“பூரண ஹரியும் பூரண ரசிகமணியும்” என்ற தலைப்பில் 1967ம் ஆண்டு மூதறிஞர் ராஜாஜி அவர்கள் ஒரு கட்டுரை எழுதியிருந்தார். அந்தக் கட்டுரையிலிருந்து ஒரு பகுதி.

 “சென்ற திங்கட்கிழமை கண்ணன் பிறந்த நாள். அந்தத் திங்கட்கிழமையே தமிழ்க் கவிதை தரும் மகிழ்ச்சியின் ரகசியம். தமிழ் வசன நடை முன்னேற்றத்தின் ரகசியம். தாளமும், ராகமும் சேர்ந்த நல்லிசையின் ரகசியம். தெய்வ பக்தி தரும் நிம்மதியின் ரகசியம். அன்பின் பரம மகிழ்ச்சி, வேஷங்களின் பொய்ம்மை, அனைத்தும் நன்றாகக் கண்ட பூரண ரசிகமணி டி.கே.சி. பிறந்த நாளாகும்.

“ஹரியின் பூரணாவதார கண்ணனின் ஜன்ம நட்சத்திரமும், டி.கே.சி.யின் ஜன்ம நட்சத்திரமும் ஒன்றாய்ச் சேர்ந்த திருவிழாவை மகிழ்ச்சியுடன் சென்ற திங்கட்கிழமை கொண்டாடினோம். இந்த திருவிழாக்கள் ஞானமும் அன்பும் நாட்டில் வளரச் செய்யும்.

கண்ணபகவான் ரோஹிணி நட்சத்திரத்தில் அவதரித்தான். ரோஹிணி நட்சத்திரக் கூட்டம் சகடத்தைப் போல் இருப்பதாகக் கண்டு அதற்குப் பெயரும் சகடம் என்றே சொல்லுவது வழக்கம். வண்டியின் முக்கிய பாகம் அச்சுமரம். அச்சுமரத்துக்கு வடமொழி அக்ஷி. அதன் கீழ் பிறந்தான் கண்ணன் என்று விஷ்ணுவுக்குப் பீஷ்மாச்சாரியார் தந்து பாடிய ஆயிர நாமங்களில் அதோகக்ஷஜ என்பதும் ஒன்று. அதாவது அச்சு மரத்தடியில் அவதரித்தான் என்று.

இந்த அச்சு மரத்தடியில் மற்றொருவர் அவதரித்தார். தமிழ்க் கவிக் காதலர் டி.கே.சி என்று பெயரைப் பெற்ற மகான் சிதம்பரநாத முதலியார் அவர்கள். சிரீஜயந்தி என்றால் கண்ணன் பிறந்த நாள். டி.கே.சி. பிறந்த நாள் என்றும் தமிழர் கொண்டாடும் நாள்.’’ மூதறிஞர் ராஜாஜி அவர்கள் மிக மிகக் குறைந்த வார்த்தைகளில், ரத்னச் சுருக்கமாக டி.கே.சி.யின் விஸ்வரூபத்தை நமக்குக் காட்சியாகக் காட்டிவிட்டார். இதற்கு மேல் சொல்லுவதற்கு ஒன்றுமே இல்லைதான்.

இருப்பினும் ஒரு சில சிந்தனைகளை இந்தக் கட்டுரையில் பகிர்ந்துகொள்வது எனது கடமை என நான் நினைக்கிறேன். தமிழர்களாகிய நாம் பாக்கியசாலிகள் என்று ஊக்கமூட்டியவர் ரசிகமணி டி.கே.சி. அதனை ஒட்டி தமிழ் செய்த பாக்கியம் டி.கே.சி.யின் அவதாரம் என்று தமிழர்கள் பெருமைப்படலாம்.

தமிழ் மொழிக்கும், தமிழ்க் கவிதைக்கும், தமிழின் மறுமலர்ச்சிக்கும், தமிழர் பண்பாட்டிற்கும், தமிழ் இசைக்கும் ரசிகமணி அவர்களால்தான் ஏற்றம் ஏற்பட்டது என்பதும் உண்மை. தமிழ்க் கவிதையை இன்பம் காண்பது எப்படி, கவிதையை அனுபவிப்பது எப்படி, கவிதை மூலம் எப்படி ஆனந்தம் அடையலாம் என்றெல்லாம் தமிழர்களுக்குச் சொல்லிக்கொடுத்தவர் டி.கே.சி.

ரசிகமணி தமிழ் இலக்கிய உலகில் தோன்றுவதற்கு முன்பு கவிதை என்பது வேறு, செய்யுள் என்பது வேறு என்பதை யாரும் பிரித்துப் பார்த்தது இல்லை.

