“எது மதவாதம்? பா.ஜ.க. மதவாதக் கட்சியே இல்லை. அப்படிச் சொன்னால் முஸ்லிம் லீக் மதவாதக் கட்சி இல்லையா?”

 கொஞ்சமும் கூச்சம் இல்லாமல் தமிழருவி மணியன் உதிர்த்த சிந்தனை முத்துகள் இவை. பா.ஜ.க. எனும் நெருப்பைப் போர்வை போர்த்தி மூடிக் கொண்டு இருக்கும் மணியன் போன்றவர்களிடம் இதைத் தவிர வேறு எதை எதிர்பார்க்க முடியும்? எது மதவாதம்?

முஸ்லிம் லீக்கா - இந்துத்துவமா? மணியன் வாதப்படி முஸ்லிம் லீக் ஒரு மதவாதம்.

ஆனால் எப்படி அது மதவாதம் என்பதை அவர் விளக்கவில்லை. ஒருவேளை விளங்காமல் இருந்திருக்கலாம். அவர்கள் ஏற்றுக் கொண்டுள்ள மார்க்கம் இஸ்லாம். அத்தியாயம் 3, வசனம் 19இல் அல்லாவினால் அங்கீகரிக்கப் பட்ட மார்க்கம்(வழி) இஸ்லாம் என்று குர்ஆன் கூறுகிறது. காலப்போக்கில் இஸ்லாம் மதமாக மாறிவிட்டது. தொடக்கத்தில் இஸ்லாம் மார்க்கத்தை ஏற்றுக் கொண்ட முஸ்லிம் மக்கள், கல்வி, வேலைவாய்ப்புச் சமூக நிலையில் மிகவும் பின்தங்கி இருந்தார்கள்.

“நவீன கல்வியைப் பற்றி சர். சையது அகமது கானின் கருத்துகள் என்னை ஈர்த்தன. நவீன விஞ்ஞானம், தத்துவம், இலக்கியம் ஆகியவற்றைப் படித்தால் ஒழிய, இன்றைய உலகில் எவரும் உண்மையில் கல்வி பெற்றவர் ஆகமாட்டார்” என்று தன்னைப்பற்றிச்சொல்ல வரும்போது தன் முஸ்லீம் சமூக நிலையையும் சுட்டிக்காட்டுகிறார் மவுலான அபுல்கலாம் ஆசாத்.இப்படிப்பட்ட நிலையில்தான் முஸ்லிம் சமூக மக்களின், அந்தச் சமுதாய முன்னேற்றத்தைக் கருத்தில் கொண்டு, டாக்கா பல்கலைக் கழகத்தில் அலி சகோதரர்களால் 1906ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட சங்கம் - முஸ்லிம் லீக். லீக் என்றால் சங்கம் என்பது பொருள்.

2006ஆம் ஆண்டு சச்சார் ஆணை அறிக்கையின்படி 6 முதல் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளில் 25 விழுக்காட்டினர் கல்வி இல்லாதவர்களாக இருக்கிறார்கள். இந்தியாவின் மொத்த பட்டதாரிகளில் 3 விழுக்காட்டினர் முஸ்லிம்கள். இந்தியாவில் இருக்கும் மொத்த முஸ்லிம் மக்களில் 2007ஆம் ஆண்டில் 2.5 விழுக்காட்டினரே அதிகார மட்டத்தில் இருந்தார்கள். முஸ்லிம்கள் மூன்றில் ஒரு பகுதியினர் குடிதண்ணீர், கழிப்பறை வசதிகள் இன்றியும், குடிசைகளில் வசிக்கிறார்கள்.

இதே கருத்தை ரங்கநாத் மிஸ்ரா ஆணைய அறிக்கையும் உறுதி செய்கிறது-. முஸ்லிம் லீக் இயக்கம் டாக்காவில் தொடங்கப்பட்டபோது, அந்த மக்கள் இருந்த நிலையில் இருந்து, இன்று ஓரளவு முன்னேற்றம் அடைந்திருக்கிறார்கள் என்பது ஒருபுறம் இருந்தாலும், சச்சார் ஆணையம், ரங்கநாத் மிஸ்ரா ஆணைய அறிக்கைகள் முஸ்லிம் சமூக முன்னேற்றம் குறித்துப் பேசுகிறது. அந்தப் பணியைத் தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறது முஸ்லிம் லீக் அமைப்பு.

