நிலப்பரப்பே இல்லாத கவிதைகளும்
நீடித்து நிற்கும் போல
உயிர்களே இடம்பெறாதும்
உயர்கவிதைகள் அமையும் போல
சகமனுஷனை சட்டை செய்யாத கவிதைகளும்
சாஸ்வதம் பெற்றுவிடும் போல
தத்துவ விசாரம் செய்யும் கவிதைகளையும்
தள்ளிவைத்துவிட முடியாது போல
யாப்பை வைத்தும்
நவீன கவிதை கட்டலாம் போல
காமமும் காதலும்
கவிதையாகிவிடும் போல
உபதேசங்களும் லோகஷேம யோசனைகளும்
உன்னத கவிதைகளாக உருவாகிவிடும் போல
வாசகனைப் பொருட்படுத்தாத கவிதைகளும்
வாழ்ந்து கொண்டிருக்கும் போல
ஆண்கள் மீதான வெறுப்பும் விமர்சனமும்
அழகழகான கவிதைகளாக வடிவெடுக்கலாம் போல
விஷயமே இல்லாமலும்
வித்தகக் கவிதைகள் இயற்றலாம் போல
எது கவிதையாகும் எது கவிதையாகாது என்று
இப்பொழுதாவது எடுத்துச் சொல்லுங்கள் ஆதிகவிகளே
விமர்சகர்களுக்கு விளங்கிக் கொள்ள முடியாவிட்டாலும்
வாசகர்களுக்கு பிரயோஜனப்படும் நிச்சயம்.