1.

கழுதையின் நிழல் மெள்ளமாய் ஊர்ந்து பாறை முகடுகளில் துணிகளைப் பொறுக்கியெடுத்துக் கொண்டிருக்கும் மாகாளியப்பனின் முதுகில் விழுவதற்கும் பள்ளிக் கூட மணியோசை ஓலிப்பதற்கும் சரியாக இருக்கும். அவனது அம்மா கண்களை இடுக்கிக்கொண்டே ஆடைகளைக் குமித்து வைப்பாள். துணிகளை அடையாளக் குறி பார்த்து இனவாரியாகப் பிரித்து அடுக்கும் வேலையை குதியாட்டமிடும் எல்லையற்ற உற்சாகத்துடன் ஏற்றுக் கொள்வான் அவன். தனக்கு மிகவும் பிடித்த ஓளி விளையாட்டின் சாகசம் நிரம்பிய தேடுகையில் விரியும் வினோதப் பரப்பு. குமித்து வைத்திருந்த ஆடைகளின் நீல வண்ணக் குறிகளில், இனம் பிரித்துக் காணும் வெப்பம் அவனது உடம்பெங்கும் சூட்டைக் கிளப்பி விட்டதில் கிளைவெட்டி வெட்டிச் சுழல்கின்றன வண்ணாங்குறிகள். குறியீடுகளில் அடைபட்ட ஜனங்களின் துணிகளைப் பிரித்தெடுக்கும் புதிர் விளையாட்டின் சிக்கலான முடிச்சுக்கள் அவிழும் கணங்களில் பீறிடுகின்ற பரவச நிலையை உணரும் போதெல்லாம், அவனுக்குள் பொங்கியெழும்பும் பழுப்பு மணம் வீசும் மச்சு வீட்டின் புதிர்வழிச் சுழல்வுகளும், அந்தச் சிறுமியும்.

அந்த மச்சு வீட்டிற்கு முதன் முதலாக அம்மாவோடு வந்தபோது பழமையான கம்பீரத்தின் நெடி முகத்தில் அறைய பிரமித்துப் போனான். கோழி முட்டையின் நெகு நெகுப்புடன் கூடிய அவர்களின் அரண் வளைந்து வளைந்து செல்லும் பிரம்மாண்டத்தில் கன்னத்தை அழுந்தினால் உரம் பிதுங்கியது. தன் வீட்டின் ஓலைச் சாளரங்களின் வழிபாயும் வெயில் கிரணங்களின் விம்மலை திரண்ட தூண்களின் ஆகிருதியில் உணர்ந்தான். வெள்ளாவிப் புகை மண்டிய அவனது குடிசைகளை சரேலென நெட்டித் தள்ளித் திறந்த கதவின் வழியே நான்கைந்து சிறுவர் சிறுமியர் ஓடிவந்த மாடிப்படிகளில் கவனம் திரும்பியது. அவர்கள் இவனைப் பார்த்ததும் திடுக்கிடலுடனான பால்ய சந்தோஷம் வழிந்தது. ஓரு கணம் தயங்கி மெதுவாக ஸ்நேக பூர்வமாய் புன்னகைக்க, அவனும் முறுவலித்தான். அவர்கள் உற்சாகத்துடன் குரலெழுப்பி தங்கள் விளையாட்டில் கலந்து கொள்ள அவனைக் கையசைக்க, அழுக்குத் துணிகளைப் பரப்பிக் கொண்டு கவுண்டச்சியுடன் கதைத்துக் கொண்டிருந்த அம்மாவின் சாவகாசத்தில் தாவினான் மாடிப்படிகளில்.

“புதுசாச் சேர்ந்தவன்தான் கண்ணாம்பூச்சி” என்றாள் சற்றே பெரியவளாக இருந்த அந்தச் சிறுமி. சுற்றிலும் நின்றிருந்த விளையாட்டுத் தோழர்கள் ஹோவென்று கூச்சலிட அப்படியே முடிவானது ஓளி விளையாட்டு. எல்லோரும் அவனை விட்டு விலகி இருட்டான நீண்ட வராந்தாவின் மேடுகளில் தாவி ஓடினார்கள். பாதம் வரை உரசும் பூப்போட்ட பாவாடை சரசரக்க அவனது முகத்தை நிமிண்டிக் கொண்டு ஓடினாள் அந்தச் சிறுமி. கொலுசின் ஒசை மெதுவாகத் தேய்ந்து ஓய, வராந்தாவை ஓட்டிய கைப்பிடிச் சுவரின் கீழ் நெளிந்தோடிய பாதைகளில் மறைந்து கொண்டிருந்தனர் சிறுவர்கள். சற்றைக்கெல்லாம் ‘வரலாம்’ என்பதற்கு அடையாளமாக கீச்சொலி எழும்பியதும் பரபரப்பானான் மாகாளியப்பன். வராந்தாவின் நீள்பாதையில் இருபுறமும் கண்களைக் சுழட்டிக் கொண்டு தாவ, அந்த வீட்டில் மறைந்திருந்த பிரம்மாண்டம் சுழல ஆரம்பித்தது. வளைந்து சுளித்து இறங்கும் மாடிப்படிகளில் சுழன்று ஏதிர்ப்பட்ட அறையினுள் தேடி, மேஜை கட்டில் பீரோவின் இண்டு இடுக்குகளில் நுழைந்து இறங்கியதில் அரை வட்டமாய் எதிர்ப்பட்டது குறுகியவழி.

