இலங்கையிலிருந்து வந்திருந்த தமிழ் இலக்கியத்தின் முக்கிய படைப்பாளியும் மொழியியல் அறிஞரும் பேராசிரியருமான கார்த்திகேசு சிவத்தம்பியை ஒரு மழை நாளில் மாலை மயங்கி இரவு பூக்கும் வேளையில் சென்னைப் பல்கலைக்கழக விருந்தினர் விடுதியில் சந்தித்தோம். அப்போது அவருடன் இலங்கையில் உள்ள தமிழ்ச் சூழல் குறித்தும் தமிழகத்திலுள்ள தமிழின் நிலை குறித்தும் தமுஎச தலைவர்களில் ஒருவரான சிகரம் ச.செந்தில்நாதனும் கவிஞர் சா. இலாகுபாரதியும் உரையாடினர். அதிலிருந்து ஒரு பகுதி . . .

 ச.செந்தில்நாதன்: நீங்கள் இந்தியாவிற்கு, தமிழ்நாட்டிற்கு வெளியே இருக்கிற இலக்கியவாதி. ஆய்வாளர் என்கிற முறையில் உங்களிடம் ஒரு கேள்வி. எழுத்து சீர்திருத்தம் தமிழுக்குத் தேவை என்பது பற்றி பெரிய அளவில் விவாதம் நடக்கவில்லை என்றாலும் அது பற்றிய குரல் அடிக்கடி ஒலித்துக்கொண்டிருக்கிறது. அது பெரியார் காலத்திலிருந்தே வந்திருக்கிறது. இப்போது அதற்கான தேவை இருப்பதாக எண்ணப்படுகிறது. கணினியுகத்தில் எழுத்து சீர்திருத்தம் தமிழுக்குத் தேவை என்ற கருத்தும் இருக்கிறது. வெளிநாடுகளில் இருக்கக்கூடிய தமிழர்கள் தமிழை சுலபமாகக் கற்கவேண்டும் என்றால் எழுத்து சீர்திருத்தம் தேவைப்படுகிறது. இந்நிலையில், எழுத்து சீர்திருத்தம் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?. . .

கா.சிவத்தம்பி : தமிழினுடைய எழுத்தமைப்பைப் பற்றி பேசுகிறபொழுது முதலில் தமிழ் எழுத்தின் தன்மையைப் பற்றி பேசுவது அவசியம். எழுத்துக்களின் எழுதுநிலைப்பற்றி பேசுகிறபொழுது இரண்டு வகையாக எழுத்துக்களை பிரிப்பார்கள். ஒன்று - அல்ஃபபெட்டிகல் மெத்தட் (Alphabetical method) A,B,C என்கிற மாதிரியான ஒலிகள் மற்றது க, ங . . போல சிலபிக் மெத்தட் (Sylabic method) இந்திய மொழிகளில் பெரும்பாலும் சிலபிக் மெத்தட்தான் உண்டு. மேற்கத்திய மொழிகள்ல ஆல்ஃபபெட்டிகல் மெத்தட் உண்டு. இந்த சிலபிக் இருப்பதினாலே உண்மையில் எங்களுடைய சொற்கள் முப்பதுதான். ஆயுத எழுத்தோடு முப்பத்தி யொன்னு. இது காலத்துக்கு காலம் மாறிக்கொண்டே வந்திருக்கிறது. பிரிண்ட் மீடியம் வந்ததற்குப் பிறகுதான் இது ஓரளவிற்கு நிலை பேறான வடிவத்தைப்பெற்றது. அதைப் பெறுகின்ற அதே காலகட்டத்திலேதான் தமிழ் எழுத்தை எடுத்துச் சொல்வதற்கு சில தொழில் நுட்ப வரையறை இருப்பது உணரப்பட்டது. இதனாலே வீரமாமுனிவர் சில எழுத்துச் சீர்திருத்தங்களைச் செய்தார்.

