தோழர்களே, இந்த புத்தக வியாபார நிலையத்தின் துவக்கவிழா உரை ஆற்றுவதில் நான் மிகுதியும் மகிழ்ச்சியடைகிறேன். தோழர் சண்முக வேலாயுதம் அவர்கள் என்னை வேண்டிக் கொள்ளும்போது இப்புத்தக வியாபார நிலையம் சுயநல இலாபத்தை பண வருவாயை உத்தேசித்து துவக்கப்பட்டதல்லவென்றும் நம் இயக்க நூல்களையும், பத்திரிகைகளையும் துண்டுப் பிரசுரங்களையும் மக்களுக்குப் பரப்ப வேண்டும் என்ற பொது நல நோக்கத்தையே முக்கியமாகக் கருதி துவக்குவதாகவும் சொன்னார். இதைக் கேட்டு நான் மிகுந்த மகிழ்ச்சியடைந்தேன். இந்தப் பணியாற்றுகிறவர்கள் நமது நாட்டில் இதுவரை எங்கும் துணிந்து இம்மாதிரி முன் வந்ததில்லை. முன் வந்தாலும் இலாபத்துக்காக அதாவது, ஏதாவது ஒரு இயக்கத்துக்காகவாவது ஏதாவது ஒரு கொள்கைக்காகவது, ஏதாவது ஒரு மனிதனுக்காவது செல்வாக்கு ஏற்பட்டால் அந்தப் பெயரைச் சொல்லி கொண்டு, அந்தக் கொள்கையைச் சொல்லிக் கொண்டு, அந்த மனிதனைப் பின்பற்றுவதாகக் கூறிக்கொண்டு அவன் பெயரைச் சொல்லிக் கொண்டு வயிறு வளர்க்க முன் வருபவர்களும், தன் வாழ்வை அமைத்துக் கொள்பவர்களும் அந்த இயக்கத்தை, கொள்கையை, மனிதனை வைவதில் செல்வாக்கு ஏற்பட்டால் உடனே வயிற்றுப் பிழைப்புக்கும் வாழ்க்கை நலத்துக்குமாக அவைகளை வைத்துக் கொண்டு வயிறு பிழைப்பவர்களும் அல்லது இந்தக் காரியங்களுக்குக் கூலி பெற்றுக் கொண்டு தொண்டர்களாக இருப்பவர்களும் எங்குமுண்டு என்றாலும் நம் நாட்டில் அதிகம். ஏனெனில், இங்கு மனிதத் தன்மையை உணர்ந்த மனிதத் தன்மையில் கவலை கொண்ட மக்கள் அரிது. அதாவது தங்களுடைய சுய இலாப நஷ்டம், பெருமை, சிறுமையே இலட்சியமென்பதில்லாமல் பொதுநலக் கொள்கைகளுக்காக என்று வெளிவந்து தொண்டாற்றும் மக்கள் மிக மிக அரிதாகும்.

(ஈரோட்டில் 22.01.1947ல் நடந்த புத்தக வியாபார நிலையத்தின் துவக்கவிழாவில் தந்தை பெரியார் அவரகளின் சொற்பொழிவு)

உலகமயமாக்கல் என்னும் வர்த்தக கருத்தாக்கம் இந்தியாவில் WTO எனப்படும் உலக வர்த்தக நிறுவனத்தால் (World Trade Organisation) செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் பல துறைகளை சார்ந்த ஒப்பந்தங்களைக் கொண்டுள்ளது. உலக வர்த்தக நிறுவனத்தில் உறுப்பினராக உள்ள இந்தியா இத்தகைய ஒப்பந்தங்கள் அடிப்படையில் பல சட்டங்களை இயற்றியும், மாற்றியும் தாராளமயமாக்கல், தனியார் மயமாக்கல் போன்ற கொள்கைகளை நடைமுறைப்படுத்தி வருகிறது.

இவ்வாறு தொடர்ச்சியாக பல புதிய சட்டங்கள் இந்தியாவில் இயற்றப்பட்டு வருகின்றன. அவற்றில் பலவகையில் மாற்றப்பட்டும், புதிதாக உருவாக்கப்பட்டும் வந்துள்ள சட்டங்கள் என அறிவுச் சொத்துரிமை சட்டங்களை (Intellectual Property Laws) குறிப்பிடலாம். உலக நாடுகளிடையே வர்த்தகம் பெருகவும், இந்தியா போன்ற நாடுகள் அமெரிக்காவுடனான வர்த்தகத்தை அதிகரிக்கவும், அறிவு சொத்துரிமை சட்டங்கள் அவசியமானது என்று கூறப்படுகிறது. மேலும் ஏழை நாடுகளில் தொழில் நுட்பம் பெருகவும், சமூக-பொருளாதார தளங்களில் முன்னேற்றம் அடையவும், மற்றும் போலி பொருட்களின் உற்பத்தியை தடுக்கவும் அறிவு சொத்துரிமை அவசியம் என்று உலக வர்த்தக நிறுவனம் கூறுகிறது.