ஓருக்களித்துச் சரிந்த அதன் இடதுபக்கம் நுழைந்து வலப்புறமாய்த் திரும்பியதில் வளைந்து படுத்திருந்தது மங்கலான வெளிச்சம். பழுப்பு மணம் அண்டிய அந்தப் பகுதியின் கடைக்கோடியில் ஓருக்களித்து மூடியிருந்த கதவின் வழியே தூவானமாய்ச் சிதறிய ஓளியை நோக்கி மெதுவாய் நடந்து, தலைசுற்றலுடன் கதவைத் திறந்ததில், கிறீச்சிட்டு எழும்பிய ஓலியில் வெளவால்கள் படபடத்தெழும்பி இருளில் மோதி விழுந்தன. புழுக்கை வாசனை குபீரென்று கவ்வ, அலங்கோலமாய் சரிந்து கிடக்கும் பாழடைந்த அறையில் தான் நின்று கொண்டிருப்பதை உணர்ந்தான். பயத்தின் நெடி உடம்பெங்கும் ஊர்ந்திறுக, சட்டென கால்களைப் பின்னுக்கு இழுத்து நடந்த வேகத்தில் கால் கொலுசின் ஜதி மெல்லியதாய் அசைந்து கொடுத்தது.

பயமும் பழுப்பு வாசனையும் சடுதியில் கரைந்து போக, காதுகளை விரைத்துக்கொண்ட அந்தக் கிடங்கினுள் தவ்வினான். காலொடிந்த மேஜை நாற்காலிகள் கலப்பை நுகத்தடித் துண்டுகள் விவசாயப் பொருட்கள் ஓடுங்கிய பித்தளைப் பாத்திரங்களென பொருட்கள் சுழன்றடிக்க, வெளிச்சம் மங்கி இருண்டிருந்த பகுதியின் மூலையில் ஓரு ஜோடி விழிகளின் கூர்மை ஓளிர்ந்தது. கண்டு பிடித்து விட்ட உற்சாகத்தில் ஓரே தாவாகத் தாவிப் பிடிக்க, அவனை அப்படியே சேர்த்து கட்டிப் பிடித்துக் கொண்டாள் அந்தச் சிறுமி. முகத்தில் குபீரென வீசியது செண்பக வாசனை. ஒரிரு நிமிஷங்களுக்கு அவனுக்கு ஏதுவுமே புரியவில்லை. ‘பயந்துட்டியா?’ என்று கிசுகிசுத்தவாறே அவனது உடலெங்கும் அளைந்தாள். முகத்தை அவன் முகத்தோடு சேர்த்து அழுந்தியதில் கமழ்ந்த உரம் கிறக்கத்திலாழ்த்தியது. ‘தினமும் வெளையாட வரியா?’ என்றாள்.

அவன் திக் பிரமையுடன் தலையை அசைக்கவே, அவள் அவனது உடலெங்கும் புதுவிதமான விளையாட்டை விளையாடினாள். ‘நண்டூறுது நரியூறுது’ ஞாபகம் வந்தது. அவனுக்கு அந்த விளையாட்டு பிடித்திருந்தது என்றும் சொல்ல முடியவில்லை, பிடிக்காமலும் போகவில்லை. ஆனால், இனம் புரியாத பயம் உடலெங்கும் விறைத்து நிற்க, செண்பகப் பூவின் வாசனையும் வெள்ளாவியின் மணமும் குளத்துத் துறையில் அலர்ந்திருந்த தாழம் பட்டைகளின் நறுமணமும் பாழடைந்த அறையின் புழுக்கை வாசனையும் கலந்து கலந்து அவனை ஓரு வாசனைப் பந்தாக மாற்றி அந்தரத்தில் வீசியிருந்தது. அவனது அய்யா சலவைக்குறியை வீசுகிறார். அவன் பல்வேறு குறிகளாக மாறி மிதக்கிறான். பூக்கள் கொஞ்சம் கொஞ்சமாய் நீலம்பட்டு அவனை விழுங்க இரம்பித்தது. அச்சத்தின் நரம்புகள் தெறிக்க அவளது இரைச்சலை விலக்கியோடி, சிதறியிருந்த பொருட்களில் மோதிச் சரிந்து எழுந்தோடினான். “டேய்...இருடா...இருடா....” என்ற அந்தச் சிறுமியின் கீச்சுக் குரலை விடவும் வெளவால்களின் பதற்றமும் இரைச்சல் பாழ் சுவர்களில் மோதி விழுந்தது.....

2.

வெள்ளாவி மணத்தினூடே குவியலாய் குமித்திருக்கும் துணிகளைப் பொறுக்கியெடுக்கும் போதெல்லாம் ஓளிந்து விளையாடும் உற்சாகமான விளையாட்டின் உச்சநிலையை அடைவான் மாகாளியப்பன். தன் சகாக்களுடன் சேர்ந்துகொண்டு ஓளி விளையாட்டில் கலந்து கொள்ளும்போது, கிளை வெட்டிப் பிரியும் குறுகிய சந்துகளிலும் இருளண்டிய குடிசைகளின் ஓடுங்கிய திண்ணைகளிலும் எருக்கு வெளியே அடர்ந்திருந்த கருத்த சோங்கிலும் உள்ள மறைவிடங்களில் ஓளிந்து கொள்ளும் சகாக்களைத் தேடிப் போகும் போதெல்லாம் இடைகளில் இடும் நீல வண்ணக் குறிகளின் பரப்பு அவன் காலடியில் சுழன்றோடும்.