எழுத்து சீர்திருத்தத்தின் தேவையைப் பெரியாரும் உணர்ந்தார். லை, னை போன்ற சொற்களுக்கு சீர்திருத்தம் வந்து அது இப்போது நடைமுறையில் உள்ளது. தட்டச்சுக்கு வருகிறபோது கூட சார்பெழுத்துக்களை எவ்வாறு எழுதுவது என்பது முக்கியமான பிரச்சனையானது. இரட்டைக் கொம்பை எவ்வாறு போடுவது என்பதும் சில எழுத்தொலிகளை எவ்வாறு தட்டச்சில் பதிவு செய்வது என்பதும் பிரச்சனையாகி அது இப்போதும்கூட உண்டு என்று நினைக்கிறேன். கணினி வந்த பொழுது அதிலும் சில மாற்றங்கள் தேவைப்படுகின்றன. தமிழில் மேலும் சில எழுத்துச் சீர்திருத்தத்தை செய்ய வேண்டும் என்பது ஒரு நியாயப்பூர்வமான கேள்வி. இது சம்பந்தமாக சிந்திக்கிறபோது இதில் உள்ள முக்கியமான பிரச்சனை என்னவென்றால் இதுவொரு Historical cultural problem. (வரலாற்று ரீதியான பண்பாட்டுப் பிரச்சனை)

நீண்ட காலமாக தமிழை இவ்வாறு அடையாளம் பண்ணுகிற ஒரு மரபு உள்ளது. இந்த அடையாளம் பண்ணுகிற மரபை மொழியினுடைய தனித் தன்மையாக பேணுவது உண்டு. இதை நான் ஏன் சொல்கிறேன் என்றால் உலகில் எத்தனையோ மொழிகள் உள்ளன. குறிப்பாக மலேய மொழி அல்லது சுவாகிலி போன்ற மொழிகள் ரோமலிபியைப் பயன்படுத்தி எழுதப்படுகின்றன. ஐரோப்பாவில் பிரென்ச் முதல் ஆங்கிலம், ஜெர்மன், ஸ்பானிய மொழிகள் எல்லாமே இந்த ரோம லிபியைப் பயன்படுத்துகின்றன. அதே வேளையில் அவற்றிற்கிடையே ஒரு அடித்தளமான பண்பாட்டு ஒருமைப்பாடும் உள்ளது என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. அந்த மாதிரியான ஒரு நிலையை இந்திய மொழிகளில் எடுத்துக்கொள்ள முடியாது.

ஏனென்றால் சமஸ்கிருதத்தைப் பின்பற்றுகிற மொழிகள் அல்லது இந்தி, தேவநாகரியில் உள்ளதைத் தமிழில் கொண்டுவருவதிலே சிக்கல் இருக்கிறது. அதோடே தமிழினுடைய அடித்தளம் மாற்ற முடியாததாக இருக்கின்றது. தெலுங்கில் இப்படித்தான் இருக்கிறது. மலையாளத்திலேயும் இப்படித்தான். இது உண்மையில் எங்களுடைய தமிழ் மக்கள் அடையாளம் பற்றி வைத்திருக்கிற உளவியல் சம்பந்தப்பட்ட பெரிய விடயம் என்பது தெரிய வருகிறது. ஒரு புறத்தில் வேண்டிய மாற்றங்கள் காலம் காலமாக செய்து, இன்னொரு புறத்தில் அந்த சிலபிக் தன்மை உயிர்மெய்களை சார் பெழுத்துக்களை சொல்லுகிற அந்தத் தன்மையும் பேணப்பட்டு வந்திருக்கிறது. உண்மையில் இவை இரண்டையும் இணைத்துத்தான் செய்ய வேண்டும். கவனம் செலுத்த வேண்டும் என்பது என்னுடைய ஒரு முக்கியமான கருதுகோள்.

