கடந்த ஆண்டு நவம்பர் திங்களில் மியான்மரில் நடைபெற்ற ஒரு மாநாட்டில் கலந்து கொண்ட அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவுக்கு, இந்திய பிரதமர் நரேந்திரமோடி ஓர் அழைப்பு விடுத்தார். 2015ஆம் ஆண்டு சனவரி திங்கள் 26ஆம் நாள் குடியரசு நாள் விழாவில் கலந்து கொள்ள வேண்டும் என்று. ஏற்றுக்கொண்டார் ஒபாமா.

திட்டமிட்டபடி மூன்றுநாள் அரசுமுறைப் பயணமாக புதுடில்லி வந்தார் அவர். குடியரசு நாள் விழாவிலும் கலந்து கொண்டார்.

மோடி, ஒபாமா பேச்சுகள் நடந்தன. ஒப்பந்தங்களும் கையெழுத்தாயின, ஒன்றும் புரியவில்லை. இவற்றுள் அணை உலை குறித்து மட்டுமே எதிர்க்கட்சிகள் குரல்களை எழுப்பிக் கொண்டிருக்கின்றன. அதில் தவறு ஒன்றும் இல்லை.

ஆனால் அரசுமுறைப் பயணத்தை முடித்துக் கொண்டு புறப்படும் முன்னர் வானொலியில் உரையாற்றிய ஒபாமா, இந்திய மக்களுக்கு ஓர் அழுத்தமான செய்தியைச் சொல்லியிருக்கிறார்.

“தங்கள் மதத்தை நிலைநிறுத்த வேண்டும் என்ற நோக்கத்துடன் இருப்பவர்கள், சகிப்புத் தன்மையின்றி வன்முறை, தீவிரவாதம் ஆகிய செயல்களில் உலகம் முழுவதும் ஈடுபட்டு வருகின்றனர்.

மதம், இனம் ஆகியவற்றின் பெயரால் மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்த முயற்சிப்பவர்களிடம் இருந்து நாட்டைப் பாதுகாக்க வேண்டியது அவசியம்” - இதுதான் ஒபாமாவின் உரை தந்த செய்தி.

10 ஆண்டுகளுக்கு முன்னர், குஜராத்தில் மதவெறி ஆட்டம் ஆடிய மோடிக்கு அமெரிக்கா விசா தர மறுத்திருக்கிறது. இன்று பிரதமர் என்பதால் தவிர்க்க முடியவில்லை, இரு நாடுகளின் உறவு பாதிக்கப்படும் என்பதால்.

அதேசமயம் மோடி தலைமையில் ஆர்.எஸ்.எஸ்.சின் பினாமி பா.ஜ.க. ஆட்சி ஏற்பட்ட பின் இந்தியாவில் நிகழும் அலங்கோலங்களையும் அமெரிக்கா கவனித்துக் கொண்டுதான் இருக்கிறது-.

பல்வேறு மொழிகள், இனங்கள், பண்பாடுகள் கொண்ட இந்தியாவை, ‘ஏக இந்தியா’ என்றும், சமஸ்கிருதமே முதன்மை(ஆட்சி) மொழி என்றும் நிலைநிறுத்தும் வழியில் - சமஸ்கிருதத் திணிப்பு, பகவத் கீதை தேசிய நூல், ராமனுக்குப் பிறந்த மக்களா, தவறான பிறப்புடைய மக்களா என்று பேசுகின்ற ஆட்சியாளர்கள், சாதி, மத, இன மோதல்களை ஊக்குவிக்கும் முயற்சியில் மறைமுகமாகச் செயல்படுகிறார்கள் என்ற அச்சம் நிலவுகிறது இந்தியாவில்.

காஷ்மீரத்தில் 370ஆவது பிரிவை நீக்கவேண்டும் என்று முயற்சிக்கும் பா.ஜ.க. அரசின் சகிப்புத்தன்மை அம்பலத்திற்கு வந்திருக்கிறது.

இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின் 42ஆம் திருத்தச் சட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதற்கு முன்னர், அரசியல் சாசன முகவுரையில் இருந்த, “மதச்சார்பற்ற”, “சமதர்மம்“ ஆகிய சொற்கள், மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தால் வெளியிடப்பட்ட குடியரசு தின விளம்பரத்தில் இடம்பெறவில்லை.

அவைகளை நீக்க வேண்டும் என்ற முயற்சியும் நடைபெறுவதாகத் தெரிகிறது.

சகிப்புத் தன்மை இல்லை. மத, இன, சாதி வெறியைத் தூண்டும் பிரிவினையே தலைதூக்கிச் சதிராட்டம் போடுகிறது. “ஒரே மொழி, ஒரே தேசம்” என்ற போர்வையில் பிற மாநில மக்களை ஒடுக்க அதிகார மீறலைக் கையில் எடுத்திருக்கும் மதவாத சக்திகளை அமெரிக்கா சரியாகவே கவனித்திருக்கிறது.
அதனால்தான் மதவெறிக்கு எதிராக, குறிப்பாக ஆர்.எஸ். எஸ்.சின் பினாமி பா.ஜ.க., அரசின் நிலைப்பாட்டிற்கு எதிராக அறிவுரை சொல்லிவிட்டுக் கிளம்பிவிட்டார் ஒபாமா.

ஒபாமாவை ஆதரிக்க வேண்டிய தேவை நமக்கு இல்லை. அதற்காக அவர் சொன்ன மதவெறி எதிர்ப்புச் செய்தியைப் புறக்கணிக்க வேண்டியதும் இல்லை.