அவனது அய்யா இறந்த பிறகு அவனுக்கு விளையாடக்கூட நேரமில்லாது போகவே, தனது வேலையையே ஓரு அற்புதமான விளையாட்டாக மாற்றிக் கொண்டான். அவனது குடிசையின் கூரை முழுக்க ஓழுக ஆரம்பித்த மழைநாட்களில், ஓழுகும் மழைத் துளிகளைப் பிடித்து வைக்க பாத்திரங்கள் ஏடுத்து வைப்பாள் அம்மா. பல்வேறு விதமான பாத்திரங்களில் விழும் மழைத்துளியின் லயம் அவனுக்குள் அற்புதமான ஸ்வரங்களை மீட்டும். நீலவண்ணக் குறிகளின் ரத்த ஓட்டத்தில் உடையாத ஓரு குமிழியாக மழைத்துளியின் ஸ்வரம் சுருதி கூட்டுவதை மெல்ல மெல்ல உணர்ந்து கொண்டான்.

அவனது அய்யா உயிரோடிருந்த காலங்களில் துணிக்குவியலில் ஓவ்வொரு குறியாக இனம் பிரித்து எடுக்கச் சொல்லுவார். பிரியும் ஓவ்வொரு கோட்டுக்கும் அர்த்தம் சொல்லி மனித முகங்களை - முகங்களுக்குப் பின்னே திரைந்திருக்கும் படிமங்களை - னங்காட்டுவார். புதிர் மொழியாய் உருக்கொள்ளும் அபூர்வதரிசனம். அப்பொழுது தான் அவனுக்குள் கிளர்ந்தெழுந்தது அற்புதங்கள் நிரம்பிய அந்த உலகம். அதன் புதிர் விளையாட்டின் சவால்களை எதிர்கொள்வதே தனது வாழ்வு ரகசியமென உள்முகமாய் சுழன்றிழுத்துக் கொண்டிருந்தது அந்த வினோத வெளி. மெள்ளவே சகாக்களுடனான விளையாட்டிலிருந்து ஓதுங்கி, குறுக்கு வெட்டுக் கோடுகளாய்ச் சுழன்றோடும் குறிகளின் விட்டங்களிலும் சதுரங்களிலும் கால்கள் பதியப் பதிய நடந்து திரிந்தான். மனித இனத்தின் பாரம்பரியமும் கலாச்சாரமும் குறிக்கோடுகளின் நெளிப்பரப்பில் சுருள்கின்ற அபூர்வ சுழற்சியை, அய்யா கோடி காட்டிய கணங்களில் அவனது கண் குவடுகள் கிழிபட்டன. இந்தக் குறுக்குவெட்டுக் கோடுகளில்தான் பிரபஞ்ச இயக்கமே பதுங்கியிருக்கிறதென்பது போல கோடுகளுக்கு மேல் வைத்த குத்துப் புள்ளிகளும், கோடுகளுக்குக் கீழான குத்துப்புள்ளிகளும் உறைந்திருந்தன.

மறைந்து திரியும் விளையாட்டின் ஆனந்தத்தைத் தனக்குள் வைத்திருக்கும் இந்த வினோத எழுத்துக்களில் உள்ள புதிர்த்தன்மையும் நுட்பமும் அபரிமிதமான உற்சாகத்தைத் தந்த அதே சமயம், பள்ளிக் கூடத்தின் கரும்பலகையில் வழிந்த எழுத்துக்களின் சவத்தன்மை ஈறுக்கியது. “அணில், ஆடு இலையை வேறுவிதமாய் எழுதினால் என்ன சார்?”

ஆசிரியர் ஆச்சரியத்துடன் நோக்கினார்.

புருவங்கள் கேலியாய் உயர்ந்தன. சதா அணில், ஆடு, இலை சொல்லிக் கொண்டிருந்த வாத்தியாரின் சலித்துப் போன முகத்தில் நீலக் கோடுகளைப் பூசினான் மாகாளியப்பன். மாணவர்களின் விழிப்படலங்கள் அலையலையாய் நெளிந்தன. அவன் எழுந்து சாக்கட்டியை ஏழுத்துக் கொண்டு கரும்பலகையை நோக்கி நடந்தான். வேட்டைக்காரப் புலியனின் கவைக்கோல் விசையில் துள்ளி விழும் அணிலின் ரத்தக் கறை படிந்த தலைவேட்டியின் சுங்கில் சிதறியிருந்த நீலக்கோடுகள் கிளைவெட்டிப் பாய்ந்தன. ஆட்டுப்பட்டி வைத்திருக்கும் செம்புலி நாய்க்கனின் புழுக்கை வாசனை வீசும் வேட்டி முந்தியில் கீறியிருந்த கொம்புகளின் நெளிவிலும், இலை வியாபாரம் செய்யும் ஆறுமுகப் பண்டாரத்தின் கறை படிந்த தலைத்துண்டில் பதித்த கீற்றுகளிலும் கால்கள் பதியப் பதிய நடந்தான்.

