கண்ணகி சிலையை மீண்டும் உயிர்ப்பித்ததற்கான கொண்டாட்டங்கள் ஒருவாறு அடங்கியுள்ள நிலையில், பெண் மற்றும் பெண்மை குறித்தான தமிழ்ச் சமுதாயத்தின் அணுகுமுறையினையும் காலம்காலமாக பின்பற்றப்பட்டு வந்த பல்வேறு நிலைப்பாடு களையும் குறித்த விவாதம், இவை பற்றிய ஓரு மாற்றுச் சிந்தனையின் அவசியத்தையும் தேவையையும் வலியுறுத்தும். இன்றும் பெண், பெண்மை, பாலியல் குறித்தான எந்த ஒரு விவாதமும் மிகுந்த எச்சரிக்கையுடன் கையாளப் பட வேண்டியிருக்கின்றது. இவை எளிதாக கலாச்சார உணர்வுகளைத் தூண்டிவிடுவதுடன் மட்டுமல்லாமல் உடனடியாக அரசியலாக்கப் பட்டு ஆதாயம் தேடுவதற்கான ஓரு வெளியையும் ஏற்படுத்தித் தருகின்றது.

இன்றைய பெண்ணிய நோக்கில் தமிழ்ச் சமுதாயத்தையும் அதன் பண்பாட்டு வளர்ச்சி யையும் மதிப்பிட நேர்ந்தால், அதை, பெண்ணை என்றும் உயர்ந்த இடத்தில் வைத்துப் போற்றிய தாக இன்றும் நம்பிக்கொண்டிருக்கும் சமுதாயம், தன் நாட்டையும் மொழியையும் பெண்ணாக உருவகப்படுத்தி, பெண்மைக்கான இதன் அனைத்து வரையறைகளையும் இவைகளுடன் தொடர்புபடுத்தி ஆளுமை செய்யும் சமுதாயம், பெண்ணிலை உட்பட, சமுதாயத்தின் எந்தவொரு தாழ்வுநிலைக்கும் பிராமணிய கலப்பு என்ற காரணத்தை முன்வைத்து எளிதாகப் தப்பித்துக் கொள்ளும் சமுதாயம், பெண்ணை இன்பம் துய்க்கும் எந்திரமாகக் கருதி ஆணின் விருப்பு வெறுப்புகளுக்கு வளைந்துக்கொடுக்கும் வகையில் இதன் செயல்பாடுகளை வடிவமைத்து, பெண் தனக்கென்று ஓர் அடையாளத்தையோ பண்பாக்கங்களையோ ஏற்படுத்திக்கொள்ளாமல் அல்லது அதற்கான அவசியம் ஒன்று இருப்பதைக்கூட உணராமல் ஆணை மையப் படுத்தியே தன்னடையாளங்களை அறியச்செய்த சமுதாயம், தான் வரையறுத்துக் கொடுத்த சிறு தளத்தில் பெண் தன் சாதனைகளையும், இன்ப துன்பங்களையும் சுருக்கிகொள்ள வேண்டும் என எதிர்பார்க்கும் சமுதாயம் என பல்வேறு வரையறைகளுக்குள் கொண்டுவர முடியும்.