இதில் நான் இன்னொன்றையும் சொல்லுகிறேன். இது சற்றே ஆழமாக சிந்திக்கப்பட வேண்டிய ஒரு பிரச்சனையோ என்று நான் அய்யுறுகிறேன். அதாவது அறிவியலின் ஒரு முக்கியத்துவம் என்ன வென்றால் மனிதனுடைய தேவைகளை அவனுடைய விருப்புக்களை நன்கு நிறைவேற்றுவதற்குப் பயன்படுத்தத்தக்க ஒன்று. அப்போது அறிவியலின் தொழில்நுட்பத் தேவைகளுக்காக ஒரு மொழியினுடைய இயல்பை மாற்றுவதா, அமைப்பை மாற்றுவதா அல்லது அறிவியல் இதற்கு வேண்டிய சில புதிய அனுசரணைகளை அல்லது புதிய கண்டு பிடிப்புகளை கண்டுபிடித்து இதற்கு உதவுவதா என்பது ஒரு முக்கியமான கேள்வி என்று நான் கருதுகிறேன். விஞ்ஞானிக்கு அந்தக் கடனொன்று இருக்கிறது. அறிவியலைக் கொண்டு வரலாம். ஆனால் அது உலக அறிவியலுக்கான, அவை எல்லாவற்றையும் சொல்வதற்கான மொழியல்ல. அப்படி பயன்படுத்தப் படுவதில்லை. அப்படி சொன்னால் அது ஏன் ஆங்கிலத்துக்குப்போச்சு, பிரஞ்ச்காரன் கூட அதை ஏற்றுக் கொள்கிறான் என்று சொன்னால் நாங்கள் எல்லாருமே இரண்டு மொழியை படிக்க வேண்டியவர்களாக இருக்கிறோம். அது பண்பாட்டுத் தேவையில் ஒன்று. மற்றது உலக நிலைத்தேவையில் உள்ளது. இந்தக் கட்டத்தில் பண்பாட்டுத் தனித்துவம் போற்றப்படுவது என்பது இந்த விடயம் கவனிக்கப்படுவது என்பது அந்த சமூகத்தினுடைய உளப்பாங்கோடு சம்பந்தப்பட்ட ஒரு விடயம்.

எனவே மாற்றங்கள் வந்துள்ளன. படிப்படியாக வரும். படிப்படியாக ஏற்படுத்த வேண்டும். ஆனால் அவை செய்யப்படுகிறபோது பண்பாட்டு வளர்ச்சிக்கும் தொடர்ச்சிக்கும் உள்ள உளப்பாங்கிற்கும் நிலைப்பாட்டிற்கும் ஊறு விளைவிக்காதபடி நடந்துகொள்ள வேண்டும். அதே நேரத்தில் உலக மொழிகளுக்கு ஏற்ற வகையில் தமிழைப் பலப்படுத்த வேண்டும் என்கின்ற அந்த எண்ணத்தையும் கைவிடக்கூடாது. இதுவொரு இக்கட்டான பிரச்சனை. இது மிக நிதானமாகப் பார்க்கப்பட வேண்டும். மாற்றங்கள் அவசியம். ஆனால் அந்த மாற்றங்கள் பண்பாட்டுத் தொடர்ச்சியை அறுக்காத முறையில் அமைவது அவசியம் என்பது என் கருத்து.

 ச.செந்தில்நாதன்: இலங்கையில் இலக்கிய வாதிகள், ஆய்வாளர்கள் மத்தியில் இது சம்மந்தமான முயற்சிகள் ஏதாவது நடந்திருக்கிறதா?

கா.சிவத்தம்பி : அப்படியில்லை. எழுத்து முயற்சிகளை செய்யவேணும் என்கிறதைப் பற்றிய பெரிய முயற்சிகள் இல்லை. ஆனால் எங்களுடைய பிரதேசங்களிலுள்ள காணி நிலங்கள் சம்பந்தமான உறுதிகள் என்று நாங்கள் சொல்லுகிற பட்டுவாடா பத்திரங்களிலே உள்ள எழுத்துமுறை பல இடங்களில் தமிழகத்திலுள்ளவைகளை ஒத்திருக்கிற வேளையில் இந்த எழுத்துச் சீர்திருத்தம் பற்றி வருகிறபோது அவற்றையும் மனங் கொள்ளல் வேண்டும் என்று நான் கருதுகிறேன். உதாரணமாக மோடி கொடுத்தார் என்று சொல்கிற போது த்தன்னாவையும் தாவன்னாவையும் சேர்த்து எழுது வார்கள். அதுவொரு கொம்பாக ஃபார்ம் ஆகாது. அந்த மாதிரியான சில வழக்குகள் இருக்கு. துரதிர்ஷ்ட வசமாக அந்த வழக்குகள் பற்றிய ஆழமான சிந்திப்போ சிரத்தையோ இல்லை.

