பாண்டிச்சேரி நகரம் என்பது என்னளவில் பல ஞாபகங்களின் கூடு. உயர்ந்தோங்கிய கட்டிடங்களும் கல் பாவிய வீதிகளும், கழிந்துபோன புராதனத்தினுள் மீண்டும் நடந்துசெல்வதான ஒரு மாயக் கனவினுள் செலுத்துபவை. நகரத்தின் மையப்பகுதி மட்டுமே இத்தகைய வசீகரங்கள் பொருந்தியதென்றும், சுற்றுவட்டாரப் பகுதிகள் வழக்கமான சீரழிவுகளுடனே இருக்குமென்றும் சில நண்பர்கள் சொல்லக் கேட்டிருக்கிறேன். அந்நகரம் குறித்த பிரமிப்புகள் கலைவதை அனுமதிக்காத என்னிடத்தில் மாற்றங்களை நிகழ்த்த வேண்டுமென்ற விதியின் நூல்வடிவாக, பாரதி வசந்தனின் மனிதர்கள் இன்னமும் இருக்கிறார்கள்என்பதைப் பார்க்கிறேன்.

நகரவாழ்வு கொணர்ந்து நாகரிகத்தினாலும், உலகமயமாக்கலினாலும் மனிதமானது சேடமிழுத்துக் கொண்டிருக்கும் நிலையில், மனிதர்களுள் இருக்கக் கூடிய கனிவை, அன்பை, அக்கறையை நம்பிக்கையூட்டும் தொனியில் இந்த மனித சமூகத்தில் எழுதி வைப்பதற்கென்றே வெளிவந்திருக்கம் நாவலென்றும் இதனைச் சொல்லலாம். பாண்டிச்சேரியின் கொசப்பாளையம் என்ற இடம்தான் இந்நாவலின் கதைக்களம். அந்த கொசப்பாளையத்தில் வாழும், மட்பாண்டம் செய்வதைத் தொழிலாகக் கொண்ட குயவர்கள் என்றழைக்கப்படுபவர்களே இதன் கதாபாத்திரங்கள். அந்த எளிய மக்கள் மனிதர்கள்என்ற பதத்தின் முழுமை யான பொருளைப் பிரதிபலிப்பவர்களாக வாழ்வதே இக்கதையின் அடிச்சரடு.

மட்பாண்டத் தொழிலாளர்களைப் பற்றி வெளிவந்திருக்கும் முதல் நாவல் இதுவெனவே எனது வாசிப்பிற்கெட்டிய சிற்றறிவு சொல்கிறது. அந்தவகையில் இதுவொரு முக்கியமான படைப்பு. அன்புமதி என்ற எழுத்தாளன் தற்செயலாக (அக்கி என்ற நோய்க்கு வைத்தியம் செய்யப்போன இடத்தில்) அந்த மனிதர் களைக் கண்டடைகிறான். மாநகரத்தின் மலினங்களால் நொந்து போயிருக்கும் அவனது மனத்திற்கும் மருந்தாகின்றனர் கொசப்பாளையத்தின் அவன் கண்டு பிடித்தபுதிய உறவுகள். எழுத்தாளன் தனது எழுத்துக்கள் வழியாகத் தன்னைத் தான் வெளிப்படுத்துகிறான் என்ற வகையில், இந்த சமூகத்தின் மீதான பாரதி வசந்தனின் அயர்ச்சியை, நாம் நாவலின் பல இடங்களில் வாசிக்கிறோம்.

