தமிழ்த்திரைத்துறை என்பது தமிழ்ச்சமூகத்தின் ஓர் அங்கம். எனவே தமிழ்ச்சமூகத்தில் இயங்கும் அதே வர்க்க, சாதி, பால் முரண்பாடுகள் திரைத்துறைக்குள்ளும் இயங்கும். சமூகத்தில் ஒடுக்கம் வர்க்கம், சாதி, பால் மற்றும் மதம் என நிலவுவதைப் போன்றே திரைத்துறையிலும் நிலவும். அதற்கொப்பவே வெளிவரும் படங்களில் பல, ஆளும் வர்க்க, சாதி, ஆணாதிக்க, இந்துத்துவ வெறியூட்டும் கருத்தியலைக் கொண்டிருப்பதுடன் ஒடுக்கப்படும் சக்திகளுக்கு எதிராக தொடர்ந்து பேசியும் வருகின்றன.

அதுபோல ஒடுக்கப்படும் சக்திகளுக்கு ஆதரவாக சிறுபான்மையாகவேனும் ஒரு சில படங்கள் அவ்வப்போது வெளிவந்து கொண்டிருக்கின்றன.

 நேரிடையாக, சமூகப்பிரச்சனைகளை பேசுபொருளாகக் கொள்ளாத, குடும்ப உறவுகளைப்பற்றி பேசுகின்ற படங்களிலும் பாலின முரண்பாட்டை மையமாகக் கொண்டு ஒடுக்குமுறைக்கு ஆதரவான அல்லது எதிரான கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன. இதுவல்லாமல் எந்த தர்க்கத்திற்கும் பொருந்தாத அபத்த குப்பைகளானாதும், பாலியல் வக்கிரங்கள் மலிந்ததுமான வன்முறைப்படங்கள் N.O.1(?!) நாயகர்கள் நடித்து வெளிவந்து வசூலைக்குவித்துக்கொண்டிருக்கின்றன. அவற்றில் பெரும் பாலும் ஆதிக்கவர்க்க ஆதரவுக்கருத்துக்களும், இந்துத்துவக் கருத்துக்களும், பெண்களுக்கு அறிவுரை சொல்லும் ஆணாதிக் கத்திமிறும் தவறாமல் இருக்கும்.

இத்தகைய சூழலில் விமர்சனம் என்பதும் ஒடுக்கப்படும் சக்திகளுக்கு அல்லது ஒடுக்கும் சக்திகளுக்கு ஆதரவான கண்ணோட்டத்துடனே இயங்குகிறது. குறிப்பாக பார்ப்பன ஊடகங்கள் பார்ப்பனியக் கருத்தியலைத்தாங்கி வரும் படங்களை ஆகா! ஓகோ! என்று புகழ்ந்து தள்ளுகின்றன. அதற்கு மாற்றாக ஒடுக்கப்படும் சக்திகளது பார்வையில் திரைப்படங்கள் குறித்துக் காண்பது அவசியமானதாகிறது. அந்த அடிப்படையில் சேரனின் ‘தவமாய் தவமிருந்து’ படத்தைக் காண்பது சரியாயிருக்கும்.

கதை: இராமையாவின் மகன் முத்தையா அவர் மனைவி சாரதா இவர்களுக்கு இராமநாதன், இராமலிங்கம் என்று இரு மகன்கள். இருவரையும் தன் செந்தமிழ் அச்சக வருமானத் திற்கும் மீறி வட்டிக்கு கடன்வாங்கி படிக்க வைத்து மூத்த மகனுக்கு டெக்ஸ்டைல் மில்லில் வேலை வாங்கிக் கொடுத்து திருமணமும் செய்து வைக்கிறார். முத்தையா தம்பதிக்கும் மருமகளுக்கும் ஒத்துவராமல் மூத்தமகன் தனிக்குடித்தனம் சென்று விடுகிறார். இளையமகன் ராமலிங்கம் தன் உடன் இன்ஜினியரிங் படிக்கும் வசந்தியுடன் காதல் வயப்பட்டு ஒரு குறிப்பிட்ட சூழலில் உடலுறவும் கொண்டு வசந்தி கர்பமடைந்துவிட பிரச்சனையை சமாளிக்க வசந்தியுடன் சென்னைக்கு ஓடிவிடுகிறார்.