அதே நேரத்தில் அறிவு சொத்துரிமை சட்டங்களால் இந்தியா போன்ற ஏழை நாடுகள் கடுமையாக பாதிப்புக்குள்ளாகும் என்ற அபாயமும் நிலவுகிறது. குறிப்பாக இச்சட்டங்களால் மருந்து மற்றும் உணவு பண்டங்களின் விலை ஏற்றம், பாரம்பரிய செல்வங்களான விதைகள், தாவரங்கள் போன்ற இயற்கை வளங்கள் பன்னாட்டு நிறுவனங்களால் கொள்ளையிடப்படுதல், பன்னாட்டு நிறுவனங்களின் சந்தை ஆதிக்கம் போன்றவை நேரலாம். இந்நிலையில் ஒரு முக்கிய அறிவிப்பு என்ற தலைப்பில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, விடுதலை ஏட்டில் கீழ்க்கண்ட அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

தந்தை பெரியார் அவர்கள் ஏடுகளில் எழுதிய எழுத்துகள், பேச்சுகள், பேட்டிகள் வெளியீடுகள் அத்தனையும் அவரால் 1935ல் உருவாக்கப்பட்டு, 1952ல் பதிவு செய்யப்பட்ட பெரியார் சுயமரியாதைப் பிரசார நிறுவனத்துக்கு மட்டுமே சொந்தமான அறிவுசார் உடைமைகளாகும் - சொத்துகளாகும். இவற்றை அச்சில் வெளியிட்டு விளம்பரமும் வருவாயும் தேடத் தனிப்பட்ட சிலரும் சில இயக்கங்களும் பதிப்பகங்களும் முயலுவதாகத் தெரியவருகிறது. அப்படிச் செய்வது சட்ட விரோதமாகும். மீறி அச்சிட்டு நூலாகவோ, மற்ற ஒலிநாடா குறுந்தகடுகளாகவோ வெளிவந்தால், அவர்கள் மீது சட்டபூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

இந்த அறிவிப்பைத் தொடர்ந்து பெரியார் திராவிடர் கழகம் மீது திராவிடர் கழகம் தொடர்ந்துள்ள அறிவு சொத்துரிமை மீறல் வழக்கு தமிழகததில் பெரியார் பற்றாளர்களிடையே பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. கல்வியை சமூகத்தில் ஒரு குறிப்பிட்ட வகுப்பினருக்கு மட்டுமே உரிமையானது என்ற பார்ப்பனிய கருத்துக்களை எதிர்கொண்டு அழித்த பெரியாரின் கருத்துக்களுக்கு பார்ப்பனிய தொனியிலேயே சிலர் உரிமை கோருவதும், பிறர் அதை வெளியிடகூடாது என்று தடுப்பதும் தமிழ் உணர்வு கொண்டோரிடம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சமூக பொருளாதார ஏற்றத் தாழ்வற்ற சமதர்ம சமூகம் படைக்கத் தடையாக உள்ள சாதியம், மதவாதம் போன்றவற்றை உடைத்தெறிய வேண்டும் என்பதையே பெரியார்ப் பார்வையாக கொள்ளலாம். உலகமயமாக்கலில் சமூக பொருளாதார ஏற்றத் தாழ்வு அபாயகரமான நிலையை எட்டியுள்ள சூழலில் பெரியார் பார்வையில் இத்தகைய சட்டங்களை பற்றி ஆராய வேண்டியுள்ளது.

ஏனென்றால் சமூக பொருளாதார ஏற்றத் தாழ்வுகளை நியாயப்படுத்தும் மதரீதியான தத்துவங்களை மட்டுமல்ல, சமதர்மத்திற்கு வழிவகுக்காத இந்திய அரசியலமைப்பு சட்டத்தையும் கூட பெரியார் தீவிரமாக விமர்சிக்கவே செய்தார். அதனால்தான் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் முதல் திருத்தமே ஏற்பட்டது. எனவே சட்டத்தில் இருக்கிறது என்பதற்காக எதையும் ஏற்காமல், அது மக்களின் நலனுக்கு ஏற்புடையதா என்ற பெரியார் பார்வையின் அடிப்படையில்தான் இந்த அம்சங்களைப் பரிசீலிக்க வேண்டும்.

அறிவு சொத்துரிமை என்றால் என்ன?

மனித மூளையில் இருந்து தோன்றும் எண்ணங்களை சொத்தாகக் கருதலாம் எனவும், அவ்வாறு எண்ணங்கள் கண்டுபிடிப்புகளாக, கலை படைப்புகளாக செயல் வடிவம் பெறுகின்ற போது அவற்றை சட்டத்தின் மூலம் பாதுகாக்கலாம் எனவும் அறிவு சொத்துரிமை சட்டங்கள் கூறுகின்றன. அறிவு சொத்துரிமை சட்டங்களை மூன்று முக்கிய கூறுகளாக பிரிக்கலாம்.

கண்டுபிடிப்புகளுக்கு கொடுக்கப்படும் காப்புரிமை (Patent Right)

கலைப்படைப்புகளுக்கு கொடுக்கப்படும் பதிப்புரிமை (Copy Right)

நிறுவனங்கள் வணிக குறியீட்டுக்கான உரிமை (Trade Mark)

அறிவு சொத்துரிமை எனபது ஒருவகையான எதிர்மறை உரிமையாகும் (Negative Right) அதாவது இவை உரிமை பெற்றவரைத் தவிர்த்து மற்ற அனைவரையும் சில/பல செயல்களை செய்யத் தடைவிதிக்கிறது. அறிவு சொத்துரிமை என்பது அறிவியல் வளர்ச்சிக்கு வழிவகுக்கும் என்ற வாதத்தின் மூலம் அறிவு சொத்துரிமை வழங்கப்படுவது நியாயப்படுத்தப் படுகிறது.