பாடலின் பொருள் நயத்தை மட்டும் விளக்கிக் கொண்டிருந்தனரே அல்லாமல் உட்பொருள் கவி உருவம் பெற்று வெளிவந்துள்ள அற்புதத்தைக் கண்டவர் யாரும் டி.கே.சிக்கு முன்னர் இருந்ததாகத் தெரியவில்லை.

கவிதையை அனுபவித்தவர் மட்டுமல்ல டி.கே.சி. கலையை, இசையை, பண்பாட்டை, வாழ்க்கையை என்று இப்படி எல்லாத் துறைகளிலும் அவர் தனித்துவத்தோடு அனுபவம் பெற்றவர்; விளக்கமளித்து தமிழ் மக்களுக்கு உதவியவர்.

ரசனை முறைத் திறனாய்வாளர் என்று ரசிகமணியைச் சிலர் சிறப்பித்துக் கூறுவர்.

கலை, இலக்கியம், இசை, வாழ்க்கை முறை எல்லாவற்றிலும் அந்தத் திறனாய்ந்து தெளிவு பெறும் நிலையை டி.கே.சி.யிடம் காண முடியும். பழைய இலக்கியம் என்னும் ஒரே காரணத்திற்காக எல்லாவற்றையும் அவர் ஏற்றுக்கொண்டது கிடையாது. அதே போன்று கவித்துவம் இல்லாத கவிகளையும், அவர் தயவு தாட்சண்யம் இன்றி ஒதுக்கித் தள்ளிவிட்டிருப்பதைப் பார்க்கிறோம்.

டி.கே.சி. அவர்கள் ஏற்றுக்கொண்ட கவிஞர்களுள் ஸ்ரீவில்லிபுத்தூர் கவிஞர்களான பெரியாழ்வார். ஆண்டாள் இருவரும் அடங்குவர். ஸ்ரீவில்லிபுத்தூருக்கும் ரசிகமணி டி.கே.சி. அவர்களுக்கும் உள்ள தொடர்புகள், செய்திகளில் முக்கியமாகக் குறிப்பிட வேண்டியது ஸ்ரீ ஆண்டாள் திருக்கோவிலின் கோபுரம் சம்பந்தமானது.

ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்தபோது தமிழக அரசுக்கு ஏற்ற இளச்சினை ஒன்றை வடிவமைக்கத் திட்டமிட்டனர். பலரும் பல்வேறு யோசனைகளைத் தெரிவித்துக் கொண்டிருந்தனர். முடிவுக்கு வர இயலவில்லை அரசினரால்.

ரசிகமணி டி.கே.சி. அவர்களிடம் ஓமந்தூரார் யோசனை கேட்டார். “இதற்கா இவ்வளவு யோசனை? தமிழ்நாடு முழுவதும் வானளாவிய கோபுரங்கள் எழுந்து நிற்கின்றனவே. அதைவிடவா தமிழ்க் கலையையும், தமிழ்ப் பண்பாட்டையும் எடுத்துக் காட்டும் சின்னம் வேறு இருக்கிறது? நம் ஸ்ரீவில்லிபுத்தூர் கோபுரம் மிகவும் அழகான தோற்றத்துடன் இருக்கிறது. அதையே தமிழக அரசின் சின்னமாக வைத்துவிடலாமே” என்று உடனே பதில் சொல்லிவிட்டார் ரசிகமணி.

டி.கே.சி. அவர்களின் இந்த அரிய யோசனை ஏற்கப்பட்டு தமிழ்நாட்டின் சின்னமாக ஸ்ரீவில்லிபுத்தூரின் கோபுரம் இடம்பெற்றுவிட்டது.

கோதை பிறந்த புனிதத் தலமான ஸ்ரீவில்லிபுத்தூரில் கொல்லம் ஆண்டு 1057 ஆவணி மாதம் ரோஹிணி நட்சத்திரத்தில் (18.08.1881) தமிழ் செய்த தவப்பயனாக அவதரித்தார்கள் ரசிகமணி டி.கே.சி. என்ற குறிப்பைப் பதிவு செய்வதில் மகிழ்ச்சியடைகிறேன்.

டி.கே.சி.யின் தாயார் பிறந்த ஊர் ஸ்ரீவில்லிபுத்தூர். ரசிகமணி அவர்களின் வாழ்க்கைத் துணைவியார் பிச்சம்மாள் அண்ணி பிறந்த ஊரும் இதே ஸ்ரீவில்லிபுத்தூர்தான். தம் மாமன்மார் மற்றும் உறவினர் வாழும் ஊர் என்பதாலும் டி.கே.சி. அவர்களுக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் மனத்துக்குப் பிடித்த ஊராக இருந்து வந்தது.