எழுத்து சீர்த்திருத்தத்தில் உள்ள இன்னொரு மிக முக்கியமான விஷயம் என்னன்னா, அச்சுவந்ததன் பின்னர் ஏறத்தாழ நமக்குத் தெரிந்தது எல்லாமே அச்சில் வந்துவிட்டன.

ச.செந்தில்நாதன் : சீன மொழியில் பத்தாயிரம் எழுத்துக்கள் இருந்ததாகவும் அதை இப்போது இரண்டாயிரம் எழுத்துக்களாக குறைத்ததாகவும் சொல்லப்படுகிறது. அதனால் அந்த மொழிக்கு நீங்கள் சொல்வதுமாதிரி வரலாற்று ரீதியாகவோ பண்பாட்டு ரீதியாகவோ ஏதாவது பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக கருத்துண்டா?

கா.சிவத்தம்பி : இல்லை. ஆனால் சீன எழுத்துக்களின் வரிவடிவம் அதன் நேர்க்கீழாக எழுதுகிற தன்மை அதையெல்லாம் மாற்றி இப்போது நேர்க்கோட்டில் எழுதுவதென்று வந்துவிட்டது. ஒலிகளும் குறைக்கப்பட்டுவிட்டன. ஆனால் இந்த மாற்றம் ஏற்படுவதற்கு மாவோவின் சிந்தனைகள் என்ற சிறு நூல்கள் முக்கியமானவையாக இருந்தன என்பதை நான் அறிவேன். பேராசிரியர் ஜோசப் மீரான் அதைப் பற்றி ஒரு விரிவுரையிலே விளக்கியபொழுது நான் அந்தக்கூட்டத்திலே இருந்தேன். மாவோ சீன மொழியின் நடைமுறையில் ஏற்படுத்திய மாற்றம் மிகப் பெரியது. அதாவது சித்திரவடிவில் இருந்து சித்திர ஒலிகளாகி பிறகுதான் அந்த வடிவத்தைப் பெற்றது.

எனவே அதைக் குறைப்பதற்கான வாய்ப்பு இருந்திருக்கலாம். அப்படியிருந்தாலும் அதன் பிறகு அவர்கள் முக்கியமான மாற்றத்தை செய்தார்கள். முதலில் நேர்க்கோடாக எழுதுவார்கள். ஆனால் அந்த மாற்றம் இப்போது கிடையாக எழுதுவது, வலதிலிருந்து இடதிற்குப் போவதாக இருக்கிறது. இதைப் பற்றி சிந்திக்கிறபோது அரபு மொழியில் ஒரு பாரம்பரியம் இருக்கிறது. கீழிருந்து போறது. அது இன்னும் மாறல. அதற்குப்பின்னால் உள்ள காரணங்கள் என்ன? அவர்கள் எங்களைப் போன்ற பிரச்சனைகளை எதிர்நோக்கவில்லையா? அதற்கு அவர்களின் பதிற்குறிகள் யாவை? என்பது போன்ற விடயங்களை மனதில் கொண்டுதான் இதனைச் செய்ய வேண்டும்.