சங்ககாலம் அதனை தொடர்ந்து வந்து மணிமேகலை சிலப்பதிகார காலங்கள், திராவிடர் கலாச்சாரத்தின் பொற்காலமாகவும் மாசற்ற தமிழ் சமுதாயத்தின் இருப்பிடமாகவும் கருத்தாக்கம் பெற்றுள்ளன. சாதி இன வேறுபாடின்மை, பெண் உயர்நிலை போன்ற புனைவுகள் இக்கருத் தாக்கங்களின் மையமாக வைக்கப்பட்டுள்ளன. பெரியார், ஜீவா போன்றோர் இவற்றின் பொய்மைகளை அவ்வப்பொழுது சுட்டிக் காட்டிய போதிலும், மொழிசார்ந்த இயக்கத்தின் அவசியத்திலும் தீவிரத்திலும் இவை எடுபடாமல் போயின அல்லது தேவையற்றவையாக உணரப்பட்டன. இந்தச் சூழ்நிலையில்தான் "சிலப்பதிகாரக் கண்ணகியை' பண்டையத் தமிழகத்தின் சின்னமாக, தமிழாக, இளமை, கற்பு, அழகு நிறைந்த தமிழ்த்தாயாக ஓர் கற்பனையாக்கத்திற்குள் கொண்டுவர நேர்ந்தது. உண்மையில் பெண்மை குறித்தான அனைத்து ஊடக வெளிப்பாடுகளும் ஆணின் விருப்பங் களையும் எதிர்பார்ப்புகளையும் ஈடுசெய்வதற்காக பிம்பப்படுத்தப்பட்டவையே. பெண்களின் மூலமாக இதுவரை வெளிவந்த பெரும்பாலன ஆக்கங்கள் எல்லாம், பெண்களுக்கென்று வகுக்கப்பட்ட எல்லைகளுக்குள்ளான உற்பத்தி களாகவும் அல்லது ஆண்வழி ஆக்கங்களின் பின்பற்றலாகவுமே அமைந்திருக்கின்றன. சிலப்பதிகாரத்தின் கண்ணகி பாத்திரத்தை ஒரு மாற்றுப்பார்வையில் ஆராய வேண்டுமென்றால் அது அக்கால ஆணாதிக்க சமுதாயத்தின் ஆளுமையின் பிரதிபலிப்பு எனவும் தற்கால ஆணாதிக்க சமுதாயத்தின் கற்பனைப் புனைவு எனவும் கருதலாம்.

பெண்ணியம் சார்ந்த புரிதலில் சங்ககாலப் பெண்கள் பிந்தய காலங்களைவிட எவ்விதத்திலும் உயர்நிலையில் இருந்தார்கள் என்று சொல்லிவிட முடியாது. ஒருசிலரை தவிர பெரும்பாலான சங்ககாலப் பெண்களை நாம் ஆண் மொழிகள் மூலமாக உணர்கின்றோம். நாம் அறியும் பெண்மை ஆண் மேலாதிக்க சமுதாயத்தின் கட்டமைப்பு. அவை ஆண் விரும்பிய, வரையறுத்த பெண்மையை வெளிப்படுத்துகின்றதே தவிர உண்மையான உணர்வுகளை அல்ல. நாற்பதுக்கும் மேற்பட்ட சங்ககால பாடினிகள், புலவர்களின் பாடல்களில் விளக்கப்படும் பெண்மைகூட பெருமளவில் ஓர் ஆண் வழித்தழுவலாக இருந்ததே ஒழிய, தனித்த எழுந்ததாக அமையவில்லை. இப்பாடினிகளின் இலக்கியப் பங்கேற்பு மற்றும் அவர்களுக்கு அப்போதைய ஆட்சியாளர்களுக்கும் இருந்ததாக அறியப்படும் நெருங்கிய உறவை அக்காலத்தில் நிலவிய அரசியல் சமுதாய களங்களிலிருந்து நோக்கவேண்டும். சங்ககால சமுதாயம் ஓர் இனக்குழு நிலைக்கும் அரசு நிலைக்கும் இடைப்பட்டதாகும். ஒருசில ஆற்றுப்பாசன படுகைகளைவிட ஏனைய இடங்களில் கால்நடை வளர்ப்பு, வேட்டை யாடுதல், மீன்பிடித்தல் போன்றவை முக்கிய உற்பத்தி முறைகளாக கடைபிடிக்கப்பட்டன.