கரும்பலகையை குறுக்குவெட்டாய்க் கிழித்துப் போட்ட கோடுகளின் புதிரில் மறைந்துபோனது வகுப்பறை. மாணவர்களை வளைத்து நின்ற சுவர்கள் மறைந்தன. கிளிப்பிள்ளைகளாய் ஏற்றுக் கொள்ளும் ‘மெக்காலே’யின் யந்திரத் தன்மை மறைந்தது. ஓற்றை வழியாய் உருப்போடும் எழுத்துக்களின் தட்டையான வடிவம் மறைந்து மறைந்து கிளை வெட்டிப்பாயும் பல்வேறு பரிமாணங்களின் புதிர்ப்பரப்பும் சவால்களும் மாணவர்களின் அக்குளில் சிறகு பொருத்தியது.

ரெக்கைகளைக் கடைந்து கடைந்து வெளியெங்கும் சுற்றித்திரியும் அற்புத கணங்கள் வகுப்பறை முழுக்க சிறகுகளின் தூவிகள் சுழன்றடித்தன. திடுமென வெடித்தது ஆசிரியரின் கோபம், “டேய், நீ முட்டுச்சீலை வெளுக்கத் தாண்டா லாயக்கு...” படபடப்புடன் ஓங்கி வீசினார் பிரம்பை. ஆசிரியர்மீது, வகுப்பறை மீது, தட்டையான அந்த எழுத்துக்கள் மீது கோபமாய் வந்தது அவனுக்கு. உடம்பெங்கும் நரம்புகள் புடைத்தெழுந்த அந்தக் கணத்தில், ‘இந்தப் புதிர் எழுத்துக்கள்தான் இனி படிக்கப்படவேண்டும்’ என்று கண்ணீர்ஆவேசமாய்த் துளும்பியது.

இனிமேல் தன்னால் பள்ளிக்கூடம் போக முடியாதென்று கழுதையை ஓட்டிக்கொண்டு படித்துறைக்கு வந்து சேர்ந்த அந்த நாளின் பூரணத்துவமான சந்தோஷத்தை கெக்கலி கொட்டிய சிரிப்புடன் அவன் அய்யாவும் பகிர்ந்து கொண்டார். அய்யா அவனைக் கண்டிக்க வில்லையென்ற கோபத்தில் சுர வரிசை தவறிய வீச்சுடன் துணிகளைத் துவைத்துக் கொண்டிருந்தாள் அம்மா. லயம் பிசகும் நேர்த்தியற்ற வீச்சில் குறிப்புணர்ந்து கொண்ட அய்யா மெல்லிய குரலெடுத்துப்பாடினார்,

வண்ணாங்குழியில் ஓளிஞ்சி நிக்கற
சின்னாச்சாமிக் கவண்டா
அழுக்கு வெளுத்து அழுக்கு வெளுத்து
வானம் வெளுத்துப் போச்சு
வெள்ளாவிப் புகை மூட்டம் போட்டு
கூரை கறுத்துப் போச்சு....

சற்றைக்கெல்லாம் பாட்டுவரிகளின் ரிதத்தில் ‘சோ’ வென்ற அடிமூச்சின் இரைச்சலுடன் இணைந்தது அம்மாவின் பின்குரலும், கைவிசையும். உடலின் கவிச்சைகளை வெளுக்கும் உழைப்பின் அடிநாதமாய் மூச்செழுப்பும் இசை லயம் பாறை முகடுகளில் அலையடித்தது. வேப்பமரநிழலில் சாய்ந்திருந்த மாகாளியப்பனின் கவனத்தை ஈர்த்த துணிகளின் அசைவு அவனது கண்களில் பட்டுப் பட்டுத் தாழ்கின்றது. பார்வையின் தொலைவில் மல்லாந்து சரிந்திருந்த கிணற்றுத் தொளாக் கட்டையின் நிழல், அவைகளின் லாவகமான வீச்சில் அலைவுபட்டு மறைவதும் தோன்றுவதுமாக. பாட்டின் விசை வேகமேறும்போது மறைந்து மறைந்து பிரம்மாண்டமான வண்ணாங் குறியாக மாறுகிறது தொளாக்கட்டை.

குறிக்கோடுகளின் நுட்பமான அழகியலை சமூகம் சார்ந்த மொழியாக உருமாற்றுகின்ற மகனின் உள்ளங்கை வீச்சில் பூரித்தப் போனார் அய்யா. பிரிவுகளாய்ப் பிரியும் கோடுகளுக்கு மேலான / கோடுகளுக்குக் கீழான குத்துப் புள்ளிகளின் அமைப்பை வேரோடு மாற்றியதைக் காண அவனது அய்யா இல்லை. ஓயாமல் துருத்தி சுற்றும் மொட்டையனாசாரியின் வேட்டி முந்தியில் சுழல்கின்றன ஆரக் கால்களும் அவரது வாழ்வும். மானம் பொய்க்காதென மண்ணைக் கீறியெடுத்துப் போடும் ஏர்க்காலும் மாடுகளும் நஞ்சப்ப கவண்டனின் உறுமலில் லாடமாய்ப் பதிகின்றன. ஆகாசத்தைத் துழாவும் தென்னை மரங்களின் நீட்சியில் அநாயசமாய்த் தாவி பதநீர் இறைத்துவரும் மாரிமுத்து மூப்பனின் சாணை தீட்டிய அரிவாள் இடுப்பு வேட்டியின் கங்கில் பிறைச்சந்திரனாய் மின்னுகிறது.

