‘‘இவ்வியக்கம் முற்றிலுமாகப் பொதுமக்கள் ஆதரவு பெறாதது, பேச்சு நிலையைத் தவிர அதற்கு அப்பால் வேறொன்றும் நடந்துவிடவில்லை. அமைதியை விரும்பும் இம்மாநிலத்தில் பொதுமக்களின் சிறு பகுதியினரைக்கூட இவ்வியக்கம் கவர்வதற்கு நீண்ட காலம் பிடிக்கும். இம்மாநிலத்தில் இவ்வியக்கம் அரசியல் விளைவுகளை ஏற்படுத்தும் வாய்ப்போ, ஆங்கிலேயே ஆட்சிக்கு கணிசமான எதிர்ப்பை உருவாக்கக்கூடிய வாய்ப்போ முற்றிலுமாக இல்லை. விதிவிலக்காக ஆங்கிலேய எதிர்ப்பு உணர்வு பற்றி அறிவித்த ஒரே மாவட்டம் திருநெல்வேலி மாவட்டம். அதுவும் தூத்துக்குடி நகரம் மட்டுமே.”

இந்தக் குறிப்பு 1908ஆம் ஆண்டு சென்னை ராஜதானியின் சி.ஐ.டி போலீஸ் அளித்த ஒரு அறிக்கையில் காணப்படுகிறது. இதில் குறிப்பிடப்பட்டுள்ள இயக்கம் 19.06.-08ஆம் ஆண்டு நடந்த சுதேசி இயக்கம். இந்த இயக்கத்தில் திருநெல்வேலி மாவட்டத்தில் முன்னணியில் நின்றவர்கள் மூன்று இளைஞர்கள். 35 வயதான திரு. வ.உ.சிதம்பரம்பிள்ளை, 23 வயதான சுப்பிரமணிய சிவா, 25 வயதான சுப்பிரமணிய பாரதி ஆவார்கள்.

சுதேசி இயக்கத்தின் ஒரு பகுதியாக வ.உ.சி. சுதேசி கப்பல் கம்பெனியைத் தொடங்க எண்ணினார். இதற்காக அவர் பொதுமக்களுக்கு விடுத்த வேண்டுகோளில் தூத்துக்குடிக்கும் கொழும்புக்கும் கப்பல் போக்குவரத்து நடத்துவதற்கு இரண்டு ஸ்டீமர்களும் இரண்டு லாஞ்சுகளும் போதுமானவை. ஐந்து லட்சம் ரூபாய் மூலதனம் போதும். சகல செலவும் நீக்கி வருடத்திற்கு ரூ.10 லட்சம் லாபம் கிடைக்கும் என்று கூறி ‘‘இரண்டு ஸ்டீமர்களும், இரண்டு லாஞ்சுகளும் வாங்கி வேலை நடத்துவதற்கு வேண்டும் ஐந்து லட்ச ரூபாய் நம்மிடமில்லையா? நமக்குக் கப்பல்கள் நடாத்துந் திறமையில்லையா? நம் முன்னோர் கப்பல்கள் நடாத்துவதில் மற்ற நாட்டாருக்கு பின்னடைந்து நின்றவரா? கப்பல்களில் ஏற்றுமதி, இறக்குமதியாகுஞ் சரக்குள் நம்முடையவையன்றி வேறுண்டா? கப்பல்களில் பிரயாணமாகும் பிரயாணிகள் ஏகதேசம் ஒன்று இரண்டு தவிர மற்றவர்கள் நம்மையன்றி வேறுளரா?” என்று சுட்டிக்காட்டினார். கம்பெனிக்குத் தேவையான மூலதனத்தைத் திரட்ட தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பிரயாணம் செய்தார். இறுதியில் கம்பெனி 16.10.1906 அன்று முறையாகப் பதிவு செய்யப்பட்டது.

வ.உ.சி. கப்பல் வாங்குவதற்கு பம்பாய் சென்றபொழுது பாரதி இந்த முயற்சியைப் பெரிதும் வரவேற்று இந்தியா பத்திரிகையில் எழுதினார். காலியா, லாஸ் என்ற பெயரில் இரண்டு கப்பல்கள் வாங்கப்பட்டு அவை 1907 ஜூன் மாதத்தில் தூத்துக்குடி வந்து சேர்ந்தன. சுதேசிக் கப்பல் கம்பெனிக்கும் ஏற்கனவே ஐரோப்பியர்களால் நடத்தப்பட்டு வந்த பிரிட்டீஷ் இந்தியா ஸ்டீம் நேவிகேஷன் கம்பெனிக்கும் பலத்த போட்டி தொடங்கியது. சுதேசிக் கப்பலின் இதயமாக வ.உ.சி. இருந்ததால் அவருக்கு தொல்லை கொடுத்தால் சுதேசிக் கப்பல் கம்பெனி இயங்க முடியாது என்று பிரிட்டீஷ் அரசு கருதியது.