அதாவது, ஒரு பொருளுக்கு அறிவு சொத்துரிமை பெற்ற ஒருவர், பிறர் அந்த பொருளை உற்பத்தி / விற்பனை செய்வதைத் தடுக்கும் உரிமையைப் பெறுகிறார். இதன் மூலம் மக்களிடையே போட்டி உருவாகும் என்றும், அதன் மூலம் புதிய பொருட்களை கண்டுபிடிக்க மக்கள் போட்டியிடுவர் என்றும், அதன் பயனாக அறிவியல் தொழில்நுட்பம் வளர்ச்சியடையும் என்றும், இதற்கு அறிவு சொத்துரிமை வழி செய்யும் என்றும் வாதிடப்படுகிறது. இவ்வாறு அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு அறிவு சொத்துரிமை வழிவகுத்ததாக எந்தவித நடைமுறை ஆதாரமோ புள்ளி விவரமோ இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அறிவு சொத்துரிமை என்கிற கருத்தாக்கம் உருவாவதற்கு முன்பாக காப்புரிமை மற்றும் வணிக குறியீடு ஆகியவை தொழில் வள சொத்துகள் (Industrial Property) என்று அழைக்கப்பட்டு வந்தன. பின்பு பதிப்புரிமையும் அவற்றோடு சேர்த்து அறிவு சொத்துரிமை என்று வழங்கப்படலானது.

அச்சு இயந்திரம் கண்டுபிடிக்கப்பட்டதன் பயனாக புத்தக தொழில் விரிவு அடையவே பதிப்பாளர்களின் உரிமையைக் காக்க பதிப்புரிமை சட்டங்கள் ஐரோப்பிய நாடுகளில் இயற்றப்பட்டன. பின்பு தொழில் புரட்சியின் காரணமாக உருவான தொழிற்சாலை முதலாளிகளின் உரிமையைக் காக்க காப்புரிமை சட்டங்கள் தொடர்ச்சியாக பல நாடுகளில் இயற்றப்பட்டன. 18-ஆம் நூற்றாண்டிலேயே காப்புரிமைக்காகவும், பதிப்புரிமைக்காகவும் தனித்தனி மாநாடுகளை மேலை நாடுகள் நடத்தியுள்ளதை வைத்து அறிவு சொத்துரிமையின் வளர்ச்சியை நாம் கணக்கிட்டுக் கொள்ளலாம்.

இப்படி நமக்கு முற்றிலும் அந்நியமான அறிவு சொத்துரிமை சட்டங்களின் வரலாறு இந்தியாவில் 1856ம் ஆண்டில் தொடங்குகிறது. இந்தியாவில் அன்றைய ஆட்சியாளர்களான ஆங்கிலேயர்கள், தங்கள் வர்த்தக நலன்களை பாதுகாக்க காப்புரிமை சட்டத்தை அறிமுகப்படுத்தினர். பின்பு இந்த சட்டம் 1859, 1872, 1883 ஆண்டுகளில் பல மாற்றங்களை சந்தித்தது. இந்த மாற்றங்களை உள்ளடக்கிய ஒரு சட்டம் 1911ம் ஆண்டு நிறைவேற்றப்பட்டது. இந்தியா சுதந்திரம் அடைந்து சுமார் 22 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போதைய காப்புரிமை சட்டம் 1970ல் அறிமுகமானது. அதே போல பதிப்புரிமைக்கான சட்டம் இந்தியாவிற்கு ஆங்கிலேயர்களால் 1914ல் கொண்டு வரப்பட்டது. பின்பு பல மாற்றங்களுடன் தற்போதைய பதிப்புரிமை சட்டம் 1957ல் இயற்றப்பட்டது.

பெரியார் பணியும், பதிப்புரிமையும்

கதை, கவிதை, நாடகம், ஓவியம், பாடல் போன்ற கலை தொடர்பான படைப்பாளிகளுக்கு கொடுக்கப்படுவதே பதிப்புரிமை (Copy Right) எனப்படுகிறது. அவ்வாறு பதிப்புரிமை பெறத்தக்க படைப்புகள் என்று கீழ்கண்டவற்றை பதிப்புரிமை சட்டம் 1957 கூறுகிறது.

இலக்கிய, நாடக, இசை மற்றும் கலை படைப்புகள், திரைப்படங்கள், இசை பதிவுகள்

புகைப்படங்கள், தொலைக்காட்சி ஒலி/ஒளி பரப்பு Software Programme போன்றவை கூட பதிப்புரிமை பெறத்தக்கவை.

ஒரு நபர் பதிப்புரிமை பெறுவதற்கு காப்புரிமை போல பதிவு செய்ய வேண்டிய அவசியம் இல்லை. தன்னுடைய படைப்புகளை பொதுமக்கள் தொடர்புக்கு கொண்டுச் சென்றாலே போதும் அந்த நபர் அப்படைப்புக்கு பதிப்புரிமை பெற்றவராவர். இப்படி பதிப்புரிமை பெற்ற படைப்பை உரியவர் அனுமதியின்றி வெளியிடவோ, மொழிமாற்றம் செய்யவோ இச்சட்டம் தடை செய்கிறது.

உதாரணத்திற்கு ஒரு கதாசிரியர் கதை ஒன்றை வெளியிடுகிறார் என்று வைத்துக் கெள்வோம், அவரே அக்கதைக்கு பதிப்புரிமை பெற்றவர் ஆவார். அக்கதையை அவர் அனுமதியின்றி வேறுயாரும் வெளியிடவோ மொழிமாற்றம் செய்யவோ அல்லது அக்கதையை தழுவி திரைப்படம் தயாரிப்பதையோ இச்சட்டம் தடை செய்கிறது. இவ்வாறு பதிப்புரிமை மீறுவோர் இச்சட்டத்தின் மூலம் நஷ்ட ஈடு கோரலாம். அனுமதியின்றி தயாரிக்கப்பட்ட பொருட்களை கைப்பற்ற நடவடிக்கை எடுக்கலாம்.