மீண்டும் சொல்கிறேன் அறிவியலின் ஒரு பயன்பாடு மனித தேவைகளைப் பூர்த்தி செய்வது. மனிதத் தேவைகள் அறிவியலின் தேவைகளுக்கு ஏற்பத் தொழிற்பட வேண்டும். தவறென்று சொல்வது அந்த அறிவு வளர்ச்சியையே கொச்சைப்படுத்துவதாக இருக்கும். என்னுடைய அபிப்ராயம் இதுரெண்டும் சேரும். எப்படி கிரந்த எழுத்துக்கள் வந்தது. கிரந்த எழுத்துக்களும் வட எழுத்துக்கள் தானே. அந்த வடஒலிகளுக்கென தமிழ் நாட்டிலே தோற்றுவிக்கப்பெற்ற எழுத்துக்கள். அதுக்குப்பேரே பல்லவ கிரந்தம். பல்லவர்காலத்து நூல்களிலே காணப்படுகிற எழுத்துக்கள். கல்வெட்டுக்களில் அது தேவைப்பட்டது. ஆனால் அந்த எழுத்துமுறை இப்போ பல இடங்களில் பயன்படுத்துறதில்ல. பாரதியினுடைய எழுத்துக்களுக்கும் எங்களுடைய எழுத்துக்களுக்குமே வித்தியாசம் இருக்கு. அப்படி பார்க்கிறபொழுது இந்த எழுத்துச்சீர்திருத்தம் என்பது தேவையானது. என்னுடைய அபிப்ராயம் என்னவென்றால் அந்த தேவைக்கு கீழே வருகிறபொழுது அந்த பண்பாட்டுத் தொடர்ச்சியும் அதோடு இணைந்துதான் வரும் என்று நான் கருதுகிறேன். சீர்திருத்தம் அல்லது மாற்றம் என்பது தொடர்ச்சி அறுந்துவிட்டதான ஒரு உணர்வினை ஏற்படுத்தி விடக் கூடாது என்று சிரத்தையாக இருக்க வேண்டும் என்று கருதுகிறேன்.

சா.இலாகுபாரதி: மொழிகுறித்து பேசும்போது இந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டில் பள்ளிகளில் தமிழுக்கான இடம் குறைந்துகொண்டே வருகிறது. மெட்ரி குலேஷன், கான்வென்ட் போன்றவை அதிகமாகிவிட்டன. அரசுப் பள்ளிகளிலே கூட தாய்மொழிவழிக் கல்வி என்பது இன்றைக்குத் தேய்மானத்திலேயே இருக்கிறது. இலங்கையில் இந்த மாதிரியானதொரு போக்கு இருக்கிறதா? அங்கிருக்கும் சூழல் என்ன? இந்தப் போக்கை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்?

கா.சிவத்தம்பி : இலங்கையிலே முற்றிலும் மாறுபட்ட நிலைமை. இலங்கையில் ஒரு குழந்தை தன்னுடைய தொடக்கக் கல்வி முதல் நிச்சயமாக பல்கலைக்கழக புகுமுகக் கல்வி வரை சில வேளைகளில் பல்கலைக்கழக முதலாவது பட்டப் படிப்பு வரை தமிழிலோ அல்லது சிங்களத்தில் மாத்திரமோ படிக்கிறது. அந்த மாற்றம் ஐம்பதுகளில் ஏற்பட்டு அறுபதுகளில் விசேடமாக கலைத்துறைக்கும் எல்லாப் பல்கலைக் கழகங்களுக்கும் வந்துவிட்டது. ஆங்கிலத்தில் பயிலாமல் இருக்கிற தமிழ் கலைத்துறை மாணவர்கள் பலர் இருக்கிறார்கள். மருத்துவம், என்ஜினீரிங், காமர்ஸ் போன்ற துறைகளை எடுத்துக்கொண்டால் பல்கலைக்கழக புகுமுக முதலாவது வகுப்பில் ஆங்கிலத்தையும் தமிழையும் சேர்த்துப் பாடம் சொல்லிக் கொடுக்கிறார்கள். இதனால் எங்களுடைய நாட்டின் கல்வித்தரம் எந்த வகையிலும் குறைந்ததாக நான் சொல்ல மாட்டேன். எங்களுடைய மாணவர்கள் இப்படி தமிழிலே படித்துவிட்டு வெளிநாடுகளுக்குச் செல்கிறார்கள். அங்கே ஆங்கிலத்தில் படிக்கிறார்கள். டாக்டர்களாக இருக்கிறார்கள். அவர்கள் எந்தவொரு வகையிலும் குறைந்த டாக்டர்களாக இருப்பதில்லை. மாறாக மாணவர்கள் தொடக்க நிலைக்கல்வியைத் தாய் மொழியில் பயில்வது என்பது மாணவர்களுக்கு அத்தியாவசியமானது. அவர்களுடைய ஆளுமை விருத்திக்கும் கருத்து வெளிப்பாட்டு அபிவிருத்திக்கும் உதவும் என்பது கல்வியியலில் கண்டறியப்பட்ட ஒரு பேருண்மை. அது எல்லோருக்கும் பொதுவானது. அந்த வழக்கும் இந்தியாவில் கன்னடத்தில் உண்டு. வங்காளத்தில் கூட உண்டென்று நினைக்கிறேன். தமிழ்நாட்டில் மாத்திரம்தான் இல்லை என்பது மிகமிக கவலைக்குரிய விடயம். ஆனால் அது தமிழ் நாட்டில் ஏன் இல்லை என்பதற்கான சமூக நிலைக்காரணங்கள் உண்டு. பண்பாட்டு நிலைக் காரணமும் உண்டு.

