ஒருதலை

இது தகவல் யுகம் என்கிறார்கள். இங்கு வேகம் முக்கியம் என்கிறார்கள். இந்த வேகத்திற்கு ஈடுகொடுக்கக்கூடிய விதத்தில் தமிழ் இல்லை என்று குறைபட்டுக் கொள்கிறார்கள். வேகத் தடையாக அமைந்திருப்பவை தலையாய தாகத் தமிழ் எழுத்துகளின் ‘நெடுங்கணக்கு’ எண்ணிக்கை மற்றும் ஒழுங்கற்ற வரிவடிவம் என்று சுட்டிக் காட்டுகிறார்கள். போதாதற்கு இறுகிப்போன இலக்கணம் வேறு என்று இடித்துரைக்கிறார்கள்.

இது தகவல் யுகம் என்கிறார்கள். இங்கு ஆங்கிலம் முக்கியம் என்கிறார்கள். அறிவும் அறிவியலும் ஆங்கிலத்திற்கே சொந்தம் என்பதால் அவற்றை முறையாக இறக்குமதி செய்யக்கூடிய அளவுக்குக்கூடத் தமிழுக்குத் திராணி இல்லை என எள்ளி நகையாடு கிறார்கள். கடினமான மொழியாக்கம் மற்றும் கலைச்சொற்கள் படாத பாடுபடுத்தி விடுகின்றன என்று அலுத்துக் கொள்ளுகிறார்கள். ஆங்கிலப் பெயர்கள், இன்றியமையாக் கலைச்சொற்கள் முதலியவற்றை ஆங்கில மூலத்தில் உள்ளபடியே உச்சரிக்கக்கூடிய அளவுக்குத் தமிழில் ஒலிகள் இல்லை என்று அங்கலாய்த்துக் கொள்கிறார்கள்.

இது தகவல் யுகம் என்கிறார்கள். இங்குத் தமிழால் பிழைக்க முடியாது என்று சாபமிடுகிறார்கள். ‘கற்றது தமிழ்’ என்று வெள்ளித் திரையில் குத்திக் காட்டுகிறார்கள். உலகமய மாக்கல் சூழலில் உலகமொழியாகிய ஆங்கிலத்தால் மட்டுமே வாய்ப்புகளின் வாசல்கள் திறந்துவிடப்படுவதாக முரசு கொட்டுகிறார்கள். ஆங்கிலத்திற்கு இசைவாகத் தமிழை ‘பெண்டு’ நிமிர்த்தினால் மட்டுமே தமிழால் கொஞ்ச நஞ்சமாவது தாக்குப்பிடிக்க முடியும் என்று குறி சொல்லுகிறார்கள்.

மறுதலை :

இது தகவல் யுகம் என்பதை நாம் மறுத்தற்கில்லை. எனினும், தகவல் தொழில் நுட்பத்திற்கும் (த.தொ) அரசியல் பண்பாட்டுக்கும் இடையில் ஒருவித இயங்கியல் ரீதியான உறவு இருப்பதைக் கவனிக்க வேண்டும். எந்த அரசியல் பண்பாடு தகவல்தொழில்நுட்பத்தின் மீது மேலாதிக்கம் செலுத்துகிறதோ அந்த அரசியல்_பண்பாட்டு மொழிக்கு ஏவல் செய்வதாகத் தகவல்தொழில்நுட்பம் மாறிவிடுகிறது.

இதன் மற்றொரு முகமாக, எந்த அரசியல் பண்பாடு தகவல்தொழில்நுட்பத்தின் ஆளுகையின் கீழ்ப்பட்டு, தன்னைத் தகவமைத்துக் கொள்ளத் தடுமாறிக் கையறு நிலையில் நிற்கிறதோ, அந்த அரசியல் பண்பாட்டின் மொழியும் அதே கையறு நிலைக்குத் தன்னைத் தள்ளிக் கொள்கிறது. எனவே, ‘மொழிக்கு வளையும் தகவல் தொழில்நுட்பமா? தகவல் தொழில் நுட்பத்திற்கு வளையும் மொழியா?’ என்ற வினா அரசியலோடு பின்னிப் பிணைந்துள்ள உண்மையைக் கண்டுகொள்ள வேண்டும். எனில், எதற்காக மொழியில் மாற்றம் ?