நீண்டதூர கடல் வணிகம் அந்நியர்களின் முயற்சியாகவும், உள்நாட்டு வணிகம் குறுகிய தாகவும் பண்டமாற்று முறையை பின்பற்றிய தாகவும் அமைந்திருந்தது. இங்கு பிறர் செல்வங்களை கவர்தல், (பெரும்பாலும் கால்நடைகள், ஆபரணங்கள், பெண்கள்) கவரப்பட்ட செல்வங்களை மீட்டல், வேட்டையாடுதல் போன்றவை ஆண்களுக்கான செயல்பாடுகளாகவும், விவசாயம் (பெரும்பாலும் சோளம் விளைவித்தல்), நெசவு, சிறு சிறு பண்டமாற்று வியாபாரம் போன்றவை பொதுவாக பெண்களுக்கான செயல்பாடுகளாக முறைமைப் படுத்தப்பட்டிருந்தது. இதைத்தவிர பரிசில் வாழ்க்கை என்கின்ற, அரசர்களையும், ஊர் செல்வந்தர்களையும் புகழ்ந்துபாடி மகிழ்வித்து அவர்கள் கொடுக்கும் பரிசுப்பொருட்களை கொண்டு வாழ்க்கை நடத்தும் முறையும் இருந்தது. இவற்றுள் பாணர், பறையர், கூற்றர், விறலியர், பாடிணியர், புலவர் போன்ற பல்வேறு கலைஞர்களும் அடங்குவர். இவர்கள் இசை, நடனம், வாய்ப்பாட்டு போன்றவற்றில் தேர்ச்சி பெற்றவர்களாகவும் அரசர்களுடன் நெருங்கிய தொடர்பு உடையவர்களாவும் போர்க் காலங்களில் வீரர்களை உற்சாகம் ஊட்டுபவர் களாகவும் இருந்தனர். பொதுமகளிர் எனப்படும் தற்போதைய விலைமாந்தர்கள் போன்றோரும் இவர்களுடன் (அல்லது இவர்களே) தொடர் புடையவர்கள். ஆக பாடல்கள் புனைவது, அரசர்களுடன் நெருக்கமாக இருப்பது, போர்க்களத்தில் துணை புரிவது போன்றவை சமுதாயத்தில் எந்த ஒரு நிலையிலும் உயர்ந்ததாக கருதப்படவில்லை.

இவற்றை வறுமையில் இருந்ததாரின் வயிற்றுப்பிழைப்புக்கான செயல் பாடாகவே கருதமுடியும். இவ்வகையில் அடங்கும் பெண்கள் ஆண்களின் உடல் உள்ளம் சார்ந்த தேவைகளை நிவர்த்தி செய்யும் கருவிகளாகவே எதிர்கொள்ளப்பட்டனர். உயர்ந்த பெண்களாக கருதப்பட்டவர் கயளல்லாம், கற்பு என்று சொல்லப்பட்டதை கடைபிடித்து வாழ்ந்தவர்கள். கணவன் விலைமாதர் கூட்டத்தில் காணாமல் போனபோது விதியை நொந்துகொண்டு வீட்டிற்குள் அடங்கியவர்கள், ஒருவாறு இன்ப வேட்கை முடிந்து (அல்லது அனைத்து செல்வத்தையும் இழந்து வேறு வழியில்லாமல்) பல ஆண்டு களுக்குபின் வீடு திரும்பியவுடன் இன்முகம் பூண்டு வரவேற்று ஆரத் தழுவிக் கொண்டவர்கள், சற்று வயதான காலங்களில் வீர மகனைப் பெற்றதாக பெருமைப்பட்டுக் கொண்டவர் களுமே ஆவார்கள்.

தன் மகன் போர்க்களத்தில் புறமுதுகிட்டான் என்பது உறுதியானால் பாலூட்டிய முலைகளை அறுத்தெறிவதாக சூளுரைத்த தாய், தன் தந்தை மற்றும் கணவனை முந்தைய நாள் போர்களில் துறந்து எஞ்சிய சிறு மகனை போருக்கு அனுப்பிவைத்த தாய், தன் மகன் விழுப்புண் பெற்று இறந்து கிடந்ததை கண்டு இன்புற்று தன் முலையில் மீண்டும் பால் சுறப்பதாக மகிழ்ந்த தாய், கற்பு நெறி தவறாது குடும்ப வேலையிலும் குழந்தை வளர்ப்பிலும் கவனம் செலுத்திய தாய் என மிகச்சில மகளிரே நமக்கு அடிக்கடி அறிமுகப்படுத்தப் படுகின்றார்கள். உண்மையில் இது போன்ற கற்புநெறி, வீரம் போன்றவை யெல்லாம் சமுதாய கற்பிதங்கள், ஆணிய சுரண்டல்கள் பெண்மனம் இதை ஏற்குமாறும், அதற்கேற்ப செயல்படுமாறும் காலம்காலமாகப் பழக்கப்படுத்தப்பட்டிருந்தது.

