ஆசைத்தம்பி இளம் வயது முதல் சுயமரியாதை உணர்ச்சியோடு திராவிட இயக்கத்தில் ஈடுபட்டவர். தி.மு.க.வின் நிறுவனத் தலைவர்களில் ஒருவர்.  “காந்தியார் சாந்தியடைய” என்னும் நூல் எழுதியதற்காகத் தளைப்படுத்தப்பட்டுத் திருச்சி சிறையில் அடைக்கப்பட்டவர்.  மனதிற்குச் சரியென்று பட்டதை, தவறு செய்கிறவர் அண்ணாவாக இருந்தாலும் தட்டிக் கேட்கத் தயங்காதவர். இறுதிவரை தி.மு.க.வில் இருந்தவர்.  1977 மக்களவைத் தேர்தலில் தி.மு.க. வேட்பாளர்கள் மற்ற அனைவரும் தோற்ற நிலையில் ஆசைத்தம்பி மட்டுமே வெற்றி பெற்றார்.  

      ஆசைத்தம்பி தாம் நடத்திவந்த “தனி அரசு” ஏட்டில் “தி.மு.க. தோழர்களின் பகுத்தறிவுக்கு...” என்ற தலைப்பில் தொடர் கட்டுரை எழுதி வந்தார். அத் தொடரின் நான்காம் அத்தியாயமாக 1962 சனவரி 22இல் எழுதிய தொடர் கீழே தரப்படுகிறது.  சனவரி 22 என்ற தேதி புரிந்து கொள்ளும் அளவுக்குத் தெளிவாக இல்லை. எனவே ஒரு நாள் முன் பின்னாக இருக்கலாம்.  

........... 

அண்ணாவும் திராவிட நாடும் 

      ஜின்னாவும் அண்ணாவும்! என்ற தலைப்பில் தி.மு.க. தோழர்களின் பகுத்தறிவுக்கு என்று டிசம்பர் மாதம் எழுதியிருந்தேன். 

      ஜனாப் ஜின்னா பாகிஸ்தான் பெற்றதுபோல் பெறுவேன் - என்று அறிஞர் அண்ணா அவர்கள் பேசி வருவதை சுட்டிக் காட்டி, ஜின்னா பாகிஸ்தான் பெற்ற பாதை எப்படி என்பதை விளக்கி - அந்த சூழ்நிலை இங்கு இருக்கிறதா - அண்ணா உண்டாக்கினாரா - கழகம் உண்டாக்கியதா - என்று கேட்டிருந்தேன். 

      திராவிட நாடு கொள்கையை எதிர்த்து ஏளனமாகப் பேசிவிடுவதன் மூலம் வெற்றி பெற்று விட்டதாக சிலர் கருதுவது போல் திராவிட நாடு கொள்கை யை ஆதரித்து, அடுக்கடுக்கான ஆதாரங்களோடு பேசி வருவதன் மூலம் வெற்றியே பெற்று விட்டதாக கழகமும் கருதுகிறது!  ஆனால் - 

      திராவிட நாடு கொள்கையை எதிர்ப்பவர்களும் தோற்றுவிட்டனர். ஆதரிப்பவர்களும் தோற்றுவிட்டனர்.  இது என் தாழ்மையான கருத்து.  திராவிட நாடு சாத்தியமா இல்லையா? என்கிற சர்ச்சையைக் கிளப்பி எதிர்ப்பது புத்திசாலித்தனமல்ல.  அண்ணாவும் நாமும் நடத்தும் விவாதமும் நன்றா என்பதை எண்ணிப் பார்க்கிற போது, அண்ணா பேச்சுக் கூட கவர்ச்சி இழந்து விடும். 

      சதா லட்சிய வளர்ச்சி ஒன்றுக்கு மட்டும் முஸ்லிம் லீக் பயன்பட்டதே தவிர, லியாகத் அலிகான் ஜாலியாக இருக்கவும், பிரோஸ்கான் நூன் பிரபுவாக மாறவும், திலீப்குமார் திரை உலகில் ஜொலிக்கவும் முஸ் லீம் லீக் பலியாகவில்லை. 