இது தகவல் யுகம் என்பதை நாம் மறுத்தற்கில்லை. எனினும், ஏறத்தாழ ஆறு கோடித் தமிழர்கள் வாழும் தமிழ் நாட்டில் (தமிழ் நாட்டில் வாழ்பவர்கள் எல்லாரும் தமிழர்கள் அல்ல) இந்தத் தகவல் யுகம் ‘புரட்சி’ யால் பயனடைபவர்கள் எத்தனை விழுக்காடு என்ற கேள்வியையும் கேட்டுவைக்க வேண்டியுள்ளது. இம் ‘மாபெரும் புரட்சி’ யுகத்தில் தமிழ் பேச மட்டுமே முடிந்த (எழுத்தறிவற்ற) தமிழர்கள் குறைந்தது 40 விழுக்காடு (இரண்டு கோடி) இருப்பார்கள் (இந்த 2.4 கோடிப் பேரும் தமிழ் எழுத்து சரியில்லை என்பதால் படிக்க மறுத்துவிட்டவர்கள் அல்லர்).

பள்ளி செல்லும் வயதிலுள்ள தமிழ்க் குழந்தைகளில் கணிசமானோர் முதுகில் குடும்பச் சுமை கொலுவீற்றிருக்கிறது. பள்ளி செல்வோரிலும் முக்காலே மூணு வீசம் பேர் அரசு/அரசுதவி பெறும் பள்ளிகளில், தகவல் யுகத்திற்கு வெகு தொலைவிலான தமிழ்வழிக் கல்வியில் தொலைந்து போயுள்ளார்கள். இதில் தேறிவந்து, கல்லூரி வாயிலை எட்டும் வெகு சிலரில் எத்தனை பேருக்கு இந்திய / தமிழக அளவில் முன்னணியில் இருக்கும் கல்லூரிகளின் வாயில் திறந்துவிடப்படுகிறது-?

உள்ளே நுழையும் பேறுபெற்ற ஓரிருவரில் எத்தனை பேருக்குத் தகவல் தொழில் நுட்பப் தொடர்பான பாடங்களில் இடம் கிடைக்கிறது? ஆக, இந்தத் தகவல் தொழில்நுட்பப் புரட்சியால் இல்லாதவர்களுக்கும் இருப்பவர்களுக்குமான ‘அறிவு -_ இடைவெளி’ அதிகமாகிறதே தவிரக் குறைவதில்லை. எனவே, யாரை முன்வைத்து மொழியில் மாற்றம்?

இது தகவல் யுகம் என்பதை நாம் மறுத்தற்கில்லை. எனினும், முழுக்க முழுக்க ஆங்கிலவழிக் கல்வி பயின்ற அனைவருக்கும் இன்று தகவல் தொழில்நுட்பம் சார்ந்த துறைகளில் வேலை வாய்ப்புக் காத்திருக்கவில்லை என்பதும் உண்மை. இந்த இருபத்தோராம் நூற்றாண்டின் ‘ஐ.டி.’ பரபரப்பைத் தாண்டி, பத்து பதினைந்து ஆண்டுகள் பின்னோக்கிப் பார்த்தால், தமிழ்வழிக் கற்றதாலேயே அவர்கள் அனைவருக்கும் வேலைவாய்ப்பு நழுவிச் சென்று விடவில்லை என்பது தெரியும். ஏன், இன்றைய சூழலில்கூடக் தமிழ்வழிப் பயின்றவர்களில் எத்தனையோ பேர் தகவல்தொழில்நுட்பத் துறைகளில் முத்திரை பதித்து வருகிறார்கள் என்பதில் மாற்றுக் கருத்து இருக்கவியலாது.

