இராணுவ முகாமையோ போர்க் கப்பலையோ தாக்குவதற்குகொப்பானது வாசிப்பு. குறிப்பாகக் கவிதை வாசிப்பு. கவிதை தோற்றுப் போகும் போது கவிதா நிகழ்வு நிகழ்த்தியோ வேறெதுவும் செய்தோ அதைக் காப்பாற்றி விட முடியாது. தத்தம் கவிதைகளை நிகழ்த்த மேடைக்கு வரும் கவிஞர்களை போரில் தோற்கடிக்கப்பட்ட அடிமை வீரர்களாகக் கொள்வது நமது மரபு. தமது கவிதை உயிரையும் மானத்தையும் காப்பாற்றுங்களென பார்வையாளர்களை நோக்கியும் விமர்சகர்களை நோக்கியும் கவிஞர்கள் பரிதாபத்தோடு கேட்ட காலம் போய் விட்டது. வாசிப்பு மட்டுமே இறுதியாகத் தீர்மானிக்கிறது.

ஈழத்துக் கவிதைகள் ‘மகாகவி’ உருத்திரமூர்த்தியிலிருந்து தொடங்குவதாக அவரது குடும்ப அங்கத்தினரும் உறவினரும் (கவனிக்க நுஃமான் மாமா) ஊரவர்களும் நடத்திய NGO பத்திரிகையில் “மகாகவியின் கவிதைத் தொடர்ச்சி’’ என்று உலகத்திலுள்ள எல்லோரையும் ஆசீர்வதித்தார்கள். NGO கடையை மூடிய பின் மகாகவியை இலவசமாக இருட்டடிப்புச் செய்ய எவரையும் காணோம். கைலாசபதியின் பாரம்பரியங்களையும் கடை கண்ணிகளிற் காணோம்.

ஒரு நாலைந்து வருசமுன்னிருக்கும். தினக் குரலில் உ.மூவின் குறும்பாக்களை ஒருவர் ரச வாதம் செய்தார். அனேகமாக அவர் அளவெட்டியாக இருக்கலாம். பெயர் கொஞ்சக்காலம் மனதில் இருந்தது. பின் மறந்து போயிற்று. உ.மூ வின் குறும்பாக்களை வியந்துரைத்து விதந்தோதியிருந்தார்.

தென்னை மரம் ஏறுகிறான் சித்தன்
இன்ன கண்டான் அவ்வழகுப் பித்தன்
தன்னுடையை மாற்றுகிறாள்
கிணற்றடியில் தங்கம்மாள்
இன்னும் இறங்கானாம் அவ் எத்தன்.
(மகாகவி உருத்திரமூர்த்தி - குறும்பா)

ஒரு மின்னற் கீற்றிலே உலகைத் தரிசிக்க இயலாது தான். ஆனால் தரிசிக்க முடியாதென்று எவரும் சொல்லவில்லை. உ.மூவைத் தரிசிக்கும் பாக்கியம் எந்தனுக்கும் கிட்டிற்று. சாதி ஒடுக்குமுறையின் தீவிரம் யாழ்ப்பாணத்தில் நாளுக்கு நாள் தீவிரமாகிறதே தவிர குறைந்தபாடில்லை. மேலும் பத்து லட்சம் பனைமரங்களை வளர்த்து மேலும் பனை ஏறுங்கள் என்று தலித்துகளுக்கு விடுதலைப்புலிகள் தமிழீழத்தின் பேரால் அறிவித்தபோது அதற்கு எந்த எதிர் வினையுமில்லை. குலத்தொழிலையும் குல தர்மத்தையும் சமாதானகாலம் காப்பாற்றுகிறது. பனையால் விழுந்தவனை மாடேறி மிதிப்பது இஃதோ!