முதலாவது என்னவென்றால், தமிழ்நாடு என்பது ஒருகாலத்திலிருந்த மெட்ராஸ் பிரசிடென்சியினுடைய எச்சசொச்சமாக வந்தபடியினாலும் தமிழ்நாட்டில் குறிப்பாக சென்னை, திருச்சி போன்ற இடங்களில் தமிழர்கள் தமிழைத் தாய்மொழியாகக் கொள்ளாத பலர் இருக் கிறார்கள். இவர்கள் தங்களது குழந்தைகளைத் தமிழில் கற்பிக்க விரும்பவில்லை. எனவே அவர்கள் ஆங்கிலத்தை விரும்புகிறார்கள்; இதுவொரு நிலை.

இன்னொன்று, தமிழர் சம்மந்தப்பட்ட சமூக, பண்பாட்டு விஷயத்தைச் சொல்ல வேண்டும். ஆங்கிலக் கல்விக்கான வாய்ப்புகள் இருந்ததன் மூலமாகத் தமிழ்நாட்டின் சில சாதிக்குழுமங்கள் மத்தியவர்களைப் பார்த்து அதிக வசதிபெற்று உயர் உத்தியோகங்களுக்குப் போவதற்கான வாய்ப்புகள் கிடைத்துள்ளன. அந்த வாய்ப்பு தங்களுடைய குழந்தைகளுக்கு இல்லாமல் போய் விடக்கூடாது என்பதற்காக பெரும்பாலான பிராமணரல்லாத சாதியினர் குறிப்பாக படிப்படியாக இப்போதுதான் மேல்நிலைக்கு வந்துகொண்டிருப்பவர்கள் கருதுகிறார்கள். ஆனால் துரதிர்ஷ்டவசமாக அவர்களுக்கு இதுபற்றிய விஞ்ஞானப் பூர்வமான விளக்கம் கொடுக்கப்பட வில்லை. தமிழினுடைய மேன்மைக்கு, தனித்துவத்துக்கு தமிழ்ப்பண்பாட்டின் முக்கியத்துவத்துக்கு பேசிய திராவிட கட்சிகளே இந்தவிசயத்தில் தெளிவான கொள்கையில் இல்லை. அது ரொம்ப கவலைக்குரிய இடம்.

ச.செந்தில்நாதன்: தெளிவான கொள்கை இல்லாதது மட்டுமல்ல இந்த நிலைக்கு அவர்கள்தான் காரணம் என்று சொல்ல வேண்டும்.

கா.சிவத்தம்பி: அதுமாத்திரமல்ல. இவையெல்லாம் பேசுகிறவர்கள் தமிழ் கற்பித்தல் முறையை இன்றைக்கும் மாற்றவில்லை. பத்துவருடத்துக்கு முந்தியிருந்த இங்லீஷ் புத்தகத்தையும் இப்ப உள்ள இங்லீஷ் புத்தகத்தையும் எடுத்துப் பாருங்க. பத்துவருஷத்துக்கு முந்தி வந்த தமிழ் புத்தகத்தையும் இப்ப உள்ள தமிழ் புத்தகத்தையும் எடுத்து வாசித்து பாருங்க; அடிப்படையில் மாற்றம் இல்லை. ஆங்கிலத்தில் தொடக்கக் கல்வியில் கற்பிப்பதன் மூலம் அந்தப் பிள்ளைகளுக்கு பெரிய அறிவு வருவதாக சொல்வதற்கு என்ன சாத்தியப்பாடு இருக்கிறது. ஏனென்றால் அந்தப் பிள்ளையினுடைய பண்பாட்டுச் சூழலில் இல்லாத விடயங்களாக அங்கு பேசப்படுகின்றன. என் பிள்ளை இங்லீஷ் மீடியம் படிக்கிறான், மெட்ரிகுலேஷன் போறான் என்று சொல்லலாமே ஒழிய, உங்கள் வீட்டில் அந்தச் சூழல் இல்லையென்றால் அந்தப் பிள்ளைக்கு அந்த மொழி வராது. இதை சாதாரண பெற்றோர்கள் புரிந்துகொள்றதில்ல. ஆனபடியினால் சொல்றேன் தமிழ்நாட்டினுடைய மிகப்பெரிய கவலைக்கிடமான விடயம் நான் சொல்றது சரியோ தெரியாது. வெளியூர்க்காரன், ஆனால் தமிழன் என்கிற முறையில் சொல்கிறேன் தொடக்க நிலைக் கல்வி தாய்மொழியில் தான் இருத்தல் வேண்டும்.