வண்ணாங்குறிக்கும் மனிதனுக்குமான ஆத்மார்த்தமான உறவு புதிர் எழுத்துக்களின் நளினத்துடன் ஆடைகளில் பதிந்தன. ஓருநாளும் சலிக்காத இந்தப் புதிர் விளையாட்டின் சுவாரஸ்யம் ஓவ்வொருமுறை துணிகளைப் பிரித்தெடுக்கும் போதும் வலைப்பின்னல்களாய் முடைந்து முடைந்து முற்றிலும் புதிய பரிமாணங்களில் தாவும். அவ்வப்போது, வெண்ணிற எழுத்துக்கள் உறைந்து நிற்கும் கரும்பலகையின் இருட்டு குரூரமாய் உறுத்தும் போதெல்லாம், புதிர் எழுத்துக்களின் ஆற்றல் ரத்தமும் சதையுமான உடல் மீது எழுதிச் செல்லும் எல்லையற்ற மொழிக்குறிப்பை. தான் உருவாக்கிய இந்தப் புதிர்மொழியை சுப்பிரமணிக்குக் காட்டினான்.

குறிகளின் வழியே திறந்து கொள்ளும் சொற்களின் மறுமலர்ச்சி. நீலவண்ணத்தில் அடுக்குகளாய்ப் பிரியும் எழுத்துக்களின் மொழித் திறப்பு. வீரமா முனிவர் வைத்த குத்துப் புள்ளிகளில் உருவான ஓற்றெழுத்துக்களின் ஓளிச் சேர்க்கை, அவன் கோடுகளில் வைத்த குத்துப் புள்ளிகளில் காட்சி பூர்வமாக மாறியது. அந்த மொழி வடிவத்தின் அழகியல் சுப்பிரமணிக்கு எல்லையில்லாத ஆனந்தத்தை அளித்ததோடல்லாமல், தினமும் பள்ளிக்கூடம் விடுவதற்கு முன்பே மாகாளியப் பனிடம் அழைத்து வந்தது. அவர்களிருவரும் குறிகளின் நிறம் மங்கும்வரை அந்த மொழியிலேயே உறவாடித் திரிவார்கள. நாளடைவில் குறியீட்டுக் கோடுகள் மெல்ல மெல்ல ஓளிச் சமிக்ஞையாக மாறி மௌனத்திற்கும் பேச்சிற்குமான இடைவெளியில் புதிய பரிமாணமடைந்தன.

சுப்பிரமணி கொஞ்சம் கொஞ்சமாய் வேறு பையன்களையும் அழைத்து வந்து அறிமுகப்படுத்தினான். அப்படி வந்து சேர்ந்தவன்தான் சாமிநாதன், “இதென்ன பெரிய பிரமாதம், அந்த பாண்டியங் கோட்டைக்குப் போயிட்டு வர முடியுமா?” அவனது அலட்சியமான பார்வையின் சுழட்டலில் சுருண்டு போனான் மாகாளியப்பன்.

எத்தனை நாள் பாடுபட்டுத் தான் கட்டிய புதிர் ஏழுத்துக்களை ஓரு பொருட்டாகவே மதிக்காமல் புறங்கையில் ஓதுக்கிய சாமிநாதனின் நகைப்பு வண்ணாம்பாறையின் இடுக்குகளெங்கும் எதிரொலிக்கிறது. அவனது குளத்துத் துறைக்கு எதிரேயுள்ள பாழடைந்த கோட்டை சரேலென இவனது கண்கள் முழுக்க ரத்தம் பாய்ச்சியது. அழுகல் வாசனை மண்டிய புராதன அரண்மனையின் பழுப்பேறிய நெடி அவனது குடலில் புகுந்து அலையலையாய்ச் சுருண்டது.

அந்த பிராந்தியத்திலேயே நீல ஊமத்தம் பூ அங்குதான் கிடைக்கும். மருத்துவத்திற்காக அதைப் பறித்து வரச்சென்ற பால் மனம் பேதலித்து பைத்தியமாய் சுற்றும் கதைகள் அவனது ஊரெங்கும் அடர்ந்திருக்கின்றன. அவனையொத்த இளஞ் சிறுவர்களின் சுவாசக்காற்றில் கலந்து எப்பொழுதும் எச்சரித்துக் கொண்டேயிருக்கும். மேலும் மேலும் அவனைத் தழுவிய காற்றின் அலைவுகளில் பாழ் மண்டபத்தின் கவிச்சை நாசியில் ஏகிறியது.

