மூன்றாவது முறையாக அமெரிக்கா தீர்மானம் கொண்டுவந்திருக்கிறது. இலங்கையில் நடந்து முடிந்த போர் தொடர்பான குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் ஆகியவற்றின் மீது, ஏற்கனவே இரண்டு முறை, ஐக்கிய நாடுகள் அவையில் அமெரிக்கா தீர்மானம் கொண்டு வந்துள்ளது. இப்போது, இங்கிலாந்து, மொரீசியஸ், மான்டிநீக்ரோ, மாசிடோனியா .... உள்ளிட்ட நாடுகளுடன் இணைந்து, ஐக்கிய நாடுகள் அவையின் மனித உரிமை ஆணையத்தில் இலங்கைக்கு எதிரான தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. அந்தத் தீர்மானம் அவையின் உறுப்பு நாடுகளுக்குச் சுற்றுக்கு அனுப்பப் பட்டுள்ளது. அநேகமாக இந்த இதழ் உங்கள் கைகளுக்கு வரும் தருவாயில், திருத் தங்களுடனோ, திருத்தங்கள் இன்றியோ, இந்தியாவின் இலங்கைப் பாசம் தீர்மானத்தின் மீது பட்டுத் தெறித்தோ, தெறிக்காமலோ தீர்மானம் நிறைவேறிய செய்தியும் வந்து சேர்ந்திருக்கும்.

உண்மையில் என்னதான் நடக்கிறது? ஒவ்வொரு முறை, ஐ.நா. மன்றத்தில் இதுபோன்ற தீர்மானங்கள் கொண்டுவரப் படும்போதும், மிகுந்த எதிர்ப்பார்ப்பும் நம்பிக்கையும் கொண்டு காத்திருப்பதும், பிறகு ஏமாற்றமடைந்து பழைய நிலைக்குத் திரும்புவதுமாகத்தான் காலம் கழிந்து கொண்டு இருக்கிறது. கடந்த முறை, காந்தி தேசமாம் இந்தியா மிகக் கேவலமான முறையில் தீர்மானத்தை நீர்த்துப்போகச் செய்தது. பொங்கிவரும் பாலில் தண்ணீர் தெளிப்பது போல, தமிழகத்தில் எழுந்த போராட்டக் குரல்களின் அழுத்தத்தால், தீர்மானத்தை நானும் ஆதரித்தேன் பேர்வழி என்று காட்டுவதற்காக, இலங்கையுடன் சேர்ந்து கபட நாடகம் ஒன்றை அரங்கேற்றியது.

இந்த முறையும் அப்படி ஒரு அநியாயம் இந்திய அரசால் நிகழ்த்தப்படாது என்பதற்கு எந்த ஒரு உறுதியும் இல்லை. மியான்மரில் நடைபெற்ற பிம்ஸ்டெக் நாடுகளின் தலைவர்கள் மாநாட்டில், தமிழர்களின் எதிர்ப்பையும் மீறி, மன்மோகன் சிங் இலங்கை அதிபர் ராஜபக்சேவைச் சந்தித்திருக்கிறார். முதலில் இத்தீர்மானம் கொண்டுவந்த நாடுகளின் நடுநிலை நம்பகத்தன்மையைக் கேள்விகளால் துளைத்தெடுத்து வந்த இலங்கை அரசப் பிரதிநிதிகள், இப்போது, அத்தீர்மானத்தை எதிர்கொள்ளும் துணிவு வரப்பெற்றவர் களாகத் தென்படுவதன் பின்னணியில், மேற்சொன்ன சந்திப்பு இருக்கக்கூடுமோ என்ற ஐயம் ஏற்படத்தான் செய்கிறது.

அதுவும் அமெரிக்கா முன்மொழிந் துள்ள தீர்மானம், இலங்கையை நோக்கிச் சுட்டுவிரலைக் கூட நீட்டுவதற்கு வழி செய்துவிடப் போவதில்லை. இதுவரை கொண்டு வரப்பட்ட தீர்மானங்கள் எதிலும், இனப்படுகொலை என்பதற்கான எந்தஒரு அழுத்தமும் கொடுக்கப்பட வில்லை. ஐக்கிய நாடுகள் அவையின் மனித உரிமைகள் ஆணைய தலைவர் நவநீதம் பிள்ளை முன்வைத்திருக்கின்ற, சர்வதேச பன்னாட்டுப் புலனாய்வு என்பதை வரவேற்பதாகத் தீர்மான வரைவில் சொல்லப்பட்டிருந்தாலும், மீண்டும் அந்தப் பொறுப்பைக் குற்றவாளி யான இலங்கையிடமே கையளிக்கின்ற வகையிலேயே உள்ளடக்கம் காணப்படு கிறது. ஏற்கனவே இரண்டு முறை இது போன்ற கேலிக்கூத்தான விசாரணை முறையையே ஐ.நா. அவை முன்வைத்தது. போர்ப் படிப்பினைகள் மற்றும் நல்லிணக்கக் குழுவின் பரிந்துரைகளையே இலங்கை அரசு முழுமையாக நிறைவேற்ற முன்வராத நிலையில், மீண்டும் அதன் கைகளுக்கே விசாரணை அதிகாரம் போவதால், ஈழத்தமிழர்களுக்கு என்ன நன்மை விளைந்து விடப்போகிறது?

