1937இல் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தைத் தமிழ் அறிஞர்கள் தொடங்கினார்கள் என்றும், பிறகு பெரியார் வந்து அதில் சேர்ந்து கொண்டார் என்றும் திரிபு-வாதிகள் சிலர் இன்று எழுதத் தொடங்கி உள்ளனர்.

1926ஆம் ஆண்டே, இந்தி எதிர்ப்பைத் தொடங்கியவர் பெரியார். 1926 மார்ச் மாதம், குடியரசு இதழில், ‘தமிழுக்குத் துரோகமும், ஹிந்தி பாஷையின் ரகசியமும்‘ என்று தலைப்பிட்டு ஒரு கட்டுரையும் எழுதியுள்ளார். “இந்தி படித்த பிராமணர்களால் நமக்கு ஏற்படும் கெடுதியை நினைக்கும் போது, இதுபற்றி வருந்தாமலும், இம்மாதிரிப் பலன் தரத்தக்க இந்திக்கு நாம் பாடுபட்ட முட்டாள்தனத்திற்கும், பணம் கொடுத்த பைத்தியக்காரத்தனத்திற்கும் வெட்கப்படாமலும் இருக்க முடியவில்லை.

சர்க்கார் பள்ளிக்கூடம் முதலிய பல இடங்களில் (இந்தி) கட்டாயப் பாடமக்க பிரயத்தனம்படுவது யார் நன்மைக்கு? இனி கொஞ்ச காலத்திற்குள் இந்திப் பிரச்சாரத்தின் பலனை நாம் அனுபவிக்கப் போகிறோம். பிராமணரல்லாதாருக்கு ஏற்பட்ட பல ஆபத்துகளில் இந்தியும் ஒன்றாய் முடியும் போல் இருக்கிறது-” என்று எழுதியுள்ளார்.

20.11.1929 குடியரசில், ‘இந்திப் புரட்சி’ என்னும் தலைப்பில் தலையங்கமும், 10.5.1931 குடியரசில், ‘கதரும் இந்தியும்‘ என்னும் தலைப்பில் ஒரு கட்டுரையும் எழுதியுள்ளார். 1931ஆம் ஆண்டு கட்டுரையில், இந்தியைப் புகுத்துவது எவ்வளவு வஞ்சகமான காரியம் என்பதை நமது சோனகிரிகள் அனேகர் உணரவில்லையே என்றும், தமிழ்ப்பண்டிதர்கள் சாம்பலையும், மண்ணையும் குழைத்து சூடுபோட்டது போல மேலெல்லாம் தீட்டிக்கொண்டு, சிவ சிவ என்னபதற்கும், ராம ராமா என்பதற்கும் உதவுவார்களே தவிர, நமது மக்கள் மீது அநாவசியமாக ஒரு பாஷை சூழ்ச்சித் திறத்தால் சுமத்தப்படுகிறதே என்ற அறிவும், கவலையும் இல்லாமல் இருக்கின்றனரே என்று வருத்தப்படுகிறார்.

14.6.1933இல் நன்னிலத்தில் நடைபெற்ற சுயமரியாதை மாநாட்டில், இந்திக் கண்டனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. 1932 ஜனவரியில் ‘சமஸ்கிருத சனியன்’ என்று பெரியார் பேசிய பேச்சு வெளியாகி உள்ளது. அதே ஆண்டு மன்னார்குடியில் நடைபெற்ற சுயமரியாதை மாநாட்டில், இந்தி எதிர்ப்புச் சொற்பொழிவுகள் இடம் பெற்றுள்ளன.

இவ்வளவு உண்மைகளையும் மறைத்து விட்டு, இந்தி எதிர்ப்புப் போரில், பெரியார் ஏதோ ஒரு துணைப்பாத்திரம் வகித்ததுபோலக் கூறுவது, எத்தனை வஞ்சகமானது! திராவிட இயக்கமும், பெரியாரும் இல்லையென்றால் இம்மண்ணில் இந்தி ஆதிக்கப் போர் எழுந்திருக்கவே வாய்ப்பில்லை என்னும் உண்மை நெருப்பை, எவ்வளவு பஞ்சைப் போட்டும் இவர்களால் மறைக்க முடியாது!

(சான்று : கொளத்தூர் மணி எழுதியுள்ள, ‘பெரியாருக்கு எதிரான முனை மழுங்கும் வாதங்கள்’)