குதிரையை மெல்லமெல்ல சவாரிக்கு பழக்கப் படுத்துவதுபோல், திருமண வாழ்க்கையை மையப்படுத்தி ஒரு பெண் வளர்க்கப்படும்போது, ஆண் சமுதாயத்தின் தேவைகளுக்கு ஏற்ப தன் பெண்ணை பக்குவப்படுத்திக் கொடுக்கும் தாய் உயர்ந்தவளாகின்றாள். உண்மையில் சிறுமி என்ற நிலையிலிருந்து குமரி என்ற நிலைக்கான உயிரியல் மாற்றம் என்பது ஒரு பெண்ணுக்கு எண்ணற்ற சமுதாயக்கட்டுப்பாடுகளின் திணிப்பு என்பதுடன் நிகழ்கின்றது. இது தமிழ்ச் சமுதாயத்தில் வேரூன்றிக் கிடக்கும் உண்மை. ஓர் அகநானூற்று தாய் தன் மகளை இவ்வாறு அறிவுறுத்துகின்றாள். "உன் முலைகளும் பற்களும் மிளிர்கின்றன, தழையாடை உடுத்தியிருக்கின்றாய், எப்பொழு தும்போல் உன் விளையாட்டுத் தோழிகளுடன் வெளியே செல்லாதே, கன்னிப்பெண்களைத் தாக்கும் தெய்வங்களையுடையது நம் நகரம், நீ பாதுகாக்கப்பட வேண்டியவள், இனிமேல் நீ குழந்தை கிடையாது'. பெண் வயதுக்கு வருதல் என்பது சமுதாய பெண்மையாக்கத்தின் முக்கியமான தருணமாகும். இதிலிருந்து பெண் உணர்வுகளை அடக்கி தன் வீட்டில் முடங்க வேண்டும் என்று எதிர்பார்க்கப்பட்டதுடன், பெற்றோர்களுக்கு ஒரு தேவையான சுமையாகவும் கருதப்பட்டாள். இதுவரை விளையாடித் திரிந்த பெண்களை வீட்டுக்குள் முடக்குவது அவ்வளவு எளிதானதாக அமைய வில்லை.

கன்னிகளைத் தாக்கும் தெய்வங்கள் துணைக்கு அழைக்கப்பட்டார்கள். அதாவது கன்னிப்பெண்கள் வெளியே சென்றால் தெய்வ தாக்கங்களுக்கு ஆளாவாள். இதுபோன்று பெண்களையே தெய்வங்களாகப் பாவிக்கும் பாசாங்கும் நடந்தது. கற்புடைய பெண் கடவுளானாள். கற்பும் தெய்வதன்மையும் நிகர்படுத்தப்பட்டதுபோல், கற்பும் புலனடக்கம் என்பதும் ஒரே அர்த்தத்தை சுட்டுவதற்காக அமைந்தது. முக்கியமாக பாலிச்சைகளை அடக்கியவள் சமுதாயத்தில் பெரிதும் மதிக்கப்பட்டாள். பல சங்கப்பாடல்களில், பெண் முலைகள் தெய்வம் உறங்கும் இடமாக, கற்பின் இருப்பிடமாக, எனவே பாதுகாக்கப்பட வேண்டியவையாக அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஒரு தலைவன், "நீ உன் முலைகளில் இருப்பது கரும் புள்ளிகள் என நினைக்கின்றாயா, அவைகள் எனக்குக் கடவுளாக தெரிகின்றன' என சொல்வது உன் இச்சைகளை மற்றவர்களுடன் பகிரும்போது தெய்வகுற்றம் ஏற்படும் என சொல்வது போல் உள்ளது.

"அவளுடைய வளரும் இள முலைகளில் படரும் குளிர்மை எனக்கு ஏமாற்றத்தை தருகின்றது, அதில் அணங்கு இருப்பதால்', "அணங்குடைய முலைகள்' போன்ற அகநானூற்று சொல்லாடல்கள் முலை தெய்வம் இச்சையடக்கு என்பதையே காட்டுகின்றன. பெண்ணின் மூப்புப் பருவங்களில் முலைகள் வீரத்தை வெளிப்படுத்து வதற்காகக் குறிக்கப்பட்டன. முலைகளை அறுத்தெறிவதாக சூளுரைத்த தாய்மார்கள் இதில் அடங்குவர். பெண்முலைகள் பல இடங்களில் வறுமையையும் சோக வாழ்க்கையையும் உணர்த்துவதற்கும் பயன்படுத்தப்பட்டுள்ளது. தன் குடும்ப வறுமையை விளிக்கும் பாணன் தன் மனைவியின் வாடிய முலைகளை குறிப்பிட்டு பரிசில் கேட்கின்றான். பிந்தய காலங்களில் வந்த கண்ணகியும் தன் முலையை அறுத்து வீசி மதுரையை எரிந்ததாக அறிகின்றோம். எனவே மதுரை கற்பால் எரிவிக்கப்பட்டது.