அங்கு பல்வேறு சிரமங்களுக்கு இடையே குழந்தைபெற்று மீண்டும் தன் வீட்டிற்கு மனைவியுடன் திரும்புகிறார். முதலில் மறுத்தாலும் பெற்றோர் மகனையும் மருமகளையும் ஏற்றுக் கொள்கின்றனர். மகனுக்கும் மருமகளுக்கும் (நல்ல) வேலை கிடைத்து மதுரைக்கு தன் பெற்றோருடன் குடி பெயர்ந்து பெற்றோரை இராமலிங்கம் அன்புடன் பராமரிக்க முதலில் தாயார் இயற்கை எய்துகிறார்.

பிறகு மூத்தமகன் ராமநாதனின் கடும் சொல்லால் அதிர்ச்சியுறும் தந்தையும் நோயுற்று இறக்கிறார். தம்பி அண்ணனிடம் ‘உனக்கு உதவ நான் இருக்கிறேன். எனக்கு உறவுன்னு நீ மட்டும் தான் இருக்கே’ என்று கூறுவதுடன் படம் முடிகிறது.

கதைக்களம்: சிவகங்கை அருகேயுள்ள கிராமத்தில் வசிக்கும் இந்து இடைநிலைச் சாதி - நடுத்தர வர்க்க குடும்ப வாழ்க்கை. அந்தக்குடும்ப மனிதர்களுக்குள்ளும், அவர்களுக்கும் பிற சமூக மனிதர்களுக்கும் இடையிலான உறவும் முரணும் எவ்வாறு சித்தரிக்கப் படுகிறது என்பதைக் காண்பதன் மூலம் இப்படம் எந்தக்கண்ணோட்டத்துடன் இயங்குகிறது என்பதை நாம் புரிந்து கொள்ளமுடியும்.

சேரனின் முந்தையபடமான ஆட்டோகிராப் போலவே இதிலும் நாயகனது (மீள்) பார்வை வழியாகவே கதை சொல்லப்படுகிறது. நாயகன் (சேரன்) தனக்கும் தன் அப்பா (ராஜ்கிரண்) க்கும் இடையிலான உறவை கதையின் மையமாகக் கொண்டு கதை சொல்வதால் மற்ற பாத்திரங்கள் எல்லாமே அதற்கேற்ப, அந்த உறவுக்கு ஒத்தவை, விரோதமானவை என்று பிரிந்து ஒத்தவர்கள் நல்லவர்கள், எதிரானவர் கெட்டவர்களாக பார்வையாளர் மனதில் பதிந்து விடுகின்றனர்.

படம் முழுதும் நாயகனின் (இயக்குநர்) ஒற்றைக்குரலே கதையை நம்முன் அடுக்குவதால் மற்ற பாத்திரங்களின் குரல் இயக்குநர் அனுமதித்த இடுக்குகளின் வழியே கதையின் மையத்திற்கு வலுச்சேர்க்கும் வகையில் மட்டுமே ஒலிக்கிறது.