1908ஆம் ஆண்டு தூத்துக்குடியில் சுதேசி இயக்கம் சூடு பிடிக்கத் தொடங்கியது. அந்த ஆண்டு பிப்ரவரி மாதம் முழுவதும் பொதுக் கூட்டங்கள் நடந்தன. அவற்றில் சுப்பிரமணிய சிவா முக்கிய பங்கு வகித்தார். அதே காலகட்டத்தில் தூத்துக்குடியில் இருந்த கோரல் மில்ஸ் தொழிற்சாலையிலும் வேலைநிறுத்தம் நடந்தது. அப்பொழுது திருநெல்வேலி கலெக்டராக இருந்த விஞ்ச் 1908 மார்ச் 9ம் தேதி வ.உ.சியை பிரச்சினை குறித்து விவாதிக்க அழைத்தார். விஞ்ச்சுக்கும் வ.உ.சிக்கும் இடையே நடைபெற்ற இந்த விவாதம் பிறகு பாரதியாரால் ஒரு பாடலாக இந்தியா பத்திரிகையில் வெளியாகி மிகப் பிரபலமானது.

தூத்துக்குடியில் நடந்த கலவரங்களுக்கு வ.உ.சி., சுப்பிரமணிய சிவா ஆகியோர்களைப் பொறுப்பாக்கி வழக்கு நடத்தி அவர்களை பிரிட்டிஷ் அரசு சிறையில் வைத்தது. இந்த சிறைவாசத்தில்தான் வ.உ.சிக்கு பல கொடுமைகள் நடந்தன. 1912 டிசம்பர் வரை வ.உ.சி. சிறையில் இருந்தார்.

வ.உ.சி. மேல் வழக்கு நடந்துகொண்டிருக்கும்பொழுது அவருக்கு ஆதரவாக தமிழ்நாட்டு மக்கள் இல்லையே என்று பாரதி மிகவும் வருந்தி இந்தியா பத்திரிகையில் எழுதினார்.

‘‘கர்ம வீரர்” என்றும் ‘‘பிரதம ஆரிய புருஷர்” என்றும் உயர்ந்த பரித்தியாகி என்றும் அரவிந்த கோஷ் முதலிய பெரியோர்களாலே பாராட்டப்பட்ட ஸ்ரீமான் சிதம்பரம் பிள்ளையின் பெருந்தன்மையையும், தேசப்பற்றையும் உத்தேசித்து நமது தமிழ்நாட்டோர் அவர் விஷயத்தில் எம்மட்டுச் சிரத்தை பாராட்டக் கடமைப்பட்டிருக்கிறார்களோ, அம்மட்டுச் சிரத்தை பாராட்டாமலிருப்பது தவறென்பதாகவே நினைக்கிறோம்.

‘‘ஸ்ரீ சிதம்பரம் பிள்ளை யார் பொருட்டு இரவு பகலாக உழைத்தாரோ அவர்கள்கூடப் பயத்தினாலோ அல்லது சோம்பலினாலோ மூச்சுக் காட்டாமல் பின்வாங்கி நிற்கிறார்கள்.”

வ.உ.சிக்கும் விஞ்ச் துரைக்கும் இடையே நடந்ததாக பாரதி பாடிய பாடல்கள் இன்றைக்கும் எழுச்சியூட்டுவதாக இருக்கின்றன. வ.உ.சியை சிறைக்கு அனுப்பியதற்கு ஒரு காரணம் சுதேசி கப்பல் கம்பெனியை அவர் உருவாக்கியது.

‘‘ஓட்டம் நாங்க ளெடுக்கவென் றேகப்பல்
ஓட்டினாய் -பொருள் -ஈட்டினாய்”

என்கிறார் விஞ்ச். ஆனால் அதைவிட முக்கியக் காரணங்களை வ.உ.சி செய்த குற்றங்களாக விஞ்ச் விவரிக்கிறார். இந்தக் குற்றங்கள் என்ன?