இதுபோன்று ஆணிய உடல் உறுப்புக்கள் எதுவும் வாழ்வியல் நிகழ்வுகளை உருவகப்படுத்த பெரிதாக பயன்படுத்தப்படவில்லை. பாலிச்சை அடக்கிய பெண்களைப் போன்று, பேச்சை அடக்கி யோரும், பொறுமை பூண்டவர்களும் ஆண் களால் பெரிதும் விரும்பப்பட்டார்கள், தெய்வ மாக்கப்பட்டார்கள். புறநானூற்று பாடல் 361ல் மன்னனின் மனைவி பொறுமையினால் கற்பு உயர்ந்தவள் என்றும் அவள் அதிர்ந்து பேசுங்கால் பயந்து போகும் அவளுடைய கூரிய பற்களுக்கு இடையே இருக்கும் நாக்கு என பாடப் பட்டுள்ளது. குறுந்தொகையில், தலைவன் அயல் மாதர்களிடம் வினை முடிந்து வந்தபோது, தெய்வக் கற்புடன், இன்முகம் மாறாது அவனுக்கு பணி செய்ததாய் தோழி தலைவியை சாடுகின்றாள் (குறுந்தொகை, 252).

சிலப்பதிகாரத்தில் வரும் கண்ணகி பாத்திர சித்தரிப்பு, தமிழ் இலக்கியத்தில் முதன்மை யானதோ, புதுமையானதோ அல்ல. சங்க இலக்கியங்களில் இதைப்போன்று எத்தனையோ கண்ணகிகள் பயின்று வருகின்றார்கள். நீதிக்காகப் போராடி பாண்டியனை குற்றம் உணரச்செய்து மதுரையை கொளுத்தியது என்ற வகையில் வேண்டுமானால் சிலப்பதிகாரக் கண்ணகி வேறுபடலாம். திருமணமாகி சில நாட்களில் மனைவியைவிட்டு விலைமாதர்களை நாடுவதற்கு சமுதாய அங்கீகரிப்பு இல்லை என்றாலும், இது பொதுவாக பழக்கத்தில் இருந்ததுடன், செல் வந்தர்களுக்கு அந்தஸ்த்துடன் சம்பந்தப்பட்ட விஷயமாகவும் இருந்தது.

இதைப் போன்று பல சங்க நூட்குறிப்பு களிலிருந்து, கணவன் எத்தனையோ மனத்துன்பங் களை கொண்டுவந்த போதிலும் அவன் மீது எந்த வெறுப்புணர்வுகளையும் வளர்க்காமல் கற்பு நெறியிலிருந்து தவறாது வாழ்ந்தவர்கள், கணவனை முதன்மைத் தெய்வமாக வழிபட்ட வர்கள், தன் கணவனின் தவறுகளைக் குறித்து மற்றவர்கள் தூற்றாவண்ணம் காத்துக்கொண்ட வர்கள், என பலவகையான பெண்களை அறிகின்றோம்.