பலதரப்பட்ட பாத்திரங்களும் தங்களது விருப்பத்தை, தம் தரப்பு நியாயத்தை எடுத்து வைத்து பார்வையாளருக்குள் அல்லாடலை ஏற்படுத்தி, பார்வையாளரை முடிவெடுக்க வைக்கும் சுதந்திரத்தை சேரன் வழங்கவில்லை. குறிப்பாக இப்படத்தில் மூன்று பெண் பாத்திரங்கள் வருகின்றன. நாயகனது அம்மா, அண்ணி, மனைவி. அப்பாவின் இலட்சியத்திற்கு தன்னை ஒப்புக் கொடுத்து விட்ட அம்மா. அப்பாவின் கருத்தே கதையை நகர்த்திச் செல்வதால் அம்மாவும் கதையின் திசையில் பிசிறின்றி ஒத்துச் செல்கிறார். அண்ணியின் பாத்திரத்திற்கு குறிப்பிட்ட அளவுக்கு, இயக்குநர் தனக்குத் தேவையான அளவுக்கு சுதந்திரம் கொடுத்து பேச அனுமதித்துள்ளார். அந்த (வரம்பிற்குப்பட்ட) சுதந்திரமே அண்ணியின் பாத்திரத்தை யதார்த்தமானதாக, பார்வையாளர் ரசிக்கும்படியாக ஆக்கியுள்ளது. (அப்பாத்திர மேற்ற புதுமுக நடிகை மிகச் சிறப்பாக செய்துள்ளார்). இயக்குநர் வழங்கும் இச்சுதந்திரமும் தந்திரமே. பார்வையாளருக்கு விறுவிறுப்பூட்டவும், படத்தின் வில்லன் பாத்திரத்தை நிறைவு செய்யவும் அண்ணி பாத்திரத்தை பயன்படுத்தியுள்ளார்.

அப்பாவுக்கு எதிராக அண்ணி தனது விருப்பத்தை முன் வைப்பது குற்றமாக பார்வையாளர் உணரும்படி, காட்சி, உரையாடல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. கேமிராவினால் படமாக்கப்படாமல் இருளில் மூழ்கடிக்கப்பட்ட காட்சிகளை சற்று தொடந்து பாருங்கள். அப்பாவின் லட்சியம் தனது மகன்களை நல்ல நிலைக்கு கொண்டுவருவது. அதற்காக கடன் வாங்குவது. அதற்கு அவரது பெற்றோர் தடையாக வர வாய்ப்பின்றி நிழற்படமாக தொங்குகின்றனர். எனவே தன் அப்பாவின் பெயரை தன் பிள்ளைகளுக்கு மகிழ்வாக வைக்க முடிகிறது. அண்ணியின் லட்சியம் என்ன? தனது குழந்தைக்கு ஏதாவது சேர்க்க வேண்டும். அது அப்பாவின் லட்சிய வகைப்பட்டதே. கூட்டுக் குடும்பம் என்பதால் ஒன்றுக்கு ஒன்று முரண்படுகிறது. குடும்பத்தலைவர் என்ற முறையில் பிறர் விருப்பத்தை அப்பா நசுக்கும்போது அண்ணன் - அண்ணி அவருடன் முரண்பட்டு தனிக்குடித்தனம் போகின்றனர். அதேபோல் அப்பாவுக்கும் அண்ணிக்கும் முரண்பாடு வெளிப்படும் மற்றொரு காட்சி. அண்ணி தன் குழந்தைக்கு குஷ்பு என்று பெயரிட விரும்புகிறார் (இயக்குநரது குசும்பு). அப்பா தன் தாயாரின் பெயரான தெய்வானை என்ற பெயரை தன் பேத்திக்கு இட வேண்டும் என்கிறார். அது முரண்பாடாக வெடிக்கிறது.

 இங்கு குஷ்பு என்ற பெயரை நுழைப்பதன் மூலம் ஓர் அரசியல் விவாதத்தை துவங்கி தனது நிலைபாட்டை சேரன் பதிவு செய்கிறார். அது முத்தையா என்ற பாத்திரப்படைப்பு பற்றிய தர்க்க முரணாக அமைந்து விடுகிறது. முத்தையா காலத்திற்கேற்ப பல விசயங்களில் மாறக்கூடியவராக, பிள்ளைகளது உணர்வுகளை மதிக்கக்கூடியவராக, அதே சமயம் பிள்ளைகளது எதிர்கால நலன் என்பதில் உறுதியானவராக படைக்கப்பட்டுள்ளார்.

