perarivalan 350“எனக்கு வயது 73, துணைவர் அற்புதத்திற்கு வயது 67. தண்டுவட நரம்பு விலகி, என் பாதங்கள் உணர்விழந்துள்ளன. இடது காலால், 5&6 நிமிடங்களுக்கு மேல் நிற்கவோ, நடக்கவோ இயலாதவனாகி, முதுமையாலும், சில நோய்களாலும் தாக்குண்டு வருகிறேன்.

19 வயதில் சி.பி.ஐ. எம்மிடமிருந்து இழுத்துச் சென்ற எம் மகனுக்கு இன்று வயது 43. இளமைக் கால வசந்தம் எல்லாம் எரிந்து போய்விட்டது. சிறையில் மகன் படும் வேதனையை விளக்கச் சொற்கள் அறியோம்.

இறுதிவரை எங்கள் மகனின் விடுதலையைக் காணாமலேயே நாங்கள் காலமாகிவிடுவோமோ என்று அஞ்சுகிறோம்.”

கடந்த 24 ஆண்டுகளாக, ராஜீவ் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுச் சிறையில் வாடும் பேரறிவாளனின் தந்தை குயில்தாசன் எழுதியுள்ள கடிதத்தின் ஒரு பகுதிதான் மேலே தரப்பட்டிருக்கிறது.

உச்சநீதிமன்றத்தில் மரண தண்டனை விதித்து தீர்ப்பு எழுதிய நீதியரசர்கள் மூவர் குழுவின் தலைமை நீதிபதி கே.டி.தாமஸ், அந்த வழக்கைத் தான் சரியாகக் கவனிக்காமல் தீர்ப்பை எழுதிவிட்டதாகவும், கடவுள் கூடத் தன்னை மன்னிக்க மாட்டார் என்பதாகவும் கூறியுள்ளார்.

பேரறிவாளனிடம் வாக்குமூலம் பெற்ற சி.பி.ஐ. அதிகாரி தியாராஜன், ‘பேரறிவாளன் கூறிய முக்கியமான சில வரிகளை அவருடைய வாக்குமூலத்தில் நான் சேர்க்காமல் விட்டுவிட்டேன். என் மனச்சாட்சி என்னை உறுத்திக் கொண்டே இருப்பதால் இந்த உண்மையை இப்போது கூறுகிறேன்’ என்கிறார்.

இத்தனைக்கும் பிறகும் அவர்கள் சிறைவாசம் முடியவில்லை. நல்லதொரு தீர்ப்பும் வரவில்லை. இத்தனை காலமும் நம்பிக்கையோடு காத்திருந்த பேரறிவாளனின் பெற்றோர்கள் இன்று விரக்தியின் விளிம்பில் நின்று கொண்டு இருக்கிறார்கள்.

தமிழகத்தில் உள்ள அனைத்துக் கட்சிகளும், அமைப்புகளும் நீதிக்குக் குரல் கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்திருக்கிறார்கள். தமிழகம் விழிக்குமா? சிறைக்கதவுகள் திறக்குமா?