மக்களவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன் தேர்தல் நடைமுறை விதிகள் அமலுக்கு வந்துவிட்டன.

தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீண்குமார் செய்தியாளர்களிடம் 12.03.14 அன்று பேசிய போது, அனுமதியில்லாமல் சுவர்களில் விளம்பரம் செய்வதும், பேனர்கள் வைப்பதும் தேர்தல் விதிமுறைகளை மீறியதாகும் என்று சொன்னதோடு, இதன்கீழ் 12,947 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்றும் கூறியிருக்கிறார். ஏற்கனவே எழுதப்பட்டுள்ளவற்றையும் அழிக்க வேண்டும் என்பது தேர்தல் நடைத்தை விதி.

ஒரு சுவர் விளம்பரம் என்றாலும் விதிமீறல்தான் என்றால், ‘ஸ்மால் பஸ்’ என்ற பெயரில் நூற்றுக்கணக்கான சிற்றுந்துகள் இரட்டை இலை சின்னத்தோடு, நகரத் தெருக்களில் சுற்றிவருவது விதி மீறல் இல்லையா? இதைத்தான் நீதிமன்றத்தின் கவனத்திற்குக் கொண்டு சென்றார் தளபதி ஸ்டாலின். இதில் என்ன தவறு இருக்க முடியும்?

தேர்தல் சின்னமாக கை சின்னம் இருப்பதால், கைகளை வெட்டிவிட முடியுமா? சைக்கிள் பயன்பாட்டைத் தடுத்துவிட முடியுமா? மாம்பழ விற்பனையை நிறுத்திவிட முடியுமா - என்று ஒரு முதலமைச்சராய் இருப்பவர் பேசியிருக்கிறார். அதை ‘நியாயமான கேள்வி’ என்று துள்ளிக் குதிக்கிறது தினமணி தலையங்கம்.

கை - சைக்கிள் - மாம்பழம் இவைகளைச் சின்னமாக வரைந்தால் தேர்தல் விதிமீறல். கையை வெட்டினால், புழலுக்குப் போக வேண்டும். சைக்கிள், மாம்பழம் அன்றாட மனிதத் தேவைகள்.

உத்திரப்பிரதேசத்தில் பகுஜன் சமாஜ் கட்சியின் சின்னம் யானை என்பதால், அங்கு அரசு நிறுவிய யானைச் சிலைகளை மறைக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் ஆணையிட்டது, சின்னங்கள் மூடப்பட்டன.

அதற்காக யானைகளைக் கொன்றிட முடியுமா என்று யாரும் கேள்வி எழுப்பவில்லை. இது அறிவுக்குப் பொருத்தமன்று என்பது அங்குள்ளோர்க்குத் தெரியும்.

மரங்களில், செடிகளில் இலைகள் இருக்கின்றன. சூரியனை மறைக்க முடியுமா என்று தினமணி கேட்கிறது. என்ன கேள்வி இது? இயற்கையின் இயல்புகளுக்கும், ஒன்றை வலிந்து புகுத்துவதற்கும் உள்ள வேறுபாடு கூட தெரிய வேண்டாமா?

தளபதி ஸ்டாலின் தேர்தல் விதிகளுக்கு உட்பட்டு, நீதிமன்றத்தை நாடியிருப்பதை ‘சின்ன தகராறு’ என்று சொல்லும் தினமணி, தன் அடையாளச் சின்னத்திற்காக வக்காலத்து வாங்குவது புரிகிறது. இதற்குப்பெயர் நடுநிலையாம்!

Pin It