குறிப்பாக, தன் தந்தை இராமையா என்ற பெயரை இராமநாதன், இராமலிங்கம் என்று அவரது காலத்திற்கேற்ப மாற்றியே நாகரீகமாக தன் பிள்ளைகளுக்கு வைத்துள்ளதாக மிக நுணுக்கமாக காட்சிப்படுத்திய சேரன், தன் பேத்தி பெயரிடல் விசயத்தில் மட்டும் மிகக்கறாராக, தெய்வானை என்ற தன் தாயாரின் பெயரை மாற்றமின்றி, அதுவும் அண்ணி ‘என் பிள்ளை மற்ற பிள்ளைகளால் கேலி பேச வாய்ப்பாகும்’ என எதிர்ப்பு தெரிவித்த போதும் சூட்டுபவராக நிறுத்தப் படுகிறார். அதற்கு ஒத்திசைவாக பார்வையாளருக்கு முத்தையா வின் கோபம் நியாயமானது என்று உணர்த்தும் படியாக அண்ணி குஷ்பு என்ற பெயரை வைக்கப்போவதாக சொல்வது சேரனால் புகுத்தப்பட்டுள்ளது.

இடைநிலைச்சாதி - நடுத்தர வர்க்க வாழ்க்கையை யதார்த்தமாக படம்பிடித்துக் காட்டும் கலைஞன் என்ற நிலையில் இருந்து சேரன் ஓர் அரசியல் வாதியாக நிலை மாறிய காட்சி இது. ஆனால் அவர் முன்வைக்கும் அரசியல் சிக்கலானதாக இருக்கிறது.

இன்றைய இடைநிலைச் சாதி - நடுத்தர வர்க்கப்பிரிவினர் முத்தையாவைப் போன்று தான் பெரும்பாலும் இருக்கின்றனர். எவ்வித சமூக அக்கறையும் இன்றி, தானுண்டு தன் குடும்பம், தன்சாதியப் (பண்பாடு) பழக்கமுண்டு என்றுதான் இருக்கின்றனர். மேலும் சமூக அமைப்பின் பரிணாமத்திற்கேற்ப தொழில், படிப்பு, வசதி வாய்ப்புகள் போன்றவற்றில் மாறுதலை, முன்னேற்றத்தை ஏற்படுத்திக் கொள்கின்றனர். ஆனால் சாதி, இந்து மதச் சம்பிரதாயங்கள் போன்றவற்றை மட்டும் விட்டுக் கொடுக்க மாட்டார்கள். அதே சமயம் குழந்தைகளுக்குப் பெயரிடல் போன்ற விசயங்களில் நடிக நடிகையர்களை விஞ்சி சமஸ்கிருத மயமாகிப் போயுள்ளனர். இந்த யதார்த்த நிலைக்கு எதிராக தன் விமர்சனத்தை பதிவு செய்வது சேரனின் நோக்கமாக இருந்தால் அதை முத்தையாவின் தலையில் சுமத்தியிருக்க வேண்டாம். அது அப்பாத்திரத்தின் சுய முரணாக அமைந்து விடுகிறது.

ஏனெனில் முத்தையா பாத்திரம் இன்றைய இடைநிலைச் சாதி நடுத்தர வர்க்க மனிதர்களை அப்படியே பிரதிபலிக்கிறது. தன்பிள்ளைகள் நகர்மயமாவது, கார், பங்களா, செல்போன் என்று முன்னேறுவது அதே சமயம் இந்துவாக வாழ்வது. பார்ப்பனியம் வகுத்துத்தந்த பாதையில் நடைபோடுவது அதாவது குலதெய்வ வழிபாடு, காது குத்து மொட்டை, கருமாதி என்று வாழ்வது அதில் மகிழ்வது. அதேசமயம் நோய் என்று வரும்போது மட்டும் மருத்துவமனை நவீனபரிசோதனை, மருத்துவம் அதற்கு 10 ஆயிரம், 20 ஆயிரம் என்று செலவு என்ற நடுத்தர வர்க்கத்தின் இரட்டை வாழ்க்கை அதாவது ‘பண்பாட்டுக்கு (இந்துத்துவம்) பார்ப்பனீயம் பயன்பாட்டுக்கு விஞ்ஞானம்’ என்ற உண்மை நிலை விமர்சனம் இன்றி படமாக்கப்பட்டுள்ளது.