வெளிப்படையான பன்னாட்டுப் புலனாய்வு மட்டுமே, இலங்கையின் இனப்படுகொலையை வெளிக்கொண்டு வருவதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்தித் தரும் என்று உலகமெங்கும் உள்ள தமிழர்கள் நம்புகின்றனர். அதற்கான முன்னெடுப்புகளை இந்தியாவே மனித உரிமைகள் ஆணையத்தின் மூலம் செய்ய வேண்டும் என்பதும் அனைவரின் எதிர்ப்பார்ப்பாக இருக்கிறது. ஆனால், இந்தியாவோ மீண்டும் மீண்டும் தமிழர் களுக்கு எதிராகச் சிங்கள அரசுடன் கைகோப்பதிலேயே அக்கறை காட்டுகிறது-.

ஈழமக்களின் துயரம் இதுவரை இந்திய அரசியலுக்குப் பயன்பட்டு வந்தது போய், இப்போது உலக அரசியலுக்கும் பயன்பட்டு வருகின்ற வேதனை யான நிலையைப் பார்க்கிறோம். உக்ரைன் விவகாரத்தில் இத்தனை தீவிரமும், கடுமையும் காட்டும் அமெரிக்கா, இலங்கைக்கு எதிரான தீர்மானத்தைக் கூட வலுவில்லாததாக அமைப்பது ஏன் என்கிற கேள்வி நமக்கு எழுகிறது. இதுவரை உலகில் நடந்த எந்த ஒரு இனப்படு கொலைக்கும் இல்லாத அளவிற்கு, இலங்கை அரசின் இனப்படுகொலைக்கான ஆதாரங்கள் உலகாநாடுகளின் முன்னால் வைக்கப்பட்டுள்ளன. வடக்கு மாகாணத் தேர்தலுக்குப் பின்னர், இலங்கை சென்று வந்த நவநீதம்பிள்ளை அங்கு நிலவிவந்த அச்சம் நிறைந்த மக்களின் வாழ்க்கையை யும், இராணுவ மயமாகப்பட்ட சூழலையும் மிகத் தெளிவாகச் சுட்டிக்காட்டினார். இலங்கையின் அரசியல் பிரதிநிதிகளாகவும், அதிகாரிகளாகவும் இராணுவத்தைச் சேர்ந்தவர்களே பெரும்பான்மையும் நியமிக்கப்பட்டுள்ளனர். வடக்கு மாகாண ஆளுநர் சந்திரசிறீ, ஓய்வு பெற்ற இராணுவ உயரதிகாரி. அவரை மாற்றச் சொல்லி தொடர்ந்து முதல்வர் விக்னேஸ்வரன் வலியுறுத்தி வருகிறார்.

இலங்கையின் தெருக்களில், குடியிருப்புப் பகுதிகளில் நிறுத்தி வைக்கப் பட்டுள்ள இராணுவத்தினர், மக்களுக்கு அச்சுறுத்தலாக இருக்கிறார்கள் என்றால், அதிகார மையங்களில் அமர வைக்கப் பட்டுள்ள இராணுவ உயரதிகாரிகள், தமிழ்ப் பிரதிநிதிகளுக்கு அச்சுறுத்தலாகவும் முட்டுக்கட்டையாகவும் இருக்கிறார்கள். 13வது சட்டத்திருத்தத்தையும், நீதிமன்ற ஆணையின் மூலம் ராஜபக்சே செயலிழக்கச் செய்துவிட்டார். இந்நிலையில், வெளிப்ப டையான பன்னாட்டுப் புலனாய்வு ஒன்றே தங்களுக்கான நீதியைப் பெற்றுத்தரும் என்று ஈழத்தமிழர்கள் பெரிதும் நம்பு கின்றனர்.

இலங்கையில் தமிழர் பகுதிகளில் என்னென்ன மறுசீரமைப்புப் பணிகள் நடந்துள்ளன என்பதைக் கண்காணிக்கக் கூட, பான்னாட்டு அமைப்புகளை ராஜபக்சே அனுமதிக்கவில்லை. இலங்கையில் நடப்பது சர்வாதிகார இராணுவ ஆட்சி. இதற்கு மேலும் சீனாவைக் காரணம் காட்டி, இந்தியா இலங்கை சிக்கலில் நழுவ நினைத்தால், இந்தியாவின் தென்பகுதி மோசமான அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள வேண்டிவரும்.காங்கிரசும், பா.ஜ.க.வும் அரசியல் சவடால்களை விட்டுக் கொண்டிருப்பது நாட்டின் பாதுகாப்புக்கும், ஈழத்தமிழர்களின் நலனுக்கும் நல்லதில்லை.

மோடி பிரதமரானால், இலங்கைப் பிரச்சினை தொடர்பான இந்தியாவின் நிலையில் மாற்றம் ஏற்படும் என்கிறார், யஷ்வந்த் சின்ஹா. இலங்கை சென்று திரும்பிய சுஷ்மா சுவராஜ், ‘அங்கே தமிழர்கள் மகிழ்ச்சியுடன் வாழ்கிறார்கள்’ என்று பேசியதை மக்கள் மறந்திருப்பார்கள் என்ற எண்ணம்தான் அவர்களை இப்படிப் பேசவைக்கிறது. காங்கிரசின் நிலை எப்போதும் இராஜபக்சேவின் கைகளுக்குள் அடக்கம் என்பதை அனைவரும் நன்றாக அறிந்துள்ளனர். இந்நிலையில், ஈழத்தமிழர் கள் ஐக்கிய நாடுகள் அவையின் மனித உரிமைகள் ஆணையத்தின், பன்னாட்டு மனித உரிமை அமைப்புகளின் நடவடிக்கை களையே நம்ப வேண்டியதிருக்கிறது. நாமும் அவர்களின் நம்பிக்கையோடு நம்மை இணைத்துக் கொள்கிறோம்.

Pin It