govind pansarai 350சிறுபான்மையினர், பெண்கள், ஒடுக்கப்பட்டவர்கள் இவர்களுக்காகப் போராடும் மதச் சார்பற்ற ஜனநாயக சக்திகள் ஆயுதங்களால் வீழ்த்தப்படுவார்கள் என்பதை மீண்டும் ஒரு முறை அழுத்தமாகச் சொல்லி இருக்கிறது, தோழர் கோவிந்த் பன்சாரே படுகொலை.

16.02.2015 அன்று காலையில் நடைப்பயிற்சி முடித்துவிட்டு, தன் மனைவி உமாவுடன் வந்து கொண்டிருந்தவரை, வீட்டு வாசலில் துப்பாக்கியால் சுட்டிருக்கிறார்கள். அவருடைய மனைவியும் காயமடைந்து மருத்துவமனையில் உள்ளார். பன்சாரே மரணத்தைத் தழுவிக்கொண்டார்.

இரண்டான்டுகளுக்கு முன்பு (2013 ஆக.20), மூடநம்பிக்கைகளுக்கு எதிராகப் போராடிய நரேந்திர சிங் தபோல்கர் புனேயில் சுட்டுக்கொல்லப்பட்டார். இவருடைய தீவிரமான போராட்டங்களின் விளைவாக, மூடநம்பிக்கைகள், மந்திர தந்திரச் செயல்பாடுகளுக்கு எதிரான சட்டம் மகாராஷ்டிராவில் கொண்டுவரப்பட்டது.

மக்களைச் சுரண்டுகின்ற மதவாதிகள், அரசியல், சமூக அடிப்படைவாதிகள், வடநாட்டின் ஜாட் என்னும் சாதிப்பஞ்சாயத்தினர் ஆகியோரைக் கடுமையாக எதிர்த்து வந்தார்.

இந்துத்துவா கட்டமைத்துள்ள மராட்டிய மன்னன் சிவாஜியைப் பற்றிய பிம்பங்களை உடைத்தெறிகிறது கோவிந்த் பன்சாரே எழுதியுள்ள, ‘சிவாஜி யார்?’ என்னும் நூல். மராத்தியிலும், ஆங்கிலத்திலுமாக 2 லட்சம் படிகளைத் தாண்டி விற்பனையாகியுள்ளது. மகாத்மா புலே, சாகுமகராஜ், அம்பேத்கர் ஆகியோரின் வரலாறுகளைக் கல்லூரிகளில் பரப்பியிருக்கிறார்.

கோட்சேவுக்கு கோயில் கட்டுவதையும், சிலை வைப்பதையும் கண்டித்துக் கேள்வி எழுப்பியிருக்கிறார். அதற்காக ஆர்.எஸ்.எஸ்.சின் மாணவர் அமைப்பான அகில் பாரதிய வித்யார்த்தி பரிசத் (ஏபிவிபி)தைச் சேர்ந்தவரால் நேரடியாக மிரட்டப்பட்டிருக்கிறார்.

மதவாத வன்முறையாளர்களின் ஆயுதங்கள், பன்சாரேக்களின் குருதியில் தொடர்ந்து குளித்துக் கொண்டிருக்கின்றன.