அதே போல் விவாதமேயின்றி மௌனமாக முத்தையா (சேரன்) கடந்து போகும் ஓரிடம்’சாதி’ என்ற விசயம். முத்தையாவின் சாதி நேரிடையாக, வெளிப்படையாக குறிப்பிடப்படவில்லை. நாயகியின் சாதி மறைபொருளாக ‘நகரத்தார்’ என உணர்த்தப்படுகிறது. முத்தையா ஒருவேளை வெள்ளாளச்சாதியாக இருக்கலாம். என்றாலும் கூட தன் மகன் சாதி மாறி திருமணம் செய்து கொண்டதில் சாதி குறித்து எந்த அதிருப்தியும் இன்றி முத்தையா ஏற்றுக் கொள்வதாக காட்டும் சேரன் பெயரிடல் விசயத்தில் மட்டும் அவ்வளவு கறாராகப் பேசுவது முரணாக அமைகிறது. அது சேரனது விருப்பமாக அரசியலாக அமையும் பட்சத்தில் சில கேள்விகளை அவரிடம் நாம் எழுப்ப வேண்டியுள்ளது. குஷ்பு மீது தங்களுக்கு தனிப்பட்ட முறையில் வெறுப்பு இருக்கலாம். பெயர் என்ற முறையில் குஷ்பு என்ற பெயரைவிட தெய்வானை என்ற பெயர் எவ்விதத்தில் உயர்வானது?

குடும்ப முன்னோர் பெயரை வாரிசுகளுக்குச் சூட்டுவதே சரி என்றால் உலக சாதனையாளர்களான டார்வின், எடிசன், மார்க்ஸ், ஸ்டாலின், பெரியார், அம்பேத்கர், சாக்ரடீஸ் போன்ற பெயர்களும் மற்றும் மதச்சார்பற்ற செழியன், முகிலன், எழில், கதிர், மாறன் போன்ற பெயர்களும் தமிழகத்தில் இன்று புழக்கத்திற்கு வந்திருக்க முடியுமா? ‘குஷ்பு கூரைப்பூ’ என்று கேலி பேசுகிறீர்கள் (முத்தையாவின் மனைவி மூலம்) நாயகனுக்கு ‘இராமலிங்கம்’ என்ற பெயரைச் சூட்டியுள்ளீர்கள் அதன் பொருள் தெரியுமா? ‘அழகிய ஆண்குறி’ இதை விட குஷ்பு மேல் அல்லவா? நீங்கள் ஒருவேளை வேற்றுமொழிப் பெயர் என்பதற்காக ‘குஷ்பு’வை மறுத்தால் இராமலிங்கம், தெய்வானையும் கூட சமஸ்கிருதப் பெயர்களே. இல்லை. பெற்றோரது மகிழ்ச்சியே நமக்கு முக்கியம் என்பதைக் காட்டுவதற்காக, அவர்களுக்கு விருப்பமான பெயரைச் சூட்டுவது, அவர்களது விருப்பத்தை எல்லாம் நிறைவேற்றுவது என்று காட்சியமைக்கப்பட்டது என்று சொன்னால். பெற்றோரது விருப்பம் இது தான் என நம் முன் வைப்பதும் சேரன் தானே. பார்ப்பனியத் தாஸர்களாக பெற்றோரைப்படைத்து அவற்றை விமர்சனமின்றி, எதிர்ப்பின்றி பின்பற்றும் ‘நல்ல பிள்ளை யாக’, தமிழக இளைஞர்கள் பின்பற்ற வேண்டிய உதாரண மகனாக நாயகன் (சேரன்) நிறுத்தப்படுகிறார். கடந்த 100 ஆண்டுகாலத்தில் இவ்வாறு சேரனைப்போலவே தமிழகத்து இளைஞர்கள் எல்லாம் இருந்திருந்தால் தமிழகத்தில் ஒரு பெரியார் தோன்றியிருக்க முடியுமா? தமிழகத்து மக்களின் விடுதலைக்காக இதுவரை உயிர் விட்ட எத்தனையோ வீரர்கள் தோன்றியிருக்க முடியுமா? தமிழகம் தான் தற்போதைய நிலையையாவது அடைந்திருக்குமா? அல்லது முத்தையாவின் மகன் தான் இன்ஜினியரிங் படித்து வேலைக்குத்தான் சென்றிருக்க முடியுமா? ஆகவே சேரன் அவர்களே பெற்றோரை பராமரிப்பது என்பது வேறு. அவர்களை அப்படியே அடியற்றுவது அதன் மூலம் அவர்களை மகிழ்விப்பது என்பது வேறு.