      பாகிஸ்தான் இலட்சி யத்துக்காக, பம்பாயில் இருந்து கொண்டே பாகிஸ்தான் பிரதேச முஸ்லீம் களையும் கடல்கடந்த முஸ்லீம்களையும் உலக முஸ் லீம்களையும் பிறைக் கொடி யின் கீழ் ஒன்று படுத்தி வைத்தி ருந்தார் ஜின்னா! 

      நம் அண்ணாவை எடுத்துக் கொண்டால் திராவிட நாட்டுக்காக மலையாளிகளையோ, தெலுங்கர்களையோ, கன்னடியர்களையோ அண்ணா ஒன்று படுத்தினாரா இல்லையா என்பது ஒருபுறம் இருக்கட்டும். தமிழர் களையாவது ஒன்றுபடுத்தினாரா என்பதும் ஒரு புறம் இருக்கட்டும் - தம்பிகளையாவது ஒன்றுபடுத்தினாரா? 

      போய்விட்ட தம்பிகள் தொலையட்டும். இருக்கிற தம்பிகளாவது ஒருவருக்கொருவர் உள்ளொன்றும் புறமொன்றும் இல்லாமல் நல்லுறவோடு இருக் கிறார்களா? 

      இந்த இலட்சணத்தில் ஜனாப் ஜின்னாவைப் போல் அண்ணா திராவிட நாடு வாங்குவது எப்படி? 

      கையில் கத்தி ஏந்திய லட்சோபலட்சம் சீக்கிய சிங்கங்கள் மாஸ்டர் தாரா சிங்கின் பின்னிருந்தும் பஞ்சாப் ராஜ்யக் கிளர்ச்சி பயனற்றதாகி விட்டபோது, ஒருவரை ஒருவர் தூங்கும் போது கல்தூக்கி வைக்கும் கபட உள்ளத்தோடு வேடம் போடும் தம்பிகளின் துணையோடு திராவிட நாடு கிடைக்குமா? 

      திராவிட நாடு கொள்கைக்கு வலிவு ஏற்பட முதலில் தேவைப்படுவது தெளிவு! 

      இந்தத் தெளிவை நாட்டுக்கு அளிப்பது இருக்கட்டும். தம்பிமார்களுக்கு அளிக்கப்பட்டிருக்கிறதா? 

      திராவிட நாடு கொள்கையில் தம்பிமார்களுக்கு தெளிவு இருக்கிறதா? சம்பத்துக்கு இல்லை. 

      துரோகி! கொள்கையை விட்டுவிட்டார்! தொலையட்டும் ! 

      ஆசைத்தம்பிக்கு இருக்கிறது!. கண்டபடி எழுதுகிறான்!. கங்காணி தொலையட்டும்! 

ஆனால் - 

      அண்ணாவின் தோளைப் பிடித்துத் தொங்கிக் கொண்டு கழகத்தை தாங்கிக் கொண்டிருப்பதாக உள்ள தம்பிமார்களிடத்திலே திராவிடநாடு கொள்கையில் தெளிவு இருக்கிறதா? 

      அந்தத் தங்கத் தம்பிகளிலே சிங்கத் தம்பியாக அண்ணா வர்ணிக்கிற நண்பர் கருணாநிதி அவர்களுக்கு திராவிட நாடு கொள்கையில் தெளிவு உண்டா என்பது இருக்கட்டும் - நம்பிக்கை உண்டா? 

      அண்ணாவின் அறிவுத் திறமையின் மீது ஆணையிட்டுக் கேட்கிறேன் - கருணாநிதிக்கு திராவிட நாடு கொள்கை மீது நம்பிக்கை உண்டா? 

      தஞ்சையில் கருணாநிதி தோற்றால் திராவிட நாடு தோற்றதுபோல் ---என்று அண்ணா சொன்னாரே அந்த வார்த்தைகள் அண்ணாவின் உள்ளத்திலிருந்து வந்தவைகளா? மீண்டும் இதே வார்த்தைகளை அண்ணா அவர்கள் தட்டுத் தடுமாறாமல் சொல்ல முடியுமா? 

      திராவிட நாடு கொள்கையின் முதல் விரோதி ஒருவர் உண்டென்றால் அவர் நண்பர் கருணாநிதி! 

      இது அறிஞர் அண்ணாவுக்கு நன்கு தெரியும். மறுக்க முடியாது. மனச்சாட்சியோடு! 

Pin It