இத்தகைய பதிப்புரிமை மேலே கூறிய எல்லா கலைப் படைப்புகளுக்குமே பொருந்தும். மேலும் இந்த பதிப்புரிமையை பதிப்புரிமை பெற்ற நபர் தன் வாழ்நாள் முழுக்கவும் அவர் இறந் பின் அவருடைய வாரிசுகளுக்கு 60 ஆண்டுகளும் பயன்படுத்திக் கொள்ள இச்சட்டம் அனுமதியளிக்கிறது.

பெரியார் தன்னுடைய அரசியல் நுழைவு காலம் தொட்டு பகுத்தறிவு பிரச்சாரத்திற்காக பேசியவையும் எழுதியவையும் பதிப்புரிமைக்கு உரியவைதான். பெரியார் தன்னுடைய பெயரிலான சொத்துக்கள் சுயமரியாதை பிரச்சார நிறுவனத்தின் பெயரில் எழுதி வைத்து விட்டு மறைந்ததால், அவருடைய வாரிசான சுயமரியாதை பிரச்சார நிறுவனத்திற்கே பதிப்புரிமை சட்டப்படி அவருடைய பேச்சுக்களை எழுத்துகளை வெளியிடுவதற்கு உரிமை உள்ளது என்று திராவிடர் கழகம் கூறுகிறது. இதன்படி பார்த்தால் பெரியார் இறந்து 60 ஆண்டுகள் அதாவது 2033 ல் தான் பெரியாரின் படைப்புகளை சுயமரியாதை நிறுவனம் தவிர்த்து வேறு யாரும் வெளியிட முடியும். அதற்குள் பெரியாரின் படைப்புகள் அரசுடைமை ஆக்கப்பட்டால் தான் அவரின் படைப்புகள் விடுதலை பெறும்.

பதிப்புரிமை சட்டப்படி முறையான ஒப்பந்தம் எதுவும் இல்லாதபோது பத்திரிகையில் எழுதியவைகளுக்கு அதன் ஆசிரியரே பதிப்புரிமை உடையவர். தற்போதைய நிலையில் பத்திரிகைகள் தங்கள் பத்திரிகையில் வெளியான அனைத்து படைப்புகளுக்குமான பதிப்புரிமையை தங்களிடமே வைத்துக் கொள்வதற்கான ஒப்பந்தங்களை செய்து கொள்கின்றன. குடியரசு இதழுக்கு இப்படி பதிப்புரிமைக்கான ஒப்பந்தங்கள் இல்லாத போது குடியரசு இதழில் எழுதியவர்களே பதிப்புரிமைக்கு உரியவர்கள். அந்த வகையில் பெரியாரின் எழுத்துக்களுக்கு பதிப்புரிமை பெற சுயமரியாதை பிரச்சார நிறுவனத்திற்கு உரிமை உண்டு.

1983 பகுத்தறிவாளர்கள் கழகத்தின் சார்பில் திருச்சி பெரியார் மணியம்மை இல்லத்தில் சில அறிஞர்களால் தொகுக்கப்பட்ட பெரியார் கருத்துக்களைத்தான் பெரியார் திராவிடர் கழகம் வெளியிடுவதாக கூறப்படுகிறது. அப்படி தொகுப்பட்டவைக்கு எந்த ஒரு பதிப்புரிமை தொடர்பான ஒப்பந்தம் இல்லாதபோது அதற்கு பதிப்புரிமை பெற அந்த அறிஞர்களுக்கே உரிமை உண்டு. ஆனால் தொகுக்கப்பட்டவையில் கூடுதலாக பல ஆயிரம் பக்கங்கள் சேர்க்கப்பட்டுள்ளது. எனவே இது புதியபடைப்பு என்று பெரியார் திராவிடர் கழகம் வாதிடுகிறது. இப்படி சட்ட சிக்கல் பல உள்ள நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பை நீதிமன்றத்திடமே விட்டுவிட்டு அறிவு சொத்துரிமையின் அரசியல் என்ன? பெரியார் பார்வையில் அறிவுச் சொத்துரிமை யாருக்கானது என்று பார்ப்போம்.

அமெரிக்காவின் மிக பெரிய ஆயுதம் - அறிவுச் சொத்துரிமை

1980 களில் IBM, PFIZER, MICROSOFT, BRISTOLMYERS, DU PONT, GENERAL ELECTRIC, GENERAL MOTORS, MONSANTO, ROCKWELL INTERNATIONAL, WARNER COMMUNICATION, JOHNSON@JOHNSON, MERCK, FMC CORPORATION) போன்ற அமெரிக்க பன்னாட்டு நிறுவனங்கள் ஒன்ற் கூடி ADVISORY COMMITTEE FOR TRADE NEGOTIATIONS (ACTN) என்ற குழுவை ஏற்படுத்தினர். உலகெங்கும் வலுவான அறிவுச் சொத்துரிமை சட்டங்களை நிறுவ இந்தக் குழு ஆலோசித்தது. 1981லிருந்து இக்குழுவுக்கு பில்ஸ்சர் என்ற பன்னாட்டு நிறுவனத்தின் தலைமை நிர்வாகி எட் பிராட் தலைவர் பொறுப்பில் இருந்தார். இவருடைய நிறுவனத்தின் மருத்துவ பொருட்களை காப்பி அடித்து பல நிறுவனங்கள் மருந்துகள் செய்ததாக இவர் எண்ணினார். Micro soft நிறுவனத்தின் கணினி மென் பொருள் (Software Program) களை பலர் அனுமதி இல்லாமல் பயன்படுத்துவதைத் தடுக்க உலகெங்கும் பதிப்புரிமை சட்டம் வலுப்படுத்த வேண்டும் என்று அந்த நிறுவனம் கருதியது. குறிப்பாக இந்தியா போன்ற ஏழை நாடுகள் இத்தகைய செயலில் ஈடுபடுவதாகக் கூறப்பட்டது. இவற்றை கட்டுப்படுத்த கடுமையான கட்டுப்பாடுகள் நிறைந்த அறிவுச் சொத்துரிமை சட்டம் அவசியம் என்று இந்த குழு எண்ணியது.