 ச.செந்தில்நாதன்: இப்போது தமிழ் செவ்வியல் மொழி என்று ஆக்கப்பட்டிருக்கு. இதில் ரெண்டு விஷயங்களை நீங்கள் தெளிவாக்க வேண்டும். ஒன்று செம்மொழி கோட்பாடு இலங்கையில் உண்டா? இது பற்றி ஏதாவது பேச்சு உண்டா? இரண்டாவது இந்தியாவில் அரசாணை போட்டு செம்மொழி என அறிவித்தது மாதிரி உலகில் வேறு எங்காவது உண்டா? இதன் மூலம் சர்வதேச அளவில் இந்த ஆணைக்கு மரியாதை இருக்குமா?

கா.சிவத்தம்பி: ரொம்ப சுவாரசியமான கேள்வி. இந்திய அரசு இந்தியாவைப் பொருத்த வரையில் பதினான்கு, இருபது மொழிகளை அதனுடைய உத்யோக மொழிகளாக ஏற்றுக்கொண்டாலும் பொது மொழியாக உத்யோக மொழியாக இந்தியை ஏற்றுக் கொண்டாலும் ஆங்கிலத்தைத் தொடர்பு மொழியாக எடுத்துக் கொண்டுள்ளது. இவற்றிற்கு மேலாக நீங்கள் கிளாசிக்கல் லேங்வேஜுக்கு தமிழில் வைத்திருக்கிற மொழிபெயர்ப்பு பல இடர்ப்பாடுகளை ஏற்படுத்தும். கிளாசிக் என்று சொல்வது வேறு, கிளாசிக்கல் என்று சொல்வது வேறு. கிளாசிக் என்றால் சிறந்தது, நல்லது, உயர்ந்த பண்பாடுகளை உடையது, உயர்ந்ததன் பண்புகளைக் கொண்டது என்றெல்லாம் சொல்லலாம். கிளாசிக்கல் என்று சொன்னால் நீண்டகாலத்திற்கு உரியது, செம்மையானது, செழுமையானது, பழமையானது. நான் பேராசியர் ஒருவரோடு பேசிக் கொண்டிந்தபோது சொன்னேன், செவ்வியல் மொழி செம்மொழி என்கிறதைவிட்டுவிட்டு தொல்சீர்செம்மொழி என்று சொல்லலாம்... அப்போ பிரச்சனை பாதியில்லை. இந்தியாவின் தொல்சீர் செம்மொழிகள் யாவை? சமஸ்கிருதம், பாரசீகம் அதோடு சேர்த்து இந்தியப் பண்பாட்டின் உருவாக்கத்தில் தமிழுக்கு ஒரு முக்கிய இடமுண்டு. நான் அந்தக் கணக்கில்தான் கிளாசிக்கல் லேங்வேஜ் என்று பார்க்கிறேன்.
நான் அவரைக் கேட்டேன், கான்ஸ்டிடியூஷன்ல ஏதாவது சொல்லியிருக்காசார். இல்லை என்றார். அப்போ தயவு செய்து தொல்சீர்செம்மொழி என்று சொல்லுங்கள். அந்தமொழிபெயர்ப்பை நாங்கள் கிளாசிக்கலுக்கு இலங்கையில் பயன்படுத்துகிறோம். ஒரு நாட்டின் அரசாங்கம் சிலமொழிகளை கிளாசிக்கல் லேங்வேஜூக்காக பிரகடனப்படுத்துவதுண்டா என்பதும் ஒரு சுவாரஸ்யமான கேள்வி. அப்படியில்லை. அந்தந்த நாடுகளினுடைய அடிப்படையான நாகரீக வளர்ச்சிக்குக் காரணமாக இருக்கின்ற மொழிகள்தான் அதனுடைய கிளாசிக்கல் லேங்வேஜஸ்.

