thilai kovi book 350

எல்லோருடைய பிரச்சனைகளையும் தீர்த்து வைப்பதாகச் சொல்லும் எம்பெருமான் தில்லை அம்பலவாணனுக்கு, அவனுடைய பிரச்சனையைத் தீர்த்துக் கொள்ள முடியவில்லை. அல்லாடிக் கொண்டிருக்கிறான் அவன், கோர்ட்டுக்கும் தீட்சதர்கள் வீட்டிற்கும்.

இது குறித்து உரிய சான்றுகளுடன் விரிவாகவும், விளக்கமாகவும் சொல்லுகின்ற நூல், “தில்லைக் கோயிலும் தீர்ப்புகளும்”. இந்நூலின் ஆசிரியர் சென்னை உயர்நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் சிகரம். ச.செந்தில்நாதன்.

அப்படி என்ன பிரச்சனை தில்லைக் கோயிலுக்கு?

வயது முதிர்ந்த சிவனடியார் ஆறுமுகசாமி என்பவர் தில்லைக் கோயிலின் சிற்றம்பல மேடையில் ஏறி தேவாரம் & திருவாசகம் பாடப்போனார். அவரைத் தாக்கித் தடுத்து விட்டார்கள் தீட்சதர்கள். அதனால் ஆறுமுகசாமி நீதிமன்றத்திற்குப் போய்விட்டார் என்று பொதுவாகச் சொல்வார்கள்.

தில்லைக் கோயில் வெறும் நடராசன்கோயில் மட்டும் இல்லை. அங்கே திருமாலும் இருக்கிறான். நடராசன் இருக்கும் இடம் சிற்றம்பலம். திருமால் இருக்கும் இடம் சித்திரக் கூடம்.

கி.பி.12ஆம் நூற்றாண்டில் சிவன் கோயிலில் திருமாலா (கோவிந்தராஜபெருமாள்) என்று கொதித்தெழுந்து, அந்தப் பெருமாள் சிலையைக் கடலில் தூக்கி எறிந்தான் இரண்டாம் குலோத்துங்கன். 400 ஆண்டுகளுக்குப்பின் விஜயநகர வேந்தன் அச்சுததேவ மகாராயர் மீண்டும் அங்கே பெருமாள் சிலையை வைக்கிறான்.

“இப்பொழுது தில்லை நடராசருக்கும் பிரச்சனை இல்லை; கோவிந்த ராசப் பெருமாளுக்கும் பிரச்சனை இல்லை ; பிரச்சனை எல்லாம் தமிழுக்குத்தான்” என்று இக்கோயிலின் தொடக்கத்தை நூலாசிரியர் செந்தில்நாதன் அருமையாகச் சுட்டிக்காட்டுகிறார்.

தில்லைக் கோயிலில் தமிழில் வழிபாடு செய்யக்கூடாது, தேவாரம், திருவாசகம், பாடக்கூடாது என்று தடுப்பவர்கள் வேறுயாருமல்ல & தீட்சதர்கள்.யார் இந்த தீட்சதர்கள்? தீட்சதர்கள் தங்களைத் தமிழர்கள் என்று சொல்லிக் கொள்கிறார்கள். உண்மைதானா?

இன்று அலகாபாத் என்று அழைக்கப்படும் (அன்றைய கனோஜ்) நகரைச் சேர்ந்த பார்ப்பனர்கள் ‘தீட்ஷித்’ என்று அழைக்கப்பட்டார்கள். தீட்சித் என்ற சொல்லின் தமிழ் வடிவம்தான் தீட்சதர். இவர்கள் வடநாட்டுப் பார்ப்பனர்கள் என்று, தமிழக இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் மறைந்த யு.சுப்பிரமணியம், மு.இராகவையங்கார் போன்றோரை மேற்கோள்காட்டி நிறுவுகிறார் நூலாசிரியர்.

தீட்சதர் என்ற பெயர் சங்க இலக்கியங்களில், தேவார திருவாசகங்களில் கூட இடம் பெறவில்லை என்கிறார் அவர். ஆகவே அவர்கள் தமிழர்கள் இல்லை.

தில்லைக் கோயிலுக்குச் சற்றுத் தொலைவில் கொள்ளிடம் நதிக்கரையில் அமைந்துள்ள ஆதனூர் சேரியில் பிறந்தவர் நந்தன். சேரியில் பிறந்த நந்தனை அம்பலவாணன் அருளால் தீயில் மூழ்கிப் ‘புனிதம்’ அடையச் செய்தவர்கள் தீட்சதர்கள். நந்தனின் சிலை தில்லைக் கோயிலில் இருந்ததை, தமிழ் வளர்ச்சித் துறை முன்னாள் இயக்குனர் மறைந்த கொண்டல் சு. மகாதேவன், உ.வே.சாமிநாதர் ஆகியோர் பார்த்ததாகப் பதிவு செய்திருக்கிறார்கள். அச்சிலை இப்போது இல்லை. காரணம் தீட்சதர்கள்.

சாதி மதங்களை ஏற்காதவர், தன்னைச் சாதி அடிப்படையில் இனம் காணாதவர், மதத்தைப் பேய் என்றவர், கண்மூடிப் பழக்கங்கள் மண்மூடிப் போக என்று தீட்சதர்களை எதிர்த்தவர் வடலூர் இராமலிங்க வள்ளலார்.

