2015&16ஆம் நிதியாண்டிற்கான தொடர்வண்டித் துறையின் நிதிநிலை அறிக்கையை, மத்திய அமைச்சர் சுரேஷ் பிரபு நாடாளுமன்றத்தின் முன் வைத்திருக்கிறார். இவ்வறிக்கை தொலைநோக்குப் பார்வை கொண்டது என்கிறார் மோடி. பயணிகளுக்குக் கூடுதல் சுமை ஏதுமில்லை என்று பாராட்டுகிறார் ஜெயலலிதா.

சரியாகச் சொன்னால், இந்த நிதிநிலை அறிக்கை தமிழகம், கேரளம் உள்ளிட்ட பல மாநிலங்களைப் புறக்கணித்துள்ளது. தமிழகத்தை முற்றாகவே புறக்கணித்துள்ளது என்று கூறலாம்.

2012&13ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில், சென்னை, ராயபுரம் தொடர்வண்டி நிலையம் நான்காவது முனையமாகவும், தாம்பரம் மூன்றாவது முனையமாகவும் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால் 2013&14ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் இதற்கான நிதி ஒதுக்கப்படவில்லை. நடைபெற்று வந்த சில பணிகளும் நிறுத்தப்பட்டு விட்டன. தாம்பரம் மூன்றாவது முனையம் என்பது பொய்யாய்ப் பழங்கதையாய்ப் போய்விட்டது.

அமைச்சர் சுரேஷ் பிரபு பொறுப்பேற்றவுடன் அத்துறையை மேம்படுத்தப் போவதாகச் சொல்லி ஏழு குழுக்களை அமைத்தார். அந்தக் குழுக்களின் பரிந்துரைப்படி நாட்டின் 160 தொடர் வண்டித் துறை திட்டங்கள் கிடப்பில் போடப்பட்டன. அவற்றுள் தமிழகத்திற்கான 24 திட்டங்களும் அடக்கம். திண்டுக்கல், திருப்பூர், ஈரோடு மாவட்டங்களை இணைக்கும் ஈரோடு & பழனி வழித்தடத் திட்டம் காணாமல் போய்விட்டது.

செங்கல்பட்டு, திண்டுக்கல் வழியிலான இருவழிப்பாதைத் திட்டம், சென்னை, நாகர்கோயில் வழியிலான இருவழிப்பாதைத் திட்டம் ஆகியனவும் முடங்கி விட்டன. சென்னை, கன்னியாகுமரி இருவழிப் பாதைத் திட்டம் பத்து ஆண்டுகளாக ஆமை வேகத்தில் நகர்ந்தது. இப்போது, அந்த ஆமையையும் காணவில்லை.

பயணிகள் கட்டணம் உயரவில்லை என்கிறார்கள். டீசல் விலை குறைந்திருக்கிறதே, பயணிகள் கட்டணம் குறைக்கப்பட வில்லை. மாறாக சரக்குக் கட்டணம் கூட்டப்பட்டிருக்கிறது. புதிய திட்டங்கள் ஏதும் அறிவிக்கப்படவில்லை. பழைய திட்டங்களுக்கும் மூடுவிழா நடந்திருக்கிறது.

திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் கலைஞர் சொல்லியிருப்பது போல், ‘இந்திய இரயில்வே துறை வரலாற்றிலேயே முதல் தடவையாக புதிய ரயில்களோ, கூடுதல் ரயில்களோ அறிவிக்கப்படாத பட்ஜெட்இதுதான்’.

தமிழகத்தில் இந்த நிதிநிலை அறிக்கையின் படி, ஒரு புதிய தொடர்வண்டியும் இல்லை என்பது ஒருபுறம் இருக்க, முற்றிலும் கைவிடப்பட்ட புதிய திட்டங்கள் 24 குறித்தும், பாதியில் கைவிடப்பட்ட திட்டங்கள் 9 குறித்தும் நாம் மறுபுறத்திலும் கவலைப்பட வேண்டியிருக்கிறது.

இந்நிதிநிலை அறிக்கையில் குறிப்பிடத்தகுந்த புதிய முன்னேற்றத்திற்கான திட்டம் ஏதும் இல்லை.

மோடியின் சொல் விளையாட்டில் பளபளக்கிறது இவ்வறிக்கை. ஆபத்து என்ன வென்றால், தொடர்வண்டித் துறை தனியார் மயமாவதற்கான சூழலின் அறிகுறியாக இது அமைந்துள்ளது.

மின்னுகிறது நிதிநிலை அறிக்கை!

பொன்னால் அன்று, பொய்களால்.