“அங்கே போய் நீல ஊமத்தம் பூவை பறித்து வரவேண்டும் முடியுமா?” சாமிநாதன் தனது சுட்டு விரலை உயர்த்தி அசைத்த போது, மாகாளியப்பனின் கண்கள் கிழிபட்டன. அவனது சுட்டுவிரல் மறைந்து ஓளிர்ந்த குறியீட்டுக் கோடு சாணை தீட்டிய அரிவாளாய் மின்னியது.
3.
அது மனித அத்துக்குக் கட்டுப்படாத பிராந்தியமாயிருந்தது. ஓரு பாங்காட்டின் நீட்சியில் உறைந்திருந்த அந்த அத்துவான வெளியினூடே இடிந்தும் சிதறியும் சிறு சிறு குன்றுகளாக உருமாறியிருந்தன கோட்டையின் சிதிலங்கள். கட்டாந்தரையில் முளைத்திருந்த கரம்பைப் புற்களின் ஜிமிக்கிகள் கண் சிமிட்டி அசைய அவனது காலடியில் சருகுகள் சப்தித்தன. சூரியன் மங்கும் மஞ்சள் கிரணங்களின் ஓளியில் குளித்துக் கிடந்த அந்தத் தோற்றத்தினுள் போகப்போக மரங்களும் புல் புதர்களும் மண்டியிருந்த செழுமை யினூடே கலவரத்துடன் பறவைகள் கீச்சொலி எழுப்பி ரெக்கைகளை அடித்த வண்ணம் எவ்வின. நிழல்களின் அசைவு பதட்டமாய் பாழ் மண்டப மெங்கும் ஏதிரொலித்தது. வினோதமான மனநிலையின் எல்லையற்ற நிழல்கள் அவன் மேலெங்கும் சிதறி வீழ, முன்பு ஓளி விளையாட்டு விளையாடிய மச்சு வீட்டின் வாசனை சுழன்றடித்தது. பயம் சடுதியில் கரைந்து இர்வம் கலந்த பரபரப்பு தொற்றிக் கொள்ள, அவனுள் திறந்து கொண்டது புதிர் விளையாட்டின் கதவு.

பிரதான வாசலைத் தாண்டி உள்ளே நுழைந்ததும் புத்தகங்களின் பழுப்பு வாசனை சலேலென முகத்தில் அடித்தது. கண்களைக் கப்பியது இருள். தலையில் ஏற்படும் கும்மென்ற பாரத்தைக் கலைத்து உணர்வு பெற்றவனாய் கண்களைச் சுழட்டிச் சுழட்டி இருளுக்குள் துளைத்தான். ஆகண்ட மண்டபமும் பிரம்மாண்டமான தூண்களும் சுழன்றன. வெறிச் சிட்டுக் கிடந்த உட்கூடத்தின் நிழலாட்டம். இடிபாடுகளில் ஓழுகி வழிந்த வெளிச்சக் கதிர்களில் கண்களை நாலாபுறமும் துழாவினான். ஓளி விளையாட்டின் நுட்பத்தில் விழிகள் சுழன்றேகின. எதிரிலிருந்த திரண்ட தூண்களைத் தடவிக் கொண்டே மெதுவாக நடந்தான். காலடியில் மிகப் பெரிய பாச்சைகளும், கரப்பான் பூச்சிகளும் மிதிபட்டு விலகியோடின. கால்களில் வழிந்த பிசு பிசுப்புடன் நடக்க நடக்க வெளிச்சமும் இருளும் கலந்த ஓளி உட்கூடமெங்கும் வியாபித்துக் கொண்டே வந்தது.

திட்டுத்திட்டாய் சிதறிக் கிடக்கும் இருட்டுகளில் ஏதோ அசைவது தெரிந்தது. ‘கண்டுபிடித்து விட்டேனென்ற’ எக்களிப்பில் அவன் அந்த அசைவை நோக்கிப் பாய்ந்தோட, அடுத்த சில நிமிஷங்கள் என்ன நிகழ்கிறதென்றே அவனுக்குப் புரியவில்லை. அவனது முகத்துக்கு நேரே திடீர் திடீரென மனிதர்கள் தோன்றித் தோன்றி மறைகிற அதிசயம். சட்டென பய ரேகைகள் அவனுள் ஓடி அடர்ந்தாலும், சுதாரித்துக்கொண்டு சடுதியில் உஷாரானான் ஆவன், ‘ஓளி விளையாட்டில் ஐமாற்றி மறையும் வித்தை’ அவனுக்குள் ஞாபகம் வந்தது.

ஓரே பாய்ச்சலாய் அமுக்கி விடலாமெனத் தீர்மானித்தான். பம்மியவாறே தவ்விக்கொண்டு கிட்டத்தில் போகப்போகத்தான் புலனாகிறது அந்த அதிசயம். ஹோ ! வியப்பும் ஆச்சரியமும் தனது உடலெங்கும் இடுக்க, இதயத்தின் துடிப்பு வேகமேறியது. அவனுக்கு எதிரிலிருந்த மனிதர்கள் நேராக நிற்கும் போது உருவம் தென்படுகிறது. திரும்பினால், மறைந்து விடுகிறது. இந்த அதிசயத்தைக் காணக் காண உற்சாகம் பீறிட்டடித்தது. அவர்களின் ஓரு பக்கத் தோற்றம் மட்டுமே புலனாகும் தட்டையான ரூபத்தையும், பின்பக்கமோ பக்கவாட்டிலோ திரும்புகையில் ஓற்றைப் பரிமாணத்தில் மெதுவே கரைந்து மறையும் அரூபத்தையும் கவனித்தான். ஓரு பக்கம் தான் அவர்கள் மனிதர்களாக இருந்தார்கள். மறுபக்கம் வெற்றுவெளி. ஓற்றைப் பரிமாணத்தில் அசையும் ரூபமற்ற ரூபம். விசித்திரத்தின் அலைவுகள் பாழ் மண்டபமெங்கும் புரண்டெழுந்தன. அவனுக்கு எல்லாமே வினோதமாக இருந்தது. அவர்கள் அவனைச் சுற்றிச் சுற்றி வந்த அலையடிப்பில் அந்த இடமே ஊற்சாகத்தில் மினுங்கியது.