உலகெங்கும் இத்தகைய சட்டங்களை பரப்ப காட் (GATT) கூட்டத் தொடரில் அறிவுச் சொத்துரிமை குறித்தான ஒப்பந்தத்தை முன்வைக்க வேண்டும் என்று USTR என்கிற அமெரிக்க வணிகத் துறையிடம் இவ்வமைப்பு ஆலோசனை வழங்கியது. அந்த ஆலோசனையை ஏற்றுக்கொண்ட அமெரிக்க அரசு 1987 நடந்த காட் மாநாட்டில் வணிகம் தொடர்பான அறிவு சொத்துரிமைக்கான ஒப்பந்தம் (Trade – Related Intellectual Property Rights Agreement) என்கிற புதிய ஒப்பந்தத்தை முன் வைத்தது.

1987ல் துவங்கிய உருகுவே சுற்று (Uruguay Round) என்று அழைக்கப்படும் காட் ஒப்பந்த பேச்சுவார்த்தையில் தான், சில மாற்றங்களுடன் அறிவு சொத்துரிமை ஒப்பந்தத்தை ஏற்றுக்கொள்வது என 1994ல் முடிவானது. மேலும் இந்த காட் கூட்டத் தொடரில் தான் WTO உலக வர்த்தக நிறுவனம் என்னும் புதிய அமைப்பை ஏற்படுத்தவும் முடிவானது. இதன் பயனாக உலக வர்த்தக நிறுவனம் 1995ல் உதயமானது.

இவ்வாறு திட்டமிட்டு அறிவு சொத்துரிமை சட்டங்கள் ஏழை நாடுகள் மீது காட் மாநாட்டின் மூலமாக அமெரிக்காவால் திணிக்கப்பட்டது. அதோடு மட்டும் அல்லாமல் அமெரிக்காவில் வணிக சட்டம் 1974 (Trade Act 1974) என்று ஒரு சட்டம் உள்ளது. இச்சட்டத்தில் பிரிவு 301 அறிவு சொத்துரிமை சட்டங்களை சரியாக நடைமுறை படுத்தாத நாடுகளுடன் வர்த்தகம் செய்துக் கொள்ளத் தடை விதிக்கிறது. ஆக அறிவு சொத்துரிமை சட்டங்களை அமெரிக்க அளவுகோள்படி இயற்றியிருந்தால் மட்டும் அமெரிக்காவுடன் இந்திய வர்த்தக உறவு சாத்தியம். 90-களின் பின் மத்தியில் ஆட்சிக்கு வந்த காங்கிரஸ், பாரதிய ஜனதா இரண்டு தேசிய கட்சிகளுமே அமெரிக்காவுடனான நட்பை விரும்பின. அதன்படி அறிவு சொத்துரிமை சட்டத்தில் தொடர்ந்து பல மாற்றங்களை செய்தன.

அறிவுச் சொத்துரிமை யாருக்கானது

இப்படி நிறுவனங்கள் அறிவு சொத்துரிமை அவசியத்தை வலியுறுத்துவதின் நோக்கம் என்ன? வர்த்தக நிறுவனங்களுக்கு அறிவுச் சொத்துரிமை என்ற பெயரில் ஏகபோக உரிமை தருவதுதான்.

TRIPS ஒப்பந்தத்திற்கு பின் எல்லா துறை சார்ந்த கண்டுபிடிப்புகளுக்கும் காப்புரிமை 20 ஆண்டுகளுக்கு கொடுக்கும் வகையில் இந்திய காப்புரிமை சட்டம் மாற்றப்பட்டது. இதன் படி மருந்து முதல் விவசாயிகளுக்கு தேவையான உரம், விதை, பூச்சி மருந்து வரை அனைத்திற்கும் காப்புரிமை கொடுக்கப்படுகின்றன. இதனால் மருந்துக்கும் உணவுக்கும் அன்றாட அத்தியாவசிய பொருட்களுக்கும் நாம் பன்னாட்டு / இந்நாட்டு நிறுவனங்களை நம்பி இருக்க வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டிருக்கிறோம்.

கணினி மென்பொருளுக்கான 90 சதவீத பதிப்புரிமையை பெற்றுள்ள Microsoft நிறுவனம் தன்னுடைய அனுமதி இல்லாமல் உலகில் கணினி இயங்காது என்று கூறுகிறது. பல மென்பொருளுக்கு பதிப்புரிமை பெற்ற இந்நிறுவனத்தின் அனுமதி இல்லாமல் இந் மென்பொருள்களை ஆய்வு செய்ய முடியாது. அதன்படி இந்நிறுவனத்தின் மென்பொருள்களை நம் பயன்படுத்த முடியுமே தவிர அவற்றை மாற்றுவதையோ மேம்படுத்துவதையே பதிப்புரிமை சட்டம் தடை செய்கிறது.

இதற்கு மாற்றாக Copy LEft என்கிற அடிப்படையில் Linux என்கிற பொதுமக்களுக்கான மென்பொருள் இன்று பரவலாக அறிமுகமாகியுள்ளது. இந்த வகை மென்பொருள் பயன்படுத்துவோரே. தங்கள்தேவைக்கு ஏற்ப அவற்றை மாற்றிக் கொள்ளும் வகையில் இந்த மென்பொருட்கள் அமைக்கப்படடுள்ளது. பெரியார் பார்வை கொண்ட யாரும் இதுபோன்ற Copy Left மக்கள் இயக்கத்தை தான் வலுப்படுத்த எண்ணுவர். கேரள அரசு கூட Linux மென்பொருளை மட்டுமே அரசு அலுவலகத்தில் பயன்படுத்த வேண்டும் என்ற ஆணையிட்டுள்ளது.

