் புருவமும் உயர்ந்தது.

கலெக்டரின் துண்டுச்சீட்டை கலாம் ரிஜக்ட் செய்துவிட்டு சராசரி மாணவியரில் ஒருவரை “டிக்” அடிப்பார் என பலரும் எதிர்பார்க்க... கலாமோ கலெக்டரின் மகள் சிருஷ்டி பாகவாலை கேள்விக்கு செலக்ட் பண்ணி விட்டார்.

“கலெக்டர் தன் அதிகாரத்தைப் பயன்படுத்தி தன் மகளுக்கு வாய்ப்பை வாங்கிக் கொடுத்து விட்டாரே. அதற்கு கலாமும் ஒத்துப் போய்விட்டாரே” என பலரும் முணுமுணுக்க, ஒரே சலசலப்பு. இதேபோல் கொடைக்கானல் அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழக பட்டமளிப்பு நிகழ்ச்சியிலும்... ஒரு அதிரடி சம்பவம் கலாம் முன் அரங்கேறியது.

வழக்கம் போல் மாணவியரிடம் ஆசிரியராக வர விரும்புகிறவர்கள் யார் யார் என கலாம் கேட்க 15 மாணவியர் கைதூக்கினர். விஞ்ஞானியாக வர விரும்புவதாக மூன்றுபேர் மட்டுமே கைதூக்க... “இவ்வளவு பேர்தானா?” என்றார் ஆதங்கமாய் கலாம். கடைசியாக அரசியல் தலைவராக விரும்புகிறோம் என ஏழு பேர் கைதூக்க... “எதற்கு அரசியல்வாதிகளாக வரவேண்டும் என ஆசைப்படுகிறீர்கள்?” என்று வழக்கமான பாணியில் கலாம் கேள்வி சொடுக்கினார்.

அப்போது மகேஸ்வரி என்ற மாணவி... கலாமையே அதிர வைக்கும் வகையில் அதிரடி விமர்சனங்களை அள்ளி வைத்தார்...

“லஞ்ச ஊழலை ஒழிக்க அரசியல்வாதியாக விரும்புகிற நான் எல்லா இடங்களிலும் இருக்கும் ஒருவித அடக்குமுறையையும் ஒழித்து அநீதிகளைத் தட்டிக் கேட்பேன். இங்கேகூட இந்த விழாவில் குடியரசுத் தலைவரான நீங்கள் எங்களுக்கு பட்டம் வழங்குவதாகப் போட்டிருக்கிறார்கள். ஆனால் கவர்னர்தான் பட்டம் வழங்கினார். இது எங்களை ஏமாற்றத்தில் ஆழ்த்தியது,” என நேருக்கு நேராக சொல்ல... மாணவிகள் மத்தியில் ஏக ஆரவாரம்.

அதைக் கேட்டதும் கலாமின் உதட்டுப் புன்னகை சட்டென மறைந்தது. வெப்பக் குரகல் “முதலில் அடக்கமாக இருக்கக் கற்றுக் கொள்ள வேண்டும். அதற்காகத்தான் வள்ளுவரே சொல்லி இருக்கிறார். (கோபத்தில்... அவர் சொல்ல நினைத்த குறள் ஞாபகத்துக்கு வராததால்... மெல்ல அதிலிருந்து விலகி...) நல்லா படிங்க... சாதிச்சிக் காட்டுங்க” என்றவாறே தன் நிகழ்ச்சியை முடித்துக் கொண்டார். முதன்முதலில் கலாமின் கோபமுகம் வெளிப்பட பலருக்கும் அதிர்ச்சி.

கொடைக்கானலில் இருந்து புறப்பட்ட கலாம்... திண்டுக்கல் பெஸ்கி கல்லூரிக்குச் சென்று தனது கல்லூரிக்கால குருவான பாதர் சின்னதுரையை சந்தித்து ஆசிபெற்றதுடன்... அரைமணி நேரம் தனியே மலரும் நினைவுகளைப் பகிர்ந்து கொண்டதை... ஆச்சரியத்தோடு பார்த்தார்கள் அனைவரும்.

- நன்றி, நக்கீரன், செப்டம்பர் 28-30, 2006

Pin It