தன் கணவனின் பிறன்மனைத் தொடர்புகளை முன்வைத்து இழிந்து பேசிய தோழியை நோக்கி, "தலைவன் வெளியில் இருக்கும்போது அவனை பற்றி இழிந்து பேசி என்ன பயன், நமக்கு எத்தனையோ குடும்ப வேலைகள் இருக்கின்றன, என் இளமை குறைந்து நான் முதுமையாகிவிட்டேன். அவனை அவன் விரும்பும் வாழ்க்கையை வாழவிடு, எந்தெந்த இடங்களுக்குச் செல்ல விரும்புகின்றானோ செல்லட்டும், எதற்காக அவன் பிரிவை எண்ணி வருத்தப்படவேண்டும், அவனுடன் சேர்ந்திருந்த நாட்களை எண்ணி மகிழ்வோம். நமக்கென்று விடப்பட்ட குடும்ப நெறிகளைத் தெய்வத் தன்மை பிறழாது செய்வோம்' எனக் கூறுகின்றாள். பல பாடல்களில் மனைவிகள் தம் கணவன் மற்ற பெண்களுடன் வாழ்வதைப் பற்றி கவலை பட்டதாகக்கூடச் சித்தரிக்கப்படவில்லை, மாறாக அவன் செயல் ஊர் வாய்க்கு ஒரு பொருளாகக் கூடாதே என கவலைபட்டவர்கள்தான் அதிகம். நற்றினையில், குடும்ப நிர்வாகமும் குழந்தை வளர்ப்பும் கற்புடைய பெண்களின் இரு தலையாய கடமையாகக் கூறப்பட்டுள்ளது. பேகன் என்ற குறுநிலத்தலைவன், தன் மனைவியைவிட்டு (அவள் பெயரும் கண்ணகி) ஆடல் பெண்டீர்களுடன் நெடுநாட்கள் தங்கிவிட்ட நிலையில், ஒரு புலவர் பட்டாளமே தூது சென்று அவன் மனைவியின் கண்ணீர்க் கதையை எடுத்துக்கூறி அவர்களைச் சேர்த்து வைக்கவேண்டிருந்தது. மொத்தத்தில் கண் மூடித்தனமான கணவன் பக்தி, மிதமிஞ்சிய பொறுமை, குடும்ப நெறி தவறாமை போன்றவை பெண்ணிடம் எதிர்பார்க்கப்பட்டன.

தமிழ் இலக்கியங்கள், பொறுமைப்பூத்த மனைவிமார்களைப் போற்றிப் புகழ்ந்த அளவிற்கு பொதுமகளிராக இருந்தவர்களையும் ஆணிய அதிகார எல்லையை மீறாமல் உயர்த்திப் பிடித்திருந்திருக்கின்றது. தொல்காப்பியன், மனைவிமார்களையும் பொதுமகளிர்களையும் ஒன்றாக வைத்துப்பார்க்கின்றான் (தொல். 1097,11). மனைவியைப் பிரிந்துச் சென்றதற் காகக்கூட கவலைப்பட்டதாகத் தெரியவில்லை, குழந்தை உற்பத்திக்குத் தகுந்த தருணங்களைத் தவறவிட்ட தலைவர்களைத் தொல்காப்பியர் சாடுகின்றார். உதிரப்போக்குக் காலங்களுக்குப் பிறகு குறைந்தது பதினைந்து நாட்களாவது மனைவியுடன் தங்கவேண்டும் என்று வேண்டுகின்றார் (தொல்.1133). இது ஆணியத்தின் ஏமாற்று ஆகும். ஒரு வகையில் கற்பைப் போற்றி குடும்பப் பெண்களை வீட்டில் முடக்குவது, மறுவகையில் விபச்சார அமைப்பைப் போற்றி தன் உடல் வேட்கையைத் தீர்த்துக்கொள்வது என்ற ஆளுமைத் தந்திரம் மிக லாவகமாகக் கையாளப் பட்டுள்ளது. சிலப்பதிகாரப் பெண்களான மாதவியும் கண்ணகியும் இதற்குச் சிறந்த எடுத்துக்காட்டு ஆகும்.

சிலப்பதிகாரத்தில் விளக்கப்படும் பெண்மை சங்க நூட்களில் விளக்கப்படுபவைகளின் தொடர்ச்சியே ஆகும். கண்ணகி பாண்டியனை எதிர்த்து தனி ஒருத்தியாக நின்று வாதிட்டு வென்றாள் என்பதில் எந்தவித தைரியமோ, பெண் சுதந்திரமோ தெரியவில்லை, மாறாக காலம் காலமாக கற்பிக்கப்பட்ட கணவன் பக்தித்தான் தெரிகின்றது. கணவனைப் போற்றி, கற்பென்று சொல்லப்பட்டவைகளுடன் கண்ணீருடன் வாழ்நாட்களைக் கழித்து, தன் கணவனை இழித்தவர்களை எதிர்த்து, தன் உயிரையும் இழந்த, ஆணாதிக்க சமுதாயத்தால் பத்தினித்தாய் என அழைக்கப்படுகின்ற ஓர் அடிமைப் பெண்ணே ஞாபகத்திற்கு வருகின்றாள். இன்றுள்ள தலைவர்களும் சங்கத் தலைவர்களுக்கு எவ்விதத்திலும் குறைந்தவர்கள் இல்லை என்ற நிலையில் அவர்களுடைய எதிர்பார்ப்புகளும், கற்பிதங்களும் நியாயமே.