TRIPS ஒப்பந்தத்திற்கு பின் இந்திய பதிப்புரிமை சட்டத்தில் தொலைக்காட்சி ஒளிப்பரப்புக்கும் பதிப்புரிமை சட்டப்படி ஒளிப்பரப்பு உரிமை (Broad Casting Right) கொடுக்கப்பட்டது. அதன் பயன் இன்று கிரிக்கெட் விளையாட்டை ஒளிபரப்பு செய்வதற்கு பல ஆயிரம் கோடிகள் விலை நிர்ணயிக்கப்படுவதை நாம் அறிவோம்.

இப்படி நம்மைச் சுற்றியுள்ள எல்லா கண்டுபிடிப்புகளுக்கும் காப்புரிமை, கலை சார்ந்த படைப்புகளுக்கு பதிப்புரிமையும் பெற்றுள்ள நிறுவனங்கள் தன் கட்டுப்பாட்டில் உலகத்தையேம் வைத்துள்ளன. தங்களுக்கு உரிமையான பொருட்களை வேறுயாரும் தயாரிப்பதைத் தடுக்க தங்கள் பொருட்களின் மீது வணிக குறியீடு இடுகின்றனர். இவ்வணிக குறியீடும் ஒரு அறிவு சொத்துரிமை தான். இதற்கான சட்டம் Trade Mark Act 1999 (Trips ஒப்பந்தத்திற்கு பின் பலவாறு மாற்றப்பட்டது) இச்சட்டம் ஒரு நிறுவனத்தில் வணிக குறியீட்டை வேறுயாரும் பயன்படுத்தத் தடை விதிக்கிறது.

பன்னாட்டு/ இந்நாட்டு நிறுவனங்கள் தங்களுடைய பொருட்களின் தரத்தை மேம்படுத்துவதை விட அவற்றை விற்பனை செய்வதற்கான விளம்பரத்திற்கு பல ஆயிரம் கோடிகளை செலவு செய்கின்றன. மக்கள் மனதில் இந்நிறுவனங்களின் வணிக குறியீடு பதிவு செய்யப்படுகிறது. இத்தகைய வணிக குறியீடுகளை கொண்டு அப்பொருளின் தரத்தை நாம் உயர்வானதாகக் கருதுகிறோம்.

தரத்தை நிர்ணயம் செய்வதற்கு இந்திய அரசு தர நிர்ணய சட்டத்தை இயற்றியுள்ளது. இந்த சட்டத்தில் உள்ள தரத்தின் அடிப்படையில் தயாரிக்கப்படும் வணிக பொருட்களுக்கு ISI / BIS என்கிற முத்திரையை இட்டுக்கெள்ள இச்சட்டம் அனுமதிக்கிறது. ஆனால் எல்லா வணிகப் பொருட்களும் இந்த முத்திரையை அவசியம பெற்றிருக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. இதனால்தான் பூச்சி மருந்துகள் உடைய பெப்சி - கோக் எவ்வித தடையும் இல்லாமல் விற்பனை செய்யப்படுகிறது. பெப்சி - கோக் நிறுவனங்களின் வணிக குறியீடு நம் மனதில் பதிய வைக்க பலநூறு ஆயிரம் கோடிகள் செலவு செய்யப்படுகின்றன. இதில் இவை பூச்சி மருந்தை கொண்டது என்பது யார் காதுக்கும் எட்டாமல் போய்விடுகிறது.

பெப்சி - கோக் மட்டும் அல்ல இந்தியாவில் விற்பனையாகும் எந்த பன்னாட்டு நிறுவனங்களின் பொருட்களும் ISI முத்திரை இல்லாதைக் கொண்டு இந்திய தர நிர்ணய சட்டப்படி இவை தயாரிக்கப்படுவதில்லை என்பதை நாம் அறியலாம். தொடர் விளம்பரங்கள் மூலம் இந்நிறுவனங்களின் வணிக குறியீட்டை நம் மனதில் பதியவைப்பது மூலம், ஒருவித நுகர்வு கலாச்சாரம் வளர்க்கப்படுகிறது.

இதைத் தவிர உலக வர்த்தக நிறுவனத்திற்கு பின் இந்தியாவில் இயற்றப்பட்டுள்ள புதிய அறிவு சொத்துரிமை சட்டம்.

பன்னாட்டு நிறுவனங்களுக்கும் பாரம்பரிய பொருட்களை உற்பத்தி செய்ய அனுமதி கொடுக்கும் Geographical Indications of Goods (Registration and Protection) Act,1999.

பொருட்களின் வடிவமைப்புகளுக்கு பதிப்புரிமை வழங்கும் –Design Act, 2000

மின் பொருள் வடிவமைப்புகளுக்கு காப்புரிமை Semiconductor Integrated Circuits Layout – Design Act,, 2000

தாவரம், விதை, மரம் போன்றவற்றிற்கு காப்புரிமை கொடுக்கும் Protection of Plant Varieties and Farmers Right Act, 2001.

ஆக நம்மைச் சுற்றியுள்ள யாவும் அறிவு சொத்துரிமை சட்டத்தின் கீழ் கட்டுப்படுத்தப்படுகின்றன. அக்கட்டுப்பாட்டை நிறுவனங்கள் பெற்றுள்ளன. ஆக நிறுவனமயமாவதற்கே இவ் அறிவு சொத்துரிமை பயன்படும்.