விடுதலை :

தகவல் யுகத்தின் ‘ஒருதலை’க்கும் ‘மறுதலை’க்கும் இடையில் இன்று ‘விடுதலை’’யை எதிர்நோக்கித் தடுமாறிக் கொண்டுள்ளது தமிழ். இத்தகைய சூழ்நிலையில், தமிழில் மாற்றங்களை மேற்கொள்ள வேண்டியது அவசியமா? அப்படி அவசியமானால், எத்தகைய மாற்றங்கள்? என்ற கேள்விகளை நாம் சந்திக்க வேண்டியுள்ளது. அதற்கு உதவியாகச் சில தெளிவுகளை நாம் இங்கே தொகுத்துக் கொள்ளலாம்.

முதலாவது :

தகவல் தொழில்நுட்ப வளர்ச்சிக்கோ ஆங்கில மொழிக்கோ நாம் எதிரிகள் அல்ல. எனினும் இவை இரண்டுமே அவற்றின் உண்மையான பயன்பாட்டுக்கு அதிகமாக மிகைப்படுத்தப்படுகின்றன என்பது நம் கருத்து. சில சமயங்களில், தேர்தல் காலங்களில் ஒரு கட்சிக்குச் சார்பாக ‘அலை’ வீசுவதைப் போலவே இந்தத் ‘தகவல் தொழில்நுட்ப _ ஆங்கில’ அலையும். அது அடங்கி ஓயுமா நீடித்துப் பாயுமா எனத் தெரியாமல், தற்சமயம் வீசும் அலையால் அடித்துச் செல்லப்பட்டு மொழியையும் அதற்கு அடகுவைப்பதைவிட, அந்த அலையின் நிலைதிறனை ஆய்வுக்குட் படுத்தி, அது செல்லும் திசையைத் தீர்க்கதரிசன மாய்க் கணித்து, தொலை நோக்குப் பார்வையுடன் மாற்றங்களைச் செய்வதையே நாம் வலியுறுத்துகிறோம். காற்றுள்ளபோதே
தூற்றிக் கொள்ளலாம்தான். ஆனால், ஆடிப் பட்டம் தேடி விதைப்பது அதனினும் சாலச் சிறந்தது.

இரண்டாவது :

தகவல் தொழில்நுட்பத்திற்கு ஏற்பத் தமிழ் மொழியைச் செப்பனிட்டுவிட்டால்10 மட்டும் தற்போதுள்ளஆங்கில ஆதிக்கமோ ஆங்கில மோகமோ குறையப் போவதில்லை. ஏனெனில், இது மொழியையும் கடந்த அனைத்துலகப் பொருளாதார அரசியல். உலகச் சந்தையைக் கட்டுப்படுத்தும் நாட்டின் மொழி உலக அரங்கில் கொடிகட்டிப் பறப்பதில் வியப்பில்லை. எனவே, இதைத் தமிழ் மொழிக்கான சவால் என்பதைவிட, தமிழினத்திற்கான சவாலாகவே காணவேண்டும். உலகச் சந்தையில் தமிழர்கள் சாதித்தால் உலக அரங்கில் தமிழ் மொழியும் சாதிக்கும்.

மூன்றாவது

‘கல்தோன்றி மண் தோன்றாக் காலத்தே....’ எனத் தொடங்கி மேடையிலே வீராவேசம் கொப்பளிக்க முழங்குவது தமிழரின் ஒரு முகம் என்றால், பிற இனத்தாரோடு தன்னை ஒப்பிட்டு, சுய கழிவிரக்கம் கொண்டு தாழ்வு மனப்பான்மையில் உழல்வது மற்றொரு முகமாக உள்ளது. இதன் விளைவுதான் ஆங்கிலத்திற்கு அபரிமிதமான முக்கியத்துவம் தந்து, எங்கே பந்தயத்தில் நாம் தோற்றுவிடுவோமோ என்ற பயத்தில் மொழியைக்கூட விட்டுக்கெ(£)டுக்கத் தயாராயிருக்கும் போக்கு.

இந்தக் கிடுக்கிப் பிடியிலிருந்து விடுபட வேண்டுமானால் நாம் கேட்க வேண்டிய தலையாய கேள்வி, “தமிழில் என்ன சீர்திருத்தங்களை மேற்கொள்ளலாம்?’’ என்பதல்ல, “உலக அறிவுக் கருவூலத்தில் எவற்றையெல்லாம் தமிழுக்குக் கொண்டு வந்துள்ளோம்?’’ என்பதே.