பொதுவாக ஒரு ஊரையட்டியும் அதன் வரலாற்றையட்டியும் எழுதப் படும் நாவல்கள் உயிருள்ளவையாக இருக்கின்றன. அதிலொரு நம்பகத்தன்மை வந்துவிடுகிறது. அந்தரத்தில் பாவாமல் யதார்த்தத்தின் ஈர்ப்பிசையாக அது வாசகனை இழுத்து வைத்திருக்கிறது. நமக்குப் பரிச்சயமான வீதிகளுடனான ஒட்டுறவு அது. இந்நாவலில் கொசப்பாளையமும் அதனையண்டிய புதுச்சேரியின் ஏனைய பகுதிகளும்கூட கதாபாத்திரங்களாகவே இருப்பதைப் பார்க்கிறாம். சம காலமும் இறந்தகாலமும் ஒப்புநோக்கப்படுகின்றன. வரலாறு புனைவின் வடிவில் வாசகனோடு கூட நடந்து செல்கிறது. உதாரணமாக நெல்லித்தோப்பு கருமாதி காரியங்கள் செய்கின்ற கொட்டா காவேரி மில்லாகி, மாடர்ன் ரைஸ் மில்லாக மாறிய கதையை சமகாலத்தில் வாழ்கிறவன் அறிந்திருக்க வாய்ப்பில்லை. அதே போலத்தான், அண்ணாத்துரையாகத் தன்னைக் கற்பித்துக் கொண்ட பழனிபத்தர், நவகண்டச் சித்தர், வாஞ்சிநாதன், கவிஞர் கம்பதாசன் போன்றவர்களையும் நாவலுக்குள் அழைத்து வருவதன் வழியாக, ‘மனிதர்கள் இன்னமும் இருக்கி றார்கள்நாவல் புனைவு - அபுனைவு இணைந்த படைப்பாக உருவெடுத்தி ருக்கிறது.

தார்மீக அறங்களால் பின்னப்பட்ட மனமானது தன் தனிப்பட்ட வாழ்வு குறித்து மட்டும் சிந்திப்பதில்லை. தன்னைச் சூழுவுள்ள சமூகத்தைக் குறித்தும் அதன் அறியாமைகள், துன்பங்கள் குறித்தும் தீராத உளைச்சல் கொண்டியங் குகிறது. இந்நாவலின் முதன்மைப் பாத்திரம் எழுத்தாளனாக வேறு இருப்பதனால் அவ்வித உளைச்சல்கள் இயல்பானதே. (எழுத்தை தன்னை நோக்கிய கவனக் குவிப்புக் காரணியாகவும் வணிகமாகவும் மட்டும் கருதுபவர்களுக்கு இது பொருந்தாது) அன்புமதி வழியாக பாரதி வசந்தன் பேசுகிறார்:

சிலைகளைக் காசு கொடுத்து வாங்கிப் போய் தங்கள் வசதிக்கேற்றவாறு பூஜை -புனஸ்காரங்கள் எல்லாம் செய்வார்கள். கொண்டாடுவார்கள். ஆனால், அவற்றைப் படைத்த பிரம்மாக்கள் குடிசையிலேதான் முடங்கிக் கிடக்க வேண்டும். கிடக்கிறார்கள். வேடிக்கையான உலகம்...

மனிதர்கள் இன்னமும் இருக்கிறார்கள்நாவலில் வரும் விசாலாட்சி அம்மா ளும் அவளுடைய மகன் சச்சிதானந்தனும் அற்புதமான பாத்திரப் படைப்புகள். எளிமையான, ஏழ்மையான வாழ்க்கை வாழும் அவர்களுள் இருக்கும் மனிதத் தன்மை, படித்தவர்களையும் - பணத்தை விரட்டித் திரிபவர்களையும் வெட்கம் கொள்ளத் தூண்டுபவை.

நதிநீரில் லயத்துடன் நகர்ந்துகொண்டிருந்த படகானது எதிர்பாராத தடை யன்றில் சிக்கி, நகர்வை நிறுத்தித் தளும்பிக் கொண்டிருப்பதைக் காண நேர்ந்ததுபோன்ற மனநிலையை நாவலின் முடிவு தந்தது. சீரான எழுத்தோட்டத் தினைத் தொடர்ந்து திடுக்கென்று எதிர்ப்படும் முடிவை வாசகன் - வாசகி நேரெதிர் கொள்கிறான் - கொள்கிறாள். நீரிநிலைகளின் நடுவில் அநாதரவாகத் தனித்துத் தளும்பிக் கொண்டிருக்கும் படகு கிளர்த்தும் துயர அலைகள்தான் அக் காட்சியைக் கவிதையாக்குகிறது. இந்நாவலின் முடிவும் அவ்விதமே. தேக்கமோ நகர்வோ அவரவர் மனநிலைக்கேற்றபடி எடுத்துக்கொள்ள வேண்டியதுதான். அதைத் தீர்மானிக்கும் உரிமை வாசகர்களுக்கே உரித்தானது.

வெளியீடு : அலமேலு பதிப்பகம்,

50, எல்லைக்கல் தெரு,

குறிஞ்சிப்பாடி - 607 302.

தொலைபேசி : 04142 258942

விலை : ரூ. 70