இலங்கையிலே இப்படியான கிளாசிக்கலை பார்க்கிறதில்லை. பௌத்தர்களுக்கு பாலி மிகமுக்கியம். ஏனென்றால் அது புத்தர் பயன்படுத்திய மொழி. தமிழர்களுக்கு நிச்சயமாக தமிழ் செம்மொழி. ஏனென்றால் அது நீண்டகாலத்துமொழி. தமிழர்களைப்பொறுத்தவரையில் தமிழினுடைய தனித்துவத்தை நாங்கள் வலியுறுத்து கிறோம். ஏனென்றால் அது சமஸ்கிருதத்தினுடைய சாயல்களிலிருந்து வந்ததல்ல. அது திராவிடக்குடும்பத்தின் முக்கியமான மொழி.

தமிழை செம்மொழியாக அரசாங்கம் அங்கீகரிக்கிறது என்று சொல்கிற பொழுது இதனை உண்மையில் இந்தியப் பண்பாட்டு உருவாக்கத்தில் தமிழுக்கு உள்ள இடத்தை அங்கீகரிப்பதான ஒரு முயற்சியே. இதனால் என்ன லாபம் வரும் என்பது முக்கியமான கேள்வி. அனைத்திந்திய பண்பாட்டில் தமிழினுடைய முக்கியத்துவத்தை தமிழ்ப்பண்பாட்டினுடைய முக்கியத்துவத்தை உலக அறிஞர்கள் அறியத் தொடங்கிவிட்டார்கள். அது முன்னரே இருந்தது, சில கிறிஸ்தவ அறிஞர்கள் அதை ஐரோப்பாவுக்கு அறிமுகம் செய்துவைத்தார்கள். 50களுக்குப்பின்னர், அந்தப் பண்பு வளர்ந்து வளர்ந்து இந்தியப் பண்பாடு பற்றி பேசுகிறபொழுது தமிழைப் பற்றிய விடயங்களை அறியாமல் இந்தியப் பண்பாட்டு உருவாக்கத்தைப் பேசமுடியாது என்பதனை பிலியோசா போன்ற பிரெஞ்சு அறிஞர்கள், ஜெர்மன் அறிஞர்கள், ஆங்கில அறிஞர்கள், அமெரிக்க அறிஞர்கள் உணர்ந்திருக்கிறார்கள்; எழுதியிருக்கிறார்கள். அங்கே இந்த செவ்வியல், செம்மொழி என்பதற்கு முன்னரே டிபார்ட்மெண்ட் இருக்கு.

தமிழர்கள் அல்லாதவர்களுக்கு இந்தியப் பண்பாட்டு உருவாக்கத்திற்கு தமிழ்மொழி எவ்வாறு பணியாற்றியுள்ளது என்பதை நாங்கள் அவரவர்கள் மொழிகளிலே அல்லது உலகமுக்கிய மொழிகளிலே உலகப் பொதுவான நிலையில் நின்று எழுத வேண்டும். எடுத்தவுடனே தொல்காப்பியத்திற்கு பதினையாயிரம் வருடம். பத்தாயிரம் வருடம் இப்படியெல்லாம் பண்ண இயலாது. உங்களை மாதிரி எங்களுக்கும் தமிழினுடைய பழமையிலே ஆர்வம் இருக்கு. தொல்காப்பியத்துல நிறைய ஆர்வம் இருக்கு. இப்படி சொல்றதாலே ஒருத்தரும் நம்பாமவிட்றாங்க. தொல்காப்பியத்தின் பெருமையை உலக அகடமிக் ஸ்டாண்டர்படி எழுத வேண்டும்.