நான்காவது :

தமிழருக்குச் சொந்தமான நிலத்தில் தமிழகத்தில் அனைத்துத் துறைகளிலும் தமிழே ‘ஆட்சி’ மொழியாக நிலவவேண்டும் என்று கோரிக்கை வைத்தாலே ‘மொழி வெறியர்’ என்ற பட்டம் சூட்டப் பெறும் அவலம் வேறெந்தத் தேசிய இனத்திலும் காண முடியாதது. ஒரு மொழி எப்போது ‘ஆளும்’ என்றால், அம்மொழிவழிக் கற்றோருக்கு வேலைவாய்ப்பு உத்திரவாதம் தொடங்கி அனைத்துத் துறைகளிலும் முன்னுரிமை வழங்கப்படும்போது எனலாம்.

இதற்கென உறுதியான அரசியல் தீர்மானம் எடுத்து, அத்தீர்மானத்தை நடைமுறைப்படுத்தும் திராணி ஒரு அரசுக்கு இல்லையென்றால், அந்த மொழி ‘ஆளுகிறது’ என்பதில் அர்த்தமில்லை. வாழாத, வாழவைக்காத மொழி ஆளுவது எப்படி? சோத்துக்கு உத்திரவாதம் தராத எந்த மொழியும் செத்துப் போகும்; செத்துத்தான் போக வேண்டும்.

ஐந்தாவது

மாற்றத்தை விழையும் எந்தவொரு தேடலுக்கும் அடிநாதமாக விளங்குவது, ‘யாரை முன்வைத்து மாற்றம்?’ என்ற கேள்வி. ‘எத்தகைய மாற்றங்களால் தகவல் தொழில்நுட்ப புரட்சிக்குத் தமிழால் ஈடுகொடுக்க முடியும்?’ என்ற ஆர்வத்தைவிட, “தமிழ் எழுதப்படிக்கத் தெரியாத தமிழரின் எண்ணிக்கையைக் குறைக்க இதனால் முடியுமா? என்ற அக்கறையே நம்மை வழிநடத்தும் உந்துசக்தியாகத் திகழ வேண்டும்.

குறிப்புகள்

1. தட்டச்சு பிரபலமாக இருந்த காலத்தில் அரசு அலுவலகங்களில் ஓங்கி ஒலித்த விமர்சனம் இது. ஆங்கிலத்தோடு ஒப்பிடுகையில் தமிழில் தட்டச்சு செய்ய அதிக நேரமானது உண்மைதான். எனினும் நமது அரசு அலுவலகங்களின் செயல்பாடுகளைப் பார்த்தால், ‘விரைவு’ என்பது வேலை நேரத்தின்போது அலுவலர்களின் ஓய்வு நேரத்தை அதிகரிக்க உதவியிருக்கலாமே தவிர, சொல்லிக் கொள்ளும் படியாக வேறென்ன பயன் விளைந்திருக்க முடியும்?

2. தமிழில் மொத்தம் 247 எழுத்துகளைக் கற்க வேண்டியுள்ளது என்ற மலைப்பில் நியாயமில்லை. ஏனெனில், தற்போதுள்ள எழுத்து வடிவங்களின்படியே நாம் கற்பது மொத்தம் 72 குறிகள் மட்டுமே: உயிர் 11 (‘ஊ’ என்ற எழுத்தில் ‘உ’ மேல் உள்ள ‘ள’ ‘ஒள’ இலும் வருகிறது), ஒற்றுநீங்கிய மெய் 17 (‘ள’ என்ற எழுத்து ‘ஒள’ இல் வந்துவிடுவதால்),

ஒற்று 1, ஆயுதம் - 1, உயிர்மெய்யில் உகர ஊகார வரிசை நீங்கலாக உயிர்க்குறிகள் _ 6, உகர ஊகார உயிரமெய் 36. ஆக, நாம் இதுவரை கற்றவை 247 ஒலிகள் (247 எழுத்துகள் அல்ல), 72 குறிகள், ஒலிகளிலும் கூட, புழக்கத்தில் இல்லாமல் அட்டவணை யோடு நின்றுள்ள உயிர்மெய் ஒலிகள் பல (எடுத்துக்காட்டாக, ஙகர மற்றும் ஞகர வரிசைகளில்).