சந்தோஷத்தின் ஆரவாரக்களிப்பில் மிதந்து கொண்டிருந்தன அவர்களது முகங்களின் சுதி மலர்ச்சி. அவர்களுக்குள் கூடிக் கூடிப் பிரிந்தார்கள். ஓரு லய அசைவில் சுழலும் நடையின் அபிநயத்தில் திரள்கிறது சமிக்ஞை. அவர்களுக்குள் மெதுவாக பயம் தலை தூக்கினாலும் அந் நிகழ்வின் சாவகாசத்தில் சுவாரஸ்யமேற்பட்டு விட்டது. அந்த இடத்தில் அவர்கள் எத்தனைபேர் இருக்கிறார்களென்று அவனால் அணுமானிக்க முடியவில்லை. ஓருசில முகங்களைப் பார்க்கும் கணந்தோறும், அவை தனக்கு ஏற்கனவே பரிச்சயமானவைகளாகத் தோன்றும் உணர்வு ரேகைகள் உள்ளோடிக் கிளைத்தன. அவர்கள் அவனிடம் சைகையால் தொடர்பு கொள்ளும் அசைவில், அவனுக்கு அவர்களிடம் பேச வேண்டுமென்ற தஹிப்பு உடலெங்கும் பரவியது.

அவனது எண்ண ஓட்டத்தைப் புரிந்து கொண்டவர்கள் அவனைச் சைகை செய்து அழைத்து மண்டபத்தின் வெளிச்சம் கசிந்த சுவரின் மீது கரித்துண்டால் சுழித்துக் காட்டினர். ஆர்வமாய் எதிர் நோக்கிய அவனது முகத்தின் புதிரில், அது, தான் பள்ளியில் படித்த எழுத்து வடிவமாகவோ தன்னுடைய குறிக்கோடுகளைப் போலவோ இல்லை. மாறாக அவர்களும் ஓரு புதிர்மொழியோடு உறவாடுகிறார்களோ என்று அந்த நினைப்பே எல்லையற்ற சந்தோஷத்தைத் தந்தது. அவனது மௌனம் கண்டு மீண்டும் பல்வேறு விதமாய் சுழித்துக் காட்டினர். ஆரவாரித்தெழும்பியது அவனுக்குள் உறைந்திருந்த குறிக்கோடுகளின் எழுத்து வடிவங்கள். சுவரின்மீது கீறியிருந்த சுழிப்புகளின் வடிவம் அவன் முன்னே பல்கிப் பெருகியது. அதன் ஓயாத திகிரியில் சுழன்று சுழன்று அந்த சங்கேதத்தை உணர்ந்து கொள்ளத் தலைப்பட்டான். படிமமாய் ஓன்று திரண்டு புரிகிற கணத்தில் சட்டென உடைந்து காணாமல் போகும் விந்தை. அவனுக்குள் எழுந்த விடாமுயற்சியின் வைராக்கியத்தில் தென்பட்டது அச்சொல் அமைப்பின் ஓரிழை அவர்களது சுழிப்புகளில் சுழன்றோடிய மொழி வடிவத்தின் அடுக்குகளும், அவனது குறியீட்டுக் கோடுகளில் பதுங்கியிருந்த புதிர் மொழியின் அழகியலும் வெட்டியும் ஓட்டியும் சுழன்று கொண்டிருந்தன.

தானும் பதிலுக்கு எழுதிக் காட்ட வேண்டுமென்ற பரபரப்பில் கரித்துண்டைக் கேட்டுச் சைகை செய்தான். அவர்கள் அதை இரு கைகளாலும் சிலுப்பிக் கொண்டே நீட்டினார்கள். அதை வாங்கும் ஸ்பரிசத்தில் அவர்கள் மேலெங்கும் பச்சை வாசனையடித்தது. அந்தக் கணத்தில் மேலும் உணர்ந்தான். அவர்களை தனது சரித்திரப் புத்தகங்களின் பக்கங்களில் ஏற்கனவே பார்த்திருப்பதையும். அவனுக்குள் மின்னல் வெட்டுகள் ஓயாது ஓளிர்ந்து திகைத்தன.

சிரசுக்குள் ஓளிர்ந்த ஞாபகார்த்தங்களில் அடையாளக் குறிகளின் நீலம் பாய, கூத்தில் ராசா வேஷம் கட்டும் தொப்புளானின் சில்க் ஜிப்பாவில் பதித்த சூரியக் கோடுகளாய் சுவரில் கிறுக்கித் தள்ளியது அவன் கை. அவன் கோடுகளைத் தீட்டத்தீட்ட அவர்கள் சந்தோஷத்தில் துள்ளிக் குதித்து நடனமாடினார்கள். லயம் பிசகாத கால் ஜதியின் சம்பாஷணையில் குறியீட்டுக் கோடுகள் சப்தித்தன. அவர்களும் பதிலுக்கு நெளி நெளியாய்ச் சுழித்தார்கள். மொழி மரபின் ரகசியமே அந்தச் சுழிவுகளின் ஏற்ற இறக்கங்களில்தான் பொதிந்திருப்பதாய் எண்ணியவன், அந்தச் சுழிப்புகளை உணர்ந்து கொள்ளும் வழியாக அவைகளோடு கரைந்து கரைந்து தானும் ஓரு சுழியாய் மாறிப்போக ஆரம்பித்தான்.