தன்னுடைய வாழ்நாள் முழுவதும் - சமூக மேம்பாட்டிற்கு எதிராக இருந்த இந்திய அரசியல் அமைப்பு சட்டம் உள்பட பல சட்டங்களை எதிர்த்தவர் பெரியார். அத்தகைய பெரியாரை, மக்களை சுரண்டுவதற்கான அறிவு சொத்துரிமை சட்டத்தைக் கொண்டு நிறுவனமயமாக்குவது, பெரியாருக்கு இரண்டாவதாகக் கட்டப்படும் கல்லறை என்றே சொல்ல வேண்டும்.

அறிவு சொத்துரிமை - சில கேள்விகள்

அறிவு என்பதும், (ஆங்கிலக்) கல்வி என்பதும் பலநேரங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. ஆனால் கல்வி சில நேரங்களில் (மட்டும்) அறிவு வளர்ச்சிக்கு பயன்படுகிறது என்பதே அறிவியல் உண்மை. கல்வி கற்றவர் எல்லாம் அறிவுடையவர்கள் ஆவதில்லை. கல்வி பயிலாவதர்கள் அறிவில்லாமல் இருந்து விடுவதும் இல்லை. இதற்கான உதாரணம். தோழர் பெரியார். அறிவு என்பதே உண்மையான சொத்து என்பதில் மாற்றுக் கருத்து இருக்க வாய்ப்பில்லை. ஆனால், இந்த அறிவு எந்த ஒரு மனிதருக்கும் தாமாகவே வந்து விடுவதில்லை. மனிதன் வளரும் சமூகமே அறிவையும் அள்ளித்தருகிறது. கற்கும் திறன் உள்ளவர்கள் விரைவாக கற்கின்றனர். மற்றவர்கள் சற்று பின்தங்குகின்றனர். எனவே ஒரு மனிதன் பெறும் அறிவு, உண்மையில் அவன் வாழும் வளரும் சமூகம் அவனுக்குக் கற்றுக் கொடுத்ததே.

எனவே சமூகத்திலிருந்து பெற்ற அறிவை ஒருவன் தனியுடைமையாக கருதுவானாயின் பெரியாரின் வார்த்தைகளில் அவன் அறிவு - நாணயம் அற்றவனாவான். எந்த ஒரு அறிஞனும் உலகத்தில் இல்லாத ஒரு பொருளை புதிதாக கண்டுபிடிப்பதில்லை. ஏற்கனவே உள்ள பொருளுக்கு ஒரு புதிய பயன்பாடு மட்டுமே கண்டுபிடிக்கப்படுகிறது. இதில் பலரும் முயற்சி செய்தாலும் சமூக அங்கீகாரம் சிலருக்கே கிடைக்கிறது.

உதாரணமாக கம்ப்யூட்டர் ஒரு நாளில் கண்டுபிடிக்கப்படவில்லை. அது அபாகஸ் எனப்படும் மணிச்சட்டத்திலிருந்து படிப்படியாக மேம்பாடு அடைந்தே அதன் இன்றைய நிலையை அடைந்தது. எனவே அறிவைச் சொத்துரிமை என்ற கருத்தாக்கத்தை ஆதரிப்பதே, பெரியார் கொள்கைகளுக்கு எதிரான திசையில் நின்று பார்ப்பனியத்தை ஆதரிப்பதாகும். இயற்றப்பட்ட சட்டம் என்ற நிலையிலும் அறிவுச்சொத்துரிமை சட்டங்களை ஆதரிக்க முடியாது. தடா, பொடா போன்ற கருப்புச்சட்டங்களைப் போல இந்த அறிவுச் சொத்துரிமை சட்டங்களும் விரிவான விவாதங்களுக்கு உட்படுத்தப்பட வேண்டும்.

அறிவுச்சொத்துரிமை அறிவியல் தொழில் நுட்ப வளர்ச்சிக்கு வழிவகுக்குமா?

அறிவுச் சொத்துரிமையில் முதன்மையான காப்புரிமை சட்டம் 1474ல் வெனிஸில் முதல் முறையாக இயற்றப்பட்டது. பின் இங்கிலாந்தில் 1623ல் காப்புரிமை சட்டம் ஒன்று இயற்றப்பட்டது. பின் பதிப்புரிமைக்கான சட்டம் 1710ல் இங்கிலாந்தில் இயற்றப்பட்டது. இருந்த போதிலும் சுமார் 150 ஆண்டுகள் கடந்து 18ம் நூற்றாண்டில்தான் தொழிற்புரட்சி உண்டானது. ஆக அறிவு சொத்துரிமை மூலம் அறிவியல் வளர்ச்சி அடைந்தது என்பது மிகப் பெரிய மோசடி.

மேலும் எவ்வித அறிவு சொத்துரிமை சட்டங்களும் இல்லாத, அனைத்து கண்டுபிடிப்புகளும் தேசத்திற்கே என்று கூறிய முன்னாள் சோசலிச நாடுகள் கடுமையான அறிவு சொத்துரிமை உடைய பணக்கார நாடுகளுக்கு ஈடாக அறிவியல் தொழில்நுட்பத்தில் வளர்ச்சியடையவே செய்தன. எவ்வித அறிவு சொத்துரிமை சட்டங்களும் இல்லாத முன்னாள் சோவியத் ரசியாதான் விண்வெளியில் அமெரிக்காவை வென்றது. இன்றைய சீனா கூட போதிய அறிவு சொத்துரிமை சட்டங்கள் இல்லாத நிலையில் (அமெரிக்காவின் எச்சரிக்கையை மீறி) அறிவியல் தொழில்நுட்பத்தில் சிறந்தே விளங்குகிறது.