3. அறிவியல், பொறியியல், மருத்துவம் இன்ன பிற துறைகளிலெல்லாம் கஷ்டப்பட்டுக் கற்றுக் கொள்கிற ‘ஐ.டி. தலைமுறை’ ஏன் தமிழை மட்டும் போகிற போக்கில் கற்றுக்கொள்ள நினைக்கவேண்டும்-? இது ஒருபுறம் இருக்க, தமிழாக்கம் மற்றும் தமிழ்க் கலைச்சொல்லாக்கம் குறித்த ‘மரபு’ இலக்கண விதிகளை நாம் மறுபரிசீலனைக்கு உட்படுத்த வேண்டிய காலகட்டத்தில் இருக்கிறோம் என்பதையும் குறிப்பிட்டாக வேண்டும்.
அடுத்து, பிடிவாதமாக அனைத்துப் பிறமொழிக் கலைச்சொற்களையும் மொழியாக்கம் / மொழி பெயர்ப்புச் செய்வதை விடுத்து, ‘தமிழ் ஒலிகளை’ உடைய / தமிழுக்கு இசைவுடைய பிறமொழிச் சொற்களையேனும் அப்படியே (அல்லது சிறிதளவு மாற்றங்களுடன்) பயன்படுத்துவதை ஏன் ஏற்கக்கூடாது? எடுத்துக் காட்டாக: மேயர், சைக்கிள், நாவல், கேபிள், செல் முதலியன.

4. ஆங்கிலம் கற்றுக் கொள்வது அப்படியன்றும் எளிதானதல்ல. பேரெழுத்து, சிற்றெழுத்து என்ற இருவகை வடிவங்கள். இதிலும், அச்சு வடிவம், கையெழுத்து வடிவம் என்று மேலும் இருவேறு வடிவங்கள். ஆக 52 குறிகளை எழுதவும் 104 குறிகளை அடையாளம் காணவும் கற்றாக வேண்டும் (26 அல்ல). இது தவிர, ஆங்கிலத்தில் எழுதும் எழுத்துக்கும் ஒலிக்கும் பல சமயங்களில் தொடர்பே இருப்பதில்லை.

ஒரே எழுத்து சூழலுக்கேற்பப் பல ஒலிகளை எழுப்பும் போதாததற்கு, இம் மொழியில் விதிகளைவிட விதிவிலக்குகளே அதிகம். இவற்றையெல்லாம் கடும் பயிற்சியால்தான் கற்றுக்கொள்ள முடியும். அத்தோடு, பிற மொழிகளில் உள்ள ஒலிகள் பல (இன்னும்) ஆங்கிலத்தில் இல்லை. உலக மொழிகளின் அனைத்து ஒலிகளையும் உள்வாங்கிய மொழி எதுவும் இன்னும் உருவாகவில்லை.

5. நுனிநாக்கு ஆங்கிலம் வேலை வாய்ப்புக்கு உத்திரவாதமல்ல, திறமைக்கும் ஆங்கில அறிவுக்கும் நேரடித் தொடர்பு ஏதுமில்லை. அதே போல, சரளமான ஆங்கிலப் பேச்சுக்கும் ஆங்கில மொழிப் புலமைக்கும் தொடர்பு இருக்க வேண்டிய அவசியமுமில்லை. மிஞ்சிப் போனால், ஆங்கிலப் பேச்சுத்திறனால் ‘கால்_சென்டர்’ நிறுவனங்களில், ‘போன் பாய்’ வேலை கிடைக்கக்கூடும் கவுரவமான சம்பளத்தில்.