ஆனாற் பாருங்கள் உ.மூவை, ‘தன்னுடையை மாற்றுகிறாள் கிணற்றடியிற் தங்கம்மாள் இன்னும் இறங்கானாம் அவ் எத்தன்’ என்று தலித்துகளின் நிலையைக் கண்டு அன்றே மனம் பதைத்துப் போகிறார். எத்தன் என்றால் என்னவென்று ஒரு பிரெஞ்சு மொழி அறிஞர் என்னிடம் கேட்டார். எத்தனென்றால் ஏமாற்றுபவன். கள்வன், திருடன், எத்தித்திருடு மந்தக் காக்கை, என்று நமது சமூகம் பொருள் கொள்ளும். கிரிமினல் என்று அகராதி சொல்லும். தலித்துகள் பனை ஏறப்போகும் போது அதே நேரம் பார்த்து கிணற்றடிக்குக் குளிப்பதற்கு வெள்ளாடிச்சிகள் ஏன் வருகிறார்கள் என்ற கேள்வி யாழ் சமூகத்தில் எப்போதும் இருந்து கொண்டிருக்கிறது. கிணறு, தொழுகை, கிணற்றடி வேலிக்கதைகள் எல்லாம் இதே கேள்வியைக் கேட்க எப்போதும் மறந்ததில்லை. ஆனால் உ.மூவின் மைந்தனிடம் ஒரு “கவிதா நிகழ்வில்’’ பாரிஸில் கேட்டபோது அவர் எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்று குதிக்க வெளிக்கிட்டார்.

“ஏன் வெள்ளாடிச்சி என்று பார்க்கிறீர்கள் வெள்ளாடிச்சி இல்லாத பெண்ணென்று பாருங்கள்’’ என்று கேட்டார். அப்பனுக்குத் தப்பாத பிள்ளை. பிரச்சனை பனை ஏறும் தலித்தை எத்தன் என கொலை வெறியோடும், வெறுப்போடும் அழைப்பதைப் பற்றியது. தந்தையரதும் தனையரதும் குறி உடை மாற்றும் பெண் மீது. இதுதான் கேவலமான ஒரு தலித் பெண்ணை நிறுத்துவதன் பின்னணி என்ன? தலித் பெண் என்றால் தலித் ஆண் பார்ப்பது போல் நாம் தப்பி விடலாம் என்றா? அல்லது தலித் பெண்ணென்றால் பார்க்கலாம் என்றா?

தலித் பார்வையோடு இக்குறும்பாவை அணுக வேண்டாம் என்றாலோ அல்லது இது இடைச் செருகல் என்றாலோ மனம் ஓரளவு தற்காலிக ஆறுதலடைந்திருக்கும். தனயருக்கு எப்படியாவது தந்தையரைக் காப்பாற்றியாக வேண்டும் என்ற முனைப்பு. தனயர் ஒரு கேவலமான சமரசத்திற்கு வந்தார். நீங்கள் “இந்தாபிடி இந்தா பிடி’’ என்று பெண்ணின் முலையை எழுதலாமெனில் அதைப்போல்தான்’’ என்றார். மதிப்பு மறுப்பறிக்கையின் அந்தப் ‘புகழ்பெற்ற’ வாக்கியத்தின் தாக்கத்திலிருந்து அவர் தான் இன்னும் விடுபடவில்லை என்பதைக் கோடி காட்டினார்.

அறிக்கையில் வரும் அந்த ஆணின் ஆணாதிக்க மொழியை நான் ஏற்றுக் கொண்டேன். முன்னர் ஒரு காலத்தில் சரிநிகரில் “புண்ட ஆண்டி யாக்’’ என்று எழுதும் போதோ உயிர் நிழலில் கானக்குயில் பெண்ணைத் தூசணத்தால் நையாண்டி செய்யும் போதோ வராத விழிப்பு இப்போது மட்டும் “ஐயையோ நான் பெண்ணியவாதி’’ என்று அவசரமாக வந்ததன் பின்னணி என்ன? அறிவுப்புலம் அகல வேண்டும். அக்குறும்பு பண்ணக்கூடாது.

அக்குறும்பாவின் காலம் என்னவாக இருக்குமென்று நினைக்கிறீர்கள்? எச்சாமம் வந்து எதிரி நுழைந்தாலும் நிச்சாமத்துக் கண்கள் நெருப்பெறிந்து நீறாக்கும் என்ற சாதி எதிர்ப்புப் பதாகை ஏந்திய, இலக்கியத்தை போராயுதமாக மாற்றிய, மக்கள் கவிஞர்கள் ஆயுதமேந்தி போராடிய காலம். மேலும் அக்காலம் சொல்லும்.

பாளையைச் சீவும் கைக்கு
புதுப்பணி பார்த்துக் கிடக்குதடா
அந்த நாய்களின் வாலைச் சீவி
நறுக்கிடும் நாளும் நெருங்குதடா
சாதித் திமிருடன் வாழும் தமிழர்
பாதித் தமிழரடா!

சொல்லுங்கள்... யாரை யார் இருட்டடிப்புச் செய்தார்கள்? எது கவிதை?

- சுகன்