இவ்வளவு ஏன்,? ஆரம்ப கால அமெரிக்க காப்புரிமை சட்டம் கூட அதிக அதிகாரம் படைத்தாக அல்லாமல் எல்லோருக்கும் பயன்படும் வகையிலேதான் இருந்தது. ஆக அறிவு சொத்துரிமை சட்டங்கள் இல்லாமலே பல நாடுகள் அறிவியல் வளர்ச்சி அடைந்திருப்பதைக் கண்டபின் அறிவியல் வளர்ச்சிக்கும் அறிவு சொத்துரிமைக்கும் எந்த வகையிலும் தொடர்பும் இல்லை என்பதை நாம் உறுதியாக கூறலாம்.

கண்டுபிடிப்பாளர்களுக்கு, படைப்பாளிகளுக்கு அறிவு சொத்துரிமை அவசியமானதா?

உழைத்தவனுக்கு பலன் வேண்டாமா? என்றும், கண்டுபிடிப்பாளர்களுக்கும் படைப்பாளிகளுக்கும் அறிவு சொத்துரிமை கொடுப்பது அவசியமானது என்றும் சிலர் வாதிடுகின்றனர். உழைத்தவர்களுக்கு பலன் கிடைக்கக் கூடாது என்று நாம் கூறவில்லை. உண்மையிலேயே உழைத்தவர்களுக்குத்தான அறிவு சொத்துரிமை பயனளித்துள்ளதா? என்று கேட்டால் இல்லை என்று தான் சொல்ல வேண்டும். காரணம், இன்று உலகெங்கும் வழங்கப்பட்டுள்ள அறிவுச்சொத்துரிமையில் 90 சதவீதம் பன்னாட்டு நிறுவனங்களிடமே உள்ளன என்பதுதான்.

அறிவு சொத்துரிமையை விற்க முடியும் என்ற அம்சத்தைப் பயன்படுத்தி கண்டுபிடிப்பாளர்களுக்கும், படைப்பாளிகளுக்கும் சிறிய தொகையை கொடுத்துவிட்டு பன்னாட்டு நிறுவனங்கள் இத்தகைய உரிமைகளை வாங்கிவிடுகின்றன. மிகச்சிறந்த உதாரணமாக மைக்கேல் ஜாக்சனின் நிலையைக் கூறலாம். இன்றளவிலும் உலகெங்கும் ஜாக்சனின் பாடல்கள் கேசட்கள் பல லட்சம் விற்பனையானாலும் அவர் கடனாளியாகத்தான் மரணத்தை தழுவினார். காரணம் இவருடைய பாடல்களுக்கான பதிப்புரிமை பன்னாட்டு நிறுவனங்களிடம் இருப்பதுதான். கொள்ளை லாபத்தில் சிறிய அளவு ராயல்ட்டிதான் படைப்பாளிக்கு பல நாடுகளில் கொடுக்கப்படுகின்றன.

ஹேரிபாட்டர் கதாசிரியர் ரோலிங் தான் இதுவரை கொடுக்கப்பட்ட ராயல்ட்டி தொகையில் அதிகம் பெற்றவர். ஆனால் அவரைப் போல எல்லா படைப்பாளிக்கும் உரிய பங்கு கிடைப்பதில்லை. இந்தியாவில் நிலைமை இன்னும் மோசம். சினிமா, இசை பாடல் போன்ற எல்லா கலைகளுக்குமான உரிமைகளும் பதிப்புரிமை சட்டப்படி தயாரிப்பாளருக்கே சொந்தம். இந்தியாவில் புத்தக ஆசிரியர்களுக்கு பதிப்புரிமை என்பது இன்றுவரை எட்டாக்கனியாகவே உள்ளது. அறிவியல் கண்டுபிடிப்புகளைப் பற்றி கேட்கவே வேண்டாம். இவை அனைத்தும் நிறுவனங்களிடமே உள்ளன.

ஆக கண்டுபிடிப்பாளருக்கு காப்புரிமை இல்லை. கலைஞர்களுக்கு பதிப்புரிமை இல்லை. இதுதான் உழைத்தவர்களுக்கு அறிவு சொத்துரிமை செய்யும் நன்மை.

அறிவுச் சொத்துரிமை எதிர்ப்பது அறிவியலை எதிர்ப்பதாகுமா?

அறிவியலுக்கு அறிவு சொத்துரிமை யாரும் வாங்க முடியாது. காரணம் அவை எப்பொழுதும் பொதுவானது. அறிவியல் அடிப்படையிலான தொழில் நுட்பங்களுக்குத்தான் அறிவு சொத்துரிமை வழங்கப்படுகிறது. எல்லா தொழில் நுட்பங்களும் மனிதர்களுக்கு நன்மை அளிக்கும் என்று இல்லை. அறிவியல் அடிப்படையில் அணு ஆற்றல் அமைந்தாலும் மக்களின் உயிருக்குக் கேடானது என்ற வகையில் நாம் அதை எதிர்க்கவேண்டியுள்ளது. மதத்திற்கு எதிராக அறிவியலை முன்வைக்கும் போது, அறிவியலையே மதமாக சிலர் மாற்றி விடுகின்றனர். இந்த போக்கு இடதுசாரிகள், பெரியார்வாதிகள், போன்ற முற்போக்கு பிரிவினரிடையேயும் உள்ளது. அறிவியலுக்கும் அரசியல் உண்டு. அந்த அடிப்படையில் இது யாருக்கானது என்பதைப் பொருத்தே நாம் அறிவியல் தொழில் நுட்பங்களை ஆதரிக்க வேண்டும்.

Pin It