6. சமீபத்தில் வெளிவந்த திரைப்படம் ‘கற்றது தமிழ்’ ஆங்கிலம் பேசத் தெரிந்தவர்கள் ‘ஐ.டி.’ துறையில் அதிகம் சம்பாதிக்கிறார்கள் என்ற பொறாமை உணர்ச்சியைக் கொட்டித் தீர்த்ததைத் தவிர, இந்தப் படம் தமிழ் கற்றவர்களின் பிரச்சினையை ஊறுகாய் மாதிரிகூடத் தொட்டுக் கொள்ளவில்லை.

7. உலகத் தமிழர்களில் ஏறத்தாழ 20 விழுக்காட்டினர் தமிழகத்திற்கு வெளியே உலகின் பல நாடுகளில் வாழ்ந்து வருகிறார்கள். தமிழ் தேசிய மொழியாக அங்கீகரிக்கப்பட்டுள்ள ஸ்ரீலங்கா போன்ற ஓரிரு நாடுகள் தவிரப் பிறவற்றில் உள்ள தமிழ் வழி வந்தோரைப் பொறுத்தமட்டில், தமிழுக்கும் அவர்கள் வாழ்க்கைக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. எனினும் அவர்கள் தமிழைக் கற்றுக் கொள்ள ஆசைப்படுவது, தங்கள் பூர்வீகப் பண்பாட்டோடு கொண்டுள்ள தொடர்பு அறுந்து
விடக் கூடாதே என்ற ஆதங்கத்தால்தான். தமிழ் மீது கொண்ட உண்மையான அக்கறையால் அவர்களில் சிலர் முன்வைக்கும் சீர்திருத்தங்கள் நிச்சயம் நம் கவனத்துக்குரியவை. ஈ.வெ.ரா.வுக்கே எழுத்துச் சீரமைப்பில் ஆர்வம் வரக்காரணம் சிங்கப்பூர்த் தமிழரின் சீரமைப்பு முயற்சியே.

8. ‘அறிவு _ இடைவெளி’ என்ற தொடரை நாம் எச்சரிக்கையுடன் அணுகவேண்டும். தகவல் தொழில் நுட்பத்தால் பல்வேறு தகவல்களைச் சடுதியில் திரட்டிக்கொள்ளும் வாய்ப்புக் கிடைக்கிறது. இந்தத் ‘தகவல் பெருக்கம்’ வேலைவாய்ப்பில் முன்னுரிமை பெற உதவுகிறது என்பதில் ஐயமில்லை. ஆனால் இதை ‘அறிவு’ என்று கொள்வது அபத்தமாக முடியும். ‘அறிவு _ இடைவெளி’ என்ற தொடர் பரவலாகப் பயன்பாட்டில் இருந்தாலும், ‘தகவல்_இடைவெளி’ என்பதே சரியானதாயிருக்கும்.

9. இதுவரையிலான மொழிச் சீர்திருத்தப் பரிந்துரைகள் பெரும்பாலும் தட்டச்சு, ‘லெட்டர் பிரஸ்’ ஆகியவற்றின் அடிப்படையில் முன்வைக்கப்பட்டவை. ஆனால் அவை இப்போது காலாவதியாகிவிட்ட தொழில் நுட்பங்கள். உருவாகிவரும் ‘டிஜிடல்’ யுகத்தில் மொழியின் வரிவடிவத்திற்கான தேவை அருகிவர, ஒலி வடிவமே முன்னுரிமை பெற்று வருகிறது. நாவல்கள், கவிதைகள் போன்ற படைப்பிலக்கியங்கள் வாசிக்கப்பட்ட குறுந்தகடு வடிவமேற்கத் தொடங்கியுள்ளன.

பேசினாலே வரிவடிவத்திற்கு மாற்றிவிடும் மென்பொருள்கள் ஏற்கெனவே பல மொழிகளில் புழக்கத்தில் உள்ளன. தமிழிலும் அது விரைவில் பரவலாகக் கூடும். எனவே, தமிழ் எழுத்துகளை விரைவாக எழுத முடியவில்லை என்ற குற்றச்சாட்டுக்கு இனி இடமிருக்காது_அதைக் கணினி பார்த்துக்கொள்ளும். எதிர்காலத்தில், வரிவடிவக் காட்சியை அடையாளம் கண்டு கொள்ளும் அளவுக்கு மட்டும் எழுத்தறிவு இருந்தால் போதுமானதாக இருக்கும் அத்தகையதொரு சூழ்நிலையில் எழுத்துச் சீர்திருத்தத்துக்கே தேவையிருக்காது.