முத்தையாவின் பாத்திரமான இந்து இடைநிலைச்சாதி சிறு - உடமைவர்க்க ஆணாதிக்க கண்ணோட்டத்திலிருந்தே படமும் செய்யப்பட்டிருப்பதுதான் படத்தின் பலகீனம். மாறாக இயக்குநர் படத்திற்கு வெளியே நின்று விமர்சனப் பூர்வமாக அணுகி இயக்கியிருந்தால் முத்தையா உட்பட்ட ஒவ்வொரு பாத்திரத்தின் மீதும் விமர்சனமும் புறபாத்திரங்களின் நியாயமும் வெளிப்பட வாய்ப்பும் கிடைத்து நியாயங்கள் மோதும் களமாக படம் அமைந்திருக்கும். முத்தையாவின் வர்க்கம் என்பது சுரண்டப்படவும், அதே வேளை சுரண்டவும் கூடிய வர்க்கம். ஆனால் தான் சுரண்டப்படுவதற்கு எதிரான கோபமும், தனது சுரண்டல்பற்றிய சுய உறுத்தலும் இல்லாத வர்க்கம். படத்தினைக் காணும் பார்வையாளருக்கு, முத்தையாவைச் சுரண்டும் வட்டிக்கடைக்காரன் மீது கோபம் எழச் சிறிது வாய்ப்பு அளிக்கும் காட்சிகள் உண்டு. ஆனால் முத்தையாவின் அச்சுக் கூடத்தில் வேலை செய்யும் செவிட்டு அழகர்சாமி மீதான சுரண்டல் பற்றிய கடுகளவு விழிப்புணர்வும், உறுத்தலும் எழவாய்ப்பான காட்சியோ, உரையாடலோ, ஒரு சொல்லோ கூட கிடையாது. அழகர் சாமிக்கு மனைவி உண்டு என்பதை ‘எனக்கு தீபாவளியைச் சமாளிக்க ஒரு முழம் பூ போதும்’ என்று உணர்த்திய சேரன் மிமக்தந்திரமாக அழகர் சாமியை பிள்ளைகுட்டியில்லாத சுயதேவை அதிகமில்லாத, முத்தையாவுடன் முரண்படாத, முத்தையா குடும்பத்தின் நலனே தன் நலன் என்று கருதும் விசுவாசியாக காட்சிப்படுத்தியுள்ளார்.

Thavam இவ்வாறு படம் முழுக்க, பால் முரண் பாடு, சாதி முரண்பாடு, வர்க்க முரண்பாடு போன்ற அனைத்து முரண் பாடுகளையும் அணைத்துவிட்டு, பாதிக்கப்பட்டவர்களை ஊமைகளாக அல்லது விருப்பார்ந்த அடிமைகளாக திரையில் நடமாட விட்டுள்ளார். குறிப்பாக நாயகி படம் முழுக்கவும் பேசிய வசனங்கள் மிகமிகக் குறைவானவை. அதுவும் படிக்கும் காலத்தில் பேசுபவை. திருமணத்திற்குப் பிறகு குற்ற உணர்வு கொண்ட ஊமைப்பெண்ணாக, கணவனின் நிழலாக நடமாடுகிறார். இதுபோன்ற பெண் பாத்திரத்தை சமீபகால படங்களில் நாம் பார்த்திருக்கவே முடியாது.