* கோழைப்பட்ட ஜனங்களுக்கு உண்மைகள் கூறினது.
* அடிமைப் பேடிகள் தம்மை மனிதர்கள் ஆக்கியது
* மிடிமை போதும் நமக்கு என்றிருந்தோரை மீட்டியது
* தொண்டொன்றே தொழிலாய்க் கொண்டிருந்தோரை, தூண்டியது
* எங்கும் இந்த சுராஜ்ய விருப்பத்தை ஏவியது

எங்கெல்லாம் ஆணவமும், அதிகார மமதையும் கூடி மக்களைக் கோழைகளாகவும், பேடிகளாகவும், ஆக்குகின்றனவோ அங்கெல்லாம் வ.உ.சி. போன்ற குற்றவாளிகள் தேவைப்படுகிறார்கள். வ.உ.சி. செய்த குற்றங்களை நாமும் செய்ய வேண்டிய சூழ்நிலை உருவாகிறது.

சென்ற மாதம் ‘‘தகவல் உரிமைச் சட்டம் எந்த அளவுக்கு பயனளிக்கும்” என்பதைப் பற்றி ஒரு அமைப்பு ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் பேசக்கூடிய வாய்ப்பு கிடைத்தது. அப்பொழுது ‘‘இந்தச் சட்டத்தில் மாநில அரசுகள் செய்ய வேண்டியவை என சில செயல்பாடுகள் குறிப்பிடப்பட்டுள்ளன. அவற்றை மாநில அரசுகள் செய்ய வேண்டும் என்று வற்புறுத்தி சட்டப் பேரவையில் பேச வேண்டும் என்று கோரி உங்கள் தொகுதி சட்டமன்ற உறுப்பினருக்கு ஒரு போஸ்ட் கார்டு அனுப்புங்கள்” என்று கோரினேன். கூட்டம் முடிந்த பிறகு ஆண்டிலும், அறிவிலும், பத்திரிகை அனுபவத்திலும் மூத்தவரான ஒரு பெரியவர் ‘‘போஸ்ட் கார்டு அனுப்பினால் என் வீட்டிற்குப் பின்னாலேயே போலீஸ்காரன் வந்துவிடுவான்” என்று கூறினார். இந்த அளவுக்கா நாட்டிலே அச்ச உணர்வு இருக்கின்றது என்று எனக்கு வியப்பாக இருந்தது. அப்படிப்பட்ட அச்ச உணர்வு இருந்தால் அது மக்களாட்சியில் ஆள்பவருக்கும் ஆளப்படுபவருக்கும் எந்தப் பெருமையையும் அளிக்காது.

விஞ்ச் துரைக்கு பதிலளிக்கும்பொழுது சிதம்பரம்பிள்ளை

‘‘பொழுதெல்லாம் எங்கள் செல்வம் கொள்ளை கொண்டு
போகவோ? - நாங்கள் - சாகவோ?
அழுது கொண்டிருப்போமோ? ஆண்பிள்ளைகள்
அல்லமோ? - உயிர் - வெல்லமோ?”

என்று கூறினார். இன்றைக்கும் நமது இயற்கைச் செல்வங்களான நிலம், நீர், மண், வனம் என்பவை அரசியல் சமுதாய பொருளாதாரக் களத்தில் உள்ள தீய ஆதிக்க சக்திகளால் கொள்ளையடிக்கப்பட்டு வருகின்றன. மேலும் கல்வி, மருத்துவம், வீடு போன்ற அடிப்படை வசதிகளிலும் கொள்ளை நடக்கிறது. இதை எதிர்த்து குரல் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் நாமும் இருக்கிறோம்.

ஒவ்வொரு காலகட்டத்திலும் இத்தகைய ஆதிக்க சக்திகள் விஞ்ச் துரையாக உருவெடுக்கின்றனர். அதை எதிர்த்து கோழைப்பட்ட மக்களுக்கு உண்மைகள் கூற வேண்டிய கட்டாயத்தில் ஆர்வலர்கள் இருக்கின்றார்கள். அவர்கள் இந்த நவீன விஞ்ச் துரைகளுக்குக் கூற வேண்டியதெல்லாம் வ.உ.சி. கூறியதாக பாரதி கூறிய

‘‘சொந்த நாட்டில் பரார்க்கடிமை செய்தே
துஞ்சிடோம் இனி யஞ்சிடோம்”

என்ற தாரக மந்திரம்தான்.