10. தற்போதைய தகவல் தொழில்நுட்பட்திற்கு ஏற்ப மொழியைச் செப்பனிடுவது பற்றிப் பேச நேர்ந்துள்ளதுகூட நம் அரசுகளின் மெத்தனத்தின் விளைவுதான் எனக் கணினி வல்லுநர்கள் பலரும் சுட்டிக் காட்டுகிறார்கள். பன்னாட்டு அமைப்பான ‘யுனிகோடு கன்ஸார்ட்டியம்’ என்ற அமைப்பில் தக்க அறிவியல்பூர்வமான காரணங்களை முன்வைத்து, எல்லாத் தமிழ் எழுத்து களையும் குறியடை செய்வதற்குத் தேவையான குறிவெளியைப் பெறத் தவறியதே, தற்போது தமிழ் எழுத்துரு பயன்பாடு தொடர்பான மென்பொருளாக் கத்தில் சிக்கல்களை எதிர் கொள்ளக் காரணம்.

11. உலகின் பணக்கார நாடுகளின் பட்டியலில் உறுதியான இடம் பிடித்திருக்கும் ஜப்பான் நாட்டு மொழியில் தமிழைவிடப் பல மடங்கு அதிகமான எழுத்துகள் உள்ளன. எனினும் அந்நாட்டின் வளர்ச்சிக்கு அவர்கள் மொழி ஒன்றும் பெரிய முட்டுக்கட்டையாக அமைந்து விடவில்லை. இன்று உலகின் ஏழு பணக்கார நாடுகளில், அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா ஆகிய மூன்று நாடுகள் தவிர ஏனைய நான்கிலும் (பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான்) ஆங்கில ஆதிக்கமில்லை என்பதைக் கவனிக்க.

12. வளர்ந்து வரும் அறிவியல் / சமூக அறிவியல் துறைகளில் நாளுக்கொரு கண்டுபிடிப்பு நிகழ்ந்து வருகிறது. கண்டுபிடிப்புகள் உடனுக்குடன் காப்புரிமை பெற்று, நுகர்வுக்கேற்ற வடிவம் தாங்கிச் சந்தைக்கும் வந்துவிடுகின்றன. இங்குத் தமிழருடைய பங்களிப்பு என்ன? ஆண்டுதோறும் வெளியிடப்படும் நொபல் பரிசு பெறுவோர் பட்டியலில் இடம் பிடிக்கும் தமிழர் எத்தனை பேர்? இதுவரை இயலவில்லை என்றால், அதற்கு ஏதுவான அரசியல்_பொருளாதாரச் சூழல் இங்கில்லை என்பதுதானே அர்த்தமாக முடியும்? இதற்குப் பொறுப்பேற்கப் போவது யார்?

13. ‘தமிழில் புராண இதிகாசங்களைத் தவிர வேறு என்ன இருக்கிறது?’ என்று நையாண்டி செய்வார் ஈ.வெ.ரா. தமிழில் போதிய (அறிவியல் / சமூக அறிவியல்) நூல்கள் இல்லாத காரணத்தால்தான் அனைத்து நிலையிலும் தமிழ்வழிக் கல்வியை நடைமுறைப்படுத்த முடியாமல் நொண்டிக் கொண்டிருக்கிறோம். மேனிலைப் பள்ளிப் படிப்புவரை தமிழ்வழி பயின்றுவிட்டுக் கல்லூரிக்குச் செல்கையில் ஆங்கிலவழியிலேயே மிகப்பெரும்பாலும் கற்கவேண்டியுள்ளது என்பதால், பள்ளியிலேயே ஆங்கிலவழி பயின்றவர்களுக்கு அது பெரும் வசதியாகிவிடுகிறது. எனவே, பொருட் செலவையும் பொருட்படுத்தாது தங்கள் பிள்ளைகளை ஆங்கிலவழிக் கல்வியில் சேர்த்து விடும் பெற்றோருடைய மனநிலையைப் புரிந்து கொள்ள முடிகிறது.