அவரைத் தில்லைக் கோயிலுக்கு நுழைய விடாத தீட்சதர்களின் செயலால், தில்லைக் கோயிலுக்கு எதிராக வடலூரில் சத்திய ஞான சபையை உருவாக்கினார் வள்ளலார் என்று பிரச்சினைக்குரிய வரலாறுகளைச் சான்றுகளுடன் விளக்குகிறார் ச.செந்தில்நாதன்.

“கோயிலுக்குப் பிறகு தீட்சதர்கள் அதிகம் போகும் இடம் கோர்ட்” என்று சொல்லும் அவரின் சொற்றொடரின் பொருளை நூலின் 3ஆம் அத்தியாயத்தில் இருந்து புரிந்து கொள்ள முடிகிறது.

“சிதம்பரத்தில் இப்பொழுது 250 தீட்சதர்கள் குடும்பங்கள்தான் இருக்கின்றன. தீட்சதவர் குடும்பங்களில் உள்ள திருமணமான ஒவ்வொரு ஆணுக்கும் கோயில் நிர்வாகத்தில் பங்கு உண்டு. இது பிறப்பால் கிடைக்கும் உரிமை” என்கிறார் நூலாசிரியர். சாதிய உரிமை.

தீட்சதர்களின் கட்டுப்பாட்டில் கோயில். கோயில் நிலங்கள், தங்க & வெள்ளிப் பொருள்கள், வரவு செலவு என்பதில் ஊழல் மலியத் தொடங்கியதால், கோயில் நிர்வாகம் குறித்து புகார்கள் எழத் தொடங்கின.

1932ஆம் ஆண்டு இந்து சமய அறநிலையச் சட்டத்தில் உருவாக்கப்பட்ட இந்து சமய அறநிலையத் துறை வாரியம், தானே முன்வந்து கோயிலை ஒழுங்குபடுத்த ஒரு திட்டம் தயாரித்தது. அதனைத் தீட்சதர்கள் எதிர்த்து தென்னாற்காடு மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார்கள். 9.9.1936 அன்று வெளியான தீர்ப்பில் தீட்சதர்கள் தரப்பு வாதத்தை ஏற்காத நீதிபதி அறநிலையத் துறைத் திட்தத்தை உறுதிசெய்தார்.

ஆனால் 1951ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்பு தீட்சதர்களுக்குச் சாதகமாக அமைந்துவிட்டது. ஆனாலும் அத்தீர்ப்பு முற்றுப்புள்ளி ஆகிவிடவில்லை.

1982ஆம் ஆண்டு அப்போதைய அறநிலையத் துறை ஆணையர் யு.சுப்பிரமணியன் தீட்சதர்களுக்கு அனுப்பிய அறிக்கையில் தீட்சதர்களின் ஊழல், நிர்வாக சீர்கேடுகளை அம்பலப்படுத்தினார்.

எடுத்துக்காட்டாக 2.4.1981இல் கொடுக்கப்பட்ட புகாரில், கோயிலின் 14 சன்னதிகளை ஆண்டுக்கு 18 தடவைகள் ஒரு வட்டம் ரூபாய் 6000 வீதம் ஏலம் விடுவதில் வருவாய் 1,00,000 ரூபாய் கணக்கில் காட்டப்படவில்லை.

16 பவுன் தங்கம், 16 வெள்ளி செம்புகள் காணவில்லை - அக்கோயிலில் நடைபெறும் பணம், தங்க, வெள்ளி நகைகள் குறித்த ஊழல்கள் & சமஸ்கிருதம் மட்டுமே அங்கு ஒலிக்க வேண்டும், தமிழை நுழைய விடக்கூடாது என்பதில் இருக்கும ஆதிக்க, பார்ப்பனிய வெறி - இவைகள் தொடர்பான வரலாறு, அறநிலையத் துறை ஆவணங்கள், சாதக பாதக நீதிமன்றத் தீர்ப்புகள், அதன் விழைவுகள் குறித்த ஒரு முழுமையான ஆவணமாகத் திகழ்கிறது இந்நூல்.

இக்கோயில் தொடர்பான உச்சநீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்பு 1.2.2014 இல் வெளியானது. அத்தீர்ப்பு தீட்சதர்களுக்குச் சாதகமாக அமைந்துவிட்டது. அப்போது தமிழகத்தின் முதல்வர் ஜெயலலிதா.

இத்தீர்ப்பே இறுதியானதா? இல்லை.

காசி விசுவநாதர் கோயில், உத்திரப்பிரதேச அரசால் 1983 தனிச்சட்டம் மூலம் அரசின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டது-. தில்லை கோயிலுக்கும் அது பொருந்தும் என்கிறார் நூலாசிரியர். நூலில் நீதிமன்ற நடவடிக்கைகள் குறித்த செய்திகள் மிக ஆழமானவை.

தில்லைக் கோயிலும் தீர்ப்புகளும்

ஆசிரியர் : சிகரம் ச.செந்தில்நாதன்

வெளியீடு : சந்தியா பதிப்பகம்

புதியஎண்.77,53ஆவது தெரு,

9ஆவது நிழற்சாலை,

அசோக்நகர், சென்னை - 83

விலை : ரூ.110

தொலைபேசி : 044-24896979