ராஜாஜி அவர்கள் சிரீஜயந்தி என்றே எழுதியிருக்கிறார். அதுபோல டி.கே.சி. அவர்களும் ஸ்ரீவில்லிபுத்தூர் என்றுதான் எழுதியிருக்கிறார். அப்படியேதான் ஸ்ரீரங்கம் என்றும் எழுதினார். பெரியவர்களின் தனித்துவமான சிந்தனைகளும், பழக்க வழக்கங்களும் எண்ணிப் பார்த்து மகிழலாம் நாம்.

1948-ஆம் ஆண்டில் (ஜஸ்டிஸ்) எஸ். மகராஜன் அவர்கள் அங்கு ஜில்லா முனிசீபாகப் பதவி வகித்தபோது டி.கே.சி. அவர்களுக்கு ஸ்ரீவில்லிபுத்தூருடன் அதிகமான நெருக்கமும், ஈர்ப்பும் ஏற்பட்டது.

மகராஜன் அவர்கள் ரசிகமணி அவர்களின் சீடர்களில் மிகவும் முக்கியமானவராக இருந்தவர். தம் கருத்துக்களோடு இணைந்து சிந்திக்கும் ஆற்றல் மிக்கவராக மகராஜன் இருக்கிறார் என்பதால் ரசிகமணி அவர்களுக்கு மகராஜன் அவர்களிடம் ஒரு நம்பிக்கையும், எதிர்பார்ப்பும் இருந்து வந்தது.

வாய்ப்பு நேரும்போதெல்லாம் மகராஜன் அவர்களுடன் சில தினங்கள் ஸ்ரீவில்லிபுத்தூரில் தங்குவதையும், தமிழ்க் கவிதையை அவரோடு சேர்ந்து அனுபவிப்பதையும் டி.கே.சி. அவர்கள் வழக்கப்படுத்திக் கொண்டார். அந்த சந்திப்புகள் எல்லாம் ரசிகமணி வாழ்க்கையில் ஏற்பட்ட குறிப்பிடத்தக்க நிகழ்ச்சிகள் ஆகும்.

அவ்வாறு ஸ்ரீவில்லிபுத்தூரில் டி.கே.சி. தங்கியிருந்த சமயங்களில் அங்குள்ள பென்னிங்டன் நூலகம், புனித இருதயப் பள்ளிக்கூடம், காஸ்மோபாலிடன் கிளப் போன்ற அமைப்புகளில் டி.கே.சி. அவர்களைப் பேசுவதற்கு ஏற்பாடு செய்து மகிழ்ந்தார் மகராஜன் அவர்கள்.

டி.கே.சி. அவர்களின் கவிதானுபவத்தில் ஸ்ரீவில்லிபுத்தூர் இலக்கிய அன்பர்கள் தோய்ந்து இன்புற்றனர். அவர்களில் ஒரே பெயரை உடையவர்கள் இருவர். ஒருவர் வித்வான் திருமலை அய்யங்கார். மற்றவர் திரு ஜி.ஞி. திருமலை அவர்கள்.

ஒரு கடிதத்தில் வித்வான் திருமலை அய்யங்கார் அவர்களின் தமிழ் ஈடுபாட்டைக் குறித்து டி.கே.சி எழுதியிருப்பதைப் பார்ப்போம்.

“திருமலை ஐயங்கார் அவர்கள் என்னுடன் திருச்சி வரை வந்தார்கள். விருதுநகர் வரை கம்பார்ட்மெண்டிலேயே இருந்து தமிழைக் கிறுக்கன் மாதிரி அனுபவித்து வந்தார்கள்” என்று குறிப்பிட்டு தமது மகிழ்ச்சியைக் காட்டியுள்ளார் டி.கே.சி.

மற்றவரான திரு. ஜி.ஞி. திருமலை அவர்கள் ரசிகமணியின் மேன்மைகளை எல்லாம் நன்கு உணர்ந்து போற்றிய சீடராக உருமாறியவர். மதுரைக்கும் பின்பு சென்னைக்கும் இடம்பெயர்ந்து சென்று காந்தியத் தொண்டாற்றி பேரும் புகழும் பெற்றுத் திகழ்ந்தவர்.

டி.கே.சியின் கோட்பாடுகளில் தம்மை முழுவதும் கரைத்துக்கொண்டு, ரசிகமணியின் கருத்துக்களையும், இலக்கியப் பார்வையையும் எடுத்துக்காட்டுவதற்காக உலக இதய ஒலி என்ற மாத இதழைப் பல ஆண்டுகள் நடத்தித் தமிழ்த் தொண்டு ஆற்றிய ரசிகர் திரு. ஜி.ஞி. திருமலை அவர்கள்.