அதனால்தான் மதத்தை வேறோடு தூக்கி எறியும் தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, தலைவர் கலைஞர் ஆகியோர் எல்லாம் முஸ்லிம் லீக் தலைவர் காயிதே மில்லத் ஜனாப் இஸ்மாயில் சாகிபுடன் அரசியல் நடத்த முடிந்திருக்கிறது-. இந்தியாவில் இந்து என்று ஒரு மதம் முன்பு இருந்ததில்லை.

இப்பொழுது அது உருவாக்கப்பட்டு, அதை இந்துத்துவா என்ற பெயரில் வளர்த்துக் கொண்டு இருக்கும் வேலையைப் பார்ப்பனியம் செய்து கொண்டு இருக்கிறது-. 1914ஆம் ஆண்டு இந்து மகாசபையாக உருவெடுத்து, ஆர்.எஸ்.எஸ். என்று வடிவம் மாறியது. விஸ்வஇந்து பரிசத், பஜ்ரங்தள் போன்ற பிரிவுகளை உள்ளடக்கி இயங்கும் ஆர்.எஸ்.எஸ். தன் அரசியல் பிரிவாக ஜனசங்கத்தை உருவாக்கியது. அதுவே இப்பொழுது பாரதிய ஜனதா கட்சியாக உருமாறியிருக்கிறது. இவைகளின் அடிப்படை நோக்கம் அகண்ட பாரதம் - அகண்ட இந்து ராஷ்ட்ரியம் - ராமராஜ்யம் - ஒரே மொழி சமஸ்கிருதம் - ஒரே இனம் இந்து. இதற்கு மாறாக எது இருந்தாலும் அதன்மீது வன்முறையைத் தொடுக்கும் இதன் கொள்கைகளுக்குப் பெயர் இந்துத்துவம். பாபர் கட்டிய மசூதியை ‘யாத்ரா’ நடத்தி இடித்துத் தகர்த்தது பா.ஜ.க.வின் இந்துத்துவ ரதம்.

2002ஆம் ஆண்டு குஜராத் கலவரத்தில் மோடியின் முகமூடி கழன்று விழுந்ததற்குப் பின்புலம் இந்துத்துவம். உத்திரப்பிரதேசத்தில் ஜாட் இன இந்துக்களுக்கும், முஸ்லிம்களுக்கும் இடையில் நடந்த மோசமான வன்முறைக் கலகத்திற்குப் பின்னால் பா.ஜ.க.வின் இந்துத்துவம் இருந்தது. கொல்லப்பட்ட முஸ்லிம்களை நாய்க்கு உவமையாக்கிப் பேசியவர் நரேந்திரமோடி. மனிதனை மனிதனாகப் பார்க்கமாட்டார் மோடி. மதத்தின் அடிப்படையில்தான் மனிதனைப் பிரித்துப் பார்ப்பார்.

2002ஆம் ஆண்டு முஸ்லிம் மக்கள் கொல்லப்பட்ட கலவரத்திற்குப் பிறகு 12 ஆண்டுகள் வாய்திறக்காமல் இருந்த பா.ஜ.க. இப்பொழுது வாய் திறந்து இருக்கிறது. ராஜ்நாத்சிங் கூறுகிறார், முஸ்லிம்கள் மனம் நோகும்படி நாங்கள் நடந்திருந் தால் மன்னிப்புக் கோறுகிறோம் என்று. மன்னிப்புக் கேட்டதில் இருந்தே பா.ஜ.க. தவறு செய்துவிட்டது என்பது உறுதியாகிவிட்டது. இந்துத்துவா நெருப்பில் மன்னிப்பு சாம்பலாகிவிடும். மதச்சார்பு வேறு. மதவாதம் வேறு. முஸ்லிம் லீக் மதச்சார்புடைய கட்சிதான்.

ஆனால் பா.ஜ.க.வோ ஒரு மதவாதக் கட்சி. மதச்சார்பு, தன் மதத்தை நேசிக்கும். மதவாதம், பிற மதங்களை அழித்தொழிக்க நினைக்கும். மதச்சார்பு, வழிபாடு நடத்தும். மதவாதம், வழிபாட்டுத் தலங்களை இடித்துத் தகர்க்கும். மதச்சார்பு, தற்காப்பில் நிலைக்கிறது. மதவாதம், தாக்குதலில் தொடங்குகிறது. முஸ்லிம் லீக் மதசார்புடைய கட்சி. பா.ஜ.க. மதவாதக் கட்சி!

Pin It