அதேபோல் வாங்கிய கடனை மூத்த மகனின் சம்பளம் ரூ.5000/_ கொண்டு மாதாமாதம் முத்தையா கட்டிவரும் சூழலில் மூத்தமகன் பகைத்துக் கொண்டு தனிக்குடித்தனம் போய் விடுகிறார். இளையமகன் சென்னைக்குச்சென்று விடுகிறார். முத்தையா வீட்டுக்கடனை எப்படி கட்டுகிறார். தர்க்கப்படி பார்த்தால் தன் அச்சுக்கூடம், வீடு போன்றவற்றை வட்டிக்காரனிடம் இழந்து விட்டு ஓட்டாண்டியாக நிற்கவேண்டும். அப்படி கதை செய்யப்பட்டிருந்தால் வட்டிச் சுரண்டலினால் சீரழியும் குடும்பங்கள் பற்றிய கதையாக அது அமைந்து விட்டிருக்கும். மாறாக சில வருடங்கழித்து ஓட்டாண்டியாக திரும்பி வரும் இளைய மகனுக்கும் அப்பாவின் அச்சகமே சோறு போடுகிறது. எந்த தர்க்கத்திற்கும் வசப்படாத இடைவெளி அது.

இன்றைய நடுத்தரவர்க்கம், உலகமய நெருக்கடிகளுக்கு மத்தியில், சமூக அக்கறையின்றி எப்படியாவது முன்னேறி விடத்துடிக்கிறது. ஆனால் உலகமயம் சிறுவுடமைப் பொருளாதாரத்தை மட்டுமின்றி குடும்ப உறவுகளை, மரபுகளையும் பாதிக்கிறது. உலகமய மாற்றங்களுக்குட்பட்டு கல்வியையும், பொருளாதாரத்தையும் தேடிக்கொள்ள தன்னை மாற்றிக் கொள்ளும் பார்ப்பனிய மனநிலையானது பார்ப்பனிய மரபு, குடும்ப உறவுகள், பண்பாடுகளில் நிகழும் மாற்றங்களை மட்டும் எதிர்க்கிறது. கடந்த 200 ஆண்டுகால இந்துத்துவச் சிந்தனையின் வரலாறு இதுதான். இந்த வரலாறு வகைப்பட்ட சிந்தனையின் தொடர்ச்சியாகவே சேரனின் கண்ணோட்டமும் அமைந்துள்ளது. சேரனுக்கு - நாயகனுக்கு காரையும் பங்களாவையும் கொடுத்த அதே சமூக அமைப்புதான் அவரது அண்ணன், அண்ணி போன்றவர்களையும் உற்பத்தி செய்கிறது.

நீங்கள் ‘தவமாய் தவமிருந்து’ மாதிரி எத்தனை படமெடுத்து பிரச்சாரம் செய்தாலும், தன் பெற்றோரை முதியோர் இல்லத்திற்கு விரட்டியடிக்கும் மேட்டுக்குடியினரை, பெற்றோரை தற்கொலைக்குத்தள்ளும் நடுத்தர வர்க்கத்தை, அல்லது பிச்சையெடுக்க வீதிக்கு விரட்டிவிடும் ஏழைகளை தடுத்துவிட முடியாது.

ஏனென்றால் மனித மனங்களை விட வலிமையானது ‘சமூக நெருக்கடி’யும் ‘முரண்பாடும்’. அதுபற்றிய தெளிவற்றவர்கள் பழைய கூட்டுக்குடும்ப பொற்கால கனவுகளில் மூழ்கிப்போக வேண்டியது தான். சேரனைப் போல.