தனது நீல வண்ணக் குறிக்கோடுகளின் மொழி வடிவம், நேர்கோடுகளாகவும், கிடைமட்டக் கோடுகளாகவும், வெட்டுக் கோடுகளாகவும் மாறி மொழியின் வீச்சை சச்சதுரமான புதிர்க்கட்டங்களில் புதிரிடும் ஓளிவிளையாட்டு. அவர்களது சுழிப்புகளின் அழகியல், ஓரு விஷயத்தை மையமாக வைத்து அதன் வேர்களிலிருந்து கிளைக்கும் சங்கேத மொழியின் சுழற்சியென உருவாகும் எண்ணிலடங்கா தேனடைகளின் அடுக்குத் தொடர் என்பதை மெல்ல மெல்ல உணர்ந்தான்.

கோடுகளும் சுழிப்புகளும் ஓயாது முட்டிமோதி உரையாடலின் எல்லாப் பரிமாணங்களிலும் அலைந்தன. அவர்களது சமிக்ஞை மொழியின் ஆழமான வீச்சில் கடைந்து கடைந்து எம்பியதில் விஷயங்களை ஓரளவு அனுமானிக்கும் தன்மை உருப்பெற்றது. அவனுக்குப் புரிபடாத விஷயங்கள் குறித்த உரையாடற் சிக்கலில் குழப்பமடையும் சமயம், உத்தேசமான கணிப்பில் தெளிவு பெற்றான்.

யூகத்தின் அடிப்படையில் விஷயங்களின் வேர்களைத் தேடிப்போனால், உள்ளங்கைக்குள் அகப்படுகிறது புராதனச் சொல் அமைப்பு. ‘தாங்கள் கொஞ்சம் கொஞ்சமாய் அழிந்து கொண்டிருப்பதாக’ அவர்கள் தெரிவித்த சூட்சுமத்தில், ‘அதற்கு யார் காரணம்? அல்லது என்ன காரணம்?’ எனக் கோடுகளைக் கீறினான் அவன். பதிலாக அவர்களது சங்கேதச் சுழிப்புகள் எல்லையற்ற நெளிவு சுளிவுகளின் நீட்சியில் சுழன்றேகின.

‘பிரம்புகள் கயிறாய் திரிக்கும் கடைசலில் பாச்சையின் மீசைகள் சுருக்கிடுவதான, புத்தகத்தின் பக்கங்களில் சூன்யம் கவிகிறதான, சூரியப் பிரபைகளை சின்னா பின்னப்படுத்துவதான’ படிமங்கள் குமிழ்ந்து வெடிக்கும் லாவகத்தில், உடையாத ஓரு குமிழி திரள்கிறது. ‘சரித்திரப் புத்தகங்கள்தான் தங்களைக் கொஞ்சம் கொஞ்சமாக அழித்துக் கொண்டிருப்பதாகத்’ தெரிவித்தனர். அந்த விஷயத்தின் தீவிரத் தன்மையும், சங்கேத மொழியின் உச்சரிப்பும், புதிர்ச் சுழலினூடாடும் எண்ண ஓட்டங்களும் ஓன்றையொன்று பின்னின. சரித்திரத்தின் குறுக்கும் நெடுக்கும் அலைவுபட்ட அவனது நீலக் குறிக்கோடுகள் சற்றைக்கெல்லாம் சங்கேதக் கண்ணிகளில் கோர்த்துக் கொண்டன.

தங்களைப் பற்றிய வரலாற்றைத் திரித்து தங்களைக் கொஞ்சம் கொஞ்சமாய் அழித்துக் கொண்டிருக்கிறார்கள் வரலாற்றாசிரியர்கள் என்றும் எஞ்சிய பகுதியையாவது இந்தத் திரிபிலிருந்து காப்பாற்றினால்தான் மனிதவாழ்வின் சுயம் ஆளுமையுடன் இருக்கும் என்றும் தெரிவிக்கும் தீவிரமான உரையாடலின் தீர்க்கத்தில் புத்தகங்கள் பொசுங்கின.

உரையாடல் பல்கிப் பெருகும் நீட்சியில் காலம் திகைத்த ஓரு கணம், கையிலிருந்த கரித்துண்டு நழுவி விழுந்து உடைந்தது. மறுகணம், அவர்களின் முகங்கள் பரபரப்பாகின. சட்டென்று அனைவரும் நடன அசைவுடன் ஓன்றிணைந்தனர். சற்றைக்கெல்லாம், அதன் உச்சபட்சத்தில் எழும் தாண்டவகதியில் அவர்கள் தேய்ந்து மறையும் காட்சிகள் நடந்தேறின.

எல்லோரும் மறைந்துபோய் வெற்று மண்டபம் மட்டும் மீந்து நின்றது. சுற்றிலும் கண்களைச் சுழட்டினான். மண்டபத்தில் கசிந்த வெளிச்சக் கதிர்கள் நிறம் மாறியிருந்தன. சுவரின் தீராத பக்கங்களில் இறுக்கியிருந்த சுழிப்புகளில் தனது முகத்தை அழுந்தியதில் முகமெங்கும் எண்ணற்ற சுழிகள் பதிந்தன. கன்னத்தை நீவிக் கொண்டே மெல்லமாய் மண்டபத்திலிருந்து வெளியே வந்தான். எதிரே, இடிபாடுகளில் மண்டியிருந்த புதர்ச் செடிகளின் நடுவில் தன் மகரந்தக் காம்புகளை ஆட்டி மாகாளியப்பனை அழைத்தது நீல ஊமத்தம் பூ.

- கௌதம சித்தார்த்தன்