பாலை

உக்கிரமேறிய தனிமை
உலகை உருக்கும் வெம்மை
தங்கும் கருவீடு

வரங்களை மறுக்கும்
கொடுந் தவம்
தன்னை அழித்தே
எரியூட்டும் இருப்பு
ஆழி குடித்து
துளி நிரப்ப முடியா
அட்சய தாகம்

பாலை
அவள்
பெண் மட்டுமே

உவர்க்கும் இரவுகள்


நிறங்கள் நெருங்கி நேர்கோடாகி
சிதிலமடையா வெண்ணிற ஒளியின்
பிணைப்பு முறுக்கேறி பிழிய
வழிகிறது இரவு நதியின் பாடலாய்
கோரைப்பற்கள் அணியும்
இரவின் சிரிப்பு பிரபஞ்ச
இடுக்குகளை துளையிட்டு நிரப்ப
அலாவுதீனின் அடிமை பூதமும்
கருமை நிறமேறிய கருவறைகளும்
கதற ஆரம்பிப்பது அநேகமாய்
சதிகள் கூர்தீட்டப்படும் கொடிய
இந்த இரவுப் பொழுதில் தான்