14. தமிழ்வழிக் கற்றோருக்கு வேலைவாய்ப்பு உத்திரவாதம்கூட வேண்டாம். முன்னுரிமையாவது தரப்படுகிறதா என்றால், அதுவும் இல்லை, அவ்வளவு ஏன், ஆட்சியின் தலைமையிடமான தலைமைச் செயலகத்தில் குறைந்த பட்சம் தமிழ் பேசத் தெரியாதவர்களுக்கு இடமில்லை என்று சட்டமியற்ற முடியுமா? இப்படியொரு கேள்வியைக் கேட்ட உடனே தேசிய ஒருமைப்பாட்டு உணர்வு பீறிட்டுக் கிளம்பிவிடும். 1978லேயே அரசு ஊழியர்கள் தமிழில் ஒப்பமிட வேண்டும் என அரசாணை பிறப்பிக்கப்பட்டுவிட்ட போதிலும், அதை மீறுபவர்களை எதுவும் செய்ய இயலா நிலையிலேயே இன்றுவரை அரசு உள்ளது.

15. எனினும், தொழில்நுட்ப ஆர்வமும் சமூக அக்கறையும் ஒன்றுக்கொன்று முரணான எதிர்மறைகளாக இருக்க வேண்டியதில்லை. பெரும்பாலும் அவை ஒத்த விளைவுகளுக்கே இட்டுச் செல்கின்றன.
.
வாசகர் கருத்துக்கள்
muhilanban
2008-02-20 02:50:00
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

i accept all ur thoughts. what the exact way we to proceed for rectifying all these faults?

puravi
2008-02-20 04:04:00
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

ஐயா வணக்கம் 
நமது தாய் மொழியை செரிவூட்ட தங்களது யோசனைகள் அனைத்தும் சிறந்தவை. நான் தற்பொழுது ஜெர்மனி யில் வேலை செய்து வருகிறேன். என்னுடன் வட நாட்டு காரர் ஒருவரும் வேலை செய்கிறார். நான் ஜெர்மனியார்களிடம் பேசுவதை விட அவர் நன்றாக பேசுகிறார். அதனால் எப்பொழுதும் அவருடன் கலந்துரையாட விரும்புகின்றனர். நானோ தமிழ் வழி கல்வியில் படித்து ஆங்கிலம் பயின்று வந்து இங்கு தடுமாருகின்றேன். நான் பள்ளியில் கல்வி முடித்து கல்லூரி யில் சேர்ந்த பொழுது tamil medium students என்றே எங்களது ஆசிரியர்கள் எங்களை விளித்தனர். எங்களுக்கு எதிர்காலம் இல்லை என்றே எங்களுக்கு பயிற்றுவித்தனர். அந்த கால கட்டத்தில் நான் தற்கொலை செய்ய சென்றவன் என்பதை கூற விரும்புகிறேன். தமிழ் வழியில் கற்றவனுக்கு தமிழ்நாட்டிலே தலைகுனிவு என்பது உண்மை நிலை. பள்ளியில் அதிக மதிப்பெண் எடுத்து வந்தும் அதை வெளிக்காட்ட இயலாமல் கல்லூரியில் கூனி குறுகி அவமான பட்டு இருக்கிறேன். பிறகு ஒரு சென்னை நண்பன் கற்று கொடுத்ததில் தேறினேன். இந்த நிலை இப்பொழுது இன்னும் அதிகம். நமது நிலை நமது பிள்ளைகளுக்கு வரக்கூடாது என்று தான் நாங்கள் எங்கள் பிள்ளைகளை அதிக பணம் கட்டியாவது ஆங்கிலப் பள்ளியில் சேர்கிறோம். நானும் ஆத்திசூடி பயின்று வந்தவன்தான். பேச்சு மொழிக்கு தமிழ், பிழைப்புக்கு ஆங்கிலம் என்பதை வலியுறுத்தலாம். இல்லத்தில் கட்டாய தமிழ் என்று முடிவு எடுத்து கொள்ளலாம் என்பதே எனது கருத்து.