ரசிகமணி டி.கே.சி. வாழ்க்கை வரலாற்றில் ஸ்ரீவில்லிபுத்தூர் ரயில் நிலையம் முக்கியமான அங்கம் வகிக்கிறது. ரசிகமணி அவர்கள் தமிழ்க் கவிதையை ரசிப்பது ஒன்றையே ஒரு நியமமாகக் கொண்டிருந்த மகான் கவிதானுபவம் என்பதுவே அவரது உயிர் மூச்சாக இருந்திருக்கிறது என்று சொல்லுவார்கள் அவரோடு நெருங்கிப் பழகியவர்கள்.

கவிதா ரசனையில் ஆனந்தம் துய்த்தவர் ரசிகமணி. அதைவிட பிறரும் தம்முடன் சேர்ந்து கவிதையை ரசிக்கிறார்களே என்கின்றபோது அவருக்கு ஏற்படும் ஆனந்தமும், நிறைவும் தனி என்பதைப் பார்த்திருக்கிறோம்.

சென்னைக்கு ரயிலில் செல்லும்போதெல்லாம் ஸ்ரீவில்லிபுத்தூர் ரயிலடியில் வண்டி நிற்கும் சில மணித்துணிகளில் அன்பர்களைச் சந்திக்க அவர்கள் உள்ளம் துடிக்கும். மகராஜன், திருமலை போன்றோரைக் கண்டதும் முகம் மலரும் தோற்றம் காண்பதற்கு அரிய காட்சிதான். அந்த ரசிகர்களின் அன்பும் ஈடுபாடும் ரசிகமணி அவர்களின் உள்ளத்தை உருக்கிற்று.

இப்பேர்ப்பட்ட ரயிலடிச் சந்திப்புக்கள் டி.கே.சி. அவர்களுக்கு எத்தகைய உணர்வைக் கொடுத்தது என்பதை அவர்கள் வாக்குமூலம் மூலமே நாம் தெரிந்துகொள்வோம்.

வயசாக வயசாக ஒத்த உணர்ச்சி ஒன்று போதும். வேறொன்றுமே வேண்டாம் என்று சொல்லத் தோன்றுகிறது. சாப்பாடுகூட வேண்டாமோ என்று தோன்றியது வள்ளுவருக்கு.

டாக்டர் ஜான்ஸன் என்ற ஆசிரியருக்கும் அப்படித்தான் தோன்றியது. அவர் நல்ல மேதாவிகளான சத்சங்கத்தோடு தினம் தினம் பழகி வந்தார். ஒரு நாள் ஒருவர் அவரைக் கேட்டார். அயல்நாடுகளுக்குப் போய்ச் சுற்றுப் பயணம்செய்து வந்தால் அறிவு தெளிவடையும் அல்லவா என்று கேட்டார்.

அதற்கு ஜான்ஸன் பதில் சொன்னார்: அதெல்லாம் ஒன்றுமில்லை. பலர் பிரயாணம் பண்ணத்தான் செய்கிறார்கள். அவர்கள் கருத்துக்களையோ கொள்கைகளையோ மாற்றுகிறார்களோ, கிடையவே கிடையாது. அவர்கள் மாற்றுவதெல்லாம் நாணயத்தைத்தான். பிரான்ஸ§க்குப் போனால் பிரெஞ்சு நாணயமாக இங்கிலீஷ் நாணயத்தை மாற்றிக்கொள்ள வேண்டும். ஜெர்மனிக்குப் போகும்போது ஜெர்மன் நாணயமாக மாற்றிக்கொள்வார்கள். அவ்வளவுதான் என்றார் ஜான்ஸன்.

நல்ல சத்சங்கம் இருந்துவிட்டால் போதும். வேறு எங்கும் போக வேண்டும் என்று தோன்றாது. ஏன், தேவேந்திரலோகத்துக்குப் போகவே தோன்றாதாம்.

“தவலரும் தொல்கேள்வித்
தன்மை யுடையார்
இகல் இலர் எஃகுடையார்,
தம்முட் குழீஇ
நகலின் இனிதாயின்
காண்பாம் அகல்வானத்(து)
உம்பர் உறைவார்

பதி” - ரொம்பவும் உண்மை. இவ்வளவும் ஸ்ரீவில்லிபுத்தூரைப் பற்றிய விஷயம் என்பது ஞாபகம் இருக்க வேண்டும், இருக்கட்டும்.

இப்படி ஸ்ரீவில்லிபுத்தூருக்கும், டி.கே.சி. அவர்களுக்கும் உள்ள உறவு இருந்திருக்கிறது. இதை எண்ணிப் பார்க்கும்போது நமக்கும் ஸ்ரீவில்லிபுத்தூர் ஊர் பேரில் ஒரு தனி அபிமானம